தீங்கனியோ தீஞ்சுவையோ- 12
தீங்கனியோ தீஞ்சுவையோ- 12
சுவரோரம் வீற்று இருந்த தன் தாயின் புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உத்ரா. அவளருகே வந்து ப்ரணவ் அமர்ந்தான். திரும்பி பார்க்காமலே அவன் தோளில் சாய்ந்தவளது கண்களோ அவளது அன்னையின் புகைப்படத்தையே வெறித்து கொண்டு இருந்தது.
“அம்மு ” என்றான் மென்மையாக.
“ஏன் ப்ரணவ் அம்மா என்னை விட்டுட்டு போனாங்க” என்று அவனுக்கு விடை தெரியாத கேள்வியை கேட்டாள்.
“தெரியலை அம்மு.. மீனு ஏன் இப்படி நம்மளை வீட்டு போனானு… ” என்றவனது குரலிலோ கண்ணீர் தடம்.
அவனது கண்ணீரை உணர்ந்தவள் பதறிப் போய் திரும்பினாள்.
“அழாதே டா.. ” என்று தன் மனமே சமாதானம் இல்லாமல் துடித்து கொண்டு இருந்த நிலையிலும் அவனுக்கு சமாதானம் சொன்னாள். அவளை அவன் இறுக கட்டிக் கொண்டான்.
“அம்மு வா டி… நம்ம வீட்டுக்கு போயிடலாம்… இங்கே தனியா இருக்காதே வா” என்று சொல்லிய அவனையே திகைத்துப் பார்த்தாள்.
“டேய் நமக்கு கல்யாணம் ஆகாம எப்படிடா அங்கே வர முடியும் ” என்று அவள் கேட்க
“அப்ப வா இப்பவே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்லி அவளது கையைப் பற்றி எழுப்பினான்.
மென்சிரிப்புடன் அவன் கழுத்தில் கைகளை கட்டிக் கொண்டவள் காதில் ரகசியமாக
“அப்போ ஐயர், மாலை, கோவில், சொந்தம் எதுவும் இல்லாம கல்யாணம் பண்ணிக்க போறியாடா?” என்றவள் சிரிப்புடன் கேட்க ஆம் என்று அவன் தலையசைத்தான்.
“என் செல்ல ப்ரணவ்” என்று சொல்லி அவன் நெற்றியினில் முத்தமிட்டவள் சட்டென்று விலகினாள்.
“ஆமாம் நான் தான் உன் மேலே கோவமா இருக்கேன் இல்லை.. இப்போ ஏன் உன்னை கிஸ் பண்ணேன்.. ” என்று தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நின்றவளை மேலும் மேலும் காதலிப்பதை தவிர்த்து அவனுக்கு வேறு வழியில்லை.
செல்ல சிரிப்புடன் அவளருகில் சென்றவன் மெல்லமாக நெற்றியில் முட்டி
“என் அம்முவுக்கு என்ன கோபமாம் ” என்றான்.
“ஏன் டா என்னை அவாய்ட் பண்ண? சொல்லு டா. உனக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா? இவள் எங்கே என்னை விட்டு போயிட போறான்ற நினைப்புல தானே என்னை அப்படியே கண்டுக்காம போயிட்டே. “
“ஐயோ இல்லை அம்மு. ஒரு பெரிய project ல மாட்டிக்கிட்டேன் டி.. அதை முடிச்சு குடுத்தா நம்ம future ஐ safety ஆ மாத்திடலாம்னு நினைச்சு present ல உன்னை கவனிக்காம விட்டுட்டேன் சாரி. உன் கிட்டே explain பண்ண கூட எனக்கு நேரம் கிடைக்கல டி. ஐ யம் ரியலி சாரி டி.” என்றவனை கோபமாய் பார்த்தாள்.
“அடுத்து என்ன ஆகும்னு நிச்சயம் இல்லாத வாழ்க்கை ப்ரணவ்… எதிர்காலத்தை சந்தோஷமா வெச்சுக்குறதுக்காக நிகழ்காலத்தை இழக்கக்கூடாது. i don’t want your money i just need ut time man. ப்ளீஸ் எனக்கு உன் நேரத்தை மட்டும் கொடு. ” என்று அவனது கைகளில் அவள் பரிசாக கொடுத்த அந்த கடிகாரத்தை காண்பித்து சொன்னாள். சிரிப்புடன் அவளை கட்டிக் கொண்டான்.
“இனி இந்த ப்ரணவ்வும் அவனோட நேரமும் உன்னோடது மட்டும் தான் டி.. என் அம்மு ” என்றவனது குரலிலோ பல நாட்கள் கழித்து சந்தோஷத்தின் தடம்.
