லவ் ஆர் ஹேட் 05

ei1S2JO30636-6d43bf4c

லவ் ஆர் ஹேட் 05

“டேய் முடிஞ்சா இப்போ இவன் மேல கை வை டா! சொல்றதை கேட்டா சுமூகமா இந்த பிரச்சினைய பேசி தீர்க்கலாம். இல்லன்னா இருக்குறதையும் இழந்துட்டு தான் நீ கிளம்புவ.” என்று சந்திரன் இருதரப்பினருக்கு நடுவிலிருந்து பிரச்சினைக்கு காரணமான கனேஷ் என்பனை கத்த, இந்திரனும் யாதவ்வும் நடப்பதை பார்த்தவாறு நின்றிருந்தனர்.

“அதெல்லாம் முடியாதுங்க. இது எங்களோட தோப்பு. அவருக்கு முறையா பொறந்தவன் நான் தான். அவ்வளவு சுலபமா சொத்தெல்லாம் தூக்கி கொடுத்துர முடியாது.” என்று கனேஷ் சொல்ல, “அடிங்க…” என்று வந்த இந்திரன், “அந்த மனுஷன் இரண்டு கல்யாணத்தை பண்ணி நல்லா வாழ்ந்துட்டு போயி சேர்ந்துட்டாரு. நீங்க என்னடான்னா இந்த சொத்துக்கு அடிச்சிக்கிறீங்க.” என்று கடுப்பாக சொன்னான்.

இறந்த மனிதரின் இரண்டாவது மனைவியின் மகன் முருகன், “இந்த சொத்துக்காக கோர்ட்டு கேஸுன்னு அலைய எனக்கு இஷ்டம் இல்லைங்க. நானும் அவர் மகன் தானே? சொத்துல பாதி கொடுத்தா போதுங்க. தரவே முடியாதுன்னா எப்படி?” என்று அமைதியாக சொல்ல, “அதெல்லாம் முடியாது. எனக்கு தான் உரிமை ஜாஸ்தி.” என்று அழுத்தமாக சொன்னான் கனேஷ்.

“இருக்கும் போது எவனும் அவரை கவனிக்கல. இறந்த அப்றமும் எவனும் அவருக்கான காரியத்தை செய்ய முன்வரல. இப்போ மட்டும் அவரோட சொத்து கேக்குதா?” என்று யாதவ் காட்டமாக கேட்ட கேள்வியில் இரு மகன்களுமே பதில் பேச முடியாது தடுமாற, ‘யோவ்! இருக்கும் போது ஏதோ டீன் ஏஜ் பையன் மாதிரி பொண்ணுங்க கூட சில்மிஷம் பண்ணி என்கிட்ட வாங்கி கட்டின. இப்போ போய் சேர்ந்தும் சோதிக்கிறியே டா.’ என்று வானத்தை பார்த்து புலம்பினான் இந்திரன்.

ஒருவன் உரிமை கேக்க, மற்றொருவன் உரிமை தர மறுக்க என அப்போதும் விடாது அடுத்தடுத்தென வாதம் அதிகரிக்க, “வாய மூடுங்க!” என்ற குரலில் இருவருமே தங்கள் பேச்சை நிறுத்தி குரல் வந்த திசையை நோக்கினர்.

அந்த குரலுக்கு சொந்தக்காரன் கண்டிப்பாக யாதவ் இல்லை. வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டையில் முறுக்கு மீசையுடன் அவனது ஆட்களுடன் எதிரே நின்றிருந்தான் ஆரன். யாதவ்வோ அவனை அழுத்தமாக பார்க்க, ஆரனும் பதிலுக்கு அவனை கேலியாக பார்த்து வைத்தான்.

“இதெல்லாம் ஒரு பஞ்சாயத்துன்னு… இவனுங்க சத்தத்தை கூட அடக்க முடியாத இவனுங்க பிரச்சினைய தீர்த்து வைப்பானுங்களா? ஹாஹாஹா…” என்று ஆரன் சிரிக்க, சகோதரர்கள் இருவரும் அவனை முறைத்துப் பார்த்தனர்.

