💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 05💋

20210823_161846-754c5f17

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 05💋

இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 05

“என்னையா, வினய் சொல்லுறதெல்லாம் உண்மையா?”என்று அன்னை புறஞ்சேயனை பார்த்து வினவ, 

“ம்ம்ம்” என்றான் அவன்.

“நவுருங்கடி! என் பேரன் கல்யாணமாகி முதல் முதல்ல வீட்டுக்கு வாரான். நந்தி மாதிரி குறுக்க நின்னு விசாரனை பண்ணிக்கிட்டு, கிழக்க பாத்து நில்லுங்க ரெண்டு பேரும்” என்று சிரித்துக்கொண்டே முத்தாயி பாட்டி ஆரத்தி எடுத்தார். 

“அத்தை இதோட நிப்பாட்டுங்க! உங்க மகன் வந்ததும் முடிவு பண்ணிக்கலாம்” என்றார் புறஞ்சேயனின் தாய். 

‘கட்டினாலும் கட்டினோம் கல்யாணம் என்னாமா கலகட்டுது. இனி நம்ம வீட்டுக்கு நடைய கட்டவேண்டியதான்’ என்று பியானா எண்ணிக்கொண்டாள். 

வேர்லின் வினயை பார்த்து “என்ன நடக்குது?” என்று வினவ, அவனோ ‘கொஞ்சம் அமைதியாய் இரு’ என்று சைகை காண்பித்தான்.

“அவன் வாரது இருக்கட்டும். இது என் வீடு என் இஷ்டம் பிடிக்காதவங்க வெளிய போகலாம்” என்றார் முத்தாயி பாட்டி.

“என்னம்மா… சத்தம், தெரு முனைவரைக்கும் கேக்குது என்னதான் பிரச்சினை?” என்று புறஞ்சேயனின் தந்தை புகழ்முரசன் கேட்டபடி அங்கே வந்தார். 

“வெளியூர் போனயிடத்துல இந்த பாப்பாவ பார்த்து ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டிட்டு வந்தாட்டான். அதுக்கு போய் காச்சு மூச்சுன்னு கத்துறா உன் பொண்டாட்டி, உலக மகா குத்தமா என் பேரன் பண்ணிட்டான். வீட்டுக்குள்ள விடமாட்டிங்கிறா” என்று தன் பிராதை கூறினார் பாட்டி.

“என்னம்மா சொல்லுறீங்க என் பையன் அப்படி பண்ணமாட்டான்” என்ற நம்பிக்கையில் புகழ்முரசன் கூற,

“ஹ… அந்த பொண்ணு கழுத்த பாருங்க உங்க பையன் கட்டின தாலி தொங்குது” என்று கடிந்துகொண்டார் செல்வம்.

“நீயும் சின்னவன் புத்திய காமிச்சிட்ட, உன்னோட கல்யாணத்த ஊர கூட்டி பெருசா செய்ய ஆசைப்பட்டேன். எல்லாம் ஆகாயத்துல மாளிகை கட்டுன கதையாகிறிச்சு, இதுக்கு அப்றம் எந்த அப்பாவும் பெத்தபுள்ளைய நம்பக்கூடாது” என்ற ஏமாற்றத்தில் புகழ்முரசன்.

“இங்க  பாரு நீ மட்டும்தான் வீட்டுகுள்ள வரலாம். அந்த பொண்ணு வரக்கூடாது” என்றார் செல்வம்.

“இல்லம்மா, பியானா இல்லாமா நான் வரல, பெரியவங்க மன்னிச்சி ஏத்துப்பாங்கன்னு நம்பி வந்தோம். பரவாயில்லம்மா எனக்குதான் சொந்தவீடு இருக்கே நாங்க அங்க போறோம்”

“சரிப்பா, அவன்தான் முதல்லிருந்து சொல்லுறானே ரஞ்சனாவ பிடிக்கலனு, பிடிக்காத பொண்ண கல்யாணம்  பண்ணிவைக்க பார்த்தீங்க. அதனாலதான் இவன் இப்டி பண்ணிட்டான். இதபோய் பெருசு பண்ணலாமா? அவதான் ஏதோ விவரம் இல்லாம பேசுறா நீயாவது விட்டுக்கொடுத்து போக கூடாதா,  உள்ள கூப்பிடு எவ்ளோ நேரம் வெளியே நிப்பாங்க” என்றார் பாட்டி.

