pm7

pm7

ஃபீனிக்ஸ் – 7

 

தெருவில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருவரையும் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர்.

பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டனர்.

‘ரொம்ப அடி பலமாம்!  கஷ்டந்தானாம்! ரெண்டு பசங்களுக்கும் இப்டினா? பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்!’, என ஏதேதோ பேச்சுகள்.

மூன்று நாள்கள் அவ்வாறே தொடர்ந்தது.

கோச்சிங் வகுப்பிற்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன்.

எதிலும் மனம் லயிக்கவில்லை.

மருத்துவமனை விசயங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட, கேட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

நம்ப முடியாத மனம் என்பதைவிட, ஏற்றுக்கொள்ள இயலாத உள்ளம் ஊமையாக அழுதது!

துக்கம் கேட்டதும், அறிந்தவர்கள், அறியாதவர்கள் அனைவரும் அவனைப் பற்றிய புகழதிகாரத்தை கூறத் துவங்கினர்

ஒன்னு சூட்டிகை, இன்னொன்னு உதவாக்கரை.

சூட்டிகையான பையன் போய்ச் சேந்துட்டான்.

இன்னொரு பையனும் தேறி வரது கஷ்டம்னு சொல்றாங்க, என பேசிக் கொண்டார்கள்.

யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை எனக்கு என் மனதளவில் புரிய முயன்றேன்.

நான் புரிந்து கொண்டது, சூட்டிகை ஷ்யாம்.  அதாவது எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன்.

உதவாக்கரை அந்த அரவேக்காடு.

அவனது பேச்சுகள் ஒவ்வொன்றும் காற்றிலேயே பொறிக்கப்பட்டது!

அவனது செயல்கள் ஒவ்வொன்றும் சிம்ம சொப்பனமாக சிலாகிக்கப்பட்டது!

அவனது நடத்தைகள் ஒவ்வொன்றும் நாலாபுறமும் விவாதிக்கப்பட்டது!

பேருந்து பயணத்தில் சந்தித்த நிகழ்வுகளைக் கொண்டு மட்டுமே, இருவரையும் எடைபோட்டிருந்தேன்.

உண்மையில் இருவரையும் பற்றி, துல்லியமாக எதையும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

குழப்பங்கள் கூடுகட்டி காச்மூச்சென்ற சத்தம் நிற்கவேயில்லை.

ஷ்யாமா, ஷ்ரவந்தா இறந்தது?

ஒருவர் ஷ்யாமாம் என்றார், மற்றொருவர் ஷ்ரவந்தாம் என்றார்.

எதை நம்ப, எதை ஒதுக்க?

வீட்டிற்கும் வந்து சென்றவன் என்கிற முறையில் எனது தாயிக்கும் ஷ்யாமை மட்டுமே நன்கு தெரிந்திருந்தது.

அவரும், ஷ்யாமையே நினைத்து, “நல்ல புள்ளை.  அதுக்கு இப்டி ஒரு நிலமை வந்திருக்க வேணாம்”, என புலம்பியதைக் கேட்டதும்

அவனாக இருக்க மாட்டான் என எனக்குச் சாதகமாக்க எண்ண முயன்றதையும், மாற்றி ஏற்றுக் கொள்ளச் செய்தது எனது தாயின் வார்த்தைகள்.

அத்தோடு, அவர்தான் அவனது கடைசி காரியத்திற்கு நேரில் சென்று வந்திருந்தார்.

அதுவே பெரும் சாட்சியாக மனம் நினைத்தது.

அது மட்டுமே நப்பாசை கொண்ட மனதிற்கு போதுமானதாக இல்லை!

நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.

ஷ்யாம், உயிரோடு இருந்தால் கண்டிப்பாக வந்து என்னைச் சந்திப்பான்.

வரவில்லையென்றால்…

ஷ்யாம் தோற்றுவிட்டான் மரணத்தில் என என்னால் தீர்மானிக்கப்படும்!

மரணித்தவன் யாராக இருந்தாலும், அதைக்காண மனம் விரும்பவில்லை!

அந்தத் தைரியம் எனக்கில்லை!

குறிப்பாக இதுபோன்ற மரணங்களில் வயதுப் பெண்கள் உற்ற சொந்தமாக இருந்தால் மட்டுமே செல்வர்.  இல்லையெனில் தவிர்த்துவிடுவர்.

