emv17b

எனை மீட்க வருவாயா! – 17B

 

“ரெண்டு நாள் கழிச்சி, காரைக்குடியில ஒரு கல்யாணம் இருக்கு.  எல்லாருமே கண்டிப்பா போகணும்” என அன்றிரவு விசயத்தைப் பகிர்ந்தான் ஜெகன்.

“அப்பத்தா, ஐயாவோட நாமளும் போகணுமா?”

“ஆமா”

இரண்டு நாள்கள் கழித்து, காலையில் தான் அணிய வேண்டிய ஆடைகளை தனது பீரோவில் இருந்து எடுத்து வெளியில் வைத்துவிட்டு, குளிக்கச் சென்று திரும்பியவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திவ்யாவின் பீரோவில் இருந்து வெளி எடுத்து வைத்துச் சென்ற சேலை, ரவிக்கையில் ரவிக்கை மட்டுமே வைத்த இடத்தில் இருந்தது.

புரியாமல் அங்குமிங்கும் அதைத் தேடித் திரிந்தபடியே, “ரெண்டையும் ஒன்னாதான வச்சேன்.  ப்ளவுஸ் மட்டுந்தான் இருக்கு.  சாரிய எங்க கொண்டு போயி வச்சேன்” என அந்த சிறிய வீட்டிற்குள் தேடிப் பார்த்துவிட்டு, ஜெகனிடம் சென்றவள், “ஏங்க.. இங்கதான் என்னோட சேலைய வச்ச ஞாபகம் இருக்கு.  ஆனா வச்ச இடத்தில காணலைங்க”

“நல்லாப் பாரு.  யாரு வந்து அதை எடுக்கப் போறா!” என அப்போதுதான் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தவன், குளிக்கச் செல்லத் தயாராக நின்றான்.

“பாத்துட்டேங்க.. !”

“அம்மாகிட்ட கேளு.  அது பாத்துச்சானு”

“அப்பத்தாவையே காணாம்”

“பக்கத்துல எங்கையாவது போயிருக்கும்.  வந்ததும் கேளு” என நடையைக் கட்டியிருந்தான் ஜெகன்.

காளியம்மாளுக்காக காத்திருந்தவளுக்கு, அதிர்ச்சி என்பதைவிட, பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவள் எடுத்து வைத்துவிட்டுச் சென்ற சேலையை எடுத்து உடுத்தியிருந்தவர், சேலைக்கு ஏற்ற ரவிக்கையில்லாமல் அதிலிருந்து நிறத்தில் சாதாரண ரவிக்கை ஒன்றை அணிந்திருந்தார்.

சேலையின் அழகே மங்கியதுபோல இருந்தது.  அதைப் பார்த்தவளுக்கு வருத்தம் ஒரு பக்கம்.  தனது கையிலிருந்த ஒன்று தன்னிடமிருந்து நழுவியதும் தோன்றும் ஏமாற்ற உணர்வில், உண்டான கோபத்தில் வார்த்தைகளை விட்டாள்.

வீட்டிற்கு  நுழைந்த காளியை நோக்கிச் சென்றவள், “அப்பத்தா… எதுக்கு என்னோட சேலையை எடுத்துக் கட்டியிருக்கீங்க?” என வேகமாகக் கேட்டுவிட்டாள்.

“உம்புட்டுன்னா நான் கட்டக் கூடாதுன்னா இருக்கு?”

“என்னோட சாரீஸ்ஸை எங்க அம்மாவே கட்டாது.  அதவிட என்னோட சாரீய, வாயசான நீங்க கட்டுனா நல்லாவா இருக்கும்!”

திவ்யா கேட்பது, தனது வயதிற்கு ஏற்ற, அவளின் ரசனைக்குத் தகுந்தாற்போல, அவள் உடுத்த எண்ணி வாங்கியதை, எவ்வாறு எடுத்துக் கட்டலாம் என்பதே.

ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் காளி இல்லை என்பதை திவ்யாவும் ஆரம்பத்தில் உணரவில்லை.

“அடி சிறுக்கி மவளே..! என்னா வாய்க்கொழுப்பு இருந்தா எனக்கு வயசாயிருச்சுனு சொன்னதோட, நாங் கட்டுனா அந்தச் சேலை எனக்கு நல்லாவா இருக்கும்னு கேப்ப?”

