அனல் பார்வை 10🔥
அனல் பார்வை 10🔥
ஓடி வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அருவியின் முன்னால் அக்னி நின்றிருக்க, கோஃபியை அருந்தியவாறு கால் மேல் கால் போட்டு அவனை முறைத்துப் பார்த்தவாறு சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அருவி.
“உனக்கு அன்னைக்கே ரூல்ஸ் சொன்னேன். எனக்கு காலையில குடிக்குற கோஃபில இருந்து நைட் குடிக்குற பால் வரைக்கும் நீதான் கொடுக்கனும்னு… என்ன மறந்து போச்சா?” என்று அருவி கோபமாக கேட்க, “அது வந்து… நான்… நான் வந்து… என்னை மன்னிச்சிடு தீ… தூங்கிட்டேன்…” என்று திக்கித்திணறி சொல்லி முடித்து தயக்கமாக நின்றிருந்தான் அக்னி.
“தூங்கிட்டியா? ஓஹோ! அப்போ இதுக்கு பனிஷ்மென்ட் தர வேண்டாமா?” என்று அருவி கேலியாக இதழை வளைத்துக் கேட்க, அவனோ கண்களை அகலவிரித்து அதிர்ந்து பார்த்தான்.
“என்னோட பங்களாவ ஒரு ஐம்பது தடவை சுத்திட்டு வா! டென் மினிட்ஸ் தான் டைம்… சீக்கிரம்…” என்றுவிட்டு தன் மேலாளரிடம், “இவன் கரெக்ட்டா பண்றானான்னு நீதான் பார்க்கனும். கவுண்ட் பண்ணிக்கிட்டே இரு!” என்று சொல்லி தன் தொலைப்பேசியில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளுடைய பங்களா என்ன சாதாரண வீடா? அத்தனை பெரிய வளாகத்தை இரண்டு சுற்று சுற்றினாலே மூச்சு திணறிவிடும். இவள் சாதாரணமாக ஐம்பது தடவை ஓட சொல்லியிருக்க, அந்த மேலாளரோ அவளை மிரட்சியாக பார்த்துவிட்டு அக்னியை பாவமாக பார்த்தார்.
ஆனால், அவரின் எண்ணத்திற்கு மாறாக அக்னியோ மென்புன்னகையுடன் வீட்டிலிருந்து வெளியேறி அவளுடைய தண்டனையை விருப்பப்பட்டே ஏற்றுக் கொண்டான். அவனுக்கோ அவளின் தண்டனையில் சிரிப்பு தான் வந்தது. அவன் சிரித்த முகத்துடனே ஓட ஆரம்பிக்க, அந்த மேலாளர் தான் அவனை வியப்பாக பார்த்தார்.
எட்டு நிமிடங்களிலே ஓடி முடித்தவன், அதிக மூச்சுக்களை விட்டவாறு அருவியின் முன் மாறாத புன்னகையுடன் நின்றிருக்க, அவள் தான் சற்று அதிர்ந்து போனாள். அவளுக்கும் தெரியும் அல்லவா! இது எத்தனை பெரிய இடம் என்று… அவனோ அசால்ட்டாக செய்து சொன்ன நேரத்திற்கு முன் அவள் முன்னால் நின்றான் என்றால் ஆச்சரியப்படாமல் இருப்பாளா என்ன?
ஓடியதில் வியர்வை துளிகள் சட்டையை நனைத்திருக்க, மூச்சு வாங்கியவாறு அவள் முன் நின்றிருந்தவனை பார்த்தவளுக்கு உணர்வுகள் எக்குத்தப்பாக எகிறினாலும் முயன்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள். அவனை முறைத்தவாறே எழுந்தவள், அவனை தாண்டி நடந்தவாறு, “என் கூட வா!” என்று சொல்ல, அவனும் அமைதியாக அவள் பின்னாலே சென்றான்.
தோட்டத்தில் அவள் மெதுவான வேகத்தில் ஓட, அக்னியோ அவன் பின்னாலே நடந்து வந்துக் கொண்டிருந்தான். அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், “லுக்! டென் டேய்ஸ்ல பொகோடால(Bogota) ஷூட்டிங் இருக்கு. ஐந்து நாள்ல நாம இங்க இருந்து கிளம்புறோம்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அக்னி ஏதோ பேச வர, அவனை கை நீட்டி தடுத்தவள், “நான் பேசும் போது நடுவுல பேசாத! அப்றம் இதுக்கும் பனிஷ்மென்ட் இருக்கு.” என்று மிரட்டலாக சொன்னாள்.
