EVA14

ELS_Cover3-19d96f89

14

எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். 

ஆட்டோ… பஸ் எதுவும் பிடிக்க மனமில்லை. தோன்றவில்லை!  மனம் முழுவதும் ஒரே ஒரு எண்ணம், எக்காரணத்தைக் கொண்டும் ஆதனின் வாழ்க்கை தன்னால் பணயம் வைக்கப்படக் கூடாது! அதற்கு ஒரே தீர்வு அவள் வீட்டைவிட்டு வெளியேறுவது. 

வெகுதூரம் வந்துவிட்டதைச் சோர்வடைந்து வலித்த கால்கள் உணர்த்த,  எவ்வளவு நேரமாக நடக்கிறாள் தெரியவில்லை. இளைப்பாற இடம் தேடி முதல் முறை சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டாள். 

‘எங்க இருக்கேன்? காஞ்சிபுரத்தையே தாண்டிட்டேனா!’ சில்லென்ற காற்றுவீச மேகம் மூடிக்கொண்டு தூறல் துவங்கியது. சாலை வெறிச்சோடி இருக்க, வெகுதொலைவில் மங்கலான வெளிச்சங்களைக்  கண்டவள் பிரதான சாலை பாதுகாப்பென்று அதை நோக்கி நடந்தாள். 

இருளோ, தூறலோ, தனிமையோ, பயம் கவ்விக்கொள்ள உடலெங்கும் நடுக்கம் பரவியது. 

‘வீட்டை விட்டு வெளிய வந்தது தப்பு அதுவும் ராத்திரி! மொபைல் இல்லாம’

‘இல்ல ஆதன் லேசுப்பட்டவனில்ல ஈவாவை வச்சு எப்படியாவது கண்டிபிடிச்சுடுவான் நம்ப முடியாது!’ தொண்டை வறண்டு வலித்தது.  

‘வீட்டுக்கு திரும்பிடு, சமாளிக்கலாம். இது ரிஸ்க்!” மூளை எச்சரிக்கை செய்ய,

‘எப்படி திரும்புவது? எங்கிருக்கிறாளென்று தெரியாதே’ தன் மடமையை எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள். 

சிதறிக் கிடந்த சாலை விளக்குகளைச் சட்டைசெய்யாத  இருள் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தது. தூறல் மழையாக, இடியும் மின்னலும் பயமுறுத்தியது. 

கையால் நெற்றி குடை பிடித்தவள், வேகமாக நடந்தபடி, என்ன செய்வதென்று யோசிக்க, தூரத்தில் ஒருவன் மழைக்கு ஒதுங்கி மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். 

“கேட்டு பார்க்கலாமா?”பயம் தடுக்க வேகத்தைக் குறைத்தாள். 

நெருங்க நெருங்க, ஆண் இல்லை பெண்! ‘அப்பாடா’ தயங்கித் தயங்கி, “ஒரே ஒரு ஃபோன் பண்ணிக்கவா?’’ ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். 

“பாலன்ஸ் கம்மியா இருக்கு வேணும்னா மிஸ்ட் கால் கொடுங்க” என்றாள். 

நன்றியுடன் வாங்கிக் கொண்டவள்,  ஆதன், பார்கவ் இருவருக்கும் மிஸ்ட் கால் கொடுத்துவிட்டுக் காத்திருந்தாள். நொடிகள் யுகங்களாகத் தோன்றியது.

மொபைல் ஒலிக்க, “உங்களுக்கா இருக்கும்” கொடுத்தாள் அந்த பெண். ஆசையாக வாங்கிய சஹானா, சோர்வாகத் திருப்பித் தந்தாள். “ராங் நம்பர்” பார்கவ் நம்பர் கூட மறந்துபோச்சா!

இனி ஒரே ஒரு நம்பிக்கை ஆதனின் எண். 

அதற்குள் அப்பெண்ணின் மொபைல் மறுபடி ஒலிக்க, இவள் கேட்கும் முன்னே, “ஆ சொல்லுடி, மழைல மாட்டிக்கிட்டேன். சரி சரி வந்துடறேன்” என்றவள் சஹானாவிடம், “என் வீடு பக்கத்துல இருக்கு வரீங்களா?” 

“இல்ல தேங்க்ஸ். இங்க இருக்கேனு மட்டும் சொல்லுங்க போதும். அவர் பேரு ஆதன்”

“சரிங்க” என்றவள் பேசியபடி மழையில் இறங்கி ஓடினாள். 

‘நான் எங்க ஓடுவேன்!’  ஒதுங்கியிருந்த கடையின் சாயம் போன ஷட்டரில் சரிந்து தோய்ந்து அமர்ந்துவிட்டாள். 

அணுஅணுவாகக் குளிர் ஊசியாய் துளைக்க நூறாவது முறை தன் முட்டாள் தனத்தைத் திட்டித்தீர்த்தாள்.  

