அபார்ட்மெண்ட் பணிகள் முடிந்து, திறப்பு விழாவும் வெற்றிகரமாக நடத்தியாயிற்று. எதிர்பார்த்ததுபோல பிளாட்டுகள் நல்ல விற்பனையை நோக்கிச் சென்றிருக்க, திருப்தியோடிருந்தான் வேந்தன்.
அதன் தாக்கம் காரணமாக, அடுத்த கட்ட பணிகளும் வரிசை கட்டிக் காத்திருந்தது.
அதைக் காட்டிலும், எழில்வாணியின் எண்ணப் பகிர்வும், எதிர்காலம் காட்டிய ஆசையும் அவனை சிந்தித்து விரைவில் முடிவெடுக்கத் தூண்டியது.
பொது மருத்துவம் மற்றும் மனநலம் சார்ந்து பயின்றிருந்த மருத்துவ நண்பனிடம் முன்பே வாங்கிய அனுமதி நினைவில் வந்திட, சந்திக்க முடிவெடுத்துவிட்டான்.
செல்லுமுன், எதைப்பற்றியெல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதை குறிப்பு எடுத்துக் கொண்டான்.
தொழில் சார்ந்த வகையில் அவனது இயல்பு, இதிலும் அவ்வாறு எடுக்கத் தூண்டியிருந்தது.
வாணியின் எதிர்பார்ப்பு, தனது முடிவு, அதிக வயது வித்தியாசத் திருமணங்கள் தோல்வியைத்தான் தழுவும் என்கிற கருத்து எத்தனை சதவீதம் உண்மை, வாணி, வேணியின் உறவாக இருப்பதாற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமா?, இந்த வயதில் சிறந்த குடும்பத் தலைவனாக தன்னால் விளங்க இயலுமா? என மனதில் எழுந்த சிலவற்றைக் குறித்துக் கொண்டான்.
தொழில் சார்ந்த வகையினதாக இல்லாமல் சாதாரண நட்பு சார்ந்த சந்திப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இருவரும்.
வாரயிறுதி நாளில் இருவருமாக வெகுதூரம் பயணம் செய்து, வேந்தனது அந்த எளிமையான, பசுமை கொஞ்சும் இடத்திற்கு வந்திருந்தனர்.
இடத்தைப் பற்றியும், சூழலைப் பற்றியும் சிலாகித்த நண்பனோடு, நல்ல காற்றை சுவாசித்தபடியே, மாலை நேரத்திற்கு ஏதுவாக டீயோடு துவங்கினர்.
பணிக்கு அங்கு ஆட்களை நியமித்திருந்தான் வேந்தன்.
விசயத்தை நண்பனிடம் பகிர்ந்து கொண்டு, வயது வித்தியாசத்தை முக்கிய கருத்தாக வேந்தன் முன்வைத்திருந்தான். அத்தோடு தனது இதே வினாவிற்கு, வாணி தன்னைச் சமாளிக்கக் கூறியிருந்ததையும் பேச்சோடு பகிர்ந்து கொண்டிருந்தான் வேந்தன்.
“நீ பேசணும்னு சொன்னதும் உன்னோட பிஸினெஸ் ரிலேட்டடா ஏதோ ஸ்ட்ரெஸ்னு நினைச்சிட்டேன் வேந்தா. பட் இந்த விசயம் நிச்சயமா எதிர்பார்க்கலை!”, என பகிர்ந்து கொண்ட மருத்துவன், “கன்கிராட்ஸ் வேந்தா”, என தோள் தழுவி தனது வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டான்.
பிறகு சற்று நேரம் நிதானமாக திருமணம் செய்து கொள்ளாமல் நாள் கடத்தியமைக்கான காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்டவன், “எங்கிட்ட ஃப்ரீய சொன்னாதான், உன்னோட பிராப்ளத்துக்கு கரெக்ட்டான சொலியூசன் சொல்ல முடியும், அதனாலதான் கேட்டேன்”, என்றவன், “இப்ப நீ என்னோட பிரெண்ட் அப்டிங்கற நிலையில வச்சு உனக்கு ரெமிடி சொல்லலை. என்னோட பேசண்ட்கு எப்டிச் சொல்வேனோ அப்டிச் சொல்லப் போறேன்”, எனும் பீடிகையோடு துவங்கியிருந்தான்.
