வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் – 18
அன்று
பிரபல தொழிலதிபர்கள் வாழும் ஈ.சி.ஆர். ரோட்டில் அந்தக் கார் பயணித்து, வானளவு உயர்ந்து நின்ற அந்தப் பங்களாவின் முன் நின்றது.
உயர்ந்து நின்ற மதில் சுவரை எட்டிப் பார்த்தார் மூர்த்தி. அதன் முகப்பில்,
‘காரிகை பவனம்’ என்னும் பெயர் தங்க நிறத்தில் பொறிக்கபட்டிருக்க, அதைப் பார்த்ததும் மூர்த்தியின் மனம், சந்தோசமாக அந்த வீட்டில் கழித்த நிமிடங்களை நினைத்துப் பார்த்தது.
ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவர், காரில் இருந்து கீழே இறங்கினார்.
செக்யூரிட்டி தன்னுடைய அறையில் இருந்து, ‘யாராக இருக்கும்’ என்ற யோசனையுடன் எட்டிப் பார்த்தான்.
மூர்த்தியைப் பார்த்ததும், “சார்” என கதவின் பின்னால் நின்றுக் கொண்டு கதவைத் திறக்கத் தயங்கினான்.
“ஓபன் தி கேட்” அவனின் தயக்கத்தைக் கண்டு கோபமாகக் கர்ச்சித்தார் மூர்த்தி.
அவரின் கோபமான குரல் அவனை அடிபணிய வைத்தது. பழைய முதலாளி அல்லவா. கைகள் தானாக மறுபேச்சின்றிக் கதவைத் திறந்து விட்டன. பல வருடமாக வாச்மேனாக வேலைச் செய்கிறார் அவர்.
கார் உள்ளே வழுக்கிக் கொண்டுச் சென்றது. அருமையாகப் பராமரிக்கப்பட்ட தரை பளிச்சென அவரைப் பார்த்துச் சிரித்தது. ஆனால் அதைக் கவனிக்கும் மனநிலையில் அவர் இல்லை.
அந்த அரண்மனைக்கு முன்னே காரை நிறுத்தியவர், தன் இருக்கையில் இருந்து இறங்கி வேகமாக வீட்டை நோக்கி சென்றார்.
வாசலை நெருங்கும் முன், வேகமாக அவனை வந்து தடுத்தான் ஓர் இளைஞன்.
‘நீ யார்’ என்பதுப் போல் யோசனையாகப் பார்த்தார்.
“நீங்க மூர்த்தி சார் தானே? சாரி சார்… நீங்க வீட்டின் உள்ளே செல்ல முடியாது?”
“வாட்” சீறியவர்,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும், என் வீட்டிலையே என்னை உள்ள விடமாட்டியா நீ?” அவனை அடிக்கக் கையை ஓங்க,
ஓடி வந்த வாட்ச்மேன், “சார், விடுங்க சார் அவரை” மூர்த்தியை தடுத்தார்.
இருவரையும் பார்த்த மூர்த்திக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“ஏய்! நீங்கெல்லாம் யாருடா? என் வீட்டுக்கு வர, நான் யாரை கேட்கணும்?”
“சாரி சார், பாஸ் உங்களை வீட்டில் விடக் கூடாதுன்னு எங்களுக்கு கட்டளைப் போட்டிருக்கார்”
“ஓஹோ! என்னைத் தடுக்கும் அளவுக்கு அவர் வளர்ந்து விட்டாரா?” கோபமாகச் சீறினார்.
ஆனாலும் மனம், ‘அவன் மிகவும் பெரிய ஆளாக உயர்ந்துவிட்டான்’ எண்ணிக் கொண்டது.
“அஷோக் அங்க என்ன சத்தம்?”
காரிகை வாசலுக்கு வர, சத்தியமாக அவர் மூர்த்தியை அங்கு எதிர் பார்க்கவில்லை. அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார்.
“மேம்” அஷோக் அழைக்க,
“அவரை உள்ளே விடுங்க” கூறியவர் வீட்டின் உள்ளே வேகமாகச் சென்றார். மனமோ கொதித்துக் கொண்டிருந்தது.
‘இத்தனை வருடம் கழித்து எதற்கு வந்திருக்கிறார். முடி கூட நரைத்து விட்டதே, வருடம் அத்தனை ஓடிவிட்டதா?’ மனம் கேள்விக் கேட்டுக் கொண்டது.