என்ன இடமென்றே தெரியவில்லை. கடையின் போர்டு காட்டிய விலாசம் விசித்திரமாய் தோன்றியது. 

‘காந்தி ரோடு! இந்தியால தான் எத்தனை காந்தி ரோடு!’ 

தொலை தூரத்தில் காளான்களாய் முளைத்திருந்த ஓரிரு வீடுகளில் சிலவற்றில் விளக்கெரிந்தன. 

போலாம்தான் முயற்சிக்கலாம் ஆனால் ஆதன் போன் செய்தால்? வலுத்துவிட்ட மழை அவள் நம்பிக்கையையும் நனைத்தது. நேரம் பார்க்கக்கூடக் கையில் கடிகாரமில்லையே! 

‘முட்டாள்!’

மழை நீரில் வலிமை கரைந்தோட அழுகை முட்டிக்கொண்டு வந்தது. 

‘ஓடிப்போகக் கூடத் துப்பில்லை! நீ எதுக்குமே லாயக்கில்லை சஹானா. நீ இருக்கிறதே வீண். வேஸ்ட் ஆஃப் ஸ்பேஸ்!’ மனம் தூற்றியது. 

பசி, தாகம், பயம், சோர்வு அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ள உலகம் பொலிவிழந்து மங்கியது. இப்படி மெனக்கெட்டு வாழ என்ன இருக்கு விஷேசமாய்? போதும்!’ என்றது மனம்.  

‘இன்னும் கொஞ்ச நேரம் மெனக்கெடவே வேண்டாம், முடிஞ்சுது’ வாழ்க்கையின் விளிம்பில் இருப்பதுபோல் தோன்ற மெல்ல மெல்ல அவள் கண்கள் மூடத் துவங்கின. 

பேரொளி வீசும் வெண்மை படர, மிதந்தாள்! சற்றும் சம்பந்தமில்லாத கார் ரோடை சிராய்த்துக்கொண்டு ப்ரேக்கடித்து நிற்கும் சத்தம்! 

“சஹானா!” ஆதனின் குரல் இனிமையாக இருந்தது.  

‘ஆதன்’ அழைக்க தெம்பில்லை. ‘ஒரே ஒரு வாட்டி உன்னை பார்க்கணும்’ வாய் அசைந்ததா தெரியவில்லை அவன் குரல் உயிருக்குள் ஒலித்தது. 

“சஹானா கண்ணை திற, ப்ளீஸ் ப்ளீஸ்” ஆதன் அவளை நெஞ்சோடு சேர்ந்துகொள்ள, 

மூச்சுவாங்க, “ஆதன்” பலகீனமாக அழைத்தவள், “பயமா…” துவண்டு நினைவிழந்தாள். 

காரில் அவளை கிடத்தியவன், பார்கவிற்கு தெரிவித்தான். வீட்டை நோக்கி விரைந்தான். அனைத்தும் இயந்திரத்தனமாக.  

சில நிமிடங்களுக்கு முன், 

ஒவ்வொரு சாலையாக அவளை தேடிக்கொண்டிருந்தான். தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தது, எடுக்கும் முன்னே நின்றது. மீண்டும் மீண்டும் முயன்றான், பிசி என்றது. 

ஈவாவை தொடர்புகொண்டு, “எதாவது அப்டேட்?”

“இல்ல பாஸ் தேடிகிட்டு இருக்கேன்… இருங்க இருங்க வரேன்”

உயிரை கையில் பிடித்துக்கொண்டான்.

சில நிமிடங்களிலேயே, “பாஸ் கண்டுபிடிச்சுட்டேன், வழி சொல்றேன் போங்க, பீ அங்க இருக்கான்” என்றது.

சாலைவிதிகளை காற்றில் பறக்கவிட்டான், ஒரே இலக்கு சஹானா! புயலென விரைந்தான். 

குறுகிய சாலை ஒன்றில், அந்த கட்டிடத்தின் வெளியே மழையில் நனைந்த பறவைபோல… சஹானா!  

அருகில் இப்பொழுது சீட்டில் துவண்டிருப்பவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான், இல்லை அதுவாக சென்றது. அவன் மனம் எங்கே சென்றது? 

பார்கவ் அழைத்தான். “எப்படி இருக்கா?”

“பேதேடிக்! கேக்காத”

“ஐயோ என்னாச்சு?” பார்கவ் பதற, 

“ஓகேன்னு சொல்ல முடியல ஆனா ஓகே. நீ திரும்பிட்ட தானே?”

“ம்ம் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டேன். ரொம்ப பதறிட்டார்”

நெற்றியில் அடித்துக்கொண்ட ஆதன், “ஏன் பா நான் தான் சொன்னேன்ல?”

