காதல் சதிராட்டம் – 9
காதல் சதிராட்டம் – 9
காரை நிறுத்திவிட்டு ஆதிராவைப் பார்த்தான். ஆதிரா ஜன்னல் வழி வெளியில் திரும்பிப் பார்த்தாள்.
சாலையின் இருப் பக்கமும் நீர் சூழ்ந்து இருந்தது. எதிரே மலைகள் தன் அழகை பரப்பியபடி நிமிர்ந்து நின்று கொண்டு இருந்தது. இன்னும் அருவி வரவில்லையே ஏன் இங்கே நிறுத்தினான் என்ற கேள்வியுடன் அவனைத் திரும்பி பார்த்தாள்.
“இது மஞ்சளாறு டேம்… தலையாறு அருவிக்கு போறதுக்கு இது தான் ஈஸியான ரூட்… இதுக்கு மேலே கார் போகாது… இறங்கி தான் நடக்கணும்… ” என்று அவன் சொன்னதும் சரி என்று தலையாட்டிவிட்டு கீழே இறங்கினாள்.
அவளைத் தென்றல் காற்று தழுவி வரவேற்றது. சுற்றி எங்கும் பச்சை நிறம் பூசி அந்த இடமே பார்க்க ரம்யமாக இருந்தது. அதன் அழகைப் பருகியபடியே அந்த மஞ்சளாறு அணையைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள்.
வினய்யிற்கோ அந்த மலைகளின் அரசியை ரசிப்பதா இல்லை தன் மனதை ஆண்டு கொண்டு இருக்கும் இந்த அரசியை ரசிப்பதா எனப் புரியாமல் ஒரு முறை மலையையும் மறுமுறை ஆதிராவையும் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இங்கே காருக்குள்ளே….
” டேய் ப்ரணவ் குர்குரே நான் வாங்குனது டா மரியாதையா என் கிட்டே கொடு… இந்தா நீ வாங்குன லேசை நீயே எடுத்துக்கோ… “
” மாட்டேன் மாட்டேன் எனக்கு குர்குரே தான் வேணும் உத்ரா…”
” சரி சரி ஆமாம் இந்த குட் டே பிஸ்கட் இப்போ எடுத்துக்கலாமா இல்லை வீட்டுக்கு போகும் போது வெச்சுக்கலாமா ப்ரணவ்??”
” இப்போவே எடுத்துக்கோ உத்ரா.. மொத்தம் நாலு பேர் இருக்கோம்.. உங்க மூணு பேருக்கும் பங்கு கொடுத்தா மீதி கையிலே வத்தலோ தொத்தலோ தான் மிஞ்சும்… அதனாலே எல்லா ஸ்நாக் ஐட்டத்தையும் கையிலே எடுத்து வைச்சுக்கோ… “
” ஓகே மிஸ்டர் ப்ரணவ்… ” என்றபடி கைகளில் பாதி தின்பண்டத்தை அவள் கைகளில் நிறைத்துக் கொள்ள ப்ரணவ் மீதி தின்பண்டத்தை கைகளில் நிறைத்துக் கொண்டான்.
கார் கதவு மூடிய சப்தம் கேட்டு ஆதிராவும் வினய்யும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர். கைகளில் மொத்த தின்பண்டத்தையும் வைத்துக் கொண்டு நின்று இருந்த இருவரையும் பார்த்து அவர்களின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“டேய் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட அடங்க மாட்டிங்களா? இவ்வளவு ஸ்நாக்ஸையும் எப்போ டா வாங்குனீங்க?” என்று வினய் கேட்க ப்ரணவ் லேசாக அசட்டு சிரிப்பு சிரித்தான்.
“அது அண்ணா டீ குடிக்க நீங்க காரை நிறுத்துனீங்க இல்லை அந்த கேப்ல தான் வாங்குனேன்…”
“ஆக வயித்தை நிறைச்சு முடிச்சுட்டு அப்படியே காரை நிறைச்சு இருக்க, இந்த ஸ்நாக்ஸை வெச்சு… “
“அண்ணா பசிக்கிறது மனித இயல்பு தானே… “
“ஆமாம் டா பசிக்கிறதுக்கு இயல்பு தான்… ஆனா பசிச்சுக்கிட்டே இருக்கிறது இயல்பு இல்லை டா.. “
“Manufacturing defect அண்ணா… ” என்று ப்ரணவ் சொல்ல சிரித்தபடி அவனது தோளில் கைப் போட்டுக் கொண்டு முன்னே நடக்கத் தொடங்கினான்.
