kiyaa-12

kiyaa-12
கிய்யா – 12
ரங்கநாத பூபதி தடுத்தும் விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்த துர்கா, அவர்கள் இருந்த கோலத்தில் கதோவோரமாக சட்டென்று நின்றாள்.
இலக்கியா, அடுத்தவர் பொருளை தொட்டுவிட்ட உணர்வோடு பதறிக்கொண்டு விலக எத்தனிக்க, அவன் பிடி இலக்கியாவின் மீது இறுகியது.
“புருஷன் பொண்டாட்டி ரூமுக்குள்ள வரும் பொழுது கதவை தட்டிட்டு வரனும்முங்கிற பேஸிக் அறிவு கூட இல்லை” என்று அவன் கோபமாக துர்காவை பார்த்து கர்ஜிக்க, துர்கா அறியாமல் அவன் கைகளை நறுக்கென்று கிள்ளிவிட்டு விலகினாள் இலக்கியா.
“பாருங்க பாஸ். புருஷன் பொண்டாட்டி ரூம் இல்லை. புது புருஷன் பொண்டாட்டி ரூம் கதவை தட்டிட்டு வரணுமிங்கிற அறிவு கூட எனக்கு இல்லை பாருங்க. நான் முட்டாள் தான்.” துர்கா இப்பொழுது அவனை பார்த்து இளக்காரமாக கூறினாள்.
இலக்கியா தலையை குனிந்து கொண்டாள். அவள் கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடியது. அவன் படுத்திருந்த கட்டில் கம்பியை அழுத்தி பிடித்தாள்.
‘இலக்கியா சமாளிக்கணும். நீ தான் சமாளிக்கணும். எவ்வளவோ அவமானங்கள், எத்தனையோ கஷ்டங்களை பார்த்துட்ட. இதையும் சமாளி. இதையும் சமாளி.’ தன் கைகளை கட்டிலோடு அழுத்தி தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
‘உன் மேல் தப்பில்லை இலக்கியா. நீ எந்த தப்பு செய்யலை. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காம இருந்திருந்தாதான் அது தப்பா இருந்திருக்கும். இப்பவும் நீ நிரந்திரமா இங்க இருக்க போறதில்லை.போகத்தான் போற. துர்காவை தைரியமா பாரு’ இலக்கியா தன்னை சமாளித்து கொண்டு துர்காவை நிமிர்ந்து பார்த்தாள்.
விஜயபூபதியின் கண்கள் இலக்கியாவை தான் பார்த்து கொண்டிருந்தது. ‘நீயா உருவாக்கி கொண்டது.’ என்ற இறுமாப்பு அவன் முகத்தில் இருக்க, “நீங்க பேசிட்டு இருங்க. நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” இலக்கியா ஒரு எட்டு எடுத்து வைக்க, அவள் முன் தன் கைகளை நீட்டினாள் துர்கா.
“என்னை என் காதலன் கூட சேர்த்து வைப்பேன்னு வாக்கு கொடுத்த இலக்கியா. நீ வாக்கு தவறிட்ட.” துர்கா கூற, இலக்கியா அவளை படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆனால், நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன். வாக்கை காப்பாத்தம்மா தவற விடுற எல்லாரும் கெட்டவங்க இல்லை. அவங்க சூழ்நிலை அப்படி. உன் சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியாத முட்டாள் இல்லை நான்.” என்று துர்கா கூற, அவளை நட்போடு பார்த்தாள் இலக்கியா.
“நான் ஒரு சூழ்நிலை கைதி. ஆனால், துரோகி இல்லை. ஒருநாளும் இலக்கியா வாக்கு தவற மாட்டா.” அவள் செவியோரம் கிசுகிசுத்துவிட்டு இலக்கியா படபடவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
விஜயபூபதி முன் நாற்காலியில் அமர்ந்தாள் துர்கா.
“நீ இப்ப எதுக்கு இங்க வந்த?” அவன் புருவம் உயர்த்த, “பாஸ்… நீ, நான்னு பேச நான் என்ன உங்க காதலியா?” துர்கா புருவம் உயர்த்தினாள்.
“நீங்க பாஸ், நான் உங்க பி.ஏ. அவ்வளவு தான் நம்ம ரிலேஷன்ஷிப். அதனால் பேச்சில் மரியாதை இருக்கனும்.” அவள் நிறுத்த, “எந்த பி.ஏ பாஸோட பெட் ரூம் வரைக்கும் வருவா? புதுவித பி.ஏ வா இருக்கே?” அவன் பேச்சில் எள்ளல் இழையோடியது.
