emv3

emv3

எனை மீட்க வருவாயா! – 3

 

“திடமாய், அடமாய் மறுத்தாலும்,

பிராணனைப்போல சுவாசத்தில்

கலந்து, உயிர்வரை வேரோடும்

நினைவுகளைத் தவிர்க்க இயலுமோ!”

காளியம்மாள் மகனுடன் கிளம்பி, உறவுக்காரரின் வீட்டில் வந்து இறங்கிக் கொண்டார்.

“வேலையெல்லாம் முடிச்சிட்டு போனைப் போடு! நான் எங்க இருக்கேன்னு சொல்றேன். வந்து கூட்டிட்டிப் போ!” என்றவர், தாங்கள் எடுத்து வந்ததில், எது எங்குள்ளது என மகனிடம் தெளிவாகக் கேட்டுக் கொண்டு, நகர எத்தனித்தார்.

ஜெகனது வண்டி சத்தத்தில் வெளியே வந்த உறவுக்காரர், “அடடே வாம்மா, பேராண்டி எப்ப வந்துச்சு?”

“நான் வந்து மூனு மாசத்துக்கு மேல ஆச்சு அய்யா(தாத்தா)” ஜெகன்

இருவரையும் பேசுவதை சிரித்தபடியே பார்த்து நின்றார் காளி.

“வீட்ல மாப்பிள்ளையெல்லாம் சவுக்கியமாம்மா?”

வாயெல்லாம் பல்லாக, “அவருக்கென்ன சவுக்கியத்துக்கு குறைச்சல்.  எல்லாம் நல்லாருக்காரு.  நீங்க எப்டியிருங்கீங்க பெரியப்பா.  முன்ன பாத்ததுக்கு ரொம்ப ஓஞ்சு திரியறீகளே!”

“வயசாகுதுல்ல!”

“வீட்ல ஆளுக இருக்காகல்ல!”

“மருமக இருக்கு!”

“யாரையும் காணாமா, அதான் கேட்டேன்” என்றவாறே காளியம்மாள் அந்த வீட்டிற்குள் நுழைய

“அருணா, யாரு வந்துருக்காகனு வந்து பாரு!” மருமகளை அழைத்தார் பெரியவர்.

அதேநேரம் வெளியே கிளம்பும் தொனியில் நின்ற ஜெகனைப் பார்த்து, “என்ன பேராண்டி, வாச வரை வந்துட்டு, வீட்டுக்குள்ள வராமப் போனா என்ன அர்த்தம்?”

“அவனுக்கு இங்க ஒரு சோலியா வந்தான்.  அதான் அவங்கூட நானும் வந்தேன்.  போயிட்டு வரட்டும்.  நீ கிளம்பு செகனு” மகனுக்கு விடைகொடுக்க

“அடப் போம்மா.  வந்த புள்ளைய வீட்டுக்குள்ள வரவிடாம விரட்டுற.  நீ வந்து ஒரு வாயி பச்சைத் தண்ணியாது குடிச்சிட்டுப் போப்பா”

“இருக்கட்டும் அய்யா.  நான் வேலை முடிச்சிட்டு வரும்போது பாத்துக்கறேன்” வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டான்.

வரும்போதே அனைத்தையும் கூறியே அழைத்து வந்திருந்தார் காளியம்மாள்.  “நான் போறேன்னா அது வேற.  இப்பவே நீயும் வந்து போனா, இளக்காரமா நினைக்க ஆரம்பிச்சிருவாங்க.  அதனால என்னைய வாசல்ல விட்டுட்டுப் போயிரு”

“ஏம்மா! எனக்கும் தம்பிக்கும் ரெண்டு பொண்ணுதான பாக்கணும்.  நீ எதுக்கு இத்தனை வீட்டுக்குப் போகணுங்கற?”

