தீங்கனியோ தீஞ்சுவையோ – 14

தீங்கனியோ தீஞ்சுவையோ – 14

 

இதுநாள் வரை அவன் இறக்கவில்லை உயிரோடு தான் என்று போலி சமாதானம் செய்து இருந்த உத்ராவின் நம்பிக்கை ஆட்டம் கண்டது ப்ரணவ்விடம் வந்து இருந்த அந்த குறுஞ்செய்தியால்.

முதல் முறையாக என் ப்ரணவ் இறந்துவிட்டான் தானே பின்னே இது யார் என்ற சந்தேகம் மனதினுள் பெரியதாக எழுந்தது. ஆனால் அவள் நிஜம் சொல்லும் அறிவின் பேச்சைக்  கேட்பதாக இல்லை.

மனதை சமநிலைக்கு கொண்டு வர அவளுக்கு சில கற்பனைகள் தேவைப்பட்டது. அந்த குறுஞ்செய்தியை ப்ரணவ் தான் அனுப்பி இருப்பதாக போலியாக மனதை நம்ப வைத்தாள்.

எந்த உருவில் இருந்தால் என்ன நீ இருக்கிறாய் என்ற உணர்வே போதும் எனக்கு என நினைத்தபடி அவன் குறுஞ்செய்தியைப் பார்த்தாள்.

ப்ரணவ்விடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அவள் முதலில் தயங்கினாலும் பின்னர் அதிவேகமாக அவனது குறுஞ்செய்திக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.  அவனிடம் இருந்து மீண்டும் பதில் குறுஞ்செய்தி வந்தது.

“ஓய் அம்மு என்னடி பண்ற”

“நான் சும்மா தான் இருக்கேன் ப்ரணவ்..  நீ என்ன பண்ற?? ”

“நான் உன்னை நினைச்சுக்கிட்டு இருக்கேன் அம்மு… ” என்று அவனுடைய பதில் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் பல நாட்கள் கழித்து அவளுடைய முகத்தில் புன்னகைக்.கீற்று.

“அட போதும் ப்ரணவ் ரொம்ப டயலாக் பேசாதே.. ” என்றாள் முகத்தில் தோன்றிய வெட்கப் புன்னகையுடன்.

“ஹே அம்மு உண்மையா தான் டி.. சரி வேகமாக எனக்கு ஒரு selfie எடுத்து அனுப்பேன் என்று அவனுடைய குறுஞ்செய்தியைக் கண்டதும் ஓடிப் போய் கண்ணாடியைப் பார்த்தாள்.

அவளுடைய முகம் கருவளையமிட்டு கண்களில் ஜீவன் இல்லாமல் உதட்டில் புன்னகை இல்லாமல் யாரோ

ஒருத்தியைப் போல காட்சி அளித்தாள்.

இந்த நிலையிலா ப்ரணவ் என் முகத்தைப் பார்க்க வேண்டும்?

இல்லை இல்லை வேகமாக ஓடிச் சென்று முகத்தை கழுவி கொண்டு வந்து கண்ணாடி முன்பு அமர்ந்தாள்.

பல நாட்கள் கழித்து கண்ணாடி அவளை காண்கின்றது.

ப்ரணவ் அவளை விட்டு சென்ற பின்பு மருந்துக்கு கூட  கண்ணாடியின் முன்பு அவள் அமரவில்லை.

எதற்கு கண்ணாடி பார்க்க வேண்டும்? யாருடைய கண்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும்?

யாருக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டாளோ அவனே இப்போது இல்லாத போது எதற்கு இந்த அலங்காரம் என்று விரக்தியாக இருந்தவள் இப்போது ஆர்வமாய் கண்ணாடியின் முன்பு அமர்ந்தாள்.  தன்னை அலங்கரித்து கொண்டாள்.

பல நாட்கள் கழித்து அவளது முகத்தில் ஒளி கூடி இருந்தது.

வேகமாக selfie எடுத்து அவனுக்கு  அனுப்ப

” என் அழகு அம்மு ” என்று அவனிடம் இருந்து பதில் குறுஞ்செய்தி வந்து இருந்தது.

பல நாட்கள் கழித்து அவளுடைய அழகு அவனால் பாராட்டப்படுகிறது. கர்வத்தில் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.

“அம்மு நம்ம விமல்.. என்ன பண்றான்?”