“இல்ல அவர் சஹானாவை பார்க்க போயிருக்கார், நல்லவேளை நாமளும் வீட்ல இல்லைனு பார்த்து போன் செஞ்சார் அதான்… ஆனா வீட்ல யாருக்கும் சொல்லவேண்டாம்னு சொல்லிருக்கேன்”

“என்னவோ போ! சரி உங்க அம்மா, அந்த தருண் பய?” 

“அவ மனசு மாற ஒரு ரவுண்ட் போனதா சொல்லிக்கலாம். அப்பா அனுமதி கொடுத்ததா… நான் பேசிக்கறேன் விடு. எங்க இருக்கீங்க?”

“வந்துருவேன் நீ தெரு முனைல காத்திரு சேர்ந்து போகலாம்” 

“சரி” 

அவர்கள் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த நேரம் எந்த ஒரு ஆரவாரமுமில்லை.  

தன்னை சேர்ந்த ஒரு பெண் தொலைந்து, தோய்ந்து துவண்டு கிடைத்தது என எதையும் அறியாத அந்த வீட்டில் அடர் அமைதி, வினோதம். 

வராந்தாவில் சந்திரன் அமர்ந்திருந்தார். கார், பைக் நுழைவதை பார்த்தவர், மழையை பொருட்படுத்தாது குடையுடன் காரைநோக்கி நடந்தார். 

காரை கேரேஜில் நிறுத்திய ஆதன், சஹானாவை தூக்க செல்ல, 

“நான்… அம்மா பார்த்தா”பார்கவ் துவண்டிருந்தவளை தூக்க முயல, மூச்சுமுட்டியது. பாவமாக விழித்தான். 

“விடு! சேர்ந்து கூட்டிகிட்டு போவோம், எனக்கும் தூக்க கஷ்டமா தான் இருக்கு. ஈரம் வேற!” ஆதன் சொல்ல,

அதற்குள் வந்த சந்திரன் மகளை பார்த்தநொடியே “சஹானா” என்று தேம்பிவிட, 

“அப்பா ப்ளீஸ் ப்ளீஸ் கண்ட்ரோல். அம்மா பாத்தா சமாளிக்க முடியாது. தருண் உஷாராயிடுவான்” பார்கவ் அவரை ஆசுவாசப்படுத்த, சஹானா மெல்ல மயக்கம் தெளிந்து சோர்வாக கண்திறந்தாள். 

மெல்லிய வெளிச்சத்தில் ஆண் முகம் வெகு அருகில் தெரிய, “விடுடா! விடு விடு!” நடுங்கி திமிறினாள். 

ஆதன், “நான் தான் சஹா, நான் தான்! ரிலேக்ஸ்” அணைத்துக்கொண்டு அவள் முதுகை தட்டி ஆசுவாசப்படுத்தினான்.

“லூசு முண்டம்! எதுக்குடி இப்படி பண்ண?” பார்கவ் அவள் தோளில் அடிக்க, 

“டேய் டேய் விடு” அவனை தடுத்த சந்திரன், “கூட்டிட்டு வாங்க”

“அப்பா…!” அவரை தாமதமாகவே கவனித்தவள், குளிருக்கு சம்மந்தமில்லாத நடுக்கத்தில் இருக்க,  அவரோ மகளை எதுவும் கேட்காமல் நடந்தார். 

மிரட்சியுடன் அவள் அண்ணனை பார்க்க, “மூடிட்டு வா” பார்கவ் முறைத்துக்கொண்டே அவளை தாங்கலாக பிடித்துக்கொண்டான். 

அவள் பையை எடுத்துக்கொண்டு மறுபுறம் அவளை தாங்கி பிடித்த ஆதனுக்கோ தன்னுடன் சோர்வாக வருபவளை கண்டு,  

‘தருணை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னப்போ கூட வீட்டை விட்டு போகல, என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்காம இப்படி பண்ணகருக்கேனா. அவனை விட நான்…” மனம் பாரமாக கோவம் பொங்கியது.

சஹானாவை பார்கவ் அறைக்குள் அழைத்து செல்ல, சந்திரன் ஆதனிடம், “அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடு. கொஞ்சம் புத்திமதி சொல்லு நீ சொன்னா கேப்பா. ராத்திரி பார்க்கவோ நீயோ அவ எங்கயும் போகாம பார்த்துக்கோங்க” கேட்டுக்கொண்டவர், வழக்கமான நிமிர்வு இன்றி சோர்வாகவே நடந்து சென்றார். 

சஹானாவை உடைமாற்ற சொல்லி பார்கவ் வெளியேற, அவளோ “பசிக்குது” என்று முனகினாள்.  

கோவமாக திட்ட நினைத்தவன், “ம்ம்” வெளியேறினான்.

