Jeevan Neeyamma–EPI 17

171916099_840757923178210_3424615682123961255_n-a5db5988

Jeevan Neeyamma–EPI 17

அத்தியாயம் 17

 

நீ தள்ளிப் போனால், பௌர்ணமி கூட எனக்கு அமாவாசைதான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

அந்த அந்தி வேளையில் வீட்டின் பின் கதவைத் திறந்தாள் மீனாட்சி. அவர்கள் வீட்டின் பின் வரிசையில் இருக்கும் வீடுகளில் ஒன்றில் தான் அவள் பெரிய அண்ணன் முருகனும் அவனது குடும்பமும் வசித்து வந்தார்கள். ஈஸ்வரி மாலை காபிக்கு செய்திருந்த வடையை பாத்திரத்தில் வைத்து இடது கையில் தூக்கிக் கொண்டவள்,

“ம்மா! அண்ணா வீட்டுக்கு வடை குடுத்துட்டு வரேன்!” என குரல் கொடுத்தாள்.

“இங்கருந்து ஒரு கொரலு குடுத்தா உங்கொண்ணி வந்து வாங்கிட்டுப் போகப் போறா! இப்போ நீ எதுக்குடி ஒடஞ்ச கைய வச்சிக்கிட்டு ஊர்கோலம் போற?” என சிடுசிடுத்தார் ராக்கு.

“அப்பத்தா!!! கையித்தான் உடஞ்சிருக்கு, காலு ரெண்டும் நல்லாத்தான் இருக்கு!”

“கையி ஒடஞ்சதுக்கு பதிலா வாயி ஒடஞ்சிருக்கனும் இந்த குட்டி சிறுக்கிக்கு!” என முணுமுணுத்தார் ராக்கு.

இருவரின் வாய்ச்சண்டையும் சீக்கிரம் ஓயாது என புரிந்து வைத்திருந்த ஈஸ்வரி,

“சரி சரி போய்ட்டு வா!” என அனுப்பி வைத்தார் மகளை.

“ஊர விட்டு வந்ததும் உறவு விட்டுப் போச்சுன்னு நிம்மதியா இருந்தா, கையோட அந்த மலாயி பையல கூட்டிட்டு வந்துருக்கா உம்மவ! நாலு வார்த்தை உபசாரமாப் பேசி கிளப்பி விடறத விட்டுப்புட்டு பெரியவன் வீட்டுல ஒக்காத்தி வச்சு விருந்து ஒபசாரம் பண்ணறீங்க எல்லாரும்! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லடி ஈசு! அந்தப் பையல பார்த்தாலே மனசுக்கு என்னவோ கருக்குன்னு இருக்கு!” என ராக்கு மறுபடியும் ஆரம்பிப்பதையும் அதற்கு ஈஸ்வரி சமாதானம் சொல்வதையும் கேட்டப்படியே ரோட்டில் இறங்கி நடந்தாள் மீனாட்சி.

முருகனின் வீட்டுப் பின் வாசலை அடைந்தவளுக்கு, உள்ளிருந்து வந்த சிரிப்பு சத்தம் எரிச்சலைக் கொடுத்தது.

‘ட்ரேன் ஸ்டேஷன்ல அறைஞ்சிக்குவானுங்க, வீட்டுக்கு வந்ததும் கட்டிப் புடிச்சு இளிச்சிக்குவானுங்க! என்ன ஜென்மமோ ரெண்டு பேரும். ப்ரெண்டுன்னு வந்துட்டா தங்கச்சிய கழட்டி விட்ருவான் ஒருத்தன். இன்னொருத்தன் மீனாம்மான்னு ஒருத்தி இருக்கறதையே மறந்து தொலைச்சிருவான்!’ என மனதில் திட்டிக் கொண்டாள்.

ஏற்கனவே லீவுக்கு இவள் வருவதாக சொல்லி வைத்திருந்ததால் அழைத்துப் போக ரயில் நிலையத்துக்கு வந்திருந்தான் ஆறுமுகம். தங்கையோடு தனது பால்ய சிநேகிதன் ரஹ்மானைப் பார்த்ததில் பேரதிர்ச்சி அவனுக்கு. அவன் முன்னே வந்து நின்ற ரஹ்மானும் இவனையேத்தான் இமைக்காமல் பார்த்திருந்தான்.

“ரஹ்மானு!” என மெல்லிய குரலில் இவன் முணுமுணுக்க, பளீரென அவனை அறைந்திருந்தான் ரஹ்மான்.

தனக்கே அறை விழுந்தது போல பட்டென தன் கன்னம் இரண்டையும் பொத்திக் கொண்டாள் மீனாட்சி. கலவரத்துடன் நண்பர்கள் இருவரையும் இவள் மாறி மாறிப் பார்க்க, பட்டென ரஹ்மானை இழுத்து அணைத்துக் கொண்டான் ஆறு. ரஹ்மானே,

“விடுடா, விடு, விடு!’ என திமிற, ஆறுவோ விடாமல் இறுக்கிக் கொண்டான் நண்பனை.

