காதல் சதிராட்டம்-19

காதல் சதிராட்டம்-19

“ஐயோ ” என்ற ப்ரணவ்வின் குரலைக் கேட்டு அறையில் இருந்த ஆதிரா பதறி ஓடி வந்தாள்.

வெளியே தோட்டத்தில் நின்றுக் கொண்டு இருந்த வினய்யோ பறந்து வந்து ப்ரணவ்வின் முன்பு நின்றான்.

ஒரு கையில் அயர்ன் பாக்ஸையும் மறுகையில் காயத்தையும் முகத்தில் அடிப்பட்ட வலியையும் சுமந்துக் கொண்டு ப்ரணவ் பரிதாபமாக நின்றுக் கொண்டு இருந்தான்.

அவன் நின்றுக் கொண்டு இருந்த தோரணையிலேயே தெரிந்தது, அவன் அயர்ன்  பாக்ஸில் கையை சுட்டுக் கொண்டு தான் இப்படி அலறி இருக்கிறான் என்று.

“டேய் அயர்ன் பாக்ஸ்ல கையை சுட்டுக்கிட்டியா டா.. பார்த்து பண்ணக்கூடாது… ” என்று வினய் ப்ரணவ்வைத்  திட்டியபடி  முதலுதவி பெட்டியைக் கொண்டு வர சென்றான்.

“மருந்துப் போட்டா சரியாகிடும்…கொஞ்சம் நேரம் வலி பொருத்துக்கோ..” என்று அவனை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்த ஆதிராவின் காதுகளில் வயிறுக் குலுங்க சிரிக்கும் சப்தம் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே உத்ரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு ப்ரணவ்வைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.

முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த வினய் உத்ராவைப் பார்த்து முறைக்க ஆதிராவும் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.

“உத்ரா இப்போ எதுக்கு இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க? அங்கே ஒருத்தன் வலியில துடிச்சுக்கிட்டு இருக்கும் போது இப்படியா சிரிச்சுக்கிட்டு இருப்ப” என்று கோபமாக கேட்க அப்போதும் உத்ராவின் சிரிப்பு அடங்கியபாடில்லை.

வினய் அவளை மறுபடியும் முறைக்க,  உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றவள் அது முடியாமல் போகவே
மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.

“அண்ணா எனக்கு இந்த காயத்தோட எரிச்சலை விட அவள் சிரிக்கிறது தான்னா இன்னும் எரிச்சலா இருக்கு… ” என்று உதட்டைப் பிதுக்கினான் ப்ரணவ்.

“உத்ரா இப்படி மத்தவங்க படுற கஷ்டத்தைப் பார்த்து நம்ம சிரிக்கக்கூடாது.. அங்கே பாரு அவன் எப்படி வலியால துடிச்சுக்கிட்டு இருக்கான்… ” என்று ஆதிரா சொல்ல  முகத்தில் முயன்று சோகத்தை வர வழைத்துக் கொண்டு ஆதிராவைப் பார்த்தவள் ப்ரணவ்வைப் பார்க்க மீண்டும் அடக்கி வைத்த புன்னகை வெடித்துச் சிதறியது.

“அண்ணா அண்ணி என்னை மன்னிச்சுடுங்க… என்னாலே சத்தியமா சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல.. அவன் பண்ணதை நான் சொன்னா நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீங்க… ” என்றாள் உத்ரா  உதட்டில் அடக்கிய புன்னகையுடன்

“அப்படி என்ன பண்ணித் தொலைஞ்சான்… ” என்று வினய் கேட்க “நோ ” என்ற கூக்குரலுடன் ஓடி வந்த ப்ரணவ் தடுத்தான்.

அவன் சொல்லவிடாததே ஆதிராவிற்கு கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

“அப்படி என்ன தான் ஆச்சு உத்ரா…” என்றாள் ஆவல் மேலிட.

உதட்டில் வழிந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உத்ரா சொல்ல ஆரம்பித்தாள்.

“அதோ  அங்கே இருக்கு இல்லை அண்ணா  அந்த  அயர்ன்  பாக்ஸ் அதை வெச்சு இந்த ப்ரணவ் ஷர்ட்டை அயர்ன் பண்ணிட்டு இருந்தானா…. அப்போ ஒரு கொசு அவனையே சுத்தி சுத்தி வந்துதா… அவன் அந்த கொசுவை பிடிச்சு நசுக்கிப் போட்டணும்ன்ற கொலைவெறியோட அந்த கொசு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான்… ஆனால் அந்த கொசு அவன் கையிலே அகப்படாம தப்பிச்சுப் போயிடுச்சு…
இவன் மறுபடியும் அந்த கொசுவை பிடிக்க முடியாத கடுப்புல ஷர்ட்டை அயர்ன் பண்ணிட்டு இருந்தானா… அப்போ அந்த கொசு அவன் கை மேலே வந்து உட்கார்ந்துச்சா…  இந்த லூசு கொசுவை பொசுக்குற ஆர்வத்துல,  கொசு இருந்த கை மேலேயே அயர்ன்பாக்ஸை வைச்சு தேய்ச்சுட்டான்… ” என்று சொல்லிவிட்டு உத்ரா விழுந்து விழுந்து சிரிக்க ஆதிராவும் வினய்யும் திரும்பி ப்ரணவ்வை கேவலமாகப் பார்த்தனர்.

“அண்ணா ஆனால் அந்த கொசு செத்துடுச்சு… ” என ப்ரணவ் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு செல்ல வினய்யும் ஆதிராவும் வெடித்துச் சிரித்துவிட்டனர்.

“டேய் ப்ரணவ் எப்போ இருந்து டா நீ இவ்வளவு அறிவாளியா மாறுனா?” என்று வினய் ப்ரணவ்வைப்  பார்த்து கேட்க  அவன் உதட்டைப் பிதுக்கினான்.

“இல்லை அண்ணா… லைட்டா ஏதோ டென்ஷனா இருந்தது… அந்த டென்ஷனை கொசு மேலே காட்டப் போய் எனக்கே அது வினையா மாறிடுச்சு… ” என்று ப்ரணவ் சொல்ல வினய் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.

வினய்யின் பார்வை  எதனால் அவன் பதற்றமாய் இருக்கிறான் என்று ஆராய்ந்துக் கொண்டு இருந்தது. அவனின் இந்த பதற்றத்திற்கும் வருத்தத்திற்கும் காரணம் அவனின் காதலி  தான் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

அவனின் காயத்தை அருகில் சென்றுப் பார்த்தான். நன்றாக காயப்பட்டு இருந்தது.

“சே இந்த காயத்துக்கு முதலில் முதலுதவி தராமல் இப்படி சிரித்துக் கொண்டு இருந்துவிட்டோமே ” என்று தன் மேலே அவனுக்கு கோபம் வந்தது.
அதைக் கொஞ்சம் உத்ராவிடமும் காட்டினான்.

“உத்ரா இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா அவனுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்கலாம்ல ” என்று வினய் அவனைப் பார்த்துக் கடிந்து கொண்டான்.  உத்ரா பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பு ப்ரணவ் முந்திக் கொண்டான்.

“அண்ணா எனக்கு அடிப்பட்ட அடுத்த நிமிஷமே அவள் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி பெயின் கில்லர் டேப்லெட் லாம் கொடுத்துட்டா அண்ணா… அப்புறமா தான் என் மூஞ்சியை பார்த்து பார்த்து இன்ஸ்டால்மென்ட்ல இப்படி சிரிச்சுக்கிட்டு கிடக்கிறா… ” என்று ப்ரணவ் சொல்ல வினய் திரும்பி மெச்சுதலாக உத்ராவைப் பார்த்தான்.

அவள் வினய்யைப் பார்த்து லேசாக முறுவலித்து விட்டு மீண்டும் ப்ரணவ்வைப் பார்த்தவள் அவன் அயர்ன் பாக்ஸில் கையை சுட்டுக் கொண்ட வைபவத்தை மீண்டும் நினைத்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அதில் கடுப்பான ப்ரணவ் உத்ராவை கண்கள் இடுங்கி முறைத்தான்.

“ஹே உத்ரா போதும்… என்னைப் பார்த்து நிறைய சிரிச்சுட்ட… இதுக்கும் மேலே சிரிச்ச பல்லை ட்ரில்லிங் மெஷின் போட்டு பேத்து எடுத்துடுவேன்… “

“நீ என் பல்லை பேத்து எடுத்தாலும் பரவாயில்லை… நான் நீ பண்ணதை நினைச்சு நினைச்சு சிரிப்பேன்… ஹா ஹா… ” என்று வேண்டுமென்றே சத்தமாக சிரித்துக் காட்டினாள் உத்ரா.

“உத்ரா நீ பண்ணதை எல்லாம் யோசிச்சுப் பார்த்தா நான்லாம் வருஷக் கணக்கா சிரிக்கணும் தெரியுமா?”

” அப்படி சிரிக்கிற அளவுக்கு அவள் என்ன சம்பவம் பண்ணா ப்ரணவ்?” என்று ஆதிரா ஆர்வமாகக் கேட்டாள்.

“லைட்டு எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டு மெழூகுவர்த்தி வெளிச்சத்தை போன்ல போட்டோ பிடிக்கிறேனு போய் தன்னோட நிழலைத் தானே பார்த்து பேய்னு நினைச்சு பயந்து விழுந்து அடிச்சு ஓடி வந்ததா குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்து இருக்கு… ” என்று ப்ரணவ் சொல்ல ஆதிரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“அண்ணி அப்புறம் நிறைய சம்பவங்கள் இருக்கு….. ஒரு நிமிஷம் இருங்க அண்ணி… ” என்று சொன்னவன் வேக வேகமாக சென்று கையில் ஏதோ ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தான்.

அந்த காகிதத்தைக் கண்டதும் உத்ரா பதறிப் போய் கத்தத் தொடங்கினாள்.

“டேய் டேய் ப்ரணவ் ப்ளீஸ் டா கெஞ்சிக் கேட்கிறேன்… அந்த லெட்டரை படிச்சு தொலையாத டா… “

“கண்டிப்பா இந்த லெட்டரை படிச்சே தீருவேன் உத்ரா… ” என்று அவன் அவள் பிடிங்க முடியாதபடி அந்த லெட்டரை உயர்த்திப் பிடித்தான்.

அந்த லெட்டரை எட்டிப் பிடிக்க முயன்றவள் அது முடியாமல் போகவே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ” ப்ளீஸ் டா ப்ரணவ் நான் பாவம் இல்லையா.. அந்த லெட்டரை என் கிட்டே கொடுத்துடேன்… “என்று கெஞ்சினாள். ஆனால் ப்ரணவ் மசியவே இல்லை.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சியே அப்போ எங்க போச்சு இந்த பாவம் எல்லாம்… ” என்று சொன்னவன் அந்த கடிதத்தை மேலும் உயர்த்திப் பிடித்தான்.

“ஆமாம் அது என்ன லெட்டர்??” என்றான் வினய் கேள்வியாக

“லவ் லெட்டர் அண்ணா… ” என்றான் ப்ரணவ் அவசரமாக.

அதைக் கேட்டதும் வினய் வேகமாக உத்ராவின் அருகில் வந்து அந்த கடிதத்தை எட்டிப் பிடிக்க முயன்ற அவளது இரு கைகளையும் மடக்கி முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று அவளை சிறைப்பிடித்தான்.

” டேய் ப்ரணவ் இப்போ படி டா… ” என்று வினய் சொல்ல ” “தேங்க்ஸ் அண்ணா… ” என்று சொன்ன ப்ரணவ்  அந்த கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

ஹாய் உத்ரா…

நான் இந்த விஷயத்தை சொன்னதும் உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல… கோபப்படுவியா… சந்தோஷப்படுவியா… வெட்கப்படுவியா… தயங்குவியா… எரிச்சல்படுவியா… என்ன பண்ணுவனு எனக்கு தெரியல… உன் முகத்தை நேரா பார்த்து எனக்கு இந்த லெட்டரை கொடுக்கணும்னு தான் ஆசை… ஆனால் என் உணர்வுகளை வார்த்தையை விட  வாக்கியத்துல என்னால இன்னும் அதிகமா வெளிப்படுத்த முடியும்… அதான் இந்த லெட்டரை எழுதி இருக்கேன்… உன்னைப் பார்க்கும் போதுலாம் என் மனசை தூக்கி ஃப்ரிட்ஜ்க்குள்ளே வெச்சா மாதிரி நல்லா ஜில்லுனு இருக்கும்… பேச முடியாம வாய் தந்தி அடிக்கும்… என்னை விட்டு ஓரடி நீ தள்ளிப் போனாலும் என் மனசு எதையோ இழந்த மாதிரி ஃபீல் ஆகும்… இதுக்கு பேர் என்னனு எனக்கு தெரியல… இந்த பேர் தெரியாத உணர்வுல இருந்து என்னைக் காப்பாத்தி உன் காதலை பேரா தர முடியுமா?? என் முட்டாள்தனத்தையும் குறும்புத்தனத்தையும் சமாளிச்சு என் வாழ்க்கை முழுக்க என் கூட இருக்க சம்மதமா??… உனக்கு என்னை பிடிச்சு இருந்தா நாளைக்கு என்னைப் பார்த்து ஒரு வாட்டி கண்ணடி இது காதல் தான்னு புரிஞ்சுக்கிறேன்… அப்படி நீ கண்ணடிக்கலனா அது நட்புனு புரிஞ்சுக்கிறேன்… எனக்கு உன் கிட்டே ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் உத்ரா…  என் மேலே காதல் இல்லனா கூட இந்த கடிதத்தைக் கோபத்துல கிழிச்சுப் போடாம பத்திரமா வெச்சுக்கோ… ஐ லவ் யூ உத்ரா…

என்றவாறு முடிந்து இருந்தது அந்த கடிதம். அந்த கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் சொட்டி இருந்தது. அந்த கடிதத்தை யார் எழுதி இருப்பார்கள் என்ற கேள்வியுடன் வினய் உத்ராவைப் பார்த்தான்.

“உத்ரா இந்த அளவுக்கு உன்னை காதலிச்சது யாரு? யார் அந்த லெட்டரை எழுதினா?” என்று ஆதிரா ஆர்வமாக அவளைப் பார்த்து கேட்க உத்ராவோ பதில் சொல்ல முடியாமல் குனிந்தாள். ஆனால் ப்ரணவ்வின் குரல் ஒலித்தது.

” உத்ரா தான் இந்த லெட்டரை எழுதுனா… ” என்று ப்ரணவ் சொல்ல ஆதிராவும் வினய்யும் ” வாட் ” என்று அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தனர்.

“ஆமாம் அண்ணி.. அவளுக்கு எந்த லவ் லெட்டரும் வரல தன்னை யாருமே காதலிக்கலேயேனு பயபுள்ளை ரொம்ப ஃபீல் பண்ணி தனக்கு தானே லவ் லெட்டர் எழுதிக்கிட்டா… ” என்று சொல்ல ” என்ன ஒரு புத்திசாலித்தனம்… ” என்பதைப் போல இருவரும் உத்ராவைப் பார்த்தனர்.

“அண்ணா அண்ணி ப்ளீஸ் என்னை அவ்வளவு அழகா பார்க்காதீங்க… எனக்கு வெட்க வெட்கமா வருது… அது வந்து என்னை நானே self love பண்ணி தான் அந்த லெட்டரை எழுதுனேன்… கவியரசு வைரமுத்துவே சொல்லி இருக்காரு இல்லை self love is best love னு ” என்று உத்ரா சொல்லி சமாளிக்க இருவரும் அவளைத் துப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டனர்.

ப்ரரணவ் மட்டும் உத்ராவைப் பழி வாங்கிய திருப்தியில் அவளைப் பார்த்து சிரித்து நின்று கொண்டு இருந்தான்.

“டேய் ப்ரணவ் ரொம்ப சிரிக்காதே… எனக்கு முன்னாடி வேணா லவ் லெட்டர் எழுத ஆளு இல்லாம இருந்து இருக்கலாம்… ஆனால் இப்போ என் செல்லக்குட்டி வைபவ் இருக்கான்… ” என்றவளைக் கோபமாக முறைத்தான்.

“உத்ரா ப்ளீஸ் இப்படி சின்னப் பிள்ளையாட்டம் பண்ணாதே… புரிஞ்சுக்கோ அவனுக்கும் உனக்கும் சுத்தமா செட் ஆகாது… “

“உனக்கு தான் வைபவ் பத்தி எதுவுமே தெரியாதே ப்ரணவ்… அப்புறம் எப்படி எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகாதுனு சொல்ற…. ” என்று கேட்க ப்ரணவ் அவளை கண்கள் இடுங்கப் பார்த்தான்.

“உத்ரா நான் உன் நல்லதுக்காக தான் சொல்லுவேன்… நல்லதைக் கேட்கக்கூடாதுனு நீ ஒரு முடிவோட இருந்தா என்னாலே என்ன பண்ண முடியும்… எக்கேடோ கெட்டுப் போ… இனி நான் எதுவும் சொல்லல… அப்படி பேசுனா செருப்பால அடி.. ” என்று அவன் கோபமாக சொல்ல “அவளோ  ஓகே ” என்று கூலாக பதிலளித்தவள் அலைப்பேசியில் டைப் செய்துக் கொண்டு ப்ரணவ்வைக் கடந்து போனாள்.

அவளைக் கண்டு கொள்ளாமல் இரண்டு நிமிடம் அங்கேயே நின்று கொண்டு இருந்தவனால் மூன்றாவது நிமிடமும் அங்கேயே கண்டு கொள்ளாதபடி நின்று கொண்டு இருக்க முடியவில்லை.

” அடியே உத்ரா சொல்ற பேச்சைக் கேளு டி… அவனுக்கு மெசேஜ் பண்ணாதே… ” என்று அவளின் பின்னால் ஓடத் துவங்கி இருந்தான்.

தன்னறைக்குள் நுழையப் போன வினய்யை பெயர் சொல்லி அழைத்தாள் ஆதிரா.

வினய் என்ற பெயரை அவள் கூப்பிடும் போது எல்லாம் அவள் குரல் புல்லாங்குழலின் குரலை ஒத்து இருக்கும்.

இப்போதும் அந்த புல்லாங்குழல் ஒலியைக் கேட்டு சட்டென்று திரும்பினான். ஆனால் அவளது குரல் மட்டும் தான் இனிமையாய் இருந்தது  அவளது முகமோ மீட்டப்பட்ட வீணைக் கம்பியாய் கோபத்தில் அதிர்ந்துக் கொண்டு இருந்தது.

தன் கைகளில் இருந்த அந்த கயிறை அவன் முகத்திற்கு நேராக வீசி எறிந்தவள் அவனைக் கோபமாக முறைத்தாள்.

“வினய் இந்த மாதிரி உன்னை நியாபகப்படுத்துற பொருளை எல்லாம் என் முன்னாடி வெச்சு sympathy create பண்ண ட்ரை பண்ணாதே… நான் உன்னை மன்னிக்கிறது என் கனவுல கூட நடக்காது… ஆனால் அதை நீ நிஜத்தில நடத்திக் காட்டணும்னு நினைக்கிறது எனக்கு சிரிப்பா வருது… என் நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சவன் நீ… உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்… ” என்று சொல்லிவிட்டு சென்றவளை கண்களில் வலியோடுப் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

Leave a Reply

error: Content is protected !!