pm12B
pm12B
யாரையோ திருமணம் செய்ய மனதை இனி தயார் செய்ய இயலாது. பெரியவர்களின் புலம்பலோடு, புதிய புத்தியின் வழிகாட்டுதலில் ஷ்ரவந்தையே தேர்ந்தெடுத்திருந்தேன்.
“எனக்குச் சம்மதமில்லையே!”, பொட்டில் அடித்தாற்போல பதில் ஷ்ரவந்திடமிருந்து.
இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
முகத்தில் ஆசிட் ஊற்றிய உணர்வு! எரிந்தது!
“ஏன்?”, அவமானத்தோடு, சுரத்தின்றி கம்மிய குரலில் கேட்டேன்.
“ஏன்னா? எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு!”
“பொய் சொல்ற!”, இழுத்துப் பிடித்து வைத்திருந்த மரியாதை தொலைந்து போயிருந்தது.
“வேணா வந்து அவகிட்டயே கேட்டுப்பாரு!”
“என்ன சொல்ற? யாருகிட்ட?”
“உண்மையத்தான் சொல்றேன்! ஹ்ம் வேற யாருகிட்ட! என் வயிஃப்கிட்டதான்!”
“எப்ப கல்யாணம் ஆச்சு!”, பதற்றம் மறைக்க முயன்று தோற்றிருந்தேன்.
“அது வருசமாச்சு!”
“வருசமா? அதுக்கு வாய்ப்பில்லையே”
“ஏன் இல்லாம!”
“சொல்லாமலேயா? எதுக்கு இப்டிப் பண்ண?”, அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
“என்ன பண்ணேன், கொலையா? கல்யாணந்தானே பண்ணேன்!”, கேலியாக் கேட்டு, என்னைக் கேவச் செய்கிறான்.
“இல்ல! நீ சும்மா சொல்ற! எங்கிட்ட டிவோர்ஸ் வாங்கியே ஒரு வருசமும் ரெண்டொரு மாசந்தானே ஆகுது!”,
‘கணக்குல கரெக்டா இருக்கிற எனக்கு கல்யாண வாழ்க்கையில கரீக்கிட்ட இருக்கத் தெரியலயே’
“ஹா..ஹா… அவனவன் ஆறு மாசத்துல ஆறு கல்யாணம் பண்றான்!”, என சிரித்தான்.
“அத்தை எங்கிட்ட சொல்லவேயில்ல!”
“போயி அதுக்கிட்டேயே கேளு என்னானு”, திண்ணக்கமான பதில் “அப்புறம் எப்பக் கல்யாணம் ஆச்சு? இல்லை என்னை அவாய்ட் பண்ண இப்டி சொல்றியா!”, அழுகை வந்தது. ஆனாலும் சமாளித்துப் பேசினேன்.
“உன்னை அவாய்ட் பண்ணேனா, இல்லை நீ என்னை அவாய்ட் பண்ணியா?”, நறுக் நறுக்கென அம்பாகக் கேட்டான்.
தைத்தாலும் வலி பொறுத்தேன்.
‘இவன் ஏன் இப்டி இருக்கான்? ஆரம்பத்தில இருந்தே இப்டித்தான முறைச்சிட்டு, முசுடு கணக்கா! அதுக்கு பயந்துதான் அந்தப்பக்கமா போயிட்டேன்போல!’, மனம் ஊமையாக அழுதது.
“ஏதோ ஒன்னு. ஆனா அதுக்கு ஏன் இப்ப இப்டி பண்ண?”, என அழத் துவங்கியிருந்தேன்.
சமரசம் எதுவும் கூறாமாலேயே தொடர்பைத் துண்டித்துவிட்டான்.
‘பெரிய மன்மதரு! இவரு பின்னாடி போயி நின்னா ரொம்பத்தான்!’, என மனம் கூறினாலும், அறிவு, “ச்சேய்… போயும் போயும் அவங்கிட்ட போயிஇஇ! கெஞ்சிஇஇஇ! அவன் உன்னை வேணானுஉஉஉ சொல்லிஇஇஇ! கேவலமா இல்லை!”, எனக் கேட்டு கேலி செய்து சிரித்தது.
அழுது களைத்தவள், மனதை மாற்று வழியில் திருப்ப என்னன்னவோ செய்து, ஒரு வழியாக பேசியதை மறந்து, இல்லை மறந்ததாக எனக்கு நானே ஏமாற்றியிருந்தேன்.