“ரஹ்மானு டேய்! நீயேதானாடா? நான் பார்க்கறது நெஜமாடா? என்னால நம்பவே முடியலைடா!” என கண்ணில் கண்ணீர் தடத்துடன் விடாமல் பேசியவனை,

“இன்னொரு தடவை செவுனி அறை வைக்கவா? அப்பவாவது நம்புவியா?” என நக்கலுடன் கேட்டான் ரஹ்மான்.

“அடிடா! கோபம் தீரும் மட்டும் அடி! வலிக்க வலிக்க வாங்கிக்குவேன்” என்றவனை ரஹ்மான் இறுக்கிக் கொண்டான் இப்பொழுது.

“ஐ மிஸ்ட் யூ சோ மச்டா ஆறு!” என்ற ரஹ்மானுக்கும் குரல் தழுதழுத்தது.

“நான் உன்னை நினைக்காத நாளில்லடா!” என்ற ஆறுவுக்கும் குரல் கமறியது.

“போதும், போதும்! உங்க பாசப்பயிர வீட்டுல போய் வளக்கலாம். எல்லோரும் நம்மளயே பார்க்கறாங்க, கிளம்பலாம் இப்போ!” என மீனாட்சி சொல்லவும்தான் இருவரும் தன்னிலை அடைந்தார்கள்.

“அப்புறம் விலாவரியா பேசிக்கலாம்டா ரஹ்மானு” என்றவன் அதன் பிறகுதான் தங்கையின் கையையும் கட்டையும் பார்த்தான்.

என்னவாயிற்று என பதறியவனை சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கிளம்பி போனார்கள் மூவரும். அப்பத்தாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் ரஹ்மானைப் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி. அன்று அவனுக்கு விருந்து தடபுடல் செய்து விட்டார்கள். அன்றே கிளம்புகிறேன் என்றவனை, கண்டிப்பாக இரண்டு நாட்களாவது தங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும் என வற்புறுத்தினார் அழகு. இவனும் ஒத்துக் கொண்டான். இவர்கள் இருப்பது இரு அறைகள் கொண்ட சிறிய வீடென்பதால், முருகனின் வீட்டில் தங்க வைப்பதாக ஏற்பாடானது. ரஹ்மானோடு ஆறுவும் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு முருகனின் வீட்டுக்குச் சென்று விட்டான்.

இவள் கை தொட்டிலில் தொங்கிக் கொண்டிருப்பதால், இவளை கவனிக்கிறேன் பேர்வழி என வீட்டை விட்டு வெளியவே விடாமல் தாங்கினார்கள் எல்லோரும். ரஹ்மான் பக்கத்திலேயே இருந்தும் அவனைப் பார்க்க முடியாமல் இவளுக்கு என்னவோ போல் இருந்தது. நேரத்தை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானாள் மீனாட்சி. ஒரு நாள் மட்டும் வீட்டில் அடங்கி இருந்தவள், மறுநாள் வடை பாத்திரத்தோடு அண்ணன் வீட்டை நோக்கி நடையைக் கட்டிவிட்டாள்.  

“அண்ணி! அண்ணி!”

“வரேன்!” என குரல் கொடுத்தப்படியே வந்தாள் முருகனின் மனைவி ராதிகா.

அவள் இடுப்பில் இருந்த ரகுமான் குட்டியோ, தன் அத்தையைப் பார்த்ததும்

“த்தே! த்தே” என தாவினான்.

வடை பாத்திரத்தை அண்ணியிடம் கொடுத்தவள், இடது கையால் தனது குட்டி மருமகனைத் தூக்கிக் கொண்டாள்.

“கைல இன்னும் வலி இருக்கா மீனாட்சி?” என ராதிகா கேட்க, கிச்சனில் இருந்து முன்னால் இருக்கும் ஹாலுக்கு நடந்தார்கள் இருவரும்.

அந்த குட்டி ஹாலில் மரத்தினாலான சோபா போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்திருந்தார்கள் இவளது இரண்டு அண்ணன்களும், ரஹ்மானும். இவர்கள் இருவரின் பேச்சு சத்தத்தில் மூவரும் திரும்பிப் பார்த்தார்கள். ரஹ்மான் இவளைப் பார்த்து புன்னகைக்க, இவள் அவனை முறைத்தப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சோபாவுக்கு நடுவே போடப்பட்டிருந்த கார்ப்பெட்டில் மருமகனோடு அமர்ந்தவள்,

“என்ன அண்ணி கேட்டீங்க? கை வலிக்குதான்னா? ரொம்ப, ரொம்ப வலிக்குது! ஆனா அதைப்பத்தி இங்க யாருக்கு அக்கறை இருக்கு!” என கேட்டவளின் ஓரப்பார்வை ரஹ்மானைத்தான் கடுப்பாய் பார்த்தது.

