Jeevan Neeyamma–Epi 4

Jeevan Neeyamma–Epi 4
அத்தியாயம் 4
சிலருக்கு ரஜினி பிடிக்கும், சிலருக்கு கமல் பிடிக்கும். எனக்கு இவங்க எல்லோரையும் விட உன்னை மட்டும்தான் உயிராய் பிடிக்கும் என்பாள். யாரவள்? என் ஜீவனவள்!
மேலும் இரண்டு வருடங்கள் உருண்டு ஓடி இருந்தன. முருகன் தொடக்கப் பள்ளியை முடித்து இடைநிலைப் பள்ளிக்கு சென்றிருந்தான். அந்தப் பள்ளி பக்கத்து டவுனில் இருந்தது. பள்ளிப் பேருந்து இருந்தாலும், அதற்கு மேய்ன் ரோட்டுக்குத்தான் போக வேண்டும். காலையிலேயே மகனை சைக்கிளிலேயே அழைத்துப் போய் பஸ் ஏற்றி விட்டு வருவார் அழகு. பள்ளி முடிந்து மேய்ன் ரோட்டில் இருந்து நடந்தே வந்து விடுவான் முருகன்.
ஆறுமுகமும் மீனாட்சியும் எஸ்டேட்டின் தமிழ் பள்ளியிலேயே இன்னும் ரஹ்மானோடு படித்து வந்தனர். பத்து வயது ஆகியும் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாய் தான் இருந்தாள் மீனாட்சி. அடம், பிடிவாதம், வாய் துடுக்கு எல்லாம் இன்னும் வளர்ந்திருந்தது. ஈஸ்வரி கண்டிக்கும் போது வாலை சுருட்டிக் கொண்டு இருப்பவள், இரண்டு நாட்களில் மறுபடியும் சேட்டைகளை ஆரம்பிப்பாள்.
அந்த சனிக்கிழமை காலை வேளையில், தலையில் எண்ணையை அப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார் ராக்கு. பேத்தியையும் இழுத்துப் பக்கத்தில் அமர்த்தி பரபரவென அவள் தலைக்கும் எண்ணையைப் பூசி விட்டிருந்தார் அவர்.
“ஏத்தா ஈஸ்வரி! கொஞ்சம் என் கண்ணுக்கு எண்ணே விடுத்தா! ஒடம்பு சூடாகிப் போய் கெடக்கு. ஒன்னுக்கு மஞ்சளா பிரியுது” என மருமகளை அழைத்தார்.
“எதெத சொல்லனும்னு வெவஸ்த்தை இல்ல இந்தக் கிழவிக்கு! ஒடம்பு சூடா இருக்குன்னுதானே குளிர்ச்சிக்குன்னு தெனம் ஒரு பயிண்டு கள்ளு வாங்கிக் குடிச்சாகுது! இன்னும் என்னவாம்!” என முனகியவர், மாமியாரின் அருகே வந்தார்.
“என்னத்தா முனுமுனுங்கற! வர வர மாமியான்னா ஒரு பயம் இல்லாமா போச்சு இந்த வீட்டுல! எங்காலத்துல மாமியா நடந்து போற தெசையெல்லாம் உழுந்து உழுந்து கும்புடுவோம் நாங்க! இங்க என்னான்னா ஒத்த வேலை சொன்னா, சாமி குத்தமா போயிடுது. அப்பவே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன், ஈஸ்வரின்னு பேரு வச்ச பொண்ணெல்லாம் வேணா, வாழ்க்கை ஈன்னு போயிடும்னு! கேட்டான்னா என் மவேன்!”
“இப்ப என்னைக் கட்டிக்கிட்டு உங்க மவேன் என்னத்த கொறைஞ்சுப் போயிட்டாராம்?” என கேட்டப்படியே மாமியாரின் கண்ணுக்கு எண்ணையை ஊற்றி விட்டார் ஈஸ்வரி.
இத்தனைக்கும் ராக்குப் பார்த்து அழகுக்கு கட்டி வைத்தப் பெண் தான் ஈஸ்வரி.
“என் மவனுக்கு ஒன்னும் கொறைஞ்சிப் போகல! ஒனக்குத்தான் திமிரு, தெனாவெட்டு, வாய்க்கொழுப்பு எல்லாமே ஏத்தமா போய் கெடக்குது!”
அந்த நேரம் பார்த்து அவர்கள் வீட்டுக்கு காபி தூள் கடன் வாங்கிப் போக வந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி,
“ஏத்தா எப்போ பாரு அக்காவ போட்டு வையற! ஈசுக்கா அஞ்சும் மூனும் அடுக்கா செஞ்சி வச்சாலும் உனக்கு நொட்டை சொல்லாட்டினா உறக்கம் வராதே!” என வாயை விட்டார்.