“என்ன மிஸ்டர்.யாதவ், ஊருக்கு வந்ததும் ஒரு வார்த்தை கூட இந்த ஆரனுக்கு சொல்லல்ல. ஒருவேள, மறந்துட்டீங்களா என்ன? அதுக்கு வாய்ப்பில்லையே…” என்று ஆரன் கேலியாக சொல்ல,

நமட்டுச் சிரிப்பு சிரித்த யாதவ் மூக்கை வருடியவாறு, “மறக்க கூடிய ஆளா நீங்க? இந்த ஊர்ல எங்கிட்ட வாங்கி கட்டிகிட்ட லிஸ்ட்ல கடைசி இடத்தை நீங்க தானே பிடிச்சிருக்கீங்க.” என்று சொல்லி ஆரனின் மூக்கில் இருந்த வடுவை கண்களால் காட்டி சிரிக்க, சகோதரர்கள் இருவரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

ஆரனோ பற்களை நரநரவென கடிக்க, இவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த இருவரோ, ‘நம்ம பிரச்சினைய தீர்க்குறேன்னு வந்துட்டு இவனுங்க அடிச்சிப்பானுங்க போலயே…’ என்ற ரீதியில் ஆரனையும் யாதவ்வையும் மாறி மாறி பார்த்து வைத்தனர்.

முருகனோ, “அய்யா இந்த தோப்பு மேட்டரு…” என்று தயக்கமாக இழுக்க, “டேய், சொன்னது சொன்னது தான். இரண்டு பேரும் சொத்தை ஆளுக்கு பாதி பாதி பிரிச்சிக்கோங்க. இல்லைன்னா,  எவனும் இந்த தோப்புல கால் வைக்க கூடாது.” என்று சந்திரன் கத்தவும்,

“பஞ்சாயத்த காரணமா வச்சி அடுத்தவன் வீட்டு சொத்தை ஆட்டைய போட ப்ளானோ?” என்று கேலியாக சொன்ன ஆரன், “டேய் முருகா! அவன் தான் முறையா பொறந்தவன் அவனுக்கு தான் உரிமை இருக்கு. ஒழுங்கு மரியாதையா ஓடி போயிரு!” என்று மிரட்டலாக சொன்னான்.

“டேய் தம்பி! பேசாம நாமளும் போகலாம் டா. இப்போ தான் டா இன்ஃபோர்மர் சொன்னான். வண்டி பின்னால கத்தி, அறுவாள் மட்டுமில்ல பெற்றோல் போம் கூட வச்சிருக்கானுங்களாம்.” என்று இந்திரன் சந்திரனின் காதில் கிசுகிசுக்க, “மூடிட்டு இரு டா என் டொமேட்டோ! நானே ஒரு ஃப்ளோல பேசிக்கிட்டு இருக்கேன். நீ வேற ஏன் டா?” என்று சலித்துக் கொண்டான் சந்திரன்.

“அவருக்கு இவனுங்க இரண்டு பேருமே பிள்ளைங்க தான். இவனுக்கும் அவரோட சொத்துல உரிமை இருக்கு.” என்று யாதவ் சொல்ல, “இத்தனை வருஷம் ஊரை விட்டு தள்ளியிருந்த நீ எல்லாம் பேச வந்துட்டியா. ஒதுங்கி இரு டா!” என்று கெட்ட வார்த்தை சேர்த்து யாதவ்வை ஆரன் திட்டிவிடவும், யாதவ்வோ பொங்கி விட்டான்.

