அனல் பார்வை 05🔥
அனல் பார்வை 05🔥
அந்த அவசர சிகிச்சை பிரிவில் ராகவ் அனுமதிக்கப்பட்டிருக்க, அவனுக்கான சிகிச்சைகள் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தன.
சிகிச்சை அறைக்குள் வைத்தியர்கள், தாதிமார்கள் பதட்டத்துடன் போவதும், வருவதுமாக இருக்க, தன் நண்பனின் நிலை பற்றி கேட்க கூட தெரியாது கண்களில் விழிநீர் கோர்க்க, தலையை தாங்கிய வண்ணம் ஒரு இடத்தையே வெறித்தவாறு அமர்ந்திருந்தான் அக்னி.
ஆங்கில மொழி கூட சுத்தமாக தெரியாத அவன் ‘எப்படி கேட்பது?, யாரிடம் கேட்பது?’ என்று புரியாது இடிந்து போய் உட்கார்ந்திருக்க, ‘தன் நண்பனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ?’ என்ற பயமே அவனை நிலை குழைய செய்திருந்தது.
ஒவ்வொரு தடவையும் தான் அவனை சார்ந்திருப்பதை நினைத்து ராகவ் அடிக்கடி தன்னை திட்டுவதை நினைத்துப் பார்த்தவனுக்கு இப்போதே அது சரியோ? என்று தோணியது.
இதில் சிகிச்சைக்கான பணம் வேறு வைத்தியசாலையில் செலுத்த வேண்டியிருக்க, அவனிடத்தில் பணம் இருந்தால் தானே! கையில் தொலைப்பேசியும் இல்லை. பணமும் இல்லை. அந்த சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவன் போலிருந்தது அவன் தோற்றம்.
தன் நண்பனின் நிலையை கேட்க கூட தெரியாத தன் கையாலாகாத தனத்தை நொந்தவாறு அந்த வைத்தியசாலையின் இருக்கையில் அக்னி அமர்ந்திருக்க, அவனின் தோளை தொட்டது ஒரு கரம்.
தொடுகையை உணர்ந்து நிமிர்ந்தவன், தன் எதிரில் நின்றிருந்தவரை புருவத்தை நெறித்து புரியாமல் பார்த்தான். அவனின் எதிரே நின்றிருந்ததோ அருவியின் மேலாளர். படப்பிடிப்புகளுக்கு ராகவ்வுடன் சென்றவனுக்கு அருவியுடன் இருக்கும் அவளின் மேலாளரை இலகுவாக அடையாளம் காண முடியுமாகத் தான் இருந்தது.
அவனோ அவரை கேள்வியாக நோக்க, “மேடம் உன்னை வர சொன்னாங்க” என்று அவர் ஆங்கிலத்தில் கூற, அவனோ புரியாது விழித்தான்.
சலிப்பாக தலையாட்டியவர், ஸ்பானியன் மொழியில் அதை சொல்ல, விழிவிரித்த அக்னி, “ஏன்?” என்று கேட்க வருவதற்குள் விறுவிறுவென முன்னே நடந்தார் அவர்.
‘இப்போது தனக்கு உதவி செய்யக் கூடிய ஒரே ஆள் அவள் மட்டும் தான்’ என்பதை உணர்ந்தவனும் தன் நண்பனுக்கு சிகிச்சை நடக்கும் அறையை ஒருதரம் விழிநீரோடு பார்த்துவிட்டு, அவர் பின்னாலே ஓடினான்.
அந்த பெரிய சொகுசு காரில் அந்த மேலாளர் ஏறியதும், அவரின் பக்கத்தில் அமர்ந்தவன், ஏதோ கேட்க வாயெடுக்கும் முன்னே, அவனை கைநீட்டி தடுத்தவர், “எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட கேட்டுக்கோ!” என்றுவிட்டு திரும்பிக் கொள்ள, இவனுக்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது.
இதில் கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளுடன் நேருக்குநேர் பேச போகிறான். அதுவும், அவள் என்ன சாதாரணமானவளா? ஹொலிவூட் படத்துறையில் சிறந்த நடிகை என்ற விருது பெற்ற முண்ணனி நடிகை அவள்!
