லவ் ஆர் ஹேட் 26

eiV3SQ661349-b0b1c896

லவ் ஆர் ஹேட் 26

“ஆமா டா, அவ என் புள்ளைய சுமந்துக்கிட்டு இருக்கா. அது தெரிஞ்சும் அவள நான் வீட்டை விட்டு துரத்திட்டேன்” என்று யாதவ் சொன்னதும் அவன் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்திருந்தான் அதிபன்.

கன்னத்தை பொத்தியவாறு யாதவ் அதிர்ந்து நோக்க, சந்திரனுக்கும் அதே அதிர்ச்சி தான்.

யாதவ்வின் சட்டை கோலரை கொத்தாக பிடித்த அதிபன், “எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணியிருப்ப? அவளுக்கு கேக்க நாதியில்லைன்னு நினைச்சியாடா? ஏன் டா இப்படி பண்ற? ரித்விமா பாவம் டா. அம்மா அப்பா இல்லாதவ! அவளுக்கு எல்லாமே நாங்க தான். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு யோசிக்கிற பொண்ணு டா அவ! அவளுக்கு மட்டும் ஏன்டா இத்தனை கஷ்டத்தை கொடுக்குறீங்க? ச்சே! குரங்கு கையில பூமாலை கிடைச்ச மாதிரி இப்படி உனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கைய நாசம் பண்ணிட்டியே… ஏன் டா இப்படி பண்ண? அவ என்ன டா தப்பு பண்ணா?” என்று ஆவேசமாக கேட்டவாறு அவனின் முகத்தில் ஓங்கிக் குத்த,

யாதவ்வோ அதிபனின் அடிகளை தாங்கிக் கொண்டானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இதில் சந்திரன் தான் அதிபனின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது யாதவ்விடமிருந்து அதிபனை பிரித்தெடுக்க படாதபாடுபட்டான்.

“அதிபா, அவனை விடு! விடுன்னு சொல்றேன் தானே” என்று சந்திரன் கத்தவும், அவனின் கையை உதறிவிட்டு, “என்னை ஏன்டா பிடிக்கிற? அவனை கொன்னா தான்டா என் ஆத்திரம் அடங்கும். ஆரம்பத்திலிருந்தே என் ரித்விமாவ கஷ்டப்படுத்திட்டே இருக்கான். பாவம் டா அவ!” என்ற அதிபனின் கண்கள் ஏனோ தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து கலங்கித்தான் போயிருந்தன.

“என்ன யாதவ் இதெல்லாம்? நிஜமாவே எனக்கு எதுவுமே புரியல. என்ன தான்டா நடக்குது? நீ என்னடான்னா வீட்டை விட்டு துரத்திட்டேன்னு சொல்ற. அவ என்னடான்னா அவளுக்கு சம்மந்தமே இல்லாத உத்ராவோட வீட்டுல போய் இருக்கா. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்? சொல்லித் தொலையேன்!” என்று சந்திரன் மீண்டும் கத்தவும்,

“ஓஹோ! மேடம் என்னை விட்டு போய் அங்க தான் உட்கார்ந்திருக்காளா? அவ்வளவு தைரியம்ல அவளுக்கு! கொழுப்பு ஏறிப்போய் இருக்கு அதான்… எப்படி டா அவ என்னை விட்டு போகலாம்? அதுவும், என் அம்முவையும் கூட்டிட்டே போயிட்டா. என்னை பத்தி கொஞ்சமும் யோசிக்கல்ல அந்த இடியட்! போய் தொலையட்டும். அங்கேயே இருக்கட்டும். நான் போய் கூப்பிட மாட்டேன்” என்று ஏதேதோ பிதற்றிக்கொண்டே சென்ற யாதவ், சட்டென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறியழ, மற்ற இருவருமே அதிர்ந்துவிட்டனர்.

தன் கோபத்தை விடுத்து அவனை ஓடிச்சென்று அணைத்து, “டேய், ஏன்டா அழுகுற?  என்னாச்சுடா?” என்று பதட்டமாக கேட்ட அதிபனுக்கே யாதவ்வின் அழுகை புதிது தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து யாதவ் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி அதிபன் பார்த்ததே இல்லை. அழுத்தக்காரனவன் உணர்வுகளை மற்றவர்கள் முன் வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டான். ஆனால், இன்று சிறுகுழந்தை போல் அழுகும் தன் அண்ணனை பார்த்து இருவருக்குமே அதிர்ச்சி!

கண்ணீரை அழுந்த துடைத்து, “எனக்கும் அவளுக்குமான உறவு பொய்னு நினைக்கிறியா அதிபா? நான் அவளோட வாழ்ந்த வாழ்க்கை, அவ மேல நான் காட்டின அன்பு உண்மைன்னு அவளுக்கு புரியலயாடா? நான் ஒன்னு சொல்லிட்டா அதை நம்பி என்னை விட்டு போயிருவாளா? அப்போ என்ன டா அவ என்னை புரிஞ்சி வச்சிருக்கா?