அவன் வார்த்தைகள் அவளை சுருக்கென்று தைக்க, அவள் அவனை வலியோடு பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த வலியில், அவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான் அவள் வலியை காண சகியாமல்.
“போய்டு துர்கா. நான் யாரையும் கஷ்டப்படுத்த கூடாதுனு நினைக்குறேன்” அவன் கூற, “ஹா…” அவள் இப்பொழுது நக்கலாக சிரித்தாள்.
“யாரு நீங்களா?” துர்கா கேள்வியாக நிறுத்த, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.
“உனக்கு அடிபட்டத்தில் மனசு இறுகி போச்சு.” அவள் கூற, அவன் அவளை அசட்டையாக பார்த்தான்.
“என்னை கல்யாணம் செய்திருந்தா, நீ நினைக்குற மாதிரி கஷ்டம் வந்திருந்தா அது எனக்கு மட்டும் தான். இப்ப என் வாழ்க்கையையும் கஷ்டமாக்கி, பாவம் யாரும் இல்லாத இலக்கியா வாழ்க்கையும் கஷ்டமாக்கிட்ட” அவள் கூற, “நான் யார் வாழ்க்கையும் கஷ்டமாக்கலை” அவன் உறுதியாக கூறினான்.
“லவ்விங்றது…” அவன் ஆரம்பிக்க, “பாஸ் நிறுத்துங்க. உங்க அட்வைஸ் கேட்க நான் இங்க வரலை.” அவள் அழுத்தமாக கூறினாள்.
துர்காவின் நல்ல மனமும், அவள் பிடிவாதமும் தெரிந்தவன் புன்னகைத்து கொண்டான்.
“உங்க காதலி, சாரி உங்க முன்னாள் காதலி நல்லாருக்கணும்னு உங்க காதலை தியாகம் பண்ணிடீங்க” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை.
“நீங்க தியாகம் பண்ணதால அவ நல்லா இல்லை அப்படின்னு நான் ஒவ்வொரு நிமிஷமும் உங்க முன்னாடி நின்னு நிரூபிப்பேன்.” அவள் கூற அவன் கண்களை சுருக்கி அவளை யோசனையாக பார்த்தான்.
“என்ன பார்க்கறீங்க? லவ் ஃபெயில்யருன்னா ஆம்பிளைங்க நீங்க மட்டும் தான் எல்லாத்தயும் தூக்கி போட்டு உடைப்பீங்க. தாடி வளர்த்துட்டு சுத்துவீங்க. நாங்க எதுவும் பண்ண கூடாதா? நானும் கல்யாணம் பண்ணிக்காம கூட கொஞ்சம் முடி வளர்த்திட்டு லவ் ஃபெயில்யருன்னு சொன்னா இந்த சமுதாயம் என்னை ஏத்துக்கதா என்ன?” அவள் தன் தோள்களை குலுக்கினாள்.
“காதலை வேண்டாம்முனு மறுத்து, ஈஸியா பிரேக்அப் பண்ணிட்டு பொண்டாட்டி கிட்ட இவ என் எக்ஸ்ன்னு… பழைய காதலின்னு ஈஸியா சொல்லுவீங்க. இதையே அந்த இலக்கியா அவன் என் எக்ஸ் லவ்வர்ன்னு சொன்னா உங்க வீட்ல அவளுக்கு உன்னை கட்டிவைப்பாங்களா?” துர்கா கோபமாக கேட்டாள்.
“இலக்கியா என் மனைவி. அவளை நான் பார்த்துக்கிறேன். நீ கல்யாணத்தை பண்ணிக்குற வழிய பாரு” அவன் எங்கோ பார்த்தபடி கூறினான்.
“நீ மட்டும் இல்லை இந்த சமுதாயமே இப்படி தான். ஆம்பிளைகளுக்கு லவ் ஃபெயில்யருன்னா சுதந்திரமா தாடி வளர்க்கலாம். பொண்ணுங்க மட்டும் அதை மனசில் பொதச்சிகிட்டு இன்னொருத்தனை கட்டிக்கணுமா?” துர்கா கேட்க, அவன் புருவம் சுருங்கியது.
“நான் உன் காதலி. அந்த பதவியை யாராலும் தட்டி பறிக்க முடியாது. நீ என் காதலன். அதையும் யாராலும் மாத்த முடியாது. நான் உன் முன்னாடி தான் இருப்பேன். தினமும் வருவேன் வேலை விஷயமா.” அவள் அசட்டையாக கூறினாள்.
