MK 12
MK 12
மயங்கினேன்.! கிறங்கினேன்.!
அத்தியாயம் 12
அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட வெற்றி , உடனடியாக அவளை விட்டு விலகி நின்றான்.
அவனின் அணைப்பிலிருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் சாதாரண மூச்சே விட முடிந்தது.
என்ன இருந்தாலும் அவனை காதலிப்பவள் அல்லவா.?
அவனையே பார்த்த படி நின்றாள் இனியா. அவளின் பார்வையை உணர்ந்து கொண்டவனுக்கு அவள் விழிகளில் ஒரு நிமிடம் தொலைந்து போக தான் பார்த்தான். ஆனாலும் அவள் விழிகள் அவனிடம் ஏதோ கேட்பது போல் இருக்க , அது புரியாமல் விழித்து நின்றான்.
இவர்கள் இருவரையும் சுயநினைவிற்கு கொண்டு வந்தது ஞானவேலின் பேச்சு சத்தம்.
” ரொம்பவே சந்தோஷமா இருக்கு மாப்பிள்ளை . இனி என் பொண்ணை பற்றின கவலை எனக்கு இல்லை. அவளை ஒரு நல்ல இடத்துல சேர்த்திட்ட நிம்மதியோட இப்பவேணும்னாலும் கண்ணை மூடிடுவேன்” என சந்தோஷமாக சொல்ல
” என்ன மாமா பேசுறீங்க நீங்க.? இனி தான் உங்களுக்கு பொறுப்பு அதிகமா இருக்கு. இப்படி பேசினா எப்படி மாமா ” என்றவனை ஞானவேல் புரியாமல் பார்த்தார் .
விஜயசாந்தி எதுவும் பேசாது அமைதியாக நின்றார். மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் செல்ல அவர் விருப்ப படவில்லை.
” என்ன சொல்றீங்க மாப்பிள்ளை.?”
” ஆமா மாமா . இனி தான் தல பொங்கல், தல தீபாவளி அப்புறம் அப்புறம்..” என இழுத்தவனை புருவம் சுருக்கி பார்த்தாள் இனியா.
‘ இவன் எண்ணத்தை சொல்ல போறான்னு தெரிலயே?’ என கேள்வியாக கணவனின் முகத்தை நோக்கினாள்.
அவனோ சாவகாசமாக இனியாவின் கழுத்தில் கை போட்டு ,” சில் மாமா ! அப்புறம் எங்க குழந்தைகளை நீங்க தான வளர்கனும் ” என சிரிப்போடு கூறினான்.
அதில் எல்லாரும் புன்னகை புரிய ,” சீக்கிரமா எங்க கையில கொடுத்திடுங்க தம்பி. நாங்க பேரப்பிள்ளைகளை பார்த்துக்கிறோம்” என்றார்.
இனியா தான் அவன் கை வலைவில் இருந்தவாறே , ‘இவன் எந்த மாதிரியான மனிதன்’ என்பது போல் பார்த்தாள் .
பின், வெற்றி அவனது அறைக்கு சென்றுவிட , இனியாவோ மதிய வேலைக்கு சமையல் செய்ய சென்றாள்.
இவையெல்லாவற்றையும் வீட்டிற்கு வந்த பரமசிவத்திடமும் கௌதமிடமும் சொல்லி மகிழ்ந்தார் விஜயசாந்தி.
வேலை எல்லாம் முடிந்துவிட்டு அறைக்கு வந்த இனியா , குளிக்க செல்லலாம் என்று மாற்று உடையை எடுத்து சென்றவளின் முன் நின்றான் வெற்றி.
அவனை ஏற்றெடுத்து பார்த்த இனியா , நகர்ந்து போக முற்பட்டாள்.