ஒரு நாள் முழுக்க தன்னை எட்டிக் கூட பார்க்காமல் ஆறுவோடு ஊர் சுற்றி இருந்தவனின் மீது கொலை காண்டில் இருந்தாள் மீனாட்சி.

அவளது பார்வையைக் கண்டுக் கொண்டவனுக்கு சிரிப்பும் வந்தது, அவள் வலியை நினைத்து ஒரு பக்கம் பாவமாகவும் இருந்தது.

“மகராணிய இப்ப யார் அக்கறையாப் பார்த்துக்கலையாம்? அப்பத்தா கிழவில இருந்து அம்மா, அப்பான்னு எல்லாரும் தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க! உட்கார்ந்த இடத்துலயே மேடத்துக்கு எல்லா சேவகமும் நடக்குது! அப்புறம் எதுக்கு இந்த புலம்பல்? அக்கம் பக்கம் பார்த்து நடக்காம, கண்ணைப் பொடனில வச்சி நடந்து கையை உடச்சிட்டு வந்துருக்க! ஏதோ நல்ல காலம் சின்ன அடியாப் போச்சு! பெருசா எதாச்சும் ஆகியிருந்தா என்ன பண்ணறது? எப்படி உன்னைக் கட்டிக் குடுத்து கரை சேர்ப்போம் நாங்க?” என காட்டமாகக் கேட்டான் முருகன்.

மற்ற சம்பவங்களை மறைத்து, பாடம் முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பி செல்லும் போது கல் தடுக்கி கீழே விழுந்து விட்டதாக தான் சொல்லி வைத்திருந்தாள் மீனாட்சி. வேறு பிரச்சனை என தெரிந்தால், படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென அப்பத்தா பொங்கி எழுந்து விடுவார் என்று தான் இந்தப் பொய்.

ரஹ்மானின் முன்னிலையில் அண்ணன் திட்டியதில் முகம் மாறிப் போக, சட்டென கீழே குனிந்துக் கொண்டாள் மீனாட்சி. கண்ணில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் தூளி ஆடிக் கொண்டிருந்த அவள் கையில் பட்டுத் தெறிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரஹ்மானுக்கு தாங்கவே முடியவில்லை. மற்றவர்கள் சுற்றி இருப்பதால் அவளை நெருங்கி சமாதானப்படுத்த முடியாமல் திணறினான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆறுவின் விலாவில் இடித்தவன், மீனாட்சியைப் பார்க்கும்படி ஜாடை காட்டினான். தங்கை கண்ணீர் விடுவதை அப்பொழுதுதான் கவனித்தான் அவனும்.

சோபாவில் இருந்து இறங்கி அவள் அருகே கார்ப்பெட்டில் அமர்ந்துக் கொண்டவன்,

“அண்ணா ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க! இதுக்கெல்லாம் அழுலாமா பாப்பா?” என சமாதானப்படுத்தினான்.

“என்ன புது பழக்கம் இது சும்மா சும்மா கண்ணைக் கசக்கறது? முன்னெல்லாம் இப்படி இல்லையே! பெரிய படிப்பு படிக்கப் போய் இதத்தான் கத்துட்டு வந்தியா?” என அதற்கும் கோபம் வந்தது முருகனுக்கு.

ஆரம்பத்தில் எஸ்டேட்டில் நன்றாய் வாழ்ந்த காலத்தில் எல்லா குழந்தைகளையும் போலத்தான் பிடிவாதம், அழுகை, அழிச்சாட்டியம் என வளர்ந்தாள் மீனாட்சி. பின் வாழ்க்கைப் புரட்டிப் போட்டு அடித்ததில் பொறுப்பான பெண்ணாய் மாற வேண்டிய கட்டாயம். அப்படி இருந்தவளைத்தான் மீண்டும் செல்லம் கொடுத்து, விட்டுக் கொடுத்து, கேட்டதை எல்லாம் செய்து கொடுத்து சிறகடிக்க விட்டிருந்தானே ரஹ்மான்.

இவர்களுக்கு தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்த ராதிகா,

“இப்ப எதுக்கு அவள திட்டிட்டு இருக்கீங்க நீங்க? வேணும்னே யாராச்சும் விழுந்து எழுந்து வருவாங்களா? அவளே வலில இருக்கா, இப்போ நொய் நொய்ன்னா அழுகை வராதா?” என கணவனை திட்டியவள்,

“நீ டீ குடிம்மா மீனாட்சி!” என மகனை மீனாட்சி மடியில் இருந்து இறக்கி விட்டு டீ குவளையை அவள் கையில் கொடுத்தாள்.