அப்பொழுது இலக்கியா கதவை தட்ட, “நாங்க என்ன புருஷன் பொண்டாட்டியா தனிமையில் பேச, கதவை தட்டாம உள்ள வா” அவன் இலக்கியாவிடம் எரிந்து விழுந்தான்.
துர்கா எதுவும் பேசவில்லை. தன் கையில் இருந்த பையை திறந்தாள். அதிலிருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை எடுத்து இலக்கியாவிடம் நீட்டினாள்.
“ஹாப்பி மெரிட் லைஃப்…” கூறிவிட்டு எதுவும் சாப்பிடாமல் மடமடவென்று வெளியேறினாள்.
அந்த ஒற்றை ரோஜா, துர்காவின் காதலை சொல்லாமல் சொல்லியது. இலக்கியாவின் பார்வை துர்கா கொடுத்த ரோஜாவின் மீது பதிந்தது. ‘இந்த காதலை, பத்திரமாக உன்னிடமே ஒப்படைப்பேன்.’ அவள் மனம் தீவிரமாக உறுதி மொழி எடுத்து கொண்டது.
விலக விழையும் மனம்
கண்களில் காதலெனும் கனம்
நயனங்களில் நீர்த்துளி
“இனி இப்படி இங்க வந்தா இப்படி தான் அழ வேண்டியதிருக்கும்” ரங்கநாத பூபதியின் குரல் கண்டிப்போடு ஒலிக்க, “உங்க பாசத்துக்கு உங்க மகன் கட்டுப்படலாம். உங்க மேல இருக்கிற மரியாதைக்கு உங்க மருமகள் கட்டுப்படலாம். நானும் கட்டு பட்டிருப்பேன் உங்க பாசத்துக்கு, நீங்க என்னை உங்க மருமகளா ஆக்கிருந்தா… எனக்கு இப்ப எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.” துர்கா தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு, நிமிர்வாக கூறினாள்.
” நான் உங்க மகன் கிட்ட தான் வேலை பார்க்குறேன். பாண்ட் சைன் பண்ணிருக்கேன். அப்படி சட்டுன்னுல்லாம் என்னை வேலை விட்டு அனுப்ப முடியாது. அதுவும் உங்க மகன் இப்ப இருக்கிற நிலையில் என்னை அனுப்பினா சமாளிக்க முடியாது. நான் வருவேன், என் எண்ணங்களுக்கு நீங்களோ, எங்க அப்பாவோ கட்டுப்பாடு விதிக்க முடியாது. முடிந்ததை பாருங்க” தன் வண்டியை எடுத்து கொண்டு, கிளம்பினாள் துர்கா.
அவள் கண்களை கண்ணீர் திரையிட்டது.
‘இவர்கள் விருப்பப்படி பூபதிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், நான் விலக வேண்டுமா? நான் யார்? பூபதி மீது எனக்கு உரிமை இல்லையா?” பல குழப்பங்களோடு அவள் வண்டியை செலுத்தினாள்.
மனம் தான் குழம்பிக்கொண்டு இருந்தது. அறிவோ அவளுக்கு தெளிவாக ஆணையிட்டது.
‘பூபதியை சந்திக்க கோழை போல் பயப்பட கூடாது. விலகி ஓடிவிட்டால், என்னவோ நீ தப்பு பண்ண மாதிரி இருக்கும். நீ உன் வேலையை வழக்கம் போல பாரு.’ மனதின் குழப்பத்தை ஒதுக்கிவிட்டு அறிவின் சொற்களை அழுத்தமாக பிடித்து கொண்டாள் துர்கா.
அப்பொழுது விஜயபூபதி, இலக்கியா அறைக்குள் நிர்மலாதேவி நுழைய, “புருஷன் பொண்டாட்டி ரூமுக்குள்ள வரும் பொழுது கதவை தட்டிட்டு வரனும்முங்கிற பேஸிக் அறிவு கூட உங்க அம்மாவுக்கு இல்லை” இலக்கியா விஜயபூபதியை பார்த்து கண்சிமிட்டி சிரிக்க, அவன் அவளை பார்த்து முறைத்தான்.
“உன்னை மாமா கூப்பிடுறாங்க.” நிர்மலாதேவி நாசுக்காக இலக்கியாவை வெளியேற்றினார்.
“விஜய் அந்த பொண்ணு பாவம்.” என்று ஆரம்பித்தார் நிர்மலாதேவி.
