pm1

phoenix-e5946e63

pm1

ஃபீனிக்ஸ் – 1

 

ஏப்ரல் மாதம்! வசந்த காலத்தை இதமாய் எதிர்கொண்டிருந்தது.

வசந்தகால இளமையும், குளுமையும், பசுமையும், மரஞ்செடிகளுக்கு மட்டுமல்ல!

பருவம் வந்த அனைவருக்குந்தான்!

பருவத்தை தவறவிட்டவளான எனக்குள் அனைத்தும் முடிந்துபோனதாகவே எண்ணியிருந்தேன்.

 

கருகிப் போனதே அனைத்தும் என

மருகிப் போயிருந்த மனதோடு

சருகாகிப் போனவன் நினைவுகளோடு

உருகிப் போயிருந்தேன்!

 

ஆனால் எனக்குள் அனைத்தையும் தொலைத்துவிட்டதாக எண்ணியது தவறோ என்று எண்ணுமளவிற்கு மனம் எதையோ தற்போது எதிர்நோக்கி, எதிர்பார்த்துக் காத்திருந்தது.

பூ வைக்கும் வைபவம்!

எனக்குள் மாற்றங்களை விளைவித்து, எதிர்பார்ப்புகளை விதைத்துவிட்டதோ!

வாய்ப்புகள் கிடைத்திட்டால்…!

எதிர்பார்த்திடாத தருணங்கள் சில நம்மை சந்தோச வானில் பறக்க வைக்கும். சில தருணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாமே என மனம் சொல்லும்.

அப்படித்தான் இருந்தது. இரண்டும்கெட்டான் மனநிலை!

வீட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நெருங்கிய சொந்தங்கள் அனைத்தும் வந்திருந்ததால் ஒரே சலசலப்பு.  சிறியவர்கள், பெரியவர்கள் என அவரவர் வயதொத்த நபர்களோடு பேசிச் சிரித்தபடியே அவர்களது பொழுதுகள் இனிமையாகச் சென்றதாகத் தோன்றியது.

இளவயதின் இனக்கவர்ச்சியில் பார்வையால் தழுவி, காதலுக்கான முதல் அத்தியாத்தை துவங்கக் காத்திருந்தன சில ஜோடி விழிகள்.

அவற்றை பார்க்க நேர்ந்தபோது பழைய நினைவுகள் வந்துபோனது.

சில வாண்டுகள் எதையும் கண்டுகொள்ளாததுபோல அவர்களைக் கடந்து, அவர்களின் அட்டகாசங்களை சில்வண்டுகளிடம் வாய்விட்டுக் கூறி பரிகாசம் செய்து சிரித்ததைக் கண்டு, கால இடைவெளியில்தான் எத்தனை மாற்றங்கள் என ஆச்சர்யம் தோன்றியது.

இவர்களின் வயதில் அத்தனை தெளிவு எனக்கிருந்ததாக நினைவில்லை.

சேட்டைகள் இருந்தாலும், இதுபோல ஆராயும் அறிவு அன்றைக்கு என்னிடம் இல்லை.

உறவுகள் அனைவரும், “இப்பவாவது எல்லாம் நல்லபடியா கூடி வந்ததே.  கடவுள் இனிமேலாவது நல்லா வைக்கணும்!”

“எங்கிட்டோ பிறந்திருக்கானு நினைச்சிட்டுருக்க, இங்கன பக்கத்திலேயேதான் மாப்பிள்ளை இருந்திருக்காரு!”

“நல்ல வசதியான இடந்தான்!  பய ஒருத்தன், பொண்ணு ஒன்னு!  பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சாம்!”

“எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்.  இப்பவாவது நல்ல காரியத்தை பாக்க பெத்தவுகளுக்கு குடுத்து வச்சுதே!” என பலவாறான பேச்சுகள்.

எல்லாம் பூ வைக்கும் வைபவம் துவங்கும் வரை!

அதுவரையில் குழப்பம் இல்லாமல் இருந்த எனக்கு குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங்கள் என நிறைய கள்.. என் மனதில்!