“பொண்ணுங்க எந்த வயசானாலும் அவங்களோட ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் இதெல்லாம் அவங்க வளர்ந்த முறையில மாறுபட்டு அளவு கூடவோ, அல்லது குறைவாகவோ இருக்கும். மெச்சுர்டா ஒரு சிலர் பிகேவ் பண்ணுவாங்க. சிலர் ரொம்ப பொசசிவ்வா இருப்பாங்க. அதனால அதையெல்லாம் வாழத் துவங்கின பின்னாடிதான் தெரிஞ்சிக்க முடியும்”
“பொண்ணே அவங்க முழு மனசோட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருந்தா, வயசுங்கறது ஒரு பிரச்சனை இல்லை. எந்தப் பொண்ணாக இருந்தாலும், அவங்க எதிர்பார்ப்பு நிறைவேறிருச்சுனா, அவங்க திருப்தியாகி நல்லா ஃபேமிலிய லீட் பண்ணுவாங்க. எதாவது மனசுல சின்ன குறைனாலும் நை, நைனுதான் இருப்பாங்க.
முக்கியமா அவங்க மனசுல இருக்கறதை ஒரு சிலர் நேரில சொல்லி, என்னோட எதிர்பார்ப்பு இப்டியெல்லாம்னு பகிர்ந்திட்டா நிறைய பிரச்சனைகள் வராது.
நிதர்சனம் புரிஞ்சு, ஆண்களுக்கு வெளியில எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள், இன்னும் பல விசயங்களைப் பற்றி யோசிச்சிட்டாங்கன்னா பிரச்சனைகள் குறைவு.
இதுல வயசுங்கறது அவங்க சொன்ன மாதிரி ஒரு மேட்டர் இல்ல.
எல்லா வயசுல இருக்கறவங்களுக்கும், ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருந்திட்டேதான் இருக்கும்.
தீனி சரியா போடத் தெரிஞ்சவனுக்கு, நோ இஸ்யூஸ். இல்லனா மண்டைக் குடைச்சல்தான்”, என சிரிப்போடு நீண்ட விளக்கத்தைத் தந்திருந்தான் அந்த மருத்துவ நண்பன்.
அடுத்ததாக, தனது அக்கா மகளுக்கும், தனக்கும் இடையே பதினோரு வருடங்கள் வித்தியாசத்தில் திருமணப் பேச்சை எடுத்தபோது, அக்காவின் பெண் தனது சகோதரியிடம் பகிர்ந்து கொண்ட விசயத்தையும் வேந்தன் பகிர்ந்து கொண்டு, தனது தயக்கத்திற்கான காரணத்தைக் கூறினான்.
“ஒரு ஆண் ஒரு பெண்ணை திருப்திபடுத்தறதுக்கு, அவன் ஆரோக்கியமானவனா மட்டும் இருந்தா போதும். பதினேழு பதினெட்டு வயசுலயே கெட்டுப் போயி, மொத்த எனர்ஜியும வாஷ் அவுட் பண்ணிட்டு, இருபத்தஞ்சு வயசுல கல்யாணம் ஆகி அந்தப் பொண்ணை சந்தோசப்படுத்த முடியாம டிவோர்ஸ்னு வர கேசு ஏராளமா இருக்கு. அந்தக் கேசுல என்ன மருந்து மாத்திரை சாப்பிட்டு நல்லா சாப்பாடு எடுத்திட்டாலும் அவனைச் சரி பண்ணவே முடியாது. அந்தளவு மோசமா இருப்பான். ஆனா வெளியில பாக்கும்போது செம ஹேண்ட்சம்மா இருப்பான்.
யாரு அவனைப் பத்திச் சொன்னாலும் நம்ப முடியாதளவு ஃபிட்டா தெரியும்.
அந்த அவுட்லுக் பாத்துட்டுத்தான் வந்து பொண்ணுங்க விழறது. ஆனா வாழ ஆரம்பிச்ச பின்னதான், அவனுக்கு என்ன முடியும்னு தெரிய வரும். அப்ப நிறைய பிரச்சனை வந்திரும்.
