YALOVIYAM 15.2
YALOVIYAM 15.2
யாழோவியம்
அத்தியாயம் – 15
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா
அன்று உதவியாளரிடம் கேட்ட விவரங்கள் வந்திருந்தன. முன்னறையில் நின்று, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மனு வந்த அன்று செங்கல்பட்டு அரசுமருத்துவமனை வந்தவர்கள்… பொதுநல வழக்கு போட்ட பேராசிரியர், கேள்வி கேட்ட நிருபரின் விவரங்கள்… என அனைத்தையும் பார்த்து முடித்ததும், ‘ராஜா ஏன் இதைச் செய்யணும்?’ என்ற கேள்வி வந்தது.
சுடரிடம்தான் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
அக்கணம் ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசி முடித்தான். மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அதையும் பேசிவிட்டு உள்ளே வந்தான். வரவேற்பறையில் திலோ டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
டிவியில் இரவு நேரத்து முக்கிய செய்திகளாக லிங்கம் கைது செய்யப்படும் காட்சிகள், குற்றவாளிகளான ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைதான தருணங்கள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்தவாறே திலோ அருகில் வந்தமர்ந்தவன், “சசியும்… அலெக்ஸ் அங்கிளும்… ஃபோன் பண்ணியிருந்தாங்க. இதைப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம்” என லிங்கம் கைது செய்யப்படும் காட்சிகளைக் காட்டினான்.
திலோ அமைதியாக இருந்தார்.
நிரம்ப திருப்தியுடன், “ரெண்டு பேருமே சூப்பர் ஹேப்பி மூட்-ல இருக்காங்க” என்று கொஞ்சம் முக மலர்ச்சியுடன் சொன்னான்.
எதுவும் சொல்லாமல், “சாப்பிடலாமா?” என்று திலோ கேட்டதற்கு, ‘அப்பா நினைவோ?’ என நினைத்தவன், டிவியின் ஒலி அளவைக் குறைத்தான். பின், “அப்புறமா சாப்பிடலாம். நீங்க ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்று கேட்டான்.
கவனத்தை டிவி காட்சியிலிருந்து எடுக்காதவர், “மாறன், அப்பா ஆக்சிடென்ட் கேஸ்… அதுக்கும் இவர்தான காரணம்??” என்று மெல்ல ஆரம்பித்தார்.
“நான் பாலோவ் பண்றேன்-மா. இன்னும் கொஞ்சம் எவிடென்ஸ் கிடைச்சதும் எப்ஐஆர் போடுவாங்க” என்றவன், “அதை நான் பார்த்துகிறேன். உங்களுக்கு என்னாச்சு-ன்னு சொல்லுங்க?” என்று டிவியை ஆஃப் செய்தான்.
“உனக்கு எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி அரேஞ் பண்ணியிருக்காங்கன்னு, காசி சொன்னாரு. அப்படின்னா, உனக்கும் ஏதாவது ஆபத்து இருக்கா?” என்று பயத்துடன் கேட்டார்.
“ம்மா! இன்னைக்கு அரெஸ்ட் இருக்கிறதாலதான் இப்படி ஒரு அரேஞ்சமென்ட். நீங்க இதை நினைச்சி பயப்படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.
“ம்ம்” என்றவர், மாறனைப் பார்த்து, “இன்னைக்கு வெளியே போயிருந்தேன்” என்று மட்டும் சொன்னார்.
என்ன நடந்ததென்றே தெரியாததால், “பொட்டிக் போனீங்களா? அதான் டயர்டா இருக்கிறீங்களா?” என்று எதார்த்தமாகக் கேட்டான்.
“இல்லை! அந்தப் பொண்ண பார்க்க போயிருந்தேன்” என்றதும், ‘சுடரையா? ஏன்? எதற்காக? என்ன பேசியிருப்பார்கள்?’ என்ற கேள்விகளுக்குளே உறைந்து கிடந்ததால், பேசாமல் இருந்தான்.
திலோவே, “உன் மொபைலருந்து அவங்க நம்பர் எடுத்தேன். ஃபோன் பண்ணி பார்க்கணும்னு சொன்னேன். ‘சரின்னு’ வந்தாங்க. அதான்… நானும் போய், பார்த்திட்டு வந்தேன்” என விவரமாகச் சொன்னார்.
“ஓ!” என்று சாதாரணமாகச் சொன்னாலும், “ஏன் அவளைப் பார்க்கணும்….?” என கேட்கையில் அசாதாரண வேகத்தில் மாறன் இருதயம் துடித்தது.
“சில விஷயம் பேசணும்னு நினைச்சேன். அதான்! அதை உன்கிட்டயும் சொல்லணும்… சொல்லட்டுமா?… சொல்லலாமா?” என்று தயங்கிக் கேட்டார்.
அம்மா என்ன பேசியிருப்பார்? அதற்கு, சுடர் என்ன சொல்லியிருப்பாள்? என்ற எதிர்பார்ப்பு கேள்விகளில் இருந்தவன், “ம்ம்ம்” என்றான்.
சற்று யோசித்தார். பின், பேசியது அனைத்தையும் மகனிடமும் சொன்னார். முழுதும் கேட்டு முடிக்கும் வரை அவன் குறுக்கிடவே இல்லை. பேசி முடித்த பின்பும் எதுவும் பேசவில்லை.
இந்தப் பேச்சுக்கள் சுடரை காயப்படுத்தியிருக்கும் என்று எண்ணத்திலே இருந்ததால், அவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.
திலோ மெதுவாக, “மாறன்! ஒன்னுமே பேச மாட்டிக்கிற? என்ன நினைக்கிற?” என்று கேட்ட பிறகும்… அவன் பேசாமல் இருந்ததால், திலோவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
அந்த நேரத்தில் கணவரின் இழப்பு அதிகமாகத் தெரிந்ததாலும்… தன் பேச்சு அதிகப்படி என நினைக்கிறானோ? என்ற வினாவிலும்… திலோ விழிகளில் கண்ணீர் தேங்கியது.
அம்மா-மகன் இருவருக்கும் இடையே நீளமான ஒரு அமைதி நிலவியது.
மெல்ல நடந்து… அதைக் கடந்து வந்த திலோ, “ஏதாவது தப்பா பேசியிருந்தா சாரி…” என குறைந்து போன குரலில் சொல்லி எழுந்த போதுதான், மாறன் நிகழ்கணத்திற்கு வந்து அம்மாவைப் பார்த்தான்.
கலங்கிய கண்களுடன்… கையைப் பிசைந்து கொண்டு நின்றவரிடம், “ம்மா, உட்காருங்க… பேசலாம்” என்றதும்… அவனருகில் அமர்ந்து, “நான் பேசினது தப்புன்னு நினைக்கிறியா?” என முகத்தில் கலவரத்தோடு கேட்டார்.
“முதல… என்கிட்ட எதுக்கு சாரி கேட்கிறீங்க? பேசணும்னு நினைச்சிருக்கீங்க. பேசிட்டிங்க… அவ்வளவுதான்”
‘சரி’ என்ற உடல்மொழியுடன், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. அவங்களை ஊழல் செஞ்ச அரசியல்வாதி பொண்ணா… நான் பார்க்கிற பார்வையில தப்பு இருக்கா?” என்றார்.
பொறுமையாக, “இன்னைக்கு இருக்கிற நிலைமையில எல்லாரும் சுடரை இப்படித்தான் பார்ப்பாங்க. ஸோ நீங்களும் அதே மாதிரி பார்த்திருக்கீங்க” என, ‘தவறா? சரியா’ என்ற கேள்விக்குள்ளே போகாமல் பதில் சொன்னான்.
தன் கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், “நீ எப்படிப் பார்க்கிற?” என்றொரு கேள்வி கேட்டார்.
அதைவிட பொறுமையான தொனியில், “எல்லாரும் பார்க்கிற மாதிரி நானும் பார்த்தா… அப்புறம் மத்தவங்களுக்கு எனக்கும் என்ன வித்தியாசம்?” என்று மற்றொரு கேள்வியையே பதிலாகத் தந்தான்.
ஆனால் அந்தக் கேள்வியே திலோவிற்குப் போதுமான பதிலாக இருந்ததால், அமைதியாக இருந்தார். பின், “அப்போ நான் பார்க்கிற பார்வை தப்புன்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“ச்சே… ச்சே… அது உண்மையா இருக்கிறப்போ, அதெப்படி நான் தப்பு-ன்னு சொல்ல முடியும்?” என்றவனை குழப்பத்துடன் திலோ பார்த்ததும், “நான் அப்படிப் பார்க்க மாட்டேன்-ன்னு சொல்றேன்” என தெளிவாகச் சொன்னான்.
ஏதோ ஒரு அவசரத்தில் “அந்த பொண்ணுக்கே… அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கு மாறன்… ” என்றார்.
“இருக்கலாம்! ஆனா நான் அப்படிப் பார்க்க மாட்டேன்-ன்னு நம்பிக்கையா இருப்பா. அந்த நம்பிக்கையைக் கொடுத்தது என்னோட காதல்-னா… அதைக் காப்பாத்திறதலயும்… என் காதல் இருக்கு” என அவசரப்படாமல் சொன்னான்.
உடனே, “அப்பா இல்லாததுக்குக் காரணமானவரோட பொண்ணு-ன்னு உனக்குத் தோணவே இல்லையா மாறன்?” என்றவர் குரலில் அடங்கா துயரம் வெளிப்பட்டது.
இழந்தவரின் வலி! அந்த வலி தந்த கேள்வி இது! ‘இல்லை’ என்றால்… காதல் ஜெயிக்கும். பாசம் தோற்கும். ‘ஆம்’ என்றால்… பாசம் இருக்கும். காதல் இருக்காது.
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!!
இதைத்தவிர வேறு பதிலே இல்லையா? இருந்தது. பதில் இருக்கின்றது. அது, சுடரை அவளுக்கென்ற குணங்களுடன் பார்ப்பது. அது அவனால் மட்டுமே முடியும். இக்கணத்தில் வேறு யாராலும் முடியாது. திலோவாலும் முடியாது.
ஆதலால் அமைதியாக இருந்தான். ஆனால் முகம் முழுதும் யோசனை ரேகைகள் பேசியபடி இருந்தன.
அதைக் கண்டவர், “என்ன யோசிக்கிற?” என்று கேட்டதும், “ஒன்னுமில்லை-ம்மா. நீங்க பேசுங்க” என்று, பதில் சொல்வதைத் தவிர்த்தான்.
“ஏற்கனவே ஒருதடவை ‘இது சரிவராது-ன்னு’ சொன்னதா… நீ சொன்னேல. அப்போ, அதைப் புரிஞ்சிருப்பாங்கள…? இப்பவும் சூழ்நிலையைச் சொல்லி, ‘சரிவராது-ன்னு’ சொன்னா… புரிஞ்சிக்க மாட்டாங்களா??” என்று கேட்டார்.
‘அவள் புரிந்து கொள்வாளா? மாட்டாளா?’ என்ற கேள்விக்கு முன்னே, ‘நான் எப்படி அப்படிச் சொல்வேன்??’ என்ற கேள்வி வந்ததால், அமைதியாக இருந்தான்.
பேசாமல் இருந்தவனிடம், “மாறன்” என்றதும், பதில் என்பதைத் தாண்டி… தன் நிலையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“அன்னைக்கு அவளைப் பத்தி எதுவும் தெரியாது… பத்து நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது… பிடிச்சிருக்குன்னு வார்த்தையால சொன்னதில்லை… அவளுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு புரிஞ்சிக்கலை… “
‘என்ன சொல்ல வருகிறான்?’ என்பது போல் திலோ பார்த்தார்.
“அந்தமாதிரி ஒரு சூழ்நிலையிலே, அவ அப்பாவ காரணம் காட்டி… ‘இது சரிவராது-ன்னு’ சொன்னதில ஒரு சின்ன நியாயம் இருந்தது”
இன்னும் அவன் சொல்ல வருவது புரியாததில், நெற்றி முடிச்சுகளுடன் திலோ இருந்தார்.
“இப்ப… அவளைப் பத்தி நல்லா தெரியும்… நிறைய பேசியிருக்கேன்… இப்பவும் பிடிக்குதுன்னு வார்த்தையால சொல்லிக்கலை… ஆனா அவளுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு தெரியும்…”
‘கேள்விக்கான பதில் எப்போது வரும்?’ என்று மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“இதுக்கப்புறமும்… அவ அப்பாவ காரணம் காட்டி, வேண்டாம்னு சொன்னா… அதுல நியாயமில்லை-ன்னு சொல்லனுமா? இல்லை, காதலே இல்லைன்னு சொல்லனுமா??” என, கேள்வி கேட்டவரிடமே கேள்வி கேட்டு நிறுத்தினான்.
ஒருவித சோர்வில், “டைரக்ட்-டா கேட்கிறேன்… இவ்வளவு நடந்தபுறமும், நீ அவங்களைத்தான் மேரேஜ் பண்ண நினைக்கிறியா?” என்று கரகரத்த குரலில் கேட்டார்.
மீண்டும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!
‘ஆமாம்-இல்லை’ என்று எதிரெதிர் முனைகள். எதில் நின்றாலும், ஒன்று ஏறும்… மற்றொன்று இறங்கும். ‘என்ன சொல்ல?’ என்று யோசித்தான்.
பின் மெதுவாக, “இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. பட் என்கிட்ட இருக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்”
“நீங்க ‘வேண்டாம்னு’ சொல்ற காரணத்துல ஒன்னு அவளால மாத்தவே முடியாது” என தியாகு மரணத்திற்குக் காரணம் லிங்கம் என்பதைக் குறிப்பிட்டு, அம்மாவைப் பார்த்தான்.
“புரியுது”
“இன்னொன்னு! ஊழல் செஞ்சவரோட பொண்ணுங்கிற அடையாளம். அது இருக்கும். ஆனா, அந்த அடையாளத்தை அவ கண்டிப்பா மாத்திடுவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்தத் திறமையும் அவளுக்கு இருக்கு.
என்ன ஒன்னு? அது நடக்கிறதுக்கு நிறைய டைம் எடுக்கும். ‘இப்படியே இருக்காத! உன்னால முடியும்னு’… நான் கைப்பிடிச்சி நின்னு சொன்னா, கொஞ்சம் சீக்கிரமா நடக்கும்” என்று சொல்லி, இடைவெளி விட்டான்.
திலோ, கண்கள் கலங்க மாறனைப் பார்த்தார்.
“ஆனா… இப்போ என் நிலைமை… என் பதவி… எனக்கு இருக்கிற பொறுப்பு… என் கடமை… அரசியலவாதிகளுக்கு என்மேல இருக்கிற கோபம்… அதுக்கு விடாதுன்னு-ன்னு தெரிஞ்சிடுச்சி” என இன்றைய நிதர்சனத்தைப் புரிந்து பேசினான்.
ஓர் அமைதி வந்தது. அதில் புரிந்து பேசியதை உணர்ந்து பார்த்தான். புரிந்து பேசுவதும்… உணர்ந்து பார்ப்பதும்… வேறுவேறு அல்லவா? ஆகையால் பேசிய வார்த்தைகளை உணர்ந்ததும்… அது உள்ளத்தில் ஓர் வலியை உண்டாக்கியது.
மகனின் நிலை கண்ட திலோவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
அதே வலியுடனே மாறன் , “பக்கத்தில நின்னுதான் தைரியம் சொல்ல முடியாது… அட்லீஸ்ட் தூரமா நின்னாவது சொல்றேனே??!! அதுகூட இல்லைன்னா, லவ் பண்ணதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமே??!” என்று ஏக்கத்துடன் முடித்தான்.
திலோ ஏங்கி ஏங்கி அழுதார். ஏக்கத்தின் தாக்கத்தில் இருந்தவனுக்கு, முதலில் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின், அம்மா அழுகிறார் என்பதை உணர்ந்து, எழுந்து சென்று தண்ணீர் குடித்தான்.
கொஞ்சம் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வந்து திலோவிடம் கொடுத்தான். அவர் மறுத்துவிட்டார்.
எனவே, “ஏன்-ம்மா அழறீங்க?” என கண்ணீரைத் துடைத்தவனிடம், “கஷ்டமாயிருக்கு. அப்பா இருந்திருந்தா, இந்த மாதிரி பேச்சே வந்திருக்காது-ல?” என்று மீண்டும் அழதான் செய்தார்.
“ம்மா! ப்ளீஸ் இப்படி அழாதீங்க”
“தியாகு-வ கன்வின்ஸ் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, இப்போ என்னை நானே கன்வின்ஸ் பண்ண முடியாம இருக்கேன்னே?!” என்று அழுதார்.
“ம்மா!”
“உன்னை மாதிரி என்னால அவங்களைப் பார்க்க முடியலையே. அது ஏன் மாறன்?” என்று கண்களில் கண்ணீருடன், மகனைப் பார்த்துக் கேட்டார்.
“ஏன்னா? நீங்க ‘அப்பாக்கு பிடிக்காது’-ங்கிற இடத்தில இருந்து பார்க்கிறீங்க. ‘எனக்குப் பிடிக்கும்’-ங்கிற இடத்தில இருந்து பார்க்கலை. அதான்”
“அப்போ நான் பண்றது தப்புதான், இல்லையா?” என அழுதவர், “தியாகு நீங்க இப்படி ஒரு சிச்சுவேஷன்-ல என்னை விட்டுட்டுப் போயிருக்க கூடாது” என்று கதறினார்.
அவரின் தவிப்பை, துடிப்பைப் பார்த்தவனுக்கு… சிறிதுநேரம் என்ன செய்யவென்றே தெரியவில்லை.
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், “நீங்க பண்றது தப்பில்லை-ம்மா! அப்பாக்கு இப்படி ஒன்னு நடந்திருக்கிறப்போ, உங்களால எனக்காக யோசிக்க முடியாது. யோசிக்கவும் வேண்டாம்” என்றான்.
சிறு சிறு கேவல்களுடன், “அப்ப இதுக்கு என்னதான் முடிவு?” என்று கேட்டார்.
“ம்மா! இப்பவே முடிவெடுக்கணும்னு என்ன அவசியம்? எதுக்கிந்த அவசரம்? கொஞ்சம் டைம் எடுத்துக்குவோமே? எல்லாம் மாறும்” என, காலம் காயத்தை ஆற்றும், அது தன் காதலைப் போற்றும் என்ற நம்பிக்கையில் சொன்னான்.
“உண்மை எப்படி மாறும் மாறன்?” என்று, காயம் ஆறினாலும்… வடு இருக்குமே என்ற வேதனையில் கேட்டார்.
“மாறாது! அட்லீஸ்ட் மறக்க முடியுமில்லையா?” என, வடு இருக்கலாம்… ஆனால், இவ்வளவு வேதனை இருக்காதல்லவா? என்று பொருளில் கேட்டான்.
அதற்கு அவரிடம் பதிலில்லை. அதோடு நிறுத்திக் கொண்டான்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை, எதிர்பாரா நேரத்தில்…எதிர்பாரா விதத்தில் தொலைத்தவரிடம், இதற்கு மேல் பேசி கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை. மேலும், அவனுக்கும் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் வேறு திலோவிற்கு இருக்கிறது.
எல்லாவற்றயும் யோசித்தவன்… ஆழ்ந்த மூச்சை எடுத்து, “ம்மா! போதும் அழுதது. வாங்க ஒரு வாக் போகலாம்” என்று சொல்லி, எழுந்து நின்றான்.
எழாமல் இருந்தவரிடம், “ம்மா!” என அழுத்தமாகச் சொன்னவுடன், எழுந்தார். பின் அவரை முகம் கழுவச் சொல்லி… தண்ணீர் குடிக்க வைத்து… சாப்பிடச் சொல்லி… வெளியே அழைத்துச் சென்றான்.
சற்று நேரத்தில்… வீட்டின் சுற்றுவட்டாரத்தில் இருவரும் நடந்தனர். சுற்றுச் சுவர்களின் விளக்கொளியில், அம்மாவும் மகனும் பேசியபடியே நடந்தனர்.
திலோவின் பேச்சு தியாகுவைப் பற்றியே இருந்தது. முயற்சி செய்து பேச்சின் போக்கை மாறன் மாற்றப் பார்த்தான்.
ஆனாலும் முடியவில்லை.
கடந்து போன நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தால் மட்டுமே, அதைக் கடந்து வர முடியும். ஆனால் அதற்கு காலஅவகாசம் தேவை என மாறனுக்குப் புரிந்தது.
அதை அவருக்கு கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை எனப் புரிந்தது.
வெகு நேரம் நடந்த பின்னர், “போதும் மாறன்” என்றதும், இருவரும் உள்ளே வந்தனர். திலோ படுத்ததும், ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவர் அருகில்தான் இருந்தான்.
அழுது அழுது சிவந்த கண்களை மூடாமல் மகனையே பார்த்தவரிடம், “ம்மா! என்னை கஷ்டப்படுத்தறோமேன்னு நினைச்சி… நீங்க கஷ்டப்படாதீங்க. இப்ப தூங்குங்க” என்றான்.
திலோ எதுவும் சொல்லவில்லை. ஆனால் மெல்ல மெல்ல விழி மூடியவர், சற்று நேரத்தில் உறங்கிவிட்டார்.
அவர் தூங்கியதும் மெதுவாக எழுந்தான். பின் ஒவ்வொரு அறையிலும் எரியும் விளக்குகளை நிறுத்திவிட்டு, வெளியே வந்து நின்றான்.
அம்மாவிற்கு மகனாக… பதிவிக்குரிய பொறுப்புணர்வுடன்… வயதிற்கான பொறுமையுடன்… சூழ்நிலையை புரிந்து… அரசியல் சூழலை அறிந்து… பேசிவிட்டான்.
ஆனால் அவனுக்குள்ளும் இளமைத் துள்ளலுடன்… துறுதுறுவென்ற காதல் ஒன்று இருக்கிறதுதானே? அது, அவன் உள்ளத்திலிருந்து வெளியே வந்து… எதிரே நின்று… குறுகுறுவென்று பார்த்தது!
காதலின் அந்தப் பார்வை, ‘என்னை என்ன செய்யப் போகிறாய்?’ என்று, கண்ணீர் விட்டு, மாறனை கேள்வி கேட்பது போல் இருந்தது!
மாறன், உயிர்வலியை உணர்ந்த தருணம் அது!!
அப்படியே உடைந்து போய் வாசற்படியில் அமர்ந்து கொண்டான். சுடருக்கு அழைத்துப் பார்த்தான். இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் பெரிய தூரம் ஒன்றுமில்லை. இதோ… இங்கேதான் இருக்கிறது. ஆனால் இன்றைய நிலைமை… வானுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகத் தோன்றச் செய்திருந்தது.
ஆனால் அன்று டெல்லியில்… அவ்வளவு தூரத்தில்… இருக்கும் பொழுது கூட இப்படித் தோன்றவில்லையே… என்றதும், மனம் அந்த நாட்களை நோக்கிச் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 14
கல்லூரியை விட்டுச் சென்ற பிறகு, சுடரிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தான்.
எனவே சுடரின் சமூக வலைதள முகவரியைத் தேடினான். ஆனால் ‘சுடர்’ என்ற பெயரில் நிறைய முகவரிகள் இருந்தது. அதன் பதிவுகள் அனைத்தும் பகிர்வுகளாகவும், அவளைக் கண்டுபிடிக்கும் வகையில் இல்லாததாலும் தேடித் தேடி ஓய்ந்து போயிருந்தான்.
அன்று ‘சரி வராது’ என்று சொன்னது முட்டாள்தனமான முடிவு என ஒவ்வொரு நொடியும் யோசிக்கும்படி, அவளின் நினைவுகள் அவனை வாட்டி எடுத்தது.
தனது நாட்களையும், நாளைகளையும் ஆக்கிரமித்தவளிடம் பேசாமல் இருப்பதால்… அவன் இதயதேசம் இருண்ட பகலாக, வறண்ட சோலையாக மாறியது.
நிறைய நாட்கள் கடந்திருந்த நிலையில், டெல்லியில் இருந்த ஆட்சியர் பணி தேர்வுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருந்தான்.
ஒரு காலஅட்டவணை போட்டுக் கொண்டு, நேரத்தை வீணடிக்காமல் படித்து வந்தான். அவனது கனவை நோக்கிச் செல்லச் செல்ல காதல் பின்னுக்குத் தள்ளப்பபட்டது. ஆனால் உள்ளுக்குள்தான் இருந்தது.
காதல் ஒரு விசித்திர ஓட்டம்!
நிஜங்கள் எல்லாம் முன்னோக்கி ஓட, நினைவுகள் எல்லாம் பின்னோக்கி ஓட, ஒரே நேரத்தில் நாளை நோக்கியும்… நேற்றை நோக்கியும்… இன்று ஓடப்படும் விசித்திர ஓட்டம்.
யாழோவியம் அத்தியாயம் – 15 தொடர்கிறது…
நினைவிலிருந்து மீண்டவன் சுடருக்கு அழைத்துப் பார்த்தான். இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவள்… தன்னை விட்டுத் தூரமாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. பக்கத்தில் நிறுத்திக் கொள்ள முடியாவிட்டாலும், ஏற்கனவே இருக்கின்ற தூரத்திலாவது இருத்திக் கொள்ள வேண்டுமென ஆசைபட்டான்!
ஆனால் அதற்கே அவளிடம் பெரிய பெரிய பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்குமோ என்ற எண்ணத்தில்… நிலவொளியில் நிம்மதியின்றி தவித்தான், யாழோவியத்தின் ஒருபாதியான யாழ்மாறன்!!