am21

ஆசை முகம் 21

 

உறக்கத்தில், தனது உணர்வுகளுக்குள் உத்வேகமூட்டி உல்லாச கிறக்கம் தந்தவள், உலாவலின்போது பாராமுகமாக ஒதுங்கிச் சென்றது, வேந்தனை மண்டை காயச் செய்திருந்தது.

வெட்டியாக இதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாத அளவிற்கு வேலைப்பளு வேறு.

அவளே இன்று அனைத்துமாகியிருக்க, அப்படியே விட்டுவிட முடியாத நிலை.

அவளை விடுத்து, அவனால் இனி இயங்க இயலுமா என்கிற எண்ணமே அவனை செயலிழக்கச் செய்துவிடும் அபாயத்தை உணர்ந்தே இருந்தான்.

வேலைப் பளுவிற்கும், வாணிக்கும் இடையே சிக்கி மீளமுடியாமல், வாணியை தன் வசமாக்கிடும் வழி புரியாது திணறியிருந்தான் வேந்தன்.

அனுசியா சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

பௌர்ணமி தினம்! 

காலையில் எழுந்தது முதலே வேந்தனைப் பற்றிய சிந்தனைதான்.

‘நாம ஒன்னு நினைக்கிறோம்.  இந்தப் பய பிடிகொடுக்காததால இன்னும் கல்யாண விசயம் பேசவே ஆரம்பிக்கல!  இன்னைக்கு விட்டா, இனி ஆடி பதினெட்டாம்பேறு! அதுவும் விட்டா ஆவணி வந்தாதான் பேசவே ஆரம்பிக்க முடியும்!’, என உள்ளூரப் புலம்பலோடு எதிலும் ஆர்வமின்றி இருந்தார் அனுசியா.

மகன் மதிய வேளை உணவிற்கு வந்திருந்தாலும், உடன் எதாவது இக்கு வைத்துக் கொண்டே பெரும்பாலும் வருவான்.  அல்லது வீட்டிற்கு யாரேனும் வந்திருப்பார்கள்.  ஆனால் இன்றோ வேறு எந்த இடர்பாடும் இன்றி அரிதாக நேரம் வாய்த்திட, “என்ன வேந்தா, அந்தப் புள்ளைக்கிட்ட பேசி, வர ஆவணில உங்க கல்யாணத்தை வச்சிக்கலாமா? என்ன சொல்ற!”, அரைமனதாகவே கேட்டார்.

ஏற்கனவே பிடி கொடுக்காததால், பிடிமானமில்லாமல்தான் பேச்தைத் துவங்கியிருந்தார் அனுசியா.

“உங்க இஷ்டப்படி செய்யுங்கம்மா!”

“…” மகனது பதிலில் ஆச்சர்யமாக, எதுவும் பேசாமல் வாயடைத்து வேந்தனையே பார்த்திருந்தார். 

‘அட நாம்பெத்த மகனே!  சொன்னது நீதானாடா?”, எனும் பார்வை அது.

சற்றுத் தயங்கியவன், “…ஆனா வாணிய ஃபோர்ஸ் பண்ண வேணாம்.  அவளுக்கும் இதுல முழு சம்மதம்தானானு கேட்டுட்டு, ஓகேனாப் பண்ணுங்க!”

“நிஜமாத்தான் சொல்றியா?”, இன்னும் தெளியாமல், தெளிய வேண்டி தெளிவாகக் கேட்டார் அனுசியா.

“வேணானாலும் விடமாட்டிங்கறீங்க!  சரி செய்ங்கனாலும் நம்ப மாட்டீங்கறீங்க!”, என அலுத்துக் கொண்டான் வேந்தன்.

‘என்னா நடிப்புடா சாமி! கீழ விழுந்துட்டு மீசைல மண்ணு ஒட்டலைனு!’ ஆனாலும் மனதோடு மகிழ்ச்சி அனுசியாவிற்கு.

“சரிப்பா!  அப்ப மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாத்திரலாம்ல!”

“ம்”

“அவங்க வழியில யாருகிட்டயும் பேசணுமா?”