“வாடி என் சீமை சிறுக்கி! வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் தண்ணியில சண்டை, அத தடுக்க வந்த அயிர மீனுக்கு உடைஞ்சிப் போச்சாம் மண்டை! வந்தியா காபி தூள வாங்கனியா, அப்படியே மூடிக்கிட்டுப் போனியான்னு இல்லாம என் வூட்டு சங்கதில மூக்கை நொழைச்சின்னா, மூச்சு விட மூக்கு இருக்காது. அருவாமுனை வச்சி ஆஞ்சிப்புடுவேன் ஆஞ்சி” என ராக்கு சத்தம் போடவும் காபி தூளைக் கூட மறந்து அடித்துப் பிடித்து ஓடிப்போனார் அந்த பாவப்பட்ட பெண்.
“ஏந்த்தே காபி தூளு கேக்க வந்தவள கண்ட மேனிக்கு திட்டிப்புட்டீங்க! பாவம் அவ!”
“என்னத்த பாவம்! நாம இன்னிக்கு அடிச்சுப்போம் நாளைக்குக் கூடிப்போம்! இவ யாரு நமக்கு நடுவுல நாட்டாமை பண்ண? ஓசி காப்பித்தண்ணி குடிக்கறவளுக்கே இம்புட்டு ஏத்தம் இருந்தா, காபி தோட்டம் வச்சிருக்கற எனக்கு எம்புட்டு இருக்கும்!” என சிடுசிடுத்தவரின் தொடையை சுரண்டினாள் மீனாட்சி.
“என்னடி சின்னக் கழுதை?”
“அப்பத்தா! ஒன்னுக்கு மஞ்சளா போனா, கோழி அடிச்சுக் கொழம்பு வச்சி சாப்பிடனுமாம்! அப்பத்தான் அது சரியாகுமாம்! எங்க ஸ்கோல் வாத்தியாரு சொன்னாரு”
மாமியாரும் மருமகளும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். பின் இருவருமே வெடித்து சிரித்தனர். அன்று அவர்கள் மூன்றாவது வீட்டில் ஒரு இறப்பு நேர்ந்திருந்தது. அதனாலேயே அசைவமாய் எதுவும் செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர். சின்னவள் அழுது, கெஞ்சி, கொஞ்சி என செய்திருந்த எந்த அழிச்சாட்டியமும் பலன் தரவில்லை. ஆகையால்தான் இந்த வகையில் தன் காரியத்தை சாதிக்கப் பார்த்தாள் இந்தக் குட்டி.
“போடி! போய் அண்ணங்கள கூப்டுட்டு போய் அந்த செவப்பியப் புடிச்சுட்டு வாங்க. கொழம்பு வச்சிடலாம்” என சம்மதம் கொடுத்தார் ராக்கு.
செவப்பி அவர்கள் வளர்க்கும் சேவல். செவப்பன் எனத்தான் பெயர் வைத்திருக்க வேண்டும். சின்னவள்தான் ஒற்றைக் காலில் நின்று அதற்கு சிவப்பி என பெயர் சூட்டி இருந்தாள்.
“அப்பத்தான்னா அப்பத்தாதான்!” என அவரைக் கட்டிக் கொண்டு முத்த மழை பொழிந்தவள், கோழி பிடிக்க ஓடிவிட்டாள்.
“ஏன்த்தே? ஒரு வாரம் சாப்பிடலைனா என்ன?”
“போடி இவளே! சனிக்கெழமை எழுந்துக்கறப்பவே ஈரல் எனக்கு, ரத்தம் எனக்குன்னு பாடிட்டேத்தான் எழுந்துக்கறா உன் மவ. அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்கும்னா ஏங்கிடுவாடி! சின்னப் புள்ள சாப்டு போறா வுடு! நீ சுடுத்தண்ணி போட்டு வை”
அவர்கள் வீட்டில் வாரத்தில் சனிக்கிழமை மட்டும்தான் கோழி குழம்பு. வருடத்திற்கு ஒரு முறை தீபாவளியன்று ஆட்டுக் கறி சமைப்பார்கள். மற்ற நாட்களில் அசைவம் என்றால் முட்டை, பால் சுறா கருவாடு இப்படித்தான் போகும்.
