emv6
emv6
எனை மீட்க வருவாயா! – 6
“விலகிய ஒன்றோடு,
ஒன்றிக்கொண்டு குதூகலிக்க ஏங்குவதும்,
அகல விரும்பாத ஒன்றை,
வெட்டி விலக்கி வைப்பதுமாய்…
காதல் கண்ணாமூச்சி களைகட்டுகிறதே!”
ஜெகன் வெளிநாட்டிற்கு சென்றதும், பணிகள் அவனுக்கான நேரத்தை விழுங்க, அதற்கேற்ற வருமானத்தை ஈட்டத் துவங்கியிருந்தான்.
அவ்வப்போது பெற்றோரிடம் அலைபேசியில் பேசிக் கொள்வான். சகோதரன் அருண் அழைக்கவே, இயல்பாக பேச்சைத் துவங்கியவனுக்குள், புதிய வீடு கட்டுவதைப் பற்றிய பெற்றோரின் பேச்சு நினைவில் வந்திட, அதைப் பற்றிக் கேட்டான்.
“அருணு! வீடு கட்டணும்னு அப்பா சொன்னாரே! அதப்பத்தி, நீ என்ன நினைக்கிற!” என்று கேட்டதுதான் தாமதம். அவன் தனது கருத்தை அண்ணனிடம் தயங்காமல் பகிர்ந்து கொண்டதோடு, தான் அதைப்பற்றி பெற்றோரிடம் கூறியதையும் சொல்லிவிட்டான்.
அருண் கூறியதிலிருந்து, தற்போது இருக்கும் வீடே தங்களுக்குப் போதுமானது என்பதும், திருமணமாகி வரக்கூடிய பெண்கள் அந்த பட்டிக்காட்டில், எவ்வளவு காலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது தெரியாமல், பணத்தைக் கொட்டி அந்த கிராமத்தில் வீடு கட்டுவதென்பது அறிவீனம் என்பதும், பிள்ளைகளின் படிப்பு இத்யாதிகளை யோசித்தால், இனி வரும் காலத்தில், அங்கிருப்பது சரி வராது என்பதும் புரிய வந்திருந்தது.
தன்னைவிடச் சிறியவனுக்கு தோன்றியது, தனக்கு ஏன் தோன்றவில்லை என யோசித்தவன், மேலும் சில விசயங்களைப் பற்றி பேச எண்ணினான். ஆனால் இன்றே அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டாம் என நினைத்து, அன்றைய பேச்சை நிறைவு செய்திருந்தான்.
தன்னைவிடச் சிறியவனானாலும், இத்தனை தூரம் யோசித்திருக்கிறானே என தம்பியை மெச்சிக் கொள்ள மட்டுமே ஜெகனால் முடிந்தது.
மூத்தது மோழை, இளையது காளை என்பது ஜெகனுக்கு புரியாமல் இருக்கலாம். இயற்கை நியதி என்று, ஒன்று உண்டல்லவா! அதன்படி, விவேகமும், புத்திசாலித்தனமும் மூத்தவனைக் காட்டிலும் இளையவனிடம் கூடுதலாகவே கொட்டிக் கிடந்தது.
……………………………………….
இளம்பருவத்தின் இதயம் தொடும் உல்லாச உணர்வான காதல், அனைவருக்கும் இலகுவாய் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும், அதனை வாழ வைக்கும் வழி அறியாமல் சிதைத்தவர்கள் சிலர், தொலைத்தவர்கள் பலர். திருமண பந்தம் கூடி, களித்து இன்புற இயலாமல், காதலைக் கொன்று, விரக்தியில் வீணே வாழ்பவர்களும் உண்டு.
சிதைத்த பட்டியலில் தானும் சேர்ந்ததை எண்ணி, சோர்ந்ததோடு, மனதிற்குள் குமைந்து போயிருந்தாள் திவ்யா.
கிருபாவிடம் தனது முடிவைக் கூறியபோது, அவனிடம் இத்தனை ஒதுக்கத்தை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை திவ்யா.
முன்பெல்லாம் தான் பேசியதை ஒதுக்கி, அவனது எண்ணம்போல தன்னை நெருங்குவதும், பேசுவதும், அடாவடிச் செயலில் ஈடுபடுவதுமாக நடந்து கொண்டிருந்தவனை பார்த்திருந்தவளுக்கு, தற்போதைய முற்றிலும் மாறுட்ட அவனது செயல் மாபெரும் ஏமாற்றத்தைத் தந்திருந்தது.
