EVA1

ELS_Cover3-ce9a9739

EVA1

1

கேம்பஸ் இன்டெர்வியு நாளென்பதால் வழக்கத்தைவிடப் பரபரப்பாகக் காணப்பட்டது அந்தப் பொறியியல் கல்லூரி வளாகம்.

அங்கிருந்த சலசலப்புக்கு சம்மந்தமில்லாத அமைதியுடன் மரத்தின் கீழே தன் காரில் அமர்ந்திருந்தான் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் புதிய CEO ஆதன் ரகுநாத்.

கண்களை மூடிச் சாய்ந்திருந்தவன் முகத்தில் புன்னகை அரும்ப,

“பாஸ் ஹேப்பி! பிளே ஹேப்பி மியூசிக்!’ என்ற குரலில் காரின் ஸ்பீக்கரில் தானாக, அழகிய கிட்டார் இசை துவங்கியது.

“நீ ஓவர் ஹைப்பரா ஆகிட்டு வர ஈவா!” புன்னகையுடன் கண்களைத் திறந்தவன், முன்னே கார் ஸ்டீயரிங் வீலில் அமர்ந்து ஆதனையே சீரான இடைவெளியில் கண் இமைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது சுண்டெலி ஒன்று!

“எப்பவும் கத்துகிட்டே இருக்க சொன்னது நீங்க தானே பாஸ்! உங்கள் முகத்தை ரீட் பண்ணி இந்த எமோஷன் என்னவா இருக்குன்னு என் டேட்டா பேஸ்ல மேட்ச் பண்ணதுல…”

“ஈவா ஸ்லீப்!” அவன் கட்டளையில் கண்களை மூடிக்கொண்டு ஈவா என்ற எலி அமைதியானது.

மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டவன் மனதில் அன்று வீட்டில் நடந்த உரையாடல் காட்சியாய் விரிந்தது.

காலை உணவு மேஜையில், “கேம்பஸ் இன்டெர்வியூக்கு நான் ஏன் டேட் போகணும்?” தந்தையை முறைத்து கொண்டிருந்தான் ஆதன்.

அருகில் ரிக்லைனர் சோஃபாவில் அமர்ந்திருந்த ரகுநாத், “நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு தானேபா சொல்றேன்?” ஆதங்கப்பட்டவர்,

“மீனு அந்த மாத்திரை கொண்டுவா” கத்தி அழைத்ததால் விருந்தாளியாக வந்த நான்கைந்து இருமல்களுக்கு நடுவே மகனைச் சோர்வாய் பார்க்க,

‘சாதாரண ஜுரத்துக்கு, இவ்வளோ பில்டப் கொடுத்து, சிவாஜி ரேஞ்சுக்கு நடிச்சுக்கிட்டு’ கண்களை உருட்டிய ஆதனோ,

“கம்பெனிக்கு போக சொன்ன சரி, இன்டெர்வியூக்கு நான் எதுக்கு? எந்த சீஇஓ இப்படி கேம்பஸ் இன்டெர்வியூவுக்கு காலேஜுக்கு போயி நிப்பான்?” தந்தையை முறைக்க,

“என்னால பேச முடியல, இப்போ கூட லைட்டா நெஞ்சு வலிக்குது” என்ற ரகுநாத் பதற்றத்தில் கழுத்தை பிடித்துகொண்டாத்தில், கிண்டலாகச் சிரித்தவன்

“நெஞ்சு கொஞ்சம் கீழ இருக்கு டேட்” என்று மறுப்பாகத் தலையசைக்க,

“டேய்! அவர் உன் நல்லதுக்கு தான சொல்லறார்?” கையில் மாத்திரையுடன் வந்த மீனாக்ஷி, கணவரிடம் அதைக் கொடுத்துவிட்டு, வெறும் தட்டைச் சுழற்றிக்கொண்டிருந்த மகனிடம்,

“இப்படி நாலு இடத்துக்கு போனா தான உனக்கும் விவரம் தெரியும்?”

“விவரம் தெரியுமா! நான் என்ன குழந்தையா? ரோபோடிக்ஸ் ரிசெர்ச்ல இருக்கிறவன் மா!”