மகிழ்ச்சியில்லை, ஆனால் தெளிவுமில்லை!

பூ வைக்கும் விழா துவங்கும்முன் இருந்த மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.

யாரிடம் கேட்பது?

சம்பந்தப்பட்டவன் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்க, எப்படிக் கேட்பது?

திருமணம் கைகூடியபின் வரும் மகிழ்ச்சியோ, மணமகனுக்கான தெளிச்சியோ கிஞ்சித்தும் அவனிடமில்லை.

ஆனாலும் மனமோ, பேசு! ஒரு முடிவுக்கு வந்துவிடு! என என்னைச் சாட, நான் அவனை நாட தக்க நேரம் பார்த்திருந்தேன்.

வாய்ப்புகள் அமைந்தாலும், எதிர்பார்ப்பில்லாதவனிடம் என்னவென்று போய் பேச?

மனம் சிலவற்றிற்கு விடைதேட முயன்று தோற்றதால் உண்டான எரிச்சல் மனதில் புதர்போல மண்டிக்கிடந்தது.

இருபத்தோராம் நூற்றாண்டில், வளர்ந்திருந்த தொழில்நுட்பம் இதர அனைத்தையும் பின்பற்றினாலும், திருமணம் என்று வந்ததும், எல்லாம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிற சமுதாயம்.

“ம்மா மாப்பிள்ளைக்கிட்ட பேச…”, என நான் துவங்கியதுமே

நான் மாபாதக செயலைச் செய்துவிட்டாற்போல எனது தாய் நடந்து கொண்டது, எனக்குள் சங்கடத்தை உண்டு செய்தது.

சுற்றிலும் யாரும் நிற்கிறார்களா என அவசரமாக கண்களால் துழாவி ஒரு முடிவுக்கு வந்தவர்,

“இதென்ன புதுசா! யாரும் பாத்தா என்ன சொல்வாங்க?”, என மிரட்டல் குரலில் தாய்

“எந்தக் காலத்திலம்மா இருக்க?”, சங்கடமாகவே கேட்டேன்.

“அதுக்காக நாலு பேரு எதாவது சொல்லிட்டா வந்திருமா?”, அவருக்கு அவர் கவலை.

அதைக்காட்டிலும், திருமணமே வேண்டாம் என்றிருந்தவளை, இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்க, இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். இப்போது எதாவது மகள் பேசி அனைத்தையும் கெடுத்துவிட்டால், என்ன செய்வது என்கிற சமயோசித புத்திதான் அந்தத் தாயின் உண்மையான கவலை.

“இல்லைனா மாப்பிள்ளையோட அக்காகிட்டயாவது பேசலாமா?”, எனது மாறுபட்ட வினா.

“நீ பேசி எதாவது குழப்பி வைக்கவா!  ஒன்னும் வேணாம்.  ஏதோ இப்பத்தான் எல்லாம் கூடிவருது.  உன் திருவாயை மூடிட்டி பேசாம இரு! இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம்!  கல்யாணம் முடிஞ்ச பின்ன உன்னோட இஷ்டந்தான்! யாரு வந்து கேக்கப் போறா! வருசக் கணக்குல அவருகூட நீதான பேசப்போற!”

“சில விசயத்தை இப்பவே கன்ஃபார்ம் பண்ணிக்கறது நல்லதும்மா!”, கெஞ்சலாகக் கேட்டேன்.

“தேவையில்லாம எங்கிட்ட சொன்னமாதிரி, மாப்பிள்ளைகிட்ட பேசணும், வைக்கணும்னு யாருகிட்டயும் போயி சொல்லி வச்சிராத!  வளந்த புள்ளைனுகூடப் பாக்கமாட்டேன்.  விளக்கமாத்தை எடுக்க வச்சிராத! மாப்பிள்ளையே அமைதியா இருக்காரு.  நீ என்னடான்னா பேசணும்னு முந்திரிக்கொட்டை கணக்கா சொன்னா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க!  பொண்ணு வளத்திருக்கா பாருன்னு என்னை காறித் துப்பவா? ஒன்னும் வேணாம். பேசாம போயி பொண்ணா, லட்சணமா ரூம்ல இரு!”, என தாய் கட்டளையிட்டபின், வேறுவழியின்றி அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டேன்.