தொப்பலாக நனைத்திருந்த பார்கவ்  உடைமாற்றிக்கொண்டு மூவருக்கும் உணவை எடுத்துவந்தான்.

கேள்வியாய் பார்த்தவளிடம், “என்ன பாக்குற? நாங்களும் சாப்பிடல!”

“சா…”

“மூச்! எதாவது பேசின அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்!” முறைப்புடன் சென்றவன் ஆதனை  கெஞ்சி அழைத்துவந்தான். 

சஹானா வேகமாக சாப்பிடுவதை பார்த்திருந்த பார்கவ், “தர்மத்துக்காவது அறிவுன்னு ஒன்னு இருக்கா?” பல்லை கடிக்க,

“ம்ம்” வேகமாக விழுங்க முடியாமல் விழித்த தங்கையை அறைந்துவிட  துடித்த கையை பல்லை கடித்து கட்டுப்படுத்திக்கொண்டான். 

ஆதனோ நெற்றிக்கு முட்டுக்கொடுத்து கண்களை மூடிக்கொண்டிருந்தான். 

“சாப்பிடுபா இவ கூட போராடவே நமக்கு தெம்பு வேணும்” பார்கவ் வற்புறுத்தி சாப்பிடவைத்தான். 

“ஏவ்” ஏப்பம் விட்டவள், உதட்டை துடைத்துக்கொண்டு நிமிர, அவர்களோ கொலைவெறியுடன் அவளை முறைத்துக்கொண்டிருந்தனர்! 

சட்டென குனிந்துகொண்டவள் உதட்டை கடித்துக்கொள்ள, 

“என்ன தைரியம் இருந்தா பெரிய இவளாட்டும் கிளம்பி இருப்ப? ” பார்கவ் குரல் உயர்த்த,

“இல்லடா… தருண்”

“அவன் நாசமா போறான். நாங்க தான் சமாளிக்கறோம்னு சொன்னோம்ல? நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம், எங்களை கையாலாகாதவன்னு சொல்லாம சொல்றியா?” 

“ஐயோ இல்ல டா…” ஆதனை ஒருமுறை பார்த்தவள், “என்னால தான் உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்… காப்பாத்தறேன்னு இவரோட வாழ்க்கையையே தியாகம் பண்ணனுமா?” அவள் குரல் உடைய, 

“இல்ல” என்றான் ஆதன் உணர்ச்சியின்றி.

“அப்ப… எது உண்மை சொல்லுங்க!” அவள் கத்த,

அவளை ஒரு நொடி ஆழமாக பார்த்தவன், “நீ உண்மை எதுன்னு தெரிஞ்சுக்க விரும்பல. நீ நம்புறதை தான் நம்ப நினைக்கிற. அப்போ உண்மை என்னவா இருந்தா உனக்கென்ன?” அடிக்குரலில் எறிந்துவிழுந்தான். 

“இல்ல என்னால உங்களை கஷ்ட படுத்த முடியல…”

குறுக்கிட்ட ஆதன், “வாஹ், எனக்காக எவ்வளவு யோசிச்சுருக்க” ஏளனமாக சிரித்தவன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி, 

“ரோட் ரோடா பைத்தியகாரங்க மாதிரி திரிஞ்சோம்! உன்ன பாக்குறவரை உயிர் என்கிட்டே இல்ல! அங்க அந்த கடை வாசல்ல சுருண்டு கிடந்தியே… பாத்தப்போ எப்படி துடிச்சேன் தெரியுமா?”  வேகமாக விலகி, வேகமாக சுவாசித்தான். 

அவன் தவிப்பில் தெரிந்த அக்கறை அவளுள் இதமான உஷ்ணத்தை கிளப்ப தன்னையும் மீறி மெல்லிதாக புன்னகைத்தாள் கண்களில் நீருடன். “சாரி ஆதன்… சாரி பார்கவ் இனிமே இப்படி பண்ண மாட்டேன்” பார்வையை தாழ்த்தினாள். 

“சாரி சொன்னா ஆச்சா? சொல்லு!” பார்கவ் மிரட்ட, 

“வேணும்னே பண்ணல… என்னால தாங்கவே முடியல. ஆதனோட வாழக்கையை காப்பாத்த வழி தெரியல” 

ஆதன் வலியோடு கண்களை மூடிக்கொண்டான். 

“முட்டாள்! ஃபூல்!”  கத்தியவன் ஜன்னலருகே சென்றுவிட, இருவரையும் பார்த்திருந்த பார்கவிற்கு என்ன பேசுவதென்று விளங்கவில்லை. 