“டேய் ப்ரணவ்” என்ற குரலோட உள்ளே நுழைந்தார் அவனின் தாய் கல்யாணி.
“என்ன மா? நாள் பார்த்துட்டியா? எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்? ” என்றான் அவசர அவசரமாக.
“டேய் இப்போதைக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணக்கூடாதுனு ஜோசியர் சொல்றாரு. இன்னும் மூனு மாசம் ஆகட்டும்னு சொல்றாரு டா.. ”
“அம்மா அந்த ஜாதகத்தை தூக்கி குப்பையிலே போடு.. மனசு பொருத்தம் சரியா இருக்கும் போது எதுக்கு நட்சத்திர பொருத்தம்? இவளை இப்படியே இந்த வீட்டுலயே தனியா விட்டுட்டு வர சொல்றியா? என்னாலே முடியாது மா.”
“இல்லைடா என் மருமகளை எப்படி நான் தனியா விட்டுடுவேன்..உத்ராவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்… கல்யாணம் மட்டும் கொஞ்ச நாள் கழிச்சு வெச்சுக்கலாம் சரியா? என அவர் கேட்க இவன் திரும்பி உத்ராவைப் பார்த்தான். அவள் சரியென்று தலையாட்ட
“சரி மா.. நீ சொன்னபடியே செய்யலாம்… ஹேய் உத்ரா மசமசனு நிக்காம சீக்கிரமா எல்லாத்தையும் எடுத்து வை.. வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அரக்க பறக்க அவளை கிளம்ப வைத்தான்.
இவளை இப்படியே இங்கேயே விட்டுவிட்டு போனால் கண்டிப்பாக அவளின் தாய் நினைவால் வருந்துவாள் என்று அவனுக்கு தெரியும் ஆதலால் அவளை கையோடே அவன் வீட்டிற்கு அழைத்து போனான்.
அவளுக்கான அறையை தயார்ப்படுத்திவிட்டு அவள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு மீனாட்சி உடைய போட்டாவை சுவற்றில் மாட்டிவிட்டு திரும்பும் போது வாயிலின் மீது தன்னை சாய்த்துக்கொண்டு கைகளை கட்டியபடி உதடுகளில் சிரிப்புடன் இருந்த அவளை கண்டான். இவன் என்ன என்று தலையசைத்து கேட்க அவளோ
” ஐ லவ் யூ ” என்றாள் பதிலாக.
இவன் பதிலுக்கு காதலை வார்த்தையால் சொல்லாமல் அணைப்பால் வெளிப்படுத்தினான். அவளை கட்டிலில் அமரவைத்துவிட்டு சாப்பாட்டை எடுத்து கொண்டு வந்தவன் அவளுக்கு ஊட்டிவிட்டான். அவன் அன்னை கையில் தண்ணீரோடு சாப்பிடும் அவளது தலையை கோதிக் கொண்டு இருந்தார்.
“மருமகளே.. எந்தவித தயக்கமும் இல்லாம இந்த வீட்டுல இருக்கனும் சரியா??..” என்று அவர் கேட்க அவள் சிரிப்புடன் தலையாட்டினாள்.
“அம்மு.. குட் நைட்.. ஒழுங்கா படுத்து தூங்கு” என்று சொல்லியபடி சாப்பிட்ட அவளது வாயைத் துடைத்துவிட்டு கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தினான். அவனை இப்போது தன் அன்னையாக தான் பார்க்க தோன்றியது அவளுக்கு. சிரிப்புடன் சரி என்று தலையசைத்து படுத்தாள்.
ஆனால் படுத்தவளது கண்களையோ உறக்கம் வந்து தழுவவில்லை. கண்ணை மூடினால் அன்னையின் நினைப்பு. அவர் விட்டு விட்டு போன இந்த வெறுமையை தாங்க இயலாது கண்ணீர் வடித்தாள்.
“ஏன் அம்மா என்னை விட்டுட்டு போன? நான் சொன்ன அந்த விஷயத்தை கேட்டு தானே நீ அதிர்ச்சியிலே என்னை விட்டு போன? நான் பாவி தான் மா.. உன்னையும் கொன்னேன்.. வினய்யோட மனசையும் கொன்னேன்…” என்று தேம்பி தேம்பி அழுதவளின் தலையை ஆதரவாய் ஒரு கரம் வருடியது.
“ப்ரணவ் ” என்று அழைத்தபடி அவனது மடியில் படுத்துக் கொண்டாள்.