அவனோ கப்சிப் என வாயை மூடிவிட்டு அவளை பார்க்க, “கொலம்பியா போனதும் அடுத்த மூனு நாள்ல ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிரும். அதுக்கப்றம் தான் உனக்கு வேலையே இருக்கு. ஏதாச்சும் ஒன்னு சொதப்பினாலும் அவ்வளவு தான் நீ… எனக்கு பெர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம்.” என்று அழுத்தமாக உரைத்தாள்.
அவனுக்கோ அவள் சொன்னதில் பாதி புரியவே இல்லை. இருந்தாலும் பூம்பூம் மாடு போல் எல்லாம் பக்கமும் அவன் தலையாட்ட, அவளுக்கு தான் கடுப்பாகிப் போனது. அவனை பற்றி அறியாதவளா அவள்! நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்குள் நுழைந்தவள், “சீக்கிரம் எனக்கு ப்ரெக்ஃபாஸ்ட் ரெடி பண்ணு!” என்றுவிட்டு அறைக்குள் செல்ல எத்தனிக்க, “எனக்கு சமைக்க தெரியாதே…” என்ற அக்னியின் குரலில் சட்டென்று நின்று திரும்பி பார்த்தாள்.
“அங்க ஆளுங்க இருக்காங்க. அவங்ககிட்ட கேட்டு சமை! இல்லை, யூடியூப் பார்த்து கூட சமைச்சிக்கோ! ஆனா, நான் சாப்பிடுற சாப்பாடு உன் கையால இருக்கனும்.” என்றுவிட்டு அவள் அறைக்குள் நுழைந்திருக்க, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு நின்ற அக்னிக்கு அங்கு சமையலறையை தேடிச் சென்றதே ‘அய்யோ’ என்றானது.
சமையலறைக்குள் நுழைந்தவன் மிரண்டு தான் போனான். ‘என்ன டா இது? சாப்பாடு மட்டும் இருக்குற குட்டி வீடு மாதிரி இருக்கு.’ என்று நினைத்தவாறு யாரையும் கண்டுக்காது திண்டில் இருந்த பாத்திரங்களை என்ன செய்வதென்று தெரியாது அவன் உருட்ட ஆரம்பிக்க, அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களோ ‘என்ன பண்றான் இவன்?’ என்று புரியாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த பழங்கள், மரக்கறிகளை எடுத்தவன், ராகவ் அவனுக்கு சொல்லிக் கொடுத்த சேலட்டை(Salad) செய்வதற்காக அதை வெட்ட ஆரம்பித்து, குத்துமதிப்பாக ஏதோ ஒன்றை செய்து முடிக்கவும், அருவியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
விறுவிறுவென வெளியே வந்து அவள் முன் நின்றவன், அவளின் அழகில் சற்று சொக்கித்தான் போனான். அவன் அவளை முதல்தடவை பார்க்கும் போது இருந்த குட்டை முடி இப்போது இடை தொட்டு அசைந்தாட, அவனால் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை.
அவனின் பார்வை மாற்றம் உணர்ந்து அவனை முறைத்த அருவி உணவை மேசையை கண்களால் காட்டி, “சாப்பாடு எங்க?” என்று கேட்டாள். அவனோ திருதிருவென விழித்தவாறு நிற்க, அங்கிருந்தவர்கள் தான் அவன் செய்த உணவை கொண்டு வந்து மேசையில் வைத்தனர்.
“சமைச்ச உனக்கு கொண்டு வரத் தெரியாதா?” என்று அதற்கும் அவனை திட்டியவள், உள்ளுக்குள் எழுந்த சிறு ஆர்வத்துடனே பாத்திரத்தை திறந்தாள். அடுத்தநொடி அதிர்ந்தவள், பின் அவனை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினாள். வெறும் காய்கறிகள், பழங்களை மட்டுமே அவன் வெட்டி வைத்திருக்க, “என்ன இது?” என்று காட்டமாக விழுந்தன அவளின் வார்த்தைகள்.