உத்ரா தூக்க முடியாமல் பிடித்துக் கொண்டு இருந்த தின்பண்டங்களில் பாதி வாங்கியபடி ஆதிரா இணைந்து அவளுடன் நடக்கத் தொடங்கினாள்.
“நீங்க ரெண்டு பேரும் இப்படி குறும்பு பண்றதும் அடிச்சுக்கிறதும் பார்க்கிறதுக்கே ரொம்ப அழகா இருக்கு… ” என்ற ஆதிராவின் சொல்லைக் கேட்டதும் உத்ராவின் இதழ்களில் புன்னகை விரிந்தது.
“ஆமாம் அண்ணி… ப்ரணவ் கூட சண்டை போடாம இருந்தா எனக்கு அந்த நாளே எனக்கு சந்தோஷமா முடியாது..
அவனை வம்பிழுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவனும் பதிலுக்கு என்னை ரொம்ப வம்பிழுப்பான்.. சண்டை போடுவான்… ஆனால் அதுல பாசம் தான் நிறைஞ்சு இருக்கும்… வெளியிலே இருந்து பார்க்கிற எல்லாருமே எங்களை எலியும் பூனையும் மாதிரி இருக்கனு திட்டி தான் சொல்லுவாங்க.. ஆனால் நாங்க ரெண்டு பேரும் டாம்மும் ஜெர்ரியும் மாதிரி… எவ்வளவு தான் அடிச்சுக்கிட்டாலும் ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் ஒரு நொடி கூட இருக்க மாட்டோம்… எங்க சண்டையை வெளியிலே இருக்கவங்க கோவமா தான் பார்ப்பாங்க.. ஆனால் நீங்க தான் அழகா பார்த்தீங்க தேங்க்ஸ் அண்ணி.. ” என்று உத்ரா சொல்லிவிட்டு ஆதிராவின் தோளில் லேசாக கைவைத்தாள். ஆதிராவோ அழுத்தமாக அந்த கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“அண்ணி நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்க… உங்க கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு…இல்லை நீங்க ஒரே ஒரு பொண்ணா?”
“யாருக்கு தெரியும்?” என்று கம்மிய குரலில் பதிலளித்தாள் ஆதிரா. அந்த பதில் உத்ராவை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
“அண்ணி… ” என்றழைத்தாள் குழம்பிய குரலில்…
“எனக்கு அம்மா அப்பா யாருனே தெரியாது உத்ரா… இதுல எப்படி எனக்கு கூட தம்பி தங்கச்சி பிறந்து இருக்காங்களானு தெரியும்??”
“அண்ணி ப்ளீஸ் இனி இப்படி பேசாதீங்க… உங்களுக்கு தங்கச்சியா நான் இருக்கேன்… தம்பியா ப்ரணவ் இருக்கான்… நமக்கு அம்மாவா மீனாட்சியம்மா இருக்காங்க… ” என்று உத்ரா சொல்ல ஆதிராவின் முகத்தில் நேசப் புன்னகை.
“இனி அப்படி சொல்ல மாட்டேன் மா.. ” என்றவள் “ஆமாம் யாரு மீனாட்சி அம்மா?” என்றாள் கேள்வியாக.
“வினய் அண்ணாவோட அம்மா. ப்ரணவ்வும் வினய் அண்ணாவோட கூடப் பிறந்த தம்பி..
நான் அவங்க சித்தப்பா பொண்ணு… எனக்கு அம்மா கிடையாது…
மீனாட்சி அம்மா தான் என்னை அவங்களுக்கு பிறந்த பொண்ணா பார்த்துக்கிட்டாங்க… மீனாட்சி அம்மா அப்படியே கடவுளோட தெய்வாம்சம்… அவங்க கண்ணுலயே பாசம் அப்படி தெரியும் அண்ணி.. கண்டிப்பா உங்களைப் பார்த்ததும் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்… ” என்று பட்டாசு வெடிப்பதைப் போல படபடவென பேசிக் கொண்டு இருந்த உத்ராவையே கனிவுடன் பார்த்தபடி நடந்து வந்துக் கொண்டு இருந்த நேரம் எதிரே சிறியதாக ஓடை வந்து அவர்களை இடைமறித்தது.