“கடசியா ஒரு தடவை அந்தப் பையலைப் போயி பாத்துட்டு வந்துருவோம்.  நீயும் வரியா?”, அழைத்தவர்களை தவிர்த்து விலகினேன்!

எனக்குள் அவனது நினைவுகளை வளர்த்து, சீராட்டி, உச்சி முகர்ந்து, பாராட்டி, களித்து, மகிழ்ந்து என எத்துணையோ உணர்வுகளை எனக்கு அறிமுகம் செய்தவன், மரணத்தை தழுவியிருந்தால்… அதை ஏற்றுக் கொள்ள என்னால் இயலுமா?

முடியாது என்பதால், நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

ஷ்ரவந்தை அதற்காக இறந்துபோக வேண்டும் என எண்ணுமளவிற்கு கல்நெஞ்சம் எனக்கில்லை.

ஆனாலும் ஷ்யாமிற்காக காத்திருந்தேன்.

மாதங்கள் கடந்தது.

நம்பிக்கை தொய்ந்தது.

நாள் செல்லச் செல்ல, அவன் மரணித்து… ஜீவனை விட்டு, உயிரற்ற ஜடமாக எனை நடமாடச் செய்ததை எப்படி யாருக்கும் தெரியாமல் காப்பேன்.

எனக்குள் புழுங்கினேன்.

சிரிப்பு மறந்து போனது.

சிந்தனை முழுதும் அவனே ஆட்கொண்டிருந்தான்.

ஆண்டவனை தியானிக்கத் தோன்றவில்லை.

நியாயம் செய்யத் தவறிவிட்டான் என இறைவனின் மீது கோபம் எழுந்தது.

இறைவனோடு மனதிற்குள் சண்டை போட்டு, சோர்ந்து போனேன்.

எனது உடல்நலம், செயலைக் கவனித்த வீட்டினர், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

புதிய இடத்தில் தங்கியிருந்தால், மாறக்கூடும் என்கிற விசயம் கேட்டு, என்னை சித்தப்பா வீட்டிற்கு அனுப்பியிருந்தனர்.

என்றாவது வீட்டிற்கு விருந்தாளிபோல வந்து செல்லத் துவங்கினேன்.

சுருண்டு படுத்திருந்த எனக்குள் முற்றிலும் உறைந்திருந்த அவனின் நினைவுகள்!

அவ்வப்போது, இறந்திருந்தது ஷ்ரவந்தாக இருந்தால்… எனத் தோன்றும்.

ஆனால் ஷ்யாம் உயிருடன் இருந்தால் எனைக் காண ஓடோடி வந்திருப்பானே.  ஆகையால் அவன் ஷ்யாம் இல்லை என நானே ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

உள்ளத்தின் வேதனையை மறைக்க, நிறைய பொய்கள் புனையப்பட்டது.

பசி மறந்திருந்தது, மறைந்து போனது!

உலகம் வெறுத்துப் போனது!

பிடித்த உணவுகள்கூட கசந்தது.

நகைச்சுவைக் காட்சிகள் வெறுப்பைத் தந்தன.

சுகந்தம் வீசும் மலர்களை நாசி உணரவில்லை.

யாருடைய பேச்சையும் கிரகிக்கும் ஆற்றலை இழந்திருந்தது செவி.

உண்ணுமுன்பே இனிப்பு பண்டங்கள் தெவிட்டியது.

உற்றார், உறவினர் யாரையும் உணரும் நிலையில் இல்லை.

உயிரும் போகட்டும் என துதிக்கத் தோணுது!

துதித்தால் உயிர் போகுமா என அறிவு கேட்குது!

துவண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது!

துயரம் இதை யாரிடம் நான் பகிர்வது?

உள்ளுக்குள் வைத்து பகலில் ஊமையாக அழுவதும், இரவில் கண்ணீரில் மிதப்பதும் வாடிக்கையானது.

சடலத்தைக் காண நாட்டம் கொள்ளவில்லை மனம்.

ஆனால் எனது சகலத்தையும் அவனோடு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்!