சாதாரணமாகக்கூட திவ்யாவிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான் என்பதைவிட, திவ்யா இருக்கும் இடத்தில் இருப்பதையே விழிப்போடு தவிர்த்தான் என்பதே சரியாக இருக்கும்.
நேருக்கு நேர் சந்திப்பது என்பதே இல்லாமல் போயிருந்தது. ஆய்வக வகுப்புகளில் ஒரே தொகுதியின் கீழ் பயிலச் சென்ற தருணங்களின்போதும், கண்டுகொள்ளாது தவிர்த்தான்.
முன்பெல்லாம் ஆய்வக வகுப்புகளில், அத்தொகுதியில் விடை வராமல் காத்திருப்பவர்களுக்கு உதவுவது, அதனைச் சாக்கிட்டு, திவ்யாவிடம் வந்து ஏதேனும் பேசுவது, வம்பு வளர்ப்பது என்றிருந்தவன், அவன் வந்து செல்வதே தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்தான்.
கிருபா, தன்னை நெருங்கிய தருணங்களில், சுற்றம் என்ன நினைக்குமோ? தாயிற்குத் தெரிந்தால் என்னாகும்? தோழமை வட்டம் தன்னை எப்படிப் பேசும்? கல்லூரியில் விசயம் அறிய வரும்போது, பிறர் என்ன நினைப்பர்? இவ்வாறான சிந்தனைகளைக் கொண்டு, தன்னையே வருத்தப்படுத்திக் கொண்டிருந்தவளுக்கு, தனது எண்ணத்தை பகீரங்கப்படுத்தியது முதல், அவன் ஒட்ட ஒதுங்கியது உயிரை வதைத்தது.
அது முன்னதைக் காட்டிலும், மிகவும் கொடுமையாக உணர்ந்து தவித்தாள்.
கிருபா எனும் ஆடவன் வந்த ஓரிரு நாள்களில், தன்னை அவனின் நினைவுகளின் வசமாக்கிக் கொண்டபோது எழுந்த சந்தோசத்தைக் காட்டிலும், அவனது அன்பு இனி தனக்கில்லை என்பதனை யோசித்ததும், உண்டான துயரத்தின் அளவு பன்மடங்காய் தெரிந்தது.
கிருபா இனி தன்னை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டான்… எனும் எண்ணமே அவளைக் கொன்று தின்றது.
துயரம் தன்னை துரத்தும் வேதனையை சகிக்க இயலாமல், தன்னையே நொந்தாள். கைவிட்டுப் போகுமுன் இருந்த மனம் தற்போதின்றி, சுயபச்சாதாபத்தில் இருந்தாள் திவ்யா.
புதிதாய் வாங்கிய ரோரிட்டோ பேனாவை, யாருமறியாமல் திவ்யாவின் முன் வைத்துவிட்டு, அவள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழையதை, அவளது கையிலிருந்து பிடுங்கி உரிமையோடு தனது பாக்கெட்டில் வைத்தபடி நகர்ந்த, அவனது அடாவடியை பெண் தற்போது எதிர்பார்த்தாள். ஆனால் மாறாக, அமைதியாய் இருந்து, தன்னை அசட்டை செய்தவனை எண்ணியே ஓய்ந்து போனதாய் உணர்ந்தாள்.
யாரும் வருமுன்னே அவனோடு பேசலாம் என வருபவளுக்கு, தினந்தோறும் ஏமாற்றமே எஞ்சியது. பெரும்பாலும் தாமதமாகவே தோழர்களோடு வகுப்பிற்குள் வந்தான். அப்படியே தனித்து வந்துவிட்டாலும், கிஞ்சித்தும் அவளது புறம் நோக்கவில்லை.
முன்பெல்லாம் எதேச்சையாக அவள் திரும்பும் தருணங்களிலெல்லாம் தன்னை ஊடுருவி உயிரைத் தொடும் பார்வை பார்த்தவன் எப்படிக் காணாமல் போனான் எனத் தேடிக் களைத்தாள். அவனின் நினைவடுக்கில் தான் தற்போது இல்லை என்பதை இலகுவாக ஏற்றுக் கொள்ள இயலாமல் தவித்தாள் திவ்யா. உயிர்வலியை உணர்ந்த தருணமது.