“என்ன ரிசெர்ச்? எப்போ பார்த்தாலும் அந்த லேபுக்குள்ள அடைபட்டு, எலி பொம்மை வச்சு விளையாடிட்டு இதுக்கு பேரு ஆராய்ச்சியா?” அவர் புருவம் சுருக்க,

“பொம்மையா!” அதிர்ந்தவன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, “அதோட வேல்யூ தெரியுமா? என் மூணு வருஷ கனவு! இப்படி பொசுக்குன்னு பொம்மைன்னுட்ட? எல்லாம் உன்னாலதான் டேட்” என்று தந்தையை முறைத்தான்.

“நான் பாட்டுக்கு நா உண்டு என் ஆராய்ச்சி உண்டுன்னு இருந்தேன், வாடா வாடான்னு கூப்டு கடைசில டெஸ்க் பின்னாடி உட்கார வச்சுட்டீங்க!”

ஆதன் அலுத்துக்கொண்டதில் ரகுநாத் முகம் வாடியதைக் கவனித்துவிட்ட மீனாக்ஷி மகனிடம்,

“அவரே இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துருக்கார், அவரை எதுக்கு கஷ்ட படுத்துற?” என்று கடிந்துகொண்டார்.

ரகுநாத், “என் உடம்புக்கு முடியலைன்னு தான் உன்னை பொறுப்பேத்துக்க சொன்னேன். நான் போர்ஸ் பண்ணல, முடிஞ்சா போயிட்டு வா” இருமிய படி விட்டதை வருத்தமாகப் பார்க்க,

“சரி சரி போறேன். ஓவரா ட்ராமா பண்ணாத” ஆதன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள, ஓர கண்ணால் மகனைப் பார்த்த ரகுநாத், மீண்டும் இருமி காட்டினார்.

ஆதன் “மீனு உன் புருஷ்க்கு இதயம் எங்க இருக்குன்னு சொல்லிக்கொடு. நெஞ்சு வலின்னு கழுத்தை பிடிச்சுக்கிட்டு” மெல்லிய புன்னகையுடன் தந்தையைப் பார்க்க,

முகத்தை இன்னும் வருத்தமாக வைத்துக்கொண்ட ரகுநாத்தோ ஏக்கமாக, “உன் தங்கை கிட்ட பொறுப்பை கொடுத்திருப்பேன், ஆனா அவ இன்னும் படிப்பை முடிக்கல”

“தாராளமா அவளே பார்த்துக்கட்டும்ன்னு நானும் நிம்மதியா என் ஆராய்ச்சியை தொடர்ந்திருப்பேன்” என்றவனை முறைத்த ஆதிரா.

“அப்பா பாவம் ஆசை பட்ரார், போயிட்டு வாயேன்” என்றாள் பெரிய மனுஷியாய்.

“நீங்க சாப்பிட்டுட்டு மொதல்ல காலேஜ் போங்க மேடம்” என்றவனைப் பார்த்து நாக்கை துருத்தியவளிடம்,

“மவளே இந்த வருஷம் மட்டும் அட்டெண்டன்ஸ் பத்தலைன்னு காலேஜ்லிருந்து வார்னிங் வரட்டுமே, அன்னிக்கி இருக்கு தீபாவளி உனக்கு” மிரட்டலாகச் சொன்னவன், தாயிடம்,

“அதான் உனக்கு சோகமான எக்ஸ்பிரஷன் சூட் ஆகலைல? விடு! இப்போ தட்டுல இட்லியை போடுவியா இல்ல அதுவும் நான் இன்டெர்வியூவுக்கு போயிட்டு வந்தா தானா?” அவன் கேட்டதில் அவன் போதும் என்று கெஞ்சும் வரை இட்லியைப் பரிமாறித் திணறடித்தார்.

தன்னை எப்படியாவது கம்பெனி பொறுப்பை ஏற்க வைக்கத் தன் பெற்றோர் செய்யும் தகுடு தத்தங்களையும், ஜால்ரா அடிக்கும் தங்கையையும் நினைத்து ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்து சிரித்து கொண்டிருந்தவனின் கவனத்தைக் கலைத்தது, இரு பெண்களின் உரையாடல்.

