Mazhai – 5

download (60)-73b85f85

Mazhai – 5

அத்தியாயம் – 5

இருவருக்கும் திருமணமாகி ஒரு வாரம் சென்றிருந்த நிலையில் முகிலன் வழக்கம்போல வேலைக்குச் செல்ல தொடங்கினான். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு ரெடியாகி கீழே வந்தான். சாண்டில் நிற பூக்கள் அள்ளி தெளித்த சிவப்பு நிற சுடிதாரில் தயாராகி இருந்த சிற்பிகா அவசர அவசரமாக வேலை செய்வதைக் கவனித்தான்.

“ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?” அவன் வேண்டாவெறுப்பாக கேட்க,

அவனை நிமிர்ந்து பார்க்க நேரமின்றி, “இன்னையில் இருந்து காலேஜ் கிளம்பறேன். மூணு மாசமாக காலேஜ் போகததால் படிக்க நிறைய இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே அடுப்பில் வைத்திருந்த உருளைக்கிழங்கு அடிபிடிக்காமல் கிளறினாள்.

அவள் சொல்வதை அமைதியாக உள்வாங்கி கொண்டு, “நைட் சமையல் செய்ய முடியாதா? அப்போ நான் வெளியே ஹோட்டலில் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டவனை விழிவிரிய நோக்கினாள் சிற்பிகா.

இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து தன்னை ஒரு சக மனிஷியாக மதிக்காகவன் வாயிலிருந்து உதிரும் முத்துக்களா என்ற சந்தேகம் கூட மனதில் எழுந்தது.

அவன் முகத்திற்கு நேர் சொடக்குப் போட தன்னிலைக்கு மீண்டவள், “நீங்களா பேசினீங்க என்று கொஞ்சம் ஷாக்காகிட்டேன். ஆமாங்க நைட் சமைக்க முடியாது. முடிந்தவரை சீக்கிரம் படிச்சிட்டு செய்ய முயற்சி பண்றேன். நீங்களும் ஹெல்ப் பண்ண கொஞ்சம் சீக்கிரமா வேலை முடியும்” என்று எடுத்துச் சொல்ல சரியென்று தலையசைத்தான்.

தனக்கொரு காஃபி கப்பை எடுத்துகொண்டு, அவனின் கையிலும் ஒரு கப்பை கொடுத்தாள். இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர, “நீ என்ன மேஜர் படிக்கிற?” என்று விசாரித்தான்.

“பி.ஏ. ஹிஸ்ட்ரி முதல் வருஷம்..” என்றவளை நிமிர்ந்து பார்த்தான்.

காலையிலிருந்து தனக்கு பதில் சொல்லும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பதைக் கவனித்தவன், “சரி நீ காலேஜ் கிளம்பு. உன்னால் முடிந்தால் மட்டும் இனிமேல் காலை சமையல் பண்ணு. இல்லன்னா வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவனை வேற்றுகிரகவாசி போல பார்த்துவிட்டு, “இன்னைக்கு மழை வரும்னு நினைக்கிறேன்” என முனுமுனுத்தவள், தன் அறைக்கு சென்று பேக்கை எடுத்துக்கொண்டு தாயின் புகைப்படம் முன்னே நின்று விழிமூடி சிலநொடிகள் மெளனமாக நின்றாள்.

பிறகு கல்லூரிக்கு செல்ல வெளியே வந்தவளிடம், “இந்த வீட்டோட கீ. என்னிடம் ஒன்னு இருக்கு” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தான்.  

காலையிலிருந்து அவன் கோபபடாதது ஞாபகம வர, “இன்னைக்கு கட்டாயம் மழை வந்தே தீரும்” சத்தமாகச் சொல்ல வாசலில் நின்றிருந்த முகிலனின் காதுகளை எட்டியது அவளின் குரல்.