தன்னை இன்று அடுப்பில் கொதிக்க வைக்கப் போகிறார்கள் என தெரிந்தோ என்னவோ செவப்பி கையில் அம்புடாமல் ஆட்டம் காட்டியது. மூன்று பேரும் கீழே மேலே விழுந்து எழுந்து வெற்றிகரமாக செவப்பியைப் பிடித்து வந்தார்கள். ராக்கு அதன் கழுத்தை அறுத்து, ரத்தத்தை உப்பு கொஞ்சமாக போட்டு வைத்திருந்த ஒரு வட்டியில் பிடித்தார். அதன் பிறகு அதைக் கொதிக்க வைத்த சுடுதண்ணீரில் அமுக்கினார். பத்து நிமிடம் கழித்து அதை வெளியே எடுத்துப் போட்டவர்,
“டீ சின்னக்கழுதை, வந்து மயிற புடுங்குடி!” என குரல் கொடுத்தார்.
மீனாட்சி வளவளவென பேசிக் கொண்டே பிடுங்க,
“வாய் பேசாதடி! பேசனா கோழி மயிறு புடுங்க, புடுங்க முளைக்கும்” என்றார் ராக்கு(இந்த வேலைய என் பாட்டி எனக்குத்தான் குடுப்பாங்க. அவங்க சொன்ன டைலாக்தான் இது.)
இவளும் நிஜம்தான் போல, என வாயை மூடிக் கொண்டே பிடிங்கி சுத்தம் செய்து கொடுத்தாள். கோழியை ராக்கு துண்டமாக்கித் தர, ஈஸ்வரி குழம்பு வைத்தார். கடைசியாக குழம்பு கொதிக்கும் போது எடுத்து வைத்திருந்த கோழி ரத்தத்தை அதில் கொட்டி வேக வைத்து குழம்பை இறக்கினார். இறக்கிய கையோடு திரும்பிப் பார்த்தால் பிள்ளைகள் மூவரும் தங்களது சில்வர் தட்டைக் கையில் பிடித்தப்படி நின்றிருந்தனர்.
மூவரையும் தரையில் அமர்த்தி, சுட சுட புளுங்கல் அரிசி சாதம் பரிமாறி குழம்பை இறைச்சியோடு ஊற்றினார் ஈஸ்வரி. கால் எனக்கு, கல்லீரல் எனக்கு, தொண்டை எனக்கு என அடித்துப் பிடித்து சாப்பிட்டனர் மூவரும். முகத்தில் ஒரு புன்னகையோடு தனது பேரக் குழந்தைகளைப் பார்த்திருந்தார் ராக்கு.
“நாளைக்கு பழம் பறிக்கனும்டா காபி தோட்டத்துல! எப்போதும் போல உங்க கூட்டாளிப் பசங்கள கூட்டிட்டு வாங்க வேலைக்கு. அப்பத்தா கூலி குடுத்துடறேன்”
“அப்பத்தா ரஹ்மானு வரேன் சொல்லிருக்கான்” என்றான் ஆறுமுகம்.
“வரட்டும்யா வரட்டும்”
பழம் பறித்து முடித்தவுடன், ஒன்றாய் சேர்ந்து அந்த காபி தோட்டமே அதிரும் அளவுக்கு விளையாடுவார்கள் சின்னவர்கள். பெரியவர்களும் ஒன்றும் கண்டுக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே பழம் பறிக்கும் தினம் இவர்களுக்கு திருவிழாதான். அதோடு அழகு பாட்டிலில் விற்கும் கிக்காப்போ(கோலா மாதிரி ஒரு வகை பானம்) வாங்கி வந்து தருவார் சின்னவர்களுக்கு எல்லாம். அந்த பானத்துக்காகவும் அப்பத்தா கொடுக்கும் பணத்துக்காகவும் முருகனின் நண்பர்களும் ஆறுமுகத்தின் நண்பர்களும் வருவார்கள் உதவிக்கு.
“அவன் வேணா! ராங்கிப் புடிச்சவன்” என கண்டனம் தெரிவித்தாள் மீனாட்சி.
அவளுக்கும் ரஹ்மானுக்கும் இன்னமும் ஒத்துக் கொள்ளாது. அவன் கொடுக்கும் பென்சில் வேண்டும், ரப்பர் வேண்டும், பலகாரம் வேண்டும் ஆனால் அவன் மட்டும் வேண்டாம். அவனால் தான் ஆசை அண்ணன் ஆறுமுகம் அடிக்கடி சீறுமுகமாகிறான் என்பது அவளது கடு(ணி)ப்பு. ரஹ்மானுக்கோ நெருங்கிய தோழனாய் இருக்கும் ஆறுமுகம் தங்கை என வந்துவிட்டால் வேறுமுகமாகிப் போவதில் மனது முழுக்க கடு(ச)ப்பு.