” உன் முன்னாடி நான் நிக்கிறது தெரியலையா ? “
” தெரியுதே தடியன் சார். அதான் நகர்ந்து போறேன் “
” என்ன கொழுப்பு கூடி போச்சி போல.? நேத்து தான் ஏதோ பயம் கியம்னு டையலாக் பேசின மாதிரி இருந்துச்சி ” என அவளை சீண்ட
” பயம் தான் சார். ஆனா இங்க தான் அம்மா இல்லையே. அதுவும் இல்லாமல் இப்போ என் துணைக்கு அத்தையும் மாமாவும் இருக்காங்க . சோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இனியா இஸ் பேக் டு ஃபார்ம் சார் . அதுவும் இல்லாமல் நாம தான் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே. அப்புறம் எதுக்கு பயப்படனும் சொல்லுங்க ” என நீளமாக பேசியவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
” சூப்பர்… சூப்பர்..” என மெச்சி கொண்டான் அவன்.
” இன்னைக்கு நீ கொஞ்சம் சொதப்பின மாதிரி இருந்தது. இனி சொதப்பாம பண்ணு ” என்க
இனியாவோ புரியாமல் அவனை பார்த்தாள்.
” என்ன சொல்றீங்க தடியன் சார்.?”
” அதான் மா நடிப்பு. புருஷன் பொண்டாட்டியா நடிக்கனும்னு நாம பேசிக்கிட்டோம்ல , அதுல உன் பர்ஃபார்மனஸ் கொஞ்சம் நல்லா இல்லை. பெட்டரா பண்ணு அப்போ தான் நம்மளை நம்புவாங்க புரியுதா ” என்று சொன்னவனை கண்டு விரக்தியாக புன்னகை செய்தாள்.
” எதுக்கு நடிக்கனும் சார்.? நாம நாமளாவே இருந்திட கூடாதா.?”
” நாம எப்பவும் நாமளா தான் இருப்போம் .ஆனா அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் ” என்றவன் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அவனது கூற்று புரியாமல் முழித்த இனியா , எப்படியோ போகட்டும் என குளிக்க சென்றுவிட்டாள்.
குளித்து விட்டு வந்தவள் ஊதா நிற காட்டன் புடவை அணிந்து , அதற்கு ஏற்ப காதணியும் , கழுத்தில் சிறிய நெக்லஸூம் அணிந்து கொண்டாள்.
பின் , அனைவரையும் சாப்பிட அழைத்தவள் ,எல்லாருக்கும் அவளே பரிமாற துவங்கினாள்.
சாப்பிட அமர்ந்த வெற்றி , இலையில் இருந்த உணவுகளை கண்டு வாய் பிழந்தான்.
” என்ன மா எல்லாம் எனக்கு பிடிச்சதா செஞ்சிருக்கீங்க.?” என்றவாறே கேசரியை வாயில் வைத்து சப்பு கொட்டினான்.
” ம்மா ஒருநாளும் இப்படி ஒரு கேசரி நீ செஞ்சி கொடுத்ததே இல்லையே மா. இன்னைக்கு என்ன இவ்வளவு டேஸ்டா இருக்கு . இது செஞ்சதுக்கே உனக்கு ஒரு தங்க வளையல் வாங்கி தரலாம் மா” என அன்னையை புகழ்ந்து தள்ள
பக்கத்தில் உணவருந்தி கொண்டிருந்த பரமசிவமோ ,” இது செஞ்சது என் பொண்டாட்டி இல்ல ராசா . அது செஞ்சது உன் பெண்டாட்டி” என சொல்ல மனைவியை பார்த்த வெற்றி ஏதும் பேசாது அமைதியாக உணவுண்டான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்து விட , ஞானவேல் பேச துவங்கினார்.
” சம்பந்தி உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தோம் . நாளைக்கு மாப்பிள்ளையும் பொண்ணையும் மறு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் ” என வேண்டி கேட்க
” இதுல என்ன இருக்கு சம்பந்தி . இனி இவன் உங்க வீட்டு மாப்பிள்ளை. தாராளமா கூட்டிட்டு போங்க ” என்றார்.
” சரிங்க சம்பந்தி”
” மாப்பிள்ளை அப்போ நீங்களும் இனியாவும் காலையில வீட்டுக்கு வந்திடுங்க” என மருமகனிடம் கூற அவனும் புன்னகையோடே ‘ வரேன் மாமா’ என்றிருந்தான்.
அன்று இரவே கௌதம் சென்னைக்கு சென்றிருந்தான்.
*******
அடுத்த நாள் காலை இருவரும் நல்ல நேரம் பார்த்து கிளம்பினர். மாமியார் வீட்டை நோக்கி வெற்றியின் பயணம் ஆரம்பமானது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இனியாவின் வீட்டை இருவரும் அடைந்தனர்.
அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு இனியா என்ற தொல்லையால் அரைமணி நேரம் தாமதமானது.
பார்க்கும் இடத்தில் எல்லாம் எதையாவது கேட்டு ,வாங்கி சாப்பிட்ட மையமாக இருந்தாள்.
இவள் சாப்பிடுவதை பார்த்து ,” இது வயிறு தானா.? ” என்ற கேள்வியை கேட்டே விட்டான்.
” ச்சு கண்ணு வைக்காதீங்க தடியன் சார். அப்புறம் இந்த சின்ன பிள்ளைக்கு வயிறு வலிக்கும் ” என இளநீரை குடித்தப்படி குழந்தை போல் சொன்னாள்.
அதில் தலையில் அடித்து கொண்டவன் ,” சின்ன பிள்ளையை அசிங்க படுத்தாம சீக்கிரமா குடிச்சிட்டு வா ” என காரில் சென்று அமர்ந்து கொண்டான்.
” பொறாமை” என முணுமுணுத்தவள் முழுதாக இளநீரை குடித்து முடித்த பிறகே காரில் ஏறினாள்.
இப்படியாக அந்த ஒரு மணிநேர பயணமும் சென்றது.
கார் சத்தம் கேட்டு வந்தவர் ” மதி மாப்பிள்ளையும் அம்முவும் வந்திடாங்க பாரு” என வெளியே இருந்து குரல் கொடுத்தார்.
அவர் குரலில் இருந்த உற்சாகமும் சந்தோஷமும் காந்திமதியின் வருகையில் சுத்தமாக இல்லை.
வெறுங்கையோடு வெளியே வந்த மனைவியை கேள்வியாக பார்த்த ஞானவேல் ,” ஆரத்தி தட்டு எங்கே மதி.?” என்க
” அது சுமதி கொண்டு வருவாங்க ” என மிடுக்காக கணவன் பக்கத்தில் நின்றார்.
” இதெல்லாம் நீ தானே செய்யனும் மதி. இப்படியா மாப்பிள்ளையை அவமானபடுத்திற மாதிரியா பண்ணுவ ” என மெலிதான குரலில் கேட்க
” எனக்கு பிடிச்ச மாப்பிள்ளையையா அவளுக்கு கட்டிவச்சீங்க.? “என கணவனிடம் எரிந்து விழுந்தார் .
“பச் என்ன பேசுற நீ .? உனக்கு புடிக்குதா புடிக்கல்லையான்றது விஷயம் இல்ல மதி . அம்முக்கு யாரை பிடிச்சு இருக்குன்றது தான் முக்கியம் புரியுதா உனக்கு ” என மனைவியிடம் சொன்னவர் “சுமதி க்கா கொஞ்சம் சீக்கிரம் ” என அவசரப்படுத்தினார் .
“இதோ ஒரு நிமிஷம் மாப்பிள்ளை . இப்போ ஆரத்தி எடுத்துடலாம் ” என்றார் மாப்பிள்ளையிடம் சற்று பவ்யமாக
” பரவால்ல மாமா ” என்று மென்மையாக புன்னகைதான் .
அடுத்த நிமிடமே சுமதி வந்துவிட , ஒரு நொடி தயங்கி காந்திமதியை பார்த்தவர் இனியாவின் அழைப்பில் ஆரத்தி எடுக்க சென்றார் .
” சுமதி மா வாங்க வந்து எங்களுக்கு ஆரத்தி எடுங்க.நீங்க எப்படியும் எங்களோட வருகைக்காக ஆவலாக வெயிட் பன்னிருப்பிங்க . சீக்கிரம் சீக்கிரம் ” என்ற சொல்லில் அகமகிழ்ந்து போனார் அவர் .
” இதோ பாப்பா ” என்று அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்.
“வாங்க மாப்பிள்ளை ” என ஞானவேல் சம்பிரதாயம் கொண்டு வரவேற்றார் .
“சுமதி அக்கா தண்ணி எடுத்துட்டு வாங்க ” என ஞானவேல் சொல்ல
“இதோ ஐயா ” என்றவர் தண்ணியை எடுத்து வந்து வெற்றியிடம் கொடுத்தார்.
புன்னகையோடு வாங்கிகொண்டவன் அதில் பாதியை குடித்து விட்டு மீதியை இனியாவின் புறம் நீட்ட , அவ்ளோ அவனை அதிர்ச்சியோடு விழி விரித்து பார்த்தாள் .
அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து கொண்டவன் ,” குடி இப்போ ஏதும் பண்ற ஐடியா எனக்கு இல்லை ” என்று அவளிடம் சிரிப்போடு கொடுத்தான் .
வாங்கியவள் சிறிது குடித்து விட்டு கீழே வைத்து விட்டாள் .
இவற்றை எல்லாம் பார்த்த காந்திமதிக்கு வயிறு பற்றி கொண்டு எரிந்தது .
‘என் அண்ணன் மகன் இருக்க வேண்டிய இடத்தில் யாரோ ஒரு பிச்சைக்காரன் இருப்பதா ‘ என முகம் சுளித்தார் பெண் .
” மாப்பிள்ளை , இது உங்க வீடு . நீங்க அங்க எப்படி இருப்பிங்களோ அதே போல இங்கயும் இருங்க ” என்று சொல்ல
” இது நீங்க சொல்லவே வேணாம் மாமா . இதுவும் என்னோட வீடு தான் ” என்றான் .
அதனை கேட்ட காந்திமதி ,” வர போறவுங்க எல்லாம் இது என் வீடுன்னு சொன்னா எப்படி .? நாங்க என்ன சமுதாய கூடமா வச்சியிருக்கோம்” என சந்து இடையில் பேசிவிட்டு போன்னார்.
வெற்றியின் முகம் அவர் பேசியதில் அவமானத்தில் கறுத்து விட , அமைதியாக அங்கே அமர்ந்திருந்தான் .
ஞானவேலிற்கு மாப்பிள்ளையின் முகத்தை பார்க்கவே சங்கோஜமாக உணர்ந்தார் .
இனியா தான் வேகமாக சமையல் அறையிலிருந்து வெளியே வந்தவள் ,”வர போறவுங்க சொன்னா தான் தப்பு . ஆனா இந்த வீடு அவர் பொண்டாட்டி பேர்ல இருக்கு . உங்கள விட அவருக்கு இப்போ இங்க அதிகமா உரிமை இருக்கு ” அன்னையை பார்த்து கட்டமாகவே சொன்னாள் .
“ஏய் ! என்மேல இருந்த பயம் விட்ருச்சா என்ன ? குரல் எல்லாம் எகுறுது ” என காந்திமதி சத்தம் போட..
” இப்போ தான் என் வீட்டுக்கு போயிட்டேனே அதான் நான் பேச செய்றேன் . என் வெற்றியை ஏதாவது சொன்னிங்க அப்றம் நான் சும்மாவே இருக்க மாட்டேன் ” என இப்போது கணவனுக்காக இனியா கை நீட்டி அன்னையிடன் எச்சரிக்கை விடுத்தாள் .
” வாங்க வெற்றி நாம போகலாம் ” என கோபமாக கணவனின் கை பிடித்து இழுக்க பதறி போனார் ஞானவேல் .
“மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை . அவ ஏதோ தெரியாம பேசிட்டா , எனக்காக மன்னிச்சுடுங்க ” என கை எடுத்து கும்பிட்டார் . அதில் பதறிய வெற்றி வேகமாக ஞானவேலின் கையை பிடித்து கீழே இறக்கினான்.
” மாமா இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க ப்ளிஸ்”
” இல்ல மாப்பிள்ளை அவ பேசுனது தப்பு. அதுக்கு நான் தானே மன்னிப்பு கேட்கனும் சொல்லுங்க “
” விடுங்க மாமா. இதை நான் பெருசா நினைக்கில்லை ” என்று சொன்ன கணவனை கண்டு ஏகத்திற்கும் முறைத்து வைத்தாள் இனியா.
” இப்போ வர போறீங்களா இல்லையா நீங்க.?” என கோபமாக இனியா கேட்க
” இனியா , உள்ள போ ” என்ற வெற்றியின் அதட்டலில் ” எப்படியோ போங்க ” என தோள் குலுக்கி உள்ளே சென்றுவிட்டாள்.
” மாமா இனியா சின்ன பொண்ணு தானே . அதான் ஏதோ தெரியாம பேசிட்டா ” என வெற்றி இனியாக்காக பேச பெரியவர் புன்னகைத்தார்.
பின்னர் , வெற்றி அங்கே அமர பிடிக்காமல் சுற்றிலும் பார்வையை ஓட்டிய படி இருந்தான்.
” அம்மு..” என ஞானவேல் அழைக்க
” சொல்லுங்க பா “
” மாப்பிள்ளையை உன் அறைக்கு கூட்டிட்டு போ டா. அப்படியே வீட்டையும் சுத்தி காட்டு ” என தந்தை சொல்ல மகள் மண்டையை ஆட்டினாள்.
” தடியன் சார்..” என மெதுவான குரலில் அழைக்க
” ம்ம் சொல்லு.?”
” வாங்க ரூம்க்கு போகலாம்..”
“ம்ம்” என்று அவளுடன் சென்றான்.
அவளது அறை முதல் மாடியில் இடது பக்கத்திலிருந்து இரண்டாவது அறையாக இருந்தது.
” வாங்க. இது தான் நம்ம ரூம் ” என்று அவனை வரவேற்க
அறைக்குள் நுழைந்தவன் அறையை சுற்றி பார்த்தான். அவள் இல்லை என்றாலும் அந்த அறை நேர்த்தியாக இருந்தது.
” என்ன டா அறை இவ்வளோ நீட்டா இருக்குன்னு பார்க்கிறீங்களா.? இது எல்லாம் சுமதி மா பண்ணது தான். அவுங்க தான் எப்போதும் என்னோட ரூம்மை சுத்தமா வச்சிப்பாங்க . வேற யாரும் இங்கே வர மாட்டாங்க” என்று சொல்ல
அவனோ அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். இன்று ஏனோ புதிதாக தெரிந்தாள்.
” சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க தடியன் சார். நான் போய் சமைக்கிறேன் ” என்றவள் கீழே சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில், அந்த பெரிய கட்டிலில் படுத்து உறங்கி போனான் வெற்றிமாறன்.
பூங்கோதையும் மணிமாறனும் வந்திருக்க , அவர்களோடு நேரத்தை கடத்தினாள் இனியா.
இரண்டு மணி போல் சாப்பிடுவதற்காக வெற்றியை அழைக்க சென்றாள் இனியா.
அப்போது பார்த்து துரைபாண்டி வந்திருக்கவும் ,” வாங்க அத்தான்” என்று சம்பரதாயமாக அழைத்தவள் அறையை நோக்கி நடையை கட்டினாள்.
‘ இவ கிட்ட பேசணும்னு தானே வந்தேன். இப்படி வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு போறா ‘ என தனக்குள் பேசியவன் அவளை பின் தொடர்ந்தான்.
அறையில்…
” சார்..”
“சார்ர்ர்..”
” தடியன் சார்..” வெற்றி எழும்பினானில்லை.
” தடியன் சார்ர்ர்…” என சத்தமாக அழைக்கவே கண் விழித்த வெற்றி அவளை உறுத்து விழித்தான்.
” எதுக்கு இப்படி கத்துற.?”சிடுசிடுக்க கேட்க
” நான் இரண்டு மூணு தடவை கூப்பிட்டு பார்த்தேன். ஆனா நீங்க எந்திரிக்கல்லை அதான் சத்தமா கூப்பிட வேண்டியதா போச்சி “
” சரி எதுக்கு கூப்பிட்ட.?”
” சாப்பிட வாங்க . மணி இரண்டு ஆகுது. அத்தானும் அக்காவும் வந்திருக்காங்க “
” சரி நீ கீழ போ நான் ரெஃபிரஷ் ஆகிட்டு வரேன் ” என அவளை கீழே அனுப்பி வைத்தான்.
மாடியில் இறங்கும் போது துரைபாண்டி வந்து வழி மறித்து நின்றான்.
” அத்தான் வழி விடுங்க..”
” எப்படி இருக்க அம்மு.?”
” எனக்கென்ன நான் சந்தோஷமாவே இருக்கேன் துரை அத்தான்..”
” எப்படியோ நீ காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்ட. அப்போ சந்தோஷமா தான் இருப்ப”என குத்தலாகவே சொன்னான்.
” ம்ம் “என்பதை தவிர வேறெதுவும் பேசவில்லை.
வெற்றி வெளியே வருவதை கண்ட துரைபாண்டி அவளிடம் பேச்சை தொடர்ந்தான்.
” நீ காதலிச்ச ஆனா அந்த வெற்றி உன்னை காதலிக்கல்லையே அம்மு. உன் காதல் மட்டும் போதுமா என்ன.?”
” போதும் அத்தான். என் காதல் ஒன்றே போதும் எங்க காதலை சேர்த்து வைக்க. நான் என் காதலை நம்புறேன் , அது என்னை கைவிடாது.”
” ஆனா அத்தை வேற ஏதோ சொன்னாங்களே அம்மு.? ஏதோ பணம் கிணம்னு.?”
” என்ன பணம் அத்தான் ,அது என் காதலை அழிச்சிடுமா என்ன? மூணு வருஷ காதல் அதை பணத்தால நிர்ணயிக்க முடியாது. தப்பு பண்ணவுங்களே இங்க நிம்மதியா இருக்கும்போது , என் காதல் அத்தனை தூய்மை உடையது. பணத்தால அழியவே அழியாது அத்தான். நான் சாகுற வரை என் துணை அந்த சேராத காதல் தான். சேர்ந்தா தான் காதல்னு இல்லை , விருப்பட்டவுங்களோட சந்தோஷத்தை தூர இருந்து பார்த்து சுகம் காண்பதும் ஒரு வகையான காதல் தான் அத்தான் ” என சொல்லி முடித்த இனியா கீழே சென்றுவிட்டாள்.
இதனை கேட்ட வெற்றி , அன்று அவள் பிரிந்து செல்லும் வேலையில்” ‘ என்னோட அத்தான் கூட கல்யாணம் ‘ என்றாளே அதில் அத்தனை காதல் அவள் முகத்தில் அன்று தெரிந்ததே , அது அது எல்லாம் என்னால் நாசமாகிடுத்தே..” என வருந்தினான்.
‘ ஏன் காந்திமதி சொன்ன போது நான் இடத்தை காலி செய்திருந்தால் , இவளுடைய காதலாவது நிறைவேறியிருக்குமே . அய்யோ ஆண்டவா நான் தப்பு செய்து விட்டேனே ‘ என்று நினைத்த போதே சொல்ல முடியாத வலி அவனுள்..
இசை அவனை விட்டு சென்ற போதும் கூட இத்தனை வலி அவன் உணரவில்லை. ஆனால் இந்த நேரம் இந்த நொடி அவனுள் வலி, சொல்ல இயலாது வலி , அதுவும் ஈட்டியை வைத்து இதயத்தை குத்தியது போலான ஒரு வலி.
இது எதனால் என்று அவனுக்கு புரியவில்லை.
இளகத்துவங்கிய மனம் மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்கியது.
தன் தந்தையினால் தானே அவள் வாழ்வு, அவள் காதல் நிற்கதியாக நின்றது , இதற்கு நான் தான் ஏதாவது செய்தாக வேண்டும். அவளின் காதலை அவனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்ற சிந்தனையோடே அவன் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி சென்றான்.
இனி தன் வாழ்வில் இனியா இல்லையா என்று நினைப்பே அவனை கொல்லாமல் கொன்றது.
இத்தனை சிந்தனைகள் செய்தவன் , அவனும் அவளுக்கு அத்தான் தான் என்பதையும் , தன்னுடனான நடக்க இருந்த திருமணத்தை பற்றி தான் கூறியிருப்பாள் என்பதனையும் யூகிக்க மறந்துவிட்டான்.
விதி எனும் சதி அவனை பார்த்து கைக் கொட்டி சிரித்தது.