இன்னொரு பிரச்சனை என்னனா, எழுபது வயசுல இருக்கற ஆணோட எதிர்பார்ப்பை, அறுபது வயசில உள்ள அவரோட மனைவியால ஒத்துழைக்க முடியாம, கணவரோட சண்டை போடற பெண்களும் இருக்காங்க. ஏன்னா பெண்களுக்கு பெரும்பாலும் மெனோபாஸ்கு பின்ன செக்சுவல் ஃபீல் குறைஞ்சு போறதும் ஒரு காரணம்.
இதுவே ஜென்ட்ஸ்கு அப்டி இடையில பிரச்சனைகள் வரது குறைவு. சுகர் மாதிரி இஸ்யூஸ்ல கொஞ்சம் டல்லாக வாய்ப்பிருக்கும். மற்றபடி ஹெல்தி பர்சன் லைப் லாங்க் ஒரே மாதிரி இருந்துட்டுப் போவாங்க”, என்றவன்
“அக்கா பொண்ணுக்கு யாரோ அப்டி தப்பா விசயத்தைப் பகிர்ந்திருக்கலாம். அதையே மனசுல வச்சு உங்க அக்காகிட்ட அந்தப் பொண்ணு இப்டி ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்திருக்கலாம்”, என்றிருந்தான் மருத்துவன்.
ஒரே சாயலில் வேணி, வாணி இருப்பதை எண்ணி, ஆரம்பத்தில் தான் தயங்கியதைப் பற்றி கேட்க நினைத்து பிறகு வேந்தனே அதை தவிர்த்திருந்தான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், “படிப்பு முடியட்டும். அதுக்கப்புறமும் அதே முடிவோட வாணி இருந்தா மேற்கொண்டு பாத்துக்கலாம்”, என தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ள
பிறகு பழைய கதைகள் சற்று நேரம் பேசிவிட்டு சென்னையை நோக்கித் திரும்பியிருந்தனர் நண்பர்கள்.
………………
வாணிக்கு, இரண்டாம் பருவத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது.
தேர்வுகள் நடந்ததாலும், வாணியிடம் தனிமையில் பேச சந்தர்ப்பம் எதுவும் அமையாததாலும், எதிர்காலம் பற்றிய பேச்சுக்களை ஒத்தி வைத்திருந்தான் வேந்தன்.
பெண்ணும் எதாவது தன்னிடம் பேசுவாள், அதைத் தொடர்ந்து விசயத்தைக் கூறலாம் என எண்ணியவனுக்கு, பெண் தான் உண்டு, தன் படிப்பு என இருக்க, தானாகச் சென்று பேச தயக்கம் வேறு வேந்தனுக்கு.
கோடைகால சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்வதை அறிந்து, வேந்தனிடம், “இந்த வருசம் நம்ம வாணியையும் கூட்டிட்டுப் போகலாம்ல”, அனுசியா
வாணியை வீட்டோடு அழைத்து வந்தவிட்டபின், இனி வேந்தனை நம்புவதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் மீனா.
அனுசியாவும் தனக்காக யோசிக்கவில்லை என்பது திண்ணம்.
தனது மற்ற சகோதரர்கள் வாயிலாக பிரச்சனையை கிளப்ப எண்ண, “அவனை வச்சுத்தான் ஏதோ எங்க வண்டி பிரச்சனை இல்லாம ஓடுது. உனக்காக எதாவது வாயைக் குடுத்து பிரச்சனையாச்சுன்னா எங்களுக்குத்தான் நஷ்டம்”, என்றிருந்தனர்.
அத்தோடு மனது விட்டுப்போன மீனா புலம்பலோடு, வேறு இடம் பார்த்திருந்தார்.
மீனாட்சியின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திருமண நாளும் வந்திருந்தது.
பாட்டி உறவுமுறைக்கு முந்திய தினமே மீனாவின் வீட்டிற்கு அனுசியா செல்ல வேண்டிய நிலை.
வாணியை வற்புறுத்தி அழைத்தும் அசையவில்லை பெண்.
