அழகியே 12
அழகியே 12
- Posted on
- shanthinidoss
- July 16, 2021
- 0 comments
அழகு 12
மயூரி கண்விழித்த போது காலை ஏழு மணி. நேற்று முழுவதும் அலைந்து திரிந்து பொருட்கள் வாங்கியதால் மிகவும் களைத்திருந்தாள். அவளை அறியாமலேயே இத்தனை நேரம் தூங்கி இருக்கிறாள்.
‘அத்தான் எங்கே?’ எழுந்ததும் அவள் மனதில் தோன்றிய முதல் கேள்வி இதுதான்.
‘நேற்று இரவு அவன் ரூமிற்கு வந்தானா?’ அது கூட அவளுக்குத் தெரியாது. அடித்துப் போட்டாற் போல உறங்கி இருக்கிறாள்.
பல் துலக்கலாம் என்று அவள் பாத்ரூமிற்குள் போன போது அவன் உபயோகித்த டவல் ஈரமாக இருந்தது.
“ஐயா வந்துதான் இருக்காரு… இப்பதான் குளிச்சிருக்காரு… டீ குடிக்கப் போயிருக்காங்களோ?” தனக்குத் தானே பேசியபடி காலைக் கடன்களை முடித்தாள் பெண்.
இவள் பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்கும் வருண் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. யூனிஃபார்மில் இருந்தான்.
“நேத்து நைட் எங்கத்தான் போயிட்டீங்க?” என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு நீ தொலைந்து போனாயே என்ற ஏக்கம் அந்தக் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனாலும் வருண் பதில் சொல்லவில்லை. அவன் பதிலுக்காகச் சிறிது நேரம் காத்திருந்தாள் மயூரி.
“இன்னும் எத்தனை நாளைக்கு எங்கிட்ட இருந்து ஓடுவீங்க அத்தான்?” அவள் கேட்ட கேள்வியில் அவன் விலுக்கென்று நிமிர்ந்தான்.
“பொண்ணு மாதிரி பேசு, ரோட்டுல நின்னு கூப்பிடுறவ மாதிரி பேசுறே!” கோடு தாண்டிய அவன் பேச்சில் அவள் கண்கள் இப்போது ஜுவாலையைக் கக்கியது.
“பொறுக்கித் தனம் பண்ணினது நீங்க… பண்ணுறதையெல்லாம் பண்ணிட்டு இப்போ என்னைக் குத்தம் சொல்றீங்க!”
“…………..”
“இப்போப் பேச மாட்டீங்களே! வசதியா இப்ப உங்க வாய் அடைச்சிரும்.” மயூரி கத்தினாள்.
“நான் ஏற்கனவே பல தடவை உங்கிட்ட என்னோட நிலைமையை விளக்கிட்டேன், இந்த ஷிப்புக்கு உன்னைக் கொண்டு வர்றதா இருந்தா நீ என்னோட வைஃபா இருந்தா மட்டுந்தான் முடியும், எனக்கு வேற சாய்ஸ் இருக்கலை.”
“அதால என்னோட வாழ்க்கை எந்தளவு பாதிக்கப்படும்னு நீங்க நினைச்சுப் பார்க்கலை, உங்க வைஃபா நான் வேஷம் போட்டேன்னு சொன்னா எவன் நம்புவான்? எல்லாத்தையும் லீகலா ரெஜிஸ்டர் வேற பண்ணி வெச்சிருக்கீங்க.” அவள் குற்றம் சுமத்தினாள்.
“அம்மா தாயே! எவன் கால்ல விழுந்தாவது உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணி வெக்குறேன், ஆளை விடு!” அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட மயூரிக்கு வெறி கிளம்பியது.
சட்டென்று அவன் அருகே போனவள் அவன் ஷர்ட் காலரை கொத்தாகப் பிடித்தாள்.
“உங்களுக்கு இந்த மயூரின்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா? எவன் கால்லேயாவது விழுவீங்களா? என்னைப் பெத்து என்ன ரோட்டுலயா வீசிப்போட்டிருக்காங்க? ஆ…” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை உலுக்கினாள் மயூரி.
அவள் விரல்களைத் தன் ஷர்ட்டிலிருந்து சிரமப்பட்டுப் பிரித்த வருண் அவளைக் கட்டிலில் தள்ளி விட்டான்.
“தப்பித் தவறி நீ சொன்னா மாதிரியே நடக்கலாம்னு மனசு வந்தாலும், எவன் உங்கூடக் குடும்பம் நடத்துவான்? ச்சீ… பொண்ணாடி நீ?”
அதற்கு மேல் வருண் அங்கே நிற்கவில்லை. வெளியே போய்விட்டான். மயூரிக்கு அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது.
வாய்விட்டுக் கதறித் தீர்த்தாள். சற்று நேரம் அழுத பிறகு மனம் அமைதியானது. நிதானமாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.
‘நான் என்ன செய்கிறேன்?! இந்த ஐந்து நாட்களில் அத்தானோடு ஒரு அழகான வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டு அவரோடு மல்லுக்கு நிற்கின்றேனே!’
‘இப்படி அவரோடு மல்லுக்கு நின்றால் எப்படி அவருக்கு என்னைப் பிடிக்கும்?! கடைசியாக என்ன வார்த்தைச் சொல்லி விட்டுப் போகிறார்!’
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் முதலில் குளித்தாள். மயூரி நல்ல நிறம் என்பதால் விஷாகா எப்போதும் அவளுக்கு நல்ல ப்ரைட்டான நிறங்களைத்தான் தெரிவு செய்வார்.
ஒற்றைப் பெண் என்பதால் குழந்தையாக இருந்த போதிலிருந்து வண்ணம் வண்ணமாக ஆடைகள் அணிவித்து மகிழ்வார். இன்றுவரை அது தொடர்கிறது.
நேற்று ஷாப்பிங் போன போது மலேஷிய பெண்கள் அணியும் ஆடை முழு நீளத்தில், நல்ல பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் இருந்தது.
அதன் அமைப்பும் நிறமும் பிடித்துப் போகவே அதை வாங்கியிருந்தாள் பெண். இப்போது அதை உடுத்திக் கொண்டாள்.
தலையை நன்றாக உலர்த்தி ஒற்றைப் பின்னலைத் தொடங்கி மீதி முடியை நீளமாக விட்டாள். பெரிய சிவப்பு நிற ரப்பர் பான்டை பின்னல் அவிழ்ந்து விடாமல் போட்டாள்.
ரூமை மூடிக்கொண்டு டைனிங் ஏரியாவிற்கு போனவள் காலை உணவை உண்டுவிட்டு கப்பலின் மேல் பகுதிக்குப் போகும் படிகளில் ஏறினாள்.
கப்பலின் கட்டுப்பாட்டு அறை மேல் தளத்தில்தான் இருந்தது. வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த இளம் ஆஃபீஸர்கள் இவளுக்கு வணக்கம் வைத்தார்கள்.
கால்கள் பின்ன மெதுவாக நடந்து போனாள். தன்னைப் பார்த்தால் அவனுக்குக் கோபம் வருமோ?!
“ஹாய் ஏஞ்சல்!” கேப்டனின் குதூகலக் குரல் மயூரியை வரவேற்றது. மயூரி அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டாள்.
வருண் தனக்குக் கீழ் வேலைப் பார்க்கும் ஒரு டெக் காடெட்டுக்கு நேவிகேஷன் பற்றி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும் அவன் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது, அவ்வளவுதான். அதன் பிறகு அவன் வேலையைத் தொடர்ந்தான்.
“வாவ்! இந்த ட்ரெஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மயூரி!” வெளிப்படையாகப் பாராட்டினான் டாமினிக். மயூரி புன்னகைத்தாள்.
தங்களது கேப்டன் இப்படித்தான் என்று தெரிந்திருந்த ஆஃபீஸர்கள் இவர்களைக் கவனிக்காமல் தங்களது வேலையில் கவனமாக இருந்தார்கள்.
“கம் கம்…” டாமினிக் அழைக்க மயூரி உள்ளே வந்தாள். கண்கள் வருணையே வட்டமிட்டன.
“என்னாச்சு? வொய் டல்?” கிசுகிசுப்பாகக் கேட்டான் டாமினிக். பெண் தலையை மாத்திரம் இடம் வலமாக ஆட்டினாள். ஆனால் கண்களில் நீர் திரண்டு போனது.
ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட கேப்டன் அவளை அப்பால் அழைத்துக்கொண்டு போனான்.
“ஹாப்பி பர்த்டே கேப்டன்!” அப்போதுதான் உள்ளே நுழைந்த ஒரு செகன்ட் ஆஃபீஸர் வாழ்த்த,
“தான்க் யூ.” என்றான் டாமினிக் புன்னகையோடு.
“கேப்டன்! இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே ஆ?!”
“யெஸ் ஸ்வீட்டி, ஏன்? அந்த ராஸ்கல் சொல்லலையா? இன்னைக்கு நைட் பார்ட்டி கூட இருக்கே!”
“ம்ஹூம்… சொல்லலை.”
“இடியட்! இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்?! என்ன சொல்றான் இப்போ?”
“ஹாப்பி பர்த்டே கேப்டன்.” அழகான புன்சிரிப்போடு அவள் சொன்ன வாழ்த்தை டாமினிக் தலை தாழ்த்தி ஏற்றுக்கொண்டான்.
அவன் பாவனையில் மயூரி கலகலவென சிரித்தாள். வருணின் பார்வை அந்த நொடி சட்டென்று இவர்களை நோக்கித் திரும்பியது.
“எதுக்கு இந்த அழுகை மயூரி?” விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் கேப்டன். மயூரி எதுவும் பதில் சொல்லவில்லை. அமைதியாக நின்றிருந்தாள்.
“பேசும்மா… அப்போதானே ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு தெரியும்.”
“எதுக்கு கேப்டன் எல்லாத்தையும் லீகலா ரெஜிஸ்டர் பண்ணினாங்க?”
“ஓ… தெரிஞ்சு போச்சா!”
“இதுக்கு நீங்களும் உடந்தையா கேப்டன்?” அவளது குற்றச்சாட்டில் கேப்டன் சிறிது மௌனித்தான்.
“விபி யை எனக்கு ரெண்டு வருஷமாத் தெரியும் மயூரி, ரொம்ப நல்ல பையன்.”
“நல்ல பையன் இப்பிடியெல்லாம் பண்ணலாமா?”
“நீ புரிஞ்சுக்கணும் மயூரி… அவங்க அப்பா எழுதின டைரி ஒன்னு அவன் கைல கிடைச்சிருக்கு, அவங்க அம்மாதான் குடுத்திருக்காங்க.”
“ம்…”
“அதை நான்கூடப் படிச்சேன், விபி காட்டினான்… அந்த வீடு எனக்கு வேணும் கேப்டன்னு விபி சொன்னப்போ எனக்குத் தப்பாத் தெரியலை.” இப்போது மயூரி தலை குனிந்தாள்.
“அதை அவன் கேட்டப்போ குடுத்திருந்தா எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.”
“அதுக்கு நான் என்னப் பண்ணுறது? அவங்க பண்ணுறது தப்புன்னு எனக்கும் தெரியும்.”
“ஒரு ஃப்ரெண்ட்டா விபி எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப என்னால மறுக்க முடியலை, சாரி மயூரி.”
“இனி என்னோட லைஃப்ல என்ன இருக்கு கேப்டன்?” விரக்தியாகக் கேட்டது பெண்.
“நோ… நோ… அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது, இனித்தான் எல்லாமே இருக்கு.” டாமினிக் கண் சிமிட்ட மயூரி வெறுமையாகச் சிரித்தாள்.
“அவங்களுக்கு…” அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் மயூரி நிறுத்தினாள்.
“அவன் ரொம்ப சாஃப்ட் ம்மா, ஈசியா உன்னோட கைக்குள்ள கொண்டு வந்திரலாம்.”
“கஷ்டம் கேப்டன்.”
“இல்லை மயூரி, பசங்களோட சைக்காலஜி உனக்குப் புரியாது, அந்த ராஸ்கலுக்கு இப்போ அங்க வேலை ஓடும்னா நினைக்கிறே? ஐயாக்கு அவரு பெரிய ரோமியோன்னு நினைப்பு!” டாமினிக் சொல்ல பக்கென்று சிரித்தாள் மயூரி.
“ஆமா… அவருக்கான ஜூலியட்டை தேடுறாரு… பார்த்த உடனேயே லவ் வரணுமாம், இவரு அப்பிடியே உருகி உருகி லவ் பண்ணணுமாம்…”
“அப்பிடியா சொன்னாங்க?!” அவள் ஆச்சரியப்பட்டாள்.
“அவங்கப்பா டைரியை வேற படிச்சானா? அந்த மனுஷன் வேற உலகத்துலேயே நாமெல்லாம் பார்க்காத லவ்வை பண்ணி வெச்சிருக்காரு! இதெல்லாம் பார்த்த உடனேயே இந்த ராஸ்கலுக்கும் பித்தம் ஏறிடுச்சு.” இப்போது மயூரி மீண்டும் சிரித்தாள்.
“அந்த ஸ்டுப்பிட் ரொம்ப நல்லவன் மயூரி.”
“அதானே என்னோட பிரச்சினையும்!” சீரியஸாக மயூரி சொல்ல கேப்டன் வெடித்துச் சிரித்தான்.
“ஹா… ஹா… இப்போ பிரச்சினையே அதானா? புரியுது புரியுது!” கேப்டன் இப்போதும் அடக்க முடியாமல் சிரித்தான்.
“நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் ஏஞ்சல்? விபி யை ஒரு வழி பண்ணிடலாம், அவனுக்கு இந்த ஏஞ்சலை ரொம்பப் புடிக்கும்.” மயூரியின் கண்கள் இப்போது பளிச்சிட்டன.
“இங்கப்பார்றா! ஏஞ்சலோட கண்ணுல மின்னலடிக்குது!” கேப்டன் கேலி பண்ண மயூரிக்கு வெட்கமாகிப் போனது. தலையைக் குனிந்து கொண்டாள்.
அப்போது சரியாக வருணின் கண்கள் இவர்களை நோக்கியது. வெட்கப்படும் மயூரியும்… வெடித்துச் சிரிக்கும் கேப்டனும் அவனுக்குள் எரிமலையை சிதறச் செய்தார்கள்.
“அங்க ஒருத்தனுக்குச் சும்மா தீயுது மயூரி, நாந்தான் சொன்னேன்ல… அவனுக்கு உன்னைப் புடிக்கும்.”
“நெஜமா?”
“ஆமா… லவ் பண்ண வானத்துல இருந்து அவனுக்கொரு ஏஞ்சல் குதிப்பான்னு அவன் நினைக்கிறான், ஆனா… மண்ணுல இருக்கிற ஏஞ்சலைத்தான் நம்மால லவ் பண்ண முடியும்னு அவனுக்குப் புரியலை, போகப்போக புரிஞ்சுக்குவான்.”
“அவங்க புரிஞ்சுக்கிறாங்களோ இல்லையோ… அதுக்குள்ள ஷிப் ஸ்ரீ லங்கா போய் சேர்ந்திடும்.” அவள் கவலை அவளுக்கு.
“தட்ஸ் ட்ரூ, ஒருவேளை… விபி உன்னை வேறொரு சந்தர்ப்பத்துல சந்திச்சிருந்தா… சட்டுன்னு விழுந்திருப்பானா இருக்கும்!” ஆரூடம் சொன்னார் டாமினிக்.
மயூரி மென்மையாகச் சிரித்தவள் அத்தோடு கிளம்பி விட்டாள். அவர் சொன்னதுதான் நடக்கவில்லையே! கேப்டன் பிரிட்ஜின் முக்கியமான பகுதிகளை அவளுக்குக் காண்பித்தான்.
“ஈவ்னிங் பார்ட்டி… மறக்க வேணாம் மயூரி.”
“ஷ்யூர் கேப்டன்.” தலையை அசைத்து விட்டு வெளியே வந்தவள் நேராக ரூமிற்கு போய் விட்டாள். மதிய உணவிற்கும் வருண் வரவில்லை.
***
சாயங்காலம் ரூமில் தனியாக இருப்பது எரிச்சலை மூட்டவும் கிச்சன் பக்கம் வந்தாள் மயூரி. அவள் எதிர்பாரா வண்ணம் அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
செஃப் தன் உதவியாளர்களை வைத்துக் கொண்டு எதை எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.
“இந்நேரத்துல என்ன பண்ணுறீங்க அங்கிள்?!” இளையவளின் குரலில் திரும்பினார் செஃப்.
“இன்னைக்கு கேப்டனோட பர்த்டே பார்ட்டி இருக்கில்லையா மயூரி… அதுக்குத்தான் எல்லாம் ரெடி பண்ணுறோம்.”
“வாவ்! சூப்பர் அங்கிள், நானும் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா? ரூம்ல போரடிக்குது.”
“ஆஃபீஸர் இன்னும் வரலையா?”
“ம்ஹூம்…”
“வேலை ஜாஸ்தியா இருக்குது போல.” அவரே பெண்ணுக்குச் சமாதானம் சொன்னார்.
“என்னென்ன அயிட்டம் ரெடி பண்ணுறீங்க அங்கிள்?”
“மட்டன் கெபாப், சிக்கன் விங்ஸ், பிரியாணி…” செஃப் அடுக்கிக்கொண்டே போனார்.
“ம்… ம்… சூப்பர்! இது என்ன அங்கிள்?” தனியாக சுத்தப்படுத்திய கணவாயை வட்டவடிவில் சிறியதாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.
“இது… கேப்டனோட ஃபேவரிட் டிஷ், கண்டிப்பா இதைக் கேட்பாரு.”
“ஓ… இதை என்னப் பண்ணப் போறீங்க?”
“கார்ன் ஃப்ளார் ல மசாலா, உப்பு சேர்த்து, இதை அப்பிடியே அதுல பிரட்டி டீப் ஃப்ரை பண்ணணும்.”
“ஓ…”
“சிப்ஸ் மாதிரி மொறுமொறுன்னு இருக்கும்.”
“அப்பிடியா?”
“ட்ரை பண்ணிப் பார்க்கிறீங்களாம்மா?”
“ஓகே அங்கிள்.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய பட்டாளம் டைனிங் ஏரியாவில் வந்து உட்கார்ந்தது.
கேப்டன், வருண், இன்னும் சில ஆஃபீஸர்கள் என நான்கைந்து பேர் வந்திருந்தார்கள்.
மயூரி திரும்பி வருணை பார்த்தாள். குளித்து உடை மாற்றி இருந்தான். கேப்டன் ஏதோ விகடமாகச் சொல்லி இருப்பார் போலும், அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
சிரித்தபடியே திரும்பிய கேப்டன் இவளை அங்கே காணவும் எழுந்து வந்தார்.
“ஹேய்! இங்க என்னப் பண்ணுறீங்க ஏஞ்சல்?”
“மயூரி உங்களுக்காக உங்களோட ஃபேவரிட் ஸ்நாக்ஸ் பண்ணுறாங்க கேப்டன்.” செஃப் சொல்லவும்,
“வாவ்!” என்றான் கேப்டன்.
“பர்த்டே பாய்க்காக ஸ்பெஷலா பண்ணுறோம்.” இது மயூரி.
“சூப்பர் போங்க!” இவர்கள் இங்கே இப்படி ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்க வருணுக்கு எரிச்சல் வந்தது.
இந்த கேப்டன் அவளைக் காணுறப்போ எல்லாம் பேசுவாரோ!’ உள்ளுக்குள்ளே பேசிய படியே வருண் உட்கார்ந்திருந்த போது,
“வீபீ!” கேப்டன் அலறும் சத்தம் கேட்டது. வருண் திடுக்கிட்டுப் போனான்.
“ஆஃபீஸர்! சீக்கிரமா வாங்க!” செஃபின் குரலும் ஓங்கி ஒலித்தது.
வருண் என்னவோ ஏதோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு கிச்சனுக்குள் ஓடினான். அவசரமாக வெளியே வந்த டாமினிக் எங்கோ பார்த்துக்கொண்டு,
“மயூரியை கவனி.” என்றான்.
“என்னாச்சு?!”
“முதல்ல உள்ள போ மேன்!” மீண்டும் டாமினிக் கத்தினான்! வருணிற்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் தலையைக் காணவும் செஃபும் வெளியே வந்துவிட்டார்.
உள்ளே மயூரி மட்டும் நின்றிருந்தாள். டேப்பில் நீரைத் திறந்துவிட்டு ஏதோ பண்ணிக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு?” அவளின் உடல்மொழி வித்தியாசமாக இருக்க அருகே வந்தான் வருண்.
“எண்ணெய்… எண்ணெய் தெறிச்சிடுச்சு.” கண்களில் நீர் திரள வலியைப் பொறுத்துக்கொண்டு பேசினாள் பெண்.
“எங்கே?!” உறுமினான் வருண். குளிர்ந்த நீரைக் கைகளால் அள்ளியவள் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொண்டாள்.
வருண் அவளை முரட்டுத்தனமாகத் தன்னை நோக்கித் திருப்பினான். கழுத்துக்குக் கீழே அவள் நீரை ஊற்றி இருப்பது புரிந்தது.
மற்றையவர்கள் யாரும் முதலுதவி செய்ய முடியாத இடம் என்பதால்தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று புரிந்த வருண் அவள் உடைக்கு மேலாக குளிர்ந்த நீரை இன்னும் இன்னும் ஊற்றினான்.
“நீ வா எங்கூட.” அவளைத் தன்னோடு இழுத்துக்கொண்டு இரண்டொரு விநாடிகளில் தங்களது அறைக்கு வந்தவன் அவளை நேராக பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றான்.
ஷவருக்கு அடியில் அவளை நிறுத்தியவன் குளிர்ந்த நீரைத் திறந்துவிட்டான். அவளுக்கு எரிச்சல் இருந்த இடத்தில் நீர் படுமாறு சரியாக அவளை நிறுத்தினான்.
“அத்தான்! என்னப் பண்ணுறீங்க?!” மளமளவென அவன் அவள் அணிந்திருந்த ட்ரெஸ்ஸின் பட்டன்களைக் கழட்டவும் மயூரி பதறி விலகினாள்.
“எண்ணெய் எங்கப் பட்டிருக்குன்னு காட்டு!”
“இல்லை… நான்…”அவள் தனது இடது கையால் வலது பக்கக் கழுத்திற்குக் கீழே தடவிக்கொண்டே பேசினாள். முகம் வலியால் துடித்தது.
“குடும்பம் நடத்தக் கூப்பிட்டுட்டு இப்போ எதை மறைக்கிற எங்கிட்ட இருந்து?” அவன் கூச்சல் போட முகத்தைச் சட்டென்று அந்தப்புறமாகத் திருப்பிக் கொண்டாள் மயூரி.
அவள் ஆடைகளை லேசாக விலக்கியவன் எண்ணெய் பட்ட இடத்தை ஆராய்ந்தான். கொஞ்சம் பெரிதாகவே சிவந்து போய் இருந்தது.
“இருபது நிமிஷத்துக்கு தண்ணியை விட்டு நகரக் கூடாது, புரியுதா?” எங்கோ பார்த்துக்கொண்டு தலையை உருட்டினாள் பெண்.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் பாத்ரூம் கதவை மூடிவிட்டுப் போய்விட்டான் வருண். மயூரிக்கு என்னவோ போல இருந்தது.
செஃப் சொன்னது போல்தான் ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டுக் கொண்டிருந்தாள்.
முதல் போட்டிருந்த துண்டு சட்டென்று பொங்கிப் பொரியவும் சமையலில் அனுபவமில்லாத மயூரி பயந்து போய் கையில் அடுத்து போடுவதற்கு ஆயத்தமாக வைத்திருந்த துண்டைத் தடாலென்று எண்ணெயில் போட்டு விட்டாள்.
அதிக அளவில் பாத்திரத்தில் எண்ணெய் இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே தெறித்து விட்டது.
இதுவே வேறு யாராவது பெண்ணாக இருந்திருந்தால் டாமினிக் முதலுதவியில் இறங்கி இருப்பான்.
ஆனால் அங்கே நின்றது வருணின் சொத்தல்லவா?! அதனால் விலகி விட்டான்.
(முதலுதவி என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோல சூடான திரவங்கள் உடம்பில் பட்டால்… உடனேயே அந்த இடத்தில் இருக்கும் ஆடையை அகற்றிவிட்டு இருபது நிமிடங்கள் அந்த இடம் குளிர்ந்த நீரில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேறு எந்த க்ரீமோ மருந்தோ எதுவுமே பூசக்கூடாது. ஐஸ் கூட வைக்கக்கூடாது. வெறும் குளிர்ந்த டேப் வாட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.)
நடந்ததை நினைத்த போது காயம்பட்ட இடம் மட்டுமல்ல, உடல் முழுவதும் சிவந்தது பெண்ணுக்கு!
***
அழகான மெரூன் நிற ஷிஃபான் சேலை. சேலையின் கரையில் இரண்டங்குல அகலத்தில் முத்து,
சம்கி வேலைப்பாடு.
சேலையின் உடல் முழுவதும் ஆங்காங்கே முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. தலைப்பில் வேலைப்பாடு கொஞ்சம் செறிந்து காணப்பட்டது.
அன்றைய பார்ட்டிக்கு மயூரி அதைத்தான் உடுத்திக் கொண்டாள்.
ரெடிமேட் ப்ளவுஸும் வாங்கி இருந்தாள்.
செயற்கை அணிகலன்களைப் பெரிதாக அவள் விரும்புவதில்லை. எப்போதும் தங்கம்தான். அதனால் கழுத்தில் காதில் கிடப்பதே போதும் என்று விட்டுவிட்டாள்.
ஏழு மணிக்கு மேல்தான் பார்ட்டி ஆரம்பிக்கும் என்பதால் நிதானமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
“நான்… ட்ரெஸ் பண்ணணும்.” லேப்டாப்பில் மூழ்கி இருந்தவனிடம் இவ்வாறுதான் கூறினாள் பெண்.
“பண்ணு.” அவன் வேலையில் கவனமாக இருந்தான்.
“நீங்க…”
“என்னாச்சு? பாத்ரூம்ல சேன்ஞ் பண்ணிக்கோ.” ரொம்ப முக்கியமான வேலை போலும். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“இல்லை… இங்கதான்… நீங்க கொஞ்சம் வெளியே…” அவளை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்துவிட்டு லேப்டாப்பையும் தூக்கிக்கொண்டு வெளியே போய்விட்டான் வருண்.
“புடவையை எப்பிடி பாத்ரூம்ல வெச்சு உடுத்துறது?” அவன் வெளியே போன தைரியத்தில் சத்தமாக பேசிவிட்டு புடவையை உடுத்திக் கொண்டாள். தலையை லூசாக விட்டாள்.
‘அவன் வராமல் எப்படித் தனியே போவது? இங்கே இருக்கும் அனைவரும் அவர்களைக் கணவன் மனைவி என்று எண்ணி இருக்கிறார்கள், அப்படியிருக்க எப்படித் தனியே போவது?!” சட்டென்று கதவு திறக்கத் திரும்பினாள் மயூரி.
அவன்தான் உள்ளே வந்து கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் அவன் கண்கள் ஆச்சரியத்தால் ஒரு நொடி விரிந்தது.
சட்டென்று முகபாவத்தை மாற்றிக் கொண்டவன் தனக்கான ஆடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போய்விட்டான்.
சற்றுக் கழித்து அவன் வெளியே வந்தபோது ஃபுல் ஸ்லீவ் வொயிட் ஷர்ட், ப்ளூ டெனிம்மில் நின்றிருந்தான். சற்று நேரத்தில் ‘எல் பாஸோ’ வாசனை ரூமை நிறைத்தது.
அவன் பாவனை செய்யும் பர்ஃபியூம் அது. அந்த வாசனை மயூரிக்கு மிகவும் பிடிக்கும்.
“போலாமா?” அவன் கேட்க அவள் தலையை ஆட்டிவிட்டு அவனோடு கூட நடந்தாள். அருகே அவன் வாசனையை நுகர்ந்த படி நடப்பது அத்தனை இன்பமாக இருந்தது.
இந்த சுகமெல்லாம் அவளுக்கு அதிக நாட்கள் கிடைக்கப்போவதில்லை. கடலில் நிற்கும் கப்பல் கரையைத் தொட்டதும் அவன் காணாமல் போய்விடுவான்.
அதற்கிடையில் கூட இவன் இதையெல்லாம் எனக்கு மறுக்க வேண்டுமா? அம்மாவின் முகம் சட்டென்று மயூரியின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
‘இவனை மனதில் சுமந்து கொண்டு இன்னொருவனை ஊருக்காகச் சுமக்க என்னால் முடியாது அம்மா!’ அவளால் முகமே தெரியாத அந்த இன்னொரு மனிதனின் வாழ்க்கையும் பாழாகுமே!
ஆஃபீஸர்ஸ் லோன்ஞ்சில்தான் பார்ட்டி ஏற்பாடாகி இருந்தது! அந்த இடம் நல்ல விசாலமாக இருந்தது. உள்ளே நுழைந்த மயூரிக்கு இது கப்பல்தானா என்றிருந்தது.
இவர்களைப் பார்த்ததும் அங்கே அமோக வரவேற்பு! அந்தக் கப்பலில் வேறு எந்தக் குடும்பமும் இல்லாததால் மயூரி மாத்திரமே அங்கு பெண்.
லேசாக வருனோடு ஒட்டி நடந்தாள். மனிதர்கள் அவளுக்குப் புதிதல்ல. ஆனால் இங்கிருப்பவர்கள் அனைவரும் புதிது.
டாமினிக் இவளைப் பார்த்ததும் விரைந்து வந்தான். ஃபுல் சூட்டில் இருந்தான். வந்ததோடு நிறுத்தாமல் இவளைப் பார்த்து மயங்கி வீழ்வது போல பாவனை வேறு செய்தான். மயூரி சிரித்தே விட்டாள்!
“ஏஞ்சல்… ரொம்ம்ம்பபப அழகா இருக்கே!” அவன் அனுபவித்துச் சொல்ல, சட்டென்று மயூரி வருணை பார்த்தாள்.
கீழ் உதட்டைக் கடித்தபடி கண்கள் இடுங்க இவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். மேலும் மாலுமிகள் பலர் உள்ளே வர டாமினிக் அங்கே போய்விட்டான்.
எதுவும் பேசாமல் அவன் போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர அவன் பக்கத்தில் அவளும் அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் செஃப் வந்துவிட்டார். மயூரியின் நலனை விசாரித்தவர் உணவு பரிமாறும் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
பிற்பாடு கேக் வெட்டி… உணவுகள் பரிமாறப்பட்டு… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேரம் பறந்தது. எல்லாம் முடிய ஒவ்வொருவரும் கையில் க்ளாஸோடு அமர்ந்து விட்டார்கள்.
இதமான இசை ஒன்று முழங்க சிலர் எழுந்து ஆடினார்கள். சற்று நேரம் அதை அனுமதித்த டாமினிக் இப்போது பாட்டை மாற்றச் சொன்னான்.
“ஏஞ்சல்… கம்!” அவள் அருகே வந்து அவள் கையைப் பற்றியவன் அவனோடு ஆட அவளை அழைத்தான்.
“ஐயோ கேப்டன்! எனக்கு டான்ஸ் பண்ணத் தெரியாது.”
“ஓ… கம் ஆன் ஏஞ்சல்… ஜஸ்ட் ஃபாலோ மீ…” அவளை முன்னும் பின்னுமாக நகர்த்தி, சுழன்று என அவன் சொல்லச் சொல்லப் பின்பற்றிய மயூரி ஒரு கட்டத்தில் வாய்விட்டுச் சிரித்தாள்.
ஒவ்வொரு ஸ்டெப்பாக வைத்து தாளத்திற்கு ஏற்ப இசையோடு சேர்ந்து ஆடுவது சுவாரஸ்யமாக இருந்தது. சிரித்தபடி திரும்பியவள் வருணின் முகத்தைப் பார்த்தாள்.
இறுக்கமாகப் இருந்தான்.
கையிலிருந்த க்ளாஸ் வேகவேகமாகக் காலியாகிக் கொண்டிருந்தது. அவனை வெறுப்பேற்றுகின்றோமோ என்று பதறியவள் சட்டென்று கேப்டனிடமிருந்து விலகினாள்.
“என்னாச்சு ஏஞ்சல்?” டாமினிக் கேட்க கண்களால் வருணை காட்டினாள்.
“பார்ட்டின்னா எல்லாருமே அப்பிடித்தான்.”
“இல்லை… நான் கிளம்புறேன் கேப்டன்.” மயூரி சட்டென்று வருணின் அருகே வந்தாள்.
“போலாமா?”
“ஏன்? கேப்டன் கழட்டி விட்டுட்டானா?” அந்தக் கேள்வியே அவன் கோபத்தின் அளவைச் சொன்னது. கோபம் வந்தால் அவன் வாய் சாக்கடை ஆகிவிடும் என்பது அவள் அறிந்ததுதானே!
“போலாம் அத்தான்.” அழுத்திச் சொன்னாள் மயூரி. என்ன நினைத்தானோ, அவளோடு ரூமுக்கு வந்துவிட்டான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
நேராக ஜன்னல் அருகே போனவன் வெளியே தெரிந்த அந்தகாரத்தை வெறித்தான். மயூரியும் அவன் அருகே போய் நின்றாள். அவள் அரவத்தை உணர்ந்தவன் திரும்பிப் பார்த்தான்.
“போய் தூங்கு.” குரல் இறுக்கமாக இருந்தது.
“நேத்து வாங்கின ஸாரி… எனக்கு எப்பிடி இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே அத்தான்.”
“அதான் கேப்டன் சொல்லிட்டாரே!” இப்போது மயூரி சிரித்தாள்.
“எனக்கு நீங்க சொல்லணும் அத்தான்!”
“என்னை அப்பிடிக் கூப்பிடாதே!”
“ம்ஹூம்… அப்பிடித்தான் கூப்பிடுவேன்.” தலைமுடி ஆட தலையசைத்தாள் பெண்.
“நீ போய் தூங்கு.”
“ஏன் என்னை விரட்டுறதுலேயே இருக்கீங்க அத்தான்? இன்னைக்கு முழுக்க எங்கூட நீங்க பேசலை.” அவள் குறைப்பட்டாள்.
“பரவாயில்லை… நீ போ!” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் பக்கமாக நெருங்கியவள் அவன் கையைப் பிடித்து அதில் சாய்ந்து கொண்டாள்.
அவசரமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான் வருண்.
“ப்ரதாயினி…” இப்போதும் அவளை அப்படித்தான் அழைத்தான், இது இரண்டாவது முறை. மயூரி என்ற வார்த்தை வரவில்லை. கையை அவளை நோக்கி ‘வேண்டாம்’ என்பது போல உயர்த்தினான்.
உயர்ந்திருந்த அந்தக் கை நடுங்குவதை கண்கள் இடுங்கப் பார்த்தாள் பெண்.
“நான் ட்ரிங் பண்ணி இருக்கேன்.”
“அதுக்கு?”
“என்னால ரொம்ப நேரம் கன்ட்ரோலா இருக்க முடியாது…”
“………..” இதுதான் உன் பிரச்சனையா? இதற்குத்தான் என்னை விரட்டுகிறாயா?!
“நான் கன்ட்ரோல் பண்ணச் சொல்லலையே அத்தான்.”
“தப்பு! தப்புப் பண்றே நீ!”
“இல்லையே அத்தான்… தப்புப் பண்ணினது நீங்க, நான் திருத்தத்தான் நினைக்கிறேன்.”
“ஆர்க்யூ பண்ணாதே!”
“அப்பிடி இல்லை அத்தான், உங்களோட சண்டைப் போடவோ விவாதிக்கவோ நான் நினைக்கலை, ஆனா என்னோட நிலைமையை நீங்களும் கொஞ்சம் யோசிக்கணும்.”
“…………….”
“யாருன்னே தெரியாத மாமன் மகன் மேல ஈர்ப்பு வந்துது, அந்த ஈர்ப்பு வந்த வேகத்துலேயே காணாம போயிருக்கும் நீங்க என் கண்ணு முன்னாடி வராம போயிருந்தா.”
“எனக்கு வரவேண்டிய தேவை இருந்துது.”
“கரெக்ட்! நான் இல்லேங்கலை… ஆனா நீங்க அந்தத் தேவைக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க.”
“என்னோட சிட்டுவேஷனை நான் உனக்குத் தெளிவாச் சொல்லிட்டேன்.”
“ஓகே… அதையும் நான் இப்போ ஒத்துக்கிறேன், இப்போ என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க?”
“இதெல்லாத்தையும் தூக்கித் தூரப் போட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கோ.”
“எனக்குத்தான் ஏற்கனவே சட்டப்படி கல்யாணம் ஆச்சே அத்தான்?! இன்னொரு தடவையா?” இப்போது வருண் விக்கித்துப் போனான்.
“சரி… அப்பிடியே பண்ணினாலும் உங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கிற மனசோட எப்பிடி அத்தான் இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ண முடியும்? அது மட்டும் தப்பில்லையா?”
“…………..”
“இப்போ பாழாகி இருக்கிறது என்னோட வாழ்க்கை மட்டுந்தான், நீங்க இன்னொரு மனுஷனைக் கல்யாணம் பண்ணி அந்த மனுஷனோட வாழ்க்கையையும் பாழாக்கச் சொல்றீங்களா? அது தப்பில்லையா?”
“…………..”
“நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும் அத்தான், நான் உங்களை என்னோட வாழ்நாள் முழுசுக்கும் கேட்கலை, ஒரு அஞ்சு நாள்தான் கேட்கிறேன், அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் அத்தான்?”
“…………….” அவள் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டு… அந்த ஐந்து நாட்களின் பிறகு உன் நிலைமை என்ன என்று அவனால் கேட்க இயலவில்லை.
“உங்க ஃப்யூச்சர் வைஃபுக்கு துரோகம் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா? அப்போ நான் யாரு அத்தான்?” அவள் கண்கள் இப்போது கலங்கியது. குரல் நடுங்கியது.
“என்னை, என்னோட அம்மா அப்பாவை அவமானப் படுத்தினவங்க வீட்டுப் பொண்ணு நீ! உங்கூட என்னோட வாழ்க்கையைப் பகிர்ந்துக்க என்னால முடியாது ப்ரதாயினி.”
“ம்…” கலங்கிய கண்களை மூச்சை உள்ளே இழுத்து அவள் சமாளித்தாள்.
“என்னோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா… நீ பண்ணச் சொல்றதைத்தான் முதல்ல பண்ணி உன்னைச் செல்லாக் காசா ஆக்கி இருந்திருப்பாங்க.”
“ம்…” அவள் ஆம் என்பது போல தலையை ஆட்டினாள்.
“என்னோட தேவைக்கு உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன், ஆனா உன்ன்ன்னை யூஸ் பண்ணணும்னு என்னைக்கும் நான் நினைக்கலை.”
“அந்த நினைப்பு நம்ம விஷயத்துல தப்பில்லைன்னுதான் நான் சொல்றேன் அத்தான்.”
“ஆயிரந்தான் நீ சமாதானம் சொன்னாலும் அது தப்புத்தான்.”
“அந்தத் தப்பை அப்போ தெரிஞ்சே பண்ணுங்க அத்தான்.” இப்போது மயூரி கதறிவிட்டாள்.
“இதுக்கு மேல உங்கக்கிட்ட வெக்கத்தை விட்டு எப்பிடிச் சொல்றதுன்னு எனக்குப் புரியலை அத்தான்.” கண்ணீர் விட்டுக் கதறிய அந்த விழிகளை ஒரு நொடிதான் பார்த்தான் வருண்.
அடுத்த நொடி அவள் அவன் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள். மயூரி திடுக்கிட்டுப் போனாள். உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பு முழுதாக ஓடியது.
அவன் மேல் வந்து மோதிய சொர்க்கத்தை அதற்கு மேல் வருண் தள்ளி வைக்கவில்லை. தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அத்தான்… அத்தான் என்று பிதற்றிய அவள் அதரங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் வசம் ஆகிப்போனது!
அவன் கோடு தாண்டத் தாண்ட அவள் கண்கள் கரையுடைத்தது.
“உஷ்… எதுக்கு இந்த அழுகை இப்போ?!” அவன் ஒரு அதட்டல் போட அவள் அடங்கிப் போனாள். ஆனந்தம் இப்போது கண்ணீராக வெளியேறாமல் அவனுக்கு இசைந்து கொடுத்து தன் இருப்பைக் காட்டிக் கொண்டது.
இருவருக்குமே பாலபாடம்! தயங்கித் தயங்கி நின்றவனின் முதலெழுத்து அவளாகத்தான் இருந்தாள்!
ஆனால் தொடங்கி வைத்தவளுக்குத் தொடரத் தெரிந்திருக்கவில்லை. தொலைந்து போக மட்டுமே தெரிந்திருந்தது!
அவள் ஆரம்பித்து வைத்த ஒவ்வொரு எழுத்தையும் தேர்ந்து தேர்ந்து, கோர்த்துக் கோர்த்து வார்த்தைகள் சமைத்தான் வருண்!
“ஸ்…” அன்று காயம்பட்ட இடத்தில் அவன் முகம் புதைத்த போது சிணுங்கியது பெண்!
வார்த்தைகள் இப்போது ஒன்று சேர்ந்து வாக்கியம் ஆனது! வாக்கியங்களை சேர்த்துக் கோர்க்க வருண் முயன்ற போது பெண் மயங்கியது! லேசாகத் தயங்கியது!
கோர்த்த வாக்கியங்களைச் சுவைபட, பொருள்பட அவன் கவிதையாக்கிய போது பெண் முழுதாகக் களைத்திருந்தது!
இருள் கவிழ்ந்த இரவும், இயற்கையின் இரைச்சலும் மாத்திரமே அவர்களைச் சூழ்ந்து நின்றது. களைத்திருந்தவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் வருண்.
காலம் முழுதும் சேர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும்… அவள் கேட்ட காதலைக் கொடுக்கும் பொழுதுகளில் அவளைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்திருந்தான் வருண்!
கொடுப்பது மாத்திரமா காதல்?!
இப்போது அவன் கொடுத்தது காதல் என்றால், அவன் அவளிடமிருந்து எடுத்ததிற்குப் பெயர் என்ன?! உருகி உருகி சுகித்ததிற்குப் பெயர்தான் என்ன?!
மனதுள் எழுந்த கேள்விகளுக்கு அவனிடம் விடைகளில்லை. விடை தேட அவன் விரும்பவுமில்லை!
“அத்தான்…” சோர்வோடு வந்த அந்தக் குரல் அவனுக்கு மீண்டும் போதையூட்ட அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் வருண்!
இன்பம் கட்டிலா… அவள் தேகக்கட்டிலா… தீதிலா காதலா… ஊடலா கூடலா…