“இங்க பாருங்க அந்த பொண்ணு உள்ள வந்த நான் வெளிய பேறோன்” என்று சீற்றம் கொண்டார் செல்வம்.

“நீ கொஞ்சம் சும்மாயிரு செல்வோ இவனையும் துரத்திராத, சின்னவன்தான் வெளியயிருக்கான். இவனாவது நம்மகூட இருக்கட்டும்” என்று புகழ்முரசனின் மனதும் மாறி தனது மனைவியை பார்த்து பொறுமையாக எடுத்து கூற,

“எவ்ளோ நேரம் வெளியே நிப்பீங்க உள்ள வாங்க” என்று அழைத்தார் பாட்டி.

தயங்கியபடி பியானா அப்படியே நிற்க, “உள்ளவாம்மா” என்றார் புகழ்முரசன்.

வீட்டிற்குள் வந்தவர்களை பாட்டி பூஜையறைக்கு அழைத்துச்சென்று விளக்கேற்ற வைத்தார். 

அதன்பின் தாயை சமாளிக்கும் முயன்றான் புறஞ்சேயன். “இவங்க தான் என்னோட அம்மா பேரு செல்வம், எங்க வீட்டு செல்வம்” என்று கொஞ்சினான்.

“கைய எடுத்துட்டு போடா, கூட்டிட்டு வந்தவ முக்கியமா போயிட்டல, பாவம் ரஞ்சனா, நீயும் உன் தம்பியும் ஏமாத்தீட்டிங்க. இனி என் அண்ணன் மூஞ்சில எப்டி முழிப்பேன்?” என்று கவலையை தெரிவித்தார் செல்வம்.

“ஏஏ… இந்த ரெண்டு கண்ணாலத்தான் டீ, உங்க நொண்ணே மூஞ்சி முழிக்கனும்” என்றார் பாட்டி.

“ஆமா அத்தை, இதுக்கு மேல எனக்கென்ன மரியாதை இங்க, நான் கிளம்புறேன்” என்று பொறிந்தாள் ரஞ்சனா.

“ஆமாடீ, உன் அண்ணன என் பேத்திய கல்யாணம் பண்ணி இன்னும் வம்சமே தழைக்கல, சொந்தத்துல கட்டி வைக்கா வேணாம்னு  எவ்ளோ சொன்னேன் கேட்டீங்கலா என் பேச்ச, இப்போ மூலைல முடங்கிக்கிடக்குறது என்னமோ என் பேத்திதானே, நல்ல வேளை என்பேரனாவது தப்பினானே அது போதும்” 

“என்னப்பா, உன் கைல கட்டு போட்டுயிருக்கு!?” என்று வினவினார் புகழ்முரசன்.

“அது ஒன்னுமில்ல ப்பா மெஷின்ல தெரியாம  கைய வைச்சுட்டேன் லைட்டா கீறு விழுந்துட்டு இன்னும் ரெண்டுநாள்ள சரிஆகிரும்” என்று சமாளித்தான் புறஞ்சேயன்.

“கவனமா இருப்பா, பாரவாயில்ல உனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டியா, கடைசிவரைக்கும் இதோ மாதிரி சந்தோசமா இருக்கனும்  அது போதும். பாப்பா வீட்டுக்கும் தெரியாமதான் கல்யாணம் நடந்துச்சா, அவங்க வீட்ல நான் வந்து பேசவா?” என்று அக்கரையுடன் விசாரித்தார் புகழ்முரசன்.

புறஞ்சேன் தடுமாற, “எங்களுக்கு யாருமில்லை அங்கிள். நானும் அக்கியும் மட்டும்தான் என் பேரு வேர்லின் அக்கா பேரு பியானா” என்று கூறினாள் வேர்லின்.

“ஓஓ நீங்க ரெண்டு பேரும் க்றிஸ்டியனா?” என்றாள் ரஞ்சனா.