ஞாயிறன்றுதான் திருமணம். மண்டபத்தில்தான் திருமணம். வாணிக்கு அங்கு செல்ல விருப்பமில்லை.
அதற்கும் காரணம் இருந்தது. மித்ரா ஒரு முறை வாணியைச் சந்தித்து விசயத்தைப் போட்டு வாங்க எத்தனிக்க வாயைத் திறக்கவில்லை வாணி.
“எனக்கும் மாமாவுக்குமே பதினோரு வயசு வித்தியாசம். நானே அவரால என்னை நல்லா வச்சுக்க முடியாதுன்னு வேணானுட்டேன். என்னைவிட ரொம்பச் சின்னவ நீயி. இப்பவே சுதாரிச்சுக்கோ. இல்லைனா காலம் ஃபுல்லா கஷ்டந்தான்”, என இலவசமாக அறிவுரை வேறு வழங்கியிருந்தாள்.
மித்ரா மறுத்த விசயம் அப்போதுதான் வாணிக்கு தெரிய வந்தது.
ஆனாலும் மித்ரா கூறிய காரணம் வாணியைச் சிரிக்கத் தூண்டியது.
பெண்ணிற்குள் இருந்த பக்குவம் அது.
‘போடீ. பெருசா பேச வந்துட்டா. ஒரு மனுசனை ஒழுங்கா ஸ்டெடி பண்ணத் துப்பில்ல. பெரிய அட்வைஸ் அம்புஜம்னு நினப்பு. எனக்கு எம்மாமூவே போதும்’, என மனதோடு எண்ணியபடி கடந்திருந்தாள்.
அது மட்டும் காரணம் அல்ல. மீனாவும் வாணியை முறைப்போடேதான் இதுவரை கடப்பார். அதனால் தவிர்த்திருந்தாள்.
பதினோரு மணிக்குமேல் வேந்தனிடம் வந்த அனுசியா, “கல்யாணத்துக்கு கூப்பிட்டேன் வரலன்னு சாதிச்சிருச்சு. தனியா அவளுக்குன்னு எதுவும் செய்து சாப்பிட மாட்டாடா அவ. புள்ளைக்கு மதியம் எதாவது சாப்பாடு மறக்காம வாங்கிக் குடுத்துரு”, என வேந்தனிடம் கூற
நீண்ட நாளுக்குப்பின் கிடைத்த தனிமையை, எதிர்பார்ப்போடு எதிர்கொள்ள மனமெங்கும் மத்தாப்பூ சிதற வீட்டை நோக்கிக் கிளம்பியிருந்தான்.
அவனுமே திருமண வீட்டில் உண்ணவில்லை.
அனுசியா கூறியதுபோல, எதுவும் சமைக்காமல், தலைக்கு குளித்து, முடியைக் காயவிட்டபடியே புத்தகத்தோடு இருந்தாள்.
நீண்ட கூந்தலுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்ளத் தூண்டிய ஆவலைக் கட்டுப்படுத்தியபடி உள்ளே வந்திருந்தான்.
“தாலி கட்டு முடிஞ்சதும் வெளில வேலன்னு வந்தேன். இப்பதான் வேல முடிஞ்சது. அத்தோட திரும்ப அவ்ளோ தூரம் போகறதுக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்”, என
“அய்யோ அப்ப நீங்க இன்னும் சாப்பிடலையா?”
“இல்லை”
“அப்ப ஒரு ஹாஃப் அன் ஆர் வயிட் பண்ணுங்க”, என்றபடி, உயர்த்திப் போட்ட கொண்டையுடன் அடுக்களையை நோக்கி அக்கறையோடு நுழைந்தவளைக் கண்டவனுக்குள் அத்தனை சந்தோசம்.
அருகருகே தனது சகோதரர்கள் வீட்டிலெல்லாம் இப்டியல்ல என அவ்வப்போது அனுசியா புலம்பக் கேட்டிருக்கிறான்.