மற்றவர்களுக்கும் டீயும் வடையும் வைத்துக் கொடுத்த ராதிகா, மீனாட்சியின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டாள். குட்டி ரகுமான் மீண்டும் அத்தையின் மடியில் வந்து அமர்ந்துக் கொள்ள அவனுக்கு சின்னதாய் வடையைப் பிய்த்து ஊட்டினாள் மீனாட்சி. அத்தையிடம் ஒரு வாய் வாங்கிய குட்டி ரகுமான், மெல்ல நகர்ந்து பெரிய ரஹ்மானிடம் போனான். அவனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் இவன்.

முகம் வாடிப் போய் அமர்ந்திருந்த மீனாட்சியை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த ரஹ்மானுக்கு தவிப்பாய் இருந்தது. அவளது மனநிலையை மாற்ற வேண்டி,

“எல்லாரும் குடும்பமா எங்கயாச்சும் வெளிய போய்ட்டு வரலாமா?” என கேட்டான்.

“டேய் இன்னிக்கு நாம ரெண்டு பேரும் கெர்னி ட்ரைவ் (கடற்கரையோரம் இருக்கும் உணவுக்கடைகள்) போலாம்னு தானே ப்ளான்? இப்ப என்ன குடும்பத்தையே கூட்டு சேர்க்கற?” என கடுப்பானான் ஆறு.

“நீதான் இனி மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் என்னைப் பார்க்க கோலாலம்பூர் வருவன்னு சொல்லிருக்கல்ல! அப்போ நாம பாச பயிர வளத்துக்கலாம்டா! இனிமே நான் எப்போ பினாங் வருவனோ! அதனால இன்னிக்கு குடும்பமா போகலாம்” என ரஹ்மான் சொல்ல, அவனை முறைத்தான் ஆறு.

‘இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு முறைக்கறான் இவன். அண்ணாவும் தங்கச்சியும் எதுல ஒத்துமையோ இல்லையோ, என்னை முறைக்கறதுல ஒத்துமையா இருக்காங்க!’ என நொந்துக் கொண்டான் ரஹ்மான்.

தன்னைக் கோபப் பார்வைப் பார்த்த மீனாட்சியை நோக்கி அசட்டுப் புன்னகையைக் கொடுத்த ஆறு,

“உன்னைப் பார்க்கத்தான் மாசத்துக்கு ஒரு தடவை வரதா சொல்லிருந்தேன் பாப்பா! இவன் மாத்தி சொல்லறான்” என சமாளித்தான்.

‘ஓ இதான் மேட்டரா!’ என புரிந்துக் கொண்ட ரஹ்மானுக்கு, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்த ஆறுவைப் பார்த்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“இவளுக்கு கை வேற இப்படி இருக்கு! ரொம்ப தூரமாலாம் போக வேணா! டவுன்ல ஃப்ன் ஃபேர் (கார்னிவல்—ராட்டினம், கேம்ஸ் விளையாடும் பூத், உணவுக் கடைகள் என நிறைய இருக்கும். ஊர் ஊராய் போய் கர்னிவல் நடத்துவார்கள்.) போட்டிருக்காங்க! அங்க போய்ட்டு அப்படியே வெளிய நைட்டு சாப்பாடு சாப்பிட்டு வந்துடலாம்” என பெரியவனாய் முடிவெடுத்தான் முருகன்.

அழகு இன்னும் வேலை முடிந்து வந்திருக்கவில்லை. அப்பத்தாவுக்கு துணையாய் வீட்டில் இருப்பதாய் சொல்லி விட்டார் ஈஸ்வரி. ஆகையால் இவர்கள் மட்டும் கிளம்பினார்கள். நீல வண்ண சுடிதாரில் அழகாய் கிளம்பி வந்த மீனாட்சியின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் தான் நிம்மதியானது ரஹ்மானுக்கு. நண்பர்கள் இருவரும் பைக்கில் வர, முருகனின் குடும்பமும் மீனாட்சியும் டாக்சியில் வந்தார்கள். 

இவர்கள் வசிப்பது போன்ற சின்ன டவுன்களில் இந்த மாதிரி ஃபன் ஃபேர் வந்தால்தான் கொண்டாட்டம் குதூகலமே. குழந்தைகள் பெற்றவர்களை நச்சரித்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்டிப்பாக வந்துவிடுவார்கள். இரவு நேரத்தில் தான் இந்தக் கேளிக்கை மையம் திறக்கப்படும். வண்ண விளக்குகளில் அந்த இடமே சொர்க்கப்புரி போல காட்சியளிக்கும். இவர்கள் அவ்விடத்தை அடைந்தப் பொழுது, டிக்கட் வாங்கும் இடத்தில் நீண்ட கியூ. ரஹ்மானும், ஆறுவும் கியூவில் போய் நின்றார்கள். இங்கு வந்ததில் இருந்து ரஹ்மானை செலவு செய்யவே விடவில்லை ஆறு. தன் நண்பனுக்கு உண்ண, உடுக்க என வாங்கிக் கொடுத்து கொண்டாடி தீர்த்தான்.