“மீனு! அண்ணா கூட்டாளிய அப்படிலாம் சொல்லக் கூடாது! வயசுல பெரியவன் அவன். அண்ணான்னு சொல்லிப் பழகு”
“எனக்கு ஏற்கனவே ரெண்டு அண்ணா இருக்காங்க! அந்த நாட்டான(மலாய்காரர்களை நாட்டான் என தமிழர்கள் பேச்சு வாக்கில் குறிப்பிடுவார்கள்) நான் அண்ணா கொண்ணானு கூப்ட மாட்டேன்” என சொன்னவள் கோபமாய் எழுந்து ஓடிவிட்டாள்.
“தட்டுக் கழுவி வைக்க உடம்பு வளையாம ஓடிட்டா பாரேன்!” என மகளது தந்திரம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் ஈஸ்வரி.
“விடுத்தா! பொட்டப்புள்ளைக்கு என்னைக்குமே அடுப்புக் கரண்டி ராஜ்ஜியம்தானே! கொஞ்ச நாளு அவ பாட்டுக்கு சிட்டாட்டம் சுத்தித் திரியட்டும்” என்ற ராக்கு மருமகள் வைத்துத் தந்த சுடுநீரில் குளிக்க ஆரம்பித்தார்.
உள்பாவாடையை மார்பு வரை ஏற்றிக் கட்டி, தண்ணீரைத் தலைக்கு ஊற்றிக் கொண்டே,
“கட்டோடு குழலாட ஆட” என இவர் பாட,
மேல் வீட்டில் இருந்து,
“ஆட!!!” என கோரஸ் கொடுத்தாள் மீனாட்சி.
“கண்ணென்ற மீனாட ஆட” என இவர் தொடர,
“ஆட!!” என அவள் கத்தினாள்.
பாட்டி, பேத்தியின் பாட்டுக் கச்சேரியை சிரிப்புடன் கேட்டப்படியே சாவு வீட்டுக்கு எடுத்துப் போக பெரிய கேட்டிலில் தேநீர் கலக்க ஆரம்பித்தார் ஈஸ்வரி.
பாட்டு கச்சேரி முடிந்ததும் படித்துக் கொண்டிருந்த தன் அண்ணன்களை தொல்லைப் பண்ண ஆரம்பித்தாள் மீனாட்சி.
“பாப்பா! ஒழுங்கா டீச்சர் வரைய சொன்ன படத்த வரைஞ்சு முடி! உனக்காக ரஹ்மான் கிட்ட மேஜிக் கலர்(கலர் கலராய் பேனா போல இருக்கும். கலர் செய்தால் அடுத்தப் பக்கத்தில் கூட அதன் மை ஒட்டிக் கொள்ளும்) கடன் வாங்கிட்டு வந்துருக்கேன். திங்கட் கிழமை திருப்பிக் குடுக்கனும்” என பொறுமையாக சொன்னான் ஆறுமுகம்.
“எனக்கு இந்த ரம்பூத்தான் மரம் வரையவே வர மாட்டுது! ட்ராவிங் பேப்பர அழிச்சி அழிச்சி ஓட்டை விழுந்துப் போச்சு. இன்னும் ஒரே ஒரு பேப்பர்தான் இருக்கு” என சொன்னவளின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“குடு நான் வரைஞ்சி தரேன்!” என தங்கை அழுவதைப் பார்த்து மனமிறங்கி வரைய உதவினான் முருகன்.
பட்டென கண்ணீர் நிற்க, உதட்டில் புன்னகை நெளிந்தது சின்னவளுக்கு. தரையில் அமர்ந்துதான் பாடம் செய்துக் கொண்டிருந்தார்கள் மூவரும். முருகன் வரைய, அப்படியே குப்புறப் படுத்து கைகளை தாடை மேல் வைத்து அதையே கவனித்திருந்தாள் மீனாட்சி. தூரத்தில் ஒப்பாரி சத்தம் வேறு கேட்டது.
“முருண்ணா! இந்த சாவு வீட்டுல, வீடியோ வாடகைக்கு எடுப்பாங்களா?” என கேட்டாள் சின்னவள்.