“அம்மு அழாம தூங்கணும்னு தானே சொன்னேன்.. எனக்கு தெரியும் நீ அழுவேனு.. அதான் வந்தேன்… ப்ளீஸ் என் செல்லம்ல கண்ணை மூடி தூங்கு டா” என்று கெஞ்சினான்.
“இல்லை ப்ரணவ்.. நான் ஏன் இவ்வளவு கெட்டவளா இருக்கேன்.. எல்லார் மனசையும் காயப்படுத்துறேன்.. ஆனால் பதிலுக்கு எல்லாரும் என் மேலே அன்பை தான் காட்டுறாங்க.. எனக்கு அதுவே குற்ற உணர்ச்சியா இருக்கு ப்ரணவ்.. நான் கெட்டவள்.. ” என்று அவள் புலம்பி கொண்டு இருக்க அவன் பதிலுக்கு எதுவும் ஆறுதலாக சொல்லவில்லை.
அழட்டும் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என்று அமைதியாக இருந்தான். மொத்தமாக எல்லாவற்றையும் புலம்பி கொட்டுவிட்டு ஆழ்ந்த நித்திரைக்கு சென்றவளின் நெற்றியின் முத்தம் பதித்து எழுந்து கொண்ட போது அவளுடைய அலைபேசி ஒளிர்ந்தது.
வினய் தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.. குட் நைட் என்று.
“அவள் தூங்கிட்டா வினய்.. நான் ப்ரணவ் பேசுறேன்.. குட் நைட்” என சொல்ல வினய்யிடம் இருந்து ஸ்மைலி வந்து இருந்தது.
“நாளைக்கு நம்ம மூணு பேரும் வெளியே போலாமா??… உத்ரா மனசுக்கு ஒரு change கிடைக்கும் ” என்று ப்ரணவ் அனுப்பிவிட்டு அவனது பதிலுக்கு காத்து இருந்தான்.
“ஓகே கண்டிப்பா போகலாம் நண்பா” என வினய்யிடம் இருந்து வந்த பதில் குறுஞ்செய்தியை பார்த்து பதிலுக்கு ப்ரணவ் புன்னகைத்தான்.
💐💐💐💐💐💐💐💐💐💐
” டேய் ப்ரணவ்.. இந்த ear ring நல்லா இருக்கா??” இல்லை இது நல்லா இருக்கா??” என ஒரே டிசைனில் இருந்த அந்த காதணிகளை அவள் காண்பிக்க ப்ரணவ் குழம்பி போனான்.
இரண்டும் ஒரே டிசைனில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே கலரில் இருக்கிறது. இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்க அவன் எந்த காதணி என்று சொல்லுவான். சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“எனக்கு ரெண்டும் ஒரே கலர்ல தான்டி தெரியுது.”
“லூசு லூசு.. இந்த ear ring பேபி பிங்க்.. இது டார்க் பிங்க்.. நான் போட்டு இருக்கிற ட்ரஸ் லைட் பிங்க்… அதான் கேக்கிறேன்.. டார்க் பிங்க் ear ring போட்டா சரியா இருக்குமா? இல்லை பேபி பிங்க் ear ring போட்டா என் dress க்கு சரியா இருக்குமா?”
“எனக்கு இப்பவும் இரண்டும் பிங்க் கலரா தான்டி தெரியுது… ” என்று கண்களை கசக்கியபடி மீண்டும் காதணிகளை உறுத்துப் பார்த்தபடி சொன்னான்.
“ச்ச்சீ பே.. உன் கிட்டே போய் கேட்டேன் பாரு… ஒரு கலரை கூட பார்த்து ஒழுங்கா சொல்ல தெரியல.. உன்னை எல்லாம் வாழ்க்கை முழுக்க வெச்சு எப்படி குப்பை கொட்ட போறேனோ?”