ப்ரணவ்வும் வினய்யும் அந்த ஓடையின் துவக்கத்தில் நின்றபடி இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
இந்த ஓடையைக் கடந்து அவர்கள் எதிரில் இருக்கும் பாதைக்குப் போனால் தான் அருவியை அடைய முடியும். அந்த ஓடையைக் கடப்பதற்காக ஒரு சங்கிலியை இடையில் கட்டி வைத்து இருந்தனர். அதைப் பிடித்து முன்னேறினால் மட்டுமே அந்த ஓடையைக் கடக்க முடியும். ஆனால் சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் ஆற்றோடு போக வேண்டியது தான்…
அந்த ஓடையைப் பார்த்தபடி மிரட்சியுடன் நின்று கொண்டு இருந்த நேரம் ப்ரணவ்வும் உத்ராவும் தின்பண்டங்களை பாதுகாப்பாக அந்தப் பக்கம் கொண்டு செல்வதில் முனைப்பாக இருந்தனர்.
“ஹே உத்ரா ஒழுங்கா நல்லா முடிச்சுப் போடு… ஏதாவது ஒரு ஸ்நாக்ஸாவது கீழே தவறி விழுந்தது அப்புறம் என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்ப… “
“அந்த முகமாவது நல்லா இருக்குமா ப்ரணவ்… “
என்று உத்ரா சொல்ல ப்ரணவ் இரண்டு என்று எண்ணினான்.
“எதுக்குடா இப்போ இரண்டுனு எண்ணிக்கிட்டே இருக்கே… “
“இன்னையோட ரெண்டாவது வாட்டி என்னை வெச்சு சிரிப்பே வராத காமெடி பண்ணிட்டே… இது எல்லாத்தையும் பதிலுக்கு திருப்பி தரணும்ல அதான் எண்ணுனேன்… ” என்று ப்ரணவ் சொல்ல தூ என்று துப்பினாள் உத்ரா.
அதைத் துடைத்துக் கொண்டு அவள் கைகளை இறுக்கமாக பற்றியபடி அந்த இரண்டு மரங்களுக்கு இடையில் கட்டப்பட்டு இருந்த சங்கிலியை ஒரு கையாலும் மறுகையால் உத்ராவையும் பிடித்துக் கொண்டு அந்த ஓடையைக் கடக்கத் துவங்கினான்.
அவர்கள் இருவரும் செல்வதைக் கவனித்த ஆதிரா கலக்கத்துடன் திரும்பி வினய்யைப் பார்த்தாள். இந்த ஓடையை எப்படி தனியாக கடப்பது என்ற அவளது கலக்கத்தை கண்களின் வழிப் படித்தவன்
” பயமா இருந்தா என் கையைப் பிடிச்சுக்கோ ஆதிரா… ஒன்னா சேர்ந்து கடந்துடலாம்… பயப்படாதே” என்றான்.
அதைக் கேட்டதும் ஆதிரா நிமிர்ந்து நின்றாள்.அவனுக்கு முன்னே தன் பயத்தைக் காட்ட அவளுக்கு விருப்பமில்லை. ஆதலால் தைரியமாக இருப்பதுப் போல காட்டிக் கொண்டாள்.
” பயமா எனக்கா அதெல்லாம் எதுவும் இல்லை… இந்த ஓடையை என்னாலே தனியாவே கடக்க முடியும்.. இதெல்லாம் எனக்கு சாதாரணம்.. ” என்று குரல் சொன்னாலும் அவளது முகம் இது தனக்கு அசாதாரணம் என்பதை உணர்த்தியது…
” ஆதிரா அடம்பிடிக்காதே.. தனியா கடக்கிறது இது கஷ்டம்.. கொஞ்சம் தவறுனாலும் தண்ணியோட போக வேண்டியது தான்… உனக்கு என் உதவியை ஏத்துக்கிறது கஷ்டமா இருந்தா நான் அங்கே போய் ப்ரணவ்வை மறுபடியும் இங்கே வர வைக்கிறேன்.. அவன் உனக்கு உதவி பண்ணுவான்… ” என்றவன் ஓடைக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டு இருந்த ப்ரணவ்வை அழைக்க முயன்றான்….