‘ஏற்கனவே தன் மீது வெறுப்பில் இருப்பவள், இன்று அவளாகவே என்னை சந்திக்க முன் வந்திருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? தன் மீது மலையளவு கோபத்தை சுமந்திருப்பவள் தன்னுடன் நேருக்கு நேராக பேசும் போது எவ்வாறு பிரதிபலிப்பை காட்டுவாள்? ஒருவேளை, நமக்கு உதவி செய்ய தான் அழைக்கிறாளோ?’ என்ற பல கேள்விகள் அவனின் சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தன.
அந்த கார் அருவியின் குட்டி அரண்மனையை நெருங்க, இவனுக்கு தான் தன்னவளை காணப் போகும் பதட்டத்தில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. கார் அந்த பெரிய வாசற்கதவை தாண்டி உள்ளே செல்ல, கண்ணாடி சுவர்களால் எழுப்பப்பட்டிருந்த அந்த வசதி படைத்த வீட்டை பார்த்தவனுக்கு ஆச்சரியத்தில் கண்களை விரிக்காமல் இருக்க முடியவில்லை.
போர்டிகாவில் கார் நின்றதும் காரிலிருந்து இறங்கியவன், திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க, அவனின் அருகில் வந்த மேலாளர் உள்ளே போகுமாறு கண்களால் சைகை செய்தார்.
முதல்முறை அவளை நெருங்கும் போது அவன் உணர்ந்த அதே படபடப்பு இன்று மீண்டும் அவனை தொற்றிக் கொள்ள, அவன் கால்களோ நடக்க முடியாமல் பிண்ணிக் கொண்டன.
அந்த வீட்டின் பெரிய கண்ணாடியிலான கதவுகள் அக்னி அதை நெருங்கும் போதே தானாக திறந்துக் கொள்ள, தன் முதல் அடியை வைத்து உள்ளே சென்றவனின் உடலில் ஒருவித சிலிர்ப்பு! அவனுக்கெதிரே அவனவள்! முதல்முறை அவளை பார்க்கும் போது அவளின் கண்களில் கண்ட திமிர் இன்று கூடுதலாக வெறுப்பை சுமந்தம் வண்ணம் தெரிந்தது.
அவன் வரவை எதிர்ப்பார்த்தவள் போல் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு, கையில் குளிர்பானக் குவளையை சுழற்றிய வண்ணம் ஏளனப் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் அருவி. தன்னவளை பார்த்ததும் அவன் இதழ்கள் மெதுவாக விரிய, ‘எங்கு இமை சிமிட்டினால் அவள் தொலைந்து விடுவாளோ?’ என்று பயந்தவன் போல் அவளையே விழிமூடாது பர்த்தவாறு வந்தான் அக்னி.
ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை நோக்கி அவன் வர, “வெல்கம் டூ மை பேளஸ்” என்ற அருவியின் கணீர் குரலில் அவன் நடை தானாகவே நின்றது. ஆனால், தன்னவளை கண்டதும் அவனின் இதழில் தோன்றிய புன்னகை மட்டும் அப்படியே நிலைத்திருந்தது.
அவன் புன்னகையை பார்த்ததும் அவளின் முகம் இறுக, வேதனையை சுமந்த பார்வையுடன் விரக்தியாக புன்னகைத்தாள். அந்த வேதனை நிறைந்த கண்களையும் , விரக்தியான புன்னகையையும் பார்த்த அக்னிக்கு உயிருடன் மரித்த உணர்வு.
அவன் ஏதோ ஒன்று எதிர்ப்பார்த்து ஒன்றை செய்ய துணிய, அந்த முயற்சி தன்னவளுடன் பிரிவை ஏற்படுத்தும் என்று அவன் நினைத்து பார்த்திருக்க கூட மாட்டான். நடந்ததை சொல்லும் தைரியமும் அவனுக்கில்லை. அதை கேட்டு நம்பும் நிலைமையிலும் அருவி இல்லை.