“ரொம்ப நாளுக்குப் பிறகு காலேஜ் போற பெண்ணை திட்டாமல் அனுப்பி வைக்கலாம்னு நினைச்சா.. நீ என்னிடம் வசவு வாங்காமல் இங்கிருந்து போக மாட்டபோல” அவன் பட்டென்று பதில் தர நாக்கைக் கடித்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஏனோ அவனிடம் காலையில் வாங்கும் திட்டை வாங்கியபிறகே அன்றைய நாள் இனிதாக தொடங்கியது போல தோன்ற, “இல்ல திடீர்ன்னு மாறினால் பார்க்கிற எல்லோருக்கும் சந்தேகம் வரும்மில்ல” என்ற சிற்பிகாவை முறைத்தான்.

“ஏன்டி என்கிட்ட எதுப்பாரிக் கொடுக்காமல் இருக்க மாட்டியா? நான் கத்தினாலும் மிரட்டற.. சரி அமைதியா போனாலும் வேணும்னு வம்புக்கு இழுக்கிற?” முகத்தைக் கடுகடுவென்று வைத்திருந்த அவனின் குரல் கனிந்தே வந்தது.

அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவம், அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விழிகள், கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகளோடு அவள் சற்று அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயரமாக இருந்தான்.

அவனின் மாநிறத்திற்கு எடுப்பாக சிவப்பு நிற சர்ட், சாண்டில் கலர் பேண்ட் அணிந்து தயாராகி இருந்தவனை சீண்டி பார்க்கும் எண்ணம் தோன்றியது.

“உச்சதலையில் இருந்து உள்ளங்கால் வரை பச்சை மிளகாய் தெய்த்தவனைபோல கடுகடுன்னு இருப்பவங்க திடீர்னு மாறினால் ஊரில் இருக்கும் மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?” இடது புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

அத்தோடு நிறுத்தாமல், “இந்த வாடி போடி என்று பேச நான் ஒண்ணும் உங்க காதலியோ.. இல்ல..” அவள் பாதியில் நிறுத்த இப்போது அவனின் பார்வையில் சுவாரசியம் கூடியது.

அவளை சீண்டிவிடும் எண்ணத்துடன் நெருங்கியவன், “மனைவி இல்லன்னு சொல்ல வருகிறாயா? இந்த எல்லோ த்ரெட்டை உன் கழுத்தில் கட்டியதால் மட்டும் நான் உன் கணவன் ஆகா முடியாதுல்ல” ஏற்ற இரக்கங்களோடு கேட்க உதட்டைக்கடித்து கோபத்தை அடக்கினாள்.

அவளின் தோளில் இருந்த பேக்கை பிடித்துக்கொண்டு, “ச்சே வாயை வைத்துக்கொண்டு கம்மின்னு இருந்திருந்தால் நிம்மதியாவது மிஞ்சியிருக்கும்” கோபத்துடன் முனுமுனுக்க இப்போது சத்தமாகவே சிரித்தான்.

சிற்பிகா அவனை கோபத்துடன் முறைக்க, “இதுக்குத்தான் பொண்ணுங்க அமைதியாக இருக்கணும்னு சொன்னாங்க. அதையெல்லாம் உன்னை மாதிரி திமிரு பிடிச்சிகிட்ட எதிர்பார்க்க முடியுமா? ஐயோ தெரியாமல் இவ கழுத்தில் தாலிகட்டி மாட்டிகிட்டேனே” அவன் சத்தமிட சட்டென்று அவனின் கையைப்பிடித்து நறுக்கென்று கிள்ளினாள்.

“ஆவுச்! ஏண்டி இப்படி கிள்ளி வைக்கிற?” கோபத்துடன் கத்த தொடங்கினான்.

“சும்மா என்னை தேவையில்லாமல் சீண்டினால் இப்படித்தான் பண்ணுவேன்” விரல்நீட்டி எச்சரித்துவிட்டு அவள் நகர்ந்தவளின் கூந்தலை விளையாட்டாக பிடித்து இழுத்தான்.

“ஆ” என்று அலறியவள், “போடா” திட்டிவிட்டு செல்ல அவனின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“ஏய் இம்சை உன்னை பைக்ல ட்ராப் பண்ணட்டுமா?” என்றான் முகிலன்.

இரண்டடி எடுத்து வைத்து திரும்பி பார்த்தவள், “உன்னை நம்பி நான் வர மாட்டேன். நீ என்னை வேணும்னே ரோட்டில் இறக்கிவிட்டு போனாலும் போயிடுவ” முகத்தை தாடையில் இடித்துக்கொண்டு நடந்து சென்றாள்.