“இலக்கியா பாவமா? துர்கா பாவமான்னு கேட்டா பெரிய பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால், பெரிய பாவம் எது தெரியுமா? நான் ரெண்டு பேருக்கும் செய்தது தான்.” அவன் கடுப்பாக கூறினான்.
“அப்படி ஒன்னும் இலக்கியாவை உங்க அப்பா மோசமான இடத்தில் கட்டி கொடுத்திருக்க மாட்டார். அவருக்கு இலக்கியா மேல பாசம் அதிகம். நீ உங்க அப்பா பேச்சை கேட்டு, அவசரபட்டுடியோன்னு… ” அவர் ஆரம்பிக்க, அவன் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.
“அப்பாவுக்கு இலக்கியா மேல பாசம் அதிகம். அதை விட என் மேல் அன்பு அதிகம். ஆனால், அதை விட அப்பாவுக்கு அவர் சுயகெளரவம் முக்கியம். நான் இந்த கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, துர்கா இலக்கியா ரெண்டு பெரும் மோசமான நிலைக்கு தள்ள பட்டிருப்பாங்க.” அவன் கூற, நிர்மலாதேவியிடம் மௌனம்.
“அப்பா என் மேல உள்ள கோபத்தில் ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டா… என் கைகளுக்குள் இருந்தா, நான் இலக்கியாவின் வாழ்க்கையை சரி செய்ய முடியும். துர்காவுக்கு அவங்க அம்மா அப்பா இருக்காங்க. அப்பா ஏதாவது ஏடாகூடமா பண்ணி, துர்கா அவங்க அப்பாவை இழந்து, இலக்கியா வாழ்க்கையும் நம்ம கைமீறி போய்ட்டா?”
ஏற்கனவே நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு இந்த ஜென்மத்தில் இப்படி இருக்கேனோ? என்னை இன்னும் என் சுயநலத்துக்காக பாவம் பண்ண சொல்றீங்களா?” என்று எரிந்து விழுந்தான்.
அப்பொழுது இலக்கியா விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்தாள்.
“மாமா என்னை கூப்பிடலை…” என்று அவள் முன் இருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்தாள்.
‘எனக்கு தெரியாதா?’ என்று நிர்மலாதேவி கடுப்பாக அவளை பார்க்க, “ரூமுக்குள்ள வரும் பொழுது கதவை தட்டி வரணும்னு தெரியாதா?” என்று நிர்மலாதேவி சிடுசிடுக்க, “எங்க ரூமுக்குள் வர நான் என் கதவை தட்டணும்? அத்தான் என்னை எப்பவும் கதவை தட்டாம உள்ள வர சொல்லிருக்காங்க.” என்று இலக்கியா கூற, “கேடி…” அவன் உதடுகள் முணுமுணுத்தன.
நிர்மலாதேவி வெளியே செல்லவும், அவன் அருகே வாகாக அமர்ந்தாள் இலக்கியா.
“கொஞ்சம் நேரம் படுக்கறீங்களா?” அவள் கேட்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.
“ஆஃபிஸ் ஒர்க் எதுவும் பார்க்க போறீங்களா? நான் லேப்டாப் செட் பண்ணட்டுமா?” அவள் கேட்க, “எடுத்துட்டு வா. ஆனால், பெரிய வேலை இல்லை இலக்கியா. எல்லாமே லாஸ் ஆகுற நிலைமையில் தான் இருக்கு.” அவன் தீவிரமாக கூறினான்.
“ஓ…” அவள் கண்களை விரிக்க, “கொரோனாவால் ரொம்ப நாளா சினிமா தியேட்டர், மால் எல்லாம் மூடி இருக்கோம். ஆனால், எல்லாருக்கும் சம்பளம் கொடுத்திட்டு இருக்கோம். எவ்வளவு நாள் இப்படியே நம்மால கொடுக்க முடியும்?” அவன் கேட்டுக்கொண்டே லேப்டாப்பை வாங்கினான்.
காதல், திருமணம். இதை எல்லாம் தாண்டி அவர்களுக்கு வாழ்க்கையில் இன்னும் நிறைய சவால் இருக்கிறது என்று இருவரும் ஒரு சேர சிந்திக்க ஆரம்பித்தனர்.
“அத்… விஜயபூபதி, இந்த கொரோனா காலத்தில் எல்லாத்தையும் சமாளிப்பது ரொம்ப கஷ்டமோ?” அவள் கேட்க, அவன் சிரித்து கொண்டான்.
“என்னன்னவோ சமாளிக்கிறோம். இதையும் சமாளிப்போம்” அவன் கூற, அவள் தலை அசைத்து கொண்டாள்.