“ஜாதி, மதம், குலம், கோத்திரம்  இதெல்லாம் பார்க்க வேணாமா, இதுலயும் இதுங்க அநாதை இதெல்லாம் எங்கபோய் முடியுமோ தெரியல, நான் எல்லாம் புகுந்த வீட்டுக்கு வரும்போது  நூறு பவுன் சீதனமா எடுத்துக்கிட்டு வந்தேன். இத பாரு வெறுங்கையும் வீசுனகையுமா வந்துருக்கு, எங்க வீட்டு கௌரவம் என்ன ஆகும்?” என்று வசைபாடினார் செல்வம்.

“போதும் செல்வோ, நீயும் இப்டிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தே மறந்துறாத, நீ வரும்போது நான் இப்டிதான் பண்ணேனா, உங்க வீட்ல ஒன்னும் நூறு பவுன் குடுக்கல முக்கால்வாசி என் மகன் வாங்கிக்கொடுத்தது. இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? போனபோகுதேன்னு சும்மாயிருந்தேன் அவ்ளோதான்” என்று  கண்டித்தார் பாட்டி. 

“விடுங்கம்மா, உங்களுக்கு யாரும் இல்லேன்னு நினைக்காதீங்கம்மா நாங்க இருக்கோம்” என்றார் புகழ்முரசன், பியானாவையும் வேர்லினையும் பார்த்து. 

“அப்பா வேர்லினும் இங்கயே இருக்கட்டும்” தயக்கமாக கூறினான் புறஞ்சேயன்.

“அதுக்கென்ன ப்பா இங்கே இருக்கட்டும் படிப்பு செலவெல்லாம் நானே பார்த்துக்கிறேன்” என்றார் புகழ்முரசன்.

“அங்கிள் ரொம்ப தேங்க்ஸ், என் தங்கச்சி செலவெல்லாம் நானே பார்த்துப்பேன்” என்று தாழ்மையுடன் கூறினாள்  பியானா.

“பார்த்தீர்களா  என்னாமா நடிக்கிறான்னு, நம்ம வீட்டு பொண்ணாயிருந்தா அங்கிள்னு கூப்பிடுவாளா உரிமையோட மாமான்னு கூப்பிடுவா” என்று செல்வம் குறை கூறினார்.

“நீ அப்பான்னு கூப்பிடுமா” ஆசையோடு புகழ்முரசன் கூறினார். 

கண்களில் கண்ணீருடன், சரி ப்பா” என்றாள் பியானா. 

“சரிடா நான் கிளம்பிறேன்” என்று வினய் கூறிவிட்டு அலுவலகத்தை நோக்கி புறப்பட்டான்.

“சரிமா இந்த புடவையெல்லாம் கசகசனு இருக்கும் மாத்திட்டுவாங்க” என்றார் முத்தாயி பாட்டி.

புறஞ்சேயன் அறையை காண்பிக்க புடவையை மாற்றி லெகின் டாப் என அணிந்துக்கொண்டாள். அதே போல் புறஞ்சேயனும் உடையை மாற்றிக்கொண்டான். கீழே வந்தவர்களுக்கு பாட்டி பால் பழம் கொடுத்தார். பின்னர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிகளை பெற்றுக்கொண்டனர். செல்வம் ஆசிர்வதிப்பதாகயில்லை. ரஞ்சனாவோ மனதளவில் திட்டித்தீர்த்தாள். அத்தோடு புகழ்முரசனும் அவரது வேலையை பார்க்க கிளம்பிவிட்டார். செல்வமும் ரஞ்சனாவும் அடுக்களைக்குள் நுழைந்துகொண்டனர். 

“என் செல்ல முட்டாயி, அப்பாய் நீங்க மட்டும் இல்லேன்னா அவ்ளோதான் ரொம்ப நன்றி அப்பாய். நான் போயி அக்காவ காமிச்சிட்டு வாரேன்” என்றான் புறஞ்சேயன். 

“சரி பேரா” என்றார் முத்தாயி பாட்டி. 