” எனக்கு தான் யாரோட உதவியும் வேண்டாம்னு சொல்றேன்ல என்னாலே தனியாவே கடக்க முடியும்… ” என்று வேகமாக சொன்னவள் சடசடவென சங்கிலியைப் பிடித்து ஓடையைக் கடக்க முயன்றாள்… அவளது பின்னாலேயே அவசர அவசரமாக இறங்கினான்…
திடீரென பலமாக காற்று வீச அந்த சங்கிலி கட்டப்பட்டு இருந்த மரம் ஆடத் துவங்கியது…. அந்த சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இருந்த ஆதிராவின் கைகள் தடுமாறியது… கீழே ஓடிக் கொண்டு இருந்த ஓடையும் அவளது கால்களை தன்னோடு இழுத்துக் கொள்ளப் பார்த்தது… பிடிமானம் இன்றி நழுவி அந்த ஓடையில் இடறி விழுந்தாள்…
தன்னுடைய உயிரை அந்த ஓடை இழுத்துச் சென்றதைப் பார்த்து ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டான் வினய்… ஆதிராவின் பதற்றக் குரல் சட்டென அவனை நடப்புக்கு இழுத்து வர மறுயோசனையின்றி ஆதிரா என்ற கூக்குரலுடன் வினய்யும் அந்த ஓடையில் சட்டென குதித்தான்…
“அண்ணா அண்ணி அண்ணா அண்ணி….” என்ற ப்ரணவ் உத்ராவின் பதற்றக் குரல்கள் அந்த காற்றில் எங்கும் கலந்து அந்த சுற்றுப்புறத்தையே பதற்றமாக்கி கொண்டு இருந்தது….
கடலில் விழுந்தவனுக்கு
ஒரு முறை மரணம்
காதலில் விழுந்தவனுக்கோ
நொடிக்கு நொடிக்கு மரணம்…
💐💐💐💐💐💐💐💐💐💐
பெருஞ்சிங்கம் ஒன்று அடித்துப் போட்ட யானை ஒன்று வேகமாக வீழும் ஓசைப் போல் பெருகிப் பாய்ந்து வந்து கொண்டு இருந்தது அந்த ஓடையில் வெள்ளம்.
அதற்கிடையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது இரண்டு உயிர்கள்.
சுழல் போல சுழற்றிக் கொண்டு இருந்த அந்த வெள்ளம் அவனை தன்னோடு சுருட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்த வினய் அதனில் சிக்காமல் எதிர் நீச்சலடித்து கண்களால் ஆதிராவைத் தேடிக் கொண்டு இருந்தான்.
அவனுடைய எண்ணம் எல்லாம் இப்போது ஆதிராவின் மீது மட்டும் தான் இருந்தது. அவளைப் பத்திரமாக கரை சேர்க்க வேண்டும் என்பதில் தான் முனைப்போடு இருந்தான்.
வேக வேகமாக நீச்சலடித்து ஆதிராவின் அருகே வந்துவிட்டான். அவளோ மூச்சுவிட முடியாமல் தண்ணீரில் திணறிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த நிலையிலும் தன்னை மீட்க வரும் வினய்யின் கரத்தில் அவள் சேர தயாரயில்லை. தன்னருகே வந்த அவனை வேகமாக தள்ளிவிட்டாள்.
“ப்ளீஸ் உத்ரா அடம்பிடிக்காதே… என் கையிலே வந்து சேர்ந்துடு.. நான் உன்னை பத்திரமா கறையேத்துறேன்… ” என்ற வினய்யின் சொற்களை அவள் கேட்பதாகவே இல்லை.
அவள் எண்ணம் எல்லாம் அவனை விட்டு வெகு தூரம் விலகி இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
அவன் அவளைக் காப்பாற்ற அருகில் வரும் போது எல்லாம் அவள் அவனை தள்ளிவிட்டுக் கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளால் தண்ணீரின் வேகத்தை சமாளிக்கவே முடியவில்லை.
அந்த நேரம் பார்த்து வீசிய ஒரு பெரும் அலை அவளை மூழ்கடிக்கப் பார்க்க அதில் கொஞ்சமாய் தடுமாற ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்மாக அந்த நீரினில் மூழ்கத் துவங்கினாள். அதைப் பார்த்த வினய் ” ஆதிரா… ” என்ற கூக்குரலுடன் வேக வேகமாக நீச்சலடித்து நீரினுள் மூழ்கி ஆதிராவைத் தன் கண்களால் தேட ஆரம்பித்தான்.