கோபத்தில் வந்த மூர்த்தி, காரிகையைப் பல வருடங்களுக்குப் பிறகு கண்டதும், மனம் லேசாக அவளையேப் பார்த்தபடிப் பின்னால் சென்றார்.
‘கொஞ்சம் தளர்ந்து விட்டாளே, என்ன கவலை அவளுக்கு. ஏன் இப்படி இருக்கிறாள்’
இருவரும் தங்களின் இணையை நினைத்து மனதில் வருந்திக் கொண்டனர். அதை கொஞ்சமும் வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை.
வீட்டின் உள்ளே செல்ல செல்ல அவரின் கண்கள் வியப்பில் ஆழ்ந்தது. அவரை வெளியே நிறுத்த முற்பட்டதைப் போல் வீட்டை கொஞ்சமும் மாட்டவில்லை. மனம் நிம்மதி அடைந்தது.
எதிரே இருந்த அவர்களின் அறையைப் பார்க்க, வெளியே பெரிய பூட்டுத் தொங்கியது. அதுவே கூறியது, காரிகை அவரை வெறுக்கும் அளவை.
அவள் அங்கிருந்த சோபாவில் அமர, அவள் கூறாமலே அவரும் கூடவே அமர்ந்துக் கொண்டார்.
தொண்டையை மெதுவாகச் செருமியவர், அவளைப் பார்த்தார். அவளோ முகத்தை அந்த பக்கமாய் திருப்பிக் கொண்டாள்.
“விஷ்ணு எங்கே?”
“அவன் ஆபீஸ்ல இருந்து வர நேரம்தான். என்ன விஷயம்?”
“காரிகை நான் உன்கிட்டையும்தான் பேசணும்.”
தன்னுடைய பெயரை உச்சரித்ததும், இனம் புரியாத உணர்வு மனதில் எழுந்தது, அது கோபமா?, வெறுப்பா?, பாசமா? அவரால் பிரித்தறிய முடியாதளவு உணர்வை பிரதிபலித்தது.
அவளின் முகத்தில் தோன்றிய உணர்வைக் கண்டவர், ‘இதெல்லாம் தேவையா காரிகை?’ மனதோடுக் கேட்டுக் கொண்டார்.
“வந்த விசயத்தைச் சொல்லுங்க?” முகத்தில் கடுமை வந்தமர்ந்தது.
“விஷ்ணுவை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? எவ்ளோ பெரிய ஆளா இருக்கான். யார்கிட்ட என்ன பேசினாலும், விஷ்ணுவான்னு பயந்து ஓடுறாங்க… நானும் அப்படி பயப்படணும்னு நினைகிறானா? நான் ஏன் அப்படிப் பயப்படணும்… நான் அவனுக்கு அப்பன்.
இதெல்லாம் வெளிய சொல்ல நல்லாத்தான் இருக்கு. ஆனா, முதல் முறையா என் பையனைப் பார்த்து நானே பயப்படுற மாதிரி பயப்பட வச்சுட்டான். அவனைப் பார்த்து எல்லாரும் பயப்படுவது எனக்குப் பெருமையா இருக்கு, அதே அளவு பயமாகவும் இருக்கு. இந்த ஆணவம், அகம்பாவம் எல்லாம் அவனை எங்க கொண்டு போய் விடும்னு ரொம்ப பயமா இருக்கு காரிகை.
பத்து கோடி… முழுசா பத்து கோடியை அவன் ஒரே நொடியில் அழித்துவிட்டான். என்னோட இத்தனை வருட உழைப்பு, எல்லாம்… எல்லாம்… போச்சு.
நம்ப முடியுதா உன்னால? என்னோட ஆறு மாச உழைப்பு, எல்லாம் எல்லாம் சாம்பலா போச்சுக் காரணம் உன் பையன், நீ அவனை அரக்கனாய் மாற்றிவிட்டாய். எல்லாத்துக்கும் காரணம் நீ!
நீ… மட்டும்தான் காரிகை!
எத்தனை வருஷமா இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஆனா இப்போ ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதளவு முடக்கி வைத்துவிட்டான்.
எல்லாம் எதற்காக? யாருக்காக?” காரணத்தை அவளிடமே கேட்டு நின்றார் மூர்த்தி.
அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றாள் காரிகை.