“அதையும் அவகிட்டயே கேட்டுக்கங்க!”

மகனது ஆமோதிப்பில் அனுசியாவிற்கு தலைகால் புரியவில்லை.

புதியதாய் தனக்குள் ஏதோ ஆற்றல் மிகுந்ததுபோல ஒரு உணர்வு அனுசியாவிற்கு.

சந்தோசம் வந்தாலே, மற்ற அனைத்தும் வந்துவிடும்போல என எண்ணிக் கொண்டே நேரத்தைக் கடத்தாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டியதைப் பார்க்க முனைந்தார்.

இத்தனை எளிதாக வேந்தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வான் என நினைத்திருக்காததால் எழுந்த சந்தோசம் அது.

…………………………….

மீராவை அழைத்துக் கொண்டு, அன்றே நாள் குறிக்கச் சென்றிருந்தார்.

மீராவிற்கோ சற்று முன்பே இந்த நற்செய்தியை எதிர்பார்த்திருக்க, தாமதமானதும் கணவனிடம் விசாரித்தாள்.

அவனோ, ‘அப்டியா? எனக்கு தெரியலையே’ என்றதோடு, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிற பாவனையோடு போயிருந்தான்.

அனுசியாவிடம் பேசியபோது, “அந்தப் புள்ளைலாம் நல்லாதான் இருக்கு.  இவந்தான் பிடிகுடுக்காமத் திரியறான்”, எனப் புலம்பிட, அனைவரது எதிர்பார்ப்பும் புஸ்ஸென ஆகியிருந்தது.

அதன்பின், “ஆமாப்பா வேந்தன் சொன்னதுகூட சரிதான்னு தோணுது.  ஆனா அந்தப் பொண்ணு ரொம்ப துணிச்சலா இந்தக் காலத்துல இப்டி ஒரு முடிவெடுத்திருக்கு பாரேன்! 

ஆனா அது நடமுறைக்கு ஒத்து வராதுங்கறதைப் பத்தி சரியா யோசிக்கலையோன்னுதான் தோணுது. 

ஹாஸ்டல்லயே தனியா வளந்ததால எதுவும் தெரியாம இருக்குபோல.  ஆனாலும் அது இருக்கிற ரேன்ஞ்சுக்கு புரொபோசல்லாம் எதுவும் வராமையா நம்ம வேந்தனை ஓகே பண்ணிருக்கும்!

அதுக்காக நம்ம வேந்தனை குறைச்சு சொல்றேன்னு நினைச்சுக்காதே!

நம்ம வீட்டு ஆளுங்களோட வேந்தனை நிக்க வச்சா, பத்து வயசு குறைச்சுத்தான் சொல்ற மாதிரி இருக்கு! சிரிப்பு!

யாரும் இனி தனக்கில்லைங்கற ஒரு எண்ணத்துல வேணா வேந்தனை சரினு சொல்லியிருக்கலாம்ல?

ஒரு வேளை வேந்தனோட பேக்ரவுண்ட் தெரிஞ்சிட்டு, பணங்காசு இருந்தாப் போதும்னு முடிவெடுத்திருச்சோ?

அப்டினா அது பொழைக்கத் தெரிஞ்சதுதான்!

கல்யாணத்துக்கு முன்னயே இவங்க வீட்டதான பேஸ் பண்ணியிருக்கு.  பேரண்ட்ஸ் இருந்தே நம்மை கருவேப்பிலையவிட மட்டமா நடத்துதுங்க!  இதெல்லாம் என்ன பாடு படப்போகுதோ!’ இப்படிப்பட்ட இன்னும் ஏராளமான ‘லா’க்களைப் போட்டு பேச்சுகள் வந்து நண்பர்களது குடும்பத்தின் மத்தியில் ஓய்ந்திருந்த நேரம்.

திடுமென அழைத்து விசயத்தைக் கூறியதும் அத்தனை மகிழ்ச்சி.

ஆவணியில் இரண்டு, மூன்று தேதிகளை குறித்து வாங்கிக் கொண்டு, எல்லா நாள்களிலும் முகூர்த்த நேரத்தையும் குறித்து வாங்கிக் கொண்டு வந்தார்.

