YALOVIYAM 1.1

YALOVIYAM 1.1

யாழோவியம்

அத்தியாயம் – 1.1

கன்னியாகுமரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை!

இரண்டு வாகனங்கள். ஒன்று இனோவா. மற்றொன்று சஃபாரி.

முகப்பு விளக்கின் ஒளி சாலையைக் காட்ட, இரண்டு கார்களும் சீரான வேகம் மற்றும் இடைவெளியில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

கட்சிக்காரர் வாகனமென்று பிரகடனப்படுத்தும் நோக்கில், இரண்டு காரிலும் எதிர்காற்றின் வேகத்திற்கு ஏற்ப கட்சிக்கொடி பறந்தது.

முன்னே செல்லும் இனோவாவில் இருக்கும் கட்சிக்காரரின் பெயர் ஜெகதீஷ். ஆளும் கட்சியின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அமைச்சர் பொறுப்பிலும் இருக்கிறார்.

பின்னே வரும் சஃபாரியில் இருப்பவன் ராஜா. ஜெகதீஷின் மகன். கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர். ஓட்டுனரைத் தவிர்த்து அவனுடன் மூன்று கட்சி ஆட்களும் வருகின்றனர்.

குடும்பத்தாருடன் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று விட்டு, ஜெகதீஷ் சென்னை திரும்புகிறார். இந்த இரவிலும் மனைவி மற்றும் மருமகளுடன் பேசிக் கொண்டே அவரது பயணம் இருந்தது.

முன்னிருக்கையில் இருந்தவர் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னே அமர்ந்திருந்த அவர் மருமகள் கவிதா, தன் ஏழுமாத வயிற்றைப் பிடித்துக் கொண்டு கால்களை இப்படியும் அப்படியும் அசைத்தபடியே இருந்தாள்.

அவள் அருகிலே அமர்ந்திருந்ததால், அவளின் அசௌகரியத்தைக் கண்ட அமைச்சரின் மனைவி அனுசியா, “என்ன செய்து கவி?” என்று கேட்டார்.

“ரொம்ப நேரமா உட்கார்ந்தே வர்றதுனால கால் பிடிச்சிக்கிச்சு அனு-ம்மா” என்றதும், “முதல கால நல்லா நீட்டி உட்காரு” என்று சொல்லிக் கொண்டே, அவளது முட்டியில் நீவிவிட்டார்.

“வேணா கொஞ்ச நேரம் காரை நிறுத்தவா? இறங்கி நிக்கிறியா?” என்று ஜெகதீஷ் கேட்டார்.

“வேண்டாம்! இருட்டா இருக்குங்க. பூச்சி ஏதாவது அலைஞ்சிகிட்டு இருக்கும்” என்று அனுசியா மறுத்துவிட்டார்.

மருமகளின் அசௌகரியத்தைப் பார்த்த ஜெகதீஷ், “ஹெட் லைட் வெளிச்சம் இருக்கு-ல? இன்னும் எவ்வளவு தூரம் போகணும், ரெண்டு நிமிஷம் இறங்கி நிக்கலாமே?” என்றார்.

அனுசியா, “சரிங்க” என்றதும், ஜெகதீஷ் கார் ஓட்டுபவனைப் பார்த்து, ‘ஓரமா நிறுத்து’ என்பது போல் சைகை செய்தார்.

உடனே காரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. முன் செல்லும் காரின் வேகம் குறைவதைக் கண்டதும், ‘என்னாச்சு?’ என்பது போல் ராஜா கண்கள் சுருக்கிப் பார்த்தான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனிடம், “தினா! வண்டியை நிறுத்து” என்றதும், அடுத்த சில நொடிகளில் இரண்டு கார்களும் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

அமைச்சரின் தேவை என்னவென பார்க்க, ராஜா வந்த காரிலிருந்த இரண்டு கட்சி ஆட்கள் இறங்கி வந்து, அவர் அமர்ந்திருந்த பக்கமாக நின்றனர்.

“அட, ஒன்னுமில்லை-பா! நீங்க போங்க” என ஜெகதீஷ் சொன்னதும், அங்கிருந்து நகர்ந்து, ராஜா இருக்கும் காரின் அருகே வந்தனர்.

வந்தவர்களிடம், “என்னவாம்?” என ராஜா கேட்டதற்கு, “ஐயா ஒன்னும் சொல்லலை தம்பி” என்றதும், அவன் இறங்காமல் இருந்து கொண்டு, “நீ போய் என்னென்னு பாரு தினா” என்று கட்டளையிட்டான்.

அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இறங்கிச் சென்றவன், கவி இறங்கும் பக்கம் வந்து, “என்ன அண்ணி?” என்று கேட்டான்.

கட்சியில் கணவனின் விசுவாசி என்பதால், “கொஞ்சம் நேரம் இறங்கி நிக்கணும் தினா” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னாள்.

“சரி, பார்த்து இறங்குங்க” என்று, அவள் இறங்க வசதியாகக் கதவைப் பிடித்துக் கொண்டதும், சிறு சிரமத்துடன் கவி இறங்கி நின்றாள்.

இந்தச் சாலையிலும், எதிர்புறம் இருக்கும் சாலையிலும் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் போய்க் கொண்டிருந்தன. இருட்டைக் கிழிக்கும் வேகத்தில் காற்று வேறு அடித்தது.

உள்ளிருந்தபடியே அனுசியா, “கவி இந்தப் பக்கம் வந்து நில்லு” என்று மைல்கல் வைக்கப்படும் சாலையின் ஓரத்தைக் காண்பித்தார்.

அவர் சொல் கேட்டு, இருவருமே சாலையின் ஓரத்தில் வந்து நின்றனர். வாகனங்கள் செல்லும் வேகத்திற்கும் இரவு நேர காற்றுக்கும் உடை ‘அங்கும்-இங்கும்’ பறந்தது.

இன்னும் இறங்காமல் இருந்த ராஜாவைப் பார்த்த தினா, ‘வா-ண்ணே’ என்பது போல் கையசைத்ததும், அவன் காரிலிருந்து இறங்கினான்.

கணவன் அருகில் வந்ததும், “கால் பிடிச்சிக்கிட்ட மாதிரி இருந்தது. அதான் ரெண்டெட்டு நடந்து பார்க்கலாம்னு” என இறங்கியதற்கான காரணம் கவி கூறியதும், ‘கேட்கிறேன்’ என்பது போல தலையசைத்தான்.

‘என்னாச்சு இவருக்கு? ஏன் இப்பெல்லாம் இப்படி இருக்கிறார்?’ என்று கேள்வி கவிதாவிற்குள் வந்தது.

அதே கேள்விதான் தினாவுக்கும்! முன்பு மாதிரி சுறுசுறுப்பாக, கலகலப்புடன் ராஜா இல்லை என்றே தோன்றியது. எனினும் “டீ வாங்கிட்டு வரவா-ண்ணே? பக்கத்தில ஹோட்டல் இருக்கு” என கேட்டான்.

‘வேணுமா?’ என்பது போல் ராஜா கவியைப் பார்த்ததும், ‘வேணும்’ என்று அவள் சிரித்ததைக் கண்டு, “இருங்க-ண்ணி வர்றேன்” என்று தினா வேக வேகமாகச் சென்றான்.

அவன் போனதும், கணவனின் கைப்பிடித்தபடி சிறிது தூரம் கவி நடந்தாள். கால்களில் ஏற்பட்டிருந்த பிடிப்புகள் நீங்கி, வயிற்றுச் சுமையைச் சற்று இலகுவாக உணர்ந்தாள்.

“இப்ப எப்படி இருக்கு?” என ராஜா கேட்டதற்கு, “பரவால்ல” என்றவள், “ஏன் இப்படி டல்லா இருக்கீங்க?” என்று கேட்டாள்.

‘ஒன்றுமில்லை’ என்கின்ற அர்த்தங்களுடன் தலையசைத்தான்.

கணவன் கொஞ்ச நாட்களாக எதையோ யோசித்துக் கொண்டே இருப்பது போல் தெரிந்ததால், “என்னாச்சு உங்களுக்கு?” என்று மீண்டும் கேட்டதற்கு, “ஒன்னுமில்லை கவி” என்று வாய் வார்த்தையாகச் சொன்னான்.

“அத்தை ஏதாவது சொன்னாங்களா?”

முகப்பு விளக்கொளியில் தெரிந்த மனைவியின் கவலை முகத்தைப் பார்த்து, “அம்மா என்ன சொல்லப் போறாங்க?” என்று கேள்வியிலே பதிலளித்தான்.

இங்கே ராஜா ‘அம்மா’ என்று சொல்வது, கவி ‘அத்தை’ என விளிப்பது லதா என்பவரை. அனுசியாதான் ராஜாவைப் பெற்றவர். லதா அவனை வளர்த்தவர்.