“தெரியல! எடுத்தாக்கூட கருமாதி மொத நாளுக்குத்தான் எடுப்பாங்க! அப்போத்தானே விடிய விடிய முழிக்க முடியும்”
“வாடா என் மச்சி சொல்வாரே டி.ராஜேந்தர், அவர் படம் போட்டா நல்லாருக்கும்ல!”(இந்த காலகட்டத்தில் கமல், ரஜினிக்கு இணையாக டி.ஆரும் பேசப்பட்டார்)
தம்பியின் காதருகே குனிந்த முருகன் குசுகுசுவென,
“போன தடவ முன்னுக்கு வீட்டுக் கல்யாணத்துல போட்டாங்களே சூரக்கோட்ட சிங்கக்குட்டி, அந்தப் படம் போட்ட நல்லா இருக்கும்டா ஆறு! சிலுக்கு ஒன்னும் தெரியாத பாப்பான்னு நல்லா ஆடிருப்பாங்க” என்றான்.
இவனும் ஆமாமென தலையை நன்றாக ஆட்டினான். பாம்பு காது மீனாட்சி,
“ம்மா! அண்ணா ரெண்டு பேரும் சிலுக்கு நல்லா ஆடறான்னு குசுகுசுன்னு பேசிக்கறாங்க” என கத்தினாள்.
“மொளைச்சி மூனு இல விடல, இவனுங்களுக்கு சிலுக்கு டான்சு கேக்குதா! எடு அந்த கட்ட வெளக்கமாற!” என ராக்கு வெளக்கமாறோடு வர, அண்ணனும் தம்பியும் எடுத்தார்கள் ஓட்டம்.
அங்கேயே அமர்ந்திருந்தால் ராக்கு இவர்களைப் பாக்குப் போல மென்று துப்பிவிடுவார். அண்ணன்மார்கள் தலைத் தெறிக்க ஓடியதில் கலகலவென சிரித்தாள் மீனாட்சி.
மறுநாள் விடிகாலையிலேயே எழுந்துக் கொண்டனர் அந்த வீட்டினர். அன்று பழம் பறிக்கும் வேலை இருக்க, எல்லோரும் அவசர அவசரமாகக் கிளம்பினர். இரவு மழை அடித்து ஊற்றி இருக்க, காலை வேளை மிகவும் குளிராக இருந்தது. எழ மாட்டேன் என அடம் செய்த மீனாட்சியை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி கிளப்பிக் கொண்டு சென்றிருந்தனர்.
ஏழு மணிக்கு தோட்டத்தை அடைந்தனர் அழகு குடும்பத்தினர். மழை பெய்து இருந்ததால் சூரியனாரும் சோம்பலாகவே தனது வேலையை ஆரம்பித்தார். கொட்டகையில் அமர்ந்தவர்களுக்கு வீட்டில் இருந்துக் கொண்டு வந்திருந்த வரக்காப்பியை(கருப்பு காபி) ஊற்றிக் கொடுத்தார் ஈஸ்வரி. அதோடு தொட்டு சாப்பிட தாவா ரொட்டியையும்(சதுரமாக இருக்கும் பிஸ்கட்) கொடுத்தார். குளிருக்கு அந்த சூடான காபி இதமாக இருந்தது. பசியாறி முடிக்கும் தருவாயில், மோட்டர் பைக் ஒன்று அங்கு வந்து நின்றது.
ஆறுமுகம் அங்கே ஓட, அழகுவும் எழுந்துப் போனார். அப்துல்லாதான் மகனுடன் வந்திருந்தார்.
“வாங்க அப்துல்லா!” என வரவேற்றார் அழகு.
“வணக்கம் அழகு! இந்த முறை விளைச்சல் எப்படி?” என கேட்டார் அப்துல்லா.
“நல்ல விளைச்சல்தான்! ரெண்டு நாள் ஆகும் போல பழம் பறிச்சு முடிக்க”
“அதுக்கென்ன, மெதுவாகவே பறிங்க. இன்னிக்கும் நாளைக்கும் குட்டி லாரி அனுப்பி வைக்கறேன். இங்கயே அளந்து எடுத்துக்குவான் என் ஆளு. பணம் எப்போதும் போல மாச கடைசில மொத்தமா வாங்கிக்கிங்க அழகு”
“சரி அப்துல்லா”
“இன்னிக்கு சாயந்திரம் லோடு எடுக்க வர லாரியிலே என் பையனை அனுப்பி வச்சிருங்க. எனக்கு வேலை கொஞ்சம் இருக்கு, வர வசதிப்படாது. இன்னைக்கு போக வேணாம்டா வீட்டுல இருன்னா, சிநேகிதன பார்க்கனும்னு ஒரே அடம். கொஞ்சம் கவனிச்சுக்கப்பா ரஹ்மான”
“அதெல்லாம் நாங்க நல்லா பார்த்துக்கறோம் அப்துல்லா! நம்ம பையனுங்க ரெண்டு பேரும் ஒட்டிப் பொறந்த மாதிரி ஒன்னாவே சுத்துறானுங்க. ஸ்கோல் லீவுல கூட திடல்ல பார்த்துக்குறானுங்க! போன ஜென்மத்து விட்டக் குறை தொட்டக் குறை இப்போ தொடருது போல”
“வீட்டுல கூட ஆறுமுகம் புராணம் தான்” என சொல்லி சிரித்த அப்துல்லா, மகனிடம் கவனமாக இருக்க சொல்லி விட்டு, அவனது மதிய உணவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.
