Mazhai – 6

Mazhai – 6
அத்தியாயம் – 6
காலையில் பேச நேரமின்றி அவரவர் வேலைகளைக் கவனிக்க சென்றுவிட்டாலும் முடிந்தளவு மாலை நேரத்தில் இருவரும் இணைந்து அமர்ந்து பேசிக் கொண்டனர். சதாசிவமும் – மகேஸ்வரியும் அடிக்கடி போன் போட்டு நலம் விசாரித்துக் கொண்டனர்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய தொடங்கியது. சிற்பிகா முடிந்தளவு படிப்பில் கவனம் செலுத்தியபடியே தன் வேலையைத் தொடர்ந்தாள். முகிலரசன் வேண்டுமென அவளை வம்பிற்கு இழுப்பதை பாதியில் நிறுத்திக் கொண்டான்.
தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த முகிலனுக்கு தலைவலி வின் வின் என்றதும் கேண்டின் சென்று ஒரு டீயை வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் வந்து அமர்ந்தான்.
“விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்..
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்..
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு..
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்..
காதல் இரண்டு எழுத்து” என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே தொண்டைக்கு இதமாக இருந்தே தேநீரை பருகினான்.
பாடல் முடிந்த சில நொடிகளில், “நீங்காத நினைவுகள் நிகழ்ச்சியுடன் உங்களுடன் இணைந்திருப்பது உங்களின் ஆர். ஜே. சிற்பிகா. என்னப்பா இப்போ போட்ட பாட்டு எல்லோருக்கும் பிடிச்சிருந்ததா?” என்ற அவளின் குரல்கேட்டு ஏனென்றே அறியாமல் முகிலனின் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“ஒரு இசை கருவியில் நாம் இசைக்கும் பாடல்களைப் போன்றது நம் மனமும். அதில் புதையுண்டு போல நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கலாமா?” என்றவளின் குரலில் இருந்த துள்ளலில் அவனின் தலைவலி சற்று விலகி சென்றது.
தன்னைச் சுற்றி ஒரு உலகம் சுழல்வதை உணராமல் அவளின் குரலோடு இலாய்த்திருந்தது அவனின் மனம்.
“இந்த நிகழ்ச்சியில் நான் இன்னைக்கு எடுத்திருக்கும் டாப்பிக் அம்மா. அம்மாவுடன் நீங்கள் செலவழித்த மறக்க முடியாத தருணத்தை என்னோடு ஷேர் பண்ண… நம்பருக்கு கால் பண்ணுங்க..” என்று கட் செய்துவிட்டு பாடலை ஒளிபரப்பினாள்.
அப்போதுதான் அவனைத் தேடி வந்த ராகுல், “டேய் உன்னை அங்கே காணோம்னு தேடிட்டு வரேன். நீ இங்கே உட்கார்ந்து என்னடா பண்ணிட்டு இருக்கிற?” கோபத்துடன் கேட்டான்.
“லேசாக தலைவலிடா. அதுதான் டீ குடிக்க கேண்டீன் வந்தேன்” என பதில் சொல்லும்போது பாடல் முடிந்து மீண்டும் நிகழ்ச்சியுடன் இணைந்தாள் சிற்பிகா.
ராகுல் அடுத்து கேள்வி கேட்கும்போது வாயில் விரல் வைத்து, ‘ஷ்..’ என்றவன் தன்னுடைய கவனத்தை திசை திருப்பினான்.
“என் வாழ்க்கையில் நான் எங்க அம்மாவுடன் செலவழித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஸ்பெசல் தான். ஒவ்வொரு முறை மழை வரும்போது சின்னவங்க நம்மதான் குழந்தையாக மாறுவோம். ஆனால் எங்க அம்மா அப்படியே ஆப்போஸிட்” என்று சொல்லிக்கொண்டே இருக்க ராகுலும் அவளின் குரலை ஆழ்ந்து கவனித்தான்.
