லவ் ஆர் ஹேட் 20 (02)

eiQ2PHZ31950-83867693

லவ் ஆர் ஹேட் 20 (02)

சந்திரனோ அறையின் ஜன்னல் கதவருகே நின்று அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, அவனருகில் தயக்கமாக வந்து நின்ற உத்ரா, “மாமா…” என்றழைக்கவும், சட்டென்று நிமிர்ந்தவன், “மாமாவா?” என்று இருபுருவங்களையும் உயர்த்தி அதிர்ந்துப் போய் கேட்டான்.

அவளோ கைகளை பிசைந்தவாறு ஒருவித சங்கடத்துடன், “அது… அது வந்து… ஏற்கனவே எங்க இரண்டு குடும்பத்துக்கும் ரொம்ப வருஷமா பிரச்சினை. உங்களுக்கும் எங்க குடும்பத்தை பிடிக்காது. நாளைக்கு அம்மா, அப்பா மறுவீட்டு எங்க இரண்டு பேரையும் அழைக்க வருவாங்க. ஆனா, நீங்க… நீங்க யாரோட வற்புறுத்தலுக்காகவும் வர வேணாம். நான் பாட்டிக்கிட்ட பேசிக்கிறேன்.” என்றுவிட்டு தான் பேச வேண்டியதை பேசிவிட்டேன் என்ற ரீதியில் நகரப் போக, எட்டி அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் சந்திரன்.

அவளோ அவன் மார்பில் முட்டி மோதி நிற்க, “அதிகம் சீரியல் பார்ப்பியோ?” என்று அவன் கேலியாக கேட்ட விதத்தில் உதட்டை சுழித்து தன்னவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“நான் சொன்னேனா, எனக்கு வர பிடிக்கலன்னு? இங்க பாரு! இரண்டு நாளா தான் எனக்கு உன்னை தெரியும். அத்தைப் பொண்ணு பின்னாடி இந்திரனுக்கு போட்டியா கல்யாணம்னு சுத்திக்கிட்டு இருந்தாலும், நிஜமாவே இந்த காதல், கல்யாணத்துல அதிகம் ஈடுபாடு கிடையாது. ஆனாலும், நீ எனக்காக என்னோட காதலுக்காக என்னை தேடி வந்த போது பிடிச்சிருந்திச்சி. இப்போ வரைக்கும் இரண்டு குடும்பத்துக்குள்ளேயும் என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியாது. அந்த ஆரன பிடிக்காது அவ்வளவு தான்.  ஆனா, அவனெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. உன் விருப்பத்துக்காக, உன் சந்தோஷத்துக்காக விரும்பி தான் வர்றேன்.” என்று சந்திரன் பேசி முடிக்க, அவனையே வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நீங்க என்னை லவ் பண்றீங்களா?” என்று ஏதோ ஒரு ஆர்வத்தில் உத்ரா கேட்க, அதில் மென்மையாக புன்னகைத்தவன், “லவ் இருக்கான்னு தெரியல. பட், பிடிச்சிருக்கு.” என்று அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டு நகர, அவளோ துள்ளிக் குதிக்காத குறை தான்.

இங்கு யாதவ்வின் அறையில், அவனோ அப்போது தான் குளித்து உடை மாற்றியிருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் கதவை திறந்தவன், எதிரே உடைப்பையுடன் நின்றிருந்த ரித்வியை புரியாது பார்த்தான்.

“அது… அது வந்து… மாமா தான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். பட், கேக்கல. என்னை வற்புறுத்தி… இரண்டு நாள் தானே? உங்க கூட…” என்று வார்த்தைகளை முழுதாக சொல்லி முடிக்காது திக்கித்திணறி ரித்வி பேசி முடிக்க, அவனோ அவளின் பேச்சில் உண்டான தலைவலியில் நெற்றியை நீவி விட்டுக்கொண்டான்.