ஊருக்கு கிளம்பும் தாய், உடன் வருகிறேன் என அழும் குழந்தையை சமாதானம் செய்து, அதற்குத் தெரியாமல் கிளம்பும் முயற்சிபோல இருந்தது! எனக்கே எனது செயல்!
விடுதி வேலைக்கு இன்னும் பெண்கள் வேண்டியிருந்ததால், தேடிக் கொண்டிருக்கிறேன்.
மனம் கனமானதால், அது சரியாகும்வரை விடுதி விசயங்களை ஒப்புக்கு மேற்பார்வையிட்டு அறைக்குள் நுழைய, அதிர்ந்தேன்.
அறைக்குள் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தவனை அங்கு நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் முறுக்கிக் கொண்டேன்.
பிறவி குணம்!
அமர்ந்தபடியே வாயிலில் நின்றவளை நோக்கி, இளம் முறுவலோடு எனை நோக்கிக் கைகளை நீட்டியவனைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் ஓரத்த்தில் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்துவிட்டேன்.
கோபமாக இருப்பதாய் காட்ட முயன்றேன்.
எழுந்தவன், எனது நாற்காலி அருகே நிதானமாக வந்து தோளைப் பற்றி, “எம்மேல கோபமா?”, என மெல்லிய குரலில் கேட்க
“போ!” என தோள் தொட்ட கரங்களை அதனைக் கொண்டே தட்டிவிட்டேன்.
“எங்க போக?”, சரசமாய் வந்தது வினா.
அதிர்ந்து நிமிர்ந்தேன் அவன் முகம் பார்க்க…
அவனது சிரிப்பு எனை ஏதேதோ செய்தது.
இதயத்தின் உணர்வை என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
உள்ளத்தை மறைக்க, “எங்கேயோ போ!”, என இருகைகளைக் கொண்டு எதிரில் நின்றவனை பிடித்துத் தள்ளினேன்.
அசையாமல் அதே இடத்தில் நின்றான்.
“உண்மையிலேயேதான் போகச் சொல்றீயா?”, எனக் கேட்ட அவனது குரலில், எனை அறியாமல் அழத் துவங்கியிருந்தேன்.
எனது அழுகையைப் பார்த்தும் இன்னும் நெருங்கியிருந்தான் என்னை.
அனைத்தையும் மறந்து அவனது மார்பில் முகம் புதைத்தபடியே, “அந்த எங்கோயோதான் போயி கடைசில இங்க வந்த நிக்கறேன்”, என்றபடியே அவனது நெஞ்சில் விரல் சுட்டிக்காட்டியவாறே அழுகிறேன்.
நான் நெருங்கியதும், அவனது இரு கரங்களுக்குள்!
அதற்குமேல் அடக்க இயலாமல் குமுறலோடு முகத்தை அவனது நெஞ்சில் தஞ்சமாய்ப் புதைத்திருந்தேன்.
நீண்டு நெடிய நாள்கள் என்பதைவிட, வருடங்களுக்குப்பின் நிம்மதியான சரணாகதி!
சற்று நேரம் பொறுத்தவன், அதற்குமேல் பொறுமையில்லாது, “ஷ்… என்னதிது! சின்னபுள்ளை மாதிரி! முகத்தைத் தொடை!”, என்ற அவனது குரலில் இன்னும் அழுதேன்.
தோளை இதமாக தன்னோடு அணைத்தபடி நின்றிருந்தான் ஷ்ரவந்த்.
விடாது தேம்பிய என்னை, தலையை இதமாக வருடிக் கொடுத்தவாறே தேற்றினான்.
“எதுக்கு இத்தனை அழுகை? கண்ணுல ஃபால்ஸ் வச்ச மாதிரி!”
“சாரி!”, அழுகையோடு கேட்டேன்.
“எதுக்கு?”
“உங்களை ரொம்ப காக்க வச்சதுக்கு!”
“அது மட்டுந்தான் செஞ்சியா?”
“இல்ல கண்டுக்காததுக்கும் சேத்துதான்!”
“நானும் அப்டித்தான இருந்தேன். சரி விடு”, எனத் தேற்ற நான் விடாது தொடர்ந்திட, “லூசு கண்ணைத் தொடை முதல்ல!”, என அவனே துடைத்து விட்டான்.
பிறகு, “கல்யாணத்துக்கப்பறமும் கண்டுக்காததுக்கு…”, என அழுத்திச் சொன்னான்.
“நீங்கதான பஸ்ல வந்து நான் பேலன்ஸ் பண்ண முடியாதப்ப…”, என எனது கையை மேலே தூக்கி, பின்நோக்கிக் காட்டி, முதல் சந்திப்பை நினைவுபடுத்திக் கேட்க
வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தவன் கேலியோடு, “ஓஹ்! ரொம்பச் சீக்கிரமே கண்டுபிடிச்சிட்டபோல!”, குரலில் கும்மிடிபூண்டி அளவிற்கு எள்ளல்.
“ஏன் இப்டிப் பண்ணீங்க. முன்னாடியே நீங்க எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல”, என அவனையே காரணமாக்கிப் பழி கூற
“நல்லா யோசி… நீ எப்டி இருந்தனு”, என குரலிலேயே எனக்குக் கொட்டு வைத்திருந்தான்.
‘அப்பவே முடிவு செய்திருக்கிறான். இது வழிக்கு ஆகற கேஸ் இல்லைனு’
அத்தோடு சிரிப்பு மாறாமல், “இப்ப என்ன திடீர் ஞானோதயம்”, என என்னைக் கண்டு சிரித்தான்.
“அதைப்பத்தி இனி பேசவேணாம்”, எனக் கூறியதும், என்னைச் சீண்டாமல், அதிலிருந்து மீட்க வேண்டிய செயல்களில் இறங்க எண்ணினான்போலும்.
எனது அறையில் இருந்த பீரோவின் முழு நீள கண்ணாடியின் முன் எனைக் கொண்டுபோய் நிறுத்தினான்.
என்னை என்னாலேயே பார்க்க இயலாதபடி இருந்தேன்.
கண்ணாடியைத் தவிர்த்து, பின்புறம் நின்றிருந்தவனை நோக்கித் திரும்பினேன்.
அவனது நெஞ்சோடு மோதிக் கொண்டவளை அணைவாகப் பிடிக்க முனைய அதைப் புரியாமல், “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்!”, என்றேன்.
அதிர்ந்து கேட்டான், “வருசக்கணக்கா காத்திருந்தாலும் வாழ்க்கை இன்னும் கேள்விக்குறி தானா!”
“ம்ஹ்ம்.. உங்களோட மனசொத்து வாழ…!”, என நான் தேம்பலும், அழுகையும் ஒருசேரக்கூற
“ஷ்… அழுகைய நிறுத்து முதல்ல!”, என கண்டிப்பாக கூறியதும், நானும் கட்டுப்படுத்த முயன்றேன்.
சிரித்தவன், “வயசானாலும் இன்னும் சிறுபிள்ளைமாதிரி பிஹேவ் பண்ற!”, என பேருந்து நாள்களில் எனது முறைப்புகளை என்னிடம் கூறி சீண்டிட, பொய்யாக நான் சிணுங்கியவாறே அருகே நின்றிருந்தவனின் முகத்தை எதிர்கொண்டேன்.
ஒருகையால் என்னை அவனோடு அணைத்துக் கொண்டவன், “வா, போயி பெரியவங்களைப் பாத்துட்டு வரலாம்”, ஆசையோடல்ல, அன்போடு அழைக்கிறான்.
மறுத்தேன்.
கேள்வியாக நோக்கியவனிடம், “முழு மனசோட மீண்டு உங்கட்ட வந்தபின்ன அவங்களைப் போயி பாக்கலாம்”, என்றேன் தேம்பலோடு.
புரிந்ததும், அதனை ஆதரித்து அணைத்துக் கொண்டான்.
அத்தோடு விடவில்லை.
அணைப்பில் வைத்தபடியே துவங்கியிருந்தான்.
“வாழ்க்கையில எல்லா உணர்வுகளையும் ஒரு கட்டத்தில ரொம்ப அழுத்தமா உணரக்கூடிய தருணங்கள் வரும். அதுக்காக அதுவே வாழ்க்கைனு வேற எதையும் கண்டுக்காமலோ, இல்லைனா அது தந்த வருந்தங்கள்ல நம்மை மூழ்கடிச்சி ஓஞ்சி போயிட்டா, நிறைய மற்ற நல்ல விசயங்களை இழந்திருவோம்.
சந்தோசமானதா இருந்தாலும் சரி, சங்கடமானதா இருந்தாலும் சரி, அதத்தாண்டி எவ்வளவு சீக்கிரமா நிதர்சனத்துக்கு வரமோ, நம்மை நாமே காப்பாத்திக்கலாம்.
எதுல மாட்டுனாலும், சீக்குத்தான்”, என சிரித்தவன்
“காதலும் அப்டித்தான். அது வரும். எப்ப வரும்னு சரியா சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்குமிடையே உண்மை அவசியம். அப்ப, உயிரோட, உணர்வோட அதை வாழ வைக்கலாம். தப்பில்லை.
சின்ன தொய்வு எங்க, யாருகிட்ட இருந்தாலும், அதை வாழ வைக்கணும்னு நிக்காம, வந்ததை ஏத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்கணும்.
மாயையில உளன்டு மனசைப் போட்டு உளப்பி, குழப்பி, நம்மை அது சிதைச்சா, உண்மையில அங்க காதல் இருக்காது. கசப்பும் வேதனையுந்தான் மிஞ்சும். அது நம்மைச் சுத்தி இருக்கறவங்களையும், நம்மை நம்பி இருக்கிறவங்களையும் சிதைச்சிரும்.
நிதர்சனத்தை உணர்ந்து புத்திசாலித்தனமா நம்மை மாத்திக்கணும்.
அப்பா, அம்மா இல்லைனு எவனாவது இப்டி பைத்தியமா தெரியராணுங்களா? சொல்லு…”, எனக்கேட்டு தலையில் அவனது தலையால் முட்டிக் கேட்க
வலியில் ஆஹ் என்றதோடு, வராத கோபத்தை வரவைக்கும் முயற்சியில் தோற்று பே என விழித்தபடியே அவனையே இமைக்காமல் பார்த்து நின்றிருந்தேன்.
அவன் தொடர்ந்திருந்தான். “…அப்டி எந்தப் படத்திலயாவது காமிக்கிறானுங்களா?
இல்லைல்ல?
அவங்களைவிட வேற எந்த உறவு உனக்காக பாத்துப் பாத்துச் செய்யும்? சொல்லு…
படத்தைப் பாத்தும், சில விசயங்களைப் படிச்சும், கேட்டும் இதுதான் காதல்னு லூசுத்தனமா முடிவெடுத்தா, யாருக்கு நஷ்டம்?
வாழ்க்கை வாழத்தானே தவிர, இப்டியெல்லாம் லவ்வு லாஜிக்னு புலம்பி வீணாக்க இல்லை”, என்றவனிடம்
“அப்ப ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இருந்தீங்க”, என்ற மனதில் தோன்றிய முக்கிய கேள்வியை கேட்டிருந்தேன்.
“யாரு சொன்னா கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு?”, யோசனையாகக் கேட்டான்.
“உங்கம்மாதான்”
“நாளாகட்டும்னுதான் சொன்னேன். கல்யாணம் வேணானு சொல்லலை”
“அப்ப என்னைய மட்டும் ஏன் பண்ணிட்டீங்க?”
“பண்ணிக்கனும்னு தோணுச்சு”, சிரித்தான்.
“ம்ஹ்ம்…”, அதற்குமேல் என்ன பேச என்று தெரியாமல், தெரிந்தாலும் தயங்கியிருந்தேன்.
“என்ன யோசிக்கிற?”
“ஒன்னுமில்லை”
“இல்லையே நிறைய இருக்கறமாதிரி இருக்கே”, என்றவன், “சில உணர்வுகள் சில நேரங்கள்ல தோணும். அப்டித் திடீர்னு தோணிச்சு. அதான் சரின்னேன். மத்தபடி, காதல் அப்டியிப்டினு அதுக்கு எந்தப் பேரும் நான் வைக்கலை”, என தோள் குலுக்கினான்.
“அதுக்கு முன்ன என்னைப் பத்தி எதாவது யோசிச்சிருக்கீங்களா?”
“எனக்கு உன்னைப் பிடிக்காதுனு மட்டும் தெரியும்”, அதையும் சிரித்தபடியே கூறினான்.
“அப்ப எப்டி கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க”
“பிடிக்காத நீயே என்னைக் கட்டிக்கிறேங்கறப்போ, எனக்கென்ன வந்தது?”
“அதைத் தவிர”
“நோ”, என மறுத்து தலையசைத்தவன்,
“பியூர் ஹார்ட் சிலர் இருக்காங்க, அவங்க லெவலே வேற. அப்டியெல்லாம் அவங்களை இமிட்டேட் பண்ண நினைச்சா, பைத்தியக்காரத்தனமா நம்ம வாழ்க்கைய இழந்திருவோம். நாம சாமான்யர்கள். அவங்கள்லாம் அப்டியில்லை! சோ, நமக்கு வரதைத்தான் நாம செய்யனும், இல்லை ஏத்துக்கணும்!”, என்றவாறு என்னைப் பார்த்தவனைப் புரியாமல் நோக்க
“அதுக்காக காதலே குற்றம்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அவங்கவங்க நிலையைப் பொறுத்து அது சிறப்பா, இல்லை சொதப்பலானு அமையும். அப்டி சொதப்பிறக்கூடாதுன்னு நான் அதை எங்கிட்ட வரவிட்டதேயில்லை.
ஒரு சைட்ல மட்டும் அது ஸ்ட்ராங்கா இருந்து, இன்னொரு பக்கம் வீக்கானாலும் அது தப்பா போயிரும். அதையே கல்யாணத்துக்குப்பின்ன பாத்துக்கலாம்னு விட்டாச்சு”, என்றவனது பேச்சில் அவனைப் பற்றிக் கூறுவதை அறிந்து, இதமாக உணர்ந்தேன்!
குற்றவுணர்வு இருந்தாலும், சற்றே இதமாக இருந்தது!
மாறும் மனித மனங்கள்!
உடன்பிறந்தவனை விட்டுக் கொடுக்காமல் கம்பாக நிற்கிறான்.
பங்கஜம் அத்தை கூறியதில் எதையுமே அவன் என்னிடம் குறிப்பிட விரும்பவில்லை என்பதையும் கண்டுகொண்டேன்.
நானும் அவனது மனதிற்கு இதம் கொடுக்க எண்ணி, பழையதைத் தவிர்த்தேன்.
தோற்றத்தைக் கொண்டும், காண்பதைக் கொண்டும் கூட தவறாக எடைபோடுகிறோம் எனத் தோன்ற, ஷ்ரவந்தையே ஆராய்ச்சியாக முகம் பார்க்கிறேன்.
நான் ஒன்றுமில்லை என அதே செய்கையால் பதில் கூற
“மனசுக்குள்ள என்ன கள்ளி?”
“நீதாண்டா கள்ளா…!”
“அதான் தெரியுமே! வேற?”
“கல்யாணம் ஆயிருச்சுன்னு ஏன் சொன்னீங்க”
“ஆயிருச்சுன்னா அப்டித்தான சொல்லணும்”
“எப்போ யாரு கூட”
“அப்போ உங்கூட”, என ஷ்ரவந்த் கூறிய செய்கையில் சிரிப்பு வந்திட
சலுகையோடு மார்பில் சாய்ந்து இளைப்பாறினேன்.
சற்று நேரத்தில் நிமிர்ந்த நான், “இப்பவும் நான் மாறலைன்னா என்ன பண்ணியிருப்பீங்க?”, அவன் முகம் பார்த்துக் கேட்க
தோளைக் குலுக்கி, “என்னத்தைப் பண்ண, அப்டியே வாழ்ந்திட்டுப் போயிருந்திருப்பேன்”, சிரிப்பு மாறாது பதிலளித்தான்.
பேவெனப் பார்த்திருந்தேன்.
‘என்னவொரு மடத்தனமாய் இருந்திருக்கிறேன்’
“வேறென்ன?, என்றான்
“வேற ஒன்னுமில்லை!”
“உண்மையச் சொல்லு, வேற ஒன்னுமில்லையா?”
“இருக்கு… நிறைய…! அதை இனி உனக்கே உனக்குன்னு சொல்லுவேன், செய்வேன்”, உறுதியாகக் கூறினேன்.
இறுக அணைத்த ஷ்ரவந்தின் அணைப்பில், அவனது நீண்ட கால ஏக்கம் உணர்ந்து கொண்டேன்.
வாழ்க்கைப் பாடம் தந்த வலி மறக்கவில்லை.
ஆனாலும், வலி மறந்து, புதிய வழிகிட்ட மனமொத்து வாழப் போகிறேன்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது!
வாழ்த்துங்களேன் என்னை!
ஜனனி வாழ்க! என்று…
இல்லை, இல்லை…!
ஷ்ரவந்த் ஜனனி தம்பதி நீடுடி வாழ்க என்று…!
பழைய நினைவுகளை சாம்பலாக்கி, புதிதாய் ஷ்ரவந்தோடு மனமொத்து பல்லாண்டு வாழ, ஃபீனிக்சாய் மனம் மீண்டு உயிர்தெழுந்து ஷ்ரவந்த்தையே அனைத்துமாக ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு…
வாழ்த்தை வேண்டி, விடைபெறுகிறேன்.
நன்றி!