வளவளவென பேசிக் கொண்டேயிருந்த நண்பனைப் பார்த்து மெல்லிய புன்னகை படர்ந்தது இவன் முகத்தில். நேற்றைய இரவு தூங்கும் முன் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்த்தான் ரஹ்மான்.

முருகனின் வீட்டில் ஹாலில் மெத்தை விரித்துப் படுத்துக் கொண்டவர்களுக்கு பேச்சே வரவில்லை. மௌனத்தை உடைத்தது என்னவோ ரஹ்மான்தான்.

“சொல்லுடா ஆறு! என்னை நீ ஒதுக்கி வச்சதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும்! ஆனா என்ன யோசிச்சும் அது எனக்கு பிடிபடவேயில்லைடா! எவ்ளோ ஆத்திரமா இருந்தது தெரியுமா ஆரம்பத்துல? ஆத்திரம் போக, போக வருத்தமா மாறிப் போச்சே தவிர உன்னை என் மனச விட்டுத் தூக்கிப் போடவேயில்ல நானு! என் நண்பன் எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்பனேன்!”

“ஏன் ரஹ்மானு, பாராசிட்னு ஒரு அட்டை இருக்காம் தெரியுமா?”

“இப்போ நான் கேட்ட கேள்விக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்குடா! பாராசிட் இன்னொரு உயிரனத்த அண்டி வாழ்ந்துகிட்டே, அந்த உயிரனத்தோட சத்தெல்லாம் உறிஞ்சி எடுத்துடுமாம்! நானும் ஒரு பாராசிட்தான்டா! உன்னை ஒட்டி உன்னை உறிஞ்சி எடுக்கற பாராசிட்”

“மசுரு பாராசிட்! என் வாயில இன்னும் கெட்ட கெட்ட வார்த்தையா வந்திடும் பார்த்துக்கோ! என்ன பேசறோம்னு யோசிச்சித்தான் பேசறியாடா எருமை மாடே! இவரு பாராசிட்டாம், என்னை உறிஞ்சிட்டாராம்! பரதேசி!” என வண்ண வண்ணமாகக் கேட்டவன், நண்பனின் முதுகிலேயே மத்தளம் வாசித்தான்.

“டேய்! என்னங்கடா தூங்காம ஒரே சத்தம்! என் பையன் மட்டும் முழிச்சான், கொண்டு வந்து உங்க கிட்ட விட்டுடுவேன். அப்புறம் ராவெல்லாம் தாலாட்டுப் பாடி நீங்கதான் தூங்க வைக்கனும் அவன” என எழுந்து வந்து கத்தி விட்டுப் போனான் முருகன்.

அதற்கு பிறகு சத்தத்தைக் குறைத்துப் பேசிக் கொண்டார்கள் இருவரும்.

மீனாட்சி ரஹ்மானிடம் சொல்லியத் தங்கள் சோகக் கதையை மீண்டும் இவனிடம் சொன்னான் ஆறு.

“நான் உன்னைப் பார்க்கனும் கூட்டிப் போங்கன்னு அடம் புடிச்சப்போ அப்பா அடி வெளுத்துட்டாருடா! அவர எதுக்குக் கூட்டிப் போக சொன்னேன் தெரியுமாடா ரஹ்மானு? நாங்க இப்படி கஸ்டப் படறோமே, உன்னையும் உங்க அப்பாவையும் வந்துப் பார்த்தா கண்டிப்பா எதாச்சும் உதவி செய்வீங்கன்னு நெனைச்சித்தான் அப்பாவ கூப்பிட்டேன்! அடிச்சப்போ அத நான் சொல்லல, ஆனா மறுநாள் அப்பாக்கிட்ட இப்படின்னு சொன்னேன். அழுதுட்டாருடா” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.

“வீடு எரிஞ்சப்போ நம்ம மீனாட்சி உள்ள ஓடி நீ குடுத்த சங்கிலிய பத்திரமா எடுத்துட்டு வந்தாடா! அப்போத்தான் அவளுக்கு கையில நெருப்புக் காயம் பட்டது! அப்போ இருந்த கஸ்டத்துல அந்த சங்கிலிய வித்துத்தான் அடுத்து வந்த நாட்கள சமாளிச்சாராம் அப்பா! ‘அந்தப் பையன் குடுத்த சங்கிலிதான் இன்னிக்கு உங்கள எல்லாம் பட்டினில இருந்து காப்பாத்திருக்கு. மறுபடியும் அவன் கிட்ட போய் கையேந்தனும்னு சொல்லறியேடா! எனக்கு அவமானத்துல அப்படியே செத்துடலாம்னு இருக்குடா! என் மகன இன்னொருத்தன் கிட்ட கையேந்த நினைக்கற நிலைமைல நான் வச்சிருக்கேன்னா, நான்லாம் என்னடா அப்பா!’ன்னு சொல்லி ரொம்ப அழுதாருடா! எவ்வளவு கம்பீரமா இருப்பாரு எங்கப்பா! அந்த டைம்ல என்னால கண் கொண்டு பார்க்க முடியலடா அவர” என்றவனை அணைத்துக் கொண்டான் ரஹ்மான்.