அன்றே வாணியிடமும் பேச எண்ணிட, பெண் செமினாருக்காக என தன்னை தயார் செய்து கொண்டிருக்கவே, பேச இயலாமல் போயிருந்தது.

கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம்,  அதன்பின் ரிசெப்ஷன் அவர்களின் தோதுப்படி பார்த்துக் கொள்ளட்டும் என நினைத்திருந்தார் அனுசியா.

இனி வாணியிடம் மனம் விட்டுப் பேசி அவளது நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு, மூன்று தேதிகளில் அவளுக்கு எது உகந்தது என்பதையும் கேட்டு முடிவு செய்ய வேண்டும்.

தேய்பிறையாக இருப்பதால் இனி வரும் தினங்களில் இதுபற்றி வாணியிடம் பேச வேண்டாம் என நினைத்திருந்தார்.  ஆடி பதினெட்டாம்பேறு அன்று நல்ல நாள்.  அன்றே இதுபற்றிப் பேசிக் கொள்ளலாம் என காத்திருந்தார் அனுசியா.

////////////////

கல்லூரி திறந்து இரண்டாமாண்டு வகுப்புகள் துவங்கி ஜரூராக பாடங்களை நடத்திட, அவளும் தனது கல்வியில் கவனம் செலுத்தியிருந்தாள்.

சத்தியேந்திரன் வார இறுதி நாள்களில் அவர்களது கடைக்கு வந்து செல்லும்படி அழைப்பு விடுத்த வண்ணமிருந்தார்.

ஆனால் இரண்டு நாள் விடுமுறையும் எப்படிப் போகிறது என்பதே தெரியவில்லை வாணிக்கு.

வேந்தன் இருந்தால் அவன் பார்க்காத போது பார்த்து, பார்க்கும் போது வேறு காட்சி பார்த்து, மதிய உணவிற்கு அவனுக்குப் பிடித்ததைச் செய்து(அனுசியா உபயம்) என இன்பமயமான பொழுதை தவிர்க்க விரும்பாமல் எந்த புதிய ஒப்பந்தமும் இன்றி இருக்க நினைத்தாள் வாணி.

அனுசியாவோடு வழமைபோல மாலை நேர பயிற்சி வகுப்புகளுக்கு உடன் சென்று வந்தாள்.

பயிற்சி வகுப்புகள் முடிந்து, அங்கு நடைபெறும், தியானம், அதன்பிறகு சிந்தனை விருந்து போன்றவற்றிலும் பங்கேற்ற பிறகுதான் இருவரும் வீடு  திரும்புவார்கள்.

……………

அன்றைய சிந்தனை விருந்து, பெண்ணது மனதோடு உழட்டிய வினாக்களுக்கு விடையளிப்பதாக அமைந்திட, பேச்சோடு ஒன்றியிருந்தாள் வாணி.

ஜெனிடிக் சென்டர் என்பது என்ன? அதற்கும், மைண்ட் அதாவது மனதிற்கும் இடையேயான தொடர்பு எத்தகையது என்பதை ஒன்றிரண்டு வார்த்தைகளில் கூறியதோடு, கருமையம்(ஜெனிடிக் சென்டர்) அலைச்சுழலுக்கு ஏற்ப விபரம் அறிந்த நாள் முதல் மரணம் வரையில் நடந்த, அறிந்த பதிவுகளை பதிந்து வைத்திருக்கும்.

ஒரு ஜனனம் நிகழும்போது, அதுவரை பதிந்த அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு  கடத்தும் தன்மையது என்பதைப் பற்றியும் கூறினார்.

நல்ல எண்ணங்கள், சொல்கள், செயல்கள் என வாழும் நிலையில், அவை பதிந்து, தனக்கும், அடுத்தடுத்த தலைமுறைக்கும் நல்ல விதமான எதிர்காலத்தையும், இனிமை நிறைந்த வாழ்வினையும், மேம்பட்ட வாழ்க்கையையும் தரும்.