மின்னல் வேகத்தில் வந்து அவனின் சட்டையை பிடித்த யாதவ் அவனின் முகத்திலே மொத்த கோபத்தையும் சேர்த்து குத்த, “ஊரை விட்டு அனுப்பி வைச்சும் திருந்தலையா நீ?” என்று ஆரனும் பதிலுக்கு அடிக்க, சுற்றி இருந்தவர்களோ ஆடிப் போய்விட்டனர்.

“அய்யோ! பெரிய வீட்டு பசங்களுக்குள்ள சண்டை…” என்று பஞ்சாயத்துக்கு வந்த இருவருமே சேர்ந்து ஓடி விட, இருவரையும் பிரிக்க அரும்பாடுபட்டனர் சந்திரனும், இந்திரனும், ஆரனின் ஆட்களும்.

“நீங்க பண்ண பாவத்துக்கு அவன் மட்டும் தண்டனைய அனுபவிச்சா போதாது. மொத்த குடும்பமுமே சாகனும் டா” என்று யாதவ் இதுவரை மனதில் அடக்கியிருந்த கோபத்தை வார்த்தைகளாக கொட்டிவிட, முதலில் திகைப்படைந்தாலும் பின் அவனை கேலியாக பார்த்து, “என்னை மீறி என் குடும்பத்தை எதுவும் பண்ண முடியாது டா.” என்று சவால்விட்டான் ஆரன்.

“அடங்கொக்கா மக்கா! அடங்க மாட்டீங்களா டா நீங்க?” என்று அலறியவாறு இருவரையும் பிரித்து மற்றவர்கள் நிற்க வைக்க, சரியாக “கார்த்தி…” என்ற மஹாதேவனின் குரலில் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த மொத்த பேருமே திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.

அங்கு மஹாதேவனும், சகாதேவனும் கோபமாக நின்றிருக்க, அப்போது தான் காரில் வந்திறங்கிய தேவகி தன் பேரனை முறைப்புடன் பார்த்தார்.

தன் பாட்டியை பார்த்த ஆரன் திடுக்கிட்டு, ‘இவங்களுக்கு எப்படி அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சிச்சி?’ என்று யோசிக்க, அவனுடைய கண்ணில் சரியாக சிக்கியது அந்த உருவம். தேவகிக்கு பின்னால் மறைந்தவாறு அந்த உருவம் நின்றிருக்க, “தாரா…” என்று கோபமாக முறைத்தவன், தேவகியை பார்க்காது தலைகுனிந்து நின்றான்.

ஆரனின் மாமா மகள் தாராவோ, “மாமா…” என்று திருதிருவென விழித்தவாறு நின்றிருக்க, காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த தாராவின் அக்கா உத்ராவோ அங்கு நின்றிருந்த மஹாதேவன் குடும்பத்தை சேர்ந்த ஒருவனை தான் இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். யாரும் அறியாத அவளுடைய ஒருதலைக் காதல் அது!

தேவகியோ அங்கு நின்றிருந்த மஹாதேவனை அழுத்தமாக பார்த்துவிட்டு காரில் ஏறி ஆரனுக்காக காத்திருக்க, வேகமாக வந்து வண்டியில் ஏறி அமர்ந்தவன் யாதவ்வை கனல் கக்கும் விழிகளால் எரிக்க மட்டும் தவறவில்லை.

“ஏன் மாமா சண்டை போடுற? சண்டை போட்டா சாமி வாயிலயே குத்தும்.” என்று அப்போது தான் பள்ளிப்படிப்பை முடித்த தாரா கண்களை உருட்டி சொல்ல, அவளை முறைத்தவன், “வீட்டுக்கு வா! உனக்கு இருக்கு டி கச்சேரி.” என்று முறைப்பாக சொன்னான்.

மஹாதேவனோ யாதவ்வை வலி நிறைந்த பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாது திரும்பிச் செல்ல, அவனுக்கோ கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லை. அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆரனை பார்த்தால் தன் கோபம் அதிகரிக்கும், கைகளும் ஓங்கும் என்று… தெரிந்து தானே அவனை சந்திக்கவே வந்தான் அவன்.