“எல்லாருக்கும் இன்டெர்வியு கிடைக்கல, நீ இப்படி போகமாட்டேனு அடம்பிடிக்கிறது சரியில்ல” என்றொருவள் மிரட்ட, ஆதனின் கார் கண்ணாடிக்கு முதுகு காட்டி நின்றிருந்த பெண்ணோ,

“எனக்கு இப்போவே பதட்டமா இருக்கு, வேலை கிடைச்சாலும் எங்க வீட்ல விட மாட்டாங்க”

“ஸ்கூல் பொண்ணு மாதிரி அம்மா திட்டுவாங்க ஆட்டுக்குட்டி திட்டுவாங்கன்னு. இதுவரைக்கும் எல்லா டெஸ்டும் ஜம்முன்னு பண்ணிட்டு…அட்லீஸ்ட் இன்டர்வியூவ அட்டெண்டாவது பண்ணுடி”

“வேணாம் தீப்ஸ், என்னை வற்புறுத்தாதே” என்றவள் கல்லூரி கட்டிடத்தை நோக்கி நடந்து செல்ல,

“அடியே லூசு! நில்லுடி” என்றபடி அவளை பின் தொடர்ந்து ஓடினாள் தீப்ஸ் என்றிழைக்கப் பட்டவள்.

முன்னே சென்ற பெண்ணின் ஃபைலிலிருந்து கீழே விழுந்த காகிதங்களைக் கவனித்தவன், காரை விட்டு இறங்கி அவற்றைக் கையிலெடுத்தான்.

‘சஹானா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்’ என்றிருக்க,

“ஹலோ சஹானா” அவன் கத்தியதில், பிரேக் போட்டது போல் நின்றவள் திரும்பித் தயக்கத்துடன் மெல்லமாகக் கைகளைப் பிசைந்தபடி அவனை நோக்கி நடந்து வந்தாள்.

அவள் நெருங்க நெருங்க முகம் வெளிறியவன், ஏதும் சொல்லாது அவளிடம் காகிதங்களை நீட்டினான்.

அவற்றை வாகிக்கொண்டவள் , “தேங்க்ஸ் சார்” சன்னமாகச் சொல்லிவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டாள்.

கண்களை நம்பமுடியாமல் புள்ளியாய் மறைந்தவளைப் பார்த்திருந்தவன், ‘நீ…நீ தானா? இல்ல என் கற்பனையா?’ நெற்றியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

மாணவர்கள் இன்டெர்வியு நடக்கும் அறைக்கு வெளியே காத்திருக்க, அவர்களைக் கடந்து புயலென அறைக்குள் நுழைந்தான் ஆதன்.

“ஹே உன்கிட்ட பேப்பர கொடுத்தாரே, அவர் தானே?” தீபிகா கேட்க,

“ம்ம்” என்ற சஹானா “அவர் எதுக்கு உள்ள? ஒரு வேளை அந்த கம்பெனில வேலை பாக்குறவரா?” கேள்வியாய் தோழியைப் பார்க்க,

“தெரியலையே, உள்ள போனவங்க எல்லாரும் கோட் சூட்டுன்னு இருந்தாங்க, இவர் ஜீன்ஸ் டிஷர்டுன்னு ட்ரெண்டியா இருக்காரே”

சஹானாவோ, “நான் பிஜி ஸ்டுடென்ட்டுன்னு நினைச்சேன்” என்றவள் முகம் மறுபடி இறுகி, “ஹே…வேலை கிடைச்சா கண்டிப்பா வீட்ல ஒத்துக்க போறதில்ல, டிகிரி முடிச்சுட்டு வீட்டோட இருக்கணும்னு அப்பா கண்டிஷன் போட்டுருக்கார்னு உனக்கும் தெரியும்ல” என்றாள்.

“எதுவும் யோசிக்காத அட்டென்ட் பண்ணுடி” தீபிகா தன் சான்றிதழ்களை ஆராய்ந்தபடி சொல்ல,

சஹானா கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.

ஒன்றன்பின் ஒன்றாக மாணவ மாணவிகள் உள்ளே அழைக்கப்பட, சஹானாவின் முறை வந்தது,

மணமேடைக்குச் செல்லும் மணப்பெண் போலக் குனிந்த தலை நிமிராமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

“மிஸ் சஹானா?” என்ற குரலில் நிமிர்ந்தவள் முன்னே ஆறேழு கோட் சூட் மனிதர்கள் நடுவே எளிமையான ஜீன்ஸ் டிஷர்ட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ஆதன் ரகுநாத்.