நீரினில் வீசப்பட்ட கல்லைப் போல அவள் மெல்ல மெல்ல அந்த ஓடையின் அடி ஆழத்திற்கு சென்று கொண்டு இருப்பதை பார்த்தவன் மீனை விட வேகமாக நீந்தி அவளை சென்று அடைந்தான். உணர்வற்று கிடந்தவளின் கன்னத்தை தட்டிப் பார்த்தான்.அவளது முகத்தில் கொஞ்சம் கூட அசைவு இல்லை. அதைக் கண்டு பதறியவன் அவளை வேக வேகமாக தன் தோள்களில் போட்டுக் கொண்டு கரை வந்து சேர்ந்தான்.
அங்கே ப்ரணவ்வும் உத்ராவும் உயிரைக் கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.வினய் அந்த ஓடையின் மறுகரையை வந்தடைந்ததைப் பார்த்தவர்கள் வேக வேகமாக இவர்களும் அந்த ஓடையின் மறுகரையை தாண்டி இவர்களிடம் வந்தனர்.
“அண்ணா,, அண்ணிக்கு என்ன ஆச்சு??” என்ற பதற்றமான குரல்களுக்கு ஆறுதலாக வினய்யால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவன் முகம் முழுக்க நீரால் நிறைந்து இருந்தாலும் அதை மீறி அவனது கண்களில் கண்ணீர் அப்பட்டமாக தெரிந்தது.
இதுவரை எதற்கும் கலங்காத தன் அண்ணானா இன்று இப்படி உடைந்துப் போய் நிற்கின்றான் என்று கவலையுடன் உத்ராவும் ப்ரணவ்வும் சோகமாக பார்த்துக் கொண்டு இருந்த நேரம் வினய் அவர்களை நோக்கி திரும்பினான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திருவிழாவில் தன் அம்மாவைத் தொலைத்த குழந்தையைப் போல பரிதாபமாக அவர்களைப் பார்த்தான்.
அவளை அப்படி மூர்ச்சையாக பார்த்ததிலேயே அவனது உணர்வுகள் மூச்சையற்றுப் போய் இருந்தது.
இப்படி தன் அண்ணன் செயலற்றுப் போய் நிற்பதைப் பார்த்த உத்ரா வேகமாக சென்று வினய்யின் கைகளில் தன் கைகளை அழுந்தப் பதித்தாள்.
அதில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நம்பிக்கை நிறைந்து இருந்தது. வினய் நிமிர்ந்து உத்ராவைப் பார்த்தான்.அவள் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வேகமாக உத்ராவின் அருகில் ஓடினாள்.
உணர்வற்று படுத்துக் கிடந்த ஆதிராவின் வயிற்றில் கைவைத்து அழுத்த அவளது உதடுகளில் இருந்து லேசாக தண்ணீர் கசியத் துவங்கியது.
“மெதுவா வயித்தை அழுத்து உத்ரா… ஆதிராவுக்கு வலிக்கப் போகுது…. ” என்று தொண்டை அடைத்த குரலில் வினய் சொல்ல ப்ரணவ் அவனது தோளில் கைவைத்து ” அண்ணிக்கு ஒன்னும் இல்லை ணா..
நீங்க பயப்படாதீங்க… லேசா தான் உத்ரா வயித்தை அழுத்துறா.. அண்ணிக்கு ஒன்னும் இல்லை… ” என்று தொடர்ந்து அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
உத்ரா வயிற்றில் அழுத்தி எல்லா தண்ணீரையும் எடுத்துவிட கடைசியாக உதடு வழியாக ஆதிரா குடித்து இருந்த அத்தனை தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து சுவாசிக்க தன்னுடைய மூச்சை உட்செலுத்தினாள்.
இரண்டு நொடியில் ஆதிராவிடம் இருந்து லேசான இருமல்..பிறகு லேசாக கண்களைத் திறந்தவள் மெதுவாக தன் உடலை வளைத்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அவள் எழுந்து அமர்ந்ததும் உத்ரா சட்டென்று அவளை இறுக கட்டிக் கொண்டாள்.
“கொஞ்சம் நேரத்திலே எங்களை பயமுறுத்திட்டீங்க அண்ணி…. ” என்று உத்ரா கலங்கிய குரலில் சொல்ல ஆதிரா மெதுவாக சிரித்தாள்.