வீட்டுக்கு வந்ததும் அறையில் அடைந்தவன் கோபமாக கட்டிலில் அமர்ந்து தரையை வெறித்தவாறு இருக்க, ‘வீட்டுக்கு போனதும் நமக்கு என்ன காத்திருக்கோ?’ என்று இந்திரனும், சந்திரனும் நினைத்தது போல யாதவ்வை பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றதற்காக இருவரையும் வயலை சுத்தம் செய்ய விட்டார் மஹாதேவன்.

நடந்ததை கேள்விப்பட்ட ரித்விகாவிற்கு தான் இருப்பு கொள்ளவில்லை. தன்னவனை பற்றி அவள் யோசித்துக் கொண்டிருக்க, சரியாக அந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

அதில் திடுக்கிட்டவள் ஓடிச்சென்று அறைக்கதவை தாழிட்டு அழைப்பை ஏற்று, “ஹெலோ…” என்று மெதுவாக சொன்னதும் தான் தாமதம், மறுமுனையில் கேட்ட குரல்களில் பிரச்சினையையே மறந்துவிட்டாள் ரித்வி.

ஆனால், இதுவரை தன்னுடன் பேசாத மற்றவர்களை பேசவிட்டு தன் குரலை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒருவர் தன்னுடன் பேச மாட்டார்களா? என்று ஏங்கத் தான் செய்தாள் அவள்.

அடுத்தநாள்,

“உனக்கு எத்தனை தடவை டி சொல்றது? யாதவ் வந்திருக்கான், போயி மாமா னு அவன் கூட பேசி பழகுன்னு சொன்னா… சின்னவயசுல அவன் அடிச்சதுக்கு இன்னமும் பயந்துக்கிட்டு அவன் பக்கத்துலயே போகாம இருக்க. இங்க பாரு! அவன் தான் உன்னை கட்டிக்க போறவன். அதை மண்டையில ஏத்திக்க!” என்று சகுந்தலா தன் மகளிடம் கத்திக் கொண்டிருக்க, அவளோ எதையும் காதில் வாங்காது அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

அவளது அலைப்பேசியை பிடுங்கிய சகுந்தலா தன் மகளை முறைக்க, அவரை சலிப்பாக பார்த்தவள், “இப்போ தான் யாதவ் மாமா வந்திருக்காரு. இப்போவே நம்ம இரண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்தனும். அதானே உன் ப்ளான்?” என்று கேட்க,

“உனக்கு சொன்னா புரியாது. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி தரனும்னு நான் வேண்டாத கடவுள் இல்லை. பொண்ண எவனுக்கோ கட்டிக் கொடுத்து அவள நினைச்சி ஏங்குறதுக்கு சொந்த அண்ணன் பையனுக்கே கட்டிக்கொடுத்து நிம்மதியா இருக்கலாம்னு நான் நினைச்சதுல என்ன டி தப்பு? சரி, நீ எதுவும் செய்யாத! இந்த அம்மாவை பத்தி எதுவும் யோசிக்காத! என் கஷ்டம் என்னோடயே இருக்கட்டும்.” என்று அவர் பாட்டிற்கு புலம்பிக்கொண்டே போக, அவளுக்கு தான் தலைவலியே வந்துவிட்டது.

‘முருகா! சோதீக்காத என்னை!’ என்று மானசீகமாக புலம்பியவளின் கண்ணில் சரியாக அறையை கடந்து சென்ற அதிபன் கண்ணில் சிக்க, அவளுடைய கண்களோ மின்ன ஆரம்பித்தன.

ஒரு திட்டத்தை தீட்டியவள், “அம்மா, நீ நினைச்சதுல தப்பே இல்லை மா. நான் தான் இந்த வீட்டு மருமகள்.” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியே ஓட, சகுந்தலாவோ, ‘ஹப்பாடா! இப்போவாச்சும் நம்ம பொண்ணுக்கு புத்தி வந்திச்சே!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டார்.