“ஹிஹிஹி… சாப்பாடு. உடம்புக்கு இது தான் நல்லது.” என்று அசடுவழிந்தவாறு அவன் சொல்ல, தான் எய்த அம்பு தன்னிடமே திரும்பியது போல் இருந்தது அருவிக்கு! அருவி ஒரு உணவு பிரியை. பிடித்த உணவுகளை சாப்பிடுபவள், உடலை தன் துறைக்கேற்ப கட்டுக்கோப்பாக வைக்க அதற்கான உடற்பயிற்சிகளையும் செய்துவிடுவாள்.
ஆனால், இன்று அக்னி செய்து வைத்த பச்சை காய்கறிகளை சாப்பிட்டவளுக்கு பைத்தியம் தான் பிடித்தது. பாதி சாப்பாட்டிலே எழுந்தவள், “நாளைக்கும் இதையே என் முன்னாடி வச்ச கொன்னுடுவேன் உன்ன…” என்று மிரட்டிவிட்டு செல்ல, தோளை குலுக்கியவன் மெல்லிதாக புன்னகைத்தவாறு அவள் பின்னாலே சென்றான்.
அன்று மாலை,
அன்று மாலை வரை அவனை வேலை வாங்கியே அவள் ஒருவழிப்படுத்த, அப்போது தான் எல்லா வேலைகளையும் செய்து முடித்து சோஃபாவில் அமர போனவனின் முன்னால் வந்து நின்றாள் அவள்.
கண்களை மூடி இருந்தவன், அவள் விரல்களின் சொடக்கு சத்தத்தில் மெதுவாக கண்களை திறந்துப் பார்த்து, “இப்போ என்ன?” என்று சலித்தவாறு கேட்க, “ஷாப்பிங் கிளம்பனும். சீக்கிரம் வா!” என்றுவிட்டு தயாராகுவதற்காக அவள் அறைக்குள் நுழையவும், அக்னி தான் கொதித்துப் போனான்.
‘ராகு, நீ மட்டும் சரியாகி வா… உன்னை நானே கொல்லுவேன்’ என்று பொறுமியவாறு அக்னி அவளின் காரின் அருகில் சென்று நின்றுக்கொள்ள, அடுத்த பத்து நிமிடங்களில் அவள் தயாராகி வரவும், கார் அந்த பெரிய மாலுக்கு தான் சென்றது.
அருவி போன்ற முண்ணனி கதாநாயகி வருவதால் அந்த ஒரு தளத்தில் மட்டும் மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி இவளுக்கென்று ஒதுக்கியிருந்தார் அந்த மாலின் உரிமையாளர். காரிலிருந்து அருவி இறங்கியதும் மக்கள் கூட்டம் புகைப்படம் எடுத்துத்தள்ள, அவளுடன் இறங்கிய அக்னியை பார்த்த சில பேர் தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்துக் கொண்டனர்.
அருவியோ விறுவிறுவென முன்னே செல்ல, இதெல்லாம் பிடிக்காது அக்னி தான் சகித்துக்கொள்ள முடியாது ஒருவித சங்கடத்தில் அவளை பின்தொடர்ந்து சென்றான். ஒவ்வொரு பொருட்களையும், ஆடைகளையும் பார்த்தவாறு, பின்னால் நின்றிருந்த அக்னிக்கு நேராக தான் தெரிவு செய்த ஆடைகளை அவள் தூக்கி வீச, அவனுக்கு தான் ஒவ்வொன்றையும் சரியாக பிடித்து, ஏந்திக்கொண்டு அவள் பின்னாலே செல்வது பெரும்பாடாகிப் போனது.
அவனது முகத்தை மறைக்குமளவிற்கு அவள் அவனிடம் ஆடைகளை கொடுத்திருக்க, ட்ரயல் அறைக்குள் அவள் சென்றதும் தான் தன் கையிலிருந்ததை மூச்சு வாங்கியவாறு அங்கிருந்த மேசையின் மீது வைத்தான் அக்னி.