“எனக்கு கலர் தெரியாததுக்கும் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன டி சம்பந்தம்?? ஏன் டி எனக்கு ரெண்டு கலரும் ஒரே கலரா தெரிஞ்சது ஒரு குத்தமா டி… “
“ஆமாம் குத்தம் தான்.. ear ring கலர்க்கே இப்படி குழம்புனா? saree எடுக்க உன்னை கூட்டிட்டு போனா அங்கே இருக்கிற எல்லா color shade அ யும் பார்த்து எப்படி குழம்புவ? பேசாம வா ப்ரணவ் அப்படியே இன்னைக்கு eye doctor கிட்டே போய் உன் கண்ணையும் செக் பண்ணி பார்த்துடுவோம். ”
“அம்மா பரதேவதை.. போதும் தாயே.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமா என் உசுரை வாங்கிட்டு இருக்கே.. உனக்கு கொஞ்சம் கூட என் மேலே இரக்கம் தோணலயா டி? nail polish ல ஆரம்பிச்சு dress, chain, கம்மல் வரை இப்படி ரெண்டு ரெண்டா காட்டி ஒன்னை choose பண்ண சொல்லி கொல்றியேடி.. முடியல.. ”
“ப்ரணவ் என்ன இதுக்கே இப்படி சலிச்சுக்கிற? கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் எவ்வளவு மிதி அடி வாங்க வேண்டி இருக்கு. சரி சரி கண்ணை துடைச்சுக்கிட்டு வா. அங்கே வினய் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருப்பான். நம்ம போகலாம்.. ” என்று சொன்னவளை ஏற்றிக் கொண்டு பைக்கை கிளப்பினான்..
அவன் பின்னே பைக்கில் அமர்ந்து கொண்டு வந்தவள் பறக்கும் தன் கூந்தலை சரி செய்தபடியே அங்கே இருந்த கடையை ஏதேச்சையாக பார்த்தாள்.. அங்கே ஒரு லாவண்டர் உடை அவளது கருத்தை நிறைக்க அவனிடம் சொல்ல திரும்பினாள்.
“டேய் டேய் அந்த லாவண்டர் கலர் ட்ரெஸ் செமயா இருக்கு டா.. பாரேன்”
“என்ன சொல்ற உத்ரா? எனக்கு எதுவும் கேட்கல. எதிர் காத்து ரொம்ப அடிக்குது. கொஞ்சம் கிட்டே வந்து சொல்லு”
“அந்த கடையில இருக்கிற லாவண்டர் கலர் டிரெஸ் நல்லா இருக்குனு சொன்னேன் டா.. ” என்று அவனை மேலும் கட்டிக் கொண்டு காதோரம் வந்து சொன்னாள்.
“ஹே கேட்கலடி இன்னும் கிட்டே வந்து சொல்லு… ”
“அட செவுட்டு முண்டமே.. அந்த ட்ரெஸ் நல்லா இருக்குனு சொன்னேன்… அந்த கடையை தாண்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்துட்டோம் டா.. இனி உன் காதுக்கு கேட்டா என்ன?? இல்லை கேட்கலனா என்ன?? ” என்று கவுண்டமனி பாணியில் காது கிழிய கத்தினாள்.
ஆனால் அந்த கள்வனோ மௌனமாய் சிரித்து கொண்டான்.. அவனுக்கு முன்பே அவள் சொன்னது கேட்டுவிட்டது ஆனாலும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து இருக்கும் அவளை நெருங்கி வர வைக்க தான் கேட்கவில்லை கேட்கவில்லை என்று பொய் சொன்னான். அவளை தன்னோடு நெருங்கி வர செய்த எதிர்காற்றுக்கு நன்றி சொல்லியபடி புன்னகையுடன் வண்டியை ஓட்டினான்.
அவனை நெருங்கியவளுக்கு விலகவே தோன்றவில்லை போல அவனது முதுகோடு ஒட்டிக் கொண்டு கைகளை அவனது மார்பில் கட்டி கொண்டு கண்களை மூடிக் கொண்டு அந்த பயணத்தை ஆத்மார்த்தமாய் ரசித்தாள்.
“அம்மு.. ”
“ம்ம்ம்” என்றாள் மயக்கத்தில் இருந்து வெளிவராதவளாக. புன்னகையுடன் தன் மார்பில் கட்டி இருந்த அவளது தளிர்விரலை தன் கைகளால் வருடியவன்
“செல்லம் நம்ம இறங்க போற இடம் வந்துடுச்சா டா”
“அதுக்கு… ”
“இல்லை நம்மள இப்படி பார்த்தா வினய் சங்கடப்படுவான்ல சோ ” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே தன் மயக்கத்தில் இருந்து வெளி வந்தவள் அவசர அவசரமாக அவனிடம் இருந்து விலகினாள்.
” யூ ஆர் சோ ஸ்வீட் ப்ரணவ் ” என்றாள் அந்த ஸ்வீட்டை விட இனிப்பாக.