அதைப் பார்த்து பதறி, “அய்யோ! சோரிங்க. மாமாவோட மனசு கஷ்டப்பட கூடாது தான். நான் வேணா வேற ரூம்ல…” என்று அவள் பேசிக்கொண்டே போக, “இனாஃப்!” என்று கத்திய யாதவ், தள்ளி நின்று உள்ளே வரும்படி கண்ணசைக்க, அவளுக்கோ உச்சக்கட்ட ஆச்சரியம்!

மனதில் உண்டான சந்தோஷத்தில் இதழில் உருவாகும் புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கியவள், ‘ஹப்பாடா!’  என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு முடிக்கவில்லை, நெற்றியை தட்டி ஏதோ யோசித்த யாதவ், “உன் லேப்டாப் எங்க?” என்று பட்டென்று கேட்டான்.

“அது வீட்டுல…” என்று ரித்வி பதில் சொல்லவும், “ஒகே, நோ ப்ரோப்ளம். என்னோட லேப்ல லோகின் பண்ணி யூஸ் பண்ணிக்கோ! ஒரு முக்கியமான ரிப்போர்ட் ரெடி பண்ணனும். சீக்கிரம்! சீக்கிரம்!” என்று அவன் அவசரப்படுத்த, ‘ஙே’ என்று அவனைப் பார்த்தவளுக்கு ‘ஏன் தான் வந்தோம்?’ என்றாகிவிட்டது.

‘போச்சு! போச்சு! பேசாம வைஷு கூடவே இருந்திருக்கலாம். ஏதோ ஒரு நப்பாசையில மாமா சொன்னாருன்னு பொய் சொல்லி வந்ததுக்கு இவர் நம்மள வச்சி செய்ய போறாரு. இது உனக்கு தேவையா? தேவையா?’ என்று மானசீகமாக தனக்குத்தானே கேட்டு நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டாள் அவள்.

அப்போது சரியாக கதவை தட்டி உள்ளே வந்த அதிபன், “யாதவ்…” என்றழைத்து ரித்வியை கண்களால் காட்டி, வெளியே வரும்படி சைகை செய்துவிட்டு செல்ல, ரித்வியோ இருவரையும் மாறி மாறி சந்தேகமாக பார்த்தாள்.

யாதவ்வோ அவளின் பார்வையை கண்டுக்காது அதிபனுடன் அறையிலிருந்து வெளியேறி அந்த முக்கிய விடயம் தொடர்பாக பேச ஆரம்பித்தான்.

“எதுவும் வெளில தெரியாம பார்த்துக்கலாம் யாதவ். ஆனா, கண்டிப்பா ரித்விய அழைச்சிட்டு வந்து தான் ஆகனுமா?” என்று அதிபன் யோசனையுடன் கேட்க, “ம்ம்… அவ இல்லாம எப்படி? சந்து மறுவீட்டுக்கு கிளம்பினதும் போகலாம். அவ்வளவு வெறியில இருக்கேன் அதிபா.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் நெற்றி நரம்புகள் புடைத்து யாதவ் சொல்ல, அதிபனுக்கும் மனம் உலைகளமாகத்தான் கொதித்துக் கொண்டிருந்தது.

அன்றிரவு,

அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,
“டேய் யாதவ், எப்போ பாரு விறைப்பாவே திரிய வேண்டியது! கொஞ்சம் தான் சிரியேன்…” என்று இந்திரன் கேலியாக சொல்லவும், அவனை முறைத்தவாறு உணவை தட்டில் வைத்து உண்ண ஆரம்பித்தான் யாதவ்.

தன் உணவுத்தட்டை நகர்த்தி வைத்த அதிபன், “ரித்வி, ஊட்டி விடு!” என்று சிறுபிள்ளை போல் சொல்ல , அவளும் புன்னகையுடன் தன் தட்டிலிருந்த உணவை அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க, கூடவே இந்திரனும் சேர்ந்துக் கொண்டான்.

