Jeevan Neeyamma–EPI 13

171916099_840757923178210_3424615682123961255_n-bc9c500e

அத்தியாயம் 13

 

குழல் இனிதா யாழ் இனிதா என கேட்டால், என் மன்னவனின் குரல்தான் இனிது என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

‘என்ன சர்ப்ரைஸா இருக்கும்? எதுக்கு காலையிலே பஸ் ஸ்டாப் வான்னு சொன்னான் ரஹ்மானு?’ என நூறாவது தடவையாக யோசித்தப்படியே தலை வாரி கலர் ரப்பர் பேண்ட் போட்டு தன் சுருள் கூந்தலை அடக்கினாள் மீனாட்சி.

அவளது சின்னக் கண்ணாடியில் முகம் பார்த்து ஜான்சன் பேபி பவுடரை ஒற்றியவள், அழகாய் கருப்பு ஒட்டுப் பொட்டை நெற்றியின் நடுவில் ஒட்டி தன் ஒப்பனையை முடித்தாள். அவள் அண்ணன் ஆறு சென்ற பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த ஏவோன் ப்ரான்ட்(அப்பொழுது இருந்து இப்பொழுது வரை இங்கே சற்று பிரபலமான கொஸ்மெடிக் ப்ராண்ட். பாமர மக்களும் உபயோகிக்கும் அளவுக்கு கட்டுப்படியான விலை) பெர்பியுமை கொஞ்சமாகப் போட்டுக் கொண்டாள். அள்ளித் தெளித்துக் கொண்டால், சீக்கிரம் முடிந்து விடுமே!     

வெள்ளிக் கிழமை க்ளாஸ் முடிந்ததுமே தனது வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் ஹேமா. அந்த வீக்கேண்ட் குடும்பமாக அவர்கள் கெந்திங் ஹைலண்டுக்கு சுற்றுப் பயணம் போவதாக ஏற்பாடு. மீனாட்சியையும் வர சொல்லி கெஞ்சிப் பார்த்தாள். பப்ளிக் போனில் இருந்து மீனாட்சி வீட்டுக்குப் போன் போடும் போது, இவள் வாங்கி ஈஸ்வரியிடமும் சம்மதம் கேட்டுப் பார்த்தாள். மகளுக்கு இஸ்டமில்லை என புரிந்துக் கொண்ட ஈஸ்வரி, எப்பொழுதும் குடும்பத் தலைவிகள் சொல்லித் தப்பிக்கும் ‘அவ அப்பாவுக்கு இதெல்லாம் புடிக்காது’ எனும் ஸ்டேன்மெண்டை ஹேமாவின் மனம் புண்படாதவாறு சொல்லி சமாளித்திருந்தார். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் வீட்டுக்கு கிளம்பி இருந்தாள் அம்மனின் ஜண்டா.

ரூம் கதவைப் பூட்டியவள்,

“சந்தா ஓ சந்தா

இவள் சம்மதம் தந்தா” என அப்பொழுது மிக பிரபலமாக இருந்த பாடலை முணுமுணுத்தப்படியே படிகளில் இறங்கிப் போனாள்.

குளிர் இன்னும் பிரியாத காலை பொழுது அது. சூரியன் மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தை பூமியில் அப்பொழுதுதான் செலுத்தத் தொடங்கி இருந்தான். பத்து நிமிட நடையில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள் மீனாட்சி. அங்கே ஒரு வெள்ளை நிற ப்ரோட்டோன் வீரா(மலேசிய கார்) கார் நின்றிருந்தது.

இவள் போய் நிறுத்தத்தில் இருந்த பெஞ்சில் அமர, காரின் பேசெஞ்சர் சைட்டில் இருந்து இறங்கினான் ரஹ்மான். அவனைப் பார்த்ததும் முகத்தில் புன்னகை தானாகவே மலர,

“ரஹ்மானு! யாரோட காடிடா(கார்) இது?” என கேட்டாள்.

“நம்மளதுதான்!”

“நெஜமாவா? இதுதான் நீ சொன்ன சர்ப்ரைசா?” என கேட்டப்படியே அவன் அருகே வந்தாள்.

“இல்லல்ல! சர்ப்ரைஸ் இப்போ வெளிய வரும் பாரேன்!” என இவன் சொல்ல, ட்ரைவர் சைட்டில் இருந்து ஓர் உருவம் இறங்கியது.

