emv17a
emv17a
எனை மீட்க வருவாயா! – 17A
இரவு இதமாகவும், பகல் பொழுது வதமாகவும் கழிந்தது திவ்யாவிற்கு. எதிலும் முழுமையான மனதோடு ஈடுபட இயலாமல், திவ்யாவின் பொழுதுகள் சென்றது.
போக்குவரத்து வசதியில்லாத அக்கிராமத்திற்கு வந்து போகவே, திவ்யாவின் சுற்றம் யோசித்தது. குறிப்பாய் ஈஸ்வரி திவ்யா திருமணமாகி வந்ததற்கு ஒரு முறை வந்து சென்றிருந்தார். அவ்வளவே!
ஈஸ்வரிக்கு மருமகனைப் பற்றிய வகையில் மட்டுமே சந்தோசம். மற்ற அனைத்து விசயங்களிலும் மனவருத்தமே மிஞ்சியிருந்தது. ஆனால் அதை மகளிடம் கூறவில்லை. நேரங்கிடைக்கும் போதெல்லாம் மகளுக்கு அழைத்துப் பேசி தனது வருத்தத்தைப் போக்கிக் கொள்ள முனைந்தார்.
ஜெகனிடம் வற்புறுத்தி, தனது மேற்படிப்பின் நிமித்தமாய், அதற்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டிருந்தாள் திவ்யா.
திவ்யாவிற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பான தனது நிலைக்கும், தற்போதான தனது நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்த்து, தனது உலகமே இருண்டு போனதாய் உணர்ந்தாள்.
அவளின் நிலையை எண்ணி கழிவிரக்கம் இருந்தாலும், இதைவிட்டு ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை.
இனி இதுதான் தனக்கு. இங்குதான் இனி தனது வாழ்க்கை. இதில் எப்படி தனது பொழுதுகள் செல்லப் போகிறதோ என்கிற எதிர்காலம் பற்றிய பயம் மனதிற்குள் இருக்கத்தான் செய்தது.
எதிலும் பற்றற்ற நிலை. எதற்கு இப்படிப்பட்ட வாழ்க்கை எனும் சிந்தனைக்குரிய பதில் கிட்ட மறுத்ததால், எழுந்த மனதின் ஓய்ந்த நிலை. வயதிற்கே உண்டான எந்த ஆர்வமும் இன்றி ஏனோதானோ என்று இருந்தாள்.
கிருபாவின் இரண்டு வருட கால அவகாசம் எத்தனை தூரம் உண்மையாக இருந்திருக்கும் என சில நேரங்களில் சிந்தனை எழுந்தபோது, அவனின் இறுதி வார்த்தை நினைவுக்கு வந்து அவளை எள்ளி நகையாடியது.
‘தெரியாதுன்னு ஒரே வார்த்தையில எல்லாத்தையும் ஊத்தி மூடி கவுத்திட்டான்’ என பெருமூச்சு விட்டாள்.
தனது காதலனின் வாயிலாக உணர்ந்த ஏமாற்றத்தை, ஜெகனிடம் தனது காதலைப் பற்றிக் கூறிய தனது மூடத்தனத்தை எல்லாம் எண்ணி, அவள் மீதே எரிச்சல் மூண்டது.
‘சரியா செய்யறேன்னு நினைச்சு, ஒவ்வொன்னையும் தப்பாவே செஞ்சு, கடைசியில இங்க வந்து நிக்கதியா நிக்கறேனே’.
இருளுக்குள் தனக்கு பிடித்த எது இருந்தாலும் காண ரசிக்காதுதானே. அந்த நிலைதான் தற்போது திவ்யாவிற்குள்.
மனதில் உள்ளதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை அவளை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
அதற்கிடையே தற்போதை அவளின் புகுந்த இடத்தின் குடும்ப சூழல், அதாவது காளியின் நடவடிக்கைகள், பேச்சுகள், கிண்டல், கேலி என அனைத்துமே அவளை மிகுந்த சோர்விற்குள்ளாக்கியது.
அன்று காலையில் தலைக்கு தேய்த்து குளித்து விட்டு, முடியை சிக்கு அகற்றிக் கொண்டிருந்தபோது, வயல் வேலை முடிந்து வந்த ஜெகன், “அங்க இருந்து பாத்தப்போ அவ்ளோ அம்சமா இருந்த…! அப்டியே அள்ளிக்கலாம்போல இருக்குற!” என்றபடியே ஆசையாய் அவளின் கூந்தலை வருட,
அருகே வேலையாய் இருந்த காளிக்கு, இருவரின் நெருக்கம் நெருட, “ராத்திரி முச்சூடும் தனியாத்தான் இருக்குதுக. விடிஞ்சா. அடைஞ்சா சுத்தீலும் என்ன இருக்குங்கற நினைப்பே இல்லாம, சித்தம் போக்கு சிவம்போக்குன்னு இப்டி இருந்தா, வீடு விளங்குமா?” என்றிட
“ம்மா.. இப்ப என்ன நடந்துச்சுன்னு வாயிக்கு வந்ததைப் பேசற” என ஜெகன் கேட்டிருந்தால், திவ்யாவிற்கு மனம் ஓரளவு சமாதானமாகியிருக்கும்.
மாறாக அவனோ, மிக மெல்லிய குரலில், “நீ நம்ம ரூமுக்குப் போ. நான் அப்புறம் வரேன்” எனக் கூற
எழுந்த எரிச்சலில் அவனை விட்டுவிட்டு, அழிச்சாட்டியமாய் அதே இடத்தில் நின்று கொண்டு சத்தமாய், “கல்யாணமான புதுசுல நீங்கள்லாம் என்ன அப்பத்தா செஞ்சீங்க!” என காளியை சீண்டிவிட்டிருந்தாள் திவ்யா.
ஜெகனோ மனைவி துவங்கியதைப் பற்றி எந்த கிலேசமும் இன்றி அகன்றவன், நேராக தங்களது அறைக்குச் செல்லாது, வேலையிருப்பதைப்போல அங்கிங்கு நின்று பாவனை செய்துவிட்டு, அறைக்குள் சென்றிருந்தான்.
திவ்யாவின் இந்த அதிரடியை எதிர்பாராத காளி, என்ன பதில் கூற என ஒரு நிமிடம் தயங்கி, சுதாரித்து, “உங்களை மாதிரியெல்லாம் அந்தக் காலத்துல இல்ல. புருசனை நிமிந்து பாக்கவே எனக்கெல்லாம் ஆறு மாசமாச்சு!”
“அப்டிப் பாக்காமலேயே பத்து மாசத்துல இவங்களைப் பெத்துட்டீங்களா.. செம அப்பத்தா நீங்க!” என்றதும்,
காளிக்கு மருமகள் தன்னை கேலி செய்ததுபோலத் தோன்ற, “என்னடீ, ஏத்தமா..! யாருகிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாதா! இதையெல்லாம் உங்க ஆத்தா உனக்கு சொல்லிக் குடுக்காமையா கட்டிக் குடுத்தா!” என மருமகளிடம் நேருக்கு நேர் நிற்க
“நீங்கதான அப்பத்தா ஆரம்பிச்சீங்க! அதுக்கு எதுக்கு எங்க அம்மாவை இழுக்கறீங்க?”
“அதுக்கு! பெரியவுக ஒரு வார்த்தை கூடச் சொல்லிட்டா… பொறுத்துப் போக மாட்டீகளோ…! மிராசு மகளாக்கும் நீயீ! வாயிக்கு வாய் பதில் பேசி, உங்க ரவுச நிலைநாட்டுறீகளாக்கும்! இதெல்லாம் எனக்குப் புடிச்சிக்கிறாது சொல்லிப்புட்டேன். இன்னொருவாட்டி இப்டிப் பேசுனா, வால ஒட்ட நறுக்கிப்புறுவேன்! நறுக்கி!”
“எனக்கெங்கே வாலிருக்கு? போங்க அப்பத்தா.. உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுத்தான்!” என்றுவிட்டு தங்களின் அறையை நோக்கி நடந்திருந்தாள் திவ்யா.
“ஈஸ்வரி மக லேசுப்பட்டவனு நினைச்சில்ல, எங்குலம் விளங்க எடுத்துட்டு வந்தேன். இவ்ளோ பெரிய வாயாடியா, வம்பு புடிச்சவளா இருப்பானு, அப்போவே தெரியாமல்ல போச்சு!” எனும் புலம்பலோடு தனது வேலையில் கவனம் செலுத்த இயலாது, வீரத்திடம் இந்தப் புகாரைக் கொண்டு போகக் காத்திருந்தார் காளி.
அதற்கு மாறாய், அறைக்குள் நுழைந்த மனைவியிடம் ஜொல்லியபடி ஜெகன் “என்ன திவ்யா. வர இவ்வளவு நேரமா?” சலித்துக் கொண்டான்.
“அங்க பேசுனது உங்க காதுல விழலையாக்கும்!”
“ம்… என்ன கேட்ட!” இது வழமையான கேள்விதான்.
“எது கேட்டாலும், உங்க காதுல விழுகாதுன்னு எனக்குத் தெரியும். என்ன விசயம்” நேரடியாய் விசயத்திற்கு வந்தாள்.
“தேவதை கணக்கா இருக்க!”
“…”
திவ்யாவின் இறுகிய உடலோ, ஒட்டாத மனமோ ஜெகனுக்கு ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. ஆகையினால் ஆசைதீர, அரவணைத்து, அச்சாரத்தைப் பதிந்தபின், அன்றைய அடுத்த வேலையை கவனிக்கச் சென்றான்.
கணவன் சென்றபின் பெருமூச்சோடு, தான் கவனிக்க வேண்டிய பணியில் கவனம் செலுத்தினாள்.
………………
அனைத்திற்கும் பயந்து, பயந்து இன்னும் எத்தனை காலம் தனது வாழ்க்கை இப்படியே செல்லும் என நினைத்தவளுக்கு, வெறுப்பினால் அனைத்துமே கசந்தது.
இதுபோல சிந்தனையிலிருந்து வெளி வர எண்ணியே, மாலை நேர நடை பயிலலை தொடர்ந்திருந்தாள்.
பெரும்பாலும் அவ்வூரில் உள்ள வேலைக்குச் செல்லும் ஆண்கள், முன்னிரவிலேயே வீடு திரும்பினர். பெண்கள் சிலர் மட்டுமே வீடுகளில் இருந்தனர்.
மாலை வேளைகளில், கோயில் வரை தனித்தே வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்று வருவதை சமீபமாய் வழக்கமாக்கியிருந்தாள். அப்போது வழியில் ஆங்காங்கு இருந்த வீடுகளைக் கவனிக்க நேர்ந்தது.
பெரும்பாலும் மட்டை வேலி கொண்டே சுற்றுவேலி அங்கிருந்த அனைத்து வீடுகளுக்கும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் அவரவருக்கு தேவையான வசதிகள் செய்திருப்பது, நடந்து செல்லும்போதே, கவனித்தால் தெரியுமளவிற்கு சொற்ப வீடுகளும் இருந்தன.
அவர்கள் வீட்டை அடுத்து, வயல் வெளிக்கு செல்லும் பாதையிலும் சில வீடுகள் இருந்தது. அந்த பகுதியிலும் சில நேரங்களில் நடந்துவிட்டு திரும்புவாள்.
மருமகளின் செயலை ஆரம்பத்தில் கண்ட காளி, “பெரிய இவுக. இதும் பெரிய டவுனு. சாயந்திரமானா போனை ஒரு கையில எடுத்துக்கிட்டு நடக்கக் கிளம்பிறாக” என திவ்யாவின் காதுபடவே கிண்டல் பேசியிருந்தார்.
திவ்யா அதைப் பொருட்படுத்தாது, கையில் உள்ள அலைபேசியில் தாய், தமையன், அத்தை, சித்தி, அம்மாச்சி அல்லது நண்பன் விக்னேஷ் என யாருடனாவது பேசியவாறே, நடந்து சென்றுவிட்டு திரும்புவாள்.
பெரும்பாலும் கோவிலிருக்கும் பகுதிக்கு மட்டுமே சென்று வருவாள். கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே பசுமை என்பதை அவ்வூரில் காண முடிந்தது.
அது கோவில் நிர்வாகத்தினரின் பராமரிப்பு காரணமாக சற்றே சோலை போலக் காட்சியளித்தது. அதுவும் குளங்களில் நீர் உள்ளவரை மட்டுமே. அதன்பின் அனைத்தும் காய்ந்து சருகாகிப் போகும்.
அப்டிச் செல்லும்போது அவளைக் காண்பவர்கள், “காளியம்மா மருமவதான..! வாத்தா..! வந்ததுக்கு ரொம்ப வாட்டமா(இளைத்து) இருக்கியே! எதுவும் விசேசமா? வந்து ஒரு வாயி காபித் தண்ணீ குடிச்சிட்டு போ ஆத்தா!” என அன்பாகவே வரவேற்றார்கள்.
அனைவரிடமும் இன்முகத்தோடு மறுத்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு திரும்புவாள்.
விசேசம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே, காத தூரம் என்ன, அதற்குமேல் ஓடத் தோன்றியது திவ்யாவிற்கு.
கிருபா என்பவனே, தனது காலம் முழுமைக்குமான உற்ற உறவு என நினைத்து, சில வேளைகளில் உணர்வு வசப்பட்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்த தருணங்களையும், அதனால சிலவற்றை தான் அனுமதித்ததையும் எண்ணி, உள்ளம் அவளைக் கேலி செய்து சிரித்தது.
இதையெல்லாம் மறந்து ஜெகனுடன் தன்னால் ஒன்றி வாழ இயலுமா என்பதே அவளுக்கு கேள்விக்குறியாய் இருக்க, விசேசம் என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் இருந்தாள் திவ்யா.
ஆனால் அவ்வப்போது தனிமையில் ஜெகன், “திவ்யா.. ரொம்ப சோதிச்சா.. அப்புறம் நடக்கிற எந்தக் கஷ்டத்துக்கும் நான் பொறுப்பாக முடியாது” என சமீபத்தில் பேசத் துவங்கியிருந்தான்.
“இல்ல.. இன்னும் கொஞ்சம் டைம் குடுங்களேன்” என கெஞ்சுபவள், சில வேளையில், பயத்தோடு கணவனைப் பார்ப்பாள்.
“காஞ்ச மாடு கம்புல பாஞ்ச கதையெல்லாம் தெரியும்ல” என மோகனக் கண்ணனாய் கண் சிமிட்டிச் சிரிப்பவனை ஏனோ ரசிக்கவே தோன்றியது. ஜெகனது அருகாமை, அவளுக்குள் சிலிர்ப்பையும், ஏதோ இனந்தெரியாத உணர்வை அறிமுகம் செய்திருந்தாலும், அவன் நெருங்கும் வேளையில் இதயம் படபடவென அடித்து, குற்றவுணர்வைக் கூட்டி, அவளை ஒத்துழைக்கவிடாமல் தடுத்தது.
“இன்னைக்குப் பாஞ்சிறவா” என கண் சிமிட்டியபடி விளையாட்டாகவோ, அல்லது மறைமுகமாவோ மனைவியிடம் அனுமதியை ஜெகன் கேட்டால், அதன்பின் முகத்தைத் தூக்கி வைத்தபடியே வலம் வருபவளை, அதற்குமேல் சங்கடப்படுத்த அவனாலும் முடியவில்லை.
வார நாள்களில் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து அசதியில் விரைவாக உறங்கிவிடுபவன், வார இறுதிநாளில் வேலையின்றி வீட்டிலிருக்கும் நாள்களில், அருகே உள்ள இராசசிங்க மங்கலத்திற்கு மனைவியை உடன் அழைத்துச் செல்வது, அவளுக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொடுப்பது என ஒரு கணவனாய் அவனது கடமைகளைச் செய்தான்.
வேலைக்குச் சென்றது முதல் தரும் பணம் திவ்யாவால் சேமிக்கப்பட்டது. வாரத்திற்கு இரண்டாயிரம் அதிக பட்சம். குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு. கூடுதலாக பார்க்கும் வேலைகளுக்கான பணத்தையெல்லாம் மனைவியிடமே கொண்டு வந்து தந்தான்.
திவ்யாவிற்குத்தான் அதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாய் இருந்தது.
தயங்குபவளிடம், “தாலி கட்டியாச்சு. இனி எங்கிட்ட உனக்குத் தயக்கம்லாம் வரவே கூடாது” என்பவன்
“என்னைத்தவிர இனி யார்கிட்டயும் இதுபோல உரிமையா வாங்கத்தான் இனி நீ தயங்கனும். எங்கிட்ட இல்ல” சற்றே கடினமான குரலில் கூறியிருந்தான்.
மனைவி தன்னை ஏற்றுக் கொள்ளும் நாளிற்காக, அவனால் இயன்ற வகையில், பேச்சினாலும், செயலாலும் அவளின் உணர்வுகளை தனது பக்கமாய் ஈர்க்க வேண்டிய வகையினை, திறமையாகவே கையாண்டான்.
ஜெகன் வரத் தாமதாகும்போதுதான் அவனது அண்மையின் தாக்கம் புரியத் துவங்கியது திவ்யாவிற்கு.
தன்னை இங்கு பிடித்து வைத்திருப்பது, ஜெகனது அன்பு, ஆசையான வார்த்தைகள், அரவணைப்பான செயல்கள் என்றால் அதில் திவ்யாவிற்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை.
………………………………
இருந்த சொற்ப வீடுகளில், தங்களது வீட்டில் மட்டுமே கழிப்பறை வசதியில்லாததுபோல உணர்ந்தாள் திவ்யா.
அதை மனதில் குறித்துக் கொண்டவள், காளியம்மாளிடம் எதுவும் கேட்காமல், தனிமையில் தனது சந்தேகத்தைக் கணவனிடம் கேட்டாள்.
“அதுவா… இது தூய்மை இண்டியானு கவர்மெண்ட் ஸ்கீம் ஒன்னு போட்டப்ப, இங்க இருக்கற எல்லா வீடுகள்லயும் கட்டிக் குடுத்தாங்க!”
“அப்ப.. ஏன் இங்க மட்டும் கட்டிக் குடுக்கலை!”
“அது…” திவ்யாவிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்தான்.
“…”
“பட்டா நம்ம பேர்ல கிடையாது. அதான்!”
திவ்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதையும் கணவனிடம் கேட்க, அந்த இடம் வீரப்பெருமாளின் சித்தப்பாவின் மனைவி வழிச் சொத்து என்றும், அவர்களின் ஒரே மகளுக்கான இந்த இடத்தை தாங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தங்களின் பூர்வீக கிராமத்தில் தங்களுக்கான இடம் இருப்பதாகவும் கூறக் கேட்டு, “அப்ப இந்த இடம் உங்களுக்குச் சொந்தமில்லையா?”
“இல்லை” என தயங்கியவன், “இனி உங்கது, எங்கதுன்னு தனியா பிரிச்சுப் பேசக்கூடாது திவ்யா. இனி நம்மளோடது.. அப்டி கேக்கணும். என்ன சரியா!”
“ம்..” ஆமோதித்தவள் தலையை ஆட்ட
“எங்க அம்மா, ஐயா வீட்டோட கூட்டுக் குடும்பத்துல இருக்க மாட்டேனு பிரச்சனை பண்ணிருக்கும்போல. அப்ப எங்க ஐயா அவங்க அண்ணந் தம்பிகளே ஒன்னாத்தான் இருந்தாங்களாம்”
“…”
“சின்ன ஐயா, அவருக்குன்னு அப்ப யாரும் இல்லாததால, வீட்டுக்குள்ள எப்பவும் எங்க அம்மாவால சண்டை சச்சரவா இருந்ததைப் பாத்திட்டு, அவரு வயிஃப்போட ஊரான இங்க கிடந்த அவங்களோட இடத்தில வீடு கட்டிக்கச் சொல்லிட்டாராம். அத்தோட எங்கம்மா அப்பா ரெண்டு பேரும் வீட்டைக் கட்டிட்டு, இங்க தனிக்குடித்தனம் வந்துட்டாங்களாம்”.
“…”
“எங்களுக்குரிய பாகம் இப்பத்தான் பிரிஞ்சாங்க. இது எங்க அத்தையோடது”
“உங்க அத்தையக் கூப்பிட்டு, அவங்க அப்ளை பண்ற மாதிரி பண்ணியிருந்தாகூட, அந்த ஸ்கீம்ல டாய்லட் ஃபெசிலிட்டு இங்க க்ளைம் பண்ணியிருக்கலாம்ல?” எனக் கேட்டவளிடம்
தனது சின்ன தாத்தாவின் ஒரே வாரிசான பிரபாவதி எனும் அத்தை, தனது விருப்பம்போல மணமுடித்து சென்றுவிட்டதாகவும், அவ்வாறு சென்ற செய்தியறிந்த, அவரின் தாயார் அதிர்ச்சியில் இறந்து போனதாகவும், தாத்தா மட்டும் அதன்பின் சில ஆண்டுகளுக்குப்பின் இறந்ததாகவும், அதனால் அந்த பிரபாவதி அத்தை தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதையும் ஜெகன் கூற அறிந்து கொண்டாள் திவ்யா.
மொத்தத்தில், இது அவர்களது சொந்த வீடு அல்ல என்பது திவ்யாவிற்குத் தெரிய வந்திருந்தது.
சின்ன தாத்தாவின் மனைவி உயில்படி, இந்த வீட்டை, இதில் உள்ளவற்றை அவரின் அண்ணனின் மக்கள் அனைவரும் அனுபோகம் செய்யலாமே அன்றி, விற்கவோ, உரிமை கொண்டாடவோ இயலாது என்பதையும், பிரபாவதி எப்போது வந்தாலும் இந்நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டாள்.
மேலும், காளியம்மாள் கிராமத்திலுள்ள அவர்களின் பாகத்தை பிரபாவதிக்குக் கொடுத்துவிட்டு, அவரின் இந்தச் சொத்தை தாங்கள் எழுதி வாங்கிக் கொள்ளும் எண்ணத்தில் இருந்ததையும் ஜெகன் வாயிலாக அறிந்து கொண்டாள்.
பிரபாவதிக்கு மட்டுமே பாத்தியமான இந்த இடத்தினை, அவரையன்றி வேறு யாரும் உரிமை கொண்டாட இயலாத நிலையில், பட்டா அனைத்தும் சின்ன அப்பத்தாவின் பெயரில் இருப்பதால், அரசின் திட்டத்தை தங்களால் அப்போது பெற இயலாததையும், இத்தனை நெடிய ஆண்டுகளுக்குப்பின் பிரபாவதி வரமாட்டார் என்கிற தனது தாயின் எண்ணத்தால், புதிய வீடு கட்டும்போது மேற்படி வசதிகளைச் செய்து கொள்ளும் ஆவலில் பெரியவர்கள் இருப்பதையும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.
இது இவர்களாக யோசனை செய்து வைத்திருக்கும் முடிவு.
இவர்களின் முடிவிற்கு அரசு சட்டதிட்டங்கள் எவ்வளவு கைகுடுக்கும் என்பது திட்டங்களைத் துவங்கும் வேளையில்தான் தெரியவரும்.
இதுபோல தானறிந்த விசயத்தை உடனுக்குடன் தன் தாயுடன் பகிரமாட்டாள் திவ்யா. ஒரு சமயம் அதிகாலையில் ஈஸ்வரி அழைத்திட, அழைப்பை ஏற்காமல் அழைப்பு தவறியிருந்தது.
நீண்ட நேரம் கழித்து தனது அலைபேசியை எடுத்தவளிடம் காரணம் கேட்ட ஈஸ்வரியிடம், காலைக்கடன் கழிக்க வெளியில் சென்று வந்ததைப் பற்றிக் கூறிவிட்டாள் திவ்யா.
“கல்யாணம் பண்ணியே மூனு மாசம் ஆகப்போகுது. இன்னும் டாய்லெட் கட்டலையா” என அதிர்ந்து கேட்ட தாயிடம், ஏற்ற பதில்களைக் கூறியவள், ஒரு நேரத்தில் ஜெகன் கூறிய விசயத்தைத் தாயிடம் கூறத் துவங்கியிருந்தாள்.
எங்கு நின்று குறைந்த குரலில் பேசினாலும், அதை ஒட்டுக் கேட்கும் பழக்கமுள்ளவர்களின் காதுகளுக்கு, விசயம் இலகுவாய் எட்டிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தானே.
தங்களுக்குள் இருந்த விசயம் திவ்யாவிற்கு எப்படித் தெரிந்தது என்கிற அதிர்ச்சியோடு, அதை அவள் தாயோடு பகிர்வதைத் தடுக்க எண்ணிய காளி, கையில் இருந்த அலைபேசியைப் பிடுங்கியிருந்தார்.
“இதையெல்லாம் எதுக்குடீ உங்க ஆத்தாகிட்ட சொல்லிக்கிட்டு இருக்க?”
“கேட்டதுக்கு பதில் சொல்லணும்ல அப்பத்தா”
“அதுக்கு, இங்க திண்டது, பே…து எல்லாத்தையும் சொல்லணுமாக்கும்”
“அப்பத்தா… இப்டியெல்லாம பேசாதீங்க. அம்மா லைன்லதான் இருக்கு. போனைத் தாங்க”
“முடியாது போ”
“என்னைப் பத்தி அதுக்குத் தெரியணும்ல. அது எப்டிப்பட்ட இடத்தில என்னைக் கட்டிக் குடுத்துருக்குனு” என திவ்யா இடக்காய்ப் பேச
“ஏன்… இங்க என்ன உனக்குக் குறையாப் போச்சு?”
“குறையோ, நிறையோ அது எங்கம்மா முடிவு பண்ணிக்கட்டும். எதுக்கு நீங்க இடையில வறீங்க”
“என் வீட்டு விசயத்தை, நீ சந்தி சிரிக்க வைக்கறதைப் பாத்துகிட்டு சும்மா இருக்க, கையாலாகாதவளா நானு”
“அப்டி நான் சொல்லலையே”
“இந்த விசயத்தை மொதல்ல யாரு உங்கிட்டச் சொன்னதுன்னு சொல்லு”
“உண்மைதான! அதை யாரு சொன்னா என்னா?”
“இதுக்குத்தான், நடக்குறேன்னு வெளியே சாயந்திரத்துல போறீயாடீ!”
இப்படியே பேச்சு வளர்ந்து ரசபாசம் ஆகியிருந்தது.
அங்கு எதிர்முனையில் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு தலையே சுற்றிய உணர்வு.
வேலையே ஓடவில்லை. மகளை எண்ணிய வருத்தம் மனதை அலைக்கழித்தது.
தனது தொழிலைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு எங்கும் செல்ல இயலாமல் தவித்துப் போயிருந்தார் ஈஸ்வரி.
ஒரு வழியாய் மாமியார், மருமகள் இருவரும் சாதாரண நிலைக்கு வர, இரண்டு நாள்கள் சென்றிருந்தது.
………………..