தலைமுடி களைந்து, சட்டையில் ஆங்காங்கே இரத்த கரையுடன், கண்கள் அழுததில் சிவந்து போய் அவன் இருந்த தோற்றத்தை தன் கையிலிருந்த குளிர்பானத்தை அருந்தியவாறு மேலிருந்து கீழ் பார்த்தவள், “எப்படி இருக்கான் உன் காதலி?” என்று கோபம் அடங்கிய ஏளனப் புன்னகையுடன் கேட்டாள்.
அந்த நிலமையிலும் அவள் கோபத்தையும், அவள் கேட்ட விதத்தையும் கண்டுக்காது, தன்னவள் பல நாட்கள் கழித்து தன்னுடன் நேருக்குநேர் பேசியதில் அவன் இதழ்கள் விரிந்துக் கொண்டன. கூடவே, “ஜானு…” என்று அவன் முணுமுணுக்க, அதை கண்டுக்கொண்ட அருவி, கோபத்தின் உச்சியில் தன் கையிலிருந்த குவளையை தரையில் தூக்கி எறிந்தாள்.
அந்த சத்தத்திலே நடப்புக்கு வந்தவன் அவளை புரியாது பார்க்க, அவனை சீண்ட எண்ணியே “உன் ஃப்ரென்ட் சாகு ஊப்ஸ்! சோரி… சோரி… ராகு உயிரோட இருக்கானா, இல்லையா?” என்று உதட்டை பிதுக்கிய வண்ணம் கேலியாக கேட்டாள் அவள்.
இத்தனை நேரம் தன்னவளை நேரில் சந்தித்த இதமான மனநிலை மறைந்து அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கு கோபம் எகிற, கை முஷ்டியை இறுக்கி அவன் கோபத்தை கட்டுப்படுத்தினாலும் நெற்றி நரம்புகள் புடைத்து அவனின் கோபத்தின் அளவை பறை சாற்றியது.
அவனின் புடைத்த நரம்புகளை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சற்று பயம் கொளளத் தான் செய்தது. அவன் எந்தளவு மென்மையோ அதை விட ஆக்ரோஷம் கொண்டவன் என்று அறியாதவளா அவள்?
அக்னியோ தரையை வெறித்தபடி, “எதுக்கு என்னை கூப்பிட்ட?” என்று இறுகிய குரலில் கேட்க, சரியாக அருவிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதை ஏற்றவள் மறுமுனையில் சொன்ன செய்தியில் நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு, “உன் ஃப்ரென்ட்கான ட்ரீட்மென்ட் முடிஞ்சாச்சு. நவ் ஹீ இஸ் சேஃப். அதாவது, அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று சொல்ல, பட்டென்று நிமிர்ந்தவன், “நிஜமாவா? அவனுக்கு ஒன்னும் இல்லல்ல? ராகுவ நான் இப்போவே பார்க்கனும்” என்று சிறுபிள்ளை போல் பதறியபடி கேட்டான்.
எப்போதும் போல் அவனின் இந்த மென்மையில் சாயும் மனதை கடிவாளமிட்டு அடக்கியவள், “பார்க்கலாம். அதுக்கு என்ன அவசரம்? அவனோட ட்ரீட்மென்ட்காக நான் செலவு பண்ண பணத்தை இப்போ என் முன்னாடி வச்சிட்டு நீ தாராளமா அவன பார்க்கலாம்” என்று சொல்ல, அவனோ சற்று அதிர்ந்த பார்வையுடன் அவளை நோக்கினான்.
‘அவன் மேல் கொண்ட கோபத்தால் எங்கு தன்னவனை காயப்படுத்தி விடுவோமோ?’ என்ற பயத்தில் அவனிடமிருந்து ஒதுங்கி இருந்தவளுக்கு தான் அனுபவித்த வலியை அவனுக்கு கொடுக்க இது சரியான வாய்ப்பாக தோன்ற, கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக உபயோகித்தாள்.