கிருபா, இயன்றவரை திவ்யாவைத் தவிர்க்கும் முயற்சியில் வெற்றி காணத் துவங்கியிருந்தான். ஆனாலும், சில சறுக்கல்களை, சாதூர்யமாகச் சமாளித்து வலம் வந்தான்.
“என்ன மச்சான்.. என்னாச்சு”
“ப்ச்சு” எனும் ஒற்றை வார்த்தையில், தனது அதிருப்தியைச் சொல்லி, நண்பர்களின் வாயை அடைத்திருந்தான். ஆனாலும் அவனுக்குப் பிடித்த திவ்யாவைப் பற்றி பிறர் தவறாகவோ, சாதாரணமாகவோகூட கருத்துகளை பகிர, பேச யாரும் விழையவில்லை.
அப்படி ஒன்றிரண்டு நபர்கள் துவங்கியபோது, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, வலக்கையை அவர்களின் முன் உயர்த்திக் காட்டி, நிறுத்து எனும் செய்கையின் வாயிலாக அதை நிறுத்தியிருந்தான்.
அகமதிப்பீட்டுத் தேர்வு நடந்து முடிந்து மதிப்பெண்கள் வந்திருந்தது. அனைத்திலும் கிருபா நல்ல மதிப்பெண்கள் வாங்கியதை, வகுப்பாசிரியர் வந்து பகிர்ந்து கொண்டபோது, எதையும் உணரும் நிலையில் திவ்யா இல்லை.
தனது இடம் கைவிட்டுப் போனதையே கருத்தில் கொள்ள இயலாத நிலையில் திவ்யா இருந்தாள். கயல்தான், “ஏய், என்னாச்சுடீ. வேணுனே உன் ஆளுக்கு விட்டுக் குடுத்திட்டபோல!” கிண்டலடிக்க
முன்பானால் முறைப்பு, அல்லது திட்டு என இருக்கும் திவ்யா, யாரையோ கயல் கேள்வி கேட்பதுபோல சிவனே எனக் கடந்தாள்.
கடந்த சில தினங்களாகவே கயல், திவ்யாவைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
“என்னடீ. ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையா?”
“…”
“எங்கிட்ட சொல்லுடீ!”
“…”
“கல்யாணத்துக்கப்புறம், ஊடலுக்குக்குப்பின் கூடலுக்கு இப்பவே பிராக்டீஸாடீ!”
“…”
“கண்டுக்காமலேயே காதலை வளக்குறீங்களாடீ!”
துளைத்த கேள்விகளை, துயரத்தோடு கடந்தாள். எதைச் சொல்வாள். அனைத்தையும் தான்தான் தனது தயக்கத்தின் காரணமாக எடுத்த முடிவால், இன்று இந்நிலைக்கு வந்து நிற்கிறேன் என்று எப்படி அவளால் கூற இயலும்.
அமைதியை ஆயுதமாக்கி, அந்த கூர்வாளால் தனது நினைவுகளை, மனதை, எண்ணத்தை கூறுபோட்டு, ஊமையாய் அழுது களைத்தாள். உள்ளமெங்கும் நோவு கண்டதைப்போல வேதனை இருக்க, அது உடல் தசைகளை உருக்கி, உடம்பை வற்றச் செய்தது.
உடலில் மாற்றம் தெரியத் துவங்கியிருக்க, “என்ன செய்யுது திவ்யா?” என தாய் முதல், சுற்றம் அனைவரும் கேள்வி கேட்டு நச்சரித்தனர்.
“தெரியலையே” என்பதையே காரணம் தெரிந்திருந்தும், பதிலாக்கினாள்.
பொது மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்தார் ஈஸ்வரி.
“படிப்பு, படிப்புன்னு டென்சனாகாம, ரிலாக்சா அப்ரோச் பண்ணுங்க. பூட் ஸ்கிப் பண்ணாதீங்க. ஸ்டடீஸ்ல மொத்தமா சேத்து வச்சி கஷ்டப்படாதீங்க. அன்னைக்கு பாடத்தை, அன்னைக்கு படிக்கிறமாதிரி மாத்திப் பாருங்க! லேட் நைட் தூங்கப் போறதை அவாய்ட் பண்ணுங்க!” என மருத்துவர் சில ஆலோசனைகளோடு, சத்து மாத்திரைகள் போன்றவற்றைப் பரிந்துரைத்தார்.