“எஸ்” என்றவள் கலவரத்துடன் அவனைப் பார்க்க, மெல்லிய புன்னகையுடன் கண்களால் அவளை அமரும்படி சொன்னான்.

மேஜையிலிருந்த லேப்டாப்பை பார்த்து, “உங்க மார்க்ஸ் நல்லா இருக்கு, ஸ்க்ரீனிங் டெஸ்ட் குட், டெக்னிக்கல் டெஸ்ட் வெறி குட்! க்ரூப் டிஸ்கஷன் தான் அவ்ளோவா…”என்றபடி கண்களை மட்டும் உயர்த்தி அவளைப் பார்க்க, அவளோ கலவரத்துடன் அவனையே பார்த்திருந்தாள்.

“உங்களுக்கு படிப்பை தவிர என்ன பிடிக்கும்”

‘இதெல்லாமா கேப்பாங்க’ என்று குழம்பியவள், “சாப்பிட பிடிக்கும் சார்” என்று மெல்லிய குரலில் சொல்ல, ஆதன் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

அவள் பதட்டத்தைக் குறைக்க நினைத்தவன், ஸ்நேகமான குரலில் பொறுமையாக, “நான் கேட்டது எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டி” என்றான்.

“செஸ் விளையாடுவேன், ஏ ஐ (Artificial Intelligence) ரோபோடிக்ஸ் எல்லாம் படிக்க ஆசை…இதான் முடிஞ்சுது…”

அவனைக் கூர்ந்து பார்த்திருந்தவன், மேலும் சில கேள்விகளைக் கேட்கத் துவங்கினான். திக்கித் திணறிப் பதில் சொன்னாலும், அவன் எதிர்பார்த்ததை விடவும் அவள் அனைவரையும் ஈர்த்திருந்தாள்.

“வெல் மிஸ் சஹானா, நாங்க சீக்கிரம் மெயில் பண்றோம்” என்ற ஆதன், “கெட் ரெடி டு ஜாயின் அஸ்” என்றான் புன்னகையுடன்,

விளங்காமல் அவனையே பார்த்திருந்தவள் விழித்ததில்,

“யு ஆர் செலக்டட்ன்னு அர்த்தம்” என்றவன், “உங்க ஃபைனல் செமஸ்டருக்கு, ஆல் தி பெஸ்ட்” என்று கையை நீட்ட, தயங்கியபடி கைக்குலுக்கியவள், அதிர்ச்சியிலிருந்து மீளாமலே அறையை விட்டு வெளியே வந்தாள்.

தீபிகா ஆர்வமாக, “என்னாச்சு?”

ஏசி அறையிலும் வேர்த்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்ட சஹானா “வேலை கிடைச்சுடுச்சு டி” தான் சொல்வதைத் தானே நம்பாமல் விழித்தாள்.

தீபிகாவின் பெயர் வர, “போயிடாதே இங்கயே காரிடார்ல வெயிட் பண்ணுடி” என்றுவிட்டு அறைக்குள் சென்றாள்.

மாலை வீடு திரும்பிய ஆதன், ரகுநாத்தை கட்டிக்கொண்டான்.

“என்னை பெத்ததுக்கு அப்புறம் நீ எனக்கு செஞ்ச ஒரே நல்ல விஷயம் இன்னிக்கி என்னை காலேஜுக்கு போக சொன்னதுதான்” என்று சிரிக்க,

“என்னடா எதாவது லவ்வா?” ஆதிரா சந்தேகத்துடன் அண்ணனைக் கேட்டாள்.

“அய்ய ஆசைய பார்! மனசுக்கு இன்னிக்கி தான் ரொம்ப நிம்மதியா இருக்கு” என்றவன் குடும்பத்தினரின் குழப்பமான முகங்களைப் பார்த்து,

“காதல் கண்றாவிலாம் இல்ல, ஆனா மீ ஹேப்பி!” என்று சொல்ல,

அவன் தோளில் தொத்திக்கொண்டிருந்த ஈவா “ஆதன் ஹேப்பி அண்ணாச்சி” என்று உரக்கச் சொல்ல “அதே அதே” சிரித்தபடி, படிகளேறி சென்றான் ஆதன்.