“உன் ஃப்ரென்டுக்கான ட்ரீட்மென்ட்க்கு ******* செலவாகியிருக்கு. என்ட், இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அவனுக்கு தலைல பலமா அடிபட்டிருக்குறதால எப்போ கண் விழிப்பான்னு சொல்ல முடியாது. சோ, மெடிகல்லி அவனுக்கு இதுக்கப்றமும் செலவாகலாம். இதுக்கெல்லாம் மொதல்ல உன்கிட்ட பணம் இருக்கா?” என்று அருவி ஏளனமாக கேட்க,
அவனோ பதில் சொல்ல முடியாது தலை குனிந்து நின்றான். இதுவே அதே இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால், ‘நானா உன்கிட்ட பணம் கொடுக்க சொன்னேன்?’ என்று கேட்டிருப்பானோ, என்னவோ? ஆனால், அக்னியை பற்றி அறிந்தவளுக்கு அதுவே சாதகமாகிப் போனது.
“நீ கொடுத்த பணத்தை எப்படியும் நான் திருப்பி கொடுத்திருவேன். இப்போ என்கிட்ட பணம் இல்லை. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு” என்று அவன் கெஞ்சுதலாக கேட்க,
“ஓ கோட்! சொந்த ஃப்ரென்ட் ஹோஸ்பிடல்ல இருக்கான். பட், அவனுக்காக செலவழிக்க கூட துப்பில்லாத உன்னை போய் ஃப்ரென்ட் ஆ வச்சிருக்கானே… ராகவ் ரொம்ப பாவம்!” என்று அவள் இளக்காரமாக சொல்லவும், அக்னியின் முகம் அவமானத்தில் கறுத்து விட்டது.
அதில் திருப்தியுற்றவளாக, “நான் ஒன்னும் மகான் கிடையாது. இருந்தாலும், உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. நான் வேணா ஒரு சலுகை தரட்டா?” என்று கேட்க, அவனோ ஆர்வமாக அவளை பார்த்தான்.
“ட்ரீட்மென்ட்க்கான மொத்த செலவையும் நான் பார்த்துக்குறேன். அந்த பணத்தை ஈடு செய்ய, நீ ஒன்னு பண்ணாலே போதும்.” என்று அவள் பீடிகையுடன் ஆரம்பித்து, “எனக்கு முழுநேர வேலைக்காரனா இருக்கனும் மிஸ்டர்.மஹி” என்று கண்கள் சிவக்க, தான் அனுபவித்த வலிக்கு மருந்தாக அவன் வலியை காண, காயை நகர்த்தினாள் அந்த ஹோலிவுட் உலகின் முண்ணனி நடிகை.
அவனோ அவளை அதிர்ந்து நோக்க, “எனக்கு சேர்வன்ட் ஆ மட்டுமில்ல, என் மேனேஜரா எனக்கு எல்லாமுமா நீதான் இருக்கனும். நீ மட்டும் தான் இருக்கனும்” என்று அழுத்தமாக சொன்னவள்,
“முடியாதுன்னா ஓகே, என்னோட பணத்தை இப்போவே என் முன்னாடி வை. பணத்தை கொடுத்துட்டு உன் பின்னாடி எல்லாம் என்னால அலைய முடியாது. அதுவும், உன் ஃப்ரென்ட் எப்போ கண்ணு விழிப்பான்னு சொல்ல முடியாது. அதுக்குள்ள நீ எங்கேயாச்சும் ஓடி ஒழிஞ்சிட்டன்னா? அது தான் உனக்கு புதுசு இல்லையே… துரோகம்” என்று காட்டமாக வந்து விழுந்தன அவளுடைய வார்த்தைகள்.
அவனுக்கோ அவளின் வார்த்தைகள் இதயத்தை ஈட்டியால் குத்தி கிழிப்பதை போல் அத்தனை வலியை உண்டாக்கின.
“நான் சொன்னதை நீ பண்ணி தான் ஆகனும். இல்லை… உன் ஃப்ரென்ட்க்கு எந்த ட்ரீட்மென்ட்டும் நடக்க முடியாதபடி நான் பண்ணுவேன். ஒன்லி வன் ஓப்ஷன் தான்” என்றுவிட்டு அவனை கண்டுக்காது தொலைப்பேசியினுள் முகத்தை புதைத்துக் கொண்டாள் அருவி.
அவள் சொன்னதில் அதிர்ச்சியில் உறைந்தவன்! தன் நண்பனை காப்பாற்ற முடியவில்லையே என குற்றவுணர்ச்சியில் இருப்பவன்! தன்னுள் எழும் கோபத்தை கை முஷ்டியை இறுக்கி அடக்கியவாறு, அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.