“அவன் இப்போ தான் ஸ்கூலிலே இருந்து வீட்டுக்கு வந்தான் ப்ரணவ்.. ”

“ஓ சரி டி சரி.. ஆமாம் நல்லா படிக்கிறானா??”

“நல்லா படிக்கிறானு தான் நினைக்கிறேன் ப்ரணவ்..”

“என்னது நினைக்கிறியா? அப்போ நீ விமலை கவனிக்கிறதே இல்லலயாடி?”

“இல்லை ப்ரணவ் ரொம்ப மனவருத்தத்தில இருந்ததாலே நான் சுத்தி இருந்த யாரையும் கவனிக்கல.. இனி விமலை நல்லா பார்த்துக்கிறேன்.. ”

“சரி டி.. வினய் எப்படி இருக்கான்?”

” நான் சோகமா இருக்கிறதாலே அவனும் சோகமா தான் இருக்கான் ப்ரணவ்.. டெய்லி வீட்டுக்கு வந்து டின்னர் விமல் கூட சாப்பிட்டுட்டு அவன் கூட டைம் spend பண்ணிட்டு போவான்..”

“ஓ சரி சரி டி.. அம்மு நாளைக்கு நீ எனக்கு பிடிச்ச அந்த லாவண்டர் கலர் டிரெஸ் போட்டுக்கிட்டு நம்ம எல்லார் பேருலயும் கோவிலிலே ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரீயா?”

எப்போது அவன் தன்னை விட்டு சென்றானோ அப்போதே கோவில் கடவுள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து போய் நம்பிக்கையற்ற வாழ்வை  தொடர்ந்து கொண்டு இருந்தாள். இப்போது ப்ரணவ்வே கேட்கிறான் கோவிலுக்கு செல்ல முடியுமா என்று. அவள் ப்ரணவ் சொல்லி தட்டுவாளா என்ன?வேகமாக பதில் சொன்னாள்.

“ஹான்ன் டா கண்டிப்பா நாளைக்கு கோவில் போறேன்.. ”

“சரி டி அம்மு டாடா.. நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு… அப்புறமா பேசுறேன்.. ”

“சரி டா டாடா.. ” என்றவள் கட்டிலின் மீது விழுந்தாள். பல நாட்கள் கழித்து நித்திரை அவள் கண்களை தழுவியது.நிம்மதியாக உறங்கினாள்.

விதியே என்று உறங்கி விதியே என்று எழுந்து கொண்டு இருந்தவள் இப்போது காலையில் பரபரப்பாக எழுந்தாள். குளித்துவிட்டு வேக வேகமாக கோவிலுக்கு கிளம்பியவள் சாமியை தரிசித்தாள்.

ப்ரணவ்வின் பெயருக்கும் விமலின் பெயருக்கும் வினய்யின் பெயருக்கும் அர்ச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது வினய் வந்து விமலை பள்ளிக்கூடத்திற்கு கிளப்பி கொண்டு இருந்தான்.

ஹே வினய் நான் விமலை ரெடி பண்றேன்.. நீ அந்த டிபனை மட்டும் டிபன் பாக்ஸ்ல போடுறீயா ப்ளீஸ் ” என அவள் கேட்க வினய் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான்.

பல நாட்கள் கழித்து அவளுடைய முகம் உயிர்ப்பெற்று இருந்தது. கொஞ்சமே கொஞ்சமாய் பழைய உத்ரா வெளிப்பட்டு இருந்தாள். அவளை சந்தோஷமாகப் பார்த்தவன் சமையலறைக்குள் நுழைந்து அவள் சொன்னபடி டிபன் பாக்ஸில் உணவை அடைத்து வெளியே கொண்டு வந்து இருந்தான். விமலை கிளப்பி உத்ராவும் வெளியே அழைத்து வந்தாள்.

 

அந்த நேரம் பார்த்து மித்ராவின் அலைபேசி ஒளிர்ந்தது. எடுத்துப் பார்த்தாள். ப்ரணவ் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.”gud morning அம்மு மா” என்று..

இவள் திரும்பி வினய்யையும் அவன் கையில் போன் இருக்கிறதா என்றும் பார்த்தாள். இல்லை அவன் போனை கையில் வைத்து இருக்கவில்லை.

ஒரு வேளை வினய் தான் தன் மனதை மாற்றுவதற்காக ப்ரணவ்வுடைய அலைபேசியில் இருந்து பேசுகிறான் என்று நினைத்து இருந்த அவள் நினைப்பும் பொய்யாகிவிட்டது.