“அட புரியாத புள்ளையாவுல இருக்க! ஒரு பொண்ணுக்கே பத்து, பதினைஞ்சு எடத்துலயாவது பாத்து, அதுல எது நம்ம குடும்பத்துக்கு தோதுப்படும்னு யோசிச்சுதான முடிவு பண்ணணும்.  உனக்கு இப்ப நான் சொன்னா புரியாது.  எல்லாம் போகப்போகப் புரிஞ்சுக்குவ”

“நீ மட்டும் பொண்ணு பாத்து முடிவு பண்ணிராதம்மா.  எங்கிட்டயும் காட்டி, புடிச்சிருக்கானு ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணு”

“அந்தக் காலத்துல ஐயன், ஆயி சொன்னதை தட்டாதுங்க.  இப்ப உள்ள புள்ளைங்கல்லாம் மாறிருச்சுக” மகனது பேச்சில் எழுந்த விரக்தியில் அவ்வாறு பேசினார்.

“நீ அப்பாவ பாக்காமயா கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“அட வேற என்னாங்குற. நீ நம்பாட்டியும் அப்டித்தான் நடந்துச்சுங்கறேன்”

“சரிமா. அதுக்காக என்னையக் கேக்காம யாருகிட்டயும் வாக்குக் குடுத்துறாத.  இன்னொன்னு படிச்ச புள்ளையா, கொஞ்சம் கலரா பாரு”

“படுச்ச புள்ளையா? அதுல நீ இருக்கற கலருக்கு, கலரா வேற பொண்ணு கேக்கற”

“ஆம்பிள இப்டி இருந்தாதான் நல்லாருக்கும். அதுக்கு வரவளும் என்னை மாதிரியே இருந்தா, பொறக்கறது எல்லாம் கருவண்டாதான பிறக்கும்”

“நல்லதான் இருக்கு கேக்க.  ஆனா அமையணும்ல!”

“அதுதான் இப்பவே சொல்றேன்.  எதையாது தலையில கட்டணும்னு நினைக்காத!”

“வேற இன்னும் என்னல்லாம் நினைச்சிட்டுருக்க!”

“நினைப்புல வந்ததை சொல்லிட்டேன்.  இனி அப்பப்போ தோணுறதைச் சொல்றேன்”

“அந்தப் பட்டிக்காட்டுல படிச்சவ வந்து இருப்பாளாய்யா?” தயக்கமாய் வந்தது.

“ஏன் அங்கதான் இருக்கணும்னு சட்டம் எதாவது இருக்கா?” மகனது கேள்வியில வருத்தம் வந்திருந்தது.

“என்னயா செகனு, இப்பவே இப்டிப் பேசற” கலக்கத்தோடு தாய் கேட்க

“இன்னைக்கு காலம் எப்டியிருக்குனு, உனக்கும் தெரியும்.  அதுக்கு ஏத்த மாதிரி பாத்தாதான நாளப்பின்ன நல்லாருக்கும்”

“என்னன்னவோ சொல்றய்யா”

இதுபோன்ற சம்பாசனைகளோடுதான் கிளம்பி வந்திருந்தனர், தாயும், மகனும்.

………………………………………………

முதல்நாள் மாலையில், கல்லூரி விட்டுக் கிளம்பும்போது கண்ட காட்சியில், கிருபாவிற்கு எரிச்சல் எழ, கோபத்தோடு கிளம்பியவன், பயணத்தின்போது யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

வகுப்பில் ஒதுக்கமாக இருப்பவள், வாயெல்லாம் பல்லாக தனது கையில் இருந்த பேகை ஒருத்தனிடம் கொடுக்க, அவனும் திவ்யாவின் தலையில் தட்டியபடியே, அதை வாங்கிக் கொண்டான். இருவருமாய் சிரித்துப் பேசிய காட்சியை ஓரமாய் நின்று கவனித்தவனுக்குள் அமிலமாய் எரிந்தது.

சில நொடியில், அவன் கையில் ஒப்படைத்த பேகைத் திறந்தவள், அதிலிருந்த எதையோ தேடி எடுத்தாள்.

பிறகு கையில் எடுத்த வொண்டர்கேக் மற்றும் சாக்லெட் இரண்டையும் அவனிடம் எடுத்துக் காட்டினாள்.

