அனல் பார்வை 16🔥

அனல் பார்வை 16🔥

அங்கு பல ஓவியங்களுக்கு மத்தியில் தான் வரைந்திருந்த ஓவியத்தை பார்த்ததும் அக்னியின் கோபம் தாறுமாறாக எகிறியது. தன் கையை பற்றியிருந்த அருவியின் கையை உதறியவன், விறுவிறுவென அங்கிருந்து வெளியேற, அருவிக்கோ எதுவுமே புரியவில்லை.

“ஏய் மஹி! எங்க போற?” என்றவாறு அவன் பின்னாலே ஓடியவள், அவனின் தோளை எட்டிப்பிடிக்க, அதை தட்டிவிட்ட அக்னி, “எதுவும் பேசாத தீ!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கத்திவிட்டு அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினான்.

அப்போதும் அவனின் கோபம் புரியாமல், “மஹி, அங்க பார்த்தியா? இருக்குற மொத்த ட்ரோவிங்க்ஸ்லேயும் உன் ட்ரோவிங் தான் ரொம்ப புதுமையா இருக்கு. அந்த எல்-டேரேடோ நகரத்தை அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே வரைஞ்சிருக்க. அவ்வளவு தத்ரூபமா இருக்கு.” என்று அவன் பின்னாலே சென்றவாறு அவள் பேசிக்கொண்டே போக, தன் கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், “பேசாதன்னு சொன்னேன் தீ…” என்று கத்தினான்.

“என்னாச்சு மஹி உனக்கு? ஏன் இப்படி நடந்துக்குற? உனக்கு ஹேப்பியா இல்லையா? கண்டிப்பா பாரு! நீதான் இதுல வின் பண்ணுவ. யூ க்னோ வட்? இதுல ஜெயிச்சா அவ்வளவு பணம் கொடுக்குறாங்க. கூடவே…” என்று பேசியவளின் வார்த்தைகள் பாதியிலே நின்று போனது. காரணம், அக்னியின் வலது கை அவளிள் கழுத்தை இறுகப் பற்றியிருந்தது.

“இன்னொரு வார்த்தை பேசின! உன்னை தொலைச்சிருவேன்…” என்று கண்கள் சிவக்க அவன் கர்ஜிக்க, அருவி தான் மிரண்டு விட்டாள். அக்னியோ கோபத்தின் உச்சியில் இருக்க, அவன் கைகளில் கொடுத்த அழுத்தத்தினால் கழுத்தில் ஏற்பட்ட வலியில் அருவிக்கு மூச்ச திணற, விசும்ப ஆரம்பித்து விட்டாள்.

தன்னவளின் கண்களில் தெரிந்த வலியில் கையை பட்டென்று எடுத்தவன், எதுவும் பேசாது விறுவிறுவென நடக்க, அப்போது தான் மூச்சே வந்தது அவளுக்கு. கழுத்தை நீவி விட்டவாறு அவள் இரும ஆரம்பிக்க, சற்று தூரம் சென்றவன், மீண்டும் தன்னவளை நோக்கி வந்து அவளை இறுக அணைத்திருந்தான்.

அவன் மார்பில் முகத்தை புதைத்தவள், உதட்டை பிதுக்கிக்கொண்டு அழுக ஆரம்பித்து கோபமாக அவனை தள்ளிவிட, அக்னியோ அவளை விடாது தன்னுள் மேலும் புதைத்துக் கொண்டான்.

“ஜானு, என்னை மன்னிச்சிடு. ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன். மன்னிச்சிடு ம்மா.” என்று தழுதழுத்த குரலில் அவளின் காதுமடலில் தன் மீசை முடி உரச அவன் பேச, விசும்பியவாறு அவனுள் அடங்கிக் கொண்டாள் அருவி.

