sippayinmanaivi 8

முருகு இறங்குதல்

 சித்திரையும் முகிலனும் முருக மலையில் முருகு இறங்குதல் விழா எடுக்க காத்திருந்தனர் இதன் பிறகு அவர்கள்  பெருங்கலூர்  பயணம் செய்வார்கள். முருகு தெய்வத்திற்கு உருவமில்லை மழைக்காலங்களில் வரும் பேரிரைச்சல் தான் முருகு இருக்கிறான் என்பதன் அடையாளம், பெரும்பாலும் முருகு மரத்தின் மேல் தான் வாழும். அப்படி முருகு வாழ்கிறது என்று வழிபடும் பெரிய வேம்பு மரத்தின் கீழ் கோலமிட்டு களம் அமைக்கப் பட்டிருக்கும், அதன்மேல் மலைநாட்டில் உள்ள ஒரு பெண்ணின் மேல் முருகு இறங்கும் அதன் பின்னர் அந்த பெண் அந்த களத்தில் வெறியாட்டம் ஆடுவாள். கடந்த சில வருடங்களாக முருக மலையில் இருக்கும் சின்னாயி மீதுதான் முருகு இறங்குகிறான் இந்த வருடமும் அவள்மீதுதான் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர், சித்திரை வந்ததும் பெரும்பறை இசைத்தது, ஊர்மக்கள் காத்திருந்தனர். நினைத்தது போலவே முருகு சின்னாயி மேல் இறங்கியது. எக்காள இசை சின்னாயி தலைக்கு ஏறியது ,பறை பலமாக இசைக்கப்பட்டது, சின்னாயி அடங்காத களி மூலையை ஏதோ செய்ய கோலத்தின் மேல் தலைவிரித்தாடினாள். அதன் பிறகு தேறல் ஒரு பெரிய பானையில் வந்தது அதனோடு கிடாய் படையலும். சின்னாயி அதை உண்டதும் ஆருடம் சொல்லத் தொடங்கினாள். ‘மலைநாடுகளுக்கு சில முழுநிலவிற்கு பிறகு பெரிய பாதிப்புகள் வரலாம், கவலை வேண்டாம் காவல் தெய்வம் நானிருக்கும் வரை. ‘

சித்திரை சிரித்தாள், தன் வாளை தூக்கி வடக்கிலிருக்கும் தெய்வங்கள் போல் வரமளிக்கும் தெய்வமில்லை, நம் தெய்வம் ஆபத்தில் பின்னிருந்து காப்பாற்றும் தெய்வம். கூட்டம் ஓங்காரமிட்டது, சித்திரையும் முகிலனும் கீழ்நாடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர், கதிரவன் தன் காதலி காயாவிடம் தன் பயணத்தை விவரித்தான், முதலில் பெருங்கலூர் சென்று மலையமான் கோட்டையில் விருந்தும் கொண்டாட்டங்களும் முடிந்த பின்னர் வடமேற்கில் இருக்கும் இருள்காடு சென்று முகிலனின் மூதாதையரும் அவர்கள் இனத்தவருமான இருளிர் குல தலைவனை சந்தித்து அங்கிருந்து கருவூர் வழியாக கூடல்நகர் செல்வோம், அங்கே சிற்றரசுகள் பிரித்து எல்லைகள் அறிவிக்கப்படும்.

இருளிர் தலைவரை காணப்போகிறாயா ?

ஆம் திடகாத்திரமான ஆள் என்று தலைவன் சொல்லி கேட்டிருக்கிறேன். தலைவியும் பெருமையாக சொல்லியிருக்கிறாள்.

ஏன் அப்பா அம்மா என்று சொல்லமாட்டாயா?

பொதுவில் அப்படி கூப்பிடக் கூடாது, தனிமையில் கூப்பிடலாம். இன கட்டளைகளை மீறக்கூடாதல்லவா !

சரி, எல்லை பிரிப்பதில் ஏதேனும் ஆபத்து உண்டோ? சின்னாயி சொன்னதிலிருந்து எனக்கு கவலையாய் இருக்கிறது.