“இப்படித்தாங்க ஒரு மழைநாளில் எங்கம்மா எண்ணெய் கூட்டிட்டுப் போக ஸ்கூலுக்கு வந்தாங்க. திடீர்னு ‘பாப்பா மழைக்காலத்தில் யாராவது ரோட்டில் நடந்து போன இப்படி மரக்கிளையை பிடித்து ஆட்டணும்னு ரொம்பநாள் ஆசை’னு சொல்லி கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்த மரக்கிளையை பிடிச்சு இழுதாங்க” அடுத்து என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்தான் முகிலன்.
“மரத்தின் மீது படித்திருந்த நீர்த்துளியுடன் சில இலைதளை எல்லாம் என்மேல விழுந்தது, ‘ஹப்பா எத்தனைநாள் ஆசை இன்னைக்குதான் நிறைவேறி இருக்கு’ னு சொன்னாங்க. அந்த நிகழ்வை என்னால மறக்கவே முடியாது. அதுக்குபிறகு வீட்டுக்குப்போய் நான் எங்கம்மாவோட சண்டை போட்டதெல்லாம் வேற கதை” என்றவள் முடித்துவிட்டு பாடலை ஒலிபரப்பினாள்.
அவள் சொன்னதைக் கற்பனையில் கண்ட முகிலன் தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சிரிக்க, “டேய் இது நம்ம சிற்பிகா வாய்ஸ் இல்ல” என்று புரியாமல் கேட்டான்.
“அவளேதான்” என்று சொல்ல, “எஃப்.எம்.ல ஆர்ஜே வொர்க் போறாளா? சூப்பர். இதுக்கு நைட் நீ கண்டிப்பா பார்ட்டி தரணும்” என்று சொல்லிவிட்டு மற்றவர்களிடம் சொல்ல கிளம்பிவிட்டான்.
“ராகுல் யாரிடமும் சொல்லாதே ஒரு நிமிஷம் நில்லுடா” என்றவன் தடுக்க தடுக்க கேட்காமல் மற்ற அனைவரிடமும் உண்மையைப் போட்டு உடைத்தான்.
அதைக்கேட்ட அவனின் அலுவலக நண்பன், “டேய் இத்தனை நாளாக இந்த உண்மையைச் சொல்லாமல் மூடி மறைத்திருக்கிறா? எங்களுக்கெல்லாம் கட்டாயம் பார்ட்டி வேணும்” என்று சொல்லவே வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான்.
மாலை அலுவலகம் விட்டதும் வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களை அழைத்துக்கொண்டு பாருக்கு சென்றான். மற்றவர்களுக்கு ஊற்றிக் கொடுத்தவன், ‘சிற்பிகா வேற தனியாக இருப்பாளே’ என்ற எண்ணம் தோன்றி மறைய முடிந்தவரை குடிக்காமல் வீடு செல்வது நலம் என்று நினைத்தான்.
ஆனால் அதற்குள் அவனின் அலுவலக நண்பர்கள் வற்புறுத்தி அவனை குடிக்க வைத்து விட்டனர். போதை தலைக்கு ஏறும் அளவிற்கு குடிக்கவில்லை என்றபோது ஓரளவு நிதானத்துடன் ராகுலை தன்னோடு அழைத்துக்கொண்டு வீட்டு நோக்கி கிளம்பினான்.
அதே நேரத்தில் வழக்கமாக வரும் நேரத்தைக் கடந்தபிறகு முகிலன் வரவில்லை என்றவுடன், ‘முக்கியமான வேலையாக இருக்கும். சரி நம்ம படிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் படிக்க அமர்ந்தாள்.
கிட்டத்தட்ட ஒன்பது மணியைக் கடக்கும்போது கடிகாரத்தைப் பார்த்தவள், “இத்தனை நாட்களில் இவ்வளவு நேரமாகியும் வீடு வராமல் இருந்ததில்லையே” என்ற சிந்தனையுடன் எழுந்து சமயலறைக்கு சென்றவள் தேங்காய் சட்னி அரைத்து, தோசை வார்த்தாள்.