‘தன் மகன் இத்தனையும் செய்தானா? தொழிலை காப்பாற்றவா? இல்லை இவரை அழிக்கவா?’ அவளால் அறிய முடியவில்லை.
‘தொழிலை காக்க என்றால், அவன் எந்த எல்லைக்கும் போகட்டும், ஆனால் இவரை அழிக்க வேண்டும் என்றால் அவனைத் தடுக்க வேண்டும்’ மனதில் எண்ணிக் கொண்டாள்.
அவரை அழிக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. தொழில் போட்டியை சமாளிக்கட்டும். ஆனால் இந்த போட்டி?
வெளியே மெல்லிய சத்தம் கேட்டது. இன்னிசையாய் அதன் ஓசையை எழுப்பியது! விஷ்ணுவின் ஜாக்குவார்!
காரிகை அச்சத்துடன் மூர்த்தியை பார்த்தாள். விஷ்ணு இவரை ஏதாவது பேசிவிட்டால், அவளால் தாங்கமுடியுமா? நோ வே முடியவே முடியாது.
மூர்த்தி ஆர்வமாக வாசலைப் பார்த்தார். தன் பணம் சென்ற வருத்தம் இருந்தாலும், தன் மகனுடன் பேசும் வாய்ப்பு இன்று கிடைக்குமே சந்தோசத்துடன் வாசலைப் பார்த்திருந்தார்.
காரில் இருந்து இறங்கியதுமே, வாயிலில் இருவரும் தலையைக் குனிந்து நிற்க, நேர் பார்வையுடன் உக்கிரமாக முறைத்தவன், இறுகிய முகத்துடன் வீட்டின் உள்ளே சென்றான். இருவரையும் பார்த்ததும் அறிந்துக் கொண்டான்.
அவனுக்கு வீட்டில் வேண்டாதவர்களின் வருகை இருக்கிறதென்று!
சோபாவில் அமர்ந்திருந்தவரை பார்த்தவனின் கண்கள் அனலை கக்கியது.
அங்கிருந்த தாயை முறைத்தவன், கற்பாறையாக இறுகிய முகத்துடன் அவரை நெருங்கினான்.
அவர் முன்னால் வந்து, எதிரில் இருந்த டீபாயை அவரை நோக்கி இழுத்தவன், அவர் முகத்துக்கு நேரே தன் முகத்தைக் கொண்டு வந்து அமர்ந்து அனல் கக்கும் விழிகளுடன் அவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான்.
அவரைப் பார்த்துக் கொண்டே தன் கைபேசியை எடுத்து, அழைப்பெடுத்தவன், “நீ உள்ளே வா?” என அதிகாரமாக அழைக்க, அடுத்த நொடி அவன் முன் வந்து நின்றார் அந்த வாட்ச்மேன்.
“எத்தனை வருஷமா வீட்டில் வேலை பார்க்கிறாய்”
“பாஸ்”
“எத்தனை வருஷமாக வீட்டில் வேலைப் பார்க்கிறன்னு கேட்கிறேன்?” என்றான் அழுத்தமாக, இன்னும் பார்வையை மூர்த்தியை விட்டு விலக்கவில்லை.
“துப்பாக்கியை அஷோக் கையில் கொடுத்துவிட்டு நீ கிளம்பலாம்”
“பாஸ்” அவன் கூறியது அவருக்குச் சரியாகப் புரியவில்லை.
“கெட் அவுட்” குரலை உயர்த்தாமல், பார்வையை உயர்த்தாமல் அழுத்தமாகக் கூறினான்.
“சார் நான் எவ்…”
“ஷடாப்… யூ ஜஸ்ட் கெட் அவுட்… டாமிட்” வீடே அதிரும்படி கத்தியவன், அருகில் இருந்த கண்ணாடி டீபாயில் வேகமாக கையை குத்த, சில்லு சில்லாக நொறுங்கிய டீபாய் அவன் கையைப் பதம் பார்த்து, கையில் ரத்தம் பீரிட்டு வெளியேறியது.
மிரண்டு போன வாட்ச்மேன் வாசலை நோக்கி ஓடினார். காரிகையோ காதை மூடி அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார். தன் மகனின் இந்த முகம் மிகவும் புதியது அவருக்கு.
இத்தனை வருடங்களில் அவனின் இந்த முகத்தை பார்த்ததில்லை காரிகை.