ஒரு ஆடையை அணிந்து வெளியே வந்தவள், அவன் முன் வந்து நின்று ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘எப்படி?’ என்று கண்களால் கேட்க, அவனும் அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
உடல் அங்கங்களை வெட்ட வெளிச்சமாக காட்டும் அந்த ஆடையை பார்த்தவனுக்கு ஒருமாதிரி சங்கடமாக இருக்க, உதட்டை பிதுக்கி ‘இல்லை’ என்று அவன் தலையாட்டவும், அவனை முறைத்த அருவி அடுத்த ஆடையை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவளும் அடுத்தடுத்தென்று ஆடைகளை அணிந்து அவன் முன் வந்து நிற்க, அவனும் சலிக்காது அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்து ‘இல்லை’ என்று தலையாட்டிக் கொண்டிருந்தான்.
கடைசியாக அவள் ஒரு ஆடையை அணிந்துக்கொண்டு வர, அதை பார்த்தவனின் கண்கள் மின்னியது. மூன்று வருடத்திற்கு முன் அவள் ஆடை அணியும் முறை போன்றே இப்போது டீஷர்ட்டின் மேல் ஜெக்கட், மற்றும் பேன்ட்டுடன் நின்றிருக்க, அவனும் ஆர்வமாக தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தான்.
அவனை பார்த்து இதழை வளைத்து கேலியாக சிரித்தவள், “இதை தவிர மத்த எல்லா ட்ரஸ்க்கும் பில் போட சொல்லிரு.” என்றுவிட்டு நகர்ந்து செல்ல, அவனுக்கு தான் சப்பென்றானது.
வீட்டுக்கு வந்ததுமே இரவு உணவை முடித்துவிட்டு அவளுக்கு குடிப்பதற்காக பாலை எடுத்துக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றவன், அங்கிருந்த டீபாயில் குவளையை வைத்துவிட்டு திரும்ப, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து அவனையே வெறுமை படர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.
அவளை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாது அங்கிருந்து வெளியேற போக, சொடக்கிட்டவள் அவன் பார்வை தன் மீது படிந்ததும் அங்கிருந்த ஒரு பையை கண்களால் சுட்டிக்காட்டினாள்.
“உனக்கு தேவையான ட்ரஸ் அதுல இருக்கு. என் மேனேஜரா இருந்துக்கிட்டு நீ இப்படி லோகலா ட்ரஸ் பண்ணா எனக்கு தான் அசிங்கம்! புரியுதா?” என்று அழுத்தமாக அவள் சொல்ல, அவனும் தலையசைத்தவாறு அதை எடுத்துக் கொண்டான்.
“நாளைக்கும் என்னை வெயிட் பண்ண வச்ச… அப்றம் பனிஷ்மென்ட் ரொம்ப மோசமா இருக்கும்.” என்று அவள் மிரட்ட, “அப்போ நாளைக்கும் சீக்கிரமா எழுந்துக்கனுமா? தூக்கம் வருது ஜானு…” என்று தன்னை மீறி அந்த பெயரை அவன் அழைத்துவிட, அவளுக்கு தான் முதல்தடவை தன்னவன் தன்னை ‘ஜானு’ என்று அழைத்தது நியாபகத்திற்கு வந்தது. கூடவே அவன் செய்த துரோகமும்…
கோபமாக கையிலிருந்த தொலைப்பேசியை தூக்கி சுவற்றில் எறிந்தவள், கலங்கிய விழிகளுடன் “என் கண்ணு முன்னாடி நிக்காம வெளிய போ…” என்று கத்த, அந்த கத்தலில் திடுக்கிட்டவனுக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
ஒரு அடி முன்னே வைத்தவன், எதுவும் பேசாது அறையிலிருந்து விறுவிறுவென வெளியேறி இருக்க, தரையில் மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு அன்றைய நினைவுகள் தான் சிந்தனை எங்கும்!
அக்னியுடன் பேசிவிட்டு சென்ற அருவிக்கு ஏனோ தான் இழந்த பாசம் தனக்கு கிடைத்த உணர்வு! அவனுடன் பழக சொல்லி மனது உந்த, அடுத்தநாளே இரவு நேரம் அவனை பார்க்க சென்றுவிட்டாள்.
வீட்டு அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த ராகவ், தன் முன் சுவிங்கம்மை சப்பியவாறு நின்றிருந்த அருவியை பார்த்து அதிர்ந்து நிற்க, அவளோ அவனை தள்ளிவிட்டு அதரடியாக தன் மஹியை தேடி வீட்டுக்குள் நுழைந்தாள்.
-ஷேஹா ஸகி