YALOVIYAM 2.2


யாழோவியம்


அத்தியாயம் – 2

காதல் ஓவியம் அத்தியாயம் – 1

சில வருடங்களுக்கு முன், பாண்டிச்சேரி /புதுச்சேரி!

பிரமாண்ட கல்லூரி வளாகம். அதில் நிறைய குரோட்டன்ஸ் செடி வகைகள் வைத்து, மெனக்கெடல் எடுத்துப் பராமரிக்கப்பட்டிருந்தது. மேலும், நிழல் தரும் வகையில் பெரிய பெரிய மரங்களும் இருந்தன. அதன் அடியில் கல் இருக்கைகளும் இருந்தன.

மதிய வேளையைக் கடந்திருந்ததால் வகுப்புகள் நடைபெறாத மாணவர்கள் அதில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வெயில் அதிகம் என்பதால் பெரிய அளவில் மாணாக்கர் நடமாட்டம் இல்லை. 

வளாகத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்றார் போல, கல்லூரி கட்டிடமும் இருந்தது. அரைவட்ட வடிவில், இருபத்தைந்திற்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட படிக்கட்டுகளுக்கு மேல் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.

அலுவலக ஊழியர்கள், கல்லூரி முதல்வர், பேராசியர்கள்… என இவர்களுக்கென்று பிரத்யேக அறை ஒருபுறம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொரு புறத்தில், ஆண்டுகள் மற்றும் பாடப் பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்களில் வகுப்பறைகள் பிரிக்கப்பட்டிருந்தன.

அதில் பத்திரிக்கைத் துறையைச் [journalism] சார்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் இருக்கும் பகுதி!

ஆசிரியர் ஒரு வேலையாகச் சென்றிருப்பதால், ஒருசிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் வகுப்பறை வெளியே நின்று பேசினார்கள். ஒருசிலர் உண்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

உறங்கும் அந்த ஒரு சிலரில் சுடரும் ஒருத்தி! மேசை மேலிருந்த இரண்டு புத்தகங்கள் மீது தலை சாய்த்து, அப்படி ஒரு தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள்!!

வெளியே நின்ற மாணவர்கள் வகுப்பறைச் சன்னல் வழியே உறங்குபவர்களை தொந்தரவு செய்யவென்று, தாள்களைச் சுருட்டி அவர்கள் மேல் எரிந்தார்கள். அப்படிச் செய்ததில், ஓரிருவர் எழுந்து கொண்டார்கள். சிலர் அதையும் தாண்டித் தூங்கினார்கள்.

உருட்டிய தாளொன்று சுடர் மீது எறியப்பட்டதும், சட்டென விழித்தாள். அவள் விழித்தெழுந்திருக்கும் தோற்றத்தைக் கேலி செய்து சிரித்தார்கள்.

அந்தக் கேலியிலும், தூக்கத்தைக் கலைத்த கோபத்திலும்… அவர்கள் மீது எதையாவது ஏறிய வேண்டும் என நினைத்து, மேசையிலிருந்த கல்லூரி அடையாள அட்டையை எடுத்து எறிந்துவிட்டாள்.

ஆனால், அது அவள் வகுப்பு மாணாக்கர் மேல் படாமல், அந்த வழியே வந்த இரண்டு பேரில் ஒருவன் முகத்தில் பட்டு கீழே விழுந்தது.

கண்கள் மூடி, ‘ஷ்ஷ்’ என சொல்லி, அடையாள அட்டை பட்ட இடத்தைத் தேய்த்து விட்டுக்கொண்டான். ‘அச்சச்சோ’ என்று சுடர் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

கீழே கிடந்த அடையாள அட்டையை எடுத்த மற்றொருவன், “ஏய்! என்ன இது? யாரு எறிஞ்சா?” என்று சத்தமிட்டான்.

மாணவர்கள், “சாரி-ண்ணா சாரி-ண்ணா! சத்தம் போடாதீங்க” என்று சொல்லும் போதே, “நீங்க எறிஞ்சீங்களா?” என அட்டையை எடுத்த ஆஷிக் கேள்வி கேட்டான்.

‘இல்லை’ என்று பதிலாகத் தலையாட்டியதும், “எவ்வளவு தைரியம் இருந்தா பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் மேல ஐடி கார்டு வீசுவீங்க?” என ஆஷிக் கோபத்துடன் கேட்டான்.

“சாரி-ண்ணா. ஐடி கார்டு கொடுத்திருங்க” என்று மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கெஞ்சினார்கள்.

“யார் எறிஞ்சாங்களோ, அவங்களைச் சாரி கேட்கச் சொல்லுங்க” என திரும்பியிருந்த சுடரைப் பார்த்துக் கொண்டே ஆஷிக் சொன்னான்.

“ஏய் சுடர்! சாரி கேளு” என்று சுடர் வகுப்பு மாணவர்கள், சன்னலருகே சென்று அவளிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்பொழுதும், ‘மன்னிப்பா!? அதெல்லாம் கேட்க முடியாது’ என்ற ரீதியில் சுடர் திரும்பாமல் இருந்தாள்.

‘யார்டா அது? இத்தனை பேர் சொல்லியும், திரும்பாமல் இருப்பது. அந்த முகத்தைப் பார்க்க வேண்டுமே’ என்ற எண்ணம் அடையாள அட்டையால் அடிவாங்கியவனுக்கு வந்தது.

“அண்ணா ப்ளீஸ்! “ஐ-டி கார்டு கொடுத்துருங்க-ண்ணா” என மீண்டும் மீண்டும் மாணவர்கள் கெஞ்சினார்கள்.

“எறிஞ்சதுக்கு இவன்கிட்ட சாரி கேட்கச் சொல்லுங்க! ஐ.டி கார்டு கொடுக்கிறோம்” – ஆஷிக்.

“சாரி-ண்ணா. அவ மேல தப்பில்லை. பேசாம தூங்கிட்டு இருந்தா… நாங்கதான் அவளை எழுப்பனும்-னு ஏதோ செய்யப் போய், இப்படி ஆயிட்டு “

“கிளாஸ் அவர்-ல தூங்கிறது தப்பில்லையா? – ஆஷிக்.

“இது லெஸ்ஸர் அவர்-ண்ணா” – இப்படியே இவர்களுக்கிடையே வாக்குவாதம் போய்க் கொண்டிருந்த பொழுதே, சுடர் திரும்பிவிட்டாள்.

திரும்பியவள்… யார் மீது அடையாள அட்டை பட்டதோ, அவனைப் பார்த்தாள். அவன்தான் இக்கணம் வேறுபுறம் திரும்பியிருந்தானே! ஆதலால், அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ‘எப்ப திரும்புவான்?’ என்ற ரீதியில் சுடர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கும் தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்வு வந்ததும், மெதுவாகத் திரும்பியவன், சுடர் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

‘அவள் நோக்கினாள்; அவனும் நோக்கினான்’ என்கின்ற ‘மொமென்ட்’.

பார்வையை வேறுபுறம் மாற்ற முடியாதது போல் பார்த்தார்கள். ஏன்? தங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வேறேதும் இல்லை என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எதற்கென்றே தெரியாமல் அவனுக்கு மௌனமான புன்னகை ஒன்று வந்தது. மன்னிப்பு கேட்கச் சொல்லாமல், அவன் புன்னகை புரிவது போன்று தெரிந்ததும், ‘சிரிக்கிறியா?’ என்று புருவங்களால் கேள்வி கேட்டாள்.

‘ஆமாம்’ என்று அரைகுறையாகத் தலையசைத்தவன், ‘பக்கத்தில் நடக்கும் வாக்குவாதத்தைப் பார்’ என்று கடைக் கண்களால் ஜாடை காட்டினான்.

இப்பொழுது அவனின் புன்னகை அவளையும் ஒட்டிக் கொண்டது.

அக்கணம், “ஏய் சுடர்! ஒரு ஸாரி கேட்டா என்ன?” என கேட்கும் போதுதான், இருவரும் நிகழ்கணத்திற்குள் வந்தார்கள். மேலும், பார்க்கும் பார்வையை மாற்றிக் கொண்டார்கள்.

‘கேட்க முடியாது’ என்று சொல்லும் விதமாகவும்… பார்த்தது போதும் என்பது போலவும்… மீண்டும் மேசையில் படுத்து சுடர் கண்களை மூடிக் கொண்டாள்.

‘இங்கே என்ன நடக்கிறது?’ என்ற அர்த்தத்தில் சுற்றி இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘பார்த்தவளை அப்படியே பார்வைக்குள் பத்திரப்படுத்த வேண்டியது வருமோ?’ என்ற யோசனையில் அடிவாங்கியவன் நடக்க ஆரம்பித்ததும், “என்னடா எதுவும் சொல்லாம போற?” என ஆஷிக் பின் தொடர்ந்தான்.

மேசையில் தலை சாய்ந்திருக்கும் சுடரைப் பார்த்து, ‘என்னமோ செய்’ என்பது போல் தலையில் அடித்துக் கொண்டு, மாணாக்கர்கள் வகுப்பறைக்குள் வந்துவிட்டார்கள்.

சில நிமிடங்களிலே ஒரு கண்ணை மட்டும் திறந்து சுடர் பார்த்தாள். யாருடைய கவனமும் தன்மேல் இல்லை என்பது தெரிந்ததும், நிமிர்ந்து அமர்ந்தாள்.

திரும்பவும் அவனைப் பார்க்க வேண்டும் என்பது போல் ஓர் வேகம் எழுந்தது. மற்ற மாணவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருக்க, சுடர் சாதாரணமாக எழுந்து வெளியே வந்தாள்.

‘யாராவது பார்க்கிறார்களா?’ என்று லேசாக வகுப்பிற்குள் திரும்பிப் பார்த்துவிட்டு , நடைகூடத்தின் இருபுறமும் பார்த்தாள்.

இல்லை! இருபுறமும் இல்லை. ‘எங்கே போயிருப்பான்?’ என வகுப்பறை கதவில் சாய்ந்து யோசிக்கும் போது, கைதட்டும் ஓசை கேட்டது. ஓசை வந்த திசை நோக்கிப் பார்த்தாள்.

அவன்தான்! நான்கு வகுப்பறைகள் தாண்டி இருந்த தூணின் பின்னால் மறைந்திருந்தவன், வெளியே வந்து கைதட்டி அழைத்திருந்தான்.

‘தான் ஏன் பார்க்க வந்தோம்? அவன் ஏன் மறைந்து நின்றான்?’ என எதையும் யோசிக்காமல், கொஞ்சம் விரிந்த புன்னகை தந்தாள். அவனும் சிரித்தான். பின், அடையாள அட்டையைத் தூக்கிக் காட்டி, ‘அப்புறம் வாங்கிக்கோ’ என சைகையால் சொல்லிச் சென்றுவிட்டான்.

ஒருபுறம்… அடையாள அட்டையைக் கொண்டு போகிறவனை, அட்டைப் பட நாயகனைப் போல் ரசித்து, சுடர் பார்க்க ஆரம்பித்தாள். மற்றொரு புறம்… அடையாள அட்டையை வைத்திருந்தவன், அதில் எழுதியிருந்த சுடரின் முழுப்பெயரை ரசித்து வாசித்தான்.

முதல் சந்திப்பிலே ஏதோ ஓர் ஈர்ப்பு இருபுறமும் உணரப்பட்டது!

யாழோவியம் அத்தியாயம்-2 தொடர்கிறது…

காதல் கொண்ட சுடரின் மனது கணநேரத்தில் பாண்டிச்சேரி போய்விட்டு சென்னை திரும்பியிருந்தது.

‘இந்நேரம் தன்னைப் பற்றி நினைப்பானா?’ என்று உள்ளுக்குள் கேட்கும் போதே, விக்கல் வந்தது. ‘தன்னை நினைக்கிறான்’ என மகிழும் போதே கைப்பேசியில் அழைப்பு வந்தது.

தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டே திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவுடன், அழைப்பை ஏற்ற காதிற்கு கொடுத்தாள்.

“கட்சித் துண்டு போட்டிருந்தா… இல்லை, கட்சி பேட்ஜ் எதுவும் குத்தியிருந்தா, எடுத்து வச்சிட்டு பேச ஆரம்பி” என கறாராகக் காதலன் பேச்சு ஆரம்பிக்கப்பட்டது.

ஆம்! அவன் அப்படித்தான்! தன் மீது எந்தக் கட்சியின் சாயமும் விழக்கூடாது என தெளிவாக இருப்பவன்! அவன்… அந்தக் காதலன்… செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகிப்பவன்!!


டிசி என்ற ராஜாவின் விளிப்பு – DC – District Collector.