விஷ்ணு கத்தியது என்னமோ வாட்ச்மேனிடம் தான், ஆனால் பார்வையோ மூர்த்தியையே குதறிக் கொண்டிருந்தது.
அவன் கையில் ரத்தம் வழிவதை கண்ட மூர்த்தி, “விஷ்ணு” பதறியபடி அவன் கையைப் பிடிக்க வர,
ஒரே ஒரு பார்வை பார்த்தான் ஆங்காரமாக… ஆக்ரோஷமாக அந்தப் பார்வை அவரை அப்படியே தடுத்து நிறுத்தியது,
“அஷோக்”
“பாஸ்” ஓடிவந்தான் அவன்.
‘அவரை வெளியே இழுத்து செல்’ பார்வையால் கட்டளையிட,
ஓடி வந்த அஷோக் மூர்த்திக் கையைப் பிடிக்க முயல, செருப்பால் அடித்துப் போல் அவமானம் அடைந்தார் மூர்த்தி.
“என்ன விஷ்ணு பண்ணுற நீ, அவர் உன்னோட அப்பா” காரிகை அவனைத் தடுக்க,
“நான் விஷ்ணு காரிகை!
இது என்னோட கோட்டை, என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது, நுழையக் கூடாது. அந்த உரிமையை நான் யாருக்கும் குடுக்கல… அது நீயாக இருந்தாலும் சரி” எச்சரித்தவன்,
கண்ணாடிக் குத்தியதால் எரிந்த கைகளை உதறியபடி வேகமாக அவன் அறை நோக்கி சென்றான்.
காரிகை மனது அவளைச் சாடியது. ‘எல்லாத்துக்கும் காரணம் நீ, அவன் இஷ்டத்துக்கு ஆட விட்டதின் விளைவு, இன்னும் அனுபவி’
அறைக்குச் சென்ற விஷ்ணுவிற்குக் கோபம் அடங்க மறுத்தது, ‘என்ன தைரியம் இருந்தால், என் வீடு தேடி வந்திருப்பான். என்னை அன்று அனாதையாக விட்டு சென்றவன், என்னை விடத் தொழிலில் வளர விடுவேனா? அவருக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை எத்தனை. அன்று என்னைத் தேடி வராமல், பணம் என்றதும் தேடி வந்து விட்டாரே?
அந்தப் பணத்தின் மதிப்பை விட நான் அவருக்கு அதிகம் இல்லையா? பாசம் எல்லாம் வேஷம்…
பணம்… பணம்… பணம்… மட்டுமே எல்லாம்.
அம்மாவிடம் சண்டை என்றால், என்னைப் பார்க்க வரக்கூடாதா? இன்று வந்தவர் அன்றும் வந்திருக்கலாமே? இன்று பணம் என்றது ஓடி வந்திருக்காரே? அன்று மகன் வேண்டாம் என்றுதானே என்னை தேடி வரவில்லை. அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.
கையின் எரிச்சல் அதிகமாக, மூர்த்தியின் போட்டோவை கையில் எடுத்தவன், காயம் பட்ட உள்ளங்கையில் வைத்து வேகமாகக் கசக்கினான். அவனின் தந்தை பாசம் தோற்று போனதற்குக் காரணம் இவர், கையில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.
அந்த வலிக்கு முன்னால் இந்த வலி அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சிறுவயதாக இருக்கும் பொழுது தன் தந்தையைத் தேடும் பொழுதெல்லாம், காரிகை அவனை அருகில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வாள்.
ஆனால், அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளும் தந்தையுடன் வர, மூர்த்தியின் மேல் உள்ள கோபம் அதிகரித்தது. அதிலும் காரிகை, ‘அப்பா வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்’ எனக் கூறியே வளர்க்க, அந்த வார்த்தை அவனுள் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அன்று காரிகை அறியவில்லை.
நாளடைவில் அது வெறுப்பாக மாறியது. அதே நேரம் மூர்த்தி அவனின் தொழிலில் குறுக்கிட, மூர்த்தியை ஒன்றும் இல்லாதவராய் மாற்ற முடிவெடுத்து தான் அகிலிடம் அந்தக் கண்டெய்னரை எரிக்கக் கூறினான்.
விஷ்ணு கூறிய வேலையை, கனகட்சிதமாக அகில் முடிக்க, சந்தோசத்துடன் வீடு வந்தவன் மீண்டும் அவர் முகத்தில் முழிக்க அசுர அவதாரம் எடுத்துவிட்டான்.
எல்லாத் தவறும் காரிகையுடையது என்று அவன் அறியும் காலம் எப்பொழுதோ? அவளின் அவசர புத்தியால் அவன் அரக்கனாக மாறிக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் இன்னும் அறியவில்லை.
அன்று ஒரு நொடி மூர்த்திக் கூறுவதைக் கேட்டிருந்தால் இன்று யாருக்கும், எதற்கும் எந்தப் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கும்.
நாளை தாயும், மகனும் சேர்ந்து ஒரு கிராமத்தையே அழிக்கப் போவதையாவது தடுத்திருக்கலாம், விதி யாரைவிட்டது, இவர்களையும் விட்டு வைக்கவில்லை.
@@@@@@@@@@
கீர்த்தியை பற்றி எண்ணினாலே தேவ் மனது உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தது. இவனைப் பார்க்கும் பொழுது அவளின் கண்ணில் ததும்பும் காதலே அவனைப் பித்தம் கொள்ள வைத்தது.
அவளது கண்ணாடி வளையோசையும், கொலுசொலியும் இப்பொழுது கூட அவன் காதில் ஒலித்தது.
அவள் தனக்கு என்று தெரிந்திருந்த போதும், தன்னவள் தன் மேல் வைத்திருக்கும் காதலின் ஆழத்தை அவன் அறிந்து வைத்திருப்பது பெரும் வரமே!
அந்தக் காதலை ஆராதிக்கப் பல யுகம் வேண்டும்!
அவளது, அவன் மேல் உள்ள காதலை ஆராதிக்க அவனுக்கு இன்னும் பல யுகம் வேண்டும் போல் இருந்தது.
‘ஒரு மாசம் அவகிட்ட பேசாம இருந்ததிற்கு என்ன பாடுபடுத்த போகிறாளோ’ புன்னகையுடன் எண்ணிக் கொண்டான் தேவ்.
காலேஜ் முடிந்து வந்தவள், கன்னத்தில் கைவைத்து வீட்டு ஹாலில் அமர, ‘என்ன இன்னைக்கு இம்புட்டு அமைதியா இருக்கா’ யோசனையுடன் அவள் அருகில் பொத்தென வந்து அமர்ந்தாள் தேஷிகா.
“ஏண்டி எரும தள்ளி உட்காரமாட்டியா, இப்படி மேலேயே வந்து விழுற”
“என்னாச்சு, உன் மச்சானை இன்னைக்கு சைட் அடிக்க முடியலன்னு என் மேல ஏண்டி சாடுற”
“தாத்தா பாரு, இவ ரொம்பப் பேசுறா வாயை உடைச்சிருவேன் சொல்லிவை”
சுவற்றில் மாலையாக வீற்றிருந்த அவளின் பாவப்பட்ட தாத்தாவை வம்பிக்கிழுத்தாள் கீர்த்தி.
“சரி… சரி… தாத்தாவாச்சும் உன் தொந்தரவில் இருந்து சொர்க்கத்தில் சந்தோசமா இருக்கட்டும், சொல்லு என்னாச்சு”
“நான் காலேஜ் போகமாட்டேன்”
“ஏண்டி நல்லா தான ஒரு வருஷம் போன இப்போ என்ன ஆச்சு உனக்கு”
“எனக்குப் பிடிக்கலடி, நான் போகமாட்டேன் அவ்ளோ தான், அவன் வந்ததும் சொல்லிரு”
“அட ராமா! இவளை பள்ளி, காலேஜ் கொண்டு சேர்த்தே அவன் ஓஞ்சு போயிருவானே”
“இப்போ என்ன நீ தேவ்வை பார்க்க வயலுக்குப் போகணும் அவ்ளோ தானே, வா, நானே உன்னை அழைச்சுட்டு போறேன்” கடுப்புடன் மொழிந்தவள் அவளைக் கையோடு வயலை நோக்கி அழைத்துச் சென்றாள்.
‘இவளுக்கு இதே வேலையா போச்சு, தேவ்வை பார்க்கணும்னா, எப்படித் தான் சாக்கு போக்கு கிடைக்குமோ, எல்லாரையும் ஒரு உருட்டு உருட்டுறா’ மனதில் புலம்பியவள் அவளை மாமரத்தின் அருகில் விட்டு சென்றாள்.
‘தங்கம்மா கிட்ட என்ன சொல்லி சமாளிக்க’ எண்ணியவாறே வீட்டை நோக்கி சென்றாள் தேஷிகா.
செமஸ்டர் என்று கடந்த ஒரு மாதமாகத் தேவ், கீர்த்தியை மிகவும் தவிர்த்து வந்தான். அந்த கடுகடுப்பில் இருந்தாள் கீர்த்தி.
மாமரத்தின் கீழ் கட்டிலில் அமர்ந்து கொண்டு, வானில் தோன்றிய பௌர்ணமி நிலவினை ரசித்து ஏகாந்த நிலையில் இருந்தான் தேவ்.
தன்னை மறந்து முகத்தில் புன்முறுவல் பூசியபடி அவன் இருக்க, எட்டி நின்று அவனைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் கீர்த்தி.
அவனின் ரசனை நிலை கலையா வண்ணம் மெதுவாக மெல்ல நடந்து அவனருகே சென்று அமர்ந்தாள். வானை நோக்கி ரசனையாகப் பார்த்திருந்தவன், அவளின் வளையல் ஓசையில் கலைந்து திரும்பி, அவளை நோக்கி அழகாய் முகம் மலர புன்னகை புரிந்தான்.
“என்ன யோசனை?”
அவளைச் சிரிப்புடன் பார்த்தவன்,
“நான் என்ன யோசிப்பேன்னு உனக்குத் தெரியாதா?”
அவள் அறிந்திருந்தும், “உங்க அத்தையைப் பத்தி நினைப்பீங்க, அவங்க மடில கிடைக்கிற சுகம் வேற எதுவுமே இல்லைன்னு சொல்லுவீங்க, வேறென்ன?” உதடு சுழித்துக் கூறினாள்.
“ஆஹான்! அப்படியா? உன்னைப் பத்தி தான் நினைத்தேன்!”
முகத்தில் தோன்றிய வெட்கத்தைக் கஷ்டப்பட்டு மறைக்க அவள் பாடுபட,
ஆனால், அந்த நிலவே அவனுக்குக் கட்டிக் கொடுத்தது, ஆனாலும் மறைத்துக் கொண்டவள்,
“நிலா ரொம்ப அழகா இருக்குல்ல?” அன்று கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டாள். அவன் என்ன கூறுவான் என்று அறிந்தே!
“அப்படி ஒன்னும் என் பொம்முவை விட அந்த நிலா அழகில்லை”
மேக கூட்டத்துடன் நிலா பதுங்கிக் கொள்ள,
“அங்க பாருங்க உங்க அண்ட புழுகையும், ஆகாச புழுகையும் பார்த்து உங்க அத்தை கோச்சுகிட்டாங்க”
“அத்தைக்குக் கோபம் இல்லை பொம்மு, தன் மருமகனுக்கு, அவன் பொம்முவை விட எதுவும் அழகா தெரிய கூடாதுன்னு அவங்க மாமா பின்னே மறையுறாங்க!”
“சரி… சரி… போதும் ரொம்பத்தான்” செல்லமாகச் சிணுங்க,
“ஹா… ஹா”
“என்ன எப்பவும் இந்த மரத்தின் கீழேயே இருக்கீங்க என்னவாம்? இந்த மரம் ரொம்பப் பிடிக்குமா?”
“அப்படி எல்லாம் இல்ல பொம்மு, நீ என்னைக்கு இந்த மச்சான் மனசில சிம்மாசனம் போட்டியோ, அன்னையில் இருந்து, இந்த மரம் என் நண்பன் ஆகிட்டான்”
சொல்ல முடியாத உணர்வு அவளைத் தாக்க, தலையைக் குனிந்துக் கொண்டாள். அவளைக் கண்டு மீண்டும் கிறங்கிப் போனான் தேவ். அவனின் கண்கள் அவள் மச்சத்தில் பதிந்து மீண்டது.