உத்ராவோ, “இவங்க எப்போவும் இப்படி தானா?” என்று சிரித்தவாறு தன்னவனிடம் கேட்க, “எப்போவும் அப்படி தான். அதுவும் அதிபனுக்கு ரித்வி தான் எல்லாமே. அவங்களுக்குள்ள இருக்குறது அம்மா, மகன் பாசம். வெளில இருந்து பார்க்குற நிறைய பேருக்கு அது புரியாது. எனக்கே சிலநேரம் பொறாமையா இருக்கும்.” என்ற சந்திரனின் வார்த்தைகள் யாதவ்வின் காதிலும் விழுந்தன.

ஏனோ அவனுக்குள்ளும் ஒரு ஏக்கம்! ஒரு பொறாமை! உணவை சாப்பிடாது அளந்தவாறு ஓரக்கண்ணால் அதிபனுக்கு ரித்வி ஊட்டி விடுவதையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனித்த மஹாதேவனோ ஏதோ யோசித்து, “ரித்விமா…” என்றழைத்தார்.

அவளும் சட்டென்று திரும்பி, “மாமா…” என்று கேள்வியாக நோக்க, “அதிபனுக்கு மட்டும் தான் ஊட்டி விடுவியா? உன் புருஷனுக்கும் ஊட்டி விடுறது… அவனும் எவ்வளவு நேரம் தான் நீ அவனுக்கு ஊட்டி விடுவியான்னு ஓரக்கண்ணால ஏக்கமா பார்த்துக்கிட்டு இருப்பான்?” என்று மஹாதேவன் சட்டென்று உண்மையை உடைத்துவிட, தன் தந்தையை முறைத்துப் பார்த்தான் யாதவ்.

அவரோ செய்ய வேண்டியதை செய்துவிட்ட திருப்தியில் தட்டில் முகத்தை புதைத்து சாப்பிடுவது போல் பாவனை செய்ய, மஹாதேவன் சொன்னதில் அதிர்ந்தவள் யாதவ்வை தயக்கமாக திரும்பிப் பார்த்தாள்.

அவனோ அவளை நிமிர்ந்துப் பார்க்காது ஒருவித சங்கடத்துடன் அமர்ந்திருக்க, “அதான் பெரிப்ஸ் சொல்றாரு தானே? ஊட்டி விடு ரித்வி. உங்க ஆத்துக்காரர் தான் வாய திறந்து கேக்க மாட்டாரே…” என்று இந்திரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, உணவை பிசைந்து அவனுக்கு நீட்டியவளின் கை நடுங்கத்தான் செய்தது.

யாதவ்வோ நிமிர்ந்து ரித்வியையும், உணவை வைத்திருந்த அவள் கையையும் மாறி மாறி பார்க்க, “சாப்பிடுங்க!” என்று ரித்வி மெல்லிய குரலில் சொன்னதும் உணவை வாங்கிக்கொண்டவன், அதற்கு மேல் அங்கு இருக்காது எழுந்து சென்றுவிட, போகும் அவனையே பார்த்திருந்த ரித்வியோ அவன் உணவை வாங்கியதில் ஆச்சரியமாகி பின் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள்.

இங்கு அதிபனோ வைஷ்ணவியை பாவமாக பார்க்க, அவளோ அவனை சற்றும் கண்டுக்கொள்ளவில்லை.

தன்னவளையே சிறிது நேரம் ஏக்கமாக பார்த்திருந்தவனுக்கு ஒரு யோசனை தோன்ற, அன்று அவள் செய்தது போல மேசைக்கு அடியில் காலை விட்டு அவளின் பாதத்தை அவன் தன் பாதத்தால் வருடவும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கோ புரை ஏறியது. தண்ணீரை அருந்தியவாறு ஓரக்கண்ணால் அதிபனை முறைத்துப் பார்த்தாள் வைஷ்ணவி.

அதிபனோ யாரும் பார்க்காதவாறு ஒற்றை கண்ணை சிமிட்ட, அதில் விழிவிரித்தவள் தன் பாதத்தை உள்ளிழுத்து அவனுக்கு திட்டி முணுமுணுத்தவாறு மீண்டும் குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால், இவனோ அடங்கிய பாடில்லை.