ஒதுக்கமோ, சுணக்கமோ, கலக்கமோ, இழப்பின் சுவடோ, எதுவுமின்றி வலம் வந்த மகளை சந்தேகிக்க முடியாமல், ஈஸ்வரி உண்மையில் படிப்புச் சுமையினால் மகள் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்றே நினைத்திருந்தார்.
ஈஸ்வரி பத்து படிக்கும்போது காதல் கொண்டு, மிகவும் குறுகிய காலத்திலேயே திருமணம் எனும் கூட்டிற்குள் ஒடுங்கியவராயிற்றே.
சில நுட்பங்களை அறிந்து கொள்ள இயலாதவரால், மகளின் நிலையை சரியாக கணித்திட இயலாமல் தடுமாறினார்.
ஆனாலும் ஆரம்பத்தில் திவ்யாவின் மீது எழுந்த சந்தேகத்தை இன்றுவரை ஒதுக்கினார் இல்லை. விக்கியைக் கொண்டு அவ்வப்போது தனது சந்தேகத்தைக் கேட்டு, அதற்கான விடையை அறிந்து கொள்கிறார்.
விக்னேஸும், தனது ஓய்வு நேரத்தை திவ்யாவைக் கண்காணிப்பதற்கென செலவழித்தான். சந்தேகம் கொள்ளும்படியான எந்த செய்தியும் அவனுக்குக் கிட்டாததால், அதையே ஈஸ்வரியிடமும் பகிர்ந்து கொண்டான்.
‘சந்தேகப் படற மாதிரி எந்த ஆக்டிவிடிஸும் இல்ல அத்த. அது உண்டு அது வேலை உண்டுன்னு எப்பவும்போலதான் காலேஜூலயும் இருக்கு’ என்ற விக்கியின் வார்த்தைகளை மலைபோல நம்பி இருந்தார் ஈஸ்வரி.
இடையில் வந்த திவ்யாவின் அண்ணனும், “என்ன படிப்சு…! கோல்ட் மெடல் வாங்கறேன்னு, ஓவரா படிக்கறபோல!”
“போண்ணே! உனக்கு எப்பப் பாத்தாலும் கிண்டல்தான்” திவ்யா
“அத வாங்க, நீ முதல்ல உயிரோட இருக்கணும். அது தெரியும்ல!”
“ஏண்டா புள்ளையப் பாத்து, அவச்சொல்லாச் சொல்ற!” என ஈஸ்வரி மகனை முதுகில் ஒன்று போட்டார்.
முதுகைத் தடவிக் கொண்டவன், “பின்ன என்னம்மா. இது இப்டியே போனா.. கடைசியில என்னாகும். அதச்சொன்னா, என்னையவே குத்தம் சொல்லு!”
இதுபோன்ற உரையாடல்களைக் கடந்து வந்தாலும், மனதிலிருந்த வேதனையை விட்டு, விலகும் வழி தெரியாமல் இருந்தாள் திவ்யா.
கிருபா ஒதுங்கியதிலேயே உலகம் இருண்டது போலிருந்தது. தன்னை இனி அவன் சாதாரணமாகக் கூட ஏறிட மாட்டானா எனும் ஏக்கம் திவ்யாவைத் தின்றது.
ஏதேனும் மாறுதல் வந்து, தன் மனம் விரும்பியவனுடன் இணக்கமாய் பொழுதைக் கழித்திட மாட்டோமா என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளுக்காய் ஒரு மாதம் காத்திருந்தாள் திவ்யா.
திவ்யாவின் வகுப்பில் படிக்கும் மாணவி சுலேகாவின் சகோதரிக்கு திருமணம் என வீட்டிலேயே வந்து பத்திரிக்கை வைத்திருந்தாள்.
அவளின் வகுப்பு மாணவிகள், சுலேகா, மற்றும் அவளின் சகோதரி, இதற்குமுன் கடந்த வருடத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது, திவ்யாவின் வீட்டில் வந்து தங்கியிருந்து, கண்டு களித்துச் சென்றிருந்தனர்.
அந்தப் பழக்கத்தின் காரணமாக உரிமையோடு வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்திருந்தாள் சுலேகா.