“நான் எப்போவும் வரைய மாட்டேன். உணர்வுகளுக்கு மத்தியில் இருக்கும் போது தான் என்னால ஓவியத்தை வரைய முடியும். என்னோட ஓவியங்கள் ஒவ்வொன்னும் என் மனசுக்கு, என் உணர்வுகளுக்கு ரொம்ப நெருக்கமானது. அது அடுத்தவங்க பார்வைக்கு காட்சிப்பொருளாகவோ, அடுத்தவங்க விமர்சனத்துக்கு உள்ளாகுறதையோ நான் எப்போவும் விரும்ப மாட்டேன் தீ.

என்னோட ஓவியங்கள் விற்பனைக்கு இல்லை.  எப்போவாச்சும் என்னோட ஓவியங்கள் விற்பனைக்கு போகும்னா கூட அது என்னோட தனிப்பட்ட தேவைக்காக இருக்காது. ராகுக்கு நான் பாரமா இருக்க கூடாதுன்னு அவனுக்காக இருக்கலாம். ஆனா, எனக்கு இது பிடிக்கல ஜானு.” என்று அக்னி பேசி முடிக்க, அவன் மார்பில் நாடியை குற்றி உதட்டை பிதுக்கிக்கொண்டு தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள் அருவி.

அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டவனுக்கு தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னவளின் உதட்டை பெருவிரலால் வருடியவன், அவளுடைய கன்னத்தில் அழுந்த முத்தமிட, அவளோ புன்னகைத்தவாறு கண்களை அழுந்த மூடிக்கொண்டாள். அப்படியே கன்னத்திலிருந்து இதழை தேய்த்துக்கொண்டு அவளுடைய இதழுக்கு அருகில் வந்தவன், அவளின் மூக்கோடு மூக்கை உரச, தாராளமாக அவர்களுடைய இதழ்களும் உரசிக்கொண்டது.

அவளுக்கோ வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்து போக, இதழ்கள் ஓருவித கூச்சத்தில் விரிந்து கொண்டது. தன்னை மறந்து இதழில் முத்தமிட அவன் அவளை நெருங்க, சரியாக அங்கு வீதியில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஹாரன் சத்தத்தில் நடப்புக்கு வந்த அருவி, அவனின் செயல் புரிந்து அக்னியின் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

ஆனால், அவனுக்கோ சிக்கிக்கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட முடியாத உணர்வு! மீண்டும் அவளை விழுங்குவது போல் பார்த்தவாறு அக்னி அவளை நெருங்க, குறும்புப் புன்னகையுடன் அவனை தள்ளிவிட்டு அருவி அங்கிருந்து ஓட, சட்டென தன்னை மோத வருவது போல் வந்த காரை பார்த்து கண்களை அகல விரித்தாள் என்றால், அக்னிக்கோ மூச்சே நின்றுவிட்டது.

அடுத்த அரைமணி நேரம் கழித்து,

ராகவ்விற்கு ஒரு அழைப்பு வர, அதை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் கேட்ட அக்னியின் குரலில் பதறியேவிட்டான்.

“ராகு…” என்று கம்மிய குரலில் அக்னி அழைக்க, சட்டென்று திரையை பார்த்தவன் மீண்டும் அலைப்பேசியை காதில் வைத்து, “ஆகு, இது யாரோட நம்பர்? இப்போ எங்க இருக்க நீ? அதை மொதல்ல சொல்லு.” என்று பதட்டமாக கேட்டான்.

“ராகு, நான் ஹோஸ்பிடல்ல இருக்கேன். ஜானுவ ஒரு கார் வந்து மோதி…”என்று அக்னி முடிக்கவில்லை, “என்னது அந்த ராங்கிய கார் மோதிருச்சா? அய்யய்யோ ஆகு! அந்த காருக்கு எந்த சேதாரமும் இல்லையே…?” என்று ராகவ் சிரிக்காமல் பதட்டமாக கேட்க, உச்சஸ்தொனியில் “ஆகு…” என்று கத்திவிட்டான் அக்னி.

“சரி சரி… கோபப்படாத! நீ அங்க இருக்குறவங்ககிட்ட ஃபோன கொடு! நான் இப்போ வந்துடுறேன்.” என்றுவிட்டு அக்னி அலைப்பேசியை கொடுத்தவரிடம் வைத்தியசாலையை பற்றி விசாரித்தவன், அடுத்து அழைத்து தாரக்கிற்கு தான் விடயத்தை கூறியிருந்தான்.