பின்னே எந்த காதலனாவது தன் காதலியின் உணர்வுக்கும் அவளது நட்புக்கும் இந்த அளவுக்கு மதிப்பு தருவானா? தன் காதலியிடம் காதல் சொன்னவனை எந்த காதலனாவது தன் நண்பனாகவும் ஏற்றுக் கொள்வானா? அவனின் மனம் வருந்துமே என்று எவனாவது யோசிப்பானா? யாரும் அப்படி யோசிக்க மாட்டார்களே. ஆனால் என் ப்ரணவ் யோசிக்கிறான். தன் காதலன் தன் மீது காதல் மட்டும் செலுத்தவில்லை. தன் உணர்வுகள் மீது மரியாதையும் செலுத்துகிறான். தன்னை மதிக்கவும் செய்கிறான். கர்வப் புன்னகையில்
இதழ்கள் மிளிர பைக்கில் இருந்து கீழே இறங்கினாள்.
எதிரில் நின்று கொண்டு இருந்த வினய்யை கண்டதும் இன்னும் அந்த புன்னகை விரிந்தது.
“ஹே ஜெர்ரி வந்து ரொம்ப நேரம் ஆச்சா? சாரி டா.. இந்த ப்ரணவ்வால தான் லேட் ஆகிடுச்சு.” என்று உத்ரா சொல்ல ப்ரணவ் பொய்யாய் முறைத்தான்.
“யாரால லேட் ஆகி இருக்கும் னு எனக்கு நல்லா தெரியும் டாம்… “என்று வினய் சொல்ல
“வினய் என்ன டா நீ ப்ரணவ்க்கு சப்போர்ட் பண்ற.. நீ எப்பவும் எனக்கு மட்டும் தான்டா ப்ரெண்ட்… ”
” யாரு சொன்னா.. இப்போ நானும் வினய்யும் தான் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்.. அப்படி தானே நண்பா.. ” என ப்ரணவ் வினய்யை நோக்கி கேட்க அவனோ
“ஆமாம் நண்பா ” என சொல்லி அவனை தோளோடு அணைத்தான்…
” ஓய் என்ன நடக்குது இங்கே… நான் தான் first ப்ரெண்ட் அவனுக்கு… அதுக்கு அப்புறம் தான் நீ புரியுதா ப்ரணவ் ” என்று அவள் சொல்ல சிரித்துக் கொண்டே வினய் அவளைப் பார்த்தான்.
தன்னை காதலனாக தான் கொண்டாடவில்லை. ஆனால் நண்பனாக அவள் என்னை கொண்டாட சிறிதும் தவறவில்லை. அவள் நட்பு முழுக்க முழுக்க எனக்கே ஆனது. சிரிப்பில் அவன் இதழ்கள் மிளிர்ந்தது.
மூன்று பேரும் பேசி சிரித்தபடியே நடந்து கொண்டு இருந்தனர் அந்த கடற்கரை காற்றில்.
அந்த மெரினா கடற்கரையை பிரிக்கும் குறுகலான சிறிய மேடின் மீது உத்ரா நடந்து கொண்டு இருந்தாள்.
அந்த மேட்டிற்கு இந்த பக்கம் சாலை. அந்த பக்கம் கடற்கரை. நடுவில் சிறியதாய் இரண்டையும் பிரிக்கும் நீளமான ஆனால் குறுகலான குட்டி மேடு.
அந்த மேட்டில் இரண்டு கைகளையும் விரித்து கயிற்றில் நடப்பவள் போல் பத்திரமாக நடந்து கொண்டு இருந்தாள் உத்ரா.
“உத்ரா வேணாம் டி.. கீழே இறங்கு.. பேலன்ஸ் இல்லாம விழுந்துடுவ” என இந்த பக்கம் இருந்த ப்ரணவ் சொல்ல அவளுக்கு அந்த பக்கம் இருந்த வினய்யும் அதே தான் சொன்னான்.
“இறங்கு டாம்.. எதுக்கு இப்படி கயித்து மேலே நடக்குறா மாதிரி அந்த மேட்டு மேலே ஏறி நடந்துட்டு இருக்க.. ஒழுங்கா கீழே இறங்கி நட” என வினய் சொல்லி முடிப்பதற்குள் உத்ரா கால் தடுக்கி தடுமாற ஆரம்பித்தாள்.
அவளுக்கு இந்த புறம் இருந்த ப்ரணவ்வும் அந்த புறம் இருந்த வினய்யும் ஒரு சேர ஒன்றாய்ப் பதறினர். கீழே விழாமல் அவளை காப்பாற்றுவதற்காக அனிச்சையாக இருவரது கைகளும் அவளை நோக்கி நீண்டது. இருவரது கைகளுக்கும் இடையில் உத்ரா, நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.. கீழே வீழாமல் இருக்க யாருடைய கையைப் பற்றுவாளோ?