சற்று சரிந்து மீண்டும் அவளின் காலை தேடி அவன் வருட ஆரம்பிக்க, அது அவனின் அத்தையின் காலாகிப் போனது அவனின் கெட்ட நேரமாகிப் போனது.

அதிர்ந்து நிமிர்ந்த சகுந்தலா, “மாப்பிள்ளை, என்ன பண்றீங்க?” என்று பதறியபடி கேட்க, அப்போது தான் குனிந்து பார்த்தவன் தான் செய்யும் காரியம் உணர்ந்து, “அய்யோ அத்தை! என்னை மன்னிச்சு… அது நான்… அய்யோ!” என்று என்ன சொல்லி சமாளிப்பதென தெரியாது அங்கிருந்து ஓடிவிட, சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டு தான் போனாள் வைஷ்ணவி.

அடுத்தநாள்,

மணிமாறனும், உத்ராவின் அம்மா கலையரசியும் தங்கள் மகளையும், மருமகனையும் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருக்க, எந்தவித முகச்சுழிப்புமின்றி சிரித்த முகமாகவே வீட்டுக்குள் அழைத்தார் மஹாதேவன். மணிமாறன் வீட்டுக்குள் நுழையாது வாசலிலே நிற்க, கலையரசிக்கோ ஒருவித சங்கடம் தான்!

உள்ளே வந்து தன் மகளை கட்டியணைத்து, “ஏன் டி இப்படி ஒரு காரியத்தை பண்ண? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்க கூடாதா?” என்று அவர் அழ, “சோரிம்மா, எங்களுக்கு வேற வழி தெரியல.” என்று உத்ரா சொல்லவும், ‘ஆஹான்!’ என்று அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் சந்திரன்.

சிறிது நேரம் பேசிவிட்டு புதுமணத்தம்பதிகள் இருவரையும் அவர்கள் அழைத்துச் செல்ல, வண்டியில் ஏற போன சந்திரனோ ஏதோ யோசித்து அதிபனிடம், “அதிபா, நான் வேணா வரவா? பொறுக்க முடியல. என் கையாலயும் அவனுங்கள…” என்று கோபமாக பேச,

“சந்து, வேணாம்! இப்போ நீ கிளம்பு. புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. இப்போ இதெல்லாம் நீ பார்க்க தேவையில்லை. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம்.” என்று  அழுத்தமாக சொன்னான் அதிபன்.

“ரித்வி…” என்று அவன் இழுக்க, “அவ இல்லாமலா? அவ கையால தானே அபிஷேகமே… நடக்குற ஒவ்வொன்னையும் அவ பார்க்கனும்.” என்று சந்திரனின் அருகில் வந்து ரகசியமாக சொன்ன யாதவ்வின் இதழில் வெற்றிப்புன்னகை.

சந்திரனும் திருப்தியுடன் அவர்களை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து செல்ல, யாதவ்வும் இந்திரனும் வீட்டிலிருந்து வெளியேறிய சில நிமிடங்களில், “ரித்வி, என் கூட வா! ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்” என்று ரித்வியை அழைத்தான் அதிபன்.

“எங்க அதி? வைஷுவையும் கூட…” என்று ரித்வி முடிக்கவில்லை, “இப்போ நான் உன்னை தானே கூப்பிட்டேன்! நீ மட்டும் வா” என்று அழுத்தமாக வந்த அதிபனின் வார்த்தைகளில் பயந்தவள் வைஷ்ணவியை தயக்கமாக திரும்பிப் பார்க்க, அவளோ ‘க்கும்!’ என்று நொடிந்தவாறு அவனை ஏகத்துக்கும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ரித்வியை அழைத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அதிபன் வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள் அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்து, “இது அந்த பழைய ரைஸ்மில் தானே? இங்க ஏன் வந்திருக்கோம்? இந்த இடத்துல பேய் இருக்குன்னு சின்னத்தை சொல்லுவாங்க” என்று சற்று பயத்துடனே சொல்ல, “பேய் ஓட்ட தான் வந்திருக்கோம் ரித்விமா” என்று சொன்னவாறு அவளை உள்ளே அழைத்துச் சென்றான் அதிபன்.

உள்ளுக்குள் சற்று பயம் இருந்தாலும் அதிபன் பக்கத்திலிருக்கும் தைரியத்தில் கண்களை சுழலவிட்டு அங்குமிங்கும் நோட்டம் விட்டவாறு உள்ளே நுழைந்தவள், அங்கு முகம், கைகால்களில் இரத்தக்காயங்களோடு கட்டப்பட்டு அமர்த்தப்பட்டிருந்த மூவரை பார்த்து அதிர்ந்து அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.

பயத்தில் முத்து முத்தான வியர்வைதுளிகள் அவள் முகத்தில் பூக்க, மூளை செயலிழந்து விட்ட உணர்வு அவளுக்கு!

அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை அவளால். கைகால்கள் நடுங்க ஆரம்பிக்க, முயன்று வார்த்தைகளை கோர்த்து, “அதி… அதி போ… போகலாம். ப்ளீஸ்…” என்று திக்கித்திணறி சொன்ன ரித்வி அங்கிருந்து வேகமாக செல்வதற்காக திரும்ப, பின்னால் நின்றிருந்த யாதவ்வின் மார்பிலே மோதி நின்றாள்.

நிமிர்ந்துப் பார்த்த ரித்வி எதிரே யாதவ்வை கண்டதும் சற்றும் யோசிக்காது அவனை இறுக அணைத்து, அவன் மார்போடு ஒன்றிக்கொண்டு, “என்னங்க ப்ளீஸ், என்னை கூட்டிட்டு போங்க. பயமா இருக்கு. நான் வீட்டுக்கு போகனும்.” என்று ஓவென்று அழுக ஆரம்பிக்க, அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான் அவன்.

ரித்வியோ தன்னவனை கேள்வியாக நோக்க, “இந்திரா…”  என்று யாதவ் அழைத்ததும், அவனோ எரிந்துக் கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையை அவளிடம் நீட்டினான்.

அந்த மூன்று காமுகர்களும் ஏற்கனவே பல நாட்கள் தொடர்ந்து வாங்கிய அடியிலும், பட்டினியால் உண்டான பசி மயக்கத்திலும் இருக்க, பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்தவள், “முடியாது. என்னால முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுருங்க. எனக்கு பயமா இருக்கு.” என்று முகத்தை மூடி கதறியழ, அதிபனோ அவள் முகத்தை மூடியிருந்த கையை விலக்கி அவளின் ஒரு கையில் கட்டையை திணித்தான்.

அவள் தோளை பற்றி அதிபன் முன்னோக்கி போகச் சொல்லி தள்ள, இந்திரனோ அம் மூவரின் உடல் முழுதும் பெற்றோலை ஊற்றினான்.

ஆடவர்கள் மூவரின் முகத்திலும் அத்தனை இறுக்கம்! அந்த மூன்று காமுகர்களையும் வதம் செய்ய வேண்டும் என்ற வெறி அவர்களுக்குள்!

அவளோ கட்டையை கையில் வைத்து பயந்து போய் அசையாது அப்படியே நின்றிருக்க, “ரித்வி, அன்னைக்கு உன்ன எவ்வளவு காயப்படுத்தியிருப்பாங்க! எந்த உடலால உன்னை துன்புறுத்தினாங்களோ இன்னைக்கு அதை நீயே எரிச்சிடு!” என்று அதிபன் அவளின் கையை பிடித்து அம்மூவரின் அருகில் இழுத்துச்சென்று நிறுத்த, இந்திரன் பெற்றோல் ஊற்றியதில் மயக்கம் தெளிந்து சற்று விழித்தவர்களுக்கு ரித்வியை பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது.

“தயவு செஞ்சி எங்கள விட்டுருங்க. இனிமே இப்படி பண்ண மாட்டோம். எங்கள மன்னிச்சிடுங்க!” என்று பயத்தில் காலில் விழாத குறையாக  கதறியழுதவர்களை மேலும் பேச விடாது அவர்களின் வாயில் இந்திரன் துணியை திணிக்க, ரித்வியின் மன்னிக்கும் குணமும், இளகிய மனமும் அவர்களின் கதறலை பார்த்ததும் தண்டிக்க தூண்டவில்லை.

‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டியவாறு ஒரு அடி பின்னே நகர்ந்தவளின் கட்டையை பற்றியிருந்த கையை ஒருகரம் பிடிக்க, தலையை மட்டும் திருப்பிப் பார்த்தவள், “வேணாம்ங்க, விட்டுருவோம்.” என்று பாவம் போல் சொன்னாள்.

அழுத்தமாக ‘இல்லை’ என்று தலையாட்டிய யாதவ், அவளின் கையை இறுகப்பற்றியவாறு அவளுடன் சேர்ந்து அந்த காமுகர்களுக்கு கொள்ளி வைக்க, பெற்றோலின் துணையில் தீ அவர்களின் உடல் முழுதும் படு வேகமாக பரவியது.

அவர்கள் அலற கூட முடியாது வாயில் இந்திரன் துணியை அடைத்திருக்க, அழுதவாறு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை தன்னவனை அணைத்தவாறு பார்த்திருந்த ரித்வி, ஒருகட்டத்திற்கு மேல் பார்க்க முடியாமல்  அதே இடத்தில் மயங்கி சரிந்திருந்தாள்.

சில மணிநேரங்கள் கழித்து, கண்விழித்த ரித்வி படுத்திருந்தது என்னவோ அவளின் அறையில் தான். நடந்த சம்பவங்கள் விம்பங்களாக கண்முன் தோன்ற, ‘அவளுக்கு நடந்தது அனைத்தும் கனவோ?’ என்று கூட தோணியது. இதில் தலைவலி வேறு!

“கிருஷ்ணா!” என்று முணங்கியவாறு நெற்றியை நீவிவிட்டுக்கொண்டவள், கதவு திறக்கப்படும் சத்தத்தில் அத்திசையை நோக்கினாள்.

அங்கு யாதவ் கையில் குளிர்பானத்துடன் கதவை தாளிட்டுவிட்டு அவளருகில் வந்தமர்ந்து, “என்னாச்சு?” என்று கேட்க, “அது… அது ஒரு கெட்ட கனவு…” என்று திக்கித்திணறி வந்தன ரித்வியின் வார்த்தைகள்.

கட்டிலை ஒட்டியிருந்த டீபாயின் மேல் குளிர்பானத்தை வைத்து அவளின் முகத்தில் விழுந்திருந்த சிறுகற்றை முடிகளை காதோரம் ஒதுக்கிவிட்ட யாதவ், “ஆமா, கெட்ட கனவு தான்.” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு பால்கெனியில் சென்று நின்றுக்கொள்ள, அப்போது எதேர்ச்சையாக தன் உள்ளங்கையை கவனித்தவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

அவள் அந்த கட்டையை பிடிக்கும் போது அதிலிருந்த சில தூசுகள், கருப்பு கறைகள் அவளின் உள்ளைங்கையில் ஒட்டியிருக்க, அதைப் பார்த்தவளுக்கோ நடந்தது அனைத்தும் நிஜம் என புரிந்துப்போனது. தன்னவனை சட்டென நிமிர்ந்துப் பார்த்த ரித்வி, அவன் எதுவும் அறியாத பாவனையில் நின்றிருப்பதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

இப்போது அவள் மனதில் அச்சம் இல்லை. ஏதோ ஒரு அழுத்தம் காணாமற் போன உணர்வு! இத்தனைநாட்கள் வெளியே காட்டாது அவள் மனதில் ஆழமாக புதைந்திருந்த ஆதங்கம், வெறி இன்று அவளிடமிருந்து விலகியிருந்தது. அதுவும், அவளின் மணாளனால்.

அவனையே இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் மேலிருந்த காதல் மேலும் பெருக்கெடுத்தது.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!