அக்னியோ அருவியை அனுமதித்திருந்த அறைக்கு முன் சோகமே உருவமாய் அமர்ந்திருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் தாரக்கின் மூலம் விடயத்தை கேள்விப்பட்டு அடித்து பிடித்து ஓடி வந்திருந்தார் மோகனா.

அருவியை அனுமதித்திருந்த அறையை நோக்கி விறுவிறுவென அவர் செல்ல, சட்டென்று நிமிர்ந்த அக்னி அவரை புருவத்தை நெறித்து ‘யாரென்ற’ ரீதியில் புரியாது பார்த்தான். அடுத்தகணமே அவர் யாரென்று அவனுக்கு புரிய, மின்னல் வேகத்தில் சென்றவன் கதவை திறக்க சென்ற அவரை வழிமறித்தது போல் நின்றுக்கொள்ள, அவருக்கோ அக்னியை யாரென்று சுத்தமாக தெரியவில்லை.

“யார் நீ?” என்று அக்னியை ஸ்பானியன் என்று நினைத்தவாறு ஸ்பானியின் மொழியில் கேட்டவாறு அவனை உறுத்து விழிக்க, “நீங்க என்னோட தீயை பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன்.” என்ற அக்னியின் அழுத்தம் திருத்தமான தமிழில் அவர் அதிர்ந்தே விட்டார்.

அடுத்தகணம் தன் முகபாவனையை மாற்றியவர், “அதை சொல்ல நீ யாரு மேன்? நான் அவளுக்கு யாருன்னு தெரியுமா?” என்று காட்டமாக கேட்க, “என் தீயோட அம்மான்னு சொல்லவே உங்களுக்கு தகுதியில்ல.” என்ற அக்னியின் வார்த்தையை விட, அருவியை அவன் தன்னவள் என்று ஒவ்வொரு தடவையும் நிரூபிப்பது தான் அவருக்கு குழப்பத்தை தத்தெடுத்தது.

“என்னோட தீ ஒரு குழந்தை மாதிரி. எப்படி உங்களால அவள வெறுக்க முடிஞ்சது? ஒரு இழப்பு நடக்கும் போது பிறந்த குழந்தை மேல எப்படி உங்களால மொத்த பழியையும் போட முடிஞ்சது? இந்த கேவலமான மூடநம்பிக்கையால நீங்க உங்க வாழ்க்கையில ஒருதடவை மட்டும் பார்க்க கூடிய பல அதிசயங்களை இழந்திருக்கீங்க. அது உங்களுக்கு தெரியுதா?

உங்க குழந்தை முதல்தடவை பொக்கை வாய் தெரிய சிரிக்கிறது அதிசயம், முதல்தடவை எழுந்து நின்னு முதல் அடியை எடுத்து வைக்கிறது ஒரு அதிசயம், முதல் வார்த்தை பேசுறது கூட அதிசயம். இதெல்லாம் ஒருநொடி பார்க்க கூடிய பாக்கியம். ஒரு அம்மாவா அதையெல்லாம் இழந்திருக்கீங்க உங்க முட்டாள்தனத்தால…

விதியோட விளையாட்டுல தப்பே பண்ணாத ஒரு குழந்தைய நீங்க தண்டிச்சிருக்கீங்க. ஒரு அம்மான்னு சொல்லிக்க உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.” என்று அக்னி அடக்கப்பட்ட கோபத்துடன் வார்த்தைகளை கடித்துத் துப்ப, மோகனாவோ ஸ்தம்பித்து போய்விட்டார்.

இதுவரை யாரும் அவர் முன் சொல்லாத வார்த்தைகள்! சாட்டாத குற்றச்சாட்டு! இன்று இவன் நேருக்கு நேர் கேட்டதில் அவருக்கோ தாங்கவே முடியவில்லை. கண்களிலிருந்து கன்னத்தை தொட்டு கண்ணீர் விழ, வலிநிறைந்த புன்னகையுடன் அருவியை அனுமதித்திருந்த அறையை பார்த்தார் மோகனா.