“எனக்கு சம்மதம்” என்று அழுத்தமாக அவன் உரைக்க, சட்டென நிமிர்ந்தவள், “என்ன சம்மதம்?” என்று இளக்காரமாக கேட்டாள்.
“உன்… உன்கிட்ட வேலை பார்க்க எனக்கு சம்மதம்” என்று அக்னி சொல்ல, அவளின் இதழ்கள் வெற்றி புன்னகையை சிந்தினாலும், மனதில் சுருக்கென்ற ஒரு வலி!
கூடவே, தான் சொன்ன பொய் மட்டும் அவனுக்கு தெரிந்தால் என்னாகுமோ? என்ற பதட்டமும் இருக்கத்தான் செய்தது. அவளுக்கு தான் தெரியுமே அவனின் கோபத்தின் அளவு! எந்தளவு பனி போல் குளிர்ப்பானோ, அதை விட அதிகமாக அக்னியாக கொதித்தெழுவான்.
அவன் சம்மதம் சொன்ன அடுத்த சில நொடிகளில் அவன் முன் ஒரு பத்திரம் வைக்கப்பட்டது. அவனோ அதை புரியாது பார்க்க, “கையெழுத்து போட தெரியுமா?” என்ற அருவியின் குரலில் ‘தெரியும்’ எனும் ரீதியில் தலையாட்டியவன், அதில் தன் கையெழுத்தை வைக்க, ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைகளை கூறினாள் அவள்.
“லுக், எனக்கு சாதாரணமா ஜூஸ் போட்டு கொடுக்குறதுல இருந்து என்னோட சின்ன சின்ன வேலைகளையும் நீதான் பார்த்துக்கனும். தினமும் நான் என்ன சாப்பிடனும், எப்படி ட்ரெஸ் பண்ணனும் என்கிறதுல இருந்து நீதான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணனும். டெய்லி ஷூட்டிங் இருக்கும்.
என்னை ஷூட்டிங்க்கு ரெடி பண்றதுல இருந்து, என்னோட டெய்லி ச்செடியூல் வரை நீதான் கவனிச்சிக்கனும். நீ எனக்கு கொடுக்க வேண்டிய பணம் தினமும் நீ பண்ற வேலைகளால குறைஞ்சிக்கிட்டே வரும். அதுவரைக்கும் நீ என்னோட ஆஃபீஷியல் அடிமை. புரிஞ்சதா? ஒரு தடவை உன்கிட்ட ஏமாந்துட்டேன். மறுபடியும் என்னை ஏமாத்த பார்த்த…” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவள் மிரட்ட,
“நீ கொடுத்த பணத்துக்காக உன்கிட்ட வேலை பார்க்குறேன். அதுக்காக நான் அடிமை கிடையாது” என்று அழுத்தமாக உரைத்துவிட்டு புன்னகையுடன் அவன் அவளையே பார்த்திருக்க, இவளுக்கு தான் கடுப்பாகிப் போனது. கூடவே அக்னி தன்னையே விழிமூடாது பார்க்கும் பார்வையில் கோபம் ஏகத்துக்கும் எகிறியது அவளுக்கு.
அவனை கண்டுக்காதது போல் தன் மேலாளரிடம் அக்னியை காட்டி கண்களால் அவள் சைகை செய்ய, அவரும் தலையசைத்துவிட்டு அருவியையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தவனை அங்கிருந்து இழுத்துச் சென்றார்.
அவன் சென்ற மறுநொடி விறுவிறுவென வீட்டுக்குள் இருந்த அந்த பெரிய ஹோலினுள் நுழைந்தவள், நேரில் அவனிடம் காட்ட முடியாத மொத்த கோபத்தையும் அவனின் புகைப்படத்தில் ஈட்டி எறிந்து அடக்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
இங்கு வைத்தியசாலையில் ராகவ்வை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்து, மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் சுயநினைவு இல்லாது படுத்திருந்த தன் நண்பனை பார்த்தவனது நினைவுகளோ மூன்று வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளுக்கு சென்றது.
மூன்று வருடங்களுக்கு முன்…
-ஷேஹா ஸகி