emv14

emv14

எனை மீட்க வருவாயா! – 14

 

திவ்யாவின் பேச்சை இடையுறாது, அதுவரை முகம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த கிருபா, அதன்பின் அவளது பேச்சில் முற்றிலும் மாறிப் போனான்.

“நேரமில்லை நம்மளுக்கு.  இப்டியே பின்னாடி கேட் வழியா தெருவுக்குள்ள போயி, அன்னைக்கு சுலேகா அக்கா கல்யாணத்தப்ப நீங்க எல்லாம் தோப்பு பக்கம் போனீங்கள்ல.  அங்க போயி ஒளிஞ்சிக்கலாம்.  எல்லாரும் போனபின்ன இந்த ஊரை விட்டு எங்கையாவது நாம கிளம்பிப் போயிரலாம்” என்றவளின் பேச்சில், தனது கைகளுக்குள் வைத்திருந்த அவளின் கையை பட்டென விட்டிருந்தான்.

கிருபாவின் திடீர் செயலில் மனம் பதறியவள், தானாகவே அவனது வலக்கையை ஆதரவிற்காகப் பிடிக்க வர, அவள் கையில் தனது கரங்கள் படாமல், பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

திவ்யாவிற்கு மிகவும் சோர்ந்த உணர்வு.

“என்னாச்சு கிருபா…” தயக்கமாய், குரல் வெளிவரத் திராணியற்று, மெல்லிய சத்தத்தோடு வினவினாள்.

“…” எதுவும் பேசாமல் தலையை மறுத்து அசைத்தவனைக் கண்டு

“ஏன் கிருபா? என்னாச்சு” உயிரைத் தேக்கி வினவினாள்.

“சாரி திவ்யா”

“சா…ரி… எதுக்கு” தனக்கெதிராய் எந்த முடிவும் எடுத்து விடக்கூடாதே எனும் அவசரப் பிரார்த்தனையோடு, அவனின் முகத்தில் தனது பார்வையை நிலைத்தவாறே, பதற்றத்தோடு வினவினாள்.

“எல்லாத்துக்கும்…”

“அப்டினா…” அவளின் இதயத் துடிப்பு வெளி வரைக் கேட்டது. இப்டி ஒரு பதிலை கிருபாவிடமிருந்து எதிர்பார்த்திராதவளால், கண்ணாடித் துண்டைப்போல உள்ளம் சிறு துகள்களாக நொறுங்கி சிதறியிருக்க, அதை சரி செய்திடும் வழி தனக்கு இனி இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்.

“அப்டித்தான்” முற்றுப்புள்ளி வைக்க முயன்றான்.

“அப்ப… இவ்ளோநாள் என்னை நீ லவ் பண்ணவே இல்லையா?” உயிர்வலியோடு கேட்டாள்.

“பேச ஆரம்பிச்சா, நாள் கணக்கு பத்தாது நமக்கு. இப்ப நாம இருக்கற சூழலை நல்லா யோசி.  ஆனாலும், அப்ப சொன்னதுதான் இப்பவும் சொல்றேன். இன்னும் இரண்டு வருசம், உங்க வீட்ல சொல்லி நீ வயிட் பண்ணினா, எங்க வீட்ல நம்மளைப் பத்தி என்னால பேச முடியும்.  இல்லைனா என்னால எதுவும் செய்ய முடியாது” முடிவாய்க் கூறினான்.

“அப்போ.. நானில்லாம..” என ஆரம்பித்தவளின் கமரிய(தெளிவற்ற) பேசத் துவங்குமுன் இடைமறித்திருந்தான்.

“இப்ப நானிருக்க நிலைமையில, வேற என்ன செய்யச் சொல்ற?” சட்டென சினமாய்க் கேட்டான்.

கிருபாவின் சினத்தை இதுவரை கண்டிராதவளுக்கு, இது கிருபாதானா என்கிற சந்தேகம் வேறு. இப்டி இதுவரை இருந்திராதவன், எப்படி சட்டென மாறிப்போனான் என்கிற வினாவிற்கு விடை தெரியாமல், தனது நிலையை எடுத்துக் கூற விழைந்தாள்.