சடலத்தைக் கண்டால் எனது சகலமும் தொலைந்து, மறந்து கதறிவிட்டால்…

இன்னும் காதல் கண்ணாமூச்சியாட்டம் தொடரத்தான் வேண்டும்!

உயிரோடு, உணர்வோடு சந்தித்த சந்திப்புகள் எனக்குள் அவனை உயிர்ப்போடு வலம் வரச் செய்திருக்கிறதே!

அதை இழக்க மனம் விரும்பவில்லை!

உயிரோடு எனக்குள் இருப்பவனை என்றுமே இழக்கமாட்டேன் என இறுமாந்திருந்தது இதயம்!

கல்நெஞ்சோடு இருந்த என் மனதில் உளிகொண்டு செதுக்கியதுபோல அவன் நினைவுகள்!

ஆராதனைகள் தினந்தோறும் நடக்கிறது!

யாருக்கு அதனால் லாபம் என அறிவு சிரிக்கிறது?

உருகி, உருகி காதலித்தவனை, மருகி, மருகி அவன் மரணத்திற்குப் பிறகும் காதலிக்கிறேன்!

அறிவானா?

என்னைப் புரிந்து கொள்ள அவனால் இயலுமா?

என் வேதனைகள் எனக்குள் மட்டுமே வேடிக்கையாகிப் போனதே!

வேதனையில் இருந்து அவனது குடும்பம் மீண்டும், மீளாமல் நான்!

சோதனைகள் இன்னும் என் வாழ்வில் என்ன?

பேச்சுக்கள் குறைந்தது.  இயல்பு மாறிப் போனது.

நடுத்தரமாகக் கல்வி பயின்றவள், சிறந்த கல்வியாளராக மாறிப் போனேன்.

கற்றலைத் தவிர, காதலை அறிமுகம் செய்தவனை மட்டுமே தியானிக்கிறேன்!

தியானத்தில் அமைதி கிட்டுமா?  அறியவில்லை.  அவனைப் பற்றிய தியானமே எனக்குள் அமைதியை விதைக்கிறது.

ஆளுமையைப் போதிக்கிறது.

தெளிவாக யோசிக்கிறேன்.

பணிக்காக வேண்டி, என்னை தயார் செய்கிறேன்.

கற்றல் கசந்திருந்தது, இனிப்பாக மாறத் துவங்கியிருந்தது.

சிரமமாக எண்ணவில்லை.  கருமமாக எனது பணியைச் செய்கிறேன்.

நெடிய உழைப்பிற்குப் பிறகு அரசுப்பணியும் கிடைத்துவிட்டது.

பணியில் சேர்ந்த பிறகு, பதவிக்காகவும், பணத்திற்காகவும் பெண் கேட்டு படையெடுக்கிறார்கள் வரன்களை வைத்திருக்கும் பெற்றோர்கள்!

வேண்டல்கள் வழமைபோலவே பரணில்!

வருடங்கள் செல்லச் செல்ல வீட்டுப் பெரியவர்களின் அர்ச்சனைகள் அதிகரித்திருந்தது.

ஆனாலும் நான் எதனையும் காதில் வாங்கவில்லை.

வருடமே கடந்திருந்தது.

பணிக்குச் செல்லத் துவங்கிய பிறகு, வரன்கள் வந்ததால், என்னையும் பெற்றோருடன் தங்க வைத்துக் கொண்டார்கள்.

திடுமென ஷ்யாமின் தாய் எனது வீட்டில்!

எதிர்பார்த்த தருணங்கள் வந்தும், எழிலோடு இல்லாமல், முகச் சுழிப்போடு எதிர்கொண்டேன்.

எதற்காக வந்திருக்கிறார்கள்?

அறைக்குள் இருந்த எனக்கு, அவர்கள் பேசிய அனைத்தும் தெளிவாகக் கேட்டது!

“அண்ணி, எம்பையன் ஷ்யாமுக்கு உங்க பொண்ணை கேட்டு வந்திருக்கோம்”

‘இதைக் கேட்டதும் என்னால் எதையும் நம்பமுடியாமல் திகைத்திருந்தேன்’

“இப்ப தம்பிக்கு உடம்புக்கு எல்லாந் தேவலையா அண்ணீ”, என இழுத்த தாயின் கேள்விக்கு

“இப்ப நல்லாருக்கான்”, என்றவர், அத்தோடு பழைய நினைவுகளையும் தாயுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்.

