pm12A

ஃபீனிக்ஸ் – 12(A)

 

எனது ஒரே வருத்தம், இறுதியாக சந்தித்தன்று, எனது மனக் கருத்தை மறைமுகமாக, அதாவது எனது காதலை ஷ்யாமிடம் கூறியதை அவன் கருதாததுதான்.

அதன்பிறகு தானே என்னை திருமணம் முடிக்க தந்தையிடம் போய் சம்மதம் கேட்டிருக்கிறான்.

மறக்க முடியாத நாள்!

மறந்து போயிருந்தவனை, நினைத்திருந்த வேதனை ஆழ்த்தியது.

இருவருக்கிடையேயான முதலும், முடிவுமான ரகசியம் அது!

உயிரோடு இருந்து, அப்பெண்ணையே ஷ்யாம் திருமணம் முடிக்க எண்ணியிருந்தால்கூட எனது காதலுக்கான நியாயம் கிடைத்திருக்குமா? தெரியவில்லை.

‘இப்டி ஒரு ஆளுக்காக கல்யாணம் பண்ணாம கிறுக்கா கொஞ்ச நாளு, அப்புறம் கல்யாணம் பண்ணவனையே கிறுக்காக்குன நாளு’, அனைத்தும் வந்து கிண்டல் செய்தது.

ஆம், அவனுக்காக காத்திருந்த நாட்கள் என்னைக் கேலி செய்து சிரித்தது.

இப்படி தானாக ஒன்றை நினைத்து, நாட்களை வீணாக்கியது என்மீதே எனக்கு கோபத்தை வரவழைத்திருந்தது.

அடுத்தது, அவனை மிகவும் உயர்வாக எண்ணி கற்பனையில் வாழ்ந்திருந்த எனது மடத்தனம்!

உண்மையில் சூட்டிகை என்று சாவின்போது பிறர் குறிப்பிட்டது, ஷ்ரவந்தை!

அதனை அன்று பங்கஜம் அத்தை பேசியபோதுதான் தெரிந்து கொண்டேன் மிகத் தாமதமாக…

அந்தஸ்து, பெருமை போன்றவற்றை இதுவரை விட்டுக் கொடுக்காமலும், சிதைக்காமலும், பொருளாதாரத்தைப் பெருக்க தனக்கு உதவியாக இருந்தவன் ஷ்ரவந்த் என்கிற எண்ணத்தில் அவனது தந்தை அவனை எப்பொழுதும் ஒருபடி உயர்வாகவே குறிப்பிடுவாராம்.

அதற்காக ஷ்யாமின் மீது அன்பில்லை என்றில்லை.

ஷ்யாம், ஜனனியை அதாவது என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வந்து கேட்டதை ஆட்சேபித்து இருந்திருக்கிறார் அவனது தந்தை.

(தங்களது அந்தஸ்திற்கு ஏற்ற குடும்பமாக ஜனனி இல்லை என ஷ்யாமின் தந்தை முதலில் மறுத்ததை பங்கஜம் அத்தை பிறர்முன் அங்கு குறிப்பிடவில்லை என்பது வேறுகதை.

மகனது எண்ணத்தை திசைமாற்ற, தனது மனம்போல மகன் மாற வேண்டி, அதற்கான உத்திகளைக் கையாண்டிருந்தார் அத்தந்தை.

இதைப் பற்றிய விசயங்களை பங்கஜம் வெளியிட முடியாத நிலையில், பாதியைக் கூறி, மீதியை விழுங்கியிருந்தார்.

ஷ்யாமின் மரணத்திற்கு பிறகு விரக்தியடைந்த நிலையில் இருந்த அவனின் தந்தைக்கு, எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் போயிருந்தது.

அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி பங்கஜம், ஷ்ரவந்தை திருமணத்திற்கு கேட்டிருந்தார்)

மகனின் விருப்பத்தைக் கேட்டதும், வைக்கப்பட்ட கெடுவில், ஷ்யாம் வெற்றி பெற்றால், அவன் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியே மலேசியாவிற்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார்.

சென்றவன், அங்குள்ள வசதிகள், அந்தஸ்து என யோசித்து, அத்தை மகளை ஏற்றுக்கொள்ள ஏதுவாக மனதை மாற்றிக் கொண்டிருந்ததாகவும் பட்டும்படாமல் அன்று பங்கஜம் அத்தை கூறியபோது கேட்டிருந்தேன்.