அதை கண்டுக்கொண்ட அக்னிக்கோ சற்று கோபம் மட்டுப்பட, நிதானமான குரலில், “உங்க கண்ணுல இருக்குற வலி இப்போ வந்தது கிடையாது. உங்க தப்பை நீங்க உணர்ந்தாலும் உங்களால உங்க சொந்த மகளையே நெருங்க முடியல. எங்க இதே கேள்விய தீ உங்க கண்ணை பார்த்து கேட்டுருவாளோன்னு பயம். அதானே?” என்று அழுத்தமாக கேட்க,

அவருக்கோ அதிர்ச்சி!  ‘இவன் எப்படி தன் மனப் போராட்டத்தை உணர்ந்தான்?’ என்ற அதிர்ச்சி அவருக்கு! ஆம், தன் மகளின் மீது பாசம் பீறிட்டாலும் எங்கு அதனை அவளிடம் காட்டிவிடுவோமோ? அவள் தன் தப்பை சுட்டிக்காட்டி காயப்படுத்திவிடுவாளோ? என்று பயந்தே பாசத்தை அடக்கி ஒதுங்கி இருந்தார் அவர்.

தன்னை மீறி எழும் பாசத்தை மறைக்க கோபத்தை முகமூடியாக அணிந்துக் கொண்டார். ஆனாலும், தன் மகளுடன் நெருங்க முடியவில்லை என்ற ஏக்கம் சில நேரங்களில் வலியாக அவர் கண்களில் பிரதிபலித்துவிடும். அதை யாரு கண்டுகொண்டார்களோ, இல்லையோ? அக்னி சரியாக கணித்தான்.

சற்று ஒதுங்கி நின்ற அக்னி அறையை கண்களால் காட்ட, அடுத்தநொடி கதவை திறந்துக்கொண்டு மின்னல் வேகத்தில் நுழைந்தார் மோகனா. அங்கே ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தவாறு அமர்ந்திருந்த அருவி, கதவை திறந்துக்கொண்டு வந்த மோகனாவை ‘இந்த பொம்பள ஹிட்லர் இங்க என்ன பண்றாங்க?’ என்ற ரீதியில் புரியாது பார்த்து வைத்தாள்.

அவரோ அவளை வேகமாக நெருங்கி, “அரு…” என்றழைத்தவாறு அணைத்து அழுக, அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் அவள். அக்னியோ அவர்களை புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருக்க, தன்னை அணைத்திருந்தவரை தாண்டி தன்னவனை எட்டிப்பார்த்தவள், அவனிடம் கண்களாலே மோகனாவை காட்டி, ‘என்ன?’ என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

அதில் அவனோ பதில் சொல்லாது முத்துப்பற்கள் தெரிய சிரித்தவாறு அவளை பார்க்க, இங்கு மோகனாவோ  “அரு, உனக்கு எதுவும் ஆகல்லையே? உனக்கு ஆக்சிடன்ட் ஆச்சின்னு தாரக் சொன்னான். உனக்கு ஒன்னுஇல்லல்ல?” என்று பதட்டமாக கேட்டார்.

“என் ஜானுக்கு எதுவும் ஆகல. வண்டி மோத வந்த அதிர்ச்சியில மயங்கி விழுந்துட்டா.” என்ற அக்னியின் குரலில் நிமிர்ந்தவர், ‘இவன் யார்?’ என்ற ரீதியில் அருவியை ஒரு பார்வை பார்த்தார். அவளோ சற்றும் அவர் பார்வையை உணரவில்லை. முதல்முறை தன்னை பெற்ற அன்னை தன்னிடம் நடந்துக்கொள்ளும் முறையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் அவள்.

அவளுடைய மனநிலையை உணர்ந்துக் கொண்டவர் போல் சற்றுநேரம் தன் மகளின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்த மோகனா, வலிநிறைந்த புன்னகையுடன் அவளின் தலையை வருடிவிட்டு வெளியேற எத்தனித்தார்.