விபத்தின்போது ஷ்யாம் மற்றும் ஷ்ரவந்த் இருவருக்குமே பெருங்காயங்கள் உண்டாகியிருந்ததாகவும், நண்பர்கள் அடையாளம் தெரியாமல் இருவரது பெயரையும் மாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், உண்மையில் இறந்தது ஷ்ரவந்த் என்றும், ஷ்யாம் குணமாகி வரவே ஆறு மாதங்கள் ஆகிவிட்டதாகவும் எனது தாயிடம் கூறினார் அவனது தாய்.

ஏறத்தாழ, மூன்று ஆண்டுகளை ஷ்யாமை நேரில் காணாமலேயே கடந்திருந்தேன்.

‘அப்போ, சரியானபின்ன ஷ்யாம் வந்து என்னை ஏன் பாக்கலை’, என எனக்குள் கேள்வி தொடர

அதேநேரம் அங்கு நடந்த பேச்சையும் விடாமல் கவனித்தேன்.

“குணமாகவே ஆறு மாசம் போயிருச்சு.  இப்ப அஞ்சாறு மாசமா அவங்கப்பாவுக்கு முன்னப்போல முடியாததால, இவந்தான் தொழிலைப் பாத்துக்கறான். வயசு போகுதேன்னு கல்யாணம் பண்ணலாம்னு பேச்செடுத்தாலே வேணானு தெரிஞ்சான்.  நிறைய பொண்ணு வந்தது.  சரி பாக்குற பொண்ணை எல்லாம் வேணாங்குறானேனு ரொம்ப நொந்து போயிருந்தோம். அப்பத்தான் நம்ம வீராசாமி தரகர்கிட்ட இருந்த உங்க பொண்ணு ஜாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்தோம்.  அது நல்லா பொருந்தியிருக்கறதா சொன்னதும் அவங்கிட்ட ஒரு தடவை பேசிப் பாப்போமுனு கேட்டேன்.  என்னனு தெரில சரினு சொல்லிட்டான்”, பங்கஜம்.

“அவங்கப்பா வந்ததும் சொல்றேண்ணீ.  உங்க நம்பர் குடுத்துட்டுப் போங்க”, என்று அவரை உபசரித்து அனுப்பியிருந்தார் எனது தாய்.

பங்கஜம் அத்தை வந்து சென்றதும், பலவாறாக விவாதங்கள் நடைபெற்றது.

அவங்க வசதிக்கு நம்ம பொண்ணை வந்து கேக்குறாங்க, ஒரு வேளை ஆக்சிடெண்ட்ல எதாவது பிரச்சனையோ என்று

அதற்கு மறுமொழியாக தந்தையும் விசாரித்ததை வந்து தாயிடம் விவரித்தார்.

எனது தந்தை முடிவுக்கு வந்துவிட்டார், என்னை ஷ்யாமிற்கு திருமணம் செய்து கொடுக்க!

விசயம் கேட்க இனிமையாக இருந்தது.

ஆனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு குணமானவன், அதன்பின் ஏன் எனைப் பார்க்க எண்ணவில்லை எனும் கேள்வி எனக்குள் குடைந்தது.

ஆனாலும் பூ வைக்கும் நாளில் ஷ்யாமை சந்திக்க ஆவலோடு காத்திருந்தேன்.

ஆனால்…!

அன்றும் ஏன் அவன் என்னைக் கண்டு கொள்ளவில்லை எனும் கேள்வி தொக்கி நிற்கிறதே?

கேள்விக்கான எனது பதில் சாதகமானதா?

உங்க யாருக்காவது அவன் மனசில என்ன இருக்குனு தெரிஞ்சா, புரிஞ்சா சொல்றீங்களா?

கேட்டாவது சொல்லுங்களேன்!

இப்பவாவது என்னோட நிலை என்னனு உங்க எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். இப்பச் சொல்லுங்க.  நான் பேசிப் பாக்கணும்னு நினைக்கிறது தப்பா?

நீங்களும் திருமணம் வரை என்னைக் காத்திருக்கச் சொல்லிவிடாதீர்கள்!

ஆனா நாளைக்குக் காலையில கல்யாணம்?

————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!