” அண்ணி உங்களாலே மூச்சுவிட முடியுதா??… எதுக்கும் வாங்க நம்ம ஹாஸ்பிட்டல்க்கு போகலாம்… ” என்று பேசிய ப்ரணவ் உத்ராவை நோக்கி ” உத்ரா அண்ணியை பொறுமையா கைப்பிடிச்சு நம்ம காருக்கு கூட்டிக்கிட்டு வா… ஒரு செக்கப் பண்ணி பார்த்துடலாம்… ” என்று பதற்றத்துடன் பேசினான்.
” அதெல்லாம் எதுவும் இல்லை… நான் நல்லா இருக்கேன்.. ” என்று சொல்லி தலையாட்டி மறுத்தவள் உத்ராவைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றாள்.
ஆனால் வினய்யின் கால்களோ அதே இடத்தில் வேர்விட்டு நின்றுக் கொண்டு இருந்தது. கொஞ்சம் கூட நகராமல் ஆதிராவைப் பார்த்தபடி அப்படியே நின்றுக் கொண்டு இருந்தான்.
” அண்ணா ” என்று சொல்லி ப்ரணவ் அவன் தோளின் மீது கை வைக்க அதில் நிகழ் உலகத்திற்கு வந்தவன் தானும் காரை நோக்கி சென்றான்.
அங்கே இருந்த சால்வையை எடுத்து உத்ராவிடம் கொடுத்து கண்ணசைக்க அவள் அதை வாங்கி ஆதிராவின் தோள் மீது குளிராமல் இருக்க போர்த்தினாள். ஆதிரா ஏறி உள்ளே அமர வினய்யும் காரை எடுத்தான்.
ஆனால் வழி நெடுக கார் ஓட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தியவன் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனுடைய முகம் பாறைப் போல இறுகி இருந்தது. நெற்றியில் விழுந்து இருந்த முடிச்சுக்கள் , தான் தீவிர யோசனையில் இருப்பதாக சொல்லியது.
காதோர முடியை ஒதுக்குவதைப் போல அவனைத் திரும்பி பார்த்தாள் ஆதிரா. ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. கோபமாக மீண்டும் ஜன்னலோரம் திரும்பிக் கொண்டாள்.
கார் அவர்கள் தங்கி இருக்கும் இல்லத்தை வந்தடைந்து விட்டது. ப்ரணவ்வும் உத்ராவும் கூட காரில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்கள். ஆனால் வினய் அதே இடத்தில் நகராமல் அமர்ந்து இருந்தான். ஆதிரா இறங்குவதற்காக காரின் கதவைப் பிடித்தவள் திடீரென திரும்பி வினய்யைப் பார்த்தாள். அவளுடைய மூளையில் அவனை விட்டு தப்பித்து ஓடுவதற்கான காரணம் சிக்கிவிட்டது. முகத்தில் தோன்றிய நம்பிக்கையுடன் வினய்யைப் பார்த்தாள்.
” என்னை எதுக்கு காப்பாத்துன??.. இந்த கான்ட்ராக்ட்ல எழுதி இருந்தது மறந்துப் போயிடுச்சா உனக்கு??.. என் அனுமதி இல்லாம என்னைத் தொடக்கூடாதுனு எழுதி இருக்கு… ” என்றாள் கோபமான குரலில்… அந்த குரலைக் கேட்டதும் பட்டென திரும்பிப் பார்த்தான் அவளை. அவனது கண்கள் முழுக்க வலியில் நிரம்பி இருந்தது.
” ஏன் ஆதிரா உயிர் போற நிலைமையிலே கூட என் உதவியை நிராகாரிச்ச… என் மேலே அந்த அளவுக்கா வெறுப்பு வெச்சு இருக்க???… உன்னை மட்டும் இன்னைக்கு இழந்து இருந்தா என்னை நானே மன்னிச்சு இருந்து இருக்க மாட்டேன்…”
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை… ” என்றாள் கோபமாக. அதுவரை இறுகி இருந்த அவனது இதழ்களில் மெல்லியதாக சிரிப்பு வந்துவிட்டது.