“கண்டிப்பா வந்திருங்கம்மா. காலையில மாப்பிள்ளை வீட்ல கல்யாணம். சாயந்திரம் நம்ம வீட்ல வரவேற்பு. ரெண்டு இடத்துக்கும் வந்திருங்க. அக்கா நேருல வர முடியாததால எங்கிட்ட சொல்லி விட்டுச்சு. குடும்பத்தோட வந்திரணும்” கண்டிப்பாய் கூறிவிட்டு சென்றிருக்க, ஈஸ்வரியும் ஆமோதித்திருந்தார்.
திருமணம் பக்கத்து கிராமத்தில். அன்று கல்லூரியில் மொத்தமாக விடுப்பு எடுக்க முடியாது என்பதால், அனைவரும் மாலையில் பெண் வீட்டிற்கு சென்று வர முடிவு செய்திருந்தனர்.
மெலிந்திருந்தாலும், மிதமான ஒப்பனையில் அழகாய் இருந்தாள் திவ்யா. திருமண வீட்டிற்கு அனைவரும் சென்று வர உத்தேசித்து, அதற்கேற்ப கிளம்பி வந்திருந்தனர்.
கிருபா, தனது தந்தை புதியதாக வாங்கித் தந்த ஸ்ப்ளெண்டர் வகை பைக்கிலேயே அன்று கல்லூரிக்கு வந்திருந்தான். மாலை வரவேற்பு முடிந்து, புகைவண்டியில் கிளம்ப தாமதமாகும் என நினைத்தவன், பைக் இருந்தால் வசதியாக இருக்கும் என்றதும், வீட்டில் பல பத்திரங்கள் கூறி, அவனை அனுப்பி வைத்திருந்தனர்.
ஆடவர்கள் அனைவருமே கிருபாவின் நிலையை அதிசயமாய் பார்த்தனர். ஏனெனில், அந்தக் கல்லூரியில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களிடம் கூட யாருக்கும் சொந்தமாக பைக் இல்லை. தந்தையுடையதைத்தான் இதுவரை தேவையின்போது எடுத்து பயன்படுத்துவார்கள். ஆனால் கிருபாவிற்கென அவர்கள் வீட்டில் வாங்கிக் கொடுத்திருப்பதை எண்ணி, “மச்சான் நீ ரொம்ப ப்ளஸ்டுடா”
“புரோ… குடுத்து வச்சவரு நீங்க” என்பதான கமெண்ட்கள் காலை முதலே கிருபாவிற்கு வந்தது.
வெளியூர் பெண்கள் காலையில் கல்லூரிக்கு வரும்பொழுதே, திருமண வரவேற்பிற்கேற்ற வகையில், உயர்தர சில்க் சேலைகளை உடுத்தி வந்திருந்தனர். திவ்யாவும் அதேபோல அமர்க்களமாக வந்திருந்திருந்தாள்.
அன்றைய வகுப்புகள் பெரும்பாலும் உடுத்தி வந்திருந்த ஆடைகளைப் பற்றியும், யார் எத்தனை வசீகரமாய் உள்ளார்கள் என்கிற பட்டிமன்றத்திலேயே நிறைவடைந்திருந்தது.
திவ்யா அவ்வப்போது யாரும் பாராவண்ணம் கிருபாவைக் கவனிக்கவே செய்தாள். கிருபா எதேச்சையாகக்கூட தனது பக்கம் திரும்பாமல் இருந்தது மனதை வதைத்தது.
மாலையில் கல்லூரி முடிந்ததும், தோழி ஒருத்தியின் வீட்டிற்கு சென்று டச்சப் செய்து கொண்டு வரவேற்பிற்கு கிளம்பியிருந்தனர். தோழியரோடு அந்நாளை செலவழிக்க, நேரம் போனதே தெரியவில்லை.
ஆண்கள் அனைவரும் ஒருங்கே சேர்ந்து ஒட்டிக்கோ, கட்டிக்கோ ராம்ராஜ் வேஷ்டியில் கலக்கினர். காணவே அத்தனை இளமைத் துள்ளலோடு இருந்தது அந்த வேளை. அன்றைய தினத்தை அனைவரும் இணைந்து குதூகலமாக்கியிருந்தனர். சற்று நேரம் திருமண வீட்டில் இருந்தனர். அதன்பின், அருகே இருந்த பண்ணைக்கு நண்பர்களை அழைத்துச் சென்று, அவர்களுக்கு சந்தோசம் எதிலோ, அதைக் கொண்டாடித் தீர்த்தனர்.