இதுபோன்ற விரும்பத்தகாத செயலைச் செய்தவனை, உதவாக்கரை எனும் பெயர் கொண்டு அவனது தந்தையார் பேசியதை நான் அறிந்திருக்கவில்லை.

யாருனாலும், நம்மை உயர்வாக மட்டுமே பிறரிடம் காட்டிக் கொள்வோம்  நம்ம பிளஸ்ஸை சொல்ற அளவிற்கு மைனஸை யாரிடமும் எளிதாகக் கூறவோ, காட்டிக் கொள்ளவோ மாட்டோமல்லவா.

அதைத்தான் ஷ்யாம் என்னிடம் செய்திருந்திருக்கிறான்.

பங்கஜம் அத்தை பேசியதையே மீண்டும், மீண்டும் யோசித்து, யோசித்துச் சோர்ந்தாலும், நல்ல முடிவில் தேர்ந்தேன்.

மூன்று மாதங்கள் முழுமையாக எடுத்துக் கொண்டேன்.

உருகி, உருகி அன்பைக் காணிக்கையாக்கி, நேசத்தை கவனிப்பாக்கி, உடலை படுக்கையாக்கி, உதிரத்தைக் குழந்தையாக்கி வாரிசை பெற்றுத் தரும் மனைவியருக்கே சில கணவன்மார் உண்மையாக இல்லாத கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகத் தாமதமாகவே அறிவுக்கு எட்டியிருந்தது.

இதுவரை கருத்தில் படாதது, தற்போது பூதகரமாகத் தோன்றத் துவங்கியிருந்தது.

பார்த்தோம், வளர்த்தோம் காதலை என்பதைத் தவிர, பழகினோம், அறிந்தமையால் புரிந்து கொண்டோம், தெரிந்தமையால் நேசங் கொண்டோம் என கூறமுடியாத நிலையில், எனது கடந்துபோன முடிவுகள் என்னை நையாண்டி செய்து சிரித்தது.

எத்தனையோ வாய்ப்புகளை வாசல்வரை கொணர்ந்த சமூகத்தை மதிக்காத எனக்கு, சரியான பாடத்தை வாழ்க்கை உணர்த்திவிட்டதையும் உள்வாங்கியிருந்தேன்.

பெற்றவர்களுக்கும் சரியான நியாயம் செய்யத் தவறியிருந்ததும் சுட்டது.

குதிரைக்கு இட்ட லகானைப்போல எனக்கு நானே ஷ்யாம் எனும் லகானைப் போட்டுக் கொண்டு, தரமாக ஏமாற்றிக் கொண்டதும் புரிந்தது.

இனக்கவர்ச்சியை இதயம்வரை எடுத்துச் சென்று ஏமாற்றிக் கொண்டிருந்த ஏமாளித்தனத்தை, ஷ்யாம் சாதகமாக்கிக் கொள்ள முனைந்ததை தவறென்று கூற முடியாத நிலை.

என்மீதும் வண்டி வண்டியாக குறைகளை வைத்திருப்பது ஏனோ அப்போது நெஞ்சைச் சுட்டது.

எனக்கு எந்தவித பிணக்கோ, இடையூறோ எனது வீட்டினரால் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில், சில வேளைகளில் ஷ்யாமிற்காகவும் யோசித்திருக்கிறேன் என்று கூறினாலும், அதில் எனது சுயநலம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனுக்கு இசைவாக நான் ஒருபோதும் நடந்து கொள்ளாததும் புரிந்தது.

காதலில், ஒருவரைத் தவிக்கவிட்டு, மற்றொருவர் இதமாய் குளிர்காய என்கிற நிலைப்பாடே வந்திருக்கக் கூடாது.  நானும் எனக்குள் தவித்தாலும் அதில் எனது சுயநலம் மிகுந்து இருந்ததை உணர்ந்தேன்.

என்னளவிற்கு நான் சுயநலத்தோடு, யாருக்கும் சந்தேகமின்றி நடந்து கொண்ட நாள்கள் காதலுக்காக வந்து நியாயம் கேட்டது.