நேரம் யாருக்கும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க, “ஒரு போன் பண்ணி பார்க்கலாம்” என்று செல்போனை எடுத்து அவனுக்கு அழைக்க, ‘நீங்கள் அழைக்கும் எண் தற்போது சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது’ என்று வந்தது.
இத்தனை நாளாக இல்லாமல் இன்று ஏனோ மனம் நெருடியது. அதிகம் யோசிக்காமல் தோசையில் சட்னி ஊற்றி சாப்பிட அமரும்போது ராகுலிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவனின் நம்பரைப் பார்த்தும், “ஹலோ ராகுல் அண்ணா..” என்றாள்.
“…………………” மறுப்பக்கம் சொன்ன செய்தியைக் கேட்டவுடன்,
“என்ன அண்ணா சொல்றீங்க? இப்போ எந்த ஹாஸ்பிட்டலில் இருக்கீங்க?” என்று பரபரப்புடன் கேட்டாள் சிற்பிகா.
அவன் மருத்துவமனை முகவரியைச் சொன்னதும், “நான் உடனே கிளம்பி வரேன்” என்று அழைப்பை துண்டித்தவள் உணவை சாப்பிடாமல் எடுத்து வைத்துவிட்டு வேகமாக சுடிதாருக்கு மாறியவள் தேவையான பணத்தை எடுத்து பர்ஸில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
வீட்டிற்கு அருகே ஆட்டோ கிடைக்க மருத்துவமனை பெயரைச் சொல்லி அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு சென்றடைந்தாள். அவளின் வரவை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்த ராகுல் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது.
சட்டென்று அவனை நெருங்கிய சிற்பிகா, “எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு” என்று விசாரித்தாள்.
அன்றைய பார்ட்டியைப் பற்றி விவரமாக கூறியவன், “நானும், அவனும் பைக்ல கிளம்பிய கொஞ்சநேரத்தில் நாய் ஒன்று குறுக்கே வர ஒடித்து திருப்பும்போது பேலன்ஸ் இல்லாமல் இருவரும் எதிரே இருந்த மரத்தில் மோது கீழே விழுந்ததில் அவனுக்கு இடது கை ப்ரேக்சர் இரண்டு மாசம் கட்டு போடணும்னு சொல்லிட்டாங்க” அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட சிற்பிகாவின் முகம் இறுகியது.
மற்ற பெண்களைப் போல அழுது புலம்பாமல், “இந்த விபத்தினால் மற்ற யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லையே?” தொண்டையை செருமிக்கொண்டு சாதாரணமான குரலில் கேட்டாள்.
அவள் ஏன் கேட்கிறாள் என்று புரியாதபோதும், “எங்க இருவருக்கும்தான் அடி. டிராப்பிக் போலீஸ் ட்ரின்க் அண்ட் டிரைவ் கேஸ் எழுதிட்டாங்க” என்று சொல்லவே நிம்மதி பெருமூச்சுடன் முகிலன் இருக்கும் அறையை நோக்கி சென்றாள்.
தலை, இடது கை மற்றும் கால்களில் கட்டுடன் இருந்தவனைக் கண்டு பரிதாபம் வருவதற்கு பதிலாக கோபமே வந்தது சிற்பிகாவிற்கு! அதே நேரத்தில் அங்கே வந்த டாக்டரிடம், “டாக்டர் அவரோட உயிருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையே?” அக்கறையுடன் விசாரித்தாள்.
“நீங்க அவரோட மனைவியா?” என கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
“இப்போதைக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்ல. கையை மட்டும் ஸ்ரைன் பண்ண வேண்டான்னு சொல்லுங்க” டாக்டர் விலகி செல்ல பெருமூச்சுடன் சில நொடி அவனின் அருகே இருந்த சேரில் அமர்ந்தாள்.