“என்னை இன்னும் நேரா உட்கார வையென்” அவன் கேட்க, அவன் அவளை நேராக அமர உதவி செய்து அதற்கு ஏதுவான செயலை செய்தாள்.
‘எப்படி கம்பீரமாக நடக்கும் அத்தான்.’ அவள் கண்கள் கலங்கியது.
அவள் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள, “நீ எங்க குடும்பத்துக்கிட்ட கையேந்த கூடாதுனு நினைச்ச. ஆனால், எங்க குடும்பம் உன் கிட்ட கையேந்த வேண்டிய நிலையை அந்த ஆண்டவன் கொடுத்திட்டான் இல்லை.” அவன் கேட்க, அவள் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.
“இப்ப உனக்கு சந்தோஷமா?” அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்த, “அத்தான்…” அவள் அவன் தோள்களில் அடிக்க, அவள் கைகளை அவன் பிடித்திருந்தான்.
“என்னை அப்படி கூப்பிடாத…” அவன் குரலில் இப்பொழுது கடினம் இல்லை.
“நான் கூப்பிடலைன்னா, எல்லாம் மாறிடுமா?” அவள் அவன் விழிகளை பார்த்து கேட்டாள்.
“எல்லாத்தையும் மாத்த தான் பார்க்குறேன்.” அவன் கூற, “இப்படியே விடுங்க விஜய்யபூபதி. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.” அவன் அருகே அவள் அமர்ந்து கொண்டாள்.
“என்னவோ எனக்கு பெயர் வச்ச மாதிரி கூப்பிட வேண்டியது. விஜய்யபூபதி… விஜய்யபூபதின்னு” அவன் மிரட்ட, “அத்தான்னு கூப்பிடட்டுமா?” அவள் கண்சிமிட்டினாள்.
“தேவை இல்லை.” அவன் கடிந்துரைத்தான்.
“எத்தனை நாள் என் கிட்ட உங்களால கோபத்தை காட்ட முடியும்?” அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
“கிய்யா… கிய்யா…” என்று குருவி சத்தத்தை எழுப்பி கொண்டு அவர்கள் ஜன்னல் அருகே நிற்க, அவள் அந்த குருவி அருகே நின்று அதோடு பேசினாள்.
“குருவி என்ன நீ இப்படி சத்தம் போட்டுக்கிட்டு என்னையே சுத்தி வர? நான் நம்ம வீட்டில் இருந்து இங்க வந்துட்டேன்னு நீயும் என்னை தேடி இங்க வந்துட்டியா?” அவள் கேட்க, அந்த குருவி, ‘ஆம்…’ என்பது போல் மேலும் கீழ் தலை அசைத்தது.
“உன்னை உன் வீட்டுக்கு போக சொல்லி, உன் குருவி கூட சொல்லுது.” அவன் கூற, அவன் முன் நின்று கொண்டு அவனை ஆழமாக பார்த்தாள்.
“என்னை முதலில் உங்க அம்மா விரட்டினாங்க. இப்ப நீங்க. அந்த ஆண்டவன் என்னை விரட்டப்படும் இடத்திலே வைக்கிறான் பாருங்களேன்” அவள் சிரிக்க, அந்த சிரிப்பு அவனை வதைத்தது.
“இலக்கியா…” அவள் விரக்தி சிரிப்பில் அவன் உடைந்து போனான்.
“உன்னை காயப்படுத்த கூடாதுன்னு நான் நினைக்குறேன். நீ நல்லாருக்கனுமுனு நினைக்குறேன். என்கிட்டே இருந்து விலகி போய்டு. என்ன பார்த்துக்க நீ வேண்டாம்.” அவன் கெஞ்சினான்.
“என்னை போ போன்னு எத்தனை நாளைக்கு விரட்டுவீங்க?” அவள் சவால் விட, “நீ விலகி செல்லும் வரை.” அவன் அழுத்தமாக கூறினான்.
“நான் விலகிடுறேன் அத்தான். நீங்க சரியானதும் நான் விலகி போய்டுவேன். இல்லை, நீங்க இப்பவே துர்காவை கல்யாணம் பண்ணிக்குறேன்னு…” அவள் கோரிக்கையை முடிக்குமுன் அவன் அவள் கைகளை வேகமாக பற்றி இழுக்க, அவள் அடுத்ததாக கேட்ட கேள்வியில் அவன் திக் பிரமை பிடித்தார் போல் நின்றான்.
சிறகுகள் விரியும்…