முருகனின் நண்பனும் வந்து விட, எல்லோருக்கும் குட்டி சாக்கு ஒன்றைக் கொடுத்தார் ராக்கு. கங்காருவின் வயிறு போல அந்த சாக்கை வயிற்றில் கட்டிக் கொண்டு பழம் பறித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரு பெரிய எண்ணெய் டின் கொடுக்கப்பட்டது. குட்டி சாக்கு நிறைந்ததும், அந்தப் பழங்களை தங்களுக்குக் கொடுக்கப்பட்ட டின்னில் போட்டு வைக்க வேண்டும். ஒருவர் எத்தனை டின் பழம் பறித்திருக்கிறார் என்பதுதான் கணக்கு. டின் கணக்குப் படி அந்த ஆளுக்கு பணம் கொடுக்கப்படும். அப்துல்லாவும் ரஹ்மானும் ஒரு டீம், முருகனும் அவன் கூட்டாளியும் ஒரு டீம். பாட்டியின் டீமில் மீனாட்சி இருக்க, அழகுவும் ஈஸ்வரியும் தனி தனி டீம். எல்லோருக்கும் அவர்களது நிறையைப்(மர வரிசை) பிரித்துக் கொடுத்தார் ராக்கு.
பேசி சிரித்தப்படி பழம் பறிக்க ஆரம்பித்தார்கள். சிகப்பும் பிங்குமாய் இருக்கும் பழங்களைத்தான் பறிக்க வேண்டும். பச்சை வர்ணத்தில் இருப்பது இன்னும் பழுக்காதது. பாட்டி மேலிருந்த பழங்களைப் பறிக்க, கீழே தன் கைக்கு எட்டியப் பழங்களைப் பறித்தாள் மீனாட்சி. எவ்வளவு முயன்றும் பாதி சாக்கு கூட நிறையவில்லை.
“அப்பத்தா தண்ணிக் குடிச்சுட்டு வரேன்” என்றவள் ஓட்டமாய் அழகுவின் நிறைக்கு ஓடினாள்.
“என்னடாம்மா?” என கேட்டார் அழகு.
“ப்பா! சாக்கு நெறையவே இல்ல! கொஞ்சம் குடு” என முகத்தை சோகமாக வைத்து சொன்னாள் இவள்.
புன்னகையுடன் தன் குட்டி சாக்கில் இருந்த பழங்களை அள்ளி மகளின் சாக்கை நிரப்பினார் அவர். முகம் மலர தகப்பன் கன்னத்தில் முத்தமிட்டவள், ஓடிப்போய் தன் சாக்கில் இருந்ததை டின்னில் கொட்டி விட்டு வந்தாள். பக்கத்து நிறையில் ஆறுமுகமும் ரஹ்மானும் அதற்குள் பாதி டின்னை நிறைத்திருந்தார்கள். சுற்றி முற்றி பார்த்தவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் அவர்களின் டின்னில் இருந்து பழத்தை அள்ளி தனது சாக்கில் பாதி நிறைத்துக் கொண்டாள்.(இந்த வேலையை நான் செய்வேன்! எங்க அய்யா அண்ணன்(பெரிம்மா மகன்) என்னை துரத்தி துரத்தி அடிப்பாங்க! அவங்க டின்ல இருந்துதான் திருடுவேன் நான்)
அப்படியே பழம் பறிப்பதும் மற்றவர்கள் டின்னில் திருடுவதுமாக நேரத்தை ஓட்டினாள் சின்னவள். மதிய உணவு வேளையும் வந்தது. முந்தைய நாள் கருவாட்டுக் குழம்பு, சாதம், மோர் மிளகாய், தயிர், அப்பளம் எனதான் இருந்தது மதிய உணவு. உழைத்தக் களைப்பில் ஒன்றாய் அமர்ந்து உண்டார்கள். ரஹ்மான் தனது உணவு டப்பாவைத் திறந்தான். அதில் சாதத்தோடு அவனுக்குப் பிடித்த பொறித்தக் கோழியும் இருந்தது.