இரண்டு கரங்களையும் கோர்த்து அமைதியாக அமர்ந்திருந்த பெண்ணை விநோதமாக பார்த்தபடி நின்ற ராகுலிடம், “நீங்களெல்லாம் என்ன படிச்ச முட்டாளா? இல்ல எனக்கு வேலை கிடைத்ததை சாக்காக வைத்து குடிச்சிருக்கீங்க.. அப்படி பார்ட்டி பண்ணி இப்படி போதையில் கீழே விழுந்து கையைக் காலை உடைச்சாச்சு” என்று சொல்லும்போது அவளின் குரல்கேட்டு மெல்ல விழி திறந்தான் முகிலன்.
“இல்ல பார்ட்டி என்ற பெயரில் நீங்க குடிப்பது ரொம்ப நல்ல விஷயம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இல்ல போதையில் பைக் ஓட்டுவது சாதனை என்ற எண்ணமா?” என்று சிற்பிகா கேள்வி கேட்க ராகுல் தலைகுனிந்தான்.
“நீங்க ட்ரின்க் பண்ணிட்டு டிரைவ் செய்வதால் உங்க உயிர் மட்டும் இல்லாமல் கூட வருகிறவன் உயிர் அத்தோடு ரோட்டில் நடமாடுபவர்கள் எத்தனை பேரோட உயிர் போகுது. உங்களை மாதிரி சிலர் செய்யும் தவறால் பெத்த தாயையோ இல்ல தகப்பனையோ இழந்து இருக்கும் குழந்தைக்கு யார் என்ன பதில் சொல்றது?” கண்மண் தெரியாத கோபத்தில் அவள் திட்டி கொண்டிருந்தாள்.
தன் உயிர் நண்பன் குற்றவாளி போல நின்று திட்டு வாங்குவதைக் கண்டு சுர்ரென்று கோபம் வர, “இப்போ எதுக்கு தேவை இல்லாமல் அவனிடம் சண்டை போடுற. நான்தான் எல்லோருக்கும் பார்ட்டி தந்தது. அதனால் என்னைத் திட்டு அவனுக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்ல” என மொத்த பழியையும் தன்மேல் போட்டுக் கொண்டான்.
அவன் சொன்னதைக்கேட்டு சட்டென்று திரும்பியவள், “அவன் என்னோட அண்ணன். அவன் செய்வது தவறா இருந்துச்சுன்னா திட்டுவதற்கும், ஏன் இரண்டடி அடிப்பதற்கும் எனக்கு உரிமையிருக்கு. அவனை பேசாதேன்னு சொல்ல நீ யாரு?” என்று முகத்தில் அடித்தாற்போல கேட்டுவிட்டாள்.
அதுவரை பொறுமையாக நின்று திட்டு வாங்கிய ராகுலுக்கே அவளின் கேள்வி அதிர்ச்சியைக் கொடுத்தது.
மற்றொரு பக்கம் கட்டுப்போட்ட இடத்தில் வலி வின் வின் என்றபோதும், “சிற்பி.. ஏய் நான் உன் புருஷன்டி” என்று அவன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.
“வேண்டா வெறுப்பாக தாலி கட்டிட்டு அன்னைக்கே விவாகரத்து தரன்னு சொன்ன நீயெல்லாம் புருஷன் என்று சொல்லவே அருகதை இல்ல” என்று அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு மீண்டும் ராகுலிடம் திரும்பினாள்.
“பார்ட்டி என்ற பெயரைச் சொல்லி குடிப்பதை முதலில் நிறுத்துங்க. உடனே நான் நிறுத்தியதும் உலகமே திருந்திடுமான்னு கேட்காதீங்க. ஆயிரம் பேர் வந்தாலும் உலகத்தைத் திருத்த முடியாது. அதே மாதிரி நம்ம ஒருத்தர் மாறுவதால் எல்லாமே சரியாகிடும்னு சொல்ல முடியாதுதான்” சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“நம்ம ஒருத்தர் மாறுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் சிலர் மாறலாம். நீங்க ஒரு ஆள் கிடையாது. உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு. உங்களுக்கு ஏதாவது ஆனால் பதறுவதற்கு நண்பர்கள் இருக்காங்க. இவங்களை எல்லாம் யோசிச்சி கொஞ்சம் திருந்த பாருங்க” என திட்டிவிட்டு அறையின் கதவைத் திறந்து வெளியேறினாள்.