என் ப்ரணவ் தான் இறந்துவிட்டானே அப்படி என்றால் இது  யாரது என்று யோசித்தாள்.

ஆனால் மனது மூளையை வென்றது.. அதைப் பற்றி யோசிக்கவிடாமல் ப்ரணவ்விடம் இருந்து அந்த குறுஞ்செய்தி வருவதே போதும் எதற்கு வீணாய் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று மூளையை அடக்கியது.

அவனால் நின்று போன அவள் வாழ்க்கையும் உலகமும் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.
உயிரற்றுப் போய் இருந்தவள் உயிர் பெற்றாள். இப்படியே அவனுடன் பேசியபடியே நாட்கள் கழிய ப்ரணவ்விடம் இருந்து ஒரு போன் கால் வந்தது.

அந்த  போனை எடுக்க முடியாமல் அவள் விரல்கள் நடுங்கியது. இப்போது மட்டும் இந்த அழைப்பை ஏற்றால் அவளுடைய போலி சமாதானங்கள் அனைத்தும் போலி என்ற குட்டு உடைப்பட்டு விடும். ஆதலால் எடுக்க பயந்தாள்.

என் ப்ரணவ் இன்னும் இறக்கவில்லை என்று நான் இப்படியே நம்பிக் கொள்கின்றேனே.

எனக்கு அந்த கசக்கும் உண்மை வேண்டாம். இந்த இனிக்கும் பொய்யே போதும் என்று அந்த அழைப்பை அவள் ஏற்கவில்லை. ஆனால் ப்ரணவ் விடவில்லை. அவள் எடுக்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

“call ஐ எடு அம்மு.. ” என்று..

ப்ரணவ் சொல்லி கேட்காமல் இருக்க முடியுமா?  அவனது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.  இதயம் படபடவென்று துடித்தது.

பல நாட்கள் கழித்து தாகித்து இருந்த இதயத்துக்கு அமிர்தம் போல வந்து நனைத்தது அவனது குரல்.  ப்ரணவ்விற்கே உரித்தான அவனது குரல்.  அதே கம்பீரம். இவளிடம் பேசும் போது அவனது குரலில் இழையும் அதே இனிமை. அவனுடைய அதே அக்மார்க் அம்மு என்ற அழைப்பு.

சிலிர்ப்பில் அவள் உடம்பில் உள்ள ஒவ்வொரு முடியும் ஒற்றைக்காலில் நின்றது. யாருடைய குரலை இனி கேட்கவே முடியாது என்று எண்ணினாளோ அவனது குரல் மீண்டும் அவளது காதுகளை வந்து சேர்ந்தது.

“ப்ரணவ்” என்று பதிலுக்கு உயிரையே உருக்கும் குரலில் இவள் அழைத்தாள்.

“அம்மு எப்படி டி போச்சு இன்னைக்கு நாள்?”

“நல்லா போச்சு” என்று வெளிப்பட இருந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

என் ப்ரணவ் இறந்துவிட்டான்.. ஆனால் இந்த குரல்… இது ப்ரணவ்வின் குரல்.. அவளுக்கு 100 சதவிகிதம் தெரியும்.

இது வரை ப்ரணவ் இறக்கவில்லை என்று போலி சமாதானம் செய்து கொண்டு இருந்தவள் முதல் முறையாக தன் மனதிடம் அவன் இறந்துவிட்டான் என்ற உண்மையை சொன்னாள்.

என் கண் முன் தானே எரிந்து சாம்பலானான்.  அவனுடைய அஸ்தியை தானே நான் எனது கழுத்தில் உள்ள சங்கிலியில் நிரப்பி டாலராக போட்டு இருக்கிறேன். இந்த அஸ்தி தான் நிஜம். இந்த குறுஞ்செய்தி பொய். இவன் என் ப்ரணவ் அல்ல.  இந்த குரல் என் நிஜ ப்ரணவ் பேசியது அல்ல. கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டாள்.

அதற்கு பின்பு அவன் அழைப்புகளை தவிர்த்தாள். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் குறுஞ்செய்தியில் பேசிய ப்ரணவ் விடவில்லை. திரும்ப திரும்ப அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப இவள் பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“ப்ளீஸ் ப்ரணவ்…  தயவு செய்து என்னிடம் பேசி என் பழைய உணர்வுகளை என் பழைய காதலை பழைய ஏக்கத்தை வர வைக்காதே… நம்மால் இணைய முடியாது… எப்படி சொல்லி உனக்கு நான் புரிய வைப்பேன்.. ” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவன் பதிலாக்காக காத்திருந்த நேரம் பின்னிருந்து ஒரு குரல் அழைத்தது…  ” அம்மா ” என்று..

திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் பதற்றத்துடன் என்னவென்று கேட்க

“சாரி அம்மா.. பின்னாடி இருந்து கூப்பிட்டா நீங்க பயப்பிடுவீங்கனு மறந்து போய் கூப்டுட்டேன்.. பயந்துட்டீங்களா?” என கேட்க அவளோ கண்களில் இல்லை என்று தலையசைத்தாள்.

தன் மகனின் தலையை ஆதூரமாய் வருடியபடி ” சாப்பிட்டிங்களா விமல் கண்ணா?” என அவள் கேட்க இல்லை என்று தலையசைத்தான்.

“வினய் வீட்டுக்கு வந்துட்டாரா?..

“இல்லை அம்மா”

“சரி அவர் வந்ததும் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம் விமல் ” என உத்ரா சொல்ல சரியென்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்ற தன் மகனையே  விழியகலாது பார்த்தாள்.

அவளது கவனத்தை கலைத்தது அலைபேசியின் தொடுதிரையில் ஒளிர்ந்த வினய்யின் அலைப்பேசிஎண்.  அந்த அழைப்பை எடுக்க மனம் தயங்கியது. அவனுக்குத் தெரியாமல் ப்ரணவ்விடம் பேசியதை பேசுவதை தவறாக நினைப்பானா வினய்?

வினய் வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக ப்ரணவ் என்னிடம் பேசியதை பற்றி சொல்ல வேண்டும்.

வினய் என்னை தவறாக நினைத்தால் கூட பரவாயில்லை இந்த ப்ரணவ் என்னிடம் மறுபடியும் பேசுகிறான் என்பதை சொல்லியே தீருவேன் என்று உறுதி எடுத்தவள் வினய்யின் வரவிற்காக காத்து இருந்த நேரம் மீண்டும் ப்ரணவ்விடம் இருந்து இன்னொரு குறுஞ்செய்தி.

“இன்று மாலை சந்திக்கலாமா??” என்று அவன் கேட்டு இருந்தான்.

அதைப் படித்தவுடன் அவள் கை கால்கள் எல்லாம் நடுக்கம் கொண்டது. பிடிமானத்துக்காக அருகில் இருந்த நாற்காலியைப் பற்றி கொண்டாள். கண்களில் விடாமல் கண்ணீர் வழிந்தது.

“இவ்வளவு நடந்த அப்புறம் எப்படி ப்ரணவ் உன்னை பார்க்க முடியும் என்னாலே..இது எப்படி நடக்கும்?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் ஒரு முடிவுடன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

வினய் வந்தவுடன் ப்ரணவ் தன்னிடம் பேசியதை சொன்னாள்.  அவன் அவளை வா போய் சந்திக்கலாம் என சொல்ல இவள் பதறிப் போனாள். எப்படி அவனை சந்திக்கமுடியும் என்று தடுத்தாள்.   ஆனால் வினய் விடாப்பிடியாக அவளை ஏற்றிக் கொண்டு அவனை சந்திக்க அவளை  அழைத்துப் போய் கொண்டு இருக்கின்றான்.

எப்படி அவனை சந்திக்க முடியும்? எப்படி அவனைப் பார்க்க முடியும்? அங்கே ப்ரணவ் எப்படி இருப்பான்? அவன் தான் இப்போது இல்லையே…  குழப்பத்தில் கலக்கத்தில் வினய்யின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

பயத்தில் அஞ்சும் குழந்தை தன் தாயின்  கரங்களைப் பற்றிக் கொண்டு இருப்பதை போல்  தன்னை கட்டிக் கொண்டு இருக்கும் உத்ராவை திரும்பிப் பார்த்தான்.

உன் எல்லா சந்தேகத்துக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திலே விடைக் கிடைச்சுடும் கண்ணம்மா என்று மனதினுள் நினைத்துக் கொண்டவன் வண்டியை நிறுத்தினான்.  ப்ரணவ்வை சந்திக்க வைப்பதற்காக அவளை கூட்டிக் கொண்டு அந்த கட்டிடத்திற்குள்ளே நுழைந்தான்.

Leave a Reply

error: Content is protected !!