அனுசியாவிற்கு கணவரைப் போன்று அரசியலில் ஆர்வம், ஆசை அதிக அளவில் இருந்தது. எனவே ராஜாவிற்கு இரண்டு வயது ஆகும் போது, அவனை ஜெகதீஷின் நண்பர் மனைவி லதாவைப் பார்க்கச் சொல்லிவிட்டு, கட்சிக் கூட்டம், கட்சி அலுவலகம் என்று செல்ல ஆரம்பித்தார். 

முதலில் நாளின் சில மணி நேரங்கள் மட்டும் ராஜாவைக் கவனித்த லதா, அனுசியா தீவிர அரசியலில் ஈடுபடவும், முழுநேரமும் அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றார்.

அப்பொழுது லதாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதனாலும், அவர் பார்த்துக் கொண்ட விதத்தினாலும், ராஜாவிற்கு லதாவிற்கும் இடையே அம்மா-மகன் என்ற பந்தம் உருவாகியது. ஆதலால் அவரையும் ‘அம்மா’ என்றே அழைக்க ஆரம்பித்தான்.

லதாவிற்கு மகள் பிறந்த பின்னரும், ராஜாவுடன் இருக்கும் பந்தம் அப்படியே தொடர்ந்தது. வளர வளர லதாவின் மகள் அனுசியாவை, ‘அனும்மா’ என அழைத்தாள். இவளின் இந்த அழைப்பினாலே, கவி அனுசியாவை ‘அனும்மா’ என்றும், லதாவை ‘அத்தை’ என்றும் அழைக்கிறாள்.

தன் அரசியல் ஆர்வங்களையெல்லாம் அனுபவங்களாக மாற்றி, இன்று சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் அனுசியா, இன்றளவும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்காக ராஜா மீது பாசம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. தாய்க்கு மகன் மீது பாசமில்லாமல் போகுமா? அதெல்லாம் உண்டு. ஆனால் அதையும் தாண்டி அரசியல் களம் அவரை ஈர்த்திருந்தது. அவரது கனவாக இருந்தது.

அந்தக் கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த லதாவை அவருக்கு நிரம்ப பிடிக்கும். ஆதலால் என்றுமே லதா-ராஜா பந்தம் அனுசியாவிற்கு நெருடலாக இருந்ததே இல்லை.

அதே போலத்தான் ராஜாவும். பெற்றவர் மீது பாசம் உண்டு. அதையும் தாண்டி லதாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். ‘இது வேணும், அது வேணும்’ என அவரிடம் சென்றுதான் நிற்பான். அவனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று லதாவிற்கு அத்துபிடி!

இந்தப் பந்தத்தினால், லதா மகள் சுடர் மீதும் ராஜாவிற்கு அளவு கடந்த பாசம் உண்டு. இவர்கள் பாசம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்… சுடர், ராஜாவின் கூடப் பிறக்காத தங்கை!

இதோ இப்பொழுது கூட, இறுக்கமாக இருந்தவன் முகத்தில், சுடரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்ததும் இதமான முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது.  

கணவனின் முக மலர்ச்சியைப் பார்த்து, “சுடரா?” என்று கேட்டதற்கு, “ம்ம்ம்” என அழைப்பை ஏற்றான். ஆனால் அவன் பேசும் முன்னே, “கொடுங்க” என வாங்கி, “சொல்லு சுடர்” என்றாள் கவிதா.

“அண்ணி நீங்களா? ராஜாண்ணா இல்லையா? அவங்ககிட்டதான் பேசணும். எங்கே இருக்காங்க? என்ன பண்றாங்க?” என்று வரிசையாகக் கேள்விகள் கேட்கப்பட்டது.

“ஏய் சுடர்! என்கூட பேசமாட்டியா?”

“அண்ணி ப்ளீஸ் ராஜாண்ணா எங்க?”

“இரு! உன் அண்ணங்கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி, கைப்பேசியை ராஜாவிடம் கொடுத்ததும், அதை வாங்கியவன், “நீ போ” என்றான்.

“நான் உங்ககூட நிக்கிறனே” என ஆசையாகக் கேட்டதற்கு, “காத்து அடிக்குது கவி. உள்ளே போய் உட்காரு” என்று மறுத்துவிட்டான்.

அவன் அப்படிச் சொன்னபின், திரும்பி நடந்து இனோவா நிற்கும் இடத்திற்கு வந்தவளிடம், “அவன் என்ன அங்கயே நிக்கிறான்?” என அனுசியா கேட்டார்.

“ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி, காரினுள் ஏறி கவி அமர்ந்ததும், “நல்லா கால் நீட்டி உட்காரு கவி” என அனுசியா சொல்லும் பொழுதே, “அண்ணி காஃபி” என்று ஒரு பேப்பர் கப்பைக் கொண்டு வந்து தினா நீட்டினான்.

அதை வாங்கியவள், “நீங்க போங்க தினா” என்றதும், “அண்ணனுக்கு எலெக்ஷன் டென்சன் போல அண்ணி. அதான் இப்படி இருக்கு. சீக்கிரம் சரியாயிடும்” என்று சொல்லி, அங்கிருந்து சென்று, காலாற நடந்து கொண்டிருந்த கட்சி ஆட்களுடன் சேர்ந்து கொண்டான்.

தினா சென்றதும் மாமியாரின் முகத்தைப் பார்த்து, “அவர் ஏன் இப்படி இருக்கிறான்னு உங்களுக்குத் தெரியுமா அனும்மா?” என்று கேட்டுப் பார்த்தாள்.

ராஜா, ஜெகதீஷ் போல அவரும் கட்சி வேலைகள், தேர்தல் பரப்புரைகள் என்று பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருப்பதால், ‘தெரியலையே’ என்பது போல் தலையசைத்தார்.

முன்னேயிருந்த மாமனாரிடம், “நான் கேட்டுப் பார்த்தேன் மாமா. அவர் எதுவும் சொல்லலை. நீங்களாவது கேளுங்களேன்” என்றதற்கு, ஏனோ ஜெகதீஷ் பதில் பேசாமல் இருந்தார்.

‘மற்றதெல்லாம் மாமா நல்லா பேசுவார். ஆனா அவரைப் பத்திக் கேட்டா மட்டும் பதில் சொல்றதில்லை’ என நினைத்துக் கொண்டவள், அதன்பின் யாரிடமும் எதுவும் கேட்காமல் இருந்து கொண்டாள்.

மனதிற்குள், ‘அத்தைகிட்ட ‘ஏதாவது சொன்னாறா-னு?’ கேட்கணும். இல்லை, ‘ஏன் இப்படி இருக்காருன்னு?’ கேட்கச் சொல்லணும்’ என முடிவெடுத்த கவி, பின்னால் திரும்பி ராஜா நிற்பதைப் பார்த்தாள்.

கார் விளக்கின் ஒளியில் கணவனின் உருவம் நன்றாகத் தெரிந்தது. இந்த வயதிலே கட்சியின் தகவல் தொழிநுட்ப அணி செயலாளர் பதவி. கட்சியில் அவனுக்கென்று இருக்கும் சிறு செல்வாக்கு. அடிமட்ட தொண்டர்களுடனும் சகஜமாகப் பேசும் குணம். எவ்வளவு கட்சிப் பணிகள் இருந்தாலும், தனக்காக அவன் ஒதுக்கும் நேரங்கள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்ததும் நிறைவான வாழ்கை தரும் நிம்மதி கவி முகத்தில் வந்தது. ஆனால் சமீப காலமாக அவனது நடவடிக்கைளில் தெரியும் மாற்றங்கள் அவள் நிம்மதியை விரட்டியது.

எப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டு, ‘ஏன் இப்படி இருக்கீங்க?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருப்பவனைப் புரிந்து கொள்ள முடியாமல் கவி தவித்தாள்.

இதே நேரத்தில், ராஜாவும் சுடரும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன சுடர் இந்த நேரத்தில ஃபோன் பண்ணியிருக்க?”

“ஒரு பிரச்சனை ராஜாண்ணா” என்று சோகமான குரலில் சொன்னதும், “என்ன? லவ்-ல ஏதாவது பிரச்சனையா?” என கேட்டான்.

‘தன் காதல் பற்றி வேறு யாருக்கும் தெரிந்திடுமோ?’ என்ற பயத்தில் “ஐயோ ராஜாண்ணா! பக்கத்தில யாராவது நிக்கிறாங்களா?” என்று சிடுசிடுத்தாள்.

“யாரும் இல்லை. முதல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு?”

“அப்படியெல்லாம் இல்லை! இது வேற ராஜாண்ணா” என்று சுடரின் குரல் கைப்பேசி வழியே வந்து கொண்டிருந்த சமயத்தில், ராஜா நின்ற இடத்தில் ‘டமால்’ என்றொரு சத்தம்!