இங்கு அலைப்பேசியை நோண்டியவாறு அதிபன் தன் அறைக்குள் நுழைய, பின்னால் கேட்ட கதவை தாழிடும் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அங்கு கதவை சாத்தி கதவில் சாய்ந்தவாறு வைஷ்ணவி நின்றிருக்க, அதிர்ந்து விழித்தவன் பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு, “வெளியே போடி!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான்.

அவளோ கலங்கிய விழிகளுடன், “மாமா…” என்று ஆரம்பிக்க, “ச்சீ நிறுத்து! எத்தனை தடவை சொல்றது? உனக்கு புத்தியே வராதா? அதான் என் முன்னாடி வராதன்னு சொல்றேன் தானே, யாராச்சும் பார்க்குறதுக்கு முன்னாடி வெளில போயிரு.” என்று கத்தினான் அதிபன்.

கன்னத்தை தாண்டி கண்ணீர் தரையை தொட அவனை ஏறிட்டவள், “நான் நடந்துக்கிட்டது, பேசினது தப்பு தான் மாமா. அதுக்காக…” என்று பேசி முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன் அவளின் தோள்களை பிடித்து கதவில் அழுந்த சாய்த்து, “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் கொன்னுடுவேன்.” என்று கண்கள் சிவக்க சொல்ல, பேச வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் அவள்.

துடிக்கும் உதடுகளுடன் வலி நிறைந்த பார்வையுடன் அவனை அவள் நோக்க, அவனாலும் அதற்கு மேல் அவளை காயப்படுத்த முடியவில்லை. தலைமுடியை அழுந்த கோதி தன்னை சமன்படுத்தியவன் அவளை தள்ளி நிறுத்தி கதவை திறந்து, “வெளில போ!” என்று காட்டமாக சொன்னான்.

அவனை சற்று நேரம் ஆழ்ந்து நோக்கிய வைஷ்ணவி எதுவும் யோசிக்காது அவனின் ஷர்ட் கோலரை பிடித்து இழுத்து அவனிதழில் தன்னிதழை அழுத்தமாக பதித்து விட்டு அறையிலிருந்து விறுவிறுவென சென்றுவிட, அவன் தான் அவள் முத்தத்தில் உறைந்து நின்றான்.

இங்கு தனதறைக்கு வந்த வைஷ்ணவியோ கட்டிலில் விழுந்து அழுதுக் கொண்டிருக்க, அறை வாசலில் அவளை வேதனையுடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரித்வி ஒருவித குற்றவுணர்ச்சியுடன்.

அடுத்தநொடி அதிபனுக்கு அழைத்தவள், “தோட்டத்துக்கு வா!” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து தோட்டத்திற்கு சென்று காத்திருக்க, அவளை தேடி வந்தான் அதிபன்.

அவள் ரசித்து படிக்கும் மீரா கிருஷ்ணனின் புதிதாக வெளியான நாவலை கையில் வைத்துக்கொண்டு, “ஏய் சோடாபுட்டி! நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன். நீயே அழைச்சிட்ட. இங்க பாரு! நீயே ஷாக் ஆக போற.” என்று உற்சாகமாக பேசிக்கொண்டே சென்றவனின் வார்த்தை அவளின் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீரை கண்டதும் அப்படியே நின்றது.

அடுத்தநொடி ரித்வியை வேகமாக நெருங்கி, “என்னாச்சு ரித்விமா? ஏன் அழுகுற? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? அத்தை தானே காரணம். அவங்கள…” என்று பல்லைக்கடித்து சொன்னவாறு நகர போனவனை பிடித்து நிறுத்தியவள், “நீதான் காரணம் அதி.” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, அவனோ அவளை அதிர்ந்து நோக்கினான்.

“சகுந்தலாம்மா என்னை திட்டுறது, பழி சொல்றது எனக்கு புதுசு இல்லை அதி. நீ இப்படி நடந்துக்குறது தான் எனக்கு புதுசா இருக்கு. என்னோட அதி யாரையும் காயப்படுத்த மாட்டான். ஆனா, வைஷுவ…” என்று ரித்வி மேலும் பேச வர, “இதுக்கு மேல எதுவும் பேசாத!” என்று அவளை இடையிட்டான் அதிபன்.

“உன் அதி யாரையும் காயப்படுத்த மாட்டான்னு உனக்கே தெரியும். பட், நானே இந்தளவு கோபமா இருக்கேன்னா அந்த வார்த்தை என்னை எந்தளவு காயப்படுத்தியிருக்கும்?” என்ற அதிபன் கோபமாக, “உன்னையும் சேர்த்து தானே டி சொன்னா? என்னை விட அதிகமா கோபப்பட வேண்டியவ நீ! ஆனா, நீ அவளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்க.” என்று கடுப்பாக சொல்ல,

“அது அவளோட உரிமையில உண்டான கோபம்னு கூட எடுத்துக்கலாமே அதி?” என்று ரித்வி தயக்கமாக சொல்லவும், கேலியாக அவளை பார்த்தான் அவன்.

“பொஸஸ்ஸிவ் இருக்கலாம். பட், அதே பொஸஸ்ஸிவ் அதிகமாகி சந்தேகமா மாறிட கூடாது. அவ என் உசுரு ரித்வி. அவ தான் அப்படி நடந்துக்கிட்டாளான்னு நினைக்கும் போது தாங்க முடியல.” என்றவனுக்கு அவளை காதலித்த தருணங்களும், கடைசியாக அவள் பேசிய வார்த்தைகளுமே நியாபகத்திற்கு வந்தன.

அவன் என்ன இன்று, நேற்றா அவளை காதலிக்கிறான்? பத்து வயதாக இருக்கும் போதே தன் அத்தை மகள் மீது அவனுக்கு உண்டான ஈர்ப்பு அவள் வயதுக்கு வந்ததும் காதலாகி, அவனுக்குள் விருட்சமாக வளர்ந்து வேரூன்றி இருந்தது. ஒரு வயதிற்கு மேல் அவளுக்கும் அவனின் பார்வை வித்தியாசம் புரிய, அவளையும் மீறி அவன் மேல் காதல் வயப்பட்டாள்.

எத்தனை தடவை சகுந்தலா, யாதவ் பற்றி வைஷ்ணவியிடம் பேசினாலும், அவளோ அதிபன் பின்னால் தான் வால் போல் திரிந்தாள். ஆனால் என்ன? பொதுவாக காதலர்களுக்குள் உருவாகும் உரிமை கலந்த அதீத அன்பே அங்கு பிரச்சினையாகிப் போனது. அதுவும் ரித்விகாவை காரணமாக வைத்து…

அதிபனுக்கு இரண்டு வயது இருக்கும் போதே அவன் அம்மா இறந்துவிட, ரித்வி அவர்கள் வீட்டுக்கு வந்ததும் அவள் தான் அவன் அம்மாவாகிப் போனாள். வைஷ்ணவியின் மேல் காதல் கொண்டாலும் ரித்வியுடனான அவனுடைய நட்பு அவளுடனே அதிக நேரத்தை செலவிட தூண்ட, வைஷ்ணவிக்கோ அத்தனை பொறாமை!

அதுவும், சகுந்தலா ரித்வியை கரித்துக்கொட்ட அதிபனுடன் அவளை இணைத்து வைஷ்ணவியின் முன்னால் தப்பு தப்பாக பேச, அவளுக்கோ ஒரு பயம்!

காதலில் மனதில் தோன்றும் குழப்பங்களை முடிந்தவரை வெளிப்படையாக கேட்டு பேசி தீர்ப்பது நல்லது. ஆனால், இவளோ கேட்காது தனக்குள்ளே அடக்கி வைத்து வைத்தே அது ஒருநாள் வார்த்தைகளாக வெளிவந்துவிட்டது.

ஆரம்பத்தில் பொறுமையாக இருந்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அதிபன் ரித்வியுடன் பழகும் விதத்தில் பொறுமை இழந்து போக, தன்னை மீறி வார்த்தைகளை அன்று அவள் விட்டுவிட, இன்று அவனின் வெறுப்பிற்கு காரணமாகிப் போனாள்.

வார்த்தைகளை கொட்டினால் அள்ள முடியாது என்பதே உண்மை!

அன்று,

கையில் ஒரு கவருடன் தனதறைக்குள் நுழைந்த அதிபன், ரித்விக்கு அழைக்க அலைப்பேசியை எடுக்க, எப்போதும் போல் யாரும் பார்க்காதவாறு பதுங்கி பதுங்கி தன்னவனின் அறைக்குள் நுழைந்த வைஷ்ணவி கதவை சாத்த, திடுக்கிட்டவன், “அய்யோ! ஏன் டி வந்த? யாராச்சும் பார்த்தா என்னாகும்?” என்று பதறியபடி சொன்னான்.

அவளுக்கோ அவன் உரிமையாக ரித்வியை தனதறைக்கு அழைப்பதும்,  அவள் உரிமையாக தன்னவனின் அறைக்குள் நுழைவதும் நியாபகத்திற்கு வந்து கோபத்தை உண்டாக்க, “இதுவே ரித்வியா இருந்தா சும்மா தானே இருப்பீங்க?” என்று கடுப்பாக சொல்ல, புருவத்தை நெறித்து அவளை கூர்ந்து நோக்கியவனுக்கு குழப்பத்துடன் கூடிய எரிச்சல்!

சில நாட்களாக அவள் உபயோகிக்கும் வார்த்தைகள் தானே இவை!

எதை எடுத்தாலும் ரித்வியுடன் தொடர்புபடுத்தி அவள் பேசுவது எரிச்சலாக இருந்தாலும், தன்னவள் மேல் கோபத்தை காட்ட விரும்பாது சலிப்பான தலையசைப்புடன் கடந்து விடுவான். ஆனால், இன்றும் அவள் பேசியது அப்போது தான் வேலை விட்டு வந்திருந்த அவனுக்கு கோபத்தை உண்டாக்க, இருந்தும் அடக்கியவன், “ஏன் டி இப்படி பேசுற?” என்றவாறு அவளின் கன்னத்தை தொடச் சென்றான்.

கோபமாக அவனின் கையை தட்டிவிட்டவளின் கண்களில் சரியாக சிக்கியது கட்டிலின் மேலிருந்த கவர்.

வேகமாக சென்று அதை எடுத்து பிரித்து பார்த்த வைஷ்ணவி, அதிலிருந்து பட்டுப்புடவையை பார்த்து விழிகளை விரித்து, “மாமா, எவ்வளவு அழகா இருக்கு? எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க?” என்று ஆர்வமாக கேட்க, மெல்ல அதை  அவளிடமிருந்து எடுத்தவன், “வைஷுமா இது ரித்விக்காக வாங்கினது. அவளோட ஃப்ரென்டுக்கு கல்யாணமாமே… அதான்…” என்று சொல்ல, அவளுக்கோ மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

“அதெல்லாம் முடியாது. எனக்கு இது பிடிச்சிருக்கு. எனக்கு இது வேணும். தர முடியுமா? முடியாதா?” என்று ஒருவித பிடிவாதத்துடன் வைஷ்ணவி கேட்க, அவனுக்கோ அவள் கேட்ட தோரணையே கோபத்தை
உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதிபனும் அதே பிடிவாதத்துடன், “வைஷு இது ரித்வியோடது. தர முடியாது.” என்று அழுத்தமாக சொல்ல, அவளுக்கோ அவனின் மறுப்பு, இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் சேர்ந்து வெடித்துவிட்டது.

கோபத்தின் போது நாவை அடக்க வேண்டும் என்று சரியாக தான் சொன்னார்கள் போலும்!

இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே போக, ஒருகட்டத்தில் கோபத்தின் பிடியில் தன்னிலை இழந்து, “ச்சீ! அதானே பார்த்தேன். வெளில ஃப்ரென்டுன்னு சொல்றது. ஆனா, எனக்கே இல்லாத உரிமை அவளுக்கு. யாருக்கு தெரியும்? இன்னும் என்ன எல்லாம் உங்களுக்குள்ள இருக்குதோ? என் அம்மா சொன்னது சரி தான். நல்லாவே அவக்கிட்ட மயங்கி கிடக்குறீங்க.” என்று வைஷ்ணவி கொட்டிச்சென்ற வார்த்தைகள் அவன் விட்ட அறையில் அப்படியே நின்றது.

கன்னத்தை பொத்தியவாறு அவனை அதிர்ந்து நோக்கியவளுக்கு அப்போதே தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் நன்றாகவே புரிந்தது.

அதீத கோபத்தில் கண்கள் சிவந்து, கலங்கிப்போய் நெற்றி நரம்புகள் புடைக்க அவன் நின்றிருந்த தோற்றத்தை மிரட்சியாக பார்த்தவள், “மாமா அது…” என்று பேச வர, எதுவும் பேசாது அவளின் முழங்கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அதிபன் கதவை திறந்து அவளை வெளியே தள்ளினான்.

ஆனால், அறை வாசலில் சுவற்றில் சாய்ந்து நின்றவாறு இருந்த ரித்வியை இருவருமே எதிர்ப்பார்க்கவில்லை.

கலங்கிய விழிகளுடன் இருவரையும் பார்த்தவள் வலி நிறைந்த புன்னகையை சிந்திவிட்டு அங்கிருந்து நகர, வைஷ்ணவிக்கோ அவளுடைய புன்னகையில் உயிருடன் மரித்த உணர்வு! அதிபனுக்கோ ரித்வியின் கலங்கிய விழிகளும், விரக்தியான புன்னகையும் வைஷ்ணவி மேல் வெறுப்பையே உண்டாக்கிவிட்டது.

அவளை அருவருப்பாக பார்த்துவிட்டு கதவை அறைந்து சாத்தியவன், அந்த நாளுக்கு பிறகு அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ரித்வியின் மென்மையான குணம் ஏனோ வைஷ்ணவியின் மேல் கோபத்தை வரவழைக்கவில்லை. வைஷ்ணவியே குற்றவுணர்ச்சியில் பேசாமல் இருந்தாலும் தானாகச் சென்று பேசி அவளை சமாதானப்படுத்தியவள், அதிபனை பற்றி மட்டும் அவளிடம் பேச மாட்டாள்.

ஆனால், அதிபனுடன் மீண்டும் சேர வைஷ்ணவி எடுக்கும் முயற்சிகளை அவளும் காணத் தானே செய்கிறாள்? அவனோ வைஷ்ணவியை முற்றாக ஒதுக்கிவிட, ரித்விக்கு தான் தன் நண்பர்களின் வாழ்க்கையை நினைத்து அத்தனை வேதனை! கூடவே தன்னால் தானே என்ற குற்றவுணர்ச்சி வேறு!

நடந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு தன்னவளுடனான இனிமையான நினைவுகள் விழியில் நீரை வரவழைக்க, அதை உணர்ந்த ரித்வி, “அதி அழாதடா!” என்று சொன்னவாறு அவனின் கைகளை இறுகப்பற்றி அவனின் தோளில் சாய்ந்தாள்.

இதை தனதறை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த யாதவ்விற்கோ காரணமே தெரியாத ஒரு கோபம்!

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!