சில நாள்களில், சகோதரர்கள் இங்கு வந்து உண்டுவிட்டு கிளம்பியதும், “இந்தக் காலத்துல உள்ள பொம்பளைங்களுக்கு ஒரு வேளைச் சாப்பாடு சந்தோசமா புருசனுக்கு ஆக்கிப் போடக் கசக்குது. என்னத்தைச் சொல்ற மாதிரி இருக்கு. ஏதோ சர்வீஸ்னு போயிட்டு, வீட்ல இருக்கறவனை பட்டினி போட்றதுதான் இவளுங்க கத்து வச்சிருக்கிற விசயமா இருக்கு”, என புலம்புவார்.
“சரி விடுங்கம்மா. அதுக்கு நீங்க எதாவது சொல்லப் போக, அங்க அண்ணி அண்ணனை எதாவது சொல்லும். அப்புறம் எதாவது அவங்களுக்குள்ள சண்டைனு வந்து உங்ககிட்டத்தான் புலம்பும் அண்ணன்”, என வேந்தனும் கடந்த நாள்கள் பல உண்டு.
ஆனால் தான் பசி என்றதும், எதுவும் கூறாமல் அடுக்களைக்குள் நுழைந்தவளை எண்ணி, தனக்கு அன்னப்பூரணியே மனைவியாகப் போகிறாள் எனும் இறுமாப்போடு, பெண்ணுக்கு உதவி செய்கிறேன் என அடுக்களைக்குள் நுழைந்தான்.
வாணி எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை வேந்தன்.
இருவருமாக பருப்பு சாதம், கத்தரிக்காய் புளிக்கறி, ஊறுகாய் என அரைமணி நேரத்தில் செய்து முடித்து, உண்ண அமர்ந்திருந்தனர்.
ஆனாலும் பெண்ணிடம் தானாகத் துவங்க தங்களது விசயத்தைப் பற்றிப் பேச ஏதோ தயக்கம்.
கிடைத்த சந்தர்ப்பத்தை அனுபவித்தபடியே உண்டு முடித்தான் வேந்தன்.
வாணி, முன்புபோல தன்னிடம் நீண்ட நாளாகப் பேசாததும் நினைவு வந்திட, ஏனோ அதை எண்ணி யோசனையும் வந்தது.
‘முன்னல்லாம் அப்பப்போ வந்து கார்னர் பண்ணுவா. இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்டாளே’ என்பதாக இருந்தது.
வாணியோடு ஏதோ பேசியவாறு உண்டு முடித்ததும், அடுக்களைப் பகுதிக்குள் சென்று, பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, அனைத்தையும் தூய்மை செய்துவிட்டு பழையபடி புத்தகத்தைப் படிக்கத் துவங்கிட அமர, எதாவது பேசியே ஆகவேண்டும் என்கிற உந்துதலில் புத்தக வாசிப்பைப் பற்றிப் பேச்சைத் துவங்கினான் வேந்தன்.
அவளது தனிமையைப் போக்கிய புத்தகங்களை பெரிதாக நேசிப்பதை வாணியின் வாயிலாக அறிந்து கொண்டவன், பெண்ணை தனது தளத்திற்கு அழைத்துச் சென்று தன்னிடம் உள்ள கலெக்சனைக் காட்ட எண்ணி அழைக்க, வாணி தயங்கினாள்.
“இருக்கட்டும் மாமா, இன்னொரு நாள் பாக்கறேன்”, என தவிர்த்திருந்தாள் பெண்.
“ஏன் இன்னிக்கு நல்ல நாள் இல்லையா?”
“அப்டிச் சொல்லலை”, என இழுத்தவளிடம், தனது அறைச்சாவியைக் கையில் தந்து, “நான் வெளியே போறேன். பயப்படாம மேல போயி பாரு”, என்றபடி கிளம்பியவனைப் புரியாமல் திகைப்போடு பார்த்திருந்தாள்.
‘என்னாச்சு திடீர்னு!’, என்று தோன்ற,
பெண்ணது தயக்கம் வேந்தனுக்குள் காயத்தை உண்டு செய்திட, அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியாமல் வெளியில் கிளம்பியிருந்தான்.
பெண்ணுக்கும், தனது தயக்கம், வேந்தனை சந்தேகித்ததாக எண்ணச் செய்ததை சற்று நேரத்தில் யூகித்தவள், அவனது அறைக்குச் செல்லாமலேயே அவனுக்காக காத்திருந்தாள்.