அது கேட்டவுடனே கிரீச்சென்ற என்ற ஒலியுடன் வாகனங்கள் நிறுத்தும் சத்தமும் கேட்டது. சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ராஜா கைப்பேசி நழுவியது. ‘என்ன?’ என்று திரும்பிப் பார்த்தவன், கண் இமை அசையாமல் அப்படியே நின்றான்.

இதற்கிடையே நடந்த கோரத்தைப் பார்த்த தினாவிற்கு வாய் திறந்து பேச முடியவில்லை. மேலும் உடல் தள்ளாடியது. அவனால் நடந்ததை ஜீரணிக்கவே இயவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போலிருந்தது. கண்கள் கலங்க நின்றான்.

சட்டென அவனுக்கு ராஜாவின் நியாபகம் வந்ததும், “அண்ணே! இப்படி ஆயிடுச்சே?” என்று துடிதுடித்தபடி அவனருகில் வந்து, அவனை ஆறுதலாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

ராஜாவை வலுவாகத் தன் கைக்குள் நிறுத்திக் கொண்டு, “இங்கயே நில்லு-ண்ணே. இப்படியே நில்லு. அங்க இப்ப போக முடியாது” என்று தினா திக்கித் திணறிச் சொன்னான்.

இன்னும் நடந்ததையே கருவிழி நகராமல் பார்த்த ராஜாவின் தாடையை அழுத்திப் பிடித்துத் திருப்பி, “அங்கேயே பார்க்காத-ண்ணே. கஷ்டப்படுவ” என்று சொல்லுகையிலே தினா கண்ணீர்விட்டு அழுதான்.

இதற்குள் நடந்த விபத்தை வேடிக்கைப் பார்க்க, அந்த நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆட்கள் கூடியிருந்தனர். இருள் நேரத்தை வெளிச்சமாக்கும் படி நிறுத்தப்பட்ட வாகனங்களில் விளக்கொளிகள் இருந்தன.

கட்சி ஆட்கள் காவல் துறை, 108, கட்சி மேலிடம் என நடந்த விபத்தைப் பற்றிய விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

விபத்திற்குக் காரணமான டேங்கர் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் சாலையின் புதருக்குள் தூக்கி எறியப்பட்டிருந்தார். அந்த இருளிலும், ஒரு சிலர் துணிந்து புதருக்குள் இறங்கி, கைப்பேசி டார்ச் துணைகொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்.

சிலர் விபத்து நடந்திருந்த இடத்தைக் காணொளிக் காட்சிகளாக மாற்றிக் கொண்டிருந்தனர்.

காணொளி காட்சி??

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பெரிய டேங்கர் லாரி, சாலை ஓரத்தில் நின்ற அமைச்சர் குடும்பம் இருந்த வாகனத்தின் மீது மோதியிருந்தது. இதனால் வந்ததே அந்த ‘டமால்’ என்ற சத்தம்.

மோதிய வேகத்தில் லாரியின் முன்பாகம் முழுவதும் இனோவாவின் மேல் ஏறி, பின்னால் நின்று கொண்டிருந்த சஃபாரியையும் இடித்து தள்ளியிருந்தது. இதில் அடையாளமே தெரியாத அளவிற்கு இனோவா நசுங்கிப் போயிருந்தது.

இந்த விபத்து நடந்த அதிர்ச்சியில் சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் கிரீச்சென்ற என்ற ஒலியுடன் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

மூன்று வாகனங்களில் ஏதோ ஒன்றிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் இருந்ததால் ஆட்கள் நெருங்கவே பயந்து கொண்டிருந்தனர்.

லாரியின் ராட்சச டயர்களுக்கு அடியில் சிக்கி இருக்கும் இனோவாவில் எந்தப் பாகமும் இனிமேல் உபயோகப்படுத்த முடியாது என்பது போல உருக்குலைந்திருந்தது.

காரில் இருந்த அமைச்சர் ஜெகதீஷ், அனுசியா, ராஜாவின் மனைவி கவி மற்றும் ஓட்டுநர் பையன் அனைவர்க்கும் அதே நிலைமைதான்.

ஒரே நொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

என்னவொன்று பின்னால் நின்ற சஃபாரியில் இருந்தவர்கள் வெளியில் இருந்ததால் பிழைத்துக் கொண்டார்கள். இல்லாவிடில் அவர்களின் கதியும் இதேதான்.