அவனை மட்டும் குற்றவாளியாக்கினால், நான் நடந்து கொண்ட முறைமைகளை நியாயப்படுத்திட இயலாத நிலையில் இருந்தேன்.

ஒருவாராக, நடந்தது அனைத்தும் எனது கண்மூடித்தனமான செய்கையால் என்கிற முடிவுக்கு வந்திருந்தேன்.

ஷ்யாமைப் பற்றி தெளிவான கண்ணோட்டம் இல்லாததும், இத்துணை கஷ்டங்களுக்கு ஒரு காரணம் என அறிவு எடுத்துக் கூறியதோடு, எள்ளி நகையாடியது.

தானாகவே, தனக்குள் வைத்து சில விசயங்களை சொதப்பிக் கொண்டதும் புரிந்தது.

காண்பது எல்லாம் உண்மையெனக் கருதிய எனது முட்டாள்தனத்தை எண்ணிய வருத்தம் இருந்தது.

அதனால் அமைதியை தேடி ஒதுங்கினேன்.

இனியும் இப்படியே இருப்பது என்னை நானே இதுநாள்வரை ஏமாற்றிக் கொண்டதோடு, எதிர்காலத்தையும் நானே குழிதோண்டிப் பறிப்பது போன்றது என்கிற நிதர்சனம் புரிந்தது.

நிதர்சனங்கள் நிதானிக்கச் செய்தது.

மறுபக்கம், திருமணம் என்று நேரிடையாக கேட்காதபோதும், பெற்றவர்களின் புலம்பல் நின்றபாடில்லை.

நிதானமாக யோசித்ததில், வேறு மாப்பிள்ளை பார்த்து இனி வேறொரு நபருடன் திருமணம் என்கிற அளவிற்கு செல்ல மனம் முரண்டியது.

ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ ஒருவனுக்கு முறையாக மனைவியாகியிருந்த மனம், விவாகரத்திற்குப் பின்பும் அவனிட்ட மாங்கல்யத்தை வெறும் கயிறாக எண்ணிக் கழட்ட இயலாத நிலையில் இருந்தது.

அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

யாரும் மாங்கல்யத்தை கேட்கவில்லை.  அதனால் இன்னும் அது என்னிடம்தான்.

சமீபமாய், மாங்கல்யத்தைக் காணும் வேளையில் எல்லாம், ஷ்ரவந்திற்கு நான் திருமணத்திற்குப் பிறகு தந்த நெருக்கடிகளை எண்ணி, மனம் நெருடலைத் தந்தது.

விவாகரத்து கிட்டியபோதும், தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்த மாங்கல்யத்தை கழட்டும் மனோதிடம் இதுவரை எனக்கிருக்கவில்லை.

அப்டியிருக்க, இன்னொரு நபரை திருமணம் செய்வது என்பதை என்னால் அறவே ஒப்புக் கொள்ள இயலாது.

அதற்கு ஷ்ரவந்தைக்கூட என்னால் சகிக்க முடியும் எனத் தோன்றியது.

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்ந்துவிட்டு போகும் முடிவுக்கு வந்துவிட்ட நான், ஷ்ரவந்தையே அணுகி இதற்கொரு நல்முடிவைக் காண எண்ணினேன்.

பெரியவர்களிடம் கூறலாம்.  ஆனால் ஷ்ரவந்தின் உண்மை நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டியிருந்தது.

பங்கஜம் அத்தையின் பேச்சிற்குப் பிறகு, சாடைமாடையாக எனது தாய் அவ்வப்போது, வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினார்.

சில நேரங்களில் கெஞ்சினார்.

“வேற யாரையும் புடிக்கலைனாலும், கல்யாணம் பண்ண அந்தப் பையங்கிட்டகூட அப்பாவவிட்டு பேசச் சொல்றேன்”, என சில நேரங்களில் கேட்ட தாயிக்கு தவிப்பை மட்டுமே காணிக்கையாக்கினேன்.

“படிச்சி, வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சிட்டாகல்ல.  அதனால நம்ம பேசறதையெல்லாம் கேட்டு நடந்தா, கேலிக்கூத்தா போயிரும்ல!  அவுக உலகம் தெரிஞ்சவங்க, நாம ரெண்டுபேரும் முட்டா பய சிறுக்கி… அதனால நாம கழுதையா கத்துனாலும், அவுக காதுல விழுகாது”, என்கிற தந்தையின் பேச்சு இன்னும் வதைத்தது.