“மீனாட்சிக்கு, சங்கிலிய அப்பா வித்துட்டாருன்னு தெரியுமாடா?” என கேட்டான் இவன்.

“தெரியும்டா!”

அவளது அப்பாவை தான் கீழாய் நினைத்து விடக்கூடாது என சங்கிலி நெருப்போடு போய் விட்டது என அவள் பொய் சொல்லியிருப்பதை புரிந்துக் கொண்டான் ரஹ்மான். அவனுக்கும்தான் தெரியுமே மீனாட்சியின் அப்பா பாசம். அவருக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் என தெரிந்துதானே வைத்திருந்தான்.

“பென்சில், ரப்பர் கடனா வாங்கறது வேற காசு கடனா வாங்கறது வேறன்னு புரிஞ்சது அப்போ. கடன் அன்ப முறிக்கும்னு நான் உணர்ந்துகிட்ட பருவம் அது. கஸ்டம்னு வந்ததும் உன்னை அட்டையா ஒட்டிக்கனும்னு நெனைச்ச என் மேலேயே எனக்கு வெறுப்புடா! எப்போ என்னால உனக்கு செலவு பண்ணற அளவுக்கு முன்னேற முடியுதோ, அப்போத்தான் உன்னைத் தேடி வரதுன்னு முடிவு எடுத்தேன். அதுக்குப் பிறகு அப்பா உன்னைப் பார்க்கனும்னு கூப்டப்ப கூட வர மாட்டேன்னு சொல்லிட்டேன். கண்டிப்பா இந்த வருஷம் தேடி வந்திருப்பேன்! ஆனா மீனாட்சி மூலமா மறுபடி நாம சந்திச்சிட்டோம்” என சொன்னான் ஆறு.

“உனக்கு ரப்பர், பென்சில் குடுத்தப்பவும் நான் கடனா குடுக்கல! நீ கஸ்டம்னு என்னைத் தேடி வந்திருந்தாலும் கடனா குடுத்துருக்க மாட்டேன்! நட்புக்கு கஸ்டம்னா கடன் குடுக்கக் கூடாது, அத நம்ம கடமையா நெனைச்சிக் குடுக்கனும். உன்னையோ உன் தங்கச்சியையோ நான் எப்படிடா பாராசிட்னு நெனைப்பேன்! என்னை நீ புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா?” என நா தழுதழுக்க கேட்ட ரஹ்மானை, கெஞ்சி, கொஞ்சி, கண்ணீர் விட்டு, மன்னிப்பு கேட்டு ஒரு வழியாக சமாதானப்படுத்தி இருந்தான் ஆறு.

டிக்கேட் வாங்கியதும் உள்ளே நுழைந்தார்கள் அனைவரும். விளையாட்டு ஸ்டால்கள் சுற்றி இருக்க, நடுவில் ராட்டினம், மேரி கோ ரவுண்ட், வித விதமாய் போட்டோ எடுக்கும் ஸ்டாண்ட், பேய் வீடு(இதன் உள்ளே போனால், பேய் வேஷம் போட்டிருக்கும் ஆட்கள் பயம் காட்டி நம்மளை திகைக்க வைப்பார்கள்), நிகழ்ச்சி நடத்த ஸ்டேஜ் என இருக்கும். இவர்கள் போகும் நேரம் அங்கே கலை நிகழ்ச்சியும் நடந்துக் கொண்டிருந்தது. மலாய், சீன, தமிழ் பாடல்கள் என கலவையாய் பாடிக் கொண்டிருந்தார்கள் கலைஞர்கள்.

இவர்கள் நுழையும் நேரம்,

“ஜாதி இல்லை பேதம் இல்லை

சீர்வரிசை தானம் இல்லை

காதல்!!!”” என காதல் கோட்டை பாடலை மேடையில் இருவர் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

இவள் மெல்ல நிமிர்ந்து ரஹ்மானை ஏறிட்டுப் பார்த்தாள். ஆறுவிடம் பேசி சிரித்துக் கொண்டே மீனாட்சியின் பக்கம் எதேச்சையாய் திரும்பிய ரஹ்மான், பாவையின் பார்வை மொழியில் குழம்பிப் போய் நின்றான். அதை பற்றி அவனை சிந்திக்க விடாமல் விளையாடும் ஸ்டாலுக்கு இழுத்துப் போனான் ஆறு.