அக்னியை கடக்கும் போது சற்று நின்றவர், ” நீ யாருன்னு தெரியல. ஆனா, என் தப்பை சுட்டிக்காட்டின முதல் ஆள் நீதான். ரொம்ப நன்றி…” என்றுவிட்டு செல்ல, அவனுக்கோ இதழில் உறைந்த புன்னகை!

அவர் சொன்னதை கேட்டு அருவியும் அக்னியை பார்த்து உதட்டை பிதுக்க, ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டான் அக்னி. அவனுடைய தோளில் முகத்தை புதைத்தவள், “முதல்தடவை அம்மாவோட ஸ்பரிசத்தை உணர்ந்தேன் மஹி…” என்றவாறு அழ, அவளின் கன்னத்தை தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அவளவன்.

அன்றிரவு வீட்டுக்கு வந்ததிலிருந்து அருவி அவளாகவே இல்லை. முழுக்க முழுக்க தன்னவனுடைய எண்ணம் தான். சொல்லப்போனால், அவனுடைய இயற்பெயர் கூட அவளுக்கு தெரியாது. அவன் யார் என்னவென்று கூட அவளுக்கு தெரியாமலே அவளின் மனம் அவன் பக்கம் சாய, தன் உணர்வுகளை கணித்தவளுக்கு இதுவரை அனுபவித்திராத சுகமான உணர்வு!

அடுத்தநாள்,

அப்போது தான் குளித்து தன்னவனை காண கண்ணாடியின் முன் தயாராகிக் கொண்டிருந்த அருவி, கதவு தட்டப்படும் சத்தத்தில் கதவை திறக்க, தன் முன்னே நின்றிருந்த அக்னியையும், ராகவ்வையும் பார்த்து ஒருநிமிடம் கனவோ? என்று நினைத்தாள். தன்னவனையே அதிர்ந்து பார்த்தவாறு அவள் நின்றிருக்க, அக்னிக்கோ அந்த விரிந்த கண்களில் முத்தமிட வேண்டுமென்ற உணர்வு!

தன்னை நினைத்தே வெட்கப்பட்டு சிரித்தவாறு அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, இருவரையும் மாறி மாறி பார்த்த ராகவ், “போதும்… போதும்… ஒரு முரட்டு சிங்கிள்ல நடுவுல வச்சிக்கிட்டு படம் ஓட்டிகிட்டு இருக்கீங்க. ஏய் ராங்கி! இவன் தொல்லை தாங்க முடியல. இன்னைக்கு உன்னை பார்க்கனும்னு என்னை ஆஃபீஸ்க்கு கூட போக விடாம இழுத்துட்டு வந்துட்டான். பாவி!” என்று கடுப்பாக சொன்னான்.

ராகவ்வின் குரலில் தான் நடப்புக்கு வந்தவள், “உள்ள வா மஹி… ஏய் சாகு, உள்ள வா.” என்று உற்சாக குரலில் அழைத்தாள். தன் அறை வாசலிலிருந்து அக்னியை பார்த்த மோகனா புன்னகையுடன் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு தன் மகளையும் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, அருவி அதை கவனித்தாலும் ஏனோ அவளால் அவருடன் நெருங்க முடியவில்லை.

இதுவரை கிடைக்காத பாசம் இப்போது கிடைத்தாலும், அவளால் உடனே அதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? அவரே அவளை நெருங்க முயற்சித்தாலும் அவளால் அவருடன் சகஜமாக பழக முடியவில்லை என்பது தான் உண்மை.

அறை சோஃபாவில் அமர்ந்த ராகவ், தன் நண்பனை முறைத்துப் பார்க்க, அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது தன்னவளையே பார்த்திருக்க, அவளோ அக்னியின் கையிலிருந்த கவரை புருவத்தை சுருக்கி பார்த்தாள்.