இல்லையேல் அவரவரின் எண்ணங்கள், சொல், செயலுக்கேற்ற வாழ்வினையே, அடுத்த சந்ததிக்குக் கடத்தி அதனால் உண்டாகும் நிகழ்வுகளை தவிர்க்க இயலாமல் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் விளக்கினார்.

சில சமயங்களில் எண்ணுவது(நினைப்பது) எண்ணத்திற்குரியவரின் செயலுக்கு வராமல், அதே எண்ணம் அவரோடு மிகவும் நெருக்கமானவருக்கு செயலாக்கம் பெரும் என்பதையும் கூறினார்.

எடுத்துக்காட்டாக, சகோதர, சகோதரி இருவருக்கும் நோக்கங்கள் வேறு.  ஆனால் பெரும்பாலும் இருவரது தங்கல்கள், கற்றல்கள் ஒரே இடத்தில். 

சகோதரி அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சியடையும் முயற்சியில் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்திக்கிறார். 

ஆனால் அதே சமயம எந்த நோக்கமும் இன்றி, ஒரு முறை அதே தேர்வினை எதிர்பார்ப்பின்றி எழுதிய சகோதரன் வெற்றி பெற்று, பதவிக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

அதற்குக் காரணம், சகோதரியின் கற்றல் தொடர்பான எண்ணம், சகோதரனாலும் அவன் கல்லாமலேயே கிரகிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவனறிவோடு, சகோதரியின் எண்ணச் சேர்க்கையும் சேர்ந்திட, தேர்வில் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறான்.  மேலும் அவளது ஆழமான அரசுப் பணி பற்றிய எண்ணம், சகோதரனுக்கு எளிதாக செயலுக்கு வந்திருக்கிறது!

நல்ல எண்ணமெனில், அது யார் மூலம் செயலுக்கு வந்தாலும் அனைவருக்கும் நன்மையே.

மிகவும் அரிதாக, வாழ்நாள் முழுமையிலும் செயலுக்கு வராது போனால், அவரது ஜெனிடிக் சென்டர் மூலம், அவரது வம்சா வழியினரின் வழியே செயலாக்கம் பெரும் என நீண்டதொரு விளக்கம் அளித்திருந்தார்.

எண்ணம், ஜெனிடிக் மையம் இவை இரண்டும் இந்த வகையில் ஒன்றோடொன்று தொடர்போடு இருக்கக் கூடியது என்பதை தெளிவாக்கி இருந்தார்.

சிந்தனை விருந்து முடிந்ததும், சொற்பொழிவாற்றியவரிடம் சென்ற வாணி, தனக்கு சில சந்தேகங்கள் இது சார்ந்து இருப்பதாகவும், அதைத் தற்போது தீர்க்க இயலுமா எனக் கேட்டாள்.

அவரும் இசையவே, தனக்கு பரிட்சயமே இல்லாத நபரை முதன் முதலில் காணும்போது, நெருக்கமானவராகத் தோன்றிட என்ன காரணம் இருப்பதாக நீங்கள் கூறிய கருத்தின்படி கணிப்பீர்கள் எனக் கேட்டாள்.

“இப்போ நான் சொன்ன தகவல்களை கவனிச்சிருப்பீங்க.  எடுத்துக்காட்டா, பழகின நண்பர்கள் மட்டுமல்லாது, அருகே அவங்ககூட இருந்து பார்த்த நபர்களோட முகம், செயல், அவங்க பேச்சு எல்லாம் பதிய வாய்ப்பிருக்கு.

ஆனா ஒரே நிகழ்வோட பதிதலின் ஆழம் நபருக்கு நபர் வித்தியாசப்படும். அது அங்கிருந்த நபர்களோட ஆர்வம், எதிர்பார்ப்பு, மனநிலை, கவனத்தைப் பொறுத்தது.

எதோ ஒரு நிகழ்வு, அதீத சந்தோசத்தையோ, துக்கத்தையோ தந்திருந்தா அதைப்பற்றியே திரும்பத் திரும்ப யோசிப்போம். அப்போ அதனோட பதிந்த அளவின் அலைச்சுழலோட தன்மை, ஆழம் மாறுபடும்.