“அவனை ஆசை ஆசையா படிக்கவச்சா… சுண்டெலிய கட்டிக்கிட்டு சுத்துறான்! இப்படி இருந்தா இவனுக்கு கல்யாணம் காட்சின்னு எப்படி பண்ணி பாக்குறது?” வருத்தத்துடன் மீனாட்சி கணவரைப் பார்க்க, அங்கே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஆதிரா,

“நீங்க ரெண்டு பேரும் அவனை வற்புறுத்தி வேலை செய்ய வைக்கிறதால அவன் மனநிலை பாதிக்க பட்டிருக்கான்” கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி சீரியஸாக சொல்லிவிட்டு அணிந்து கொண்டாள்,

“இதுக்கு அப்புறம் அவன் கல்யாணம் பண்ணி குட்டி போடுறது…ம்ம்ம்ஹும்…வாய்ப்பே இல்ல! அந்த எலிக்குட்டி தான் மா உன் பேத்தி!” என்று சொல்ல,

அவள் பின்னந்தலையில் விழுந்த அடியில் “ஸ்ஸ்” தலையைப் பிடித்துக்கொண்டு திரும்பினாள்.

“நான் குட்டி போடுறது இருக்கட்டும், நீ இந்த வருஷமாவது எல்லா சப்ஜெட்லயும் கோட்டடிக்காம பாஸ் பண்ணி, டிகிரி வாங்குற வழிய பாரு! ரெண்டு வருஷத்துக்குள்ள நீ கம்பெனி பொறுப்பை எடுத்துக்கிட்டு என்னை ஃபிரியா விட்றேன்னு வாக்கு கொடுத்துருக்கே ஞாபகம் இருக்கட்டும்” செல்லமாக முறைதான் ஆதன்.

“யார் பாத்துக்கிட்டா என்ன? கம்பெனியும் அதை நம்பி வாழுற அத்தனை குடும்பமும் நல்லா இருக்கணும் அவ்வளோ தான் எனக்கு வேணும்” ரகுநாத் தன் பிள்ளைகளிடத்தில் பொதுவாகச் சொல்ல,

அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்தாற்போல், சரியென்றனர்.

ஆதன் “இன்னிக்கி என் ட்ரீட்! மூணு பேரும் ரெடியாகுங்க” என்றதில்,

“இதோ அஞ்சே நிமிஷம்” என்றபடி எழுந்து வேகமாக நடந்த தந்தையைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தவன்,
“உடம்பு முடியலன்னா?” என்று அவர் பின்னால் குரல்கொடுக்க, மகனைத் திரும்பிப்பார்த்து அசடு வழிந்தார்.

“போ போ ரெடியாகு” என்று சிரித்தவன்,

“மீனு சீக்ரம் ரெடியாகு, நீயும் கிளம்புடி இன்னும் படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு” என்று விரட்டிவிட்டு, அங்கே இருந்த பூஜை அறைக்குள் நுழைந்தான்.

“தேங்க்ஸ்! எவ்வளோ நாள் உன்னை கெஞ்சி கேட்டிருப்பேன் அவளை என் கண்ல காட்டுன்னு? ஆறேழு வருஷமா மனசு இறங்காத உனக்கு எப்படி இன்னிக்கி மனசு வந்தது?” கடவுளிடம் கைகளைக் கூப்பியபடி உரையாடிக் கொண்டிருந்தவன்,

கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிவிட்டு புன்னகையுடன் சென்று சோஃபாவில் அமர்ந்து, குடும்பத்திரனார் தயாராகி வரக் காத்திருந்தான்.

வாரங்கள் மெல்ல உருண்டோட, செமஸ்டரின் கடைசி பரிட்சை அன்று, மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தாள் சஹானா. அவள் முன்னே வந்து நின்ற தீபிகா, தனது கல்யாண பத்திரிக்கையை நீட்டினாள்.

“ஹை அழகா இருக்குடி” என்றபடி அதை வாங்கிக்கொண்டவள், “ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி உன்னை” என்று முகம் வாட, வெற்று புன்னகையைச் சிந்திய தீபிகாவோ,

“விதியை பாரேன், சின்ன வயசுலேந்து சுதந்திரமா வளர்ந்த நான் வேலைக்கு போக நினைச்சு, இப்போ கல்யாணம் செஞ்சுக்க போறேன், கட்டுப்பாடோட வளர்ந்த நீ வேலைக்கு போயி சுதந்திரமா இருக்க போற” என்றாள் அலுப்பும் கடுப்புமாய்.