என்னை விட்டு எவ்வளவு தூரமாக ஓட வேண்டும் நினைக்கின்றாள் இவள். ஆனால் இவளை அவ்வளவு சீக்கிரமாக விட நான் தயாரில்லை என்பது தான் இவளுக்கு புரிய மாட்டேன் என்கிறதே. இந்த ஒரு மாதம் என்ன ஆனாலும் அவள் தன்னோடு இருந்தே ஆக வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராய் இருக்கிறேன் என்பதை உணரப் போகிறாளோ? என்று எண்ணியவன் உதட்டில் வழிந்த புன்னகையுடன் திரும்பி அவளைப் பார்த்தான். ஏன் இவன் இப்போது சிரிக்கின்றான் என்ற கேள்வியுடன் அவனைத் திரும்பி பார்த்தாள்.
” ஆதிரா அந்த கான்ட்ராக்ட்ல இருக்கிறதை நீ முழுசா படிக்காதது எனக்கு எவ்வளவு சாதகாமாப் போச்சு தெரியுமா… ” என்று சொல்லி கண்ணடித்தான்.
அவளோ குழப்பத்துடன்
“என்ன சாதகமாப் போச்சு??… ” என்று சொல்லி எதிர்க் கேள்வி கேட்டாள்.
“நீ சாக்கு போக்கு சொல்லி என் கிட்டே இருந்து தப்பிச்சு ஓட முடியாத அளவுக்கு எனக்கு சாதகமாப் போச்சு… ” என்றான் வெற்றிச் சிரிப்புடன்.
” புரியல ” என்றாள் குழப்பமாக.
இதைப் படிச்சு புரிஞ்சுக்கோ என்று சொல்லி காரில் வைத்து இருந்த அந்த அக்ரிமெண்ட்டை எடுத்து அவள் கைகளில் திணித்துவிட்டு காரை விட்டு இறங்கி வெளியே நடந்து சென்றான். செல்லும் அவனையே கோபத்துடன் பார்த்தவள் மீண்டும் திரும்பி அந்த அக்ரிமெண்ட்டைப் பார்த்தாள்.
கடவுளே சென்ற முறைப் போல இந்த முறையும் முதல் வார்த்தையைப் படித்துவிட்டு மீதம் இருக்கும் எல்லா வார்த்தைகளையும் படிக்காத மாதிரி செய்துவிடாதே. இந்த முறையாவது முழுவதையும் படிக்கும் திராணிக் கொடு என்று கடவுளிடம் வேண்டிவிட்டு அந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
முப்பது நாட்கள் தன்னுடன் தங்கி இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக எழுதி இருந்தது… அதற்கான காசோலை இப்போது கைகளில் கொடுத்தாலும் அது ஒரு மாதத்திற்கு பிறகு தான் உபயோகப்படுத்த முடியும் என்ற கூடுதல் தகவலும் இருந்தது.
முதல் வாக்கியமே அவளை மீண்டும் கோபப்படுத்தியது அன்று கோபப்படுத்தியதைப் போல.. இந்த வாக்கியத்தை படித்த அடுத்தக் கணமே கோபப்பட்டு வினய்யின் முன் அந்த ஐந்து லட்ச ரூபாய் காசோலையை கிழித்துப் பறக்கவிட்டது நினைவிற்கு வந்தது. தலையை உலுக்கி அதன் நினைவினில் இருந்து மீண்டவள் அடுத்த வாக்கியத்தைப் படித்தாள்.
“இந்த முப்பது நாட்கள் தன்னுடைய கை கூட அவளின் மீது படாது என்று எழுதி இருந்தான் அவளது உயிரைக் காப்பாற்றும் நிலை வந்தால் மட்டுமே அவனது கைப்படும் என்று எழுதி இருந்தான்.
அதைப் படித்ததும் தலையில் கோபமாக அடித்துக் கொண்டாள். ஆக அவனை விட்டு தூர செல்லக் கிடைத்த வாய்ப்பும் இப்போது தனக்கில்லை என்று புரிந்துவிட்டது. கோபத்தை அடக்கிக் கொண்டு அடுத்த வாக்கியத்தைப் படித்தாள்.