“என்னால நீயில்லாம வாழ முடியும்னு தோணலைடா” பரிதாபமாய்க் கண்கள் குளமாய் நிறைந்திருக்க, அது எப்போது உடையும் என்கிற நிலையில், தனது நிலையைக் கூறினாள்.

“…” திவ்யாவின் பேச்சில் கிருபாவிற்குமே வருத்தம் தோன்றியது.  ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாது, தலையைக் கோதிக் கொண்டவன், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

“எப்டி, இப்டி மாறிட்ட கிருபா?” தனது அழுகை அவனைத் தாக்கவில்லை என்பதை உணர்ந்தவளுக்கு, இதயம் வெடித்த உணர்வு.  நெஞ்சுப் பகுதியில் காந்தாரி மிளகாப் பொடி சிதறினாற்போல காந்தியது(எரிந்தது).

“இப்பனு இல்லை, இனி எதுவும் பேச நமக்கு நேரமில்லை.  யாரும் தேடி வரதுக்கு முன்ன, இங்கருந்து நீ கிளம்பு”  உறுதியாய் பட்டெனக் கூறினான்.

“நான் போகமாட்டேன்” என சிறுபிள்ளையாய் அடத்தோடு மறுத்து, அழுதபடியே, கிருபா எதிர்பாரா நிலையில் அவனைக் கட்டிக் கொண்டவள், “ப்ளீஸ்டா.. என்னை இங்க இருந்து எப்டியாவது உன்னோட கூட்டிட்டுப் போயிருடா.  என்னால அந்த மாப்பிள்ளையக் கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது. அப்டி ஒன்னு நடந்தா நான் செத்துருவேண்டா… என்னைப் புரிஞ்சிக்கோடா.. ப்ளீஸ்..” கெஞ்சினாள்.

திவ்யா, திக்கு தெரியாத வனத்தில் தான் தனித்து மாட்டிக் கொண்டதாக நினைத்துக் கொண்டு, எதிரே கண்ட மானுட உருவம், அதாவது கிருபா என்பவன் மட்டுமே தன்னைக் காக்க, சீர் தூக்க, தனக்கு நல்லது செய்ய முடியும் எனும் மாயையில் சிக்கிக் கொண்டிருந்தாள்.

அவனையன்றி தனக்கு யாராலும், வாழ்வு, வசந்தம், மீட்சி, மகிழ்ச்சி, எதிர்காலம், இன்பம், அமைதி என எதையும் தர இயலாது என பேதை மனம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தது.

நிதர்சன நிலை உணர்ந்து கொண்டிருந்தவன், “புரிஞ்சிக்கோ டீடீ” என்றான்.

“என்னை நீ முதல்ல புரிஞ்சிக்கோடா” காதல் பிச்சை யோசிக்காமல், யாசித்தது.

“உன்னோட நிலைமைய நீதான் டீடீ உங்க வீட்ல உள்ளவங்களுக்கு புரிய வச்சிருக்கணும்.  அதைவிட்டு, திடுதிப்புனு எங்கூட வரேன்னா.. உன்னை இப்ப நான் எங்க கூட்டிட்டுப் போக முடியும்னு, யோசி முதல்ல”

“அப்ப எப்டிதான் நாம சேருரது?”

“அதுக்கான வாய்ப்பே இல்லாம, இப்ப ரெண்டு பேரும் இருக்கோம்.  முதல்ல அதப் புரிஞ்சிக்கோ.  இன்னும் படிப்பே முடியலை.  இப்ப எங்க போயி, நாம ரெண்டு பேரும் என்ன செய்ய முடியும்னு சொல்லு…”

“என்னோட உண்டியல் பணம், கொஞ்ச நகை இதையெல்லாம் இப்ப தெரியாம எடுத்துட்டு வந்திருக்கேன்டா” என தனது காலேஜ் பேகைக் காட்டியவள்,

“…நான் உன்னப் படிக்க வைக்கிறேன்டா.  எதாவது வேலைக்குப் போயிட்டே நாம மேனேஜ் பண்ணிக்கலாம்டா… ப்ளீஸ்டா” என திவ்யாவின் எதிர்கால செயல்பாடுகள் பற்றிய உரை கெஞ்சலோடு தொடர,

தலையில் அடித்துக் கொண்டே, இடைமறித்தவன், “படத்துல வர ஹீரோயின் கணக்கா நீ புரட்சி பண்றேன்னு கிளம்பினா, உங்கூட சத்தமே இல்லாம பின்னாடி வந்து, நாய் படாதபாடு பட்டு ஒரே பாட்டுல எல்லாம் நம்மால ஒன்னும் பண்ண முடியாது”

“…”

“..ஏன்னா நாம சாதாரண ஆளுங்க.  இதுக்கு நான் ரெடியா இல்லை.  பிராக்டிகலா யோசி.  இப்ப உங்கூட கூட்டு சேந்து வந்தா, கையில இருக்கறதை வச்சி, ரெண்டு பேருக்கும் கொஞ்ச நாள் நல்லா இருக்கற மாதிரித்தான் தோணும்.  ஆனா அடுத்த ஆறு மாசத்துல நாயும், பூனையும் மாதிரி அடிச்சிகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து, திரும்பவும் வீட்டுக்கு வந்தா… நல்லாவா இருக்கும்.  அப்டி நாசமாப் போக என்னால முடியாது.  என்னை முதல்ல ஆள விடு”

கிருபாவின் கருத்துகள் எதுவும் திவ்யாவிற்கு உணர முடியாத நிலை.

நிறைந்திருக்கும் எந்த பொருளுக்குள்ளும் மேற்கொண்டு, எதையும் வைக்கவோ, ஊற்றவோ வைக்க முடியாதல்லவா?

அந்த நிலையில்தான் திவ்யா இருந்தாள்.  அவளுக்குள் முழுமையாக நிறைந்திருந்த மன அழுத்தம், மேற்கொண்டு எதையும் கேட்கவோ, அதைத் தீர ஆராயவோ விடவில்லை.

சுமை தூக்கியவன், நீண்ட நெடிய தூரம் சுமந்து வந்ததை இறக்கி வைக்க, ஏதுவான இடம் தேடுவதுபோலத்தான் திவ்யாவும் தற்போது இருந்தாள்.

அவளுக்கு, தன் மனம் விரும்பாத ஒருவனுடனான திருமணம் எனும் கசப்பான உண்மையிலிருந்து வெளிவர என்ன செய்யலாம் என்பது மட்டுமே யோசனையாக இருந்தது.

அவளிடம், நிதானமாய் அவளின் முடிவை, மனதை கேட்டறியக் கூடிய வகையில் எந்த உறவும் இல்லை. அவளின் மனதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணாத மனிதர் மத்தியில், அழுத்தம் கூடி, திணறிப் போயிருந்தவளுக்குள், சாதாரண மனித மனங்களுக்கான சிந்தனையை, செயலை, நல்லதொரு முடிவை எதிர்பார்க்க எவ்வாறு இயலும்?

கிருபாவைப் பொருத்தவரை, இதுதான் இலக்கு எனும் தீர்மானத்துடன் இருப்பவன். இதுவரை இருந்தவன்.

யாரும் அவனிடம் எதையும் திணிக்கவோ, வதைக்கவோ இல்லை.  ஆகையினால் கிடைத்த பொழுதினில் தன்னைத் தானே தேற்றி, நிதானப்படுத்திக் கொண்டு, யோசிக்க ஏதுவான அவகாசம் கிடைத்தது.

அவனது இலக்கை, அடையத் தடையாய் இருக்கும் எதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளா மனநிலையை வளர்த்துக் கொண்டிருப்பதால், தன்னை அவனால் இலகுவாக, தான் கொண்ட முடிவினில் இருந்து எளிதாய் மாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது. 

இக்கட்டில் இருப்பவனிடம், எதிர்காலத்தைச் சார்ந்தோ, தன்னம்பிக்கை சார்ந்தோ, தத்துவம் சார்ந்தோ, வார்த்தைகளை கூறினால் எப்படி எடுபடும்.

இக்கட்டிலிருந்து வெளிவர ஏதுவான வார்த்தையையோ, செயலையோ எதிர்பார்த்திருக்கும் உள்ளத்திற்கு, அமிர்தத்தை கொடுத்தாலோ, சிரஞ்சீவியாய் வாழும் வழி கூறினாலும் ஏற்றுக் கொள்ள இயலுமா?

அப்படிப்பட்ட இக்கட்டான மனநிலையில் இருந்த திவ்யா, “இப்ப உங்கூட என்னைக் கூட்டிட்டுப் போவியா, மாட்டியா?” முடிவாய்க் கிருபாவிடம் கேட்டாள்.

தலையை அசைத்து மறுத்தவனைக் கண்டவள், பிசாசு பிடித்தாற்போல அவனது சட்டையைப் பிடித்து இழுத்து,  “ஏண்டா இப்டி மாறிட்டே.. அப்ப நீ என்னை லவ் பண்ணாம ஏமாத்திருக்க” அழுகையோடு அவனை அடித்தவளை, தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாய்ப் பிரித்து, அவளிடமிருந்து தள்ளி நின்று கொண்டான்.

“இனி பேசறதுக்கோ, கேக்கறதுக்கோ, எதுக்கும் நேரமில்லை. நீ உங்கம்மா சொன்ன மாதிரிக் கேளு டீடீ” முடிவாய் உரைத்தவன், எதிரில் நின்ற உருவத்தைக் கண்டு, ‘வந்துட்டா… கையில ஒரு ரிவால்வர் இருந்தா.. ரிவால்வர் ரீட்டாவேதான்’ என எண்ணியவன், அவனை சரி செய்து கொண்டான்.

பிறகு, தனது சுருங்கிய சட்டையை சரிசெய்து கொண்டவன், “உங்கம்மா உன்னைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க இங்க தேடி வரதுக்குள்ள இங்கிருந்து நீ கிளம்பு” என உறுதியாய் கூறியதோடு, அவளைக் கடந்து, இனி அவளுக்கும் தனக்குமான பந்தம் எதுவுமில்லை எனும் ரீதியில் நடக்கவும், அதுவரை கிருபாவின் பின்னே நின்றிருந்தவன் அவனது விலகலில் திவ்யாவின் கண்ணில்பட, எதிரில் நின்ற விக்னேசைக் கண்டு பதறியவள், கண்களில் தாரைதாரையாய் நீர் வழிய மடிந்து உட்கார்ந்து அழத் துவங்கியிருந்தாள்.

கயலைக் கடந்து சென்ற கிருபாவை முறைத்துப் பார்த்தவள், “இப்டி ஏமாத்துவேன்னு, அப்போவே சொன்னேன்.  கேட்டாளா.  அவளே அவ தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டு இப்ப அழுறா.  உனக்கென்ன… ஜாலியா போயி என்ஜாய் பண்ணு” என்ற கயலின் வார்த்தைக் கேட்டவன், தன்னைக் கூறுவதைப்போல காட்டிக் கொள்ளாது, அங்கிருந்து அகன்றிருந்தான்.

எதிரெதிர் திசையிலிருந்து வந்த, கயல் மற்றும் விக்னேஷ் இருவரும் திவ்யாவை நெருங்கி, “முன்னயே அவனை நம்பாதனு சொன்னோம்.  நீதான் கேக்கலை” என ஒருசேரக் கூற

எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாதவள், தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

“உங்கம்மா, உன்னைக் காணோம்னு பாத்துக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க திவு.  இப்ப நீ வரலைன்னா உன்னைத் தேடி இங்க வந்திருவாங்க.  நீ எந்திரி.  கையிலிருந்து தண்ணீர் கேனில் இருந்த நீரை, திவ்யாவிடம் நீட்டி, “முகத்தைக் கழுவு முதல்ல” என கயல் அதட்ட

அதேநேரம் கயலின் கையில் இருந்த கேனை வாங்கி, மூடியைத் திறந்து நீட்டினான் விக்னேஷ்.

இருவரின் வற்புறுத்தலில், திக்கற்ற நிலையில் முகத்தைக் கழுவிக் கொண்டு, தாயிருக்கும் பகுதியை நோக்கி நடந்தாள்.

மகளின் நடையைக் கொண்டே ஏதோ சரியில்லை எனக் கணித்த ஈஸ்வரி, மகளின் சிவந்திருந்த கண்ணின் தன்மையில் அழுததையும் அறிந்து கொண்டிருந்தார்.

“உடம்புக்கு என்ன செய்யுது திவ்யா”

“…”

“திவ்யா..”

“தலைவலிம்மா”

“சரி.. வண்டியில சீக்கிரமா ஏறு”

மற்றவர்களிடம் பேசக்கூட நேரமில்லை.  ஆனாலும் விடைபெற்று அவசரமாய் வீட்டை நோக்கி கிளம்பியிருந்தார் ஈஸ்வரி.

அன்று முழுக்க படுக்கையில் சுரணையில்லாமல் திவ்யாவின் பினாத்தல் தொடர்ந்திட, பதறிய ஈஸ்வரி இரவே மருத்துவனைக்கு அழைத்துச் சென்றிட, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ட்ரிப்ஸ் ஏற்றினர்.  விடியலில் மகன் ராகேஷிடமிருந்து அழைப்பு வந்திட, மகன் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு பதறி அழைத்ததைக் கண்ட ஈஸ்வரி, “திவ்யாவுக்கு முடியலைடா.  அதான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்.  இப்போ கிளம்பிருவோம்” எனக்கூறி, அடுத்த அரை மணித்தியாலத்தில் திவ்யா சகிதம் வீடு வந்து சேர்ந்தனர்.

அதே நேரம் திவ்யாவின் அண்ணன் ராகேஷ், தங்கையின் நிலையைக் கண்டு பதறினான்.

“என்னம்மா, என்னாச்சு” வாயிலில் நின்றபடியே வினவ

“வீட்டுக்குள்ள போயி பேசிக்கலாம்” என மெதுவாய் மகனிடம் கூறியதோடு, உள்ளே நுழைந்ததுமே விசயத்தைக் கூறிவிட்டார்.

இன்னும் இரண்டே நாளில் திருமணம்.

இப்போது என்ன செய்ய முடியும்.  தாயிடம் தயவாய் கேட்டான்.  “பாக்கவே சகிக்கலை.  என்ன அவசரம்மா உனக்கு.”

“இது கத்துன கத்துல நம்ம மொகத்துல கறியப் பூசிட்டுப் போயிருச்சுனா? அதான் அவசரப்பட்டு முடிவு எடுக்கற மாதிரி ஆகிருச்சு”

“அதுக்கு, இப்டி எடுத்தோம் கவுத்தோம்னு எதுக்குப் பண்ணணும்.  அவசரப்பட்டு அந்தப் பையங்கிட்ட என்னன்னத்தையோ வேற பேசி வச்சிருக்க.  பய அத்தோட பயந்து ஓடியே போயிட்டான்போல”

“இவ பண்ண காரியத்தால, இப்டி மாட்டிக்கிட்டு முழிக்கிறா.  நான் என்னடா பண்ணேன்” ஈஸ்வரி.

அதன்பின் திவ்யா விழித்து, சாதாரண நிலைக்கு வர, அன்று மாலையாகியிருந்தது.

தமையன், தங்கையின் சோர்ந்த தோற்றம் கண்டு, வினவ, ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவள், தமையனின், “எங்கிட்ட எதுனாலும் சொல்லு திவ்யா.  உனக்காக நான் பேசறேன்” என உறுதி தர ஜெகனிடம் கூறியதை மீண்டும் ராகேஷிடம் ஒப்புவித்தாள்.

கிருபா மறுத்தும், மனம் இன்னும் அவன் பின்னே கிறுக்காய்ச் சென்றது.

தமையனோ, “நான் அவங்கிட்ட பேசி, அவன் சரினு சொன்னா, மேற்கொண்டு எப்பாடு பட்டாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டு, அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வைக்கறேன் திவ்யா. சப்போஸ் அவன் உன்னை மறுத்திட்டா, ஒழுங்கா ஈஸ்ஸு பாத்த அந்த ஆளை கல்யாணம் பண்ணிட்டு, சந்தோசமா வாழணும்.  என்ன சரியா” என தங்கையிடம் பேரம் துவங்க

ஆரம்பத்தில் அமைதியாய் இருந்தவள், பிறகு தலையை அசைத்து ஆமோதித்தாள்.

இறுதி வாய்ப்பு என எண்ணியவள், தமையனை நம்பி இன்னும் தனக்கு கிருபாவுடனான வாழ்வு அமையும் எனும் நம்பிக்கையோடு பிரார்த்தனையோடு காத்திருந்தாள் திவ்யா. தாயின் அலைபேசியிலிருந்து கிருபாவிற்கு அழைத்தான் ராகேஷ்.

பலமுறை அழைத்தும், அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

திவ்யா சோர்ந்திருந்தாள்.

ராகேஷ், தனது அலைபேசியிலிருந்து கிருபாவிற்கு அழைத்தான். அதுவரை அழைப்பை ஏற்காதவன், ஏற்றுப் பேசத் துவங்கியிருந்தான்.

அருகே திவ்யாவும் இருக்க, ஸ்பீக்கரை ஆன் செய்தவன், “நீங்க கிருபாதான”

“எஸ்.. நீங்க”

“நான் திவ்யாவோட அண்ணன் பேசுறேன்” ராகேஷ்

எதிர் முனையில் இருந்தவன், “சாரி, ராங்க் நம்பர்னு நினைக்கிறேன்” என

“நீங்க …….காலேஜ்ல படிக்கற கிருபாதான”

“ஆமா”

“….உங்களோட படிச்ச திவ்யாவைத்..” என பேசத் துவங்கும்போதே

இடைமறித்தவன், “அப்டி யாரையும் எனக்குத் தெரியாது. சாரி” என உடனே அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அத்தனை வேதனை.

“இனி என்ன பண்ணணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ”, என்றவன், தனது தலையில் அடித்துச் சத்தியம் செய்யுமாறு கூறினான்.

தங்கைக்கு தன் மீதான பாசத்தை பகடையாக்கி, அவளுக்கான உயிர் பிச்சையை, அவளிடமே கேட்டு வாங்கும் முயற்சியில் இறங்கினான்.

“அப்டியெல்லாம் சாகமாட்டேன்.  இது உம்மேல சத்தியம்” என அவனது தலையில் அடித்துச் சத்தியம் செய்த தங்கையை, அதன்பின் தனித்தே விடவில்லை ராகேஷ்.

ஈஸ்வரி வெளி வேலையாக இருக்கும் நேரங்களில் தங்கை அல்லது, தம்பி மனைவியை திவ்யாவின் துணைக்கு வைத்திருந்தார்.

…………….

திருமணத்திற்கு முதல் நாளே ஈஸ்வரி, “உன்னோட நல்லதுக்குன்னு இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சாச்சு.  நடந்ததையே நினைக்கிறதுல இனி எந்த பிரயோசனமும் இல்லை.  அதனால அவங்க வீட்ல பெரியவுக சொல்றதை அனுசரிச்சு, மாப்பிள்ளை மனம் நோகமா நடந்துக்கணும்.  வீம்பு புடிச்சிட்டு, திமிர்த்தனம் பண்ணலாம்னு நினைச்சா, அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பெடுக்க முடியாது.  இதுவரையிலும் உன்னோட விசயம் அந்த மாப்பிள்ளைப் பையனைத் தவிர வேற யாருக்கும் தெரியாது.  நீ நடந்திக்கறதைப் பொருத்து அவன் உன்னை நல்லாவே வச்சிப்பான்.  நல்ல பையன்.  எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.  ஆரம்பத்திலேயே சூதனமா இருந்தா, அவன் நீ சொல்றதை அப்டி கேட்டுப்பான்.  நீயும் சிக்கனமா இருக்கப் பாக்கணும்.  இன்னமும் நீ சின்னப்புள்ளை இல்லை.  எல்லாத்தையும் மனசுல வச்சி, போற எடத்துல எங்களுக்கு பெருமை சேக்குறியோ இல்லையோ, உன்னைய நீ அசிங்கப்படுத்திறாம, ஒழுங்கா வாழணும்” என நீண்டதொரு அறிவுரையை கூறியிருந்தார்.

அன்று மாலையில் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை சகிதமாய், கிராமத்து மக்களோடு வந்த இறங்கியிருந்தார் காளியம்மாள்.

“என்னாது, பொண்ணு மெலிஞ்சிருக்கா.. என்னா ஈஸ்வரி புள்ளையக்கூட பாக்காம அப்டி என்ன வேலை” காளி கேட்க

“அது படிக்கிறேன், படிக்கிறேன்னே இப்டி இருக்கு அத்தை.  இனி எல்லாம் சரியாகிரும்”

“ம்ஹ்.  என்னத்தா அங்க வந்து இருக்க பயமா இருக்கா.  அப்பத்தா, அய்யா, சித்தபனுக எல்லாரும் இருக்கும்போது என்ன பயம் உனக்கு” திவ்யாவிற்கு அவராக ஒன்று நினைத்து, ஆறுதல் கூறினார்.

இதழை விரித்ததோடு சரி.  ஒரு வார்த்தை யாரிடமும் பேசவில்லை திவ்யா.

ஜெகன் மிகவும் சந்தோசமாய் இருந்தான்.  காளியம்மாள், தனக்காக எவ்வளவு நாள் பெண் தேடினார் என்பதும், தனது விருப்பத்திற்கேற்ப பெண் அமையாமல், எவ்வளவு நாள்கள் விரயமானது என்பதையும், அவனால் எப்படி மறக்க முடியும்.

அப்டியொரு நிலையில், நல்ல நிறமான, படித்த, நகரில் பிறந்து வளர்ந்த திவ்யாவை விட்டுவிடும் மனநிலையில் ஜெகன் இல்லை.

வாய்ப்புகள் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிட்டாது.  அப்டி ஒரு வாய்ப்பு கிட்டியும், தனக்கானதை தவறவிட்டால், அவன் முட்டாள் என்கிற ரீதியில் ஜெகனது மனமிருக்க, திவ்யாவின் விசயத்தை பெரிதுபடுத்த விரும்பாமல், தனக்கானதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

ஜெகனுக்கு இளம் பருவ வயதில் இதுபோல காதல் வந்து போயிருந்தது.  அதனால், இதெல்லாம் அந்த வயசில சகஜமப்பா எனும் ரீதியில் தற்போது திவ்யாவின் காதலை புறந்தள்ளி, அவளை எந்த நெருடலும் இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தான்.

அடுத்தடுத்து வீட்டில் திருமணக் கூட்டம் கூடியிருந்தது. சித்தி, அத்தை இருவரும் திவ்யாவின் அருகே இருந்து கலங்குபவளைத் தேற்றி, அது வெளியே காண்போருக்குத் தெரியாதபடி அவளைப் பார்த்துக் கொண்டனர்.

இருவருக்கும் மட்டும் விசயம் முழுமையாகத் தெரிந்திருக்க, ஆளுக்கொரு பக்கமாய் நின்று திவ்யாவை யாரும் சந்தேகித்திட இயலாத வகையில் அவளின் செயல்களை ஒழுங்குபடுத்தியவாறு இருந்தனர்.

மறுநாள், ஈஸ்வரியின் நாத்தனார் குடும்பம் முன்னிலையில், கோவிலில் வைத்து திருமணம் இனிதே முடிந்திருந்தது.

கிருபாவின் காதலியாக இருந்த திவ்யதர்ஷினி, தற்போது திவ்யதர்ஷினி ஜெகனாக மாறியிருந்தாள்.

கோவிலில் திருமணம் முடிந்து, திவ்யாவின் வீட்டிற்கு வந்து சீர்வரிசையோடு, ஜெகனின் கிராமத்திற்கு பயணமாகினர்.

உடன் திவ்யாவின் அத்தை, மாமா மட்டும் வந்தனர்.

இதுவரை ஈஸ்வரியே நேரில் சென்று பார்த்திராத ஜெகனது கிராமத்தை நோக்கி, அவர்களை ஏற்றிக்கொண்ட மகிழுந்து விரைய, திருமண வைபத்தில் கலந்து கொண்ட கிராமத்து உறவினர்களை ஏற்றிய வேனும், அதன்பின் திவ்யாவிற்கு தேவையான சீர்வரிசைகள் ஏற்றிய வாகனமும் விரைந்தது.

இனியெல்லாம் சுகமாகுமா? சுமையாகுமா?

…………………………………

Leave a Reply

error: Content is protected !!