ஆற்று நீரைப்போல வாழ்ந்துவிட்டு செல்லும் மனம் வந்திருந்தது.

தீர்மானம் செய்தாயிற்று.

ஆனால் ஷ்ரவந்திடம் எனக்காகப் பேச, மற்றவர்களை அனுப்ப மனம் ஒப்பவில்லை.

பங்கஜம் அத்தையின் கட்டாயத்திற்காக அவன் என்னை சகித்துக் கொண்டால்…

அதனால் நானே சென்று அவனது மனநிலையை உள்வாங்கி அதற்கேற்ப அடுத்த கட்டத்திற்கு செல்ல எண்ணினேன்.

இது உழைப்பும், ஊதியமும் தந்த நிமிர்வு அன்றி, திமிரல்ல!

முடிவுக்கு வந்த நான், ஷ்ரவந்தைக் காண அலுவலகம் சென்றேன். மரியாதையோடு உபசரித்தான்.

“வாங்க மேடம், என்ன விசயமா வந்திருக்கீங்க?”

“நீங்க.. இப்ப எங்க இருக்கீங்க?”

நான் கேட்டது, தனிமையில் எங்கு தங்கியிருக்கிறான், உணவு இத்யாதிகளை எங்கு யார் பார்த்துக் கொள்வது எனும் முறைமையில்.

அவனோ, “இங்கேயேதான் இருக்கேன். ஏன் என்ன விசயம்?”, என அலுவலகத்தில் இருப்பதைக் கூற

“இல்ல… பாத்து ரொம்ப நாளாச்சு. அதான் கேட்டேன்”, என நான் சமாளிக்க

“என்னைப் பாக்கணும்னு எல்லாம் நினைச்சீங்களா ஆச்சர்யமா இருக்கே!”, என்றவன்,

“விசயத்துக்கு வாங்க மேடம்.  ஏதோ எதிர்பாத்து வந்துருக்கீங்கனு தெரியுது.  அது என்னானு அடியேன்கிட்ட சொன்னா முடிஞ்சதை செய்வேன்”

“அதான் கரெக்டா கெஸ் பண்றீங்களே! அப்ப நான் என்ன எதிர்பார்த்து வந்தேன்னு கண்டுபிடிங்க”

“அது… நீங்களே கேட்டுருங்க, நான் சொன்னா எதாவது தப்பா போகலாம்”, இதை ஷ்ரவந்திடம் எதிர்பாராதவள்,

“அப்டி என்ன நான் நீங்க சொன்னதை தப்பா புரிஞ்சிட்டேன்”, சூடாகக் கேட்டேன்.

“இப்பவும் கோபப்படுறீங்களே, வேற என்ன விசயத்துக்கு தேடி வரப்போறீங்க? நீங்களே சொல்லுங்க”, என்றபடியே யோசிக்கும் பாவனையில் இருந்தவனை

“கண்டு பிடிங்க… ஆனா சத்தியமா புராபர்ட்டீஸ் கேட்டு வரலை”, என்று அவனது கேள்விகளுக்கோ, ஆச்சர்யங்களுக்கோ இடங்கொடாமல் கிளம்பிவிட்டேன்.

என்ன ஒரு அருமையான கணிப்பு!

இதற்கு முன்பு, முதன் முறையாக விவாகரத்து வேண்டி அணுகியிருந்தேன்.

தற்போது இரண்டாவது முறை அணுகியதும் அப்படித்தான் நினைக்கத் தோன்றியிருக்கும் என என்னை நானே சமாதானம் கூறிக்கொண்டேன்.

அனைத்தையும் உணர்ந்த ஷ்ரவந்த் என்னை சரியாகக் கணித்துக் கூறுகிறான்.

உண்மையில் இந்த மூன்று மாதங்களில் எனை மாற்றிக் கொண்டு, அவனைத் தேடி வருவேன் என்று நானும், அதற்கு முன்பு வரை நான் கனவிலும் யோசித்தது இல்லை.

அன்று அந்த விசயம் எனக்கு கேட்பதற்குரிய வாய்ப்பு கிட்டாதிருந்திருந்தால்…

தற்போது இப்படி ஒரு சூழல் வந்திருக்காது.