பூ வைக்க வந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க, எதையும் பேச இயலாமல் மனதிற்குள் அனைத்தையும் வைத்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் தாயிக்கு என்மீது எந்தச் சந்தேகம் வந்திருக்கவில்லை.

சாதாரணமாகவே கடந்திருந்தார்.

ஆனால் எனக்குள், ‘அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டேன். அக்கம் பக்கம் வீடுகளில் திருமணத்திற்குப் பேசி முடித்ததுமே, இருவரும் அலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் மனதில் உள்ளதைப் போனில் பரிமாறிக் கொள்வதைப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால் இவர்கள் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை விடாமல்’, என மனம் குமைந்தது.

எதுவும் கதைக்காகாது என உணர்ந்தாலும், எதாவது செய் என மனம் முழுமைக்கும் அதுசார்ந்த சிந்தனையோடே கழிந்தது.

மணமுடிக்க தயாராகும் மாப்பிள்ளை, மணப்பெண்ணோடு பேச எண்ணுவது இயல்பான ஒன்றாகிப் போயிருந்த காலத்தில், தேமே என வந்து பூவைத்ததும் சென்றவனை என்னவென்று நினைக்க!

மனதில் போராட்டம் சதிராட்டம் போட்டது!

எதையும் யாரிடமும் கூற இயலாத, திருடனுக்கு தேள் கொட்டிய நிலை எனக்கு!

விசயத்தைப் பகிர்ந்து கொண்டால் அனைத்தும் வெளிச்சமாகலாம்!

வாய்ப்பையே தராதவனிடம், வம்படியாகச் சென்று பேச மனம் இடங்கொடுத்தாலும் தாய் சம்மதிக்கவில்லையே!

தந்தைக்குத் தெரிந்தால் இன்னும் பிரச்சனைகள் கூடும்!

எதற்கு வம்பு!

பழைய விசயங்கள் அனைத்தும் மனக்கண்ணில் வந்து போனது!

நினைவுகளை மீட்க இயலாத நிலைக்கு சென்றுவிட்டதால் வந்த அமைதியோ?

மாப்பிள்ளையின் தமக்கை வீட்டிற்கு வரும்போது, சேலை எடுக்க வெளியே சென்றபோது, நான் எதாவது உளறி காரியம் கெட்டுவிடக்கூடாதென, எனது தாயும் அருகேயே இருந்தது மிகுந்த சங்கடத்தைத் தந்தது.

பொதுவான பேச்சுக்கள் மட்டுமே.

அதிலும் அவ்வப்போது எனது தாய் விழிகளாலேயே கண்டித்தது வேறு இம்சையாக ச்சைய் என்றிருந்தது.

மாப்பிள்ளையின் அம்மாவும் என்னோடு நன்றாகவே பேசினார்கள். மாப்பிள்ளையைத் தவிர அனைவரும் இணக்கமாகவே நடந்து கொண்டு என்ன செய்ய?

அந்த உம்மணாமூஞ்சியை பேசி சரிக்கட்டி, எல்லாம் நல்லபடியாக நடக்குமா?

எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதவனைப் பற்றி என்னவென்று முடிவு செய்வது?

அவனுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையோ?

ஒரு வேளை அவனது தாயின் வற்புறுத்தலுக்காக தன்னை மணம் முடிக்க முன் வந்திருக்கிறானோ?

ஏனென்றால், அவனது தாய்தான் வந்து திருமணத்தைப்பற்றி பேசத் துவங்கினார்கள்.

எண்ணங்கள் முழுமையும் அவனது ஈடுபாடில்லாத நடத்தையைச் சுற்றியே வந்தது.

அத்தோடு மனம் கடந்துபோன காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றிருந்தது.

பெண்ணின் மனதில் என்ன?

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!