முருகனும் அவன் மனைவியும் குழந்தையுடன் ராட்டினம் ஏற, இவள் ஆறுவுடன் இருக்கிறேன் என சொல்லி இவர்களிடம் வந்து விட்டாள். அந்த ஸ்டாலில் கலர் கலராய் பெரிய ஆணிகள் அடித்து வைத்திருக்க, அதில் குட்டி வளையங்களைப் போட வேண்டும். இந்த வளையத்துக்கு இந்தப் பரிசு என எழுதி வைத்திருந்தார்கள். விலைப் பற்றி ஆறு விசாரித்துக் கொண்டிருக்க ரஹ்மானின் அருகே வந்தவள், ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“மீனாம்மா! என் மேல கோபமா?” என மெல்லிய குரலில் கேட்டான் இவன்.

“ஆமா!”

“ஏன்?”

“உனக்கு ஆறுவ பார்த்ததும் அவன் தங்கச்சி கண்ணுக்குத் தெரியல!”

“அப்படிலாம் இல்ல மீனாம்மா!”

“அப்படித்தான்”

“அவன் உங்கண்ணன்டி!”

“எங்கண்ணாவா இருந்தாலும், எனக்குத்தான் நீ முதல் உரிமைக் குடுக்கனும்! எனக்குப் பின்னாலதான் அண்ணன் நொண்ணன், நண்பன் கொண்பன்லாம்” என படபடவென பொரிந்தாள். 

பெருமூச்சொன்றை விட்டவன்,

“சரி சொல்லு! மீனாம்மாவுக்கு கோபம் போக நான் என்ன செய்யனும்?” என கேட்டான்.  

“அந்த டோரேமோன் பொம்மையை ஜெய்ச்சுக் குடு!” என கேட்டாள் மீனாட்சி.

அந்த பொம்மைக்குரிய ஆணி சற்று தொலைவாக இருந்தது. அந்த ஆணியில் வளையம் விழுவது கஸ்டம் என்பதால்தான் அதற்கு பெரிய டோரேமோன் பொம்மையை பரிசாக வைத்திருந்தார்கள்.

மீனாட்சியைத் திரும்பிப் பார்த்தவன்,

“ஜெய்ச்சுக் குடுத்தா கோபத்த விட்டுட்டு மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுக்குவியா?” என கேட்டான்.

“முதல்ல ஜெய்க்கற வழிய பாருங்க மிஸ்டர் இசை!” என நக்கலாக சொன்னவள் உதட்டை சுழித்துக் காட்டினாள்.

அவளது சுழித்த உதட்டின் மேல் பார்வை சில நொடிகள் நிலைத்து நிற்க, சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரஹ்மான்.

“அஞ்சு வளையம் ரெண்டு வெள்ளியாம்டா! விளையாடலாமா?” என கேட்டான் ஆறு.

“இதுக்கு நானே காசு கட்டிக்கறேன்! நீ தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாரு” என்ற ரஹ்மான்களத்தில் இறங்கினான்.

ஆனால் அந்த ஆணியை சுற்றி வளையம் விழுவேனா என அழிச்சாட்டியம் செய்தது. இவள் வேறு ஆறு பார்க்காத சமயங்களில் நக்கலாய் பார்த்து வைக்க, ரஹ்மானுக்கு வெறியே வந்தது.

“டேய் ரஹ்மானு! நீ அந்த கடைக்காரன்கிட்ட விட்ட காசுக்கு நாமளே ஒரு பொம்மை வாங்கிருக்கலாம்டா! வாடா போலாம்! இந்த விளையாட்டு போதும்” என ஆறு தலைப்பாடாய் அடித்துக் கொண்டதை கூட இவன் கேட்கவில்லை.

பத்தாவது முயற்சியில் தான் கடைசியாய் அந்த பொம்மைக்குரிய ஆணியை சுற்றி வளையத்தைப் போட்டிருந்தான் ரஹ்மான். ஒரு கை தூளியில் இருக்க, இன்னொரு கையை மேலே தூக்கி குதூகலத்துடன் குதித்து ரஹ்மானின் வெற்றியைக் கொண்டாடினாள் மீனாட்சி. அந்த கடைக்காரன் சிரிப்புடன் டோரேமோன் பொம்மையை எடுத்து ரஹ்மானிடம் கொடுத்தான். அதை அவன் மீனாட்சியிடம் கொடுக்கும் நேரம், அப்பொழுதுதான் அங்கு வந்த முருகன் பொம்மையை வாங்கிக் கொண்டான்.

“தம்பிக்கா? தேங்க்ஸ்டா ரஹ்மானு” என மகனிடம் பொம்மையைக் கொடுக்க, மீனாட்சிக்கு கண்கள் சட்டென கலங்கி விட்டது.

அவள் அழுகையை அடக்கப் போராடுவதைப் பார்த்த ரஹ்மானுக்கு ஐயோவென வந்தது. அவன் பொம்மையைக் கொடுக்கப் போகும் போது கண்கள் மின்ன அவ்வளவு ஆசையாய் கையை நீட்டி இருந்தாள் அவள்.