“ஹே தீப்ஸ்…”

“பின்ன என்னடி? உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு!” தீபிகா முகம் போன போக்கில், என்னமோ சுருக்கென்று பட்டது சஹானாவிற்கு.

“நானே கெஞ்சி கூத்தாடி தாத்தா பாட்டி சிபார்சுல வேலைக்கு போக பெர்மிஷன் வாங்கி இருக்கேன், அதுகூட ஒன்னு ரெண்டு வருஷம் தான் அப்புறம் கல்யாணம் செஞ்சு வச்சுடுவோம்னு திட்டவட்டமா சொல்லிட்டாங்க”

சஹானா சொல்ல, தீபிகாவின் முகம் இன்னும் மாறியது,

“இது நியாயம் இல்லடி, எனக்கு இப்படி அமைஞ்சு இருக்கலாம். உன்னைவிட நான் எந்த விதத்துல கம்மி? உனக்கு நாலு பேர் சேர்ந்து இருந்தா பேசக்கூட வராது, சோஷியோ ஃபோபியா! நான் தைரியமா உலகத்தை ஃபேஸ் பண்ணறேன்.

உன்னைவிட நான் பார்க்க அழகா இருக்கேன், இங்கயே எத்தனை பசங்க சுத்தினாங்க? ஆனா பாரு கொஞ்சமும் அழகே இல்லாதவன் எனக்கு மாப்பிள்ளை!

நான் ஆசை படுறதெல்லாம் உனக்கு கிடைக்குது. கேம்பஸ் இன்டெர்வியூல கூட உனக்கு தான் வேலை கிடைச்சுது. உன்ன விடவா நான் தாழ்ந்து போயிட்டேன்” அனலை வாரி இறைத்தவள்,

“என்னமோ விதி! டீச்சர்ஸ்க்கு பத்திரிக்கை குடுக்கணும் வரேன்” வேகமாகச் சென்றுவிட்டாள்.

ஹாஸ்டலை காலி செய்துவிட்டு வீட்டிற்குச் செல்ல ரயிலில் அமர்ந்திருந்தவள் மனமோ தோழியின் வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.

நான்கு வருடம் உயிர்த் தோழியாய், இருந்தவளின் எண்ணம் முதல்முறை வெளிப்பட மனம் உடைந்து தான் போயிருந்தாள் சஹானா. ஒவ்வொரு முறையும் தன்னை ஊக்கப் படுத்தி அவள் பேசியதும், ஹாஸ்டலில் முதல் நாளிலிருந்து கூடவே இருந்ததும் கணவோ என்று சந்தேகம் தோன்றியது.

அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தலைவலி படுத்த கண்களை மூடி ரேடியோவில் பாட்டைக் கேட்டபடியே பயணத்தைத் தொடர்ந்தாள்.

ஊரில் அவள் நாட்கள் தினமொரு ரகமாகக் கழிந்தன. முதலில் சம்மதித்த பெற்றோர்கள் மீண்டும் வேண்டாமென்று பிடிவாதம் பிடிக்க, சஹானாவின் நிலை குழப்பமானது.

அவளுக்காகப் பரிந்து பேசத் தாத்தா பாட்டியைத் தூண்டிவிட்ட அவள் அண்ணன் பார்கவ் விடாமல் போராடியே பெற்றோர்களின் சம்மதத்தை வாங்கி தந்தான்.

சஹானா வேலைக்காகச் சென்னைக்குப் புறப்படும் நாளன்று,

“எல்லாம் எடுத்து வச்சுகிட்டியா மா?” பார்கவ், சஹானாவிடம் கவறொன்றைக் கொடுத்து, “இதுல டெபிட் கார்டு இருக்கு, உன் அக்கவுண்டுல மாச மாசம் பணம் போடுறேன். உன் சம்பளம் பத்துமோ பத்தாதோ. எதுக்கும் கையில எமெர்ஜென்சிக்கு இருக்கட்டும்”

“வேண்டாண்டா, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” கவரை அவனிடம் திருப்பிக்கொடுக்க முயன்றாள்.