சற்று நேரத்திற்குப் பின்…

காவலர்கள், தீயணைப்பு துறையினர் வந்திருந்தார்கள். ஆம்புலன்ஸ் ஒன்று நின்றது. லாரியை அகற்றி சடலங்களை மீட்கும் பணி நடந்தது. ஆட்கள் கூட்டம் குறைந்திருந்தது. நிறுத்தப்பட்ட வாகனங்கள் சென்றிருந்தன.

இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையின் ஓரத்தில் இருந்த மைல்கல் மேல் ராஜா சாய்ந்து அமர்ந்திருந்தான். அழலாம் செய்யவில்லை. ஆனால் அழுத்தமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை, அரசு மருத்துவமனை

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுனர் தப்பிச் சென்று விட்டதால், அவரைத் தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேப் பரிசோதனைக்காக, விபத்து நடந்த இடத்திலிருந்து உடல்கள் இங்கே எடுத்து வரப்பட்டிருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கட்சி ஆட்கள் நின்றனர்.

மருத்துவமனை நடைக்கூடத்தில் கிடந்த நாற்காலி ஒன்றில் ராஜா அமர்ந்திருந்தான். இன்னும் முகத்தில் அழுத்தம் அப்படியே இருந்தது. யாரிடமும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. யாரையும் அருகில் வரவிடவில்லை.

அதே நடைக்கூடத்தில் ஒரு ஓரத்தில் தன் நண்பனின் இழப்பைத் தாங்க முடியாமல் அமைச்சர் லிங்கம் இடிந்து போய் நின்று கொண்டிருந்தார். அவரும் ஆளுங்கட்சியின் அமைச்சர்தான்.

இருவரும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து, படிப்படியாக முன்னேறி இன்று ஆளுங்கட்சியின் அமைச்சர் என்ற பதவியை அடைந்தவர்கள். கட்சியில் இருப்பவர்கள் பொறாமை படும் வண்ணம் இருவரின் நட்பு இருக்கும்.

ஜெகதீஷை இழந்த சோகத்தில் மனிதர் ஓய்ந்து போயிருந்தார். சில சமயங்களில் தன்னை மறந்து, பொது இடம் என்று கூட பார்க்காமல் லிங்கம் கண்களில் நீர் கோர்த்தது.

அது போன்ற நேரங்களிலெல்லாம், அவர் மனைவி லதா-தான் ஆறுதலாகக் கைப்பிடித்துக் கொண்டார். லதாவும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டுதான் இருந்தார்.

லிங்கத்தை திருமணம் செய்து வந்ததிலிருந்து, அனுசியா-ஜெகதீஷ் தம்பதியருடன் ஒரு குடும்ப உறவாய் வாழ்ந்து வந்தவர். இரத்த சம்பந்த உறவை இழந்தால் ஒருவரது மனம் எப்படி நிலைகொள்ளாமல் துடிக்குமோ, அதே நிலைதான் லதாவினுடையதும்!

அதுமட்டுமில்லாமல் ராஜா, அவர் கைகளில் வளர்ந்த பிள்ளை. ‘அவனுக்கு இப்படி ஒரு கஷ்டம்’ என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

லதாவின் தேர்வுதான் கவி. ராஜாவிற்குக் கவியை அவ்வளவு பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். அவளின் இழப்பை எப்படி ஜீரணிக்கப் போகிறான்? என்று கவலையில் அவரின் கண்ணீர் இன்னும் அதிகமானது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ராஜாவைப் பார்த்தார். சுடர்தான் அவன் அருகில் இருந்தாள். அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கடுங்கவலையில் கண்கள் கலங்கியபடி, ‘இப்படி இருக்காத, அழுதிடு” என சுடரும், தினாவும் அவனிடம் சொல்லிப் பார்த்தனர். இருந்தும் அழுத்தமாக இருந்தான்.

அக்கணம்… உடற்கூறு முடிவடைந்த நிலையில், “இதுல ஒரு சைன் போடுங்க” என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை நபர் ஒருவர் வந்து நின்றார்.

கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அதன்பின் மருத்துவமனை நடைமுறைகள் எல்லாம் முடிவடைந்து, இறந்தவர்கள் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன்பிறகான அந்த தினத்தை… அந்தக் குடும்பமும், கட்சி உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தி கவலைப்பட்டே கடந்து வந்தார்கள்.

Leave a Reply

error: Content is protected !!