இங்கோ கிருபாவிற்கு ‘இதக்காட்டி என்ன சொல்றா’ எனப் பாத்திருந்தான்.

அவனிடம் பேசியபடியே கொடுப்பதையும், அவனும் அதை வாங்கிக் கொண்டதையும் கண்டவனுக்குள் எரிச்சல் எரிமலையாய் சீறிவந்தது. ‘யாரு வாங்கித் தந்ததை, யாருக்கிட்ட குடுக்கறா’ விட்டால் அதைப் பறிக்கும் ஆவல் மிகுந்தது.

அதைப் பெற்றுக் கொண்டவனோ, மகிழ்ச்சியோடு அவளிடம் பேசியபடியே, அவளை பேருந்தில் ஏறச் செய்தான்.  பிறகு படியில் நின்றபடி பேருந்தில் அமர்ந்தவளிடம், அவளது பேகைக் கையில் தருவதையும் பார்த்தான்.

‘வேணா, வேணானு சொன்னவகிட்ட, விடாம வற்புறுத்திக் குடுத்தா, அதப்போயி இன்னொருத்தவங்கிட்ட பல்ல இளிச்சிட்டு குடுக்கறதைப் பாரேன்’ புத்தி பரபரத்தது.

‘யாருடா இவன்? இவளுக்கு அண்ணனா? மூஞ்சியப் பாத்தா அப்டித் தெரியலையே! வேற என்ன ரிலேசன்?’ கேள்வியோடு நின்றவனுக்குள், தன்னையும், அவனையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.  தன்னைவிட சற்று உயரம், உடல் என நன்றாகவே இருந்தான்.  ஏதோ நினைவில் தோன்ற வருத்தத்தோடு கோபமும், இயலாமை உணர்வும் தோன்றியது.

சற்று நேரத்தில், அவனும் அதே கல்லூரிப் பேருந்தில் ஏற, கிருபாவிற்கு புகைவண்டிக்கு நேரமானாதால், அதற்குமேல் தாமதிக்க இயலாமல், மனமில்லாது அகன்றிருந்தான்.

வீட்டிற்கு செல்லும்போது எல்லாம் திவ்யாவைப் பற்றிய சிந்தனைதான்.

யாரிடமும், இந்தளவிற்கு இறங்கிச் சென்று பேசாதவன், யாரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவன், இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகக்கூடிய தன்னை, இன்று ஒருத்தி கிறுக்காட்டிப் பார்க்கிறாளே ஏன்?  இது எதனால்?

அவள் வாங்காவிட்டால், அதை ஏன் தன்னால் இலகுவாக எடுத்துக் கொள்ள இயலவில்லை? அவள் தான் கொடுத்ததை வாங்கிக் கொண்டதும் உண்டான மகிழ்ச்சியின் காரணம் என்ன? தற்போது அதை அவள் வேறொவனிடம் தந்ததும், எழுந்த உணர்வுகள் எதனால்? இதற்குமுன் இதுபோல தன்னுடன் பயின்றவர்களுக்கு வாங்கி கொடுத்தபோதெல்லாம் தோன்றாத உணர்வு, இவளிடம் கொடுத்தபோது மட்டும் ஏன் தோன்றியது? அந்த புதியவன் மேல் தனக்கு ஏன் வெறுப்பு உண்டாகிறது?, இப்படி நீண்டது.

அதேநேரம் காலையில் திவ்யாவிற்கு புரையேறியதை நினைத்ததும், தான் உணர்ச்சிவயப்பட்டதும் கிருபாவின் நினைவில் வந்தது.

‘கொஞ்சம் ஓவராத்தான் நடந்திட்டேனோ!’ என்பதாக

கிருபாவின் கழுகுக் கண்கள் திவ்யாவை வட்டமடித்துக் கொண்டிருந்தது. கயல் ஏதோ அவளிடம் சொல்ல, திவ்யாவிற்கு புரையேறியதைக் கண்டதும், விரைந்து என்பதைவிட பறந்து அருகே சென்றிருந்தான்.

அவளது தலையில் தட்டி, “ரிலாக்ஸ் திவ்யா” என்றதோடு, அருகில் நின்றிருந்த கயலின் பேச்சைக் கேட்டுத்தான் அவளுக்கு இவ்வாறு நேர்ந்தது என்பதைக் கண்டவனாயிற்றே. 

அந்தக் கோபத்தை கயலிடம் காட்டினான். “தண்ணி குடிக்கும்போது எதுக்கு டிஸ்டர்ப் பண்ண? முதல்ல முதுகுல தடவிக் குடு” கட்டளையாய்க் கிருபா கூற, கண்கள் கலங்க, அவனது செயலைப் பார்த்திருந்தவள், அவனது பேச்சில் உண்டான திடுக்கிடலோடு, அவன் சொன்னதையும் செய்தாள்.  ஆனால் கயலின் உணர்வுகளை கிருபா உணரவில்லை.

சற்று முன்புவரை திவ்யாவிடம் பினாத்திக் கொண்டிருந்தாள் கயல்.

“திவு உங்கிட்ட ஒன்னு சொல்லணுமே”

“என்னனே தெரியலை, ஒரு மாதிரியா இருக்குடீ”

“ஏன்னு சொல்லவா?”

“அவங்ககிட்ட சொன்னா அதை அப்டியே எல்லாருகிட்டயும் சொல்லிருவாளுங்க, அதான்… ப்ளீஸ்… ப்ளீஸ் நீயாவது கேளுடீ” என தனது மனதில் தோன்றியதை திவ்யாவிடம் கூற, முதல் வகுப்பு நிறைவடைந்தது முதலே பரபரத்து வந்தாள் கயல்.

அதுவரை கேட்கும் மனதின்றி இருந்தவள், இடைவேளையில் நீரை அருந்த துவங்கியபோது, கேட்ட கயலிடம் மறுக்கத் தோன்றாது, செய்கையிலேயே கூறு என்றதும், “திவு…”

“..”

“திவு…”

“அடச்சீ… சொல்லு முதல்ல”

“ஒன்னு தெரியுமா?”

“…”

“…இந்த கிருபால்ல…”

“…” இந்தப் பெயரைக் கேட்டதுமே இதயம் தாறுமாறாகத் துடிக்கத் துவங்கியது திவ்யாவிற்கு.

“அவன்… என்னையே… வச்ச கண்ணு வாங்காம நேத்து வந்ததில இருந்து பாக்கறான்டீ”

“…” இதயத்தின் ஓசை காதுவரைக் கேட்டது.

“….அவன் பாக்கப் பாக்க, எம்மனசெல்லாம் பறக்கற மாதிரி இருக்குடீ.  இதுதான் லவ்ஸாடீ!” கயல் முடித்ததுமே, அதுவரை நீர் அருந்திக் கொண்டிருந்த திவ்யாவிற்குப் புரையேறியிருந்தது.

விழுங்கிய நீரின் மிடறில் கவனம் சிதறி, கயலின் வார்த்தைகளை இடையில் விழுங்கியதால் வந்த வினை அது.

கயல் கூறியதை ஜீரணிக்குமுன், தனது அருகே வந்து தலையில் தட்டியவனைக் கண்டதும், தட்டாமாலை சுற்றிய உணர்வு திவ்யாவிற்கு.

கிருபாவின் செயலில், கயல், திவ்யா மட்டுமல்லாது வகுப்பறையே ஸ்தம்பித்திருந்தது. தற்போது நினைத்தாலும், தனது அதிகப் பிரசங்கித்தனத்தை நினைத்து ஒன்றுமே புரியாத நிலைதான் கிருபாவிற்கு.

“ரொம்ப அட்வாண்டேஜ் எடுக்காத” சட்டெனத் திவ்யா பேசியிருந்தாள்.

புரையேறியதோடு பேசியவளை, “அப்புறமா நீ பேசு.  இப்ப கொஞ்சம் அமைதியா இரு” சாந்தப்படுத்த முனைந்தான் கிருபா.

இவன் சொல்லி, தான் என்ன கேட்பது எனும் ரீதியில், “உன் லிமிட் தெரியாம எல்லாத்துலயும் வந்து மூக்கு நுழைக்காத கிருபா” விடாமல் பேசினாள்.

திவ்யாவின் பேச்சை காதில் வாங்காமல், அவளை சமாதானம் செய்யவே விழைந்தான் கிருபா.

“ரிலாக்ஸ் திவ்யா”

“எதுக்கு இப்டியெல்லாம் சீன் கிரியேட் பண்ணுற”

“…”

“கம்ப்ளைண்ட் பண்ற மாதிரி வச்சுக்காத”

திவ்யாவின் பேச்சுகளைக் கேட்டு, சற்றும் பின்வாங்கினான் இல்லை கிருபா.  உரிமையோடு அந்த இடத்தை சரி செய்துவிட்டு, தோளில் திவ்யாவைத் தட்டி, “கூல் டியர்” எதுவும் அங்கு நடவாததுபோல அவனது இடத்தில் சென்றமர்ந்திருந்தான்.

தன்னை யாரும் தள்ளி நில்லு என்று கூறியது இல்லை.  ஆனால் தன்னை வெறுத்து ஒதுக்குபவளின் பின்னே மனம் செல்வதை வினோத உணர்வோடு ரசித்திருந்தான் கிருபா.

திவ்யாவுடன் பேசிய புதியவனைத் தெரிந்து கொள்ளவும், தனது மனதை அறிந்து கொள்ளவும், காலஅவகாசம்  கிருபாவிற்கு தேவையாக இருந்தது.

அடுத்து வந்த நாள்களில், எதையும் காட்டிக்கொள்ளாது வலம் வந்தான்.  மற்றவர்களுக்குமே ஆச்சர்யம்.

அன்று திவ்யாவின் மேல் கொண்ட கரிசனத்திற்குப் பின் அவளது புறமே திரும்பாமல் தெரிந்தவனை, புரியாத புதிராய் பார்த்திருந்தனர் மற்ற மாணவர்கள்.

‘படத்தில வர்ற சீனைவிட, நேருல பாக்கறதுக்கு அம்சமா இருக்குடா. ஆனா என்ன.. நமக்கெல்லாம் இந்த தைரியம் வரவே வராதுடா’ ஆடவர்களின் ஒட்டுமொத்த எண்ணம்.

பெண்களுமே, “பெரிய ஹீரோனு நினைப்புபோல. வந்ததுல இருந்தே அவன் சரியில்லை” என பேச்சுகள் தொடர்ந்தது கிருபாவைப் பற்றி.

கயலுக்கு மனதோடு சோகம் இருந்தாலும், பேசுவதைக் குறைத்தாளில்லை.

“திவு, ஒரு வேளை ரெண்டு நாளா உன்னைத்தான் பாத்திருப்பானோ” அடுத்த நாளே வந்து திவ்யாவிடம் கேட்டிருந்தாள் கயல்.

“…” திவ்யா பதில் எதுவும் கூறாமல் அகன்றிருந்தாள்.

வகுப்புல் உள்ள அனைவருமே, கிருபாவையும், திவ்யாவையும் கண்காணித்தபடியே இருந்தனர். திவ்யா வழமைபோல இருந்தாலும், ‘இந்தக் கிருபா லூசு திடுதிப்புனு வந்து எதாவது பண்ணிருவானோ’ அவளையும் மீறி, கிருபாவைக் கவனிக்கத் துவங்கியிருந்தாள்.

புரையேறிய தினத்தில் அவன் நடந்து கொண்டது சற்று அதிகப்படி என்பது திவ்யாவின் கருத்து. ஆனால் அனைத்தையும் தோழன் விக்னேஷிடம் பகிர்ந்து கொள்பவள், இதைப்பற்றி மூச்சு விட்டாளில்லை. அது ஏனென்றும் அவளுக்கு விளங்கவில்லை.

அடுத்து வந்த நாள்களில், இருவருமே முற்றிலும் மாறியிருந்ததை யாராலும் நம்ப இயலாமல் பார்த்திருந்தனர். அன்று தாங்கள் கண்டது கனவோ எனும்படி குழம்பித் தவித்தனர்.

இருவரது கண்ணாமூச்சி ஆட்டமும், கூர்ந்து கவனித்தால் மட்டுமே மற்றவருக்குப் புலனானது.  ஆனாலும் அனைவரும் பார்வையாளராக, அடுத்து என்னவாகும் எனும் ஆர்வம் மிகக் காத்திருந்தனர்.

……………..

ஒரு வாரத்தில், திவ்யாவோடு பேசுவது விக்னேஷ் என்பதையும், அவனது குடும்பம் அவளின் சிறுவயது முதலே பழக்கம் என்பதும் கிருபாவின் துப்பறிதலில் தெரிய வந்தது.

இருவருக்கிடையேயான நட்பும் தெரிய வந்திட, தெளிந்திருந்தான் கிருபா. இனி தனக்கு தடையேதும் இல்லை என்பதாய், தன் மனம் விரும்பியதை நோக்கி முன்னேறத் துவங்கினான்.

புரையேறிய நிகழ்வுக்குப்பின் வந்த இரண்டு மூன்று நாள்கள், கிருபாவை நோட்டமிட்டவள், அவனது ஒதுக்கத்தைக் கண்டு, அதன்பின் அவனைக் கண்டு கொள்ளாமல் இலகுவாக மாறியிருந்தாள் திவ்யா.

பத்து நாள்களுக்குப்பின் வழமைபோல கல்லூரி வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வகுப்பில் நுழையும்போது யாருமில்லை. சற்று நேரத்தில் வந்த கிருபாவைக் கவனித்துவிட்டு, அவளின் வேலையைத் தொடர, தன் இரு கைகளையும் பெஞ்சில் ஊன்றியவாறு அவளையே பார்த்திருந்தவனை, கேள்வியாய் நோக்கினாள்.

‘நல்லாத்தான இருந்தான். இன்னிக்கு என்னடா பிரச்சனை உனக்கு’ என்பதாய், ஆனால் பதற்றமும் தெரிய நிமிர்ந்து நோக்கியவளிடம்

“பதறுற அளவுக்கு நான் வர்த் இல்ல”

“…”

“மேபி ஃபாலிங் இன் லவ் வித் யூ” கூலாகக் கூறிட

“…” அவனது அந்த வார்த்தைகளை, திவ்யா எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் வெளிரிய முகத்தில் தெரிய வந்தது.

அவனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கைகளை விட்டபடியே, “சிம்டம்ஸ் எல்லாம் அப்டித்தான் இருக்கு!” சிரித்தபடியே கூறினான். அந்த சிரிப்பை அவளறியாமலேயே ரசித்தாளோ!

“…”

“பதட்டத்தில உன்னால யோசிக்க முடியலைன்னு நினைக்கிறேன்”

“…”

“…ரிலாக்ஸா யோசி.  உனக்கும் அப்டித்தான் இருக்கும்” சோதிடம் கூறியதைப்போல சொல்லிவிட்டு, அங்கிருந்து அகன்றிருந்தான் கிருபா.

திவ்யாவிற்கு தன் தாயின் நினைவுதான் வந்தது.

“ஒழுங்கா படிச்சமா, வந்தமானு இருக்கணும்டீ.  தேவையில்லாம ஏழரையக் கூட்டினா, என்ன மாதிரி ஏமாந்துதான் வாழ்க்கையத் தொலைச்சிட்டு நிக்கணும்” தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

விக்னேஷ் எனும் ஒருவனின் தொடர் நச்சரிப்பால்தானே தன்னை கல்லூரிக்கு செல்லவே தாய் அனுமதித்தார் என்பதும் அந்நிமிடம் தோன்ற, கிருபாவின் வார்த்தைகளைக் கேட்டு, ‘எம் படிப்புக்கு வேட்டு வைக்கறதுக்குன்னே ஊருவிட்டு ஊரு வந்திருக்கான் போலயே’ என கோபமே மிகுந்தது.

திவ்யா என்ன முடிவெடுத்தாள்?

………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!