YALOVIYAM 15.1
YALOVIYAM 15.1
யாழோவியம்
அத்தியாயம் – 15
ராஜா அழைப்பைக் கேட்ட லதா, ‘இது போதுமே’ என்ற உணர்வில் இருந்தாரென்றால், ‘இதெப்படி?’ என்ற உறுத்தலில் லிங்கம் இருந்தார்.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரை, “இங்க வாங்க-ம்மா! என்னென்னு சொல்லுங்க?” என்றதும், “ராஜா” என்று அழுகை-ஆனந்தம் கலந்த உணர்வில் அழைத்து, அவன் அருகில் வந்தார்.
நிறைய பேச நினைத்தார். ஆனால் முடியவில்லை. ‘ஏன் இத்தனை நாள் பேசவில்லை?’ என்ற கேள்வி இருந்தும், எதையும் கேட்க முடியாமல் லதா தவித்துக் கொண்டிருந்தார்.
அவர் நிலை புரிந்தவன், “மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்-மா! இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?” என்றான்.
“அது…அது” என்று சொன்னாரே தவிர, சந்தோஷத்திலா? சங்கடத்திலா? வேறு ஏதும் சொல்ல முடியவில்லை.
பார்வை லதாவை நோக்கி இருக்க, “இந்த ஆளு இப்படின்னு உங்களுக்கு எப்போ தெரியும்?” என்று லிங்கத்தை நோக்கி கைநீட்டி கேட்டான்.
“முன்னமே. பேப்பர்-ல வந்த…” என்று முடிக்கும் முன்னே, “இந்த ஆளை பத்தி தெரியாதப்போ இங்க இருந்தீங்க சரி. தெரிஞ்சப்புறமும், ஏன் இருக்கணும்? வீட்டுக்கு வர வேண்டியதுதான?” என உரிமையுடன் கேள்வி கேட்டான்.
ஒன்றரை வருடத்திற்குப் பின்னரான அவனது உரிமையான பேச்சில், “ராஜா… நான்…” என்று தடுமாறினார்.
இதற்குள் லிங்கம், “இங்க என்ன…” என்று தொடங்கையில், “நானும் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம்-ல?? நீயேன் நடுவில வர்ற?” என ராஜா கோபத்துடன் கேட்டான்.
லிங்கம் அதிர்ந்து நின்றதும், “நீங்க சொல்லுங்கம்மா” என்றான்.
ராஜா இருக்கும் தைரியத்தில், “இவர்… என்னை…. ரொம்ப அடிக்கிறாரு. இப்பகூட அடிச்சாரு” என லதா முறையிட்டதும், ராஜா லிங்கத்தைப் பார்த்து, “அடிச்சியா? தைரியம் இருந்தா இப்ப அடி பாப்போம்” என்று சவால்விட்டான்.
உடனே லிங்கம், “என்னடா! இத்தனை நாள் இல்லாத பாசம், இன்னைக்கு புதுசா வருது?” என்று கோபமாகக் கேட்டு, அவன் முன்னே வந்து நின்றார்.
லிங்கத்தின் கண்களில் தெரிந்த காட்டத்தைக் கண்டதும், லதா பயந்தார். ஆனால் ராஜாவோ, லிங்கத்தை நெருங்கி நின்று, “பேசாம இருந்தேன்-ன்னு சொல்லு. பாசமா இல்லைன்னு சொல்லாத” என்றான்.
லிங்கம் முழித்துக் கொண்டு நின்றதும், “என்ன புரியலையா?” என்றவன், “ம்மா! இந்தாளு உங்களை எதுக்கு அடிச்சான்??” என்று கேட்டான்.
“ராஜா-க்கு ‘ஏன் இப்படிப் பண்ணீங்க-ன்னு?’ கேட்டதுக்காக” என கண்ணீருடன் சொன்னதும், அவர் கண்ணீரைத் துடைத்தவன், “இதுக்காகத்தான் பேசாம இருந்தேன்” என வருந்தும் குரலில் சொன்னான்.
லதா புரியாமல் பார்த்ததும், “ம்மா! உங்ககூட பேசினா, என்னால எதையும் மறைக்க முடியாது. இந்தாளு எனக்குச் செஞ்சதெல்லாம் சொன்னா, நீங்க இப்படிக் கேள்வி கேட்பீங்கன்னு தெரியும்.
இப்ப அரெஸ்ட் ஆகப்போறதுனால, அடிக்க மட்டும் செய்றான். ஆனா இதுக்கு முன்னாடி அப்படியில்லயே?! எனக்காகப் பேசி, உங்களுக்கு ஏதும் ஆயிடுச்சி-னா?…
நீங்களும் இல்லைன்னா… நான்… எனக்கு யாரு…” என தவித்தவன், “பேசாம இருந்ததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை-ம்மா! பயம்…. உங்களையும் ஏதாவது செஞ்சிடுவானோன்னு பயம்” என லதா கண்களைப் பாசத்தோடு பார்த்தபடி சொன்னான்.
அவன் கண்களில் தெரியும் பாசத்தைப் பார்த்த நிம்மதியில், கண்ணீரும் களிப்பும் சேர்ந்த முகத்தோற்றத்தில் நின்றார்.
அவர் கண்ணீரைத் துடைத்தவன், “மத்தது அப்புறமா சொல்றேன்” என்றதும், லிங்கத்தின்… இன்றைய பேச்சை, மருத்துவமனையில் அன்றைய கோபத்தை நினைத்துப் பார்த்த லதா, ‘சரியென்று’ தலையசைத்தார்.
அதுவரை அமைதியாக இருந்த லிங்கம், “என்னடா? இத்தனை நாளா அடங்கி இருந்தவன்… நான் அரெஸ்ட் ஆகப் போறேன்னு தெரிஞ்சதும், ஓவரா பேசற!?” என்று சத்தமிட்டார்.
“அடங்கி இருந்தேனா? அப்படி-ன்னு நீ நினைச்ச!!”
“என்னடா சொல்ற? புரியிற மாதிரி சொல்லு”
“முதலதான் நீ இவ்வளவு மோசமானவன்னு தெரியாது. அதான் நீ பண்ற தப்பு தெரிஞ்சதும்… சரி வளர்த்தவரு… சொல்லிப் பார்ப்போமேன்னு நினைச்சேன். ஆனா அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்-னு நல்லா உறைக்கிற மாதிரி புரிய வச்சிட்ட?!” என விபத்தின் நினைவில் வருந்திச் சொன்னான்.
இழப்பை நினைத்து அவன் கலங்குவதைப் பார்த்து லிங்கம் ஒரு சிரிப்பு சிரித்ததும், “சிரிக்காத!” என்று ஒற்றை வார்த்தையில் அவரை எச்சரித்தான்.
அதன் பின்னும் சிரித்துக் கொண்டிருந்தவரிடம், “சிரிக்காத-ன்னு சொல்றேன்-ல?” என்று கோபப்பட்டதும், “சிரிச்சா என்னடா பண்ணுவ?” என திமிராய் கேட்டார்.
“உன்னைப் பார்த்து நானும் சிரிப்பேன்” என்றான்.
‘எதற்கு?’ என்பது போல் லிங்கத்தின் சிரிப்பு குறைந்ததும், “உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கேன்-ல? அதுக்கு!” என்று காரணமும் சொன்னான்.
அதிர்ச்சியில், “நீ என்ன பண்ண? அந்த கலெக்டர்தான எல்லாம் பண்ணது?” என லிங்கம் கேட்டதற்கு, அவரைப் பார்த்துச் சிரித்தான்.
“சிரிக்காத! ஒழுங்கா சொல்லு-டா” என்று கட்டுப்பாட்டை இழந்து கத்தினார்.
“கத்தாத சொல்றேன்!” என்றான். பின், “இந்த ஸ்கேமோட ஆரம்பம் எதுன்னு தெரியும்-ல? செங்கல்பட்டு கலெக்டர் ஆபிஸ்-க்கு வந்த மனு” என்று அழுத்தமாக ஆரம்பித்தவன், “அதை எழுதிக் கொடுத்தது நான்தான்!” என அமைதியாக முடித்தான்.
லிங்கத்திற்கு முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
“ஒரு அரசியல்வாதியா இதை முன்னெடுத்திட்டு போனா, அதுக்கு ஆயிரம் அரசியல் சாயம் பூசி கேஸ ஒன்னுமில்லாம ஆக்கிடுவீங்க-ன்னு தெரியும்” என்று அரசியல் நிலவரத்தை, நிதர்சனத்தைச் சொன்னான்.
மேலும், “ஆனா, அதுவே ஒரு நேர்மையான அதிகாரி முன்னெடுத்திட்டுப் போனா?? அந்த அதிகாரி-க்கு தப்பைத் தட்டிக் கேட்கணும்ங்கிற அக்கறை இருந்தா? அவனே, உங்க அரசியல் செல்வாக்கு, பணபலத்துக்கு அடிபணியாதவனா இருந்தா? கூடவே, உங்க மிரட்டலுக்கு பயப்பிடாதவனா இருந்தா?” என்று ஆவேசமாகக் கேள்வி கேட்டான்.
ஒரு சிறு இடைவெளிக்குப் பின், “அவன்தான் மாறன்! கலெக்டர் யாழ்மாறன்” என்று சொல்லும் பொழுது, லிங்கத்தின் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.
“யார் கைக்கு கேஸ் போனா, ஆக்ஷன் எடுப்பாங்க-ன்னு யோசிச்சு பண்ண விஷயம். நான் எதிர்பார்த்தது வீண்போகலை. மாறன் தெளிவா ரிப்போர்ட் ரெடி பண்ணி, சிஎம் வரைக்கும் வந்தான். ஆனா அப்புறம், ராகினி மூலமா கேஸ் மூவ் ஆகாம பார்த்துக்கிட்டிங்க. கரெக்டா?”
‘நீ சொல்வது சரி!’ என்பது போல் ஓர் அலட்சியப் புன்னகையை லிங்கம் தந்தார்.
ஓர் ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துக் கொண்டவன், “என்ன செஞ்சா கேஸ் அடுத்த கட்டத்துக்குப் போகும்னு யோசிச்சேன். சிஎம் மீட் பண்ணிட்டு வந்ததும், ‘முறையான விசாரணை வேணும்னு’ கேட்டதா மாறன் ப்ரெஸ்கிட்ட சொன்னான்.
ஸோ, ஒரு ப்ரோபோஸர்-கிட்ட விஷயத்தைச் சொல்லி, அதே கோரிக்கையோட பொதுநல வழக்கு போட முடியுமா-ன்னு கேட்டேன். அவரும் ஒத்துக்கிட்டாரு” என்றான்.
நீதிமன்றம், அரசை கேள்வி கேட்ட பின்னர்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்ற விடயம் நியாபகத்தில் வந்ததும், லிங்கத்தின் அலட்சியமெல்லாம் ஆத்திரமாக மாறியிருந்தது.
“அதுக்கடுத்து விசாரணை கமிஷன் அமைச்சி, ரிப்போர்ட் சப்மிட் பண்ணி, மீடியா பேசினது எல்லாம் சரிதான். ஆனா தப்பு செஞ்சவங்க யாருன்னு தெரிஞ்சப்புறமும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
திரும்பவும் இந்த விஷயம் பேசணும். அதுக்கு என்ன பண்ண-னு யோசிச்சேன்.
அதான் ஒரு ரிப்போர்ட்டர மாறன்கிட்ட கேள்வி கேட்க வச்சேன். கேள்வி எப்படியிருந்தாலும் பொறுமையா பதில் சொல்லுவான்… ஸ்கேம் பத்தி பேச ஒரு சான்ஸா எடுத்துப்பான்னு…. நம்பினேன்!
அங்கேயும் அவன் என்னை ஏமாத்தல!! தெளிவா பேசி, கவர்மென்ட் நடவடிக்கை எடுப்பாங்க-ன்னு ஒரு நம்பிக்கை கொடுத்தான்.
அதுக்கப்புறம்தான் ஸ்டுடென்ட்ஸ் போராட்டம்… மீடியா-ல டிபேட்… அது இதுன்னு திரும்பவும் இதைப் பத்திப் பேசினாங்க” என்று திட்டமிட்ட தன் நகர்தலைச் சொன்னான்.
அதைக் கேட்க லிங்கத்தின் ஆத்திரங்கள் எல்லாம் அடங்கா கோபமாக மாறியிருந்த போது, “அதுக்கடுத்து நடந்தது உனக்குத் தெரியுமே? இதோ இப்ப அரெஸ்ட் ஆகிற நிலையில நீ நிக்கிற வரைக்கும்” என, அவர் கண்களுக்குள் சென்று திருப்தியுடன் சொன்னான்.
கண்கள் சிவந்த கோபத்துடன், “ஸோ பிளான் பண்ணி என்னை ஜெயிலுக்கு அனுப்புற?” என்று லிங்கம் கேட்டார்.
திட்டம் பலித்துவிட்ட திடத்துடன், “பிளான் பண்ணது நான், அதை நடத்தி முடிச்சது மாறன்” என்றான்.
அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்தியவர், “இப்போ என்னடா? என்னை அரெஸ்ட் பண்ணப் போறாங்கன்னு சந்தோஷமா இருக்கியா? இதோட என் அரசியல் வாழ்க்கை முடிஞ்சிரும்னும் நினைக்கிறியா?” என்று வெறியுடன் கேட்டார்.
ராஜா பதில் சொல்லவில்லை. ‘முழுசா சொல்லி முடி’ என்பது போல் நின்று கொண்டிருந்தான். லதாதான் இருவருக்குள்ளும் கைகலப்பு வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தார்.
விஷம் தோய்த்த புன்னகை ஒன்றைத் தந்து, “நானும் உன் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆகிட்டுதான்-டா வந்திருக்கேன்” என்றார்.
ராஜா கொஞ்சமும் அலட்டாமல் நின்றான். லதாதான், ‘ஐயோ! என்ன பண்ணி வச்சிருக்கிறார்?’ என்ற புருவ முடிச்சுகளுடன் நின்றார்.
“தலைவர்கிட்ட இடைத்தேர்தல்-ல உனக்கு சீட் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டேன்” என லிங்கம் சொன்னதும், “நீ எனக்கு பண்ண ஒரே நல்ல காரியம் இதுதான் லிங்கம்!” என்றான்.
புரியாமல் லிங்கம் பார்க்கவும், “என்ன பார்க்கிற? ஒரு வருஷமா கட்சிக்காக நான் எதுவும் பண்ணலை. என் கட்சிக்காரனே எனக்காக ஓட்டு கேட்க மாட்டான். மத்தவங்க எப்படி ஓட்டு போடுவாங்க?? நானே தலைவர்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். நீ சொல்லிட்ட!” என்று லேசாகச் சிரித்தான்.
அடங்கிவிட்டான் என்று நினைத்ததெல்லாம் பொய் என்பது போல, இப்படி எதிரில் வந்து பேசுகிறானே!? என்று மனதிற்குள் எண்ணியதை லிங்கத்தின் முகம் வெளியே காட்டியது.
லிங்கத்தின் அமைதியைக் கண்டு, “என்ன? நான் அடங்கிட்டேனா? இல்லை, உன்னை அடக்கிட்டோமா?” என்று அழுத்தமாகக் கேட்டு நின்றான்.
எரிமலை குழம்பாய் எரிக்கும் கோபத்துடன், “இங்க பாரு! உன்மேல, அந்த கலெக்டர் மேல இருக்கிற கோபம், இந்த ஜென்மத்தில குறையாது. பார்த்து இருந்துக்கோங்க” என்று, அந்த நிலையிலும் மிரட்டினார்.
அடக்கப்பட்ட ஆத்திரத்துடன், “ஈவு இரக்கமே இல்லாம எத்தனை பேர் உயிர் போக காரணமா இருந்திருக்கிற? உன்னை கொல்லனும் போல வெறி வருது. ஆனா இவங்க ரெண்டு பேரையும் நான்தான் பார்த்துக்கணும். அதான் உன்னை உயிரோட விடறேன்” என அமைதியாக முடித்தான்.
மேலும், “ம்மா! வாங்க போகலாம். இதுக்கு மேல இங்கே இருக்க வேண்டாம்” என்றவன், “சுடர் வா” என்று கூப்பிட்டதும், அவளும் எழுந்து வந்தாள்.
“டேய்! அவளைக் கூட்டிட்டுப் போ. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று லதாவைச் சொன்னவர்… மகள் மேல் கொண்ட பாசத்தில், “என் பொண்ண ஏன் கூட்டிட்டுப் போற?” என்று அதிருப்தி தெரிவித்தார்.
அவரை அலட்சியமாகப் பார்த்தவன்… மீண்டும், “சுடர் வா” என்றான்.
ராஜாவை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு, “சுடர்! நீ நினைக்கிற மாதிரி சேனல் ஆரம்பிச்சித் தர என்னாலதான் முடியும். அவனாலெல்லாம் அதைக் செஞ்சி தர முடியாது” என்று சொல்லி, மகளைத் தடுக்கப் பார்த்தார்.
“ஒரு அண்ணனா… நியாயமா சம்பாதிச்சு, உனக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் சுடர். நீ வா” என ‘நியாயத்தில்’ ஒரு அழுத்தம் கொடுத்துச் சொன்னான்.
‘பேசாமல் இரு?’ என்பது போல ராஜாவை முறைத்துவிட்டு, மகளிடம் சென்று “சுடர், அவன் சொல்றதைக் கேட்காத. அப்பா சொல்றதைக் கேளு. இங்கருந்து போகாத” என கெஞ்சினார்.
அதற்கு… அத்தனை நேரம் அமைதியாக இருந்த சுடர்… யாரையும் நிமிர்ந்து பார்க்காமல்… “ராஜாண்ணா போகலாமா?” என்று கேட்டாள்.
உடனே லிங்கத்தின் கெஞ்சல் தோரணை குறைந்து, ‘ஓ! நீயும் அவனுக்கு சப்போர்ட்டா?!’ என்பது போல் பார்த்தார். பின், “போ! தாராளமா போ!! ஆனா நான் சொன்னதை மறந்திடாத” என எச்சரித்துவிட்டு, திரும்பிக் கொண்டார்.
அவர், ‘எதைச் சொல்கிறார்’ என்று புரிந்ததும், சுடர் கண்கலங்கி நின்றாள்.
ராஜாவிற்கு, ‘என்ன சொன்னார்? எதற்காக இப்படி இருக்கிறாள்?’ என்று புரியவில்லை. இருந்தும், லிங்கம் கைது செய்யப்படும் நேரத்தில் அவர்கள் இங்கே இருக்க வேண்டாம் என நினைத்தான்.
எனவே, அதற்கு மேல் தாமதிக்காமல் தன்னுடன் இருவரையும் அழைத்துச் சென்றுவிட்டான்.