“மஹி, இது என்ன?” என்று அருவி ஆர்வமாக கேட்க, புன்னகைத்தவாறு அக்னி அந்த கவரை தன்னவளிடம் நீட்டவும், வேகமாக அதை வாங்கி பிரித்துப் பார்த்தவள் அதிலிருந்த ஓவியத்தை பார்த்து தன்னவனை பொய்யாக முறைத்தாள்.

வைத்தியசாலை அறையில் மோகனா அருவியை இறுக அணைத்திருப்பதும், அவளோ அதிர்ச்சியில் கண்களை அகல விரித்திருப்பது போலான நேற்று நடந்த காட்சியை அக்னி தத்ரூபமாக வரைந்திருக்க, அதில் தன் அதிர்ந்த முகபாவனையை பார்த்த அருவிக்கு நிஜமாகவே சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது.

“அய்யோ! முடியல.” என்று ராகவ் இவர்களின் கூத்தைப் பார்த்து புலம்ப, அக்னி அவனை திரும்பி முறைத்தான் என்றால், அருவியோ ஒரு படி மேலே போய், “முடியலன்னா ஏன் டா வந்த? வெளில போடா! மஹி, இவனெல்லாம் எதுக்கு கூட்டிட்டு வந்த?” என்று கேட்டுவிட, ராகவ் தான் பொங்கிவிட்டான்.

“இது எனக்கு தேவை தான்… தேவை தான்…” என்று வாய்விட்டே சொன்னவாறு அறை வாசல்வரை கோபமாக சென்ற ராகவ், “சாகுண்ணா…” என்ற அருவியின் அழைப்பில் நின்று வேகமாக திரும்பிப் பார்த்தான்.

“என்னையா மா கூப்பிட்ட?” என்று அவன் ஆர்வமாக கேட்டு முடிக்கவில்லை. “கதவை மூடிட்டு போடா!” என்றுவிட்டு அவள் அக்னியின் பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொள்ள, அவனுக்கு தான் எதையாவது எடுத்து அவள் மண்டையிலேயே ஒரே போடாக போட வேண்டும் போல் இருந்தது.

“சார், எப்போ வர்றதா உத்தேசம்?” என்று ராகவ் கேலியாக கேட்க, அக்னி பதில் சொல்வதற்குள் அதை இடைவெட்டிய அருவி, “அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ கிளம்பு… கிளம்பு… காத்து வரட்டும்.” என்று சொல்லி வாயைப் பொத்தி சிரிக்க, அவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவன், ‘இவளையெல்லாம் கார் மோதாம விட்டது தப்பா போச்சு!’ என்று மானசீகமாக பொறுமியவாறு வெளியேற, அவனின் முகபாவனையில் வாய்விட்டே சிரித்துவிட்டாள் அவள்.

தன் அருகில் அமர்ந்திருந்தவளின் சிரிப்பை ரசித்துப் பார்த்தவன், “இது பிடிச்சிருக்கா?” என்று கேட்க, “ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றவள் ரசனையாக அவனை ஏறிட்டுப் பார்க்க, அக்னிக்கோ அவளின் அருகாமையில் எழும் தன் உணர்வுகளை அடக்கவே முடியவில்லை.

தன்னை மீறி அவன் அவளின் இதழை நோக்கி நெருங்க, அதை உணர்ந்தவளுக்கு வெட்கத்தில் முகம் குப்பென்று சிவந்தது. ‘என்ன இவன் ‘இப்படி பண்றான்?’ என்று நினைத்தவளுக்கு இந்த தனிமையும் ஒருவித பதட்டத்தை கொடுக்க, “மஹி, நாம வெளில போகலாம்னு நினைக்கிறேன்.” என்று திக்கித்திணறி சொன்னவாறு மெல்ல விலகி எழுந்து நிற்க, அவனோ தன் மொத்த உணர்வுகளையும் தன் ஒற்றை முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

அருவியோ ஒருவித வெட்கம் கலந்த சங்கடத்துடன் அக்னியை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல, உதட்டை பிதுக்கிக்கொண்டு தன்னவளை பார்த்தவாறு இருந்தான் அவளவன்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!