வேர்லினயும் பியானாவையும் அழைத்துக்கொண்டு அவனது அக்கா லக்ஷதா இருக்கும் அறைக்கு சென்றான். லக்ஷதாவுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் இன்னும் குழந்தை செல்வம் இல்லை. கணவன் வீட்டில் மலடி எனும் பட்டத்தை கொடுக்க சமூகம் அவளை மூலைக்குள் முடக்கிவிட்டது. கணவன் அவ்வப்போது பார்த்துவிட்டு செல்வது வழக்கம். 

“அக்கா…” என்று புறஞ்சேயனின் குரல் கேட்டு கதவை திறந்தாள் அவள். தம்பி கூறும் முன்னரே திருமணமான விடயத்தை அறிந்துகொண்டாள். இவ்வளவு நேரம் நடந்த விவாதத்தின் சத்தம் லக்ஷதா இருக்கும் அறையின் கதவை தாண்டி அவள் காதை அடைந்தது.

“தம்பி, முதல் முதல்ல கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்திருக்க எதுக்குடா என் மூஞ்சில முழிக்கிற?” என்றாள் லக்ஷதா. 

“அட ச்சீ வாயா மூடு, ஆசிர்வாதம் வாங்கலாம்னு வந்தா பேசுற பேச்சப்பாரு” என்று கடிந்தான் புறஞ்சேயன்.

அவனது அக்காவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர் இருவரும்.

பியானாவை பார்த்து, “பாரவாயில்ல டா பொண்ணு சூப்பர், என் தம்பி செலக்ஷன் சும்மாவா” என்று மெச்சிக்கொண்டாள் லக்ஷதா. 

“சரிக்கா நான் நாளைக்கு தம்பிய பார்க்க போறேன். நீயும் கிளம்பிவா” என்று தனது அக்காவை அழைத்தான் புறஞ்சேயன். 

“இல்லைடா நீங்க போய்ட்டு வாங்க” 

“இல்ல  இல்ல அக்கி நீங்களும் வாங்க. இல்லேன்னா நானும் உங்க கூட இருக்கேன்” என்றாள் வேர்லின் லக்ஷதாவை பார்த்து கூறினாள். 

லக்ஷதாவிற்கு மிக்க மகிழ்ச்சி இப்படி ஒரு தங்கையா என்று, 

“சரி மா நானும் வாரேன். பியானா, ரஞ்சனாக்கிட்ட ரொம்ப கவனமாயிரு அவ கையால எதும் குடுத்த சாப்பிட்டுறாத” என்று அன்பாய் கூறினாள்.

பியானாவும் “சரி அக்கா” என்றாள்.  மூவரும் அறையைவிட்டு வெளியை நகர்ந்தனர். நீள்சாய்வு இருக்கையில் மூவரும் அமர்ந்துக்கொண்டனர். பாட்டியுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க,

அடுக்களைக்குள், “அத்தை, மாமாவ கட்டிவைக்கிறேன்னு ஏமாத்திட்டீங்கல்ல, இதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்” என்று செல்வத்தின் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தாள் ரஞ்சனா.

“அப்போ அவள துரத்திட்டு உன்னை கல்யாணம் பண்ணிவைக்க சொல்லுறியா?” என்று அங்கலாய்ந்தார் செல்வம்.

“ஆமா அத்தை, அவங்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடக்ககூடாது. நேரம் சரியில்ல நாள்கிழமை சரியில்ல, நல்ல நேரம் நாங்களே பார்த்து தாறோம். இப்டி ஏதாவது சொல்லி நிறுத்துங்க. மாமா எனக்கு வேணும்” என்று அவள் திட்டத்தின் முதற்படியை எடுத்துவைத்தாள் ரஞ்சனா.

“அப்போ எங்க அத்தை இல்லாத நேரமாதான் சொல்லனும் இல்ல அவங்களே சீக்கிரமா நல்ல நேரம் பார்ப்பாங்க” என்றார் செல்வம். 