குட்டி ரகுமானே அவனை விட பெரியதாக இருந்த அந்த பொம்மையைப் பார்த்து பயந்து அழுது தூக்கி மண்ணில் போட, சட்டென பாய்ந்து அதை எடுத்து மண்ணைத் தட்டி ஒற்றைக் கையால் இறுக அணைத்துக் கொண்டாள் மீனாட்சி.

“பொம்மையைப் பார்த்து புள்ள பயப்படறான். நீயே வச்சிக்க மீனாட்சி” என்றாள் ராதிகா.

சரியென தலையாட்டியள், கலங்கிய கண்களோடும் புன்னகை முகத்தோடும் ரஹ்மானைப் பார்த்து மெல்லிய குரலில்,

“தேங்க்ஸ் ரஹ்மானு!” என முணுமுணுத்தாள்.

அவளது குரலும், முக பாவனையும் ஏனோ இவன் மனதைப் போட்டுப் பிசைந்தது.

அதன் பிறகு மற்ற விளையாட்டுக்களை விளையாடினார்கள். பேய் வீட்டுக்கு போக வேண்டும் என இவள் பிடிவாதம் பிடிக்க, குழந்தை இருப்பதால் முருகனும் அவன் குடும்பமும் வெளியே நிற்க இவர்கள் மூவர் மட்டும் உள்ளே போனார்கள். உள்ளே இருட்டாய், படு பயங்கரமாய் இருந்தது. நடந்துப் போகையில் திடீர் திடீரென பேய் வேஷத்தில் மனிதர்கள் வந்து ஆ ஊவென பயம் காட்ட, எல்லாம் வேஷம்தான் என அறிந்தே இருந்தாலும் இவளுக்கு பயமாய் தான் இருந்தது. வலது பக்கத்தில் அண்ணன் வர, இடது பக்கத்தில் ரஹ்மான் வர அடிக்கடி பயத்தில் ரஹ்மானின் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். அவள் அழுத்திய அழுத்தில் ரஹ்மானின் கைவிரல்கள் உடையாமல் இருந்ததே பேரதிசயம்.

உள்ளேயே விற்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி ஓரமாய் அமர்ந்து உண்டுவிட்டு, சற்று நேரம் கலை நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வீடு திரும்பினார்கள் அனைவரும்.

மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டான் ரஹ்மான். எல்லோரும் வாசலில் நின்றிருக்க, ரயில் நிலையத்துக்கு செல்ல பேசியிருந்த டாக்சியும் வந்து சேர்ந்தது. தானும் வருவேன் என அடம் பிடித்து டாக்சியில் ஏறி அமர்ந்திருந்தாள் மீனாட்சி. அவள் ரயில் நிலையத்துக் போக அழகு சரியென்று விட, மற்றவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை.

“அய்யா ரஹ்மானு! கொஞ்சம் உள்ள வாயா, உங்க வீட்டுக்கு கொஞ்சம் பலகாரம் செஞ்சு வச்சிருக்கேன்” என உள்ளே அழைத்தார் ஈஸ்வரி.

“சீக்கிரம்மா! ரயிலுக்கு டைமாச்சி” என அவசரப்படுத்தினான் ஆறு.

உள்ளே சென்று வந்த ரஹ்மானின் கையில் பலகாரப் பை இருந்தது. அதன் பிறகு எல்லாருக்கும் பாய் சொன்னவனின் முகத்தில் லேசாய் இறுக்கமும் இருந்தது.

ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த வேளையில்,

“அண்ணா வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா! அப்படியே சிப்ஸ் பாக்கேட்டும் வாங்கிக்கோ! ரஹ்மானு சாப்பிட்டுக்கிட்டே போவான்” என ஆறுவை பக்கத்தில் இருந்த கடைக்கு அனுப்பினாள் மீனாட்சி.

அவன் சென்றதும் மீனாட்சியைப் பார்த்தவன்,

“என்ன மீனாம்மா? என்ன வேணும்? எதுக்கு உங்கண்ணாவ கழட்டி விட்ட இப்போ?” என புன்னகையுடன் கேட்டான்.

அவனை ஆழ்ந்துப் பார்த்தவள்,

“எது கேட்டாலும் குடுப்பியா ரஹ்மானு?” என கேட்டாள்.

“கண்டிப்பா மீனாம்மா! என்ன வேணும்?”

“எனக்கு நீ வேணும்! எனக்கே எனக்கா நீ வேணும்!”

அதிர்ச்சியுடன் இவன் பார்க்க,

“ஐ லவ் யூ ரஹ்மானு!” என அவன் கண்களைப் பார்த்து சொன்னாள் மீனாட்சி.

(ஜீவன் துடிக்கும்…)

 

(டைப் பண்ணி முடிக்கவே நைட் ரெண்டாகிருச்சு. கண்ண திறந்து ப்ரூப் பார்க்க முடியல. அதான் இப்போ பார்த்துப் போடறேன்! மறக்காம கமேண்ட் பண்ணிட்டுப் போவீங்களாம். போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!