கோழியின் வாசனையில் கவரப்பட்ட மீனாட்சி, ரஹ்மானின் அருகே போய் தன் தட்டை நீட்டினாள்.
“எனக்கு ஒரு கோழி குடு ரஹ்மானு!”
சட்டென அந்த இடமே அமைதியாகியது. உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும் என போதிக்கப்பட்டிருக்க, ஒரு துண்டு கோழியை எடுத்து நீட்டிய மீனாட்சியின் தட்டில் போட்டான் இவன்.
ராக்கு மீனாட்சியை முறைத்துப் பார்த்தார். அது அவள் கண்ணில் விழுந்தால் தானே! அன்று வீட்டுக்குப் போனதும் கண்டிப்பாக அவளுக்கு அடி இடி போல விழும். விளையாடும் போது ரஹ்மான் கொண்டு வரும் பலகாரங்களை இவர்கள் மூவருமே உண்டாலும் அப்பத்தாவின் குணமறிந்து அந்த விஷயத்தை வீட்டில் சொல்ல மாட்டார்கள் பையன்கள் இருவரும். சின்னவள் தெரியாமல் சில சமயம் உளறி வைத்தாலும், ஈஸ்வரி ஒன்றும் சொல்லமாட்டார். ஆனால் ராக்கு இப்படி வாங்கி சாப்பிடார்கள் என தெரிந்தால் அடி வெளுத்து விடுவார். மற்ற ஜாதி மக்களிடம் வாங்கி சாப்பிடுவதையே அனுமதிக்காதவர், மற்ற இனத்து உணவை எப்படி ஏற்பார்!
ஆறுமுகத்தின் நண்பன் என ரஹ்மானை காபி தோட்டம் வரை வர விட்டாலும், வீட்டுக்கு எல்லாம் அழைக்கக் கூடாது என கண்டித்து சொல்லி வைத்திருந்தார் ராக்கு. தீபாவளி பண்டிகையின் போது கூட லீவ் முடிந்து பள்ளிக்குப் போகும் போது பலகாரங்கள் கொண்டுப் போய் ரஹ்மானுக்குக் கொடுப்பதோடு சரி! வீட்டுக்கெல்லாம் அழைக்க மாட்டான் ஆறுமுகம்.
ரஹ்மானின் முன்னே மீனாட்சியைக் கண்டிக்க முடியாமல், அழகுவையும் ஈஸ்வரியையும் முறைத்தார் ராக்கு. ஈஸ்வரி சாப்பிடுவது போல தட்டைப் பார்க்க, அழகு தண்ணீர் குடிப்பது போல தலையைக் குனிந்துக் கொண்டார்.
சுற்றி நடக்கும் எதுவும் புரியாமல்,
“உங்கம்மா கோழி நல்லா பொறிச்சிருக்காங்கடா ரஹ்மானு! எங்கம்மாவுக்கு கறி மட்டும்தான் வைக்கத் தெரியும்! அதுலயும் உப்பு கொறைச்சலாத்தான் இருக்கும்” என ஈஸ்வரியின் நளபாகத்தை நார் நாராக கிழித்தாள் சின்னவள்.
“போதும் பேசனது! சட்டுப்புட்டுன்னு சாப்பிட்டு வேலையப் பாருடி!” என மிரட்டினார் ஈஸ்வரி.
சாப்பாட்டுக் கடையை ஏறுகட்டி விட்டு மீண்டும் வேலையைத் தொடங்கினார்கள் எல்லோரும். தங்களது நிறைக்குப் போனதும்,
“ஏன்டீ, வாரா வாரம் ஒனக்கு கோழி அடிச்சு உணத்தியா ஆக்கிப் போட்டும், கண்டவன் சாப்பிடறதுல பங்குக் கேக்கறீயா! சின்ன சிறுக்கி!” என படீரென சின்னவளின் முதுகில் ஒன்றுப் போட்டார் ராக்கு.
வீலென கத்த ஆரம்பித்தவள்,
“நீ வேணா கிழவி எனக்கு! இன்னில இருந்து உன் கட்சி நான் டொக்கோ(சேர மாட்டேன் என காய் விடுவது).” என அழுதபடியே வாயில் ஆட்காட்டி விரல் வைத்து எச்சில் தொட்டு, இன்னொரு ஆட்காட்டி விரலால் அதை தட்டிக் காட்டிவிட்டு ஓடிப் போனாள் மீனாட்சி.