நீள்சாய்வு இருக்கையில் சலப்பிக்கொண்டிருந்தவர்களை  ஒரு நோட்டம்விட்டவாறு குளம்பியுடன் சென்றார் செல்வம். குளம்பியை கொடுத்துவிட்டு நகராமல் அங்கேயே நிற்க,

“மதியனத்துக்கு சமையல் எல்லாம் ஆச்சா?” என்று கேட்டு செல்வத்தை அந்த இடத்திலிருந்து துரத்தினார் பாட்டி. 

“நீ ஏன் பையனாட்டம் முடிய இப்டி வெட்டி வைச்சிருக்க, இது உன் அக்கா புருசன முறையோட மாமான்னு கூப்பிடனும் அதவிட்டுட்டு சாரு சோறுன்னு கூப்பிட்டு இருக்கா” என்றார் பாட்டி.

பியானாவிற்கு பாட்டியை மிகவும் பிடித்தம் ஆயிற்று. “அவ எப்பவும் அப்டிதான் பாட்டி, குளிச்சிட்டு தலைய துடைக்க மாட்டா அதனால முடி வளர்க்கிறதில்ல” 

“அது என்னோடு ஸ்டைலு, மாமான்னு கூப்பிட ஏதோ மாதிரி இருக்கு மாம்ஸ்னு கூப்பிடுறேன்” என்றாள் வேர்லின். 

“சரிப்பா, மதியானம் சாப்பிட்டு தூங்குங்க. சாயந்தரம் கோவிலுக்கு போய்டுவாங்க ரெண்டு பேரும்” என்றார் பாட்டி.

“சரி அப்பாய்” என்றான் புறஞ்சேயன். 

மதியவுணவிற்கு அமர்ந்தனர்.  வடை, பாயசம் என்று தடபுடலாக ஒன்றும் செய்யாமல் சாதம்,சாம்பர்,ரசம் எண்ணெய் கத்திரிக்காய், அப்பளம் விருந்தென்று கூற இவ்வளவுதான் . இதை பார்த்த பாட்டி, “யேன் செல்வோ நீ வீட்டுக்கு  வந்த புது மருமகளா, முதல் முதல்ல விருந்த சாப்பிடுறவங்களுக்கு ஒரு இனிப்பு செய்யனும்னு தெரியாது? நானே போய் கேசரி கிண்டுறேன்” அடுக்களைக்குள் சென்று கேசரி பாயாசமும் செய்தார். 

பாட்டி வாழையிலையில் உணவை பரிமாறினார். வேர்லினிற்கும் பியானாவிற்கு சாதம் தொண்டைகுழியில் இறங்குவதே கடினமாயிற்று. அதன் பின்னர் புறஞ்சேயன், பியானா,வேர்லின்  மூவரும் குட்டித்தூக்கம் இட்டனர்.

ஒரு மணிநேரத்தில் உறக்கம்கலைந்து தூய்மையாகி கோவிலுக்கு கிளம்பினர். 

பாட்டி வேர்லினிற்கு தாவணியை உடுத்தி அழகுபடுத்த வேர்லினோ வெட்கத்தில் அறையிலே அமர்ந்துக்கொண்டாள்.   

“அக்கி நான் வரல நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டுவாங்க” என்று கூறினாள் வேர்லின். 

பியானோ,”ஏய், குட்டி இப்போதான் ரொம்ப  அழகாக இருக்கா!” என்றாள் வேர்லினை பார்த்து.

பாட்டி நல்லநேரத்திற்குள்  கோவிலுக்கு கிளம்புமாறு கூற, அவர்களும் கிளம்பினர். 

வேர்லினை ரஞ்சனா முறைத்தபடி இருக்க, “என்ன, அக்கா கூட நீயும் அப்டியே இங்கேயே இருக்கலாம்னு பார்க்குறியா?” 

“என்ன, நீதான் முறைப்பொண்ணா  ரொம்ப முறைக்காதா? ரெண்டும் முழியும் வெளிய வந்துரும்” என்று கேலிக்கையான பதிலடியை கொடுத்தாள் வேர்லின். 

***** 

கோவிலுக்கு சென்று வாசலில் புறஞ்சேயன்   பூவை வாங்கிக்கொடுக்க அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள். 

“பூவ தலைல வைச்சுக்கோ பியானா” என்றான் புறஞ்சேயன்.

“எப்டி சார் வைக்கிறது பின் இல்லையே?” என்றாள் பியானா.

“இதுக்கு எதுக்கு பின்னு திரும்பு நானே வைச்சிவிடுறேன்” என்று முல்லைசரத்தை எடுத்து கேசங்களுக்ககடையில் சொறுகிவிட்டான் புறஞ்சேயன். 

 “சார், எப்டி நீங்க ப்ரே பண்ணுவீங்க?”

“உங்கள மாதிரி ஆலேலூயா, கர்த்தரே, ஆண்டவரே இப்டி எல்லாம் கத்த மாட்டோம். ரெண்டு கையையும் இப்டி வச்சி மனசுக்குள்ள வேண்டிக்கனும்” 

“ஆலேலூயா இதெல்லாம்  எப்டி தெரியும் சார்?”

“ஆலேலூயா இதெல்லாம் டார்லிங் படத்துல பார்த்திருக்கேன் கருணாஸ் சார் இப்டி தான் சொல்லுவார். பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே…” என்று புறஞ்சேயன் ராகம் இழுக்க..

இவள் பயத்தில், “போதும் போதும் சார்..”

கால்களை கழுவி உள்ளே சென்றனர். தெய்வசிலைகளை பார்த்த பியானா, “சார் ஏன் யானனை உருவத்த வைச்சி பிள்ளையார்னு  போட்டுருக்காங்க” 

“அச்சோ கன்னத்துல போட்டுக்கோ அதெல்லாம் சாமி யானைனு சொல்லக்கூடாது. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு அவதாரம் இருக்கு அதெல்லாம் அப்புறம் சொல்லுறேன்” என்று வரிசையாக கடவுளை வணங்கிக்கொண்டு வந்தனர்.

‘யானைமுகத்தானின் தம்பி ஆறுமுகத்தானை நம்பி, என் பொண்டாட்டிய அழச்சிட்டு வந்துருக்கேன். இதுக்கு அப்றம் எல்லாம் நல்லாதா நடக்கனும் அதெல்லாம் உன்கிட்டவே பொறுப்பு தாரேன். கவனமா பார்த்துக்கோ, என்னையும் கொஞ்சம் கவனி முருகா..’ என்று பிராத்தித்தான் புறஞ்சேயன் முருகனை நம்பி.

அப்படியே  சுவாமிதரிசனம் செய்து அனைவரின் பேரில் அர்ச்சித்த பிறகு புறஞ்சேயன்  ஒரு தொட்டில் வாங்கி அங்கிருக்கும் மரத்தில் கட்டினான்.  

“ஏன் சார், இப்டி தொட்டில் கட்டுறீங்க?” 

“நமக்கு சீக்கிரம் குழந்த பிறக்கனும் அதுக்குதான்!” என்று விளையாட்டா புறஞ்சேயன் கூற பியானா கோபித்துக்கொண்டாள். 

“நான்..நான்தான் முதல்லே சொன்னேன் மறந்துடீங்களா?” என்று பியானா பயந்துகொண்டு கூற, 

“கூல்.. கூல் நமக்கு கட்டல அக்காக்கு கட்டினேன், நீ பயப்பிடாத உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன்” என்று சீண்டலாக கூறினான் புறஞ்சேயன்.

“நான் யாருக்குபயமில்ல” என்று ஒருபுறமாக திரும்பிக்கொண்டாள்.

சிறிது நேரம் கோவிலில் அமர் அணிந்திருந்தனர்.  முக கவசத்தை நீக்கினாள் பியானா, “ஏய் மாஸ்க் போட்டுக்கோ கொரொனா ஜாஸ்தியா ஆகுது” என்றான் புறஞ்சேயன்.

முக கவசத்தை அணிந்துவிட்டு “கிளம்புவோம் சார்” என்றாள் பியானா. “சரி” என்று முச்சக்கரவண்டியில் வீட்டை வந்தடைந்தனர்.

“அத்தை, அவங்க வாராங்க எப்டியாவது அந்த பொண்ண ரூமுக்குள்ள போக விடாதீங்க” என்று வத்தி வைத்தாள் ரஞ்சனா. 

“ம்ம்ம் நான் பாத்துக்கிறேன் நீ உள்ள போ” என்றார் செல்வம். 

“ஏன் ப்பா… இவ்ளோ நேரம் உங்களுக்கு என்ன சாப்பாடு செய்றதுன்னு பார்த்துட்டுயிருக்கேன்” என்று செல்வம் பொய் பாசமழை பொழிய, 

“ஐய்யோ ம்மா நாங்க மசால் தோசை வாங்கிட்டு வந்துட்டோம். அப்பாய், வேர்லின் எங்க?”என்று கேட்டான் புறஞ்சேயன். 

“அத்தை மாத்திர போட்டு தூங்குறாங்க. எல்லாரும் சாப்டாங்க நீங்களும் சீக்கிரம் சாப்பிடுங்க” என்று விளம்பினார் செல்வம்.

தம்பதியர் உண்ணும் வரை அவ்விடத்திலே காத்திருந்தார் செல்வம். அவர்களும் உணவருந்தி முடிந்து தங்களது அறையை நோக்க,

“தம்பி, சின்னஞ்சிறுசுங்க ஏதோ அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க அதுக்காக எல்லாத்துக்கு அவரசப்பட முடியுமா?அது அதுக்கு நேரங்காலம் எல்லாம் அமையனும் அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருங்க. நாளைக்கு ஜோசியர வர சொல்லிருக்கேன். அது வரைக்கும் இந்த பொண்ணு என்கூட தூங்கட்டும்” என்று கூறினார் செல்வம்.

பியானாவுக்கோ மகிழ்ச்சி, 

‘ஹாஹா இதுக்கு பேர்தான் ஆப்பு, எப்டியாவது பியானாவ நம்ம கூட தூங்க வைக்கனும்’ மனதிற்குள் எண்ணிக்கொண்டான் புறஞ்சேயன்.

“அடபோங்க ம்மா கல்யாணத்துக்கு நல்ல நேரம் நாங்களே பார்த்துக்கிட்டோம். கல்யாணத்துக்கு அப்றம் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நல்ல நேரம் பார்த்து நாங்களே முடிச்சிட்டோம்” என்று நாசுக்காய் கூறிவிட்டு புறஞ்சேயன், பியானாவை பார்த்து  “ஏய் சீக்கிரமா ரூம்முக்குள்ள வந்து சேரு” என்று உல்லாசமாக கூறிவிட்டு அறைக்குள் சென்றான். 

செல்வத்திற்கு இதற்கு மேல் என்ன கூறுவதென்று தெரியவில்லை. தம்பதியர்களுக்கு தாம்பத்யம் முடிந்துவிட்டது என்று கணக்கிட்டு கொண்டார். 

பியானா வேர்லினை பார்த்துவிட்டு  புறஞ்சேயன் இருக்கும் அறையை நோக்கினாள். அவனோ இவள் வருகைக்கு காத்திருந்தான்.

“ஏன், சார் பொய் சொன்னீங்க?” 

“நீ வேற, இதெல்லாம் அந்த  சதிகாரி ரஞ்சனாவோட வேலையாதான் இருக்கும். உனக்கு அவள பத்தி தெரியாது. பொய் சொன்னது பிடிக்கலன்னா சொல்லு சொன்ன பொய்ய உண்மையாக்கிறலாம்” என்று முகத்தில் குறும்புடன் கூறினான் புறஞ்சேயன். 

“ஆன்டிக்கிட்ட போய் உண்மைய சொல்லிருவேன் சார்” என்று சீற்றத்துடன் கூறினாள் பியானா.

“அப்டி எல்லாம் பண்ணக்கூடாது என் செல்லம்ல சரி அதவிடு, என்னை உண்மையா லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா, என் மேல நிஜமாவே லவ் வந்துச்சா?” என்று அவன் ஆர்வம் கலந்த சந்தேகமாய் பியானாவிடம் கேட்டான். 

  • *****

Leave a Reply

error: Content is protected !!