அவரைப் பார்த்ததும் முகம் ஸ்விட்ச் போட்டது போல மலர்ந்துப் போக,

“பாக்ச்சிக்!”(அங்கிள்) என கத்திக் கொண்டே அவர் அருகே ஓடினாள் மீனாட்சி.

அப்துல்லாவுக்கும் அவளைப் பார்த்ததில் முகமெல்லாம் புன்னகை. ஓடிப் போய் அவர் கையைப் பற்றிக் கொண்டு குதித்தவள், பின் ஞாபகம் வந்தவளாக, குனிந்து அவரது வலது புறங்கையில் உதட்டை பட்டும் படாமல் ஒற்றி எடுத்தாள். அதைப் பார்த்ததும் ரஹ்மானுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அவர்கள் இனத்தில் வயதில் பெரியவர்களை அப்படித்தான் வணங்குவார்கள். முன்பு இவர்கள் இருவரும் ஒன்றாக அப்துல்லாவின் காரில் பள்ளிக்குப் போகும் போது, இறங்கியவுடன் இவன் அப்படி செய்வதைப் பார்த்து அவளும் செய்வாள். இருவரில் யார் முதலில் சலாம் செய்வது என சண்டைக் கூட வரும் சில சமயங்களில். அப்துல்லாவுக்கு சிரிப்பாய் வரும் சின்னவர்களைப் பார்த்து. அதை மறக்காமல், தனது தந்தையைப் பார்த்ததும் தங்களது வழியில் அவள் வணங்கியதில் ரஹ்மானின் மனம் நிறைந்துப் போனது.   

“சீ கெச்சிக்(சின்ன பெண்ணே)! எப்படிடா இருக்க? பார்த்து எத்தனை வருஷமாச்சி!” என குரலில் உற்சாகம் வழிய பேசினார் அப்துல்லா.

“ஆயா(அப்பா), இவ இப்போ சீ கெச்சிக் இல்ல! சீ பெசார்(பெரியவள்)!” என சிரிப்புடன் சொன்னான் ரஹ்மான்.

“நீ பேசாதே ரஹ்மானு! பாக்ச்சிக் வராருன்னு ஏன் சொல்லல?”

“சொல்லிருந்தா மட்டும் என்ன செஞ்சிருப்ப நீ? உன் ரூம்ல வச்சி முறுக்கு சுட்டுக் கொண்டு வந்திருப்பியா இல்ல அதிரசம் செஞ்சு எடுத்து வந்திருப்பியா?” என கிண்டலடித்தான் அவன்.

“செய்ய முடியலைனாலும் வாங்கிட்டு வந்திருப்பேன்! இப்போ வெறும் கையா வந்திருக்கேன்! எல்லாம் உன்னாலதான்!” என இருவரும் மாற்றி மாற்றி வாயாட,

“இன்னும் ரெண்டு பேரும் சின்னப்புள்ளைங்க மாதிரி அடிச்சிக்கிறத விடலியா?” என கேட்டார் அப்துல்லா.

“உங்க மகன்தான் இன்னும் சின்னப்புள்ளத்தனமா இருக்கான்! நான் ரொம்ப மேச்சர்ட்! நீங்க வாங்க பாக்ச்சிக் நாம சராப்பான்(காலை உணவு) போகலாம். இன்னிக்கு நான் தான் உங்களுக்கு சாப்பிட வாங்கிக் குடுப்பேன்!” என அவர் கைப்பிடித்து காபிடேரியா பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

மகனைத் திரும்பிப் பார்த்தார் அப்துல்லா.

“போங்க ஆயா! நான் காரைப் பார்க் பண்ணிட்டு வந்து சேர்ந்துக்கறேன்”

“வாவ் ரஹ்மானு! நீ காடிலாம் ஓட்டுவியா?” என வாயைப் பிளந்தாள் மீனாட்சி.

“காரென்ன, நீ ஹூம்னு சொன்னா ட்ரைன், ஏரோப்ளேன் கூட ஓட்டுவேன்!” என குறும்பாய் அவன் சொல்ல, நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு சென்றாள் அவள்.

“சைத்தான்!” என செல்லமாக முணுமுணுத்தவன், காரில் எறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.

காரைப் பார்க் செய்து விட்டு அவன் வர, மீனாட்சி உணவு வாங்கும் இடத்தில் நின்றிருந்தாள். அப்துல்லா அங்கிருந்த மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். மீனாட்சியின் அருகே போனவன்,

“நீ போய் உட்காரு மீனாம்மா! நான் வாங்கிட்டு வரேன்” என்றான்.

“பாக்ச்சிக்கு மட்டும் நான்தான் வாங்கிக் குடுப்பேன். உனக்கு நீயே போய் வாங்கிக்கோ! அப்படியே எனக்கும் சேர்த்து வாங்கிடு” என்றவளை முறைக்க முயன்றவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

அப்துல்லாவுக்கு இவள் ரொட்டி சானாய்(பரோட்டா) வாங்கி வர, மீனாட்சிக்குப் பிடித்த ரொட்டி ஜாலாவை(மலாய்காரர்களின் இடியப்பம்) இவர்கள் இருவருக்கும் சேர்த்து வாங்கி வந்தான் ரஹ்மான்.

எப்பொழுதும் ஒன்றாக சாப்பிட வந்தால், மகாராணி போல் அமர்ந்துக் கொண்டு இவனைத்தான் அது வாங்கி வா, இது வாங்கி வா என ஆர்டர் போடுவாள் மீனாட்சி. ஆனால் இன்று, அப்துல்லாவுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என கேட்டு கேட்டு, இவளே போய் வரிசையில் நின்று இவள் பணத்தில் வாங்கி வந்துக் கொடுத்ததைப் பார்த்தவனின் முகம் மலர்ந்துப் போனது.

மீனாட்சிக்கு அழகுவைப் போலவே தன்னை பாசமாகப் பார்த்துக் கொண்ட அப்துல்லாவின் மேல் அளவுக்கடந்த அன்பிருந்தது. அவரிடம் தானே நன்றாக மலாய் பேசக் கற்றுக் கொண்டாள். அவள் தப்பும் தவறுமாய் பேசினால் கூட பொறுமையாக திருத்துவாரே அப்துல்லா.

மூவரும் பேசி சிரித்தப்படி சாப்பிட, அப்பொழுதுதான் அப்துல்லாவை நன்றாக கவனித்துப் பார்த்தாள் மீனாட்சி. ரொம்பவே இளைத்திருந்தார் அவர். வயதுக்கு மீறி தலை நரைத்திருந்தது. கண்ணோரம் சுருக்கங்களும், அதை சுற்றி கருவளையமும் பார்க்கவே மனதைப் பிசைந்தது இவளுக்கு. புன்னகை முகமாக இருந்தாலும் அவர் கண்ணில் ஒளியில்லை.

“மாக்ச்சிக்(ஆண்ட்டி) எப்படி இருக்காங்க?” என கேட்டாள் இவள்.

ஏற்கனவே ரஹ்மானிடம் இவர்களைப் பற்றி விசாரித்திருந்தாள் மீனாட்சி. இருவரும் நலமென சொல்லி வேறு பேச்சுக்கு தாவி விட்டிருந்தான் அவன்.

“ரஹ்மான் சொல்லலையாம்மா? மாக்ச்சிக்கு..” என சொல்ல வந்தவர், மகனின் கண் ஜாடையில் பட்டென நிறுத்திக் கொண்டார்.

“மாக்சிக் நல்லா இருக்காங்கம்மா! கொஞ்சம் காய்ச்சலா இருந்தது. இப்போ நல்லா ஆகிடுச்சு! அதைதான் ரஹ்மான் சொல்லலியான்னு கேட்டேன். நான் வேலை விஷயமா கோலாலம்பூர் வந்தேன். அதான் அவங்கள கூட்டிட்டு வரல. உன்னை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்கடா. அத விடு அப்பா, அம்மா, அப்பத்தா, அண்ணங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?” என பேச்சை மாற்றினார் அவர்.

ரஹ்மான் காட்டிய கண் ஜாடையையும், அப்துல்லா சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறு மாற்றி சொன்னதையும் புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு முட்டாளா அவள்! மீனாட்சிக்கு அவ்வளவு கோபம் வந்தது ரஹ்மான் மீது. தன்னிடம் எதையோ சொல்லாமல் அவன் மறைப்பது மனதை வலிக்க செய்தது.

‘இவனுக்கு நான் ஒன்னுமே இல்லையா! எதுக்கு இவங்க குடும்ப விஷயம் தெரியக் கூடாதுன்னு என்னை தள்ளி வைக்கிறான்! நான் யாரோதானா?’ என மனதில் பல கேள்விகள். முகம் அப்படியே மாறி விட்டது அவளுக்கு. அப்துல்லா இருக்கவும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மீனாட்சி.

“வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க பாக்ச்சிக். ரஹ்மான் நேருல ஆறுண்ணாவ பார்த்துப் பேசனும்னு, இவன சந்திச்சத பத்தி சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டான். நானும் சொல்லல! வீட்டுக்குப் போனா கண்டிப்பா சொல்லாம விட்டதுக்கு அப்பாவும் அம்மாவும் கோச்சிப்பாங்க. நான் அவங்க கிட்ட வாங்கிக் கட்டறதுல உங்க மகனுக்கு அவ்ளோ சந்தோஷம்!” என கடுப்பில் ரஹ்மானை மாட்டிவிட்டாள் இவள்.

மகனைப் பார்த்தவர்,

“இது சரியில்ல ரஹ்மான். பெத்தவங்க கிட்ட ஒரு விஷயத்தை மறைக்க சொல்லறது ரொம்பத் தப்பு!” என குரலில் கண்டிப்புடன் சொன்னார் அப்துல்லா.

“மன்னிச்சுடுங்க ஆயா! இனிமே இப்படி நடக்காது” என்றவன் மீனாட்சியை ஏறிட, ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி,

“எப்புடி!!!” என உதட்டை மட்டும் அசைத்துக் காட்டினாள்.

“சைத்தான்” என கோபமாக உதடசைத்தான் அவன்.

உதட்டை சுழித்துக் காட்டியவள், அதற்கு மேல் தனது கவனத்தை அப்துல்லாவிடமே வைத்திருந்தாள்.

அவர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு கிளம்ப ஆயத்தமான அப்துல்லா, மீனாட்சியிடம் ஒரு என்வலப்பை நீட்டினார்.

“வச்சிக்கோ சீ கெச்சிக்! எத்தனை வருஷாமாச்சு உனக்கு டுவேட் ராயா(பெருநாளின் போது சின்னவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்) குடுத்து”

மறுக்காமல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள், அவர் கார் கண்ணை விட்டு மறையும் வரை அதையே பார்த்தப்படி நின்றாள்.

“வா மீனாம்மா, போகலாம்” என ரஹ்மான் அழைக்க, திரும்பி அவனை முறைத்தாள் மீனாட்சி.

“என்னாச்சு? எதுக்கு இந்த முறைப்பு? ஆயாகிட்ட மாட்டி விட்டதுக்கு நான்தான் உன்னை முறைக்கனும்”

“உன் கிட்ட பேசனும்!”

‘ஐயோ! இவ பேசனும்னு சொன்னாலே ஏழரைய கூட்டி அழுதுட்டே போவாளே!’ என நினைத்தவனுக்கு பயந்து வந்தது.

“என்ன மீனாம்மா?”

“மாக்ச்சிக்கு என்ன பிரச்சனை?”

முகம் இறுகிப் போக அமைதியாக இருந்தான் ரஹ்மான்.

“சொல்லு ரஹ்மானு! என்னத்த சொல்ல வேணான்னு பாக்ச்சிக்கு கண்ணக் காட்டன? இப்போ சொல்லப் போறியா இல்லையா?”

“ஈபூவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல! அவ்ளோதான் மீனாம்மா”

“பொய் சொல்லற நீ! பாக்ச்சிக் ரொம்ப இளைச்சுக் களைச்சுத் தெரியறாரு! அவர் முகத்துல ஒளியே இல்ல! ஆனா அது என்ன விஷயம்னு என் கிட்ட சொல்லப் பிரியப்படல நீ! நான் யாரோதானே உனக்கு” என படபடத்தவளை ஒற்றைக் கைத் தூக்கி நிறுத்தும்படி சைகை செய்தான் ரஹ்மான்.

“நீ இவ்ளோ புத்தி சாதூர்த்தியத்தோட இருந்திருக்க வேணா மீனாம்மா!” என்றவனின் குரல் முகத்தைப் போலவே இறுகி இருந்தது.

“சொல்லு” என பிடிவாதமாக நின்றாள் இவள்.

“ஈபூவுக்கு கர்ப்பப்பையில ரொம்ப நாளாகவே பிரச்சனை இருந்தது. ரொம்ப கஸ்டப்படவும் அதை ரீமுவ் பண்ணிட்டாங்க. அதுக்கு அப்புறம் ரொம்பவே வீக்காகிட்டாங்க. இப்போ கொஞ்ச நாளா நடக்க முடியல. வீல்சேர்தான்” என கரகரத்த குரலில் சொல்லி முடிக்கவும், இவள் அழ ஆரம்பித்திருந்தாள்.

“இதுக்குத்தான் மறைச்சேன்! உன்னால தாங்கிக்க முடியாதுன்னுதான் மறைச்சேன். அழாதே மீனாம்மா! எல்லாம் சரியாகிடும்” என்றவன், கர்ப்பப்பை கான்சரில் அவதிப்படும் தன் தாய் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதை அவளிடம் இருந்து மறைத்தான்.  

மீனாட்சிக்கு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு ரஹ்மானையும் அவன் தகப்பனையும் அளவுக்கதிகமாகப் பிடித்தாலும், அமீனா மீதும் ஓரளவுக்குப் பாசம் இருந்தது. ரஹ்மான் தன் ஈபூவை எவ்வளவு நேசிக்கிறான், அவரும் மகனை எப்படித் தாங்குவார் என அறிந்திருந்தவளுக்கு அவன் மனம் என்ன பாடுபடும் என நினைக்க நினைக்க கண்ணீர் நிற்காமல் சுரந்தது.

அவன் எவ்வளவோ சமாதானம் செய்தும், அழுதுக் கொண்டே இருந்தாள் மீனாட்சி. அவர்களைக் கடந்து போகும் மற்ற மாணவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கவும்,

“மீனாம்மா! அழறத நிறுத்து!” என மெல்லியக் குரலில் கடிந்துக் கொண்டான் ரஹ்மான்.

“நான் உனக்காகத்தான் அழறேன் ரஹ்மானு! உனக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கும்னு நெனைச்சித்தான் அழறேன்” என பாவமாய் சொல்பவளை அதற்கு மேல் கடிந்துக் கொள்ள முடியவில்லை அவனால்.

“இப்படி அழுதா இனிமே எப்படி என் ஃபீலிங்லாம் உன் கிட்ட ஷேர் பண்ணிப்பேன் மீனாம்மா? ஆறுதலா பேசி, என் கஸ்டத்த பகிர்ந்துக்க உன்னைத் தவிர எனக்கு வேற யார் இருக்கா? ப்ளிஸ்டி அழாதே!” என்றவன்,

“உன் கிட்ட ஈபூவ பத்தி சொன்னதுக்கு அப்புறம் மனசுக்கு எவ்ளோ ரிலீபா இருக்குத் தெரியுமா மீனாம்மா! உள்ளுக்குள்ள அடைச்சி வச்சிக்காம எனக்கும் என் துன்பங்கள பகிர்ந்துக்க ஒரு இடம் இருக்குன்னு ரொம்ப நிம்மதியா இருக்கு. இப்போ நீ அழுகைய நிறுத்தலனா இனிமே எதுவும் சொல்ல மாட்டேன்” என முடித்தான்.

கண்ணை அவசரமாகத் துடைத்துக் கொண்டவள்,

“அழல! இனிமே எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லு! உனக்கு நான் எப்பவுமே ஆறுதலா இருப்பேன் ரஹ்மானு” என்றாள்.

அப்படியே அவளை ஹாஸ்டல் அனுப்ப இஸ்டமேயில்லை ரஹ்மானுக்கு. அவளோடு ஹேமா வேறு இல்லை என்பது அவள் சொல்லித் தெரிந்து வைத்திருந்தான். ப்ரோபெசருக்கு நோட்ஸ் எடுத்துக் கொடுக்கும் வேலை இருந்தது அவனுக்கு. கையில் கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தவன்,

“மீனாம்மா! எனக்கு வேலை இருக்குடா! நீ ஹாஸ்டல் போய் ரெஸ்ட் எடு! லன்ச் டைமுக்கு மறுபடியும் பார்க்கலாம்! அழக் கூடாது சரியா?” என கேட்க, சரியென தலையாட்டினாள் அவள்.

இவன் வேலையை முடித்துக் கொண்டு சுமார் இரண்டு மணி போல மீனாட்சியிடம் சொல்லி இருந்த காபிடேரியாவுக்கு வந்தான். அவனுக்கு முன்னமே அவள் வந்து அமர்ந்திருந்தாள். மீனாட்சியின் முன்னே போய் அமர்ந்தவன், அவள் முகத்தைப் பார்த்து அதிர்ந்துப் போனான். கண் சிவந்து இமைகள் வீங்கிக் கிடக்க, மூக்கு முகமெல்லாம் வீங்கி சிவந்திருந்தது.

“இவ்வளவு நேரமும் அழுதுட்டே இருந்தியா மீனாம்மா?” என கேட்டவனுக்கு கோபப்படுவதா வருத்தப்படுவதா என தெரியவில்லை.

“போலாம் ரஹ்மானு!” குரல் கூட சளி பிடித்திருப்பது போல கரகரத்தது.

“எங்க?”

“உங்க வீட்டுக்கு”

“உனக்கு என்ன பைத்தியமா?”

“போலாம்!”

“ஏய்ய்ய்!!!”

“போலாம் ரஹ்மானு”

தேய்ந்துப் போன ரெக்கார்ட் போல அதையே திரும்ப திரும்ப சொன்னவளைக் கோபத்துடன் முறைத்தான் ரஹ்மான்.

“எனக்கு மாக்ச்சிய பார்க்கனும் ரஹ்மானு! நேருல பார்க்கனும். கூட்டிட்டுப் போ ப்ளிஸ். இன்னிக்கே திரும்ப வந்துடலாம்”

“மீனாம்மா! இதெல்லாம் சரிப்படாது புரிஞ்சுக்கோ! இப்போ கிளம்பனா போய் சேரவே ஏழு மணியாகிடும். அப்புறம் எங்கிருந்து இன்னிக்கே கிளம்பி வர முடியும்? இன்னொரு நாளைக்குப் போகலாம்”

“போலாம் ரஹ்மானு! இன்னிக்கே!”

“பிடிவாதத்துக்கு பொறந்தவளே! யோசிச்சித்தான் பேசறியா? எவ்ளோ பொறுமையா எடுத்து சொல்லறேன்! போனும் போனும்னு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்ற! முடியாது, நோ, தாக் போலே(முடியாது)!” என குரலை உயர்த்தியவன், அக்கம் பக்கம் ஆட்கள் இருக்கவும் சட்டென குரலை தாழ்த்தினான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் யுத்ததில் பெண் கடைசியாக எடுக்கும் ஆயுதமான கண்ணீரை இவள் கையில் எடுக்கவும், தலையப் பிடித்துக் கொண்டான் ரஹ்மான்.

“மீனாம்மா! இந்தக் கண்ணீர வச்சி என்னை ரொம்பவே ஆட்டிப்படைக்கிற நீ! ஒரு கட்டத்துல இந்த கண்ணீர் ஆயுதமும் வலுவிழந்து போகும் போது, நிராயுதபாணியா நிக்கப் போற பாரேன்!” என்றவன் சட்டென எழுந்துக் கொண்டான்.

“கிளம்பு போலாம்”

“எங்க?”

“நம்ம வீட்டுக்குத்தான்”

முகம் சட்டென பளிச்சிட, இவளும் எழுந்துக் கொண்டாள்.

“ஹாஸ்டல் போய் ஒரு நாளைக்குத் தேவைப்படற மாதிரி துணி எடுத்துக்கோ! சின்ன பேக் போதும். நான் வெளிய வேய்ட் பண்ணறேன்” என்றவன் முதலில் பப்ளிக் டெலிபோன் பூத்துக்கு அழைத்துப் போனான்.

“இங்க ஏன் ரஹ்மானு?”

“வீட்டுக்குக் கூப்பிட்டு சொல்லு! நானும் அப்பாகிட்ட பேசறேன். ஆனா ஆறுகிட்ட பேசமாட்டேன்”

அப்துல்லா அவனைக் கண்டித்ததில் இருந்து இவனுக்கும் மனதே சரியில்லை. அதோடு பெற்றவர்கள் அனுமதி இல்லாமல் வீடு வரை அழைத்துப் போவது மிகவும் தப்பாகத் தோன்றியது இவனுக்கு. அதனால்தான் போன் செய்ய சொன்னான் ரஹ்மான்.

“அவன் பாவம் ரஹ்மானு”

“சொன்னத செய் மீனாம்மா”

வீட்டுக்குப் போன் செய்ய, அழகுதான் போனை எடுத்தார். மடமடவென ரஹ்மானைப் பார்த்தது, ஆறுவிடம் அவன் கோபம் கொண்டு வீட்டில் சொல்ல வேண்டாமென சொன்னது, இப்பொழுது அமீனாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பது, அவரைப் பார்க்க தான் போக விரும்புவது என எல்லாவற்றையும் சொன்னாள் மீனாட்சி. அமைதியாக கேட்ட அழகு, பெருமூச்சொன்றை இழுத்து விட்டார். தன்னால்தானே சின்னவர்கள் இருவரின் நட்பும் பிரிந்துப் போனது என ஏற்கனவே குற்றக் குறுகுறுப்பில் இருந்தவருக்கு இதைக் கேட்கவும் மனது கஸ்டமாகிப் போனது.

போனை வாங்கிப் பேசிய ரஹ்மான், அவர் கேட்ட மன்னிப்பில் பதறிப் போனான். ஆறுவிடம் கோபம் எதுவும் இல்லை என சமாதானப்படுத்தியவன், நேரில் அவனிடம் பேசுவதாக சொன்னான். மீனாட்சியைத் தனது வீட்டுக்கு அழைத்து செல்ல அனுமதி கேட்டவன், அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான். அவளைத் தனியாக ரஹ்மானோடு அனுப்பத் தயங்கினார் அழகு.

“அப்பாவ உங்க கிட்ட பேச சொல்றேன் அங்கிள்! மீனாம்மா அம்மாவ பார்த்தே ஆகனும்னு பிடிவாதம் பிடிக்கறா! எனக்கு வேற வழி தெரியல”

“எத்தனை தடவை அவங்க கையால சாப்பிட்டிருப்பா! பாசம் இருக்கத்தான் செய்யும், மனசு துடிக்கத்தான் செய்யும்!” என்றவர்,

“சரிப்பா! கூட்டிட்டுப் போ” என சம்மதம் சொன்னார்.

வயதுப் பிள்ளையை இப்படி வெளியே அனுப்பியது தெரிந்தால் ஈஸ்வரி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் என அறிந்திருந்தாலும் அவர்களோடு பழகிய பாசத்துக்கு சரியென ஒத்துக் கொண்டார்.  

அதன் பிறகு அப்துல்லாவுக்கு போன் செய்து தாங்கள் வருவதை சொன்ன ரஹ்மான், மீனாட்சியின் வீட்டு தொலைபேசி இலக்கத்தையும் அவருக்குக் கொடுத்தான் அழகுவிடம் பேச சொல்லி. அவர் வந்த வேலை முடிய கிளம்பி வீட்டுக்குப் போய் விட்டிருந்தார். இல்லையென்றால் அவரோடே மீனாட்சியை அழைத்துப் போயிருப்பான் ரஹ்மான்.

தேவையானவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினர். மீனாட்சியின் பிடிவாதம் ஜெயித்ததில் இவன் அவளிடம் பேசாமல் அமைதியாகவே வர, அவளும் அவன் அமைதிக்கு பயந்து மௌனமாகவே வந்தாள். மினி பஸ் எடுத்து கோலாலம்பூர் வந்தவர்கள், புடுராயா(இதுதான் எக்ஸ்பிரஸ் பஸ்கள் எடுக்கும் இடம். இப்பொழுது வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள்) வந்து தாங்கள் எடுக்க வேண்டிய பஸ்ஸூக்காக காத்திருந்தனர். டிக்கட் வாங்கி வந்த ரஹ்மான், கோபத்திலும், அவசரத்திலும் லன்ச் சாப்பிடாத தங்கள் இருவருக்கும் பன், கூல் ட்ரிங், அசாம்(புளிப்புத்தூள்) போட்ட கொய்யா(ஒவ்வொரு தடவை எங்க பாட்டி வீட்டுக்குப் போகிறப்பவும் புடுராயால இது வாங்கிக் குடுக்க சொல்லி நச்சரிப்பேன் எங்கம்மாவ! ஏற்கனவே மாமியார் வீட்டுக்குப் போறமேன்னு கடுப்புல இருக்கற எங்க மம்மிய இதெல்லாம் இன்னும் கடுப்பேத்தும்(சாரிம்மா! குடும்ப ரகசியத்த உடைச்சிட்டேன்). அந்த கடுப்பலயும் வாங்கிக் குடுப்பாங்க) என சாப்பிட வாங்கி வந்தான். அவர்கள் எடுக்கும் பஸ் எக்ஸ்பிரஸ் பஸ், ஏர்கோன்ட் வசதி கொண்டது.

பஸ் வந்து நிற்கவும் அடித்துப் பிடித்து ஏறினார்கள் மக்கள் அனைவரும். இடம் கிடைக்க வேண்டும் என்றால் இப்படித்தான் தள்ளு முள்ளு போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நின்றப்படியே நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இவர்கள் இருவரும் முட்டி மோதி ஏறி இடம் பிடித்து அமர்ந்தார்கள். மீனாட்சியை ஜன்னலோரம் விட்டவன், அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான். அவளது பேக்கைத் தன் காலடியில் வைத்தவன், உணவுப் பொருளை தனக்கு முன்னால் இருந்த சீட்டின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருந்த கம்பியில் மாட்டினான். பஸ் புடுராயாவில் இருந்து வெளியேறி கோலாலம்பூர் சாலையில் பயணிக்க ஆரம்பிக்க, பையில் இருந்த பன்னை எடுத்து மீனாட்சியிடம் நீட்டினான் ரஹ்மான்.

அமைதியாக வாங்கிக் கொண்டவள், சாப்பிட ஆரம்பித்தாள். அவனோ சாப்பிடாமல் அமைதியாக வர, தனது பன்னை அவன் வாயருகே கொண்டுப் போனாள் இவள்.

“சாப்பிடு ரஹ்மானு! என் கிட்ட கோச்சிக்கிட்டு சாப்பிடாம இருக்காதே” என மெல்லியக் குரலில் கெஞ்சினாள் மீனாட்சி.

முகத்தைத் திருப்பிக் கொண்டவன், தனது பன்னை எடுத்துப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு இருவரும் அமைதியாக சாப்பிட்டனர். இவள் அமைதியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, இவன் தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். தன் பேக்கில் இருந்து ரஹ்மான் கொடுத்த டிஸ்க்மேனை எடுத்தவள், வலது புற இயர் போனை தன் காதில் மாட்டிக் கொண்டு இன்னொரு இயர்போனை ரஹ்மானின் இடது காதில் மாட்டினாள். அவள் செயலுக்கு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் ரஹ்மான்.

பாட்டைக் கேட்டப்படியே அன்று முழுதும் அழுத களைப்பில் தூங்கிப் போனாள் மீனாட்சி. தலை அவன் தோளில் சாய,அவளை நன்றாக நடுவில் நகர்த்தி விட்டான் ரஹ்மான். அவள் தலையோ நேராய் நிற்காமல் இப்பொழுது ஜன்னல் பக்கம் சாய, பஸ் போன வேகத்துக்கு ஜன்னலிலேயே பல முறை முட்டிக் கொண்டாள். வேக மூச்சை இழுத்து விட்ட ரஹ்மான், சட்டென அவள் தலையை மீண்டும் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவளுக்கு வசதியாக இருக்க வேண்டி, கொஞ்சமாய் கீழே சரிந்து அமர்ந்துக் கொண்டான். சாய்ந்துக் கொள்ள இடம் கிடைக்க, ஏர்கோண்ட் உபயத்தால் குளிர் உடலைத் தாக்க, சூடாய் இருந்த ரஹ்மானை தூக்கத்திலேயே இன்னும் ஒட்டிக் கொண்டாள் மீனாட்சி அம்மன். அவளைத் தள்ளவும் முடியாமல், ஒட்டிக் கிடக்கவும் முடியாமல் தவித்துப் போனான் ரஹ்மான்.

இயர் போனில்,

“காண்பதில் எல்லாம் தலை கீழ் தோற்றம்

என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

இதற்கு பெயர்தான் காதலா????” என ஹரிஹரன் உருகிக் கொண்டிருந்தார்.   

இவனும் அவள் அண்மையில் அனலில் இட்ட பனியாய் உருகிப் போய் கிடந்தான். இதில் அனல் யார், அனலால் உருகிக் காணாமல் போன பனி யார் என காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

 

(ஜீவன் துடிக்கும்….)

 

(அடுத்த எபில நம்ம பொண்ணு ரஹ்மான அவன் வீட்டுலயே என்னப் பாடு படுத்தறான்னு பார்ப்போம்.. போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)