திவ்யாவிற்கு கல்லூரி பேருந்தில் பயணம் செய்த அனுபவம் மட்டுமே. தனித்து அவளது கல்லூரிக்கு சென்று வந்த அனுபவமில்லை. ஆகையினால், தோழிகளிடம், “என்னை மட்டும் பஸ்ல ஏத்திவிட்டுட்டு போயிருங்கடீ!”
“அப்ப வா! சீக்கிரம் கிளம்பு!”
ஏழு பதினைந்துபோல சுலேகாவிடம் சொல்லிக் கொண்டு, மற்றொரு தோழி வீட்டில் வைத்திருந்த கல்லூரி பேகை எடுத்தபடி விரைந்தனர்.
அரைமணித் தியாலம் காத்திருக்க, மற்றவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்திட, ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பியிருந்தனர்.
இறுதியாக, திவ்யா மட்டும் திக்கு தெரியாமல் நின்றிருந்தாள். நேரம் எட்டு மணியை நெருங்க, பதற்றம் சூழ்ந்தது.
‘ஐயோ! அம்மா வேற, படிச்சி படிச்சு சொல்லுச்சே. பத்திரமா வந்திருவியா, இல்லைனா நான் வந்து உன்னைக் கூட்டிட்டு வரவாடீனு கேட்டுச்சே. நாந்தான கூடப் படிக்கறதுங்களை நம்பி வேணானு சொன்னேன்’ மனமெங்கும் பதற்றம் சூழ, புலம்பலோடு நின்றிருந்தாள்.
பேருந்து பற்றிய விளக்கம் அனைத்தும் கேட்டறிந்து கொண்டிருந்தாலும், நேரம் செல்லச் செல்ல தொண்டையை அடைத்தது.
இன்று வீட்டிற்கு பத்திரமாய்ச் சென்று சேருவேனா என்கிற கலக்கம் வேறு.
தெரிந்த முகங்கள் யாரும் இல்லை. அனைவரும் சென்றிருந்தனர். தன்னுடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பைக்குகளில் இவர்களுக்கு முன்பே கிளம்பியதையும் பார்த்திருந்தவளுக்கு, சோர்ந்து வந்தது.
சுலேகாவிற்கு அழைக்கலாம் என்றால் கையில் அலைபேசி இல்லை. காயின் போனில் பேசலாம் என்றால், சுலேகாவின் வீட்டு அலைபேசி எண், தாயின் அலைபேசியில் மட்டுமே பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது எந்த பயனும் இல்லை.
இரவு தரமான உணவு உண்டிருந்தும், மயக்கம் வரும்போலிருந்தது திவ்யாவிற்கு. அவளைக் கடந்து சென்ற அவ்வூர் மக்கள், அவளை வெறித்துப் பார்ப்பதுபோலத் தோன்றியது.
பெண்கள் பெரும்பாலும் அங்கில்லை. ஆண்கள் மட்டுமே வரும் பேருந்துகளில் இருந்து இறங்கிச் சென்றனர். தான் இதற்கு முன்பே சுலேகாவின் வீட்டிலிருந்து கிளம்பி வந்திருக்க வேண்டும் என தன்னையே நொந்து கொண்டாள்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும், வெளியில் இருந்த பொருள்களை உள்ளே எடுத்து வைக்கத் துவங்கியிருந்தனர்.
பயம் தொற்றிக் கொண்டது. கடவுளே என இறைவனை நோக்கிப் பிரார்த்தித்தவளுக்கு, சுலேகாவின் வீட்டிற்குச் செல்லும் வழியும் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்டுச் செல்லலாமா என்றால், அவளின் பெயரைச் சொன்னால், “யாரு மக” என்று கேட்டார்கள்.
“இன்னைக்கு கல்யாணம் நடந்துச்சே” என்றவளிடம்
“இந்த ஊருல ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒன்னு ரெண்டுனு, இன்னைக்கு மட்டும் மொத்தம் ஏழு கல்யாணம்மா. அதுல, இது யாரு வீட்டுக் கல்யாணம்” அதற்கு பதில் கூற இயலாமல் தடுமாறினாள் திவ்யா.
அதேநேரம் பைக்கில் கடந்தவனைக் கண்டவளுக்கு, கண்ணில் ஒளி வந்தது. ஆனால் அவன் காணாமல் செல்கிறானே என பதறி, “கிருபா…..” என அழைத்தாள்.