“உங்களுக்கு வயசுக்கு தக்கன எதுவுமே பேசவும் தெரியலை.  நடக்கவும் தெரியலை”

“உனக்கு எல்லாம் தெரியுமோ?”

“தெரியறதாலதான இப்ப உங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்”

“நூத்து கிளவி கணக்கா பேசாமா போடீ.  சேலையே இல்லைனா பரவாயில்லை.  அந்த பீரோ முழுக்க அடுக்கி வச்சிகிட்டு, ஒரு சேலைய எடுத்துக் கட்டுனத்துக்கு இப்டி ஆங்காரமா வந்தா.. உன்னையெல்லாம் வச்சிகிட்டு..” என தலையில் அடித்துக் கொண்டார் காளி.

“…என்ன பொம்பளை நீங்க? நான் ஆயிரம் சேலை வச்சிருந்தாலும் அது என்னோட வயசுக்கு ஏத்த மாதிரி வாங்கி வச்சிருப்பேன்.  அதைப் போயி நீங்க எடுத்துக் கட்டிட்டதும் இல்லாம என்னா பேச்சு பேசறீங்க?”

“ஒன்னுந் தெரியாமதான் இங்க காடு, கரை, வெள்ளாமைன்னு பாத்துகிட்டு கிடக்கோம்” என அவராக ஒன்றைப் பேச

“மலைக்கும் மடுவுக்கும் முடிச்சிப் போடாதீங்க அப்பத்தா.  எங்க அம்மாச்சி வயசு உங்களுக்கு.  எங்க அம்மாச்சியா இருந்தா இப்டி என்னோட சேலையை எடுத்துக் கட்டணும்னு நினைக்குமா? செஞ்சதெல்லாம் செஞ்சிட்டு இப்டி உங்களைப்போல நியாயப்படுத்திப் பேசுமா? சொல்லுங்க!” ஆதங்கத்தோடு வினவியிருந்தாள்.

திவ்யா இன்றுதான் முதன்முதலாய் அந்த சேலையைக் கட்ட எண்ணியிருந்தாள்.  அவளுக்குப் பிடித்த நிறத்தில் அவளின் தாய் தேர்ந்தெடுத்து வாங்கித் தந்திருந்த சேலை அது.

“அடிப் பாதகத்தி…! பாம்பாவுல கொத்துறா..! இதக் கேக்க எனக்கு நாதியில்லையா?” என வராத அழுகையோடு முதலைக் கண்ணீர் வடிக்க முயல

“நியாயத்தைக் கேட்டா, பாம்பா கொத்துறேன்னு சொல்றீங்க? யாரு உண்மையிலேயே அப்டி பேசறதுன்னு பக்கத்துல உள்ளவங்களைக் கேட்டாத் தெரியும்!”

“எதுடீ நியாயம்.  கடையில விக்கற சேலை எல்லாம், எல்லாரும் வாங்கிக் கட்டத்தானடீ. அப்புறம் இந்த வயசுக்குள்ள உள்ளவுக இந்தச் சேலையத்தான் கட்டணும்னு எந்த இதுலடீ கண்டீசனாச் சொல்லியிருக்கு” என திவ்யாவிடம் சண்டையிடும் நோக்கோடு ஆரம்பிக்க

“கடையிலலாம் சொல்ல மாட்டான்.  எடுத்துக் கட்டறவுகளுக்குத்தான் அது தெரியணும்.    இதுக்கு யாரும் வந்து டியூசன் எடுக்க மாட்டாங்க! என்னமோ ஒன்னுமே தெரியாத பாப்பா கணக்கா பேசாதீங்க” அலட்சியமாகக் கூறினாள்.

அதேநேரம் வீரம் உள்ளே வர, ஒன்றிற்கு இரண்டாய் காளி அவரிடம் கூறி கண்ணைக் கசக்க, மனைவியின் கண்ணீரைக் கண்டவருக்கு வருத்தம் மேலிட, “ஏய் குட்டி… சின்னப்புள்ளைன்னு பாத்தா, வரவர ரொம்பத்தான் பண்ற.  ஒழுங்கா இருக்க மாட்டீயா?”

அவர் தன்னை அதட்டிக் கேட்டாலும், நியாயம் கிடைக்குமென நம்பியவள், “வாங்க அய்யா.  நீங்களே சொல்லுங்க.  எனக்குனு எடுத்து வச்சிருந்த சேலைய எடுத்துக் கட்டிட்டிட்டு, எகத்தாளமா இந்த அப்பத்தாதான் ரொம்பப் பேசுறாங்க! அவங்க செய்யறது அவங்களுக்கு சரினு தோணுனாலும், மத்தவங்கட்ட போயி கேட்டா தப்புன்னுதான் சொல்லுவாங்க”

“சேலையத்தான எடுத்துக் கட்டுனா.  என்னமோ நீ சாப்ட சோத்துல மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி எதுக்கு இப்ப இந்தக் கத்து கத்துற!” வீரம் கேட்க

ஆண்களுக்கு இந்த வாதத்தின் ஆழம் புரியப் போவதில்லை. 

ஆண்கள் வயது வித்தியாசமின்றி, வர்க்க ரீதியின்றி, அனைத்து நிலைகளிலும் பங்கிட்டு கொள்வதில் துவேசம் காட்டுவதில்லை. வருத்தத்தைக்கூட கேலியாகப் பேசிவிட்டு கடந்து விடுவர்.

பெண்களின் நிலையை உள்வாங்க முயன்றாலும், இரு வெவ்வேறு வயதில் உள்ள பெண்களின் மனநிலை புரியப் போவதும் இல்லை.  அதனால் அவரைப் பொருத்தவரையில் ஒரு சேலைதானே என்கிற எண்ணம்.

அந்த சேலையின் விலையைக் கொண்டு, அந்தத் தொகைக்கு உரிய பெறுமானம் எனது மனைவி பெறமாட்டாளா என்கிற நிலையில் மட்டுமே அவரது யோசனை இருக்கும்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு, தனது வயதொத்த பெண்கள் மட்டுமே அணியும் ஆடைகளை, குறிப்பாய் தனக்கென எடுத்து வைத்ததை மூத்த பெண்கள் எடுத்து அணிந்தால் அதை ஏற்றுக்கொள்வதென்பது சட்டென இயலாது. பக்குவம் கொண்டவர்கள், அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் எனக் கடந்துவிடுவர்.

வயதிற்குரிய ஒப்பனைகள், ஆடை, அணிமணிகள் பெண்களிடத்து எதிர் பார்க்கப்படுகின்ற முக்கிய விசயம்.

மேல்தட்டு வர்க்கம் எப்டி இருந்தாலும், அதை விமர்சிக்காமல் கடந்து செல்பவர்கள், மத்தியதர வர்க்கத்தில் அப்படிக் கடந்து செல்வதில்லை.

பெண்களில், ஒவ்வொரு வயதினரும், ஒவ்வொரு விசயத்திலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத வரையறைக்குட்பட்டே சில நெறிமுறைகளோடே வாழ்கிறார்கள்.

“இது வேற செய்வாங்களோ..! அப்டி மட்டும் செஞ்சா, நான் யாருங்கறதை அப்பத்தான் தெரிஞ்சிப்பீங்க! உங்கட்டலாம் பேசுறதே வேஸ்ட்!” என்றவள் அவர்களின் அறையை நோக்கிச் சென்றபடியே, “ஊருதான் பட்டிக்காடுன்னு பாத்தா,  இங்க இருக்கறது அத்தனையும் லூசுங்களாத்தான் இருக்கும்போல.  பொம்பளைதான் புத்தியில்லாம வந்து நம்மகிட்ட வம்பு வளக்குதுன்னா, அந்தக் கிழவனும் அப்டித்தான் இருக்காரு” என்றபடியே முனுமுனுத்தவாறு சென்றுவிட்டாள்.

கோபத்தில், பொம்பிளை, கிழவன் என வார்த்தைகள் எல்லாம் அவளை மீறி வந்திருந்தது.