இத்தனை நாளாக சிறுபெண் என்று நினைத்திருந்தவளுக்குள் இருக்கும் கோபத்தையும், வேகத்தையும் கண்டு சிலநொடி இமைக்க மறந்தான் முகிலன்.
அவள் சென்றதும் நண்பனின் அருகே வந்து அமர்ந்த ராகுல், “நிஜமாவே சிற்பிகாவிற்கு இவ்வளவு கோபம் வரும்னு எனக்கு சத்தியமா தெரியாதுடா. கல்யாணம் ஆனால் குடிப்பது சிகரெட் பிடிப்பதை நிறுத்துன்னு சொல்லி டார்ச்சர் செய்யறாங்கன்னு பசங்க சொல்வாங்க. இப்போ தங்கச்சி சொல்வதைக் கேட்டால் சரின்னு தோணுது” என்றான்.
மருத்துவமனை விட்டு வெளியே வந்தவள் நடைபாதை அருகே போட்டபட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தாள். சிதைந்த நிலையில் ஸ்ரேச்சரில் கிடந்த உருவம் கண்ணிமைக்கும் நொடியில் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. ஆறிவிட்டது என்று நினைத்த காயத்தை கத்தியைக் கொண்டு கீறிவிட்டது போல தோன்றியது.
பலத்த சத்தத்துடன் இடி இடிக்க வானில் மின்னல் வெட்டி சடசடவென்று பொழிய தொடங்கியது. மருத்துவமனைக்கு வெளியே மறந்திருந்த சிர்பிகா கொட்டும் மழையில் நனைந்த அவளின் மனமோ உலைகலன் என்று கொதித்துக் கொண்டிருந்தது.
விடியற்காலை ஐந்து மணிபோல வீடு திரும்பியவள் குளித்து உடை மாற்றிக்கொண்டு உணவை சமைத்தாள். அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீட்டினர் யாருக்கும் தகவல் சொல்லாதது நினைவு வரவே உடனே அவர்களுக்கு அழைத்து முகிலனின் விபத்து பற்றிய தகவல் கூறினாள்.
முகிலனின் அறையில் கொண்டுபோய் உணவை வைத்தவள், “ராகுல் அண்ணா பிரஸ் பண்ணிட்டு வந்து சாப்பிடுங்க” என்றாள்.
முகிலனிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் விலக, “எனக்கு சாப்பாடு” என்ற கணவனை எந்தவிதமான உணர்ச்சியும் இன்றி ஏறிட்டவள் அவனுக்கும் ஒரு தட்டில் போட்டு பிசைந்து ஊட்டிவிட்டாள்.
“எனக்கு இடது கையில்தான் அடி” என்றவன் நினைவுபடுத்த, “அது எனக்கும் தெரியும் ஒற்றைக் கையில் தட்டை வைத்துக்கொண்டு அப்படியே சாப்பிட முடியாது இல்ல” என்று கடுகடுத்தவள் கவனமாக செல்படுவதைக் கவனித்தான் ராகுல்.
கணவன் – மனைவி என்று இல்லாமல் கடமைக்கு அவனுக்கு சோறு ஊட்டியவள், “இன்னைக்கு என்னால் லீவ் எடுக்க முடியாது. மதியம் வரை காலேஜ் போய்த்தான் ஆகணும். அத்தை, மாமாவுக்கு தகவல் சொல்லிருக்கேன் வந்திடுவாங்க” என்று சொல்லிவிட்டு சாப்பிடாமல் எழுந்து சென்றாள்.
அதுவரை அவளின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளைப் படித்தவன், “நீ சாப்பிடவில்லையா சிற்பி” அக்கறையுடன் கேட்டான். தன் கையுடன் கொண்டு வந்த பார்சலை பிரித்து உணவை தட்டில் வைக்க, முகிலனின் முகம் மாறியது.