ஆமா, ஆரம்பத்துல அவள பத்தி தெரிஞ்சதும் அவ்வளவு கோபம். அவள வச்சி தேவகி குடும்பத்தை கஷ்டப்படுத்தனும்னு நினைச்சது உண்மை தான். ஆரம்பத்துல அவ கூட நெருங்கி பழகினதும் அதுக்காக தான். ஆனா, என்னால பொய்யா இருக்க முடியலடா. அவ அருகாமையில நான் என்னையே இழக்க ஆரம்பிச்சிட்டேன். அவளோட நான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லை டா. அது ஏன்டா அந்த முட்டாளுக்கு புரியல?

தப்பு பண்ணிட்டேன் தான். ஆனா, எனக்கு என் ரிது வேணும். அவ என் பக்கத்துல இருக்கனும். ரொம்ப வருஷம் கழிச்சி அம்மாவோட பாசத்தை அவக்கிட்ட உணர்ந்தேன். அப்போ அம்மா என்னை விட்டுட்டு போன மாதிரி இவளும் விட்டுட்டு போயிட்டா. நான் எப்படி டா தாங்கிப்பேன்? அவ இல்லாம என்னால இருக்க முடியாது. நானே போய் கூப்பிடுறேன். அவ என்கிட்ட வந்துருவா. என் ரிது பத்தி எனக்கு தெரியும்” என்று யாதவ் பேசிக்கொண்டே போக, “யாதவ், அப்போ நீ…” என்று கேள்வியாக இழுத்தான் அதிபன்.

“அவள ரொம்ப லவ் பண்றேன் டா. அதை கூட அவ என்னை விட்டு போகும் போது தான் புரிஞ்சிக்கிட்டேன். இத்தனைநாள் அவள காதலிக்கிறதை கூட தெரியாம மனசுல இருந்த கோபத்தை தீர்க்க அவள பயன்படுத்தின நான் ஒரு முட்டாள்னா நான் சொன்னதுமே என்கூட அவ வாழ்ந்த வாழ்க்கையே பொய்னு நம்பி என்னை விட்டு போன அவளும் ஒரு முட்டாள்” என்று அவன் சொல்ல, இரு ஆடவர்களுக்கோ தலைசுற்றாத குறை தான்.

“யாதவ், நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு! ரித்வி யாரு? அவ ஏன் தேவகி பாட்டி வீட்டுல போய் இருக்கா? நீ ஏதோ அவங்கள கஷ்டப்படுத்த ரித்விமாவ யூஸ் பண்ணதா சொல்ற. அப்படின்னா என்ன டா அர்த்தம்? மொதல்ல அவளுக்கும் தேவகி பாட்டிக்கும் என்னடா சம்மந்தம்?” என்று நெற்றியை நீவிவிட்டவாறு கேள்விகளை அடுக்கினான் அதிபன்.

“என் ரிது யாருன்னு எனக்கு தெரியும். ஆனா, இன்னும் நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறையவே இருக்கு. எல்லாத்துக்கும் உன் அப்பா மிஸ்டர்.மஹாதேவன்கிட்ட பதில் இருக்கு” யாதவ் உச்சகட்ட கோபத்தில் சொல்ல, “மிஸ்டர்.மஹாதேவனா?” என்று ஒருவரையொருவர் அதிர்ந்து பார்த்துக் கொண்டனர் அதிபனும், சந்திரனும்,

அடுத்து சில மணித்தியாலங்களிலே யாதவ் மொத்த குடும்பத்தினரின் முன் இறுகிய முகமாக நின்றிருக்க, நடந்ததை அதிபன் சொல்லி முடித்த அடுத்தநொடி ஐவிரல்கள் யாதவ்வின் கன்னத்தில் பதிந்திருந்தன. அது மஹாதேவனுடைய கரம் அல்ல. அவனுடைய அத்தை சகுந்தலாவின் ஐவிரல்கள் தான்.

இதை யாதவ் உட்பட எவருமே எதிர்ப்பார்க்கவில்லை.

கன்னத்தை பொத்திக்கொண்டு யாதவ் தரையை வெறித்தவாறு நிற்க, அவனை உக்கிரமாக பார்த்த சகுந்தலா, “நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஆரம்பத்துலயிருந்தே ஒரு மார்கமா தான் திரியுற. அவ யாரோ? எவளோ? எனக்கு அவள பிடிக்காது தான். அவள திட்டுவேன் தான். ஆனா, நீ பண்ண காரியத்தை என்னாலயே ஏத்துக்க முடியல. உன் குழந்தைய சுமக்குற பொண்ண இப்படி தான் கஷ்டப்படுத்துவியா? ச்சீ…” என்று முகத்தை சுழித்துக்கொள்ள, சுற்றியிருந்தவர்களுக்கும் அதே கோபம் தான்.

முகம் சிவந்து, விழியிலிருந்து விழ துடித்துக்கொண்டிருந்த விழிநீரை விழவிடாது இழுத்துப்பிடித்தவாறு மஹாதேவனை நிமிர்ந்துப் பார்த்த யாதவ், “அப்பா…” என்று ஏதோ பேச வர, அவனை ஏறெடுத்தும் பார்க்காது திரும்பி நின்றிருந்தார் மஹாதேவன்.

“நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைச்சும் பார்க்கல கார்த்தி. அன்னைக்கு யோசிக்காம ரித்விய உனக்கு கட்டித்தந்து தப்பு பண்ணிட்டேனோன்னு தோனுது. அன்னைக்கு ரித்விமாவுக்கு நடந்த சம்பவத்துல உண்டான குற்றவுணர்ச்சிய போக்கிக்க என் பையனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா, இப்போ அதை விட அதிகமா குற்றவுணர்ச்சியா இருக்கு” என்று பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள், “நிறுதுங்கப்பா!” என்ற யாதவ்வின் கத்தலில் அப்படியே நின்றது.

“எப்போவும் என் உணர்வுகள யாரும் புரிஞ்சிக்கவே மாட்டீங்களா? சின்னவயசுலயே அம்மாவ இழந்தேன். அப்றம் எல்லாரையும் விட்டு பிரிச்சி என்னை மட்டும் தனியா வெளியூருக்கு அனுப்பி விட்டீங்க. உடம்பு சரியில்லாம போனா கூட தலைய வருடி பக்கத்துல இருந்து பார்த்துக்க யாரும் இருக்க மாட்டாங்க. பாசத்துக்காக ரொம்ப ஏங்கினேன். பத்து வருஷம் கழிச்சி இங்க வந்தேன். ‘ஒரு பொண்ண காதலிக்கிறேன், அவள கல்யாணம் பண்ண ஆசைப்படுறே’ன்னு சொன்னேன். ஆனா நீங்க… உங்க குற்றவுணர்ச்சிய போக்கிக்க என் உணர்வுகள புரிஞ்சிக்காம அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.

ஆரம்பத்துல அவ்வளவு கோபம்! அதை அவக்கிட்ட வெளிப்படுத்தி கூட இருக்கேன். ஆனா, என் அப்பா எடுத்த முடிவு தப்பில்லைன்னு நான் புரிஞ்சிக்கிற மாதிரி நடந்துக்கிட்டா என் ரிது. எவ்வளவு திட்டினாலும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டா. ஏதோ அவள பிடிக்க ஆரம்பிச்சது. ஆனா, அந்த சந்தோஷத்துலயும் ஒரு மூட்டை மண்ணை வாரி போடுற மாதிரி அவ யாருன்னு தெரிய வந்திச்சு. அப்போ என்னோட மனநிலையை யோசிச்சி பார்த்தீங்களா? என்னை எல்லாரும் ஏமாத்தியிருக்கீங்க. என்கிட்ட மறைச்சியிருக்கீங்க. அந்த கோபத்துல அவள வச்சி அந்த குடும்பத்தை பழிவாங்க நினைச்சேன். ஆனா, இந்த பாழாபோன காதல் அதை கூட ஆரம்பத்துல பண்ண விடல.

அவளோட நான் வாழ்ந்த ஒவ்வொருநொடியும் பொய் கிடையாது. என் குழந்தைய என் ரிது சுமக்குறான்னு தெரியும் போது அவ்வளவு சந்தோஷம். மனசுல இருக்குற கோபத்தையெல்லாம் தூக்கிபோட்டுட்டு நான், என் ரிது, என் அம்முன்னு அழகா ஒரு வாழ்க்கைய வாழலாம்னு யோசிச்சேன். ஆனா, அம்மா நியாபகம் வரும் போது உண்டாகுற கோபத்தை என்னாலயே கட்டுப்படுத்த முடியல. எங்க அந்த கோபத்தால ரிதுவை காயப்படுத்திருவேனோன்னு அவ்வளவு பயப்படுவேன். அந்த வேதனையெல்லாம் உங்களுக்கு புரியாது.

ஆனாலும், முட்டாள்தனமா ரிது என்னை விட்டு போக மாட்டான்னு ஒரு நம்பிக்கையில ஏதோ பண்ண போய் அவள இழந்துட்டு நிக்கிறேன். முட்டாள் ப்பா அவ! என் காதல் அவளுக்கு புரியல” என்றுவிட்டு யாதவ் விழிகளிலிலுந்து வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை துடைக்க, அதுவோ விடாது வழிந்துக் கொண்டிருந்தது.

மஹாதேவனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் பேசியதில் ‘தன் மகனை தானே புரிந்துக் கொள்ளவில்லையா?’ என்று அவர் அதிர்ந்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, தன் தந்தையை அழுத்தமாக பார்த்த யாதவ், “இப்போவாச்சும் சொல்லுங்கப்பா. ரித்விகா இளமாறன் பத்தி எல்லாருக்கும் தெரியட்டும்” என்று சொல்ல, உத்ராவை தவிர எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

ஒரு பெருமூச்சுவிட்ட மஹாதேவன் நடந்ததை சொல்ல தொடங்கினார்.

“ரித்விகா இளமாறன் தான். என் நண்பன் இளாவோட பொண்ணு. ரித்வி அப்படியே அவ அம்மா ருபிதா மாதிரி. ருபிதா ரொம்பவே வெகுளி. அம்மா, அப்பா இல்லை. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பