அனல் பார்வை 22🔥

அனல் பார்வை 22🔥

அடுத்தநாள்,

சந்தோஷமாக தன்னவனுக்காக இனிப்புப்பண்டங்கள் வாங்கி வந்த அருவி, கதவு உள் பக்கமாக தாழிட்டிருப்பதை உணர்ந்து யோசித்தவாறே அழைப்பு மணியை அழுத்தினாள்.

சற்று நேரம் கழித்து கதவை திறந்த ராகவ் ஒருவித தடுமாற்றத்துடன் அவளை பார்க்க, “என்ன அதிசயமா கதவுக்கு தாழ்ப்பாள் போட்டிருக்க? ஏதாவது தில்லாலங்கடித்தனம் பண்றியா சாகு?” என்று கேட்டவாறு அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள், “மஹி… மஹி…” என்று தன்னவனை தேடினாள்.

ஆனால், அடுத்து ராகவ் சொன்ன செய்தியில் அதிர்ந்து விட்டாள் அவள். “ஆகு இங்க இல்லை.” என்று அவன் சொன்னதும் அதிர்ந்தவள், “இங்க இல்லைன்னா எங்க?” என்று பதறியபடி கேட்டாள். “அவன் பொகோட்டாவுக்கு போயிருக்கான்.” என்று ராகவ் வேறுபுறம் பார்வையை திருப்பியவாறு சொல்ல, உதட்டை பிதுக்கிய அருவிக்கு நிஜமாகவே அழுகை வந்துவிட்டது.

“ஏன் டா என்கிட்ட சொல்லாம போனான்? அவன ஒருநாள் பார்க்கலன்னாலும் என்னால முடியலடா. பைத்தியம் பிடிக்குது. ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா உன் ஆகு என்ன குறைஞ்சி போயிருவானா? ச்சே! ரொம்ப திமிரு, கொழுப்பு. அவன் வரட்டும் அப்போ பார்த்துக்குறேன்.” என்று தன்னவனை கோபமாக திட்டியவள் பின் புன்னகைத்தவாறு,

“பட், மஹி எப்படியும் அவன் ஃபேமிலிய சமாளிச்சிருவான். அவன் வந்ததும் எனக்கும் அவனுக்கும் கல்யாணம் தான். என்ன தான் மஹி இந்த நாட்டை சேர்ந்தவனா இருந்தாலும் கல்யாணம் நம்ம தமிழ்நாட்டு முறைப்படி தான். டேய் சாகு! நீதான் டா தாலி எடுத்து கொடுக்கனும். வயசுல பெரியவன்ல அதான்…” என்று கேலியாக சொல்லிவிட்டு செல்ல, ராகவ்விற்கு தான் தன் நண்பர்களை நினைத்து அத்தனை வேதனையாக இருந்தது.

அவள் சென்றதும் வாசற்கதவை தாழிட்டவன், “ஆகு…” என்று குரல் கொடுக்க, ராகவ்வின் அறையிலிருந்து வெளியே வந்த அக்னியின் கண்கள் அழுததாலோ, என்னவோ! சிவந்து போயிருந்தன. முஷ்டியை இறுக்கிக்கொண்டு ஒருவித இறுக்கத்துடன் அவன் நின்றிருக்க, அவன் உணர்வுகளை புரிந்துக்கொண்ட ராகவ் தன் நண்பனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

“ஆகு, ஏன் டா இப்படி பண்ற? அருவ விட்டு பிரிஞ்சி தான் நீ அதை பண்ணியாகனுமா?” என்று ராகவ் ஆதங்கமாக கேட்க, “எனக்கு வேற வழி தெரியல ராகு! ஒன்னு கிடைக்கனும்னா ஒன்ன இழக்கனும். என் தீயோட நம்பிக்கை பொய்யாக கூடாது.” என்று பேசியவன் ஒன்றை மட்டும் வெகுவாக மறந்து தான் போனான். அவளின் மொத்த சந்தோஷமும், உலகமும் அவளின் மஹி தான் என்று…

அடுத்து வந்த மூன்று நாட்கள் அருவி ராகவ்வின் வீட்டிற்கு வருவதும், அவனும் அக்னியின் பேச்சை கேட்டு ஏதாவது பொய் சொல்லி அவளை அனுப்பி வைப்பதுமாக இருக்க, தான் நடந்துக்கொள்ளும் முறையில் ராகவ்விற்கே குற்றவுணர்ச்சியாகத் தான் இருந்தது.

அதையும் அவன் கோபமாக அக்னியிடம் காட்டிவிட, அடுத்து அக்னி எடுத்த முடிவை செயற்படுத்த ராகவ் சொன்ன திட்டம் அவர்களின் நிரந்தர பிரிவிற்கே காரணமாகிப்போனது.

அன்று,

தனது மார்பில் பச்சைக்குத்தியிருந்த தன்னவனின் முகத்தை புன்னகையுடன் பார்த்தவாறு வருடியவளுக்கு தன்னவனை நினைக்கும் போதே அத்தனை பூரிப்பு! கூடவே, அவனுடனான சங்கமும் நினைவுக்கு வர முகமோ செங்கொழுத்தாக சிவந்து போனது அவளுக்கு!

‘எப்போ வருவ மஹி? ஐ மிஸ் யூ டா… நீ வந்ததும் என்னை விட்டு மறுபடியும் நான் போகவே விட மாட்டேன். இல்லை.. இல்லை.. நான் அந்த ஹேப்பி நியூஸ் அ உன்கிட்ட சொன்னா நீயே என்னை விட்டு போக மாட்ட.’ என்று மானசீகமாக தன்னவனுடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அந்த பிரத்யேக பாடலுடனான அழைப்பு வர, முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்பு போல எரிந்தது.

அவசரமாக அழைப்பை ஏற்றவள், “மஹி…” என்று ஆர்வமாக அழைக்க, மறுமுனையில் ராகவ்வோ, “ஆகு வீட்டுக்கு வந்துட்டான். ஆனா…” என்று ஏதோ சொல்ல வர, அவளோ வேறு எதையும் கேட்காது அழைப்பு துண்டித்து தன்னவனை காண அவசர அவசரமாக தயாரானாள்.

தயாராகிவிட்டு கதவு வரை சென்றவள், மீண்டும் தன் அலங்காரம் குறித்து சந்தேகப்பட்டு கண்ணாடியின் முன் வந்து பார்த்து, தனக்குத்தானே வெட்கப்பட்டு தலையில் தட்டியவாறு அறையிலிருந்து வெளியேறினாள். ஆனால், இன்றே தன் மொத்த சந்தோஷமும் குழையப் போவதை பாவம் அந்த பேதை அறிந்திருக்க மாட்டாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் ராகவ்வின் வீட்டை அடைந்தவளை லேசாக திறந்து இருந்த வாசற்கதவு தான் வரவேற்றது. ‘இன்னைக்கு உன்னை சும்மா விடமாட்டேன். என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல தோணல்லல்ல? இரு! உன்னை என்ன பண்றேன் பாரு!’ என்று வாய்விட்டு திட்டியவாறு லேசாக திறந்திருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் அருவி.

ஆனால், அங்கு கண்ட காட்சியில் அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. அவளெதிரே அக்னி ஒரு ஸ்பானியன் பெண்ணுடன் இதழணைப்பில் இருக்க, ‘தன் மஹியா இது?’ என்று அதிர்ந்து நின்றவள் அப்போதும் அவன் மேலிருந்த நம்பிக்கையை மட்டும் விடவில்லை, அவளவனே வாய் திறந்து சொல்லும் வரை.

அருவிக்கோ அந்த பெண்ணின் மேல் தான் கோபம் தாருமாறாக எகிற,  அந்த பெண்ணை ஆவேசமாக அவனிடமிருந்து பிரித்தவள், அவள் கன்னத்திலே ஓங்கி அறைந்திருந்தாள். ஆனால், அடுத்தநொடி “தீ…” என்ற அக்னியின் கத்தலில் மிரண்டு போய் அவனை பார்த்தாள் அவள்.

தன்னவளின் பார்வை தன்மேல் பட்டதும் நேருக்கு நேர் அவளை பார்க்க முடியாது இறுகிய முகமாக அவன் வேறுபுறம் பார்வை திருப்பிக்கொள்ள, “மஹி…” என்றழைத்தவாறு அவனை நெருங்கினாள் அருவி.

“மஹி.. மஹி, அந்த பொண்ணு உன்கிட்ட இப்படி நடந்துக்குறா. நீயும் பார்த்துக்கிட்டு இருக்க. ஹவ் டேர் இஷ் ஷீ? என் மஹிய… ச்சீ! வெளில போ இங்கயிருந்து!” என்று ஆவேசமாக கத்தியவள், அடுத்து தன்னவன் சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்து விட்டாள்.

“தீ, அந்த பொண்ணு மட்டும் காரணம் இல்லை. நானும் தான்… ஏதோ சபலத்துல…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன், “ஷட் அப்!” என்ற தன்னவளின் கத்தலில் பேச்சை நிறுத்தி, குற்றவுணர்ச்சியுடன் அவளை ஏறிட்டு பார்த்தான்.

“மஹி, நான் என்னை நம்புறதை விட உன்னை அதிகமா நம்புறேன். என் மஹி எனக்கு துரோகம் பண்ண மாட்டான். நான் சம்மதிக்காத வரை என்கிட்டயே எல்லை மீறாதவன் டா நீ! நீ தப்பு பண்ணேன்னு என்கிட்ட சொல்லாத! இட்ஸ் ஹர்ட்டிங்.” என்று அருவி முகத்தை மூடி அழ, இறுகிய முகமாக அவளை பார்த்திருந்தவன் கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை நிதானப்படுத்தினான்.

“தீ, உன் மஹி பொய் சொல்ல மாட்டான். எனக்கு வேற வழி தெரியல. என்னை மன்னிச்சிடு! நானும் தான்… அம்மாவால கூட உன்னை ஏத்துக்க முடியல. நீ உன்னோட லைஃப் அ பாரு!  நான் உன்னை ஏமாத்தியிருக்க கூடாது. உன்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது. நான்…” என்ற ஆரம்பித்தவனின் வார்த்தைகள் அருவி அறைந்த அறையில் அப்படியே நின்றது.

கலங்கிய விழிகளுடன் அக்னி அவளை ஏறிட்டுப் பார்க்க, கோபத்தில் கண்கள் சிவந்து, உதடு துடிக்க அவன் முன் பத்ரகாளி போல் நின்றிருந்தாள் அவள். ஏற்கனவே கொஞ்சநாட்களாக அவனுடைய ஒதுக்கம், இன்று பார்த்த காட்சி, தன்னவனே அவன் செய்ததாக சொன்னது, இப்போது அவளிருக்கும் நிலைமையில் உருவாகும் மூட் ஸ்விங் என்பன அவளை எதையும் யோசிக்க விடவில்லை.

“பேசாத! எதுவும் பேசாத! ச்சீ! எப்படி டா இப்படி சொல்ல முடிஞ்சது உன்னால? அதுவும் என் கூட…” என்று அடுத்த வார்த்தை சொல்ல முடியாது வார்த்தையை முழுங்கியவள், சிவந்து கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

அக்னியோ எதுவும் பேசவில்லை. அவனுக்கோ உயிருடன் மரித்த உணர்வு! ‘தன்னவள் அவள் கோபம் மொத்தத்தையும் கொட்டி விடட்டும்.’ என்ற ரீதியில் தலைகுனிந்தவாறு அமைதியாக நிற்க, அவன் மறுபேச்சு பேசாததில் உண்டான ஆத்திரம், சட்டென தன் வாழ்க்கையே மாறிப் போனது போல் உணர்ந்ததில் எதையும் ஏற்க முடியாது, ‘ஆஆ…’ என்று கத்தி கதறியழ ஆரம்பித்துவிட்டாள் அருவி.

அவள் அழுகையை வேதனையாக பார்த்தவன் ‘ஏன் தான் சென்றோம்?’ என்று ஆயிரம் தடவையாக நடந்த அந்த நிகழ்வை மீட்டி நினைத்துக் கொண்டான். அவளுடைய சந்தோஷத்துக்காக என்று சென்றவன் தானே தேவையில்லாது அந்த வலையில் சிக்கிக் கொண்டான் அல்லவா!

தன்னைத் தானே ‘முட்டாள்’ என்று திட்டிக்கொள்வதை தவிர அவனுக்கு இப்போது வேறு வழியுமில்லை. அவள் அழுகையை ஒரு கட்டத்திற்கு மேல் பார்க்க முடியாது அவன் வேறுபுறம் பார்வையை பதித்திருக்க, ஒரு முடிவு எடுத்தவளாக கண்களை அழுந்த துடைத்தவள், அவனெதிரே வந்து நின்று தன்னவனையே இறுக முகமாக பார்த்திருந்தாள்.

தன்னவளின் பார்வையை உணர்ந்து அக்னி அவளை நிமிர்ந்து பார்த்த அடுத்தகணம் எதுவும் யோசிக்காது அவனின் பாதத்தின் மேல் பாதத்தை வைத்து ஏறியவள், அவன் ஷர்ட் கோலரை பற்றி தன் முகம் நோக்கி இழுத்து அவனிதழில் இதழ் பதிக்க, இதை அக்னி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனுடைய விரிந்த கண்களே உணர்த்தியது.

தன் கோபம், வலி மொத்தத்தையும் அவனிதழில் காட்டியவள், அவனை உதறி தள்ளிவிட்டு திரும்பி கூட பார்க்காது அங்கிருந்து வெளியேற, வாசலில் ராகவ்வோ அவளை ஏறிட்டு பார்க்க முடியாது தயக்கமாக நின்றிருந்தான்.

அவனை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள், எதுவும் பேசாது தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றிருக்க, போகும் அவளையே வலி நிறைந்த பார்வை பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டவாறு வீட்டிற்குள் நுழைந்தவன், தன் வீடு இருந்த நிலையை பார்த்து புரிந்துக் கொண்டான், தற்போது அக்னி இருக்கும் நிலை மனநிலையை பற்றி…

மொத்த பொருட்களும் தரையில் சிதறியிருக்க, தான் வரைந்த மொத்த ஓவியங்களையும் கோபத்தின் உச்சத்தில் சிதைத்திருந்தான் அவன்.

இங்கு வீட்டுக்கு வந்த அருவியோ அறைக்குள் அடைந்தவள் தான் அன்று நாள் முழுக்க வெளியவே வரவில்லை. அக்னியின் முன் கடைசியாக அழுதது மட்டும் தான் அதன்பிறகு, கண்ணீருக்கு பதில் விரக்தியான புன்னகை மட்டுமே முகத்தில் மிஞ்சியிருந்தது.

‘ஏன் டா இப்படி பண்ண? உன் ஜானுவ விட்டுட்டு போயிட்டல்ல…’ என்று அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டவளுக்கு அவனின் மேலிருந்த கண்மூடித்தனமான காதல் அவள் இப்போது ஒரு உயிரை சுமக்கும் உண்மையை மறக்கடித்து விட்டது. காதலில் துரோகம் கொடுத்த வலியை தாங்காது அவள் செய்த முட்டாள்தனமான காரியம் அந்த வளர வேண்டிய கருவையே கொன்றுவிட்டது பாவம்!

அருவி செய்த புண்ணியமோ, என்னவோ! அருவி அந்த காரியத்தை செய்த அரைமணி நேரத்திலே லோஸ் ஏன்ஜல்ஸ்ஸிலிருந்து வீடு வந்து சேர்ந்த மோகனா முதலில் காண சென்றது தன் மகளை தான்.  ஏனோ அருவி கதவை பூட்டாமல் இருந்ததும் கடவுளின்  செயலாகிப் போனது.

முதலில் , “அரு… அரு…” என்று தட்டிப்பார்த்தவர் பின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரின் மூளையையே செயலிழக்கச் செய்துவிட்டது. வாயில் நுரை தள்ளி சுயநினைவின்றி தரையில் விழுந்திருந்த தன் மகளை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் உறைந்தவர் பின், “அரு…” என்று கதற, அந்த கத்தலில் வீட்டிலிருந்த மொத்த வேலைக்காரர்களும் அங்கு கூடினர்.

அடுத்த பத்து நிமிடங்களில் அருவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட, அரைமணி நேரம் கடந்ததாலோ, என்னவோ! சில போராட்டங்களுக்கு பிறகு தான் வைத்தியர்களால் அவளை காப்பாற்றவே முடிந்தது. ஆனால், அவர்கள் அடுத்து சொன்ன விடயத்தில் தான் மோகனா ஸ்தம்பித்து போய்விட்டார்.

சிகிச்சைக்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து கண்விழித்தவள், தன் அருகே அமர்ந்திருந்த தன் அம்மாவை தான் பார்த்தாள். அவரோ அவளையே கலங்கிய விழிகளுடன் பார்த்தவாறு இருக்க, அப்போது தான் ஏதோ உணர்ந்து தன் வயிற்றை தடவியவளுக்கு ஒரு சந்தேகம்!

“அம்மா, என் குழந்தை. நான் பண்ண காரியத்தால எதுவும் ஆகலல்ல?” என்று அருவி பதட்டமாக கேட்க, அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதை யூகித்த மோகனா மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்து, “அந்த கரு ஒரு மாசம் தான். நீ சாப்பிட்ட மருந்தோட எஃபெக்ட் அ அதனால தாங்க முடியல. அதான்…” என்று நிறுத்தி, மேலும் பேச முடியாது பார்வையை திருப்பிக்கொள்ள, அருவிக்கோ ‘தான் இப்போதே இறந்துவிட மாட்டோமா?’ என்று தான் இருந்தது.

ஆனால், அவள் அழுகவில்லை. இறுகிய முகமாக இருந்தவளது ஒரு கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழ, ஒரு இடத்தையே வெறித்தவாறு இருந்த தன் மகளை பார்த்த மோகனாவிற்கே அவளின் மனநிலை குறித்து பயமாக தான் இருந்தது.

வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தவருக்கு தன் மகளின் பிரச்சினை குறித்து எதுவுமே தெரியவில்லை. கேட்கவும் சங்கடம் அவருக்கு!

வைத்தியசாலையிலிருந்து வந்த அடுத்த இரண்டு நாட்களில் தனக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த மோகனாவிடம், “நம்ம வீட்டுக்கு போயிடலாம்.” என்று அருவி சொல்ல, மோகனாவிற்கோ எதுவுமே புரியவில்லை.

“அரு, நீ ஏன் இப்படி பண்றேன்னு நான் இதுவரைக்கும் கேக்கல. ஆனா, ஒரு அம்மாவா இதை கேக்க வேண்டியது என் கடமை. உன் மஹி தான் உன் வாழ்க்கைன்னு சொல்லுவ. இப்போ என்னாச்சு? அந்த பையன் ஏன் உன்னை பார்க்க வரல. உனக்கும் அந்த பையனுக்கும்…” என்று மோகனா தயக்கமாக இழுக்க, அடுத்தநொடி அவர் கையில் வைத்திருந்த உணவுத்தட்டு சுவற்றில் தூக்கியெறியப்பட்டது.

அவரோ திடுக்கிட்டு அவளை மிரட்சியாக பார்க்க, கண்கள் சிவந்து கோபத்தில் உச்சியில் இருந்தவள், “இனி, அந்த துரோகிய பத்தி என் முன்னாடி பேசினீங்கன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். இன்னும், இரண்டு நாள்ல நாம கிளம்புறோம். அவ்வளவு தான்.” என்றுவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவருக்கோ தன் மகளின் வாழ்க்கை குறித்து அத்தனை வேதனையாக இருந்தது. ஆனால், மேலும் ஏதாவது கேட்டு அவளின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமா? என்று பயந்தவர் எதுவும் பேசாது வலி நிறைந்த பார்வையுடன் அறையிலிருந்து வெளியேறினார்.

அடுத்த மூன்று நாட்களில் அருவியை அழைத்துக்கொண்டு தங்களின் சொந்த வீட்டிற்கே சென்றுவிட்டார் மோகனா. வீட்டுக்குள் வந்து அறைக்குள் அடைந்தவள் தான் சாப்பிட மட்டுமே வெளியே வருவாள். அதிகம் யாருடனும் பேசாது தன் இயல்பையே தொலைத்து இருந்தாள் அவள்.

இதில் மோகனா தான் அருவியின் நிலை பற்றி தாரக்கிடம் புலம்பி தள்ளி விட்டார். இவர்கள் லோஸ் ஏன்ஜல்ஸ் வந்த அடுத்த பத்தே நாட்களில் இவர்களே எதிர்பப்பார்க்காத ஒன்று நடந்தது.

ஆம், எவர் இறந்துவிட்டதாக நினைத்தார்களோ… அவர் அவர்கள் முன் உயிருடன் வந்து நின்றால்? மோகனாவுக்கோ அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷம்! “மோகி…” என்றவாறு ஆதிகேஷவன் புன்னகையுடன் தன் காதல் மனைவியை பார்க்க, தரையில் மண்டியிட்டு அமர்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார் மோகனா. இதில் அருவி தான் தன்னை பெற்ற தந்தையை முதல் தடவை நேரில் பார்ப்பதில் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அருவியை பார்த்தவர் அவளின் தலையை லேசாக வருடிவிட்டு, “தீ அருவி, என்னோட பொண்ணு. என்னோட இரத்தம்.” என்று சொல்ல, “அப்பா…” என்றவாறு அவரை தாவி அணைத்தவள், “ஏன் ப்பா என்னை விட்டு போனீங்க?” என்று கேட்டவாறு அவர் மார்பில் சாய்ந்து அழுக, “என்னை மன்னிச்சி ம்மா! என்னை மன்னிச்சிடு!” என்றவருக்கும் கண்களில் கண்ணீர் குளமாக தேங்கி நின்றது.

தாரக்கோ அவர் முன் தன் சந்தேகத்தை கேட்க வர, அருவி அவனை முறைத்த முறைப்பில் கப்சிப் ஆகிவிட்டான் அவன். ஆதிகேஷவனும் இதுவரை தான் எங்கு இருந்தோம்? எப்படி இங்கு வந்தோம்? என்பதை பற்றி வாயே திறக்கவில்லை. இத்தனைநாள் இழந்த தன் மனைவி, மகளின் பாசத்தை முழுமையாக அனுபவித்தார்.

அருவிக்கும் தன் அப்பாவின் வருகை தற்போது இருக்கும் மனக் காயத்திற்கு சிறு மருந்தாகித் தான் போனது. முயன்றவரை தன் அப்பாவுடன் நேரத்தை கழித்தவள், மோகனாவின் மூலம் வந்த ஒரு பட வாய்ப்பிற்காக ஆடிஷனில் கலந்துக்கொண்டு தெரிவு செய்யப்பட்டாள். அதன்பிறகு, அவளுடைய வாழ்க்கையின் பாதையே மாறித் தான் போனது.

தன்னவனின் நினைவுகள் தரும் ரணத்தை போக்க, தன் முழு கவனத்தையும் வெறியாக மாற்றி அவள் நடிப்பில் செலுத்த, அதுவோ அவளுடைய தொழிலில் அவளுக்கென ஒரு இடத்தையும், அடையாளத்தையுமே கொடுத்துவிட்டது.

முதல் படமே அத்தனை வசூல், வெற்றி!  அடுத்தடுத்தென பல பட வாய்ப்புக்கள்! ஆனால் என்ன, புகைப்பட கேமராவின் முன் புன்னகைப்பவள், நிஜ வாழ்க்கையில் அந்த புன்னகையை தொலைத்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் அப்பாவுடன் பேசும் போது மட்டுமே தன்னுடைய இறுக்கத்தன்மையை விட்டு கண்ணுக்கு எட்டாத புன்னகையுடன் பேசுபவள், எத்தனை பெரிய ஆட்களை சந்தித்தாலும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டாள். விருது பெறும் போது கூட இறுகிய முகமாக வாங்குபவள், ‘இதை நான் என்னுடைய மஹிக்கு சமர்ப்பிக்கிறேன்.’ என்று மட்டுமே சொல்லிக்கொள்வாள்.

பல பேர் பலவிதமாக அவளை தவறாக விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை அவள். ஆதிகேஷவனாலும் இதை உணர முடிந்தாலும் ஏனோ அவரால் அவளுடைய வாழ்க்கை பற்றி நேரடியாக கேட்க தான் முடியவில்லை.

தன் மனைவியிடம் மகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டவருக்கும் அவளின் நிலையை குறித்து வேதனையாக தான் இருந்தது. ஆனால், அருவி தான் தன்னிடம் கேள்வி கேட்கும் உரிமையுடன் யாரையும் நெருங்க விடவில்லையே…

ஏற்கனவே தன்னவன் செய்த காரியத்தால் சிரிப்பை தொலைத்து இறுகிப் போனவள், மேலும் நொறுங்கிப் போனாள், இரண்டு வருடங்கள் கழித்து நிகழ்ந்த தன் தந்தையின் இறப்பை தொடர்ந்து நடந்த தாயின் இறப்பால்…

இத்தனை வருடங்கள் இழந்த தன் மனைவி, மகளின் அருகாமையை இரண்டு வருடங்கள் சந்தோஷமாக அனுபவித்த ஆதிகேஷவன், இறையடி சேர்ந்துவிட, அவரின் பிரிவு தாங்காது அவர் இறந்த பத்து நாட்களிலே தன் கணவரின் ஆன்மாவுடன் கலந்துவிட்டார் மோகனா.

தாரக்கும் வேலை என்று நாடு நாடாக கடல் பயணம், விமான பயணம் என்று சென்றுவிட, தன் சந்தோஷத்தையும், துன்பத்தையும் பகிர்ந்துக்கொள்ளக் கூட ஆளில்லாது தனக்குள்ளே ஒடுங்கிப் போனாள் அருவி.

அவன் மேல் கோபம் இருந்தாலும் தன் மார்பிற்கு மேல் வரைந்திருந்த அவனுடைய முகத்தை அழிக்காதவள், அதை பார்க்கும் போது மட்டும் உண்டாகும் வலியை அடக்க, அவனின் புகைப்படத்திலே ஈட்டி எறிந்து கோபத்தை அடக்கிக் கொள்வாள். ஆனால், மறந்தும் மதுவை நாடவில்லை அக்னியின் பேச்சை மீறி…

அக்னியை விட்டு பிரிந்த அடுத்த மூன்று வருடங்கள் அவள் அவனை பார்க்கவே இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் அமையவில்லை. அவனை பற்றி தெரிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை அவள். மூன்று வருடங்கள் கழித்து லோஸ் ஏன்ஜல்ஸ்ஸில் நடந்த படப்பிடிப்பிலே அவனை கண்டவளுக்கு புதைந்திருந்த காயங்களை மீண்டும் கிளறிவிட்டது போல் இருந்தது.

‘எங்கு அவனை பார்த்தால் நானே தன்னவனை காயப்படுத்திவிடுவேன்.’ என்று ஒதுங்கி இருந்தவள், மறுபடியும் அவனுடனான சந்திப்பிற்கு பிறகு அவனை காயப்படுத்தவே சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள். அதுவும் சரியாக அமைந்தது.

ஆனால், அவனை காயப்படுத்திவிட்டு இவளுக்கு உள்ளுக்குள் வலித்தது என்னவோ உண்மை தான். கூடவே, அவனுடைய அருகாமை கிடைத்ததில் மூன்று வருடங்கள் கழித்து நிம்மதியான தூக்கத்தை தழுவினாள் அருவி.

நடந்தது அத்தனையும் நினைத்து பார்த்தவளுக்கு தான் இழந்த இழப்பின் வலிக்கு ஈடாக அவனுக்கும் வலியை கொடுக்க வேண்டும் என்று தோன்ற, தன் வேலையாளுக்கு அழைத்தவள், சில மது போத்தல்களின் பெயரை சொல்லி வாங்கி வரும்படி கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தாள்.

முதல்முறை தன் முதலாளி இப்படி கேட்டதில் அதிர்ந்தாலும், அடுத்த பத்து நிமிடங்களில் ஹோல் சோஃபாவில் அத்தனை மது போத்தல்களும் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து போதை ஏறும் வரை மூக்கு முட்ட குடித்தவள், தனக்கெதிரே தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அக்னியை ஏளனப்புன்னகையுடன் பார்த்தாள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!