கவலை வேண்டாம் காயா, முகிலனின் குத்தீட்டியும் சித்திரையின் வாளும் இருக்கையில் மலைநாட்டவர்க்கு என்ன ஆபத்து. இதழிலில் முத்தமிட்டு கீழ்நாடு நோக்கி நடந்தான்.

குதிரைகளில் ஏறி கலப்பட்டினம் பாலத்தை இலக்காக கொண்டு மெல்லச் சென்றுகொண்டிருந்தனர்.

‘அம்மா!’

சித்திரை கதிரவனை பார்த்து சிரித்தாள் ‘சொல் கதிரவா’

‘வடக்கு தெய்வங்கள் பற்றி சொன்னீர்களே அது எப்படி உங்களுக்கு தெரியும்.’

‘நல்ல கதையை கேட்டாய் பாலம் வரை பொழுது போகும்’ முகிலன் சொன்னான். சித்திரை பல முறை இதைப்பற்றி முகிலனிடம் சொல்லியிருப்பதை தான் இவ்வாறு நகைப்புடன் சொன்னான். சித்திரையும் உணர்ந்து சிரித்தாள்.

‘சோனா மலைகளுக்கு அப்பால் இருக்கும் பீஜே நாடு மிக பெரியது, பல விதமாக பழக்கங்கள் உண்டு. அங்கிருந்து ஒரு பெரும் பனிக்காலத்தில் ஒரு இனக்குழு சோனா மலைகளைத் தாண்டி தெற்கே வந்ததது. அந்தக் குழு அடிமைகளாக சௌவலய நாட்டில் பல காலமிருந்தனர், நாள்தோறும் உணவில்லா சாவுகள் அதிகமானது. இதைப் பொறுக்காத அந்த இன குழுவின் பெண்ணொருத்தி அடிமையாக வைத்திருந்த வேளாளரை கொன்றுவிட்டாள், அன்று இரவே அந்த இனம் ஊரைவிட்டோடியது அதன் பிறகு அவர்கள் வந்து சேர்ந்த இடம் இருள்காடு அங்கிருந்து உணவு சேகரிக்கும் நம் பழக்கத்தை பற்றிக் கொண்டார்கள். ஏனென்றால் உணவு தயாரிக்கும் வேளாளர்களால் அடிமை படுத்தப்பட்டதால் இருக்கலாம். அவர்கள் இன குழு வேகமாக வளர்ந்தது அதனால் வேறு ஒரு காட்டிற்கு செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் கண்ட செழித்த காடுதான் நம் மலைநாடுகள் அவர்கள் அமைத்த வாழ்விடம் தான் நாமிருக்கு முருக மலையும் தேன் மலையும். அந்த இன குழு சொன்ன கதைகள் தான் வடக்கிலிருக்கும் தெய்வங்கள்.’

‘அப்பொழுது நாம் வடக்கிலிருந்து வந்தவர்களா ?’

‘இல்லை இருளிரும் அந்த இன குழுவும் சேர்ந்த பிறகு அவர்களும் இருளராக மாறிவிட்டனர் திருமணங்களும் செய்து கொண்டனர்’

‘அப்போ நாம் போர் தெய்வமாக வணங்கும் காளி புது கடவுளா ?’

‘இல்லை வடக்கிலிருந்து வந்த அந்த இனக் குழுவின் தலைவி’  சித்திரை சொன்னதும் அவள் உடல் சிலிர்த்தது. கேட்டுக்கொண்டிருக்கும் கதிரவன் உடலும் சிலிர்த்தது.

‘அதனால் தான் காளி வடக்கை பார்ப்பது போல் நிற்கிறாள் நம்மை காக்கிறாள்’ முகிலன் சொன்னான்.

‘இந்த கதைகள் எல்லாம் எப்படி இத்தனை தலைமுறைக்கு கடந்து வருகிறது’

‘ஒரு மூதாட்டி இறந்தால் அவளோடு சேர்ந்து ஆயிரம் ஆயிரம் கதைகளும் இறந்து விடுகிறது’ சித்திரை சொல்லிவிட்டு அமைதியாக பாலத்தை பார்த்தபடி நின்றாள்.