“இந்த மரத்தை, நானும் என் அத்தையும் சேர்ந்து நட்டோம், ஆனால் என் அத்தை ஒரு நாள் கூட இந்த மரத்தின் நிழலை அனுபவிக்கவில்லை. அதனால்தான் நானும் இந்த மரத்தை தேடவில்லை. ஆனால் ஒரு வயதுக்கு மேல் வளர என் மனதில் நீங்கா இடத்தை நீ பிடிக்க, என் அத்தையைத் தேடி இந்த மரத்தை நாட,
பூக்களைத் தூவி ஆசிர்வதித்தாள் அன்றில் இருந்து இந்த மரம்தான் எனக்கு எல்லாம், என் பொம்மு மேல் உள்ள காதலை உணர்த்தியதும் இந்த மரம் தான், இப்போ பாரு என் பொம்மு அருகில் இருந்து காதல் வசனம் பேச இந்த மரம் தான் உதவி செய்து”
“போங்க மச்சான்” வெட்கம் கொண்டு அவள் எழுந்து செல்ல எத்தனிக்க,
“அட! எங்க போற பொம்மு, உட்காரு கொஞ்சம் நேரம்” அவளின் கை பிடித்து அமரவைத்தான்.
மீண்டும் கட்டிலில் அவள் அமர, அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான் தேவ்.
அவளின் மேனி ஒரு நிமிடம் கூசி சிலிர்க்க, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
அவளின் பளீர் இடை அவன் கண்ணுக்கு விருந்தாக அமைய, அவனின் மனம் முதல் முறையாக அதன் பால் தடுமாறியது,
இரவு கூதல் காற்றில் அவளின் தாவணி இன்னும் கொஞ்சமாய் விலக, மெதுவாக இதழ் குவித்து அவளின் இடையில் ஊத, அவனின் வெப்ப காற்றில் அதிர்ந்து அவள், அவன் முகம் நோக்க, அவனோ கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.
மெதுவாக நெஞ்சை தேவ் மெதுவாக நீவிகொள்ள, அவன் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள், ஆனால், அவனோ கண்ணைத் திறக்காமலே அவனின் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான். கண்ணில் அவளின் இடையே குடியிருந்தது.
அவன் முகத்தை விட்டுக் கண்களை விலக்கியக் கீர்த்தி, அவனின் நெஞ்சு பக்கமாய்ச் செலுத்த, அவன் நெஞ்சில் ஏதோ எழுதி இருப்பதைக் கண்டவள், “மச்சான் என்ன எழுதிருக்க” என்றாள் ஆர்வமாய்.
“எங்கடா” கண்ணைத் திறவாமலே கேட்டான் அவன்,
“உன் நெஞ்சுல தான்”
“அது உன்னோட பேர் பொம்மு, வித்தியாசமா எழுதிருக்கேன், உன் மடியில் படுத்திருக்கும் பொழுது நீ மட்டுமே பார்ப்பது போல் எழுதியிருக்கேன்” கண்களை மூடிக் கொண்டே ரசனையாகக் கூறினான் அந்த காதலன்!
“ஏன் மச்சான்… ரொம்ப வலிக்கும்ல” என்றாள் அவனின் நெஞ்சை வருடிக் கொண்டே.
“நீ இப்படி வருடி விட்டுட்டே இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா ஏன் உடம்பு முழுசும் பச்சை குத்திருப்பேண்டி” கிறங்கிப் போனான்.
“ஊகும்… லவ் யூ மச்சான்” குனிந்து நெஞ்சில் முத்தமிட்டுக் கொண்டாள்.
அவனிடம் ஏதேதோ காதல் மொழி பேசிக் கிடக்க, அவன் அவளிடம் ‘ம்ம்’ கொட்டி அவள் பேசுவதை மனதில் பதிக்க,
நிலா மேகத்தை விட்டு எட்டி நின்று இவர்களைப் பார்த்து சிரிக்க. அந்த ஏகாந்த இரவு இவர்கள் காதலுடன் கலந்து தன் காதலனை தழுவி கொண்டது.
கொ(வெ)ல்வாள்.
மெல்லிய காற்றில் மெல்லியலாள் போலசைந்தே
தெள்ளிய நிலவொளியில் திகழ்ந்தன நெற்கதிர்கள்.
கண்ணெட்டாக் கனகமதில் கண் சிமிட்டும் விண்மீன்கள்.
கண்ணெடுக்க வொண்ணாமல் தண்ணொளியில் தகதகக்கு(ம்) – நெல்
உண்ணு நீர் பாத்தியதில் உண்மையாய்! வந்து காண்பீர்!!