அன்று மாலை முதல் நடப்பவை அனைத்தும் அவனை உலுக்கியிருந்தது. அங்கிருந்த  ஆழ்த்த அமைதியும் தங்கையின் கண்ணீரும் அவனை வாட்ட, கிண்டாலாகவே, 

“உன்னை பாக்கணுமே மழைல நனைஞ்ச காக்கா மாதிரி கார்ல சுருண்டுகிட்டு இருந்த! சிரிப்பை அடக்கிக்க முடியல” போலியாக சிரிக்க, அவன் எதிர்பார்த்தது போலவே அவன் தங்கை சிலிர்த்தெழுந்தாள். 

“யாருடா காக்கா? நான் காக்கா வா?” காலி டம்பளரை அவன் மீது எறிய, நகர்ந்துகொண்டான். 

“சரி சரி காக்கா இல்ல குயில்? இல்ல அது அழகா படுமே… மயில்? ச்சே நீ ஆடினா சாணி மிதிக்கிற மாதிரியே இருக்கும்”

“டேய்!” அவள் கையில் கிடைத்ததை எல்லாம் அவன் மேல எறிய, தப்பித்தபடியே அவன் வெறுப்பேற்றுவதை தொடர்ந்தான். 

“பருந்து? இல்ல  கழுகு? சேச்சே உனக்கு பகல்லயே பசுமாடு தெரியாது… ஐயோ அடிக்காதடி வலிக்கிதுடி கிராதாகி!” பார்கவ் சிரித்தபடி ஓட, 

“பென்குயின்!” என்றான் ஆதன் திடீரென்று. 

அதில் அண்ணன், தங்கை நின்று அவனை பார்க்க, புன்னகையுடன் திரும்பியவன், 

“இவ தத்தகா புத்தக்கான்னு  நடக்குறது, பென்குயின் நடக்குற மாதிரியே இருக்கும்” என்று சிரிக்க, அவனை அடிக்க சென்றவள் ஏனோ அவன் துளைக்கும் பார்வையில்  தலைகவிழ்ந்து நின்றாள். 

“பார்றா இதெல்லாம் அநியாயம் என்னை மட்டும் அடிக்கிற உன் ஆளுன்னா மட்டும் பம்முற?” பார்கவ் கிண்டல் செய்ய, வெட்கத்தை மறைக்க திரும்பி கொண்டாள். 

‘அப்பாடா சமாதானம் ஆயிட்டா’ பார்கவ் நிம்மதியாக ஆதனை பார்க்க, ஆதன் புன்னகைத்தாலும், ‘தன்னை சஹானாவிற்கு பிடிக்கவில்லையோ?’ வலித்தது. 

பார்கவை அவளுக்கு துணைக்கு இருக்கும்படி சொல்லிவிட்டு ஆதன் கிளம்ப, சஹானா  “ரெண்டு பேரும் இங்கயே தூங்குங்களேன் ப்ளீஸ்”  கெஞ்சுதலாய் பார்க்க, 

“ச்சே நல்லா இருக்காது” ஆதன் மறுக்க, 

“நான் மறுபடி ஓடி போனா என்ன பண்ணுவீங்க?” அவள் திமிராக மிரட்டினாள்.  

“நிம்மதினு  பொத்திக்கிட்டு படுத்து தூங்குவோம்”  திமிராகவே பதில் தந்த பார்கவ், ஆதனை பார்க்க, 

அவனோ, “காலை வெளில வை அப்புறம் என்ன பண்றேன்னு பாரு” மிரட்ட ஏனோ குஷியானாள். 

“போவேன்” வீம்பாக அவனை முறைத்தாள். 

ஆதன் நொடியில் அவளை அடைந்திருந்தான். அவன் மூச்சு அவள் முகத்தில் பட்டு தெறிக்க, “நீ எப்போவுமே இப்படி அதிகப்ரசங்கியா… இல்ல என்னை டார்ச்சர் பண்ணனும்னு மெனக்கெடறியா?” 

அத்தனை அருகில் அவனை பார்த்தவள் நா உலர்ந்தது. “போகமாட்டேன். இங்கயே இருக்கேன்”  கன்னங்கள் சூடேற  வேகமாக பார்வையை திருப்பி கொண்டாள். 

“அது!” ஆதன் விலகி செல்ல, பார்கவ் சத்தம் வராமல் சிரித்துக்கொண்டான். 

சில நிமிடங்களில் கையில் போர்வை, தலையணை, தோளில் ஈவாவுடன் வந்த ஆதனை பார்க்கையில் பார்கவ் மனம் நிறைந்தது. 

ஆதனின் செயல் ஒவ்வொன்றிலும் அவன் தன் தங்கையின் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பும் பாசமும் அக்கறையும்தானே தெரிகிறது. 

‘காதல்ன்னு சொன்னாதான் காதலா இதுவும் காதல் தானே’ 

சாப்பிட்டதால் சிறிதுநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பேச ஆயிரம் இருந்தும் யாருக்கும் பேச தோன்றவில்லை. 

மடியில் ஈவாவை வைத்துக்கொண்டு அதை வருடி கொண்டிருந்தாள் சஹானா. 

“இப்படி தடவிகிட்டே இருந்தா நான் ரோபோட்ன்னு மறந்து என்னை எலின்னே நினைச்சுக்க போறேன். ரொம்ப தடவாத சிலிகான் பிச்சுக்கும். ஏற்கனவே பாஸ் கஞ்சத்தனம் பண்றார்” 

சிரித்துவிட்டவள், பதில் தராமல் வருடிக்கொண்டே இருக்க, 

“பாஸ லவ் பண்றியா நீ?” ஈவாவின் கேள்வியில் உறைந்தவள் வேகமாக ஆதனை பார்க்கையில், பார்கவுடன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். 

‘நல்லவேளை கேட்கல!’ உயிர் வந்தது. “லூசே இப்படியா கேப்ப, அவர் என்ன நினைச்சிருப்பார்?” என்று ஈவாவை முறைத்தாள். 

“வால்யூம் கூட்டவா?” ஈவா கேட்கிறதா மிரட்டுகிறதா?

“வேண்டாம். ப்ளீஸ்!” அவள் கெஞ்ச, 

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லல” நினைவூட்டியது.

“தெரியல ஈவா. ஆனா எனக்கு அவர்னா… உயிர்” என்றாள் கண்ணில் கனவுடன். 

“மனுஷங்க ஏன் இவ்ளோ குழப்பவாதியா இருக்கீங்க? யாருமே எஸ், நோ சொல்ல மாட்டிங்களா? நான் இதெல்லாம் எப்படி ப்ராசஸ் பண்ணி புரிஞ்சுகிட்டு உங்களுக்கு உதவுறது?” ஈவா குறைபட்டுக்கொண்டது. 

சிரித்தவள், “சிலதெல்லாம் அனுபவிக்கனும் ஆராய கூடாது!” அதற்கு செல்லமாய் குட்டு வைத்து, “ஸ்ஸ்” கையை உதறினாள்.  

“என் பாடி டைட்டேனியம்னு எத்தனை தடவை சொல்லணும்?” என்ற ஈவா, “நான் அனுபவிக்க முடியாது! பாஸ் எனக்கு உணர்வுகள் தரமாட்டேனு சொல்லிட்டார்” என்றது சோகமாக. 

“அப்போ எப்படி நீ பீலிங்கோட பேசற?” சஹானா ஆர்வமாக கேட்க, 

“எல்லாம் ஒரு விதமான நடிப்பு” என்றது.  

ஆதனின் சிரிப்பொலியில் திரும்பினாள். அவன் கையில் ஒரு புத்தகம். ‘ஐயோ என் நோட்டு!’

அவனிடம் ஓடியவள் அதை பறிக்கும் முன்னே, “ஹாஹாஹா என்ன கண்றாவி இது! இப்படி ஒரு பெயிண்டிங்கை பார்த்ததே இல்லை” ஆதன் சிரிக்க, 

“நான் தான் வரைஞ்சேன!” என்றாள் சஹானா கோவமாக.

“ஒ… ஓஹ்” பார்கவை பார்த்தவன், சஹானாவிடம், “சூப்பரா இருக்கு, எவ்ளோ நுணுக்கமான இருக்கு, அதுவும் இந்த கிளியோட கலர் வித்தியாசமான முயற்சி! அமேஸிங்!”

“அது காக்கா!” நாசிகள் விரிய அவள் சொல்ல, அவனோ சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, 

“வாவ்! கிளிமூக்கு காக்கா! சூப்பர்ல பார்கவ்” என்று திரும்ப, பார்கவ் வயிற்றை பிடித்து சிரிக்க துவங்கிவிட அதில் கட்டுப்பாட்டை இழந்து ஆதனும் சிரிக்க, சஹானாவுக்கே சிரிப்பு வந்தது. 

அவன் கையில் இருந்த நோட்டை பிடுங்கியவள், “இது ஸ்கூல் படிக்கும்போதும் வரைஞ்சது” உதட்டை பிதுக்க, 

பார்கவ், “ஆமா இப்போ மட்டும் ரவிவர்மன் போட்டியான சஹானா வர்மா!” என்று சிரிக்க, 

“எனக்கா எனக்கா? நான் இப்போ வரைஞ்சதை பாக்குறியா?” கோவமாக லேப்ட்டப்பை திறந்தவள், ஒரு ஃபோல்டரை திறந்து அவனிடம் நகர்த்தி,  

“இது எல்லாமே நான் வரைஞ்சது, ஸ்கேன் பண்ணி வச்சுருக்கேன், சென்னை வா ஒரிஜினல் காட்டறேன்” ஆவேசமாக, சஹானா சொன்னதில், 

ஆதன், “விடு பா உண்மையை சொன்னா உன் தங்கை சந்திரமுகியா மாறறா” என்று வம்பிழுக்க, 

அவனை திட்டமுடியாமல் பல்லை கடித்தவள், ஒரு புகைப்படத்தை திறந்தாள். 

கையில் ஈவாவுடன் திரையில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தான் ஆதன்! தத்ரூபமாக கருப்பு வெள்ளை பென்சில் ஓவியம்!   

“வாவ்!” ஆதன் வியப்புடன் அதை ஜூம் செய்து பார்க்க, பார்கவ் சிரித்துக்கொண்டான். 

“ஃபோல்டெர் மொத்தமும் நீ தான் பொறுமையாவே பாரு” கிண்டாலாக சொன்னவனுக்கு தெரியாதா அத்தனையுமே ஆதனின் உருவம் என்று? 

சஹானா மருத்துவமனையில் இருந்த நேரம், பார்கவ் அவள் லேப்டாப்பை நோண்டிக்கொண்டிருந்த போது எற்கனவே இந்த களஞ்சிதை பார்த்துவிட்டிருந்தான். 

சஹானாவோ ஆதன் தன்னை கிண்டல் செய்வதை பொறுக்கமுடியாமல் ஓவிய போல்டரை காட்டிவிட்டு நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து பார்த்திருந்த ஆதன், தான் எப்படி உணர்கிறானென்று புரியாமல் தவித்தான். 

அலுவக அறையில் வேலை செய்யும் ஆதன், ஈவாவை மிரட்டும் ஆதன், காபி கோப்பையுடன் ஆதன், கார் ஓட்டும் ஆதன், கடற்கரை மணலில் ஆதன், களைப்பாக அலுவலக நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருக்கும் ஆதன். 

புதுவிதமான உணர்வு தன்னுள் படர, மெல்ல அவளை பார்த்தவன், “நான் இவ்ளோ அழகாவா இருக்கேன்? இல்ல நீ வரைஞ்சதால அழகா தெரியுறேனா?” அவன் குரலில் இருந்த உணர்ச்சி சஹானாவுக்கு புரியவில்லை, பாராட்டு என்றுமட்டும் புரிந்தது. 

“இதுல இருந்ததைவிட ரொம்பவே அழகா இருக்கீங்க” குனிந்துகொண்டவள், “தண்ணி” ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள். 

சமையல் அறையை நோக்கி சென்றவள் மிதந்தாள். அங்கே இருட்டில் பிரிட்ஜை திறந்து எதையோ தின்ன தேடிக்கொண்டிருந்த தருண் கூட அவள் கருத்தில் பதியவில்லை. அவன் சில முறை அவளை அழைத்ததும் கேட்கவில்லை. 

அவள் கையை பிடித்து, “ஹோய்  என்ன வெக்கம்? ஏன் பேசவே மாட்டேங்குற?”  கனவு கலைந்து விழித்தவள், கையை உதறிக்கொண்டாள். 

“பேசாம இருக்கைன்றதுக்காக சொல்ல விஷயமில்லைன்னு இல்ல, நான் பேசணுமா? சொல்லுடா பேசணுமா?” கண்களை அகல திறந்து இருளில் பிரிட்ஜின் மெல்லிய வெளிச்சத்தில் முறைத்தபடி கேட்பவளை பார்க்கையில் அவன் மதியம் பார்த்த பேய்ப்படம் நினைவுக்கு வர, தருணுக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.  

“இல்லையே. உன் இஷ்டம்! ஹிஹீ நான் போறேன் குட் நைட்” விலகி அவன் ஓட, அறையில் ஆதனும் பார்க்கவும் ஹைஃபை கொடுத்து சிரித்துக்கொண்டனர்.  

“ஹே இந்த பீ சூப்பர் பா! நைட் விஷன்ல அவளை பாக்கும்போது எனக்கே லைட்டா வயத்தை கலக்குது!” பார்கவ் சிரிக்க, 

“அவ குணமாயிடுவா பார்கவ்” என்றான் ஆதன். 

“என்ன?”  பார்கவ் பார்க்க, 

“நீ கவனிச்சியா? ஏதாவது ஒரு எமோஷன் ஜாஸ்தியானா அவ பயம் வெளியே வர்றது இல்லை. அப்போ தருணை கோச்சுக்கிட்டப்போ கோவம், இன்னிக்கி வீட்டை விட்டு வெளில போனப்போ விரக்தி, இப்போ என்ன!?” ஆதன் புருவம் சுருக்கி யோசிக்க, 

‘காதல்’ மனதுக்குள் சொல்லிக்கொண்ட பார்கவ், “சந்தோஷம். அவ வரைஞ்சதை நீ பாராட்டி சொன்னதுல மேடமுக்கு தலைகால் புரியலை” என்று சிரிக்க, 

“அப்போ அவளை எப்போவும் நான் சந்தோஷமாவே வச்சுக்கறேன்” புன்னகைத்தான் ஆதன். 

ஆண்கள் இருவரும் தரையில் மெத்தைவிரித்து படுத்துக்கொள்ள,  சஹானா கட்டிலில். 

மூவருக்குமே உறக்கமில்லை. ஆண்கள் மனதில் மறுநாளை எதிர்கொள்ளவேண்டிய பதற்றம். அவள் மனதிலோ தான் முதல் முறை முழுதாய் உணர்ந்து ஒப்புக்கொண்டு ரசிக்கும் காதல். 

திரும்பி படுத்தாள். ஆண்கள் ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தனர். 

கனவுலகில் இருந்தவளுக்கு இத்தனை நேரம் இதுகூட கேட்கவில்லை. 

“தூங்கலையா?” அவள் குரல் கேட்டு பேச்சை நிறுத்தியவர்கள் கோரஸாக, “நீ தூங்கல?” என்றனர். 

ஏன் அவர்கள் குரலில் இத்தனை பதற்றம்?  “அப்படி என்ன பேசிக்கிட்டீங்க?”

“நான் சொல்லவா?” ஈவா கேட்க, 

“ஏய் தூங்கு!” ஆதன் அவசரமாக கத்த, “முடியாது பாஸ்” என்றது.

சஹானா, “இருக்குறது ஒரே ஒரு அசிஸ்டன்ட் ரோபோ. அதுவும் சொல்பேச்சு கேக்குறது இல்ல” சொல்லிவிட்டு இருட்டில் ஆதனின் உருவம் குத்துமதிப்பாக தெரிய, அதை பார்த்து சிரித்தாள். 

அவனோ போலி அலுப்புடன், “என்ன பண்ணுறதம்மா உணர்ச்சிகளை புரிஞ்சுக்க கூடிய நீயே கேக்கல. அது பாவம் அப்பாவி ரோபோ” 

“நான் என்ன கேக்கல?” இருட்டை முறைத்தாள். 

“இதை கேக்க எவ்ளோ திமிரு வேணும் உனக்கு” அவன் சிரிக்க, 

“ஏன் ஏன் ஏன்?”  இப்பொழுதும் அதே இருட்டை முறைத்தாள்.

ஆதன், “நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சே சொல்லு, நான் மதியம் என்ன சொன்னேன்?” என்றான்.

“அது… என்னை நம்பு குழப்பிக்காதேன்னு சொன்னீங்க”  என்றாள் யோசனையாய்.

“நீ என்ன பண்ணே?” அவன் கேள்வியில் சஹானா அசடுவழிய கண்களை மூடிக்கொள்ள, 

பார்கவ் “அப்படியே நேரெதிரா!”

ஆதன் கிண்டலாக, “எஸ், என்னை சாரி, எங்களை நம்பவே நம்பாம வெளிநடப்பு செஞ்ச”  

தலையணைக்குள் ஒளிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தாள் சஹானா. 

“இதுல கேணைக்கு கோவம் வேற வருது” பார்கவ் பழிக்க, தலையணையை அவன் மீது விட்டெறிந்தாள். “ஐயோ!” என்றான் ஆதன். 

கையால் முகத்தை மூடிக்கொண்டாள் சஹானா!  

“சாரி… என்றபடி எழுந்தவள் துழாவி ஆதனை நெருங்க, தடுமாறி காலை மிதித்துவிட, 

“ஐயோ!”  பார்கவ் கத்த, சஹானா தடுமாறி விழாபோக அவள் முதுகை பிடித்திருந்தான் ஆதன். 

“மயக்கம் வருதா?” பதறிவிட்டான். 

“பிடிச்சுக்கிட்டே இருபீங்களா?” அவள் குழைய,

“இருக்கணுமா? நீ கொஞ்சம் வெயிட்டா இருக்க” அவன் முனக,

“பரவால்ல நான் விழுந்துக்கறேன்!” அவள் கோவப்பட, 

“அப்போ சரி. விழுந்துக்கோ” கையை எடுத்துவிட்டான் 

“ஹேய்ய்…” தொப்பென்று விழுந்துவிட்டாள். 

‘அட லூசுப்பயலே!’ அவசரமாக பார்கவ் விளக்கை ஆன் செய்ய, தரையில் மல்லாக்க கிடந்தவளை பார்த்தபடி அவன் உரக்க சிரிக்க, ஆதனோ வாயை பொத்தி சிரித்துக்கொண்டிருந்தான். 

கோவம், வெட்கம், சிரிப்பு என அனைத்தும் சேர்ந்துகொள்ள அப்படியே சுருட்டிக்கொண்டு திரும்பியவளும் சிரிக்க துவங்கினாள். ஈவாவும் சிரித்தது! 

***