அது எந்தளவு அதிகமாகவும், ஆழமாகவும் பதிஞ்சிருக்கோ அதற்கு ஏற்ப, அவங்களுக்கோ, இல்லைனா, அவங்க வம்சா வழியில வர்ற உறவுங்களுக்கும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தில் பங்கெடுத்த நபர்கள் யாரையும் பார்க்கறப்போ அறிமுகமானதுபோல தோன்ற வாய்ப்பு இருக்கு”

வாணி, “அதுல பெற்றோர், பிள்ளைகள் அப்டிங்கற உறவா மட்டுந்தான் இருக்கணுமா?”

“அப்டி அவசியமில்லை.  அது அவங்க பாட்டன், முப்பாட்டன் இப்படி யாரா வேணா இருக்கலாம்.  கண்டிப்பா பேரண்டாத்தான் இருக்கணும்னு கட்டாயமில்லை”, என்றவர்

“தாத்தா நினைச்சதை, எந்த திணிப்பும் இல்லாம பேரன் நிறைவேத்துவான்.  அவனுக்கு அதைப் பத்தின யோசனை எதுவுமே இருந்திருக்காது.  ஆனா எதாவது நல்ல காரியத்துக்கு போயி மெனக்கெடுவான்.  இதுக்கு என்ன காரணம்னா, அவனோட தாத்தா, அந்த விசயத்தை சிறு வயது முதலே செய்யணும்னு நெனைச்சிட்டே இருந்து, கடைசிவரை செய்ய முடியாம இறந்திருப்பாரு.

ஆனா அவரோட பையனுக்கு அந்த அலைச்சுழல்ல பதிந்தது பயனில்லாம, செயலுக்கு வராமலேயே இருந்திருக்கும்.  ஏன்னா அவரு வாழ்ந்த வாழ்க்கை முறையில அந்த அலைச்சுழல அவரு கிராஸ் பண்ணாமலேயே வாழ்ந்திட்டுப் போயிருக்கலாம்.

அப்ப அந்த விசயம் பேரன் இல்லைனா பேத்தி மூலமாக நிறைவேறும்.

இதுல ஒரு ஆண் நினைச்சதை, ஆணேதான் செய்யணுங்கறதில்லை.  யாருக்கு அதற்கான வசதியும், வாய்ப்பும் அமையுதோ அவங்க செய்வாங்க.”, என்றிட

கனவைப் பற்றிக் கேட்க, “கனவுகள் நாம இருக்கற மனநிலை சார்ந்து எழக்கூடியதுதான்னு பொதுவான கருத்து இருக்கு.  இன்னும் சில கனவுகள் ஒன்னோட ஒன்னு தொடர்புபடுத்தியும் சொல்வாங்க.

அதாவது, நிறைய நீர் நிறைந்த பகுதியை கனவில் பாத்தா அதற்கேற்ற மாதிரி பண வரவு இருக்கும்னு சொல்றாங்க.  அதை சிலர் நம்பவும் செய்யறாங்க. 

சில கனவுகள் சம்பவம் நடக்குமுன்னயே வரும். அந்தக் கனவுகள் பலிச்சதா சொல்லுவாங்க. 

கனவுகள் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி மாறுபடுது. 

அப்டியிருக்க, ஜெனிட்டிக் சென்டர்கும், வரக்கூடிய கனவிற்கும் இருக்கற தொடர்பு பற்றிய ஆராய்ச்சிகள் போயிக்கிட்ருருக்கு, ஆனா கண்டிப்பா இருக்கும்னு நிச்சயமாச் சொல்ல முடியாது”, என்றிருந்தார்.