சிறுகுரலில் பேசினாலும், அது வீரத்தின் காதுகளில் விழ, “ஏய்… நில்லு.. யாரப் பாத்து இப்பக் கிழவன்னு சொன்ன?” என கர்ஜித்திருந்தார்.

பதறியவள் பயப்பார்வையோடு அவரை நோக்க

“உன்னைத்தான் கேக்கறேன்”

“என்ன அய்யா?”

“என்னைப் பாத்துதான கிழவன்னு சொன்ன”

“இல்ல” என மறுத்து தலையை அசைத்தாள்.

“இப்ப வேற என்ன சொன்ன?”

“நான் யாரையும் ஒன்னும் சொல்லலை.  இங்க கட்டிக்குடுத்த எங்க அம்மாவைத்தான் திட்டுனேன்” என மாற்றிப் பேசினாள் திவ்யா.

அதற்குள் மனைவியிடம் விசயத்தைக் கூறியவர், “ரொம்பத்தான் பேசுது.. நீ சொன்னப்பல்லாம் நான் நம்பலை.  ஆனா பாக்கத்தான் விசுக்குனு இருக்கு.  ஆனா ஆளு விசமா இருக்கும்போல” என பேசிக்கொண்டிருக்கும்போதே கையில் வைத்திருந்த முறத்தை ஓங்கியபடி வந்த காளி,(புடைக்கப் பயன்படுத்தும் முறம்) திவ்யாவின் முதுகிலேயே நாலு அடி வைத்திருந்தார்.

அத்தோடு  தனது அலைபேசியை எடுத்தவள், ஈஸ்வரிக்கு அழைக்க, மறுமுனையில் என்னவோ ஏதோ என்கிற பதற்றத்தோடும், “ஹலோ திவ்யா”

“ம்மா…” என அழுதுகொண்டே, “இங்க இந்த அப்பத்தாவும், அய்யாவும் சேந்துகிட்டு என்னை ரொம்பத் திட்டுறாங்கம்மா.  அத்தோட அப்பத்தா என்னை அடிக்க வேற செய்யறாங்க.  இப்டி இவங்கள்லாம் என்னை அடிச்சுக் கொல்லட்டும்னுதான் இங்க கல்யாணம் பண்ணிக் குடுத்தியா?”

“அழாமப் பேசு திவ்யா” எதிரில் ஈஸ்வரி தெளிவில்லாமல் கேட்ட மகளின் குரலில் பதறிக் கூறினார்.

“…இதுக்கும்மேல என்னால இங்க இருக்க முடியாது.  காலையில என்னோட சேலைய எடுத்துக் கட்டிட்டு, கேட்டா அப்டித்தான் கட்டுவேன்னு அப்பத்தா சொல்லுது.  சரி அதுக்கு தெரிஞ்ச அறிவு அம்புட்டுதான்னு அய்யாகிட்ட போயிச் சொன்னா, அவரும் அதுகூடச் சேந்துகிட்டு பேசுறாரு”

“…”

“… இந்த மாதிரி கிறுக்குத்தனமா பண்றவங்களோட என்னால இனியும் இருக்க முடியும்னு தோணலை.  இந்த வாழ்க்கையே எனக்கு வேணாம்.  பேசாம உங்கூடவே வந்து ஒழுங்கா இருந்துக்குறேன்மா.  ப்ளீஸ்மா.. இன்னைக்குள்ள வந்து என்னைக் கூட்டிட்டுப் போயிரு.  இல்லைனா இங்க இருக்கற குளம், குட்டையில விழுந்து கண்டிப்பா செத்துருவேன்” என அழ

அதற்கிடையே இவள் பேசுவதைக் கண்டு, காளி, வீரம் இருவரும் கையில் இருந்த அலைபேசியைப் பறித்ததோடு, காளி மருமகளின் முதுகில் தனது இரண்டு கைகளையும் தனது மொத்த வலுவையும் சேர்த்து ஓங்கி அடிக்க, “ஆவென” அலறலோடு வலி தாங்காத திவ்யா ஓடினாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி என்ன செய்தார்.

ஜெகன் விசயமறிந்து என்ன செய்தான்?

திவ்யாவின் நிலையை உணர்ந்து ஈஸ்வரி அவளை மீட்க வருவாரா?

…………….