“இந்த முப்பது நாட்களிலே எங்கேயாவது தப்பிச்சு ஓடிட்டா இன்னும் முப்பது நாட்கள் கூட சேர்ந்து தங்கணும்… வெளியிலே என் துணை இல்லாம எங்கேயும் போக்கூடாது… அப்படி போனா திரும்பி வரும் போது நிறைய சாக்லேட் வாங்கி தரணும்… இங்கே இருக்கிற சுற்றுலாத்தளத்துக்கு எல்லாம் மறுக்காம கூட வரணும்… இங்கே தங்கி இருக்கிற முப்பது நாட்களும் செலவு என்னோடது.. அதை ஏத்துக்காதே ஒவ்வொரு வாட்டியும் நான் வாங்கி தர பிரியாணியை சாப்பிடணும்… ஐஸ்கிரீம் சாப்பிடணும்… ” என்று எழுதி இருந்த அந்த கான்ட்ராக்ட்டை முழுவதாக படித்தவளுக்கு ஆயாசமாக இருந்தது… இந்த முப்பது நாட்களுக்கு அவனிடம் இருந்து தப்பிக்கவே முடியாத படி சரியாக அந்த அக்ரிமெண்ட்டை தயாரித்த அவன் மீது கோபம் கோபமாக வந்தது. வேக வேகமாக அந்த காரை விட்டு இறங்கி அவனை நோக்கி சென்றாள்.
அவன் அந்த பூங்காவில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பூக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் முன்பு வந்து மீண்டும் அந்த அக்ரிமெண்ட்டை தூக்கி அவனது முகத்திற்கு நேராக விசிறி அடித்தாள்.
ஆனால் அவனின் முகத்திலோ சிறிதளவு கூட கோபமில்லை. மாறாக சிரித்துக் கொண்டு இருந்தான். அந்த சிரிப்பு அவளை இன்னும் எரிச்சல்படுத்தியது.
” ஆதிரா நீ ஒரு விஷயத்தை வெறுத்துட்டா அதை திரும்பி கூட பார்க்க மாட்டே… உனக்கு ஒருத்தர் மேலே வெறுப்பு வந்துடுச்சுனா ஆயுசுக்கும் அவங்களைப் பத்தி திரும்பி நினைச்சுப் பார்க்க மாட்டே… முழுசா வெறுத்துடுவ…. அது எவ்வளவு தப்புனு இப்போ புரிஞ்சு இருப்பேனு நினைக்கிறேன்… நீ அந்த அக்ரிமென்ட்டோட முதல் வார்த்தையைப் படிச்சுட்டு மீதியைப் படிக்காம விட்டுட்டே.. இதே மாதிரி தான் என் மேலே கோபப்பட்டுட்டு என் கிட்டே ஒரு வார்த்தை கூட பேசாம போயிட்டே… உன் முன் கோபம் தான் உனக்கு எதிரி ஆதிரா…. ”
“வினய் அந்த காலேஜ்ல நடந்ததைப் பத்தி எனக்கு யோசிக்க பிடிக்கல… ப்ளீஸ் அதைப் பத்தி பேசாதே…. ” என்று உட்சபட்ட கோபத்தில் கத்தினாள்….
“ஓகே ஓகே கூல்… நான் அதைப் பத்தி பேசல… இப்போ ஓகே வா… ”
“என்ன ஓகே… எதுவும் ஓகே இல்லை… உன் கிட்டே இருந்து எனக்கு தப்பிக்க வழியே இல்லையா??…” என்று கண்களில் கண்ணீர் மின்ன கேட்டாள். அவளுடைய கண்ணீர் அவனை உலுக்கிப் பார்த்தது.
“இருக்கு ஆதிரா ஒரு வழி இருக்கு… நம்ம ஒரு போட்டி வெச்சுக்கலாம்… அதுல மட்டும் நீ ஜெயிச்சுட்டா இங்கே தங்கி இருக்க வேண்டாம்…. நீ இங்கே இருந்து தாரளமா கிளம்பி போகலாம்… ” என்று அவன் சொல்ல அவளுடைய கண்களில் திடீரென நம்பிக்கை முளைத்தது. உதடுகளில் புன்முறுவல் பூத்தது.
” உண்மையாவா??… ” என்றாள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக.
” சத்தியமா… ” என்று அவன் உறுதி அளிக்க அவனை வெல்லுவதற்காக தயாரானாள் அவள்.
என் முதல் பக்கத்தில்
இருக்கும் கோபத்தைப் பார்த்து
புத்தகத்தை மூடியவர்களுக்கு தெரியாது…
இனி வரப் போகும் பக்கங்களில்
எல்லாம் அன்பு நிறைந்து
இருக்கப் போகிறது என்று….