மேலும், “ஒரு தேடல் எண்ணம் வழியா நினைச்சிட்டே இருக்கும்போது, அதற்கான வாய்ப்புகள், இல்லைனா தேடுன விசயம் நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ கிடைக்கிறதற்கான வாய்ப்பு அதிகம்.  ஆனா அதில் தேடலோட எண்ணம் வலிமையா இருக்கணும்.  அப்டினா அது சாத்தியம்.  இந்த பிரபஞ்ச வீதிகள்ல எல்லாம் கொட்டிக் கிடக்கு.  நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு.  எது வேணுமோ அதை நம்ம எண்ணத்தாலேயே சீக்கிரமா அடையலாம்”, என நிறைவு செய்திருந்தார்.

பெண்ணிற்கு கிடைத்த தகவலை அசைபோட்டபடியே, தனது மனக்குழப்பங்களுக்கு ஓரளவு விடை கிடைத்திட்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பியிருந்தாள் வாணி.

அனுசியாவிற்கு வாணியின் பேச்சோ, சிறப்பு சொற்பொழிவாற்றியவரின் பேச்சோ மனதில் லயிக்கவில்லை.  அவரது சிந்தனை முழுக்க, வேந்தனையும், வாணியையும் சேர்ப்பதைப் பற்றி மட்டுமே இருந்தது.

……………………………………

‘அப்போ வேந்தன் மாமூ வீட்டு ஆளுங்களுக்கும், என் பேரண்ட் இல்லைனா, அவங்க வழியில யாருக்கோவும் ஏற்கனவே நல்ல பழக்கம் இருந்திருக்கு!   அதான் வேந்தன் மாமூவ, பாத்ததுமே ரொம்ப நெருக்கமாத் தெரிஞ்சிருக்காங்க!’, என தனக்குள் முடிவு செய்திருந்தாள் வாணி.

முத்துரங்கன் மாமாவிற்கு, வேந்தனை பரிட்சய முகமாகத் தோன்றிய போதும், யாரென சரியாகத் தெரியவில்லை என்பதும் மனதில் வந்து போனது பெண்ணிற்கு.

அப்படியென்றால் தனது அப்பா வழியில் தெரிந்த உறவினராக வேந்தனோ, அவனது குடும்பமோ இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள் வாணி.

பிறந்தது முதலே பெற்றோரின் புகைப்படங்களைப் பார்த்திராவளாதளால் தனக்குத்தானே யோசித்து அந்த முடிவுக்கு வந்திருந்தாள்.

அவளது தாய் வழிப் பாட்டியிடமும் அவர் இருக்கும்வரை இதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கத் தோன்றியதில்லை வாணிக்கு.

தற்போது முத்து மாமாவுடனும் பிணக்கு.  இனி யாரிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ள என மனம் ஓய்ந்தது.

பெற்றோரைப் பற்றிக்கூட அறிந்து கொள்ளாமல்போன தனது மடத்தனத்தை நொந்து கொண்டாள்.

தாய் பெயர், அபிராமி அரசி, தந்தை திருமேனி என்று மட்டும் தெரியும்.

இருவரையும் நிழற்படத்தில்கூட பார்த்திராத அவலம் அவளைக் கேலி செய்தாற் போலிருந்தது.

அனுசியா, வேந்தன் அனைவரும் தனக்கு அந்நியர்கள் அல்ல என்கிற மகிழ்வான எண்ணத்தோடு வீடு வந்தவளுக்கு, அடுத்த வந்த ஓரிரு நாளில் பெற்றோரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு எதிர்பாராது அமைந்தது

……………..

எண்ணம்!

நீள, அகல உடம்பின்

வெட்டும் புள்ளியின்

மையத்தை

மூலமாய்க் கொண்டு

புதையலாய்ப் பதிந்திருந்து,

சீவனில் எழுந்து,

மூளையால் நினைந்து,

மனதால் அறிந்து,

நிகழ்வால் உணர்ந்து,

தூரம், அளவு, காலம், பருமனால் கணி(ந்)த்து,

சிந்தையில் உறைந்து,

ஜனனத்தில் கடந்து,

ஜகமுள்ளவரை

எண்ணியதனைத்தும்

வெளியெங்கும்

சிதறிக் கொண்டேயிருக்கும்!

வீணே எண்ணிடாதே

தானே அகப்படுவாய்!

…………………………………………..