“கொடுத்ததை திருப்பி வாங்குற பழக்கம் எனக்கில்லை”

“ப்ளீஸ் சொன்னா கேளு” அவள் அவன் கையைப் பற்ற, அதை இழுத்துக்கொண்டவனோ,

“அவசரத்துக்கு வச்சுக்கோ, எப்போ என்ன தேவை வரும்னு நமக்கு தெரியுமா என்ன?”

“எனக்கு என்னமோ போல இருக்கு” அவள் விழிக்க, அவள் தலையைக் கலைத்துவிட்டவன்,

“நீ தங்கையா இல்லம என் தம்பியா இருந்திருந்தா, வாடா என்கூட பிசினெஸ்ஸா பார்த்துக்கோங்கன்னு இழுத்துகிட்டு போயிருப்பேன்” என்று சிரித்தவன், “ஜாக்கிரதையா இருந்துக்கோ. கம்பெனில ஆம்பள பசங்ககூட பழகுறப்போ கவனம். மறுபடி எந்த நலம் விரும்பியாவது போட்டு கொடுத்தா கண்டிப்பா இவங்களை சமாளிக்கவே முடியாது”

“ஏன் என்னை நம்பவே மாட்டேங்குறாங்க, அன்னிக்கி கண்டிப்பா நான் எதுவுமே செய்யலை, ஆறு வருஷமாச்சு இப்போவும் அதையே சொல்லி காட்டி திட்டினா தாங்க முடியலை” அவள் முகம் வாட,

“ஹே நான் உன்ன நம்பறேன்ல? தாத்தா பாட்டி நம்பறாங்கல? அப்பா அம்மா இன்னும் வெள்ளைக்காரன் காலத்திலேயே இருக்காங்க அதான் இப்படி.

விடு பாத்துக்கலாம். நீ கண்டதை யோசிக்காத, சந்தோஷமா இரு. எனக்கு தினம் ஃபோன் பண்ணு, நான் இல்லாதப்போ வீட்டுக்கு ஃபோன் பண்ணாத எதாவது ஆரம்பிப்பாங்க” என்றான்.

“கண்டிப்பா அவனுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல, அவன் யாருன்னே தெரியாது. நம்புடா” சஹானா கண்கள் குளமாக,

“நான் தான் சொல்றேன்ல விடுன்னு!” கடிந்துகொண்டவன், “இதுக்கு ஒரே வழிதான் இருக்கு! நீ யாரான நல்ல பையனா லவ் பண்ணிடு, நான் கல்யாணம் பண்ணி வச்சுடறேன்” என்று சிரிக்க.

“போடா!” கண்களைத் துடைத்துக்கொண்டவள், “உன் லவ் வீட்ல எப்போ சொல்லப்போற? பாவம் உன் ஆளு எவ்வளோ நாள் காத்துகிட்டு இருப்பா?” துணிகளை மடித்து பெட்டியில் வைத்தபடி கேட்க,

“அதுக்கு தான் இப்போ வந்தேன், தாத்தா தான் இந்த சம்மந்தத்தை ஏற்பாடு பண்ணுற மாதிரி பாவலா பண்ண போறார், சோ நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது சரியா?” என்று கிசுகிசுக்க, கட்டை விரலை உயர்த்தி காட்டியவள்,

“ஓகே ஆனதும் எனக்கு சொல்லு”

“உனக்கு சொல்லாமலா?…ம்ம்… அத்தை பெண்ணைக் கூட வெளிப்படையா லவ் மேரேஜ் பண்ண முடியல பாரேன் என் நிலைமையை” அலுத்துக்கொண்டவன், “சரி கிளம்பு உன்னை ட்ரெயின் ஏத்திட்டு நான் கிளம்பறேன்” என்றான்.

பெற்றோர்களின் அறிவுரைகளையும் மிரட்டல்களையும். கை செலவிற்குப் பணம் கொடுத்துத் தைரியம் சொல்லி அனுப்பிய அண்ணனின் அக்கறையையும், பாட்டி தாத்தாவின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு வேலையில் சேர சென்னையை நோக்கிப் புறப்பட்டாள் சஹானா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!