அவளின் குரலே வெளி வரவில்லையே. இத்தனை வேகமாகச் செல்பவனுக்கு, தான் குரல்வளைக்குள் கூப்பிட்டது எப்படிக் கேட்கும். நொந்தபடியே திரும்பியவளின் அருகே, எதிர்பாரா வானவில்லைப்போல, பைக்கில் வந்து நின்ற கிருபாவை ஆவலாய் நோக்கினாள்.
வேஷ்டியில் களையாய் இருந்தான். அதனை ரசித்தபடியே, “நீ போன ஸ்பீடுக்கு நான் கூப்பிட்டது கேட்டுச்சா!”
“இந்த நேரத்தில இங்க யாருடா நம்ம பேரைக் கூப்பிடறதுன்னு பாத்தா, நீ!” ஆச்சர்யமாகக் கூறியவன், “இன்னும் இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்க. மத்தவங்கள்லாம் எங்க?” சுற்றிலும் பார்த்தபடியே கேட்டான் கிருபா
விசயத்தைக் கூறியவள், “ஆஃப் அன் ஹார்க்கு ஒரு பஸ் இருக்குனு சொன்னாங்க. நான் ஒன் அவரா நிக்கிறேன். ஒரு பஸ்கூட காணோம். இனிமே வருமானும் தெரியலையே” புலம்ப
வண்டியிலிருந்து இறங்கியவன் அருகே சென்று விசாரிக்க, இதற்கு முன் வரவேண்டிய பேருந்தில் பழுது காரணமாக வரவில்லையென்றும், அடுத்து அரைமணித் தியாலத்திற்குள், அந்த ஊருக்கு கடைசிப் பேருந்து இருப்பதாகவும் அறிந்து கொண்ட செய்தியை, அவளிடம் கூறினான்.
“வேற எதுவும் இல்லையாமா?” அழுதுவிடுவதுபோலக் கேட்டவளிடம்
“இல்லயாம், சுலேகா வீட்டுல கொண்டுபோயி விடவா?” கேட்டான்
“இல்லை. அம்மா திட்டுவாங்க” வீட்டில் தாயை மரியாதையில்லாமல் பேசினாலும், பிறர் முன் மரியாதையாக காட்டிக் கொள்வது அவளின் சிறப்பு
“ம்ஹ்ம்..” தனது வாட்சைப் பார்த்தவன், “வண்டி வந்தா ஏத்தி விட்டுட்டுப் போயிருவேன். வரலைனா என்ன செய்யறதா இருக்க?” குண்டைத் தூக்கி வீசியதுபோல வந்த கேள்வியில் திகைத்தவள்,
“இப்ப என்ன செய்ய கிருபா?” பாவம்போலக் கேட்டாள்.
“நீதான் சொல்லணும்!”
இதுவரை தன்னைக் கண்டாலும், தவிர்த்துச் சென்றவன் இத்தனை தூரம் தனக்காக நின்று பேசுவதே, பெண்ணிற்கு பெருத்த மகிழ்ச்சியை மனதில் விதைத்திருக்க, “நீயே கொண்டு வந்து வீட்ல விட்டுறியா?” தயக்கமாக, அதே சமயம் அதில் கட்டாயத் தொனியும் இருந்தது, கேட்டுவிட்டு, கிருபாவின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்திருந்தாள்.
“அப்டியே கடத்திருவேனோனு, பயமெல்லாம் இல்லையா?” கிருபாவும் கிண்டல் தொனியில் கேட்டான்.
“எனக்கென்ன பயம்?” தனது மனதைத் திறந்திருந்தாள்.
“ம்ஹ்ம்.. ரொம்பத் தைரியந்தான். வா… வந்து வண்டியில ஏறு!” சிரிப்போடு கூறியவன் வண்டியை எடுக்க, இனிமையான உணர்வுகள் உள்ளமெங்கும் வியாபித்திட, அவனுடன் கிளம்பியிருந்தாள்.
இருவரது பேச்சுகள், வீசிய காற்றுக்கு பாதி இரையானாலும், சளைக்காது பேசியபடி வந்தனர். பாதி காதில் விழுந்தது, மீதி காற்றுக்குள் புகுந்தது.
இடைப்பட்ட நாளின் இடைவெளியை சரிக்கட்டும் முயற்சியோ? தொலைந்த இதத்தை மீட்டெடுக்கும் உத்தேசமோ?
இருவரின் இனிமை தொடர்ந்ததா?
………………………………….