“மொளைச்சி மூனு இலை விடல! டொக்கோவாம் கொக்கோவாம்” என முணுமுணுத்துக் கொண்டே தன் வேலையைப் பார்த்தார் ராக்கு.
அழுதுக் கொண்டே தனது ஆசை அண்ணன் ஆறுமுகத்தின் நிறைக்கு வந்தாள் மீனாட்சி. அவனைக் கட்டிக் கொண்டு,
“அப்பத்தா பிசாசு என்னை அடிச்சிருச்சு! நான் ரஹ்மானு..” கோழியை சாப்பிட்டதால் அடித்தார் என சொல்ல வந்தவளின் வாயைப் பொத்தியவன், சுற்றும் முற்றும் பார்த்தான். ரஹ்மான் நிறையின் கடைசி மரத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தான்.
‘அப்பாடா! அவனுக்குக் கேட்டிருக்காது!’ என நிம்மதி அடைந்தவன்,
“அப்பத்தா அப்படித்தான். நீ அழாதே! சாமிகிட்ட சொல்லி அப்பத்தாவ அடிக்க சொல்லிடலாம்” என்றவன், அவள் வலிக்கிறது என காட்டிய முதுகைத் தேய்த்து விட்டு, கன்னத்தைத் துடைத்து விட்டான்.
சற்று நேரம் அவர்களுடனே வேலைப் பார்த்தாள் மீனாட்சி.
“ரஹ்மானு டேய்! எனக்கு வயித்தக் கலக்குது! பாப்பாவ பார்த்துக்கடா! நான் ஒரு எட்டு ஓடிட்டு வந்துடறேன்” என சொல்லி விட்டுப் போனான் ஆறுமுகம்.
இவர்களின் நிறை நடுவில் தான் குளம் இருந்தது. முதல் நாள் பெய்த மழைக்கு குளத்தில் நீர் நிரம்பி நின்றது. குளத்தின் விளிம்பில் அமர்ந்துக் கொண்டு காலை தண்ணீரில் அளைந்து விளையாடிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“ஏய் குட்டி சைத்தான், எழுந்து வா! தண்ணில விழுந்த, முழுகி செத்துடுவ” என திட்டினான் ரஹ்மான்.
“போடா பேக்கு! உன்னாலத்தான் நான் அடி வாங்குனேன்! உன் கட்சி நான் டொக்கோ! என் கிட்ட பேசாத போ”
“நீ பேசலைனா எனக்கு ஒன்னும் கொறைஞ்சிடாது! ஒழுங்கா எழுந்து வரியா, இல்லா உங்கப்பாவ கூப்பிடவா?” என மிரட்டினான் இவன்.
அவனைத் திட்டிக் கொண்டே எழுந்தாள் மீனாட்சி. ஈரக்கால் மண்ணில் பட வழுக்கி விடப்பார்த்தது. அவள் தடுமாறவும் சட்டென மீனாட்சியைப் பிடித்து இழுத்தவன், இவனுடைய கால் வழுக்கிக் குளத்தில் விழுந்திருந்தான். இவள் தரையில் விழுந்துக் கிடக்க, அவன் தண்ணீரில் விழுந்துக் கிடந்தான். ரஹ்மானுக்கு நீச்சல் தெரியாது. இரண்டு முறை தத்தளித்து தண்ணீருக்கு கீழே போய் வந்தான் அவன். அவன் முழுகப் போகிறான் என புரிந்ததும்,
“அம்மா, அப்பா ஓடி வாங்க” என குரலெடுத்துக் கத்தினாள் மீனாட்சி. கண்ணில் நீர் பொல பொலவென கொட்டியது.
“ஐயோ ரஹ்மானு! ரஹ்மானு” என புலம்பியவள், பட்டென தான் கட்டி இருந்த நீள பாவாடையைக் கழட்டி, குளத்தின் அருகே படுத்துக் கொண்டு,
“இதப் புடிச்சுக்கோ, புடிச்சிக்கோ” என கத்தினாள்.
அவள் நீட்டிய பாவாடையை, மூச்சுக்குத் தவித்துக் கொண்டிருந்தவன் இருகப் பற்றிக் கொண்டான். அவனது பாரத்தை இவளால் இழுக்கவே முடியவில்லை. இரு கைகளாளும் பாவாடையை இருகப் பிடித்துக் கொண்டு,
“யப்பா! யப்பா!” என கண்ணீர் குரலில் கத்தினாள் மீனாட்சி.
(ஜீவன் துடிக்கும்…)
(ஹை டியர்ஸ்..போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி)