லவ் ஆர் ஹேட் 08

லவ் ஆர் ஹேட் 08
“கடவுளே! இரண்டு பேரும் போனாங்க. ஆனா, இப்போ வரைக்கும் ஆளையே காணோமே… இந்த ரோஸ்மில்க்கும், சந்துவும் வேற பெரிப்ஸ்க்கு பயந்து ஓடிருச்சிங்க. நான் தான் டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு தெரிஞ்சா பெரிப்ஸ் என்னை பொழந்து கட்டிருவாரே… ‘ என்று தன் அறை வாசலிலிருந்து வீட்டு வாசலை எட்டிப் பார்த்தவாறு புலம்பிக் கொண்டிருந்த இந்திரனுக்கு மஹாதேவன் ஹோலுக்கு வந்து சோஃபாவில் அமர்வதை பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது.
‘ஆத்தாடி ஆத்தா! சனியன் உச்சத்துல இருக்கு போலயே… எல்லாமே தப்பு தப்பா நடக்குது. இந்த நேரம் இவர் ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்காரு? முருகா காப்பாத்து!’ என்று மானசீகமாக அலறியவன், ‘போனதுங்க வர்ற நேரமாச்சு! இதை இப்படியே விடக் கூடாது. நாமளே பெரிப்ஸ் கூட பேசி ரூம்க்கு அனுப்பி வைச்சிரலாம்.’ என்று திட்டம் போட்டவாறு மெல்ல நடந்துச் சென்றான்.
சரியாக அவன் தோளை பின்னாலிருந்து ஒரு கரம் தொட, “அம்மா…” என்று கத்தியவாறு திடுக்கிட்டு திரும்பினான் அவன்.
அவன் தோளில் கை வைத்திருந்த சகாதேவனோ அவனின் கத்தலில் பதறி, “பிசாசு நான் தான்.” என்று திட்ட, நெஞ்சை நீவி விட்டுக்கொண்டவன், “ஏன் ப்பா பேய் மாதிரி பின்னாடி நின்னு பயமுறுத்துற? மனசு பதறுதுல்ல…” என்று கடுப்பாக சொன்னான்.
அவரோ, “அதை விடு சந்து, நான் உன்கிட்ட இந்துவ பத்தி பேசியே ஆகனும்.” என்று தான் பேசிக்கொண்டிருப்பதே இந்திரனுடன் தான் என்பது தெரியாது இந்திரனிடமே இவ்வாறு சொல்ல, ‘ஙே’ என்று அவரை மேலிருந்து கீழ் பார்த்தவன், “சொல்லும்…” என்று காதுகளை தீட்டினான்.
“அது வந்து சந்து, ஏன் டா அவன் இப்படி இருக்கான்? எப்போ பாரு பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு! ச்சே! ச்சே! அவன பெத்ததுக்கு உன் கூட சேர்த்து ஒரு கழுதைய பெத்திருக்கலாம். நீயாச்சும் வயல், தோப்புல வேலை பார்க்குற. ஆனா, அவன் உன் கூட இருக்கேன்னு வேலை பார்க்குற பொண்ணுங்ககிட்ட வழிஞ்சிக்கிட்டு இருக்கான். நீயாச்சும் அவனுக்கு புத்தி சொல்லு டா சந்து!” என்று அவர் பேசிக்கொண்டே போக,
அவரை கைநீட்டி தடுத்தவன், “ஃபோர் யுவர் கைன்ட் இன்ஃபோர்மேஷன், நான் தான் இந்திரன்.” என்று சொல்ல, ‘அய்யய்யோ!’ என்று உள்ளுக்குள் பதறியவர், “சரி, இருந்துட்டு போ!” என்றுவிட்டு அப்படியே தனதறைக்கு ஓட, அவனோ போகும் அவரை உக்கிரமாக முறைத்தான்.
சரியாக, “யாதவ்!” என்ற மஹாதேவனின் குரலில் அப்போது தான் நடப்பதை உணர்ந்து வேகமாக சென்று வாசலை பார்த்தவனுக்கு பக்கென்று இருந்தது. அங்கு யாதவ் நின்றிருக்க, மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு பெக்கபெக்கவென முழித்துக்கொண்டு கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.
‘ஓடிரு டா கைப்புள்ள!’ என்று அலறியவாறு ஓடிச்சென்று தூணிற்கு பின்னால் மறைந்து நின்றவாறு அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தவனுக்கு அடுத்து நடந்ததில் ஆச்சரியம் தான்.
ரித்வியோ சொல்ல சொல்ல கேட்காது முன்வாசல் வழியாக அழைத்து வந்த யாதவ்வை மனதிற்குள் வறுத்தவாறு நின்றிருந்தாள் என்றால், வந்ததும் ஹோலிலிருந்த மஹாதேவனை பார்த்து அதிர்ந்தேவிட்டாள். ஆனால், யாதவ்விற்கோ எந்தவித சங்கடமும் இல்லை போலும்! இத்தனை நாட்கள் அவன் வாழ்ந்த சூழலும் அப்படி தானே!
மஹாதேவனோ யாதவ்வுடன் ரித்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போல் தன் மனைவியின் நினைவில் ஹோலில் வந்து அமர்ந்தவருக்கு யாதவ்வும் ரித்வியும் ஒன்றாக வருவதை பார்த்ததும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
சட்டென்று எழுந்து நின்றவர் இருவரையும் மாறி மாறி பார்க்க, யாதவ்வோ சாதாரணமாக, “படம் பார்க்க போனோம். ஏதாச்சும் தப்பா?” என்று அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து கேட்க, குரலை செறுமியவர் ரித்வியை ஒரு பார்வை பார்த்தவாறு, “நீ தாராளமா உனக்கு பிடிச்சதை பண்ணலாம். ஆனா, இது இத்தனை நாள் நீ வளர்ந்த சூழல் கிடையாது. நீ இந்த நேரத்துல ஒரு பொண்ணு கூட வெளில நின்னு சாதாரணமா பேசினாலும் உலகம் தப்பா தான் பார்க்கும். தப்பா தான் பேசும். நீ ரித்விய அழைச்சிட்டு வெளில போகலாம். ஆனா, இப்படி ராத்திரி நேரம் வேணாம் ப்பா.” என்று நிதானமாக சொன்னார்.
“பார்க்குற பார்வையில தானே தப்பிருக்கு. அப்போ மாற வேண்டியது நான் இல்லை. தப்பா பார்க்குறவங்க தான்.” என்றுவிட்டு யாதவ் அவன் பாட்டிற்கு தன் அறைக்குச் செல்ல, மஹாதேவனோ சலிப்பாக தலையாட்டியவாறு ரித்வியை பார்த்தார்.
“சோரி மாமா.” என்ற ரித்வி அசையாது அதே இடத்தில் நிற்க, “அறைக்கு போ ம்மா.” என்று சிறு சிரிப்புடன் சொன்னவர் தனதறைக்குச் செல்ல, இங்கு மஹாதேவன் திட்டாது விட்டதில் ரித்வி ஆச்சரியப்பட்டாளோ என்னவோ! தூணிற்கு பின்னால் நின்றிருந்த இந்திரன் தான் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.
கூடவே, மற்ற மூவருக்கும் பிபிசி செய்தியை விட வேகமாக நடந்ததை பரப்பிவிட்டான் அவன்.
அடுத்தநாள்,
“என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்க? இனிப்பு சாப்பிடாதன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குற. இப்போ நான் கேக்குறதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குற.” என்று அதிபன் கோபமாக கேட்க, மேசையின் மீது அமர்ந்து காலை ஆட்டியவாறு ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்த ரித்வி, “இப்போ உனக்கு என்ன தான் வேணும்? ஜிலேபி சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ற மேன்.” என்று சலிப்பாக கேட்டாள்.
அவளை முறைத்தவன் அவளின் கையிலிருந்த ஜிலேபியை பிடுங்கி, “நேத்து ராத்திரி யாதவ் கூட படத்துக்கு போனியா என்ன? அப்பா எப்படி உங்க இரண்டு பேரையும் சும்மா விட்டாரு? நிஜமாவே யாதவ் உன்கூட சாதாரணமா பழகுறானா? நம்ப முடியல்லையே…” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, “ஸப்பாஹ்… எத்தனை கேள்வி?” என்று பெருமூச்சுவிட்டவாறு அவனுடைய எல்லா கேள்விகளுக்குய் பூம்பூம் மாடு போல் தலையாட்டி வைத்தாள் அவள்.
யோசனையில் புருவத்தை சுருக்கியவன், அறையிலிருந்து தனது கேள்விகளுக்கு பயந்து ரித்வி வெளியே செல்வதை கவனித்து, “ரித்வி… ரித்வி…” என்று அழைத்தவாறு பின்னால் துரத்தி வர, அடுத்தநொடி சட்டென்று நின்று எதிரே வந்தவளை புரியாது பார்த்தான்.
அதிபனின் அறைக்கு ஓடி வந்த வைஷ்ணவி, “மாமா, அங்க சந்து…” என்று மூச்சுவாங்கியவாறு ஏதோ சொல்ல வர, அவளின் பதட்டமான முகத்தை புரியாத பார்த்த இருவரும் ஹோலுக்கு ஓடினர். அங்கு சந்திரன் முகத்தில் காயத்துடன் இதழில் இரத்தம் வழிய சோஃபாவில் அமர்ந்திருக்க, மொத்த குடும்பமுமே பதறிவிட்டனர்.
அடுத்தகணம் முதலுதவி பெட்டியை எடுத்து வந்த அதிபன், அவனின் காயத்திற்கு மருந்திட, காயத்தை தொடும் போது உண்டான வலியில் சந்திரன் லேசாக கத்தும் போது அழுவது என்னவோ அவனின் இரட்டை சகோதரன் இந்திரன் தான்.
“எவன்கிட்ட போய் அடி வாங்கிட்டு வந்த? இதுக்கு தான் சொல்றது, அடுத்தவன் விஷயத்துல மூக்கை நுழைக்க கூடாதுன்னு… சொல்றதை கேட்டா தானே பொறுக்கிபயல்!” என்று சகாதேவன் கத்த, ஆண்டாளோ சந்திரனின் பக்கத்தில் அமர்ந்து ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்க, ‘இதுங்கள விட அடிச்சவனே பரவாயில்லைன்னு தோணுது டா’ என்று உள்ளுக்குள் புலம்பினான் சந்திரன்.
“கொஞ்சம் சும்மா இருங்க சின்ன மாமா. சந்து என்னாச்சு டா?” என்று வைஷ்ணவி அக்கறையாக கேட்க, “மனசெல்லாம் புண்ணாச்சி பஞ்சுமிட்டாய்.” என்று பாவமாக சொன்னவன், “அந்த ஆரன் இருக்கான் தானே?” என்று ஆரம்பிக்க, அவனுடைய பெயரை கேட்டதும் சந்திரன் சொல்வதை புருவத்தை சுருக்கி கேட்க ஆரம்பித்தான் யாதவ்.
“நான் பாட்டுக்கு சிவனேன்னு ரோட் ஓரமா ஃபோன் பேசிட்டு நின்னுகிட்டு இருந்தேன். காலையிலேயே எவன் இவன் சோத்துல மண்ணள்ளி போட்டானோ தெரியல. இஷ்டத்துக்கு வந்து இருக்குற மொத்த கோபத்தையும் என் மேல காட்டிட்டான் அந்த ஆரன் சைக்கோ. அவன் அடிச்சது கூட பிரச்சினை இல்லை. காரணமே சொல்லாம அடிச்சது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.” என்று சந்திரன் பாவமாக சொல்ல, “நீ பதிலுக்கு அடிக்காமலா விட்ட?” என்று எகிறினான் இந்திரன்.
“அடிக்க விட்டா தானே! நான் என்ன தெலுங்கு ஹீரோவா டா, ஒரே நேரத்துல பத்து பேரை பறந்து பறந்து பந்தாட? அவனும் அவன் ஆளுங்களும் சேர்ந்து அடிச்சானுங்க டா.” என்று சந்திரன் சொல்லவும், “எவ்வளவு தைரியம் அந்த தேவகி வீட்டு பையனுக்கு! அவன சும்மாவே விடக் கூடாது அண்ணா!” என்று பொங்கினார் சகுந்தலா.
“அதிபா, ஆளுங்கள ரெடி பண்ணு! அவனையும் அவன் ஆளுங்களையும் சாகடிக்காம விட மாட்டேன்.” என்று இந்திரன் கத்த, யாதவ்வோ கோபமாக பற்களை நரநரவென கடிக்க, “அவன…” என்று பல்லைக்கடித்தவாறு ஆட்களுக்கு அழைக்க அலைப்பேசியை எடுத்த அதிபனின் கையிலிருந்த அலைப்பேசியை பறித்தெடுத்தாள் ரித்வி.
“சண்டை எல்லாம் வேணாம் அதி, இதை நிதானமா ஹேன்டல் பண்ணலாமே… இல்லைன்னா, இதை இதோட விட்டுருவோம்.” என்று ரித்வி திக்கித்திணறி சொல்ல, “என்ன சொல்ற நீ? அவன் நம்ம சந்து மேல கை வைச்சிருக்கான். சும்மா விட சொல்றியா?” என்று அதிபன் பொங்கி எழ, ரித்வி சொன்னதில் அவளை ஆழ்ந்து நோக்கினான் யாதவ்.
ரித்வியோ யாதவ்வின் பார்வையை உணர்ந்து, ‘அய்யய்யோ! இவருக்கு சந்தேகம் வந்திருச்சி போலயே! நேத்து நான் ஆரன் கூட பேசினதை பார்த்த போது கூட எதுவும் கேக்கல. இன்னைக்கு இவர் பார்வையே சரியில்லையே…’ என்று நினைத்து உள்ளுக்குள் பதற, சரியாக அவனும், “ஆமா ரித்விகா, நேத்து ராத்திரி தியேட்டர் வாசல்ல வச்சி ஆரன் உன் கூட என்ன பேசிக்கிட்டு இருந்தான்?” என்று கேட்க, அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
“அது… அது வந்து…” என்று அவள் தடுமாற, மஹாதேவனோ புருவத்தை நெறித்து அவளை நோக்க, அதற்குள் சகுந்தலா தன் பாட்டிற்கு அவளை திட்ட ஆரம்பித்துவிட்டார்.
“ஓஹோ! இது தான் சங்கதியோ? அதானே பார்த்தேன். இந்த சிறுக்கி அந்த குடும்பத்து பையன் கூட எல்லாம் பழகுறாளா? அவன் கூட உனக்கென்னடி பேச்சு? இப்போ கூட பார்த்தீங்களா அண்ணா, அந்த பையனுக்கு சபோர்ட்டுக்கு வர்றா. யாருக்கு தெரியும்? உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்றாளோ என்னவோ?” என்று நேற்று யாதவ்வுடன் அவள் வெளியில் சென்ற கோபம் எல்லாவற்றையும் சேர்த்து நாக்கில் நரம்பில்லாது அவர் பேச, ரித்விக்கோ கண்கள் கலங்கிவிட்டது.
“அப்படி… அப்படி எல்லாம் இல்லை மாமா. இவங்க வண்டிய நிறுத்த போனதும் நான் தனியா நின்னுகிட்டு இருந்ததை பார்த்து தான் அவங்க கூப்பிட்டு பேசினாங்க. அதுவும், அவங்க வீட்டு பொண்ணு உத்ரா என் க்ளாஸ் தான். அவள விட வரும் போது என்னை அடிக்கடி பார்த்திருக்காங்க. அந்த பழக்கத்துல தான் மாமா பேசினாங்க.” என்று ரித்வி அழும் குரலில் சொல்ல, “ஓ…” என்று மட்டும் சொன்ன யாதவ்வின் புருவங்களோ யோசனையில் சுருங்கியது.
சகுந்தலாவோ அப்போதும் ஏதோ பேச வர, “அம்மா…” என்று அவரை அடக்கினாள் வைஷ்ணவி.
“சந்திரன அடிச்சதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகனும்.” என்று அதிபன் கோபத்துடன் சொல்ல, “இந்த பிரச்சினைய இதோட விட்டுருங்க. மாறி மாறி அடிச்சிக்கிட்டு பிரச்சினைய வளர்க்காம இனிமேலாச்சும் அடுத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்க. இதை எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன்.” என்று அழுத்தமாக சொன்ன மஹாதேவனின் பார்வையோ யாதவ்வின் மீது படிந்தது.
ரித்விக்கோ மனதில் பாரம் ஏறிய உணர்வு! அறைக்குள் அடைந்து கதவை சாத்தி, அதன் மேலே சாய்ந்து நின்றவள் ஓவென்று அழுக ஆரம்பித்தாள்.
‘ஏன் கடவுளே எனக்கு இந்த நிலைமை? ஏன் என்னை இப்படி ஒரு சிக்கல்ல விட்ட? நான் பண்றது மாமாவுக்கு தெரிஞ்சாலே ரொம்ப வருத்தப்படுவாங்க. அய்யோ…’ என்று அழுதவளின் கண்ணீர் அவளின் அலைப்பேசியில் மறைத்து வைத்திருந்த அவளின் தாய்தந்தையின் புகைப்படத் திரையின் மீது பட்டு தெறித்தது.
இப்படியே சில நாட்கள் நகர,
அன்று, “வாவ்! எவ்வளவு அழகா ஒரு பொண்ணு ஒரு பையன் மேல வச்சிருக்க காதலை எடுத்துக் காட்டியிருக்காங்க. புரிதல் இருப்பின் பிரிதல் இருக்காது. நல்ல கருத்து!” என்று எழுத்தாளர் மீரா கிருஷ்ணனின் புதிய நாவல் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த ரித்வி, அதில் நாயகி தன் காதலை சொல்லும் காட்சிகளை ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தான் அன்று யாதவ் மீதான தன் காதலை உணர்ந்ததிலிருந்து அவனிடம் காதலை சொல்ல தவித்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா!
அந்த நாவலில் எழுத்தாளர் ஒரு பெண்ணின் காதலின் உச்சகட்ட அளவை அழகாக எடுத்துக்காட்டியிருக்க, கதைக்குள் ஆழமாக புகுந்து வாசித்தவள், புத்தகத்தை மூடி வைத்து நேராக சென்று நின்றது என்னவோ யாதவ்வின் அறை முன் தான்.
‘இன்னைக்கு இவர்கிட்ட நம்ம காதல சொல்லியே ஆகனும். எப்படி சொல்லலாம்?’ என்று யோசித்தவாறு கதவை தட்டச்சென்று பின், ‘அய்யய்யோ! பயமா இருக்கே… என்னை பத்தி என்ன நினைப்பாங்க? ஒருவேள, மாமாகிட்ட போட்டு கொடுத்துட்டா? ஆத்தீ! வேணாம்.’ என்று பயந்து திரும்பி நின்றுக் கொண்டவள் எப்போதும் போல் அவனின் அறை வாசலில் முன் நின்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
சரியாக மீண்டும் அறை நோக்கி திரும்பும் போது எதிலோ மோதி நின்றவள், நெற்றியை தடவியவாறு ‘அம்மா… எவன் டா திரும்புற கேப்புல முன்னாடி சுவர கட்டினது?’ என்றவாறு நிமிர, அவளெதிரே பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு விறைப்பாக நின்றிருந்தான் யாதவ்.
அவனைப் பார்த்தவளுக்கு பயத்தில் வாயில் வார்த்தைகளே வரவில்லை. “அது… அது வந்து…” என்று ரித்வி திக்கித்திணற, “என்ன? இப்போ தான் பேச கத்துக்குறியா?” என்று கேலியாக கேட்ட யாதவ் தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து, “வெளில போகலாமா?” என்று கேட்க, அவளோ ‘ஆங்’ என்று பேந்த பேந்த விழித்தாள்.
அவளின் பாவனையில் அவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வர, எதையும் முகத்தில் காட்டாது, “போகலாம்.” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு முன்னே செல்ல, ‘என்ன இவரு நம்மகிட்ட ஒரு வார்த்தை கேக்கல?’ என்று அதிர்ந்து விழித்தவள் அவன் பின்னாலே குடுகுடுவென ஓடினாள்.
இவள் அவனின் பின்னாலே ஹோலுக்கு ஓடவும், வெளியிலிருந்து மஹாதேவன் வரவும் சரியாக இருந்தது. வந்தவருக்கோ இதழ் முழுக்க புன்னகை!
“கார்த்தி, வெளில போறியா ப்பா? போகுறதுக்கு முன்னாடி உன் கூட கொஞ்சம் பேசனும்.” என்றவாறு அவர் சோஃபாவில் அமர்ந்து மற்றவர்களையும் அழைக்க, யாதவ்வோ அவருக்கெதிரே அமர்ந்து தன் தந்தையை கேள்வியாக நோக்கினான்.
“நீ வீட்டுக்கு பாதுகாப்பா வரனும்னு கோவில்ல வேண்டுதல் வச்சிருந்தேன். கூடவே, நீ வந்ததும் நம்ம ஊருக்கே விருந்து கொடுக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன் ப்பா. அதான் இன்னும் மூனு நாள்ல வேண்டுதலை நிறைவேத்திட்டு ஊராளுங்களுக்கு விருந்து போட்டுரலாம். ஊரே திருவிழாவா இருக்க போகுது.” என்று மஹாதேவன் சொல்ல, மொத்த குடும்பத்தாரின் முகத்திலும் புன்னகை அரும்பியது. யாதவ்வை தவிர…
அவரை சலிப்பாக பார்த்தவன், “இதெல்லாம் எதுக்கு? நான் என்ன போர் செஞ்சிட்டா வந்திருக்கேன்? இதெல்லாம் தேவையா அப்பா?” என்று கேட்க, “என்ன யாதவ் நீ? நீ வந்ததை செலப்ரேட் பண்ண வேணாமா? நான் கூட பார்ட்டி பண்ணலாம்னு ஏற்கனவே ப்ளான் பண்ணேன். இந்த விருந்தோட கொண்டாடிட வேண்டியது தான்.” என்று உற்சாகமாக சொன்னான் அதிபன்.
இந்திரன், சந்திரன் கூட அதிபனுக்கு ஆமா சாமி போட, அடுத்து மஹாதேவனின் பொடி வைத்த பேச்சிலும், பார்வை சென்ற திசையையும் சந்தேகமாக பார்த்த யாதவ்விற்கு மனதில் பல கேள்விகள் எழுந்தன.
-ஷேஹா ஸகி