அவளின் குறும்புத்தனமான முகம் காண அவனுக்கு பிடித்திருந்தது. அத்தோடு காரணமே இல்லாமல் அவளின் மீதான கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் போனது. அவள் தலை மறையும்வரை அங்கேயே நின்றிருந்தவன் பிறகு பைக்கை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றான்.

வெகுநாட்களுக்கு பிறகு கல்லூரிக்குச் செல்வது மனதினுள் படபடப்பை ஏற்படுத்தியபோதும் முடிந்தவரை தன்னை சமாளித்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தவளை முதலில் பார்த்தது புவனா மட்டுமே!

“சிற்பிகா வா.. நீ வருவ என்ற நம்பிக்கையில் இந்நேரம் வரை கேட் பக்கத்தில் வெயிட் பண்ணேன். இப்போதான் கிளாசிற்கு வந்தேன்” என்று அவளை இழுத்து அருகே அமர வைத்துக் கொண்டாள். ஏற்கனவே வகுப்பில் இருக்கும் பலருக்கு சிற்பிகாவை பிடிக்காது.

அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது, “நானே சமையல் செய்து எடுத்துட்டு வர கொஞ்சம் நேரமாகிவிட்டது” என்றாள்.

சரியென்று தலையசைத்த புவனா அடுத்த வாரம் வரவிற்கும் மாடல் எக்ஸாம் டைம் டேபிளைக் கொடுக்க,“அதுக்குள் மாடல்ஸ் வந்துவிட்டதா? நான் இரண்டு இன்டர்னல்ஸ் இன்னும் எழுதவே இல்லை” என்று கவலையடைந்த சிற்பிகாவை அழைத்துக்கொண்டு டிப்பார்ட்மெண்ட் ஸ்டாப்ஸ் ரூமிற்கு சென்றாள்.

வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த மனோகரி மேடம் இவளைக் கண்டவுடன், “வா சிற்பிகா. நான் சொன்ன மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தாயா?” என்று கேட்டதற்கு ஒப்புதலாக தலையசைத்தவள் அதை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“உங்க அம்மா டெத் விஷயம் எல்லாமே மேடமுக்கும் தெரியும். முடிந்தவரை இந்த வீக் இன்டர்னல் பேப்பரையும் எழுதி கொடுத்துவிடு.  அடுத்து வருகின்ற மாடல்ஸ்ல(model) எழுதிட்டா அப்புறம் நேர எக்ஸாம்தான்” என்று சொன்னவர் அவளுக்கு சில அசைன்மெண்ட் எழுத கொடுக்க மீண்டும் கிளாஸ் ரூமிற்கு வந்தாள்.

மூன்று மாதம் லீவ் எடுத்து மீண்டும் படிப்பது மகிழ்ச்சியை அளித்தபோதும், மலைபோல படிக்க இருப்பதை நினைத்து மனதில் பயம் எழுந்தது.

அவளின் அருகே இருந்த புவனா, “நீ படிக்கிற வழியைப் பாரு. நான் உன்னோட அசைன்மெண்ட் எழுதி தருகிறேன். இன்டர்னல்ஸ் எழுதிட்ட அப்புறம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்” என்று தைரியமூட்டினாள் புவனா.

அடுத்தடுத்து கிளாசிற்கு மேம் வந்துவிட கவனமாக கிளாசை கவனிக்க தொடங்கினாள்.   

அதே நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த முகிலனைக் கண்டவுடன், “என்ன புது மாப்பிள்ளை. ஒரே வாரத்தில் வேலைக்கு வந்துட்ட” என்ற கேலியுடன் அங்கிருந்த அனைத்து நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர்.

“ஏன் புது மாப்பிள்ளை வேலைக்கு வரவே கூடாதென்று சட்டம்கிட்டம் போட்டுட்டாங்களா?” வழக்கமான குறும்புடன் கேட்டு கண்சிமிட்ட அங்கே சிரிப்பலை எழுந்தது.

“அதெல்லாம் இல்ல மச்சி. இங்கே வந்தால் வேலை செய்யவே தோணாது. வீட்டுக்குப் போலாம்னு தோணும்” என்று ஒருவன் இழுக்க,

“வீட்டில் யாரு இருக்காங்கன்னு அங்கே போக தோணும்” கன்னத்தில் வைத்து சுற்றி நின்றிருந்த மற்றவர்களை கேள்வியாக நோக்கினான்.

“ஏன்டா சிஸ்டர் வீட்டில் இல்லையா?” சந்தேகத்துடன் மற்றொருவன் கேள்வியெழுப்ப, “அவ காலேஜ் போயிட்டா” சாதாரணமாக கூறிவிட்டு அவன் வேலையைத் தொடர மற்றவர்களின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.

“காலேஜ் போறாங்களா?” என்று ஒருவன் நம்பாமல் கேட்க,

“அவ ஹிஸ்ட்ரி முதல் வருடம் படிக்கும் பொண்ணுடா. எனக்கே மேரேஜ்க்கு பிறகுதான் தெரியும்” அவன் சொன்னதும் அங்கே சிலநொடிகள் மௌனம் நிலவியது.

“இப்போ அவளை காலேஜ் அனுப்பிட்டியா முகில்?” என்ற கேள்வியோடு அவனை எதிர்கொண்டாள் ரோஹிணி.

தன் தோழிக்கு ஒப்புதலாக தலையசைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்த முகிலனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மதியம் கல்லூரி முடிந்தது மாணவிகள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல சிற்பிகா சிந்தனையோடு அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தாள். தாயிருந்த போது கல்லூரிக்கு கட்டும் பீஸ் மற்றும் இதர செலவுகள் பற்றி யோசித்ததில்லை. இப்போது அனைத்து தேவைகளுக்கும் முகிலனிடம் சென்று நிற்பதை நினைத்து மனம் நெருடியது.

ஆயிரம்தான் கணவன் என்று ஊரார் சொன்னாலும் ஏனோ அவனிடம் பணம் கேட்க ஏதோ போல  இருந்தது. அதனால் முடிந்தவரை ஒரு வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்தால் டிகிரி முடிக்காத நிலையில் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

அவளின் அருகே யாரோ அமரும் ஆராவாரம் கேட்டு நிமிர்ந்தவள் மனோகரி மேடமைக் கண்டவுடன், “மேம்” என்று எழுந்து நிற்க நினைத்தவளின் கைப்பிடித்து அருகே அமர வைத்தார்.

“இப்போது உனக்கு என்ன பிரச்சனை?” அவர் பொறுமையாக கேட்க தாய் இறந்ததில் தொடங்கி திருமணம் வரையில் அனைத்தையும் அவரிடம் கூறினாள்.

“உன் கணவன் கையை எதிர்பார்ப்பது சங்கடமாக இருக்குன்னு நினைக்கிற” என்றதும் அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “எப்.எம்.மில் பார்ட்டைம் ஜாப் இருக்கு. உன்னால் செய்ய முடியுமா?” என்று கேட்க அவள் உடனே தலையசைத்தாள்.

உடனே தன் கைப்பட ஒரு லெட்டரை எழுதி அவளிடம் கொடுத்து, “இந்த கடிதத்தை எடுத்துட்டு நான் சொல்லும் முகவரிக்குப் போய் பாரு. கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும். ஒருமணிநேரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும். அப்புறம் நீ வீட்டுக்கு கிளம்பிப்போய் படிக்கலாம்” அவர் முடிக்கவும் அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்றவளின் கன்னம் தட்டிவிட்டு எழுந்து செல்ல அவளின் மனபாரம் சட்டென்று இறங்கிய உணர்வில் அவர் சொன்ன  இடத்திற்கு சென்றாள்.

சிறிதுநேரத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்த சிற்பிகா ரிசப்ஷனில் தான் வந்திருக்கும் விஷயத்தைக் கூறவே, “மேம் உள்ளே வர சொல்றாங்க” என்று அவள் கைகாட்டிய கேபினுக்கு சென்றாள்.

அங்கே கிட்டத்தட்ட நடுத்தர வயதைக் கடந்த பெண்மணி வரவேற்கும் விதமாக புன்னகைக்க, “மனோகரி மேடம் உங்களைப் பார்க்க சொன்னாங்க” என்றவள் கையோடு கொண்டு வந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தாள்.

அதை முழுவதுமாக வாசித்த சுஜாதாவின் முகம் மலர, “உனக்கு கட்டாயம் வேலை தர சொல்லியிருக்காங்க. சரி உன்னோட பயோடேட்டா கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

ஏற்கனவே அவர் கேட்பார் என்று நினைத்து தயாராகி வந்திருந்த சிற்பிகா பயோடேட்டாவை எடுத்து கொடுக்க, “வெரி ஸ்மார்ட்” என்று சொல்லி அதை வாங்கி பார்வையிட்டவர் சில பல கேள்விகள் கேட்க தனக்கு தெரிந்த கேள்விக்கு தயங்காமல் சொல்லி சட்டென்று அவரின் மனதில் இடம் பிடித்தாள்.

“வாவ்.. உன் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கிறது” என்று சொல்லி அவளை அழைத்துச்சென்று அங்கிருப்பவர்களிடம் ட்ரைனிங் கொடுக்க கூறினார்.

முதல்கட்டமாக அவளின் குரல் டெஸ்ட்களை எடுத்து பார்த்ததில், “மேம் இவங்க வாய்ஸ் ரொம்ப அருமையாக இருக்கு. ‘நீங்காத நினைவுகள்’ என்ற கான்செப்ட் இவங்க பண்ணினால் சூப்பரா இருக்கும்” என்று சொல்ல அவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

“முதல் இரண்டுநாள் நீங்க கூட இருந்து அந்த பொண்ணுக்கு ட்ரைனிங் கொடுங்க மஞ்சு. அப்புறம் நேரடியாக நிகழ்வைத் தொகுத்து வழங்கட்டும்” என்றதும் அவளும் சம்மதமாக தலையசைத்தார்.

அதற்குள் மாலை ஐந்து மணியாகிவிட, “நாளையிலிருந்து நீ மதியம் இரண்டு மணிக்கு வேலை வந்துவிடுமா. மாலை ஐந்து மணிக்கு வீடுக்கு கிளம்பலாம்” என்றார்.

“ஓகே மேம்” அவள் வீட்டிற்கு கிளம்பும்போது சடசடவென்று மழை வர தொடங்க நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் நனைந்த உடைகளை வேகமாக மாற்றிவிட்டு சமையலறைக்குள் நுழையும்போது, “சிற்பி” என்ற அழைப்புடன் வீட்டிற்கு நுழைந்தான் முகிலன்.

மழையில் நனைந்து வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், “டீ வச்சிருக்கேன். ட்ரஸ் மாற்றிவிட்டு வாங்க” என்றாள். தன் கையோடு வாங்கி வந்த பார்சலை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு இரண்டிரண்டு படிகளாகத் தாவி அறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் கீழிறங்கி வரும்போது சூடான தேநீருடன் அவனுக்காக காத்திருந்தாள் சிற்பிகா.

அவளிடம் ஒரு கப்பை வாங்கிக்கொண்டு பார்சலைப் பிரித்து, “ம்ம் பப்ஸ் இருக்கு எடுத்துக்கோ” என்றான்.

அது முட்டைப் பப்ஸ் என்றதும், “எனக்கு நான்வெஜ் பிடிக்காது நீங்க சாப்பிடுங்க” அவனிடமே கொடுத்துவிட்டாள்.

மற்றொரு பப்ஸ் எடுத்து, “இது வெஜ் பப்ஸ் நீ சாப்பிடு” என்று கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்ற விஷயத்தை விசாரித்தான்.

அப்போது எப்.எம்.மில் வேலை கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்ல, “என்னைக்கும் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைக்கிற. அது சரிதானே.. உனக்கு பிடிச்சிருந்தால் கண்டிப்பா அந்த வேலையைப் பாரு நான் தடை சொல்லல” என்று அனுமதி கொடுக்க அவளின் முகம் பூவாக மலர்ந்தது.  

Leave a Reply

error: Content is protected !!