அதற்காக எனக்கொரு குறையும் வந்திருக்காது.

ஷ்யாமை எண்ணிக் கொண்டு வாழ்ந்திருந்தால், இறுதியில் சாம்பலோடு, ஷ்ரவந்தை அலைக்கழித்த சாபமும், பாவமும், அத்தோடு பெற்றோரின் ஏக்கமும் அல்லவா எஞ்சியிருக்கும்.

ஆனால், நிறைவும் பிடிப்பும் இல்லாமலேயே வாழ்வு சென்றிருக்குமோ?

பெற்றவர்களுக்கு உரிய மரியாதை தராதது தற்போது உறுத்தியது.

எத்துனை எதிர்பார்ப்புகளோடு, என்னை ஆளாக்கி, திருமணம் செய்து கொடுத்து, என்ன, ஏது என்று எதுவும் கூறாமல், வீட்டிற்கு வந்த மகளை வைத்துக் கொண்டு, மனதளவில் இருவரும் அனுபவித்த வேதனைகள் சொல்லி மாளாது.

அவர்களின் வார்த்தைகளைக் கேளாத செவி, கேலி செய்து சிரித்தது.

சென்று வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், எந்த பதிலும் ஷ்ரவந்திடமிருந்து வரவில்லை.

ஷ்ரவந்த், ஷ்யாம் போலல்ல!

எதையும் வற்புறுத்துவதோ, பின்தொடர்வதோ பிடிக்காது என்பதை அறிந்து கொண்டிருந்தேன், பங்கஜம் அத்தையின் வார்த்தைகள் மூலம்.

பங்கஜம் அத்தையிடமே ஷ்ரவந்தின் அலைபேசி எண்ணை வாங்கி அழைத்தேன்.

யோசனையாக பார்த்தவரை பார்க்கவே இயலாமல் தவிர்த்து விலகினேன்.

அழைப்பை ஏற்றதும் எனது அழைப்பை நம்பாமல் நீயா என்றவன், “என்னால இன்னும் கண்டுபிடிக்க முடியலை”, என்றான்.

‘அப்ப ஞாபகம் இருந்தாலும், நீயா பேச மாட்ட, பெரிய இவுரு’

“உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது லேடீஸ் இருந்தா சொல்லுங்க”, என்றேன்.

விடுதிக்கு இன்னும் ஆள் தேவைப்பட்டது. 

எனக்கும் அவனிடம் பேசியாக வேண்டிய நிலை.

எடுத்ததும், நம்மைப்பற்றிப் பேசி டேமேஜ் ஆக வேண்டாமென நானே விசயத்தை மாற்றியிருந்தேன்.

“!ஒரு நிமிசம்! அப்டியே லைன்ல இரு…!”, என்றவன், அலுவலகத்தில் ஏதோ இன்ஸ்ட்ரக்சன் கொடுத்து முடித்த சற்று நேரத்திற்குப் பின், “உன்னைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது”, என்றான்.  அவனது வார்த்தைகளை வினோதமாக உள்வாங்கினேன்.

செவிகள் நம்ப மறுத்த குரலது!  அவன் மீண்டும் லைனுக்கு வரும்வரை காத்திருந்து,

“நீ… நீங்க உண்மையிலேயே ஷ்ரவந்தா…!”, என மனதில் தோன்றியதை கேட்டேன்.

அக்குரல் முதல் சந்திப்பை நினைவுறுத்தியதால் அவ்வாறு வினவினேன்.

“உனக்கென்ன என்னைப்பத்தின சந்தேகமே மாறி மாறி வருது”, என்றவன்

“நான் ஷ்ரவந்தான்! ஆனா அது இப்ப உனக்கு மட்டுமே தெரியுது.  மத்தவங்களுக்கு நான் ஷ்யாம்தான்”, ஆணித்தரமான குரலில் பதில்.

“ம்ம்..”

“என்ன விசயம்?”

சுற்றி வளைக்காமல், “இப்ப உன்னை… சாரி உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குச் சம்மதம், உங்களுக்குச் சம்மதமா?”, கேட்டுவிட்டேன்.

என்ன சொல்வானோ என்கிற பதைபதைப்போடு லைனில் காத்திருக்க..

இதயத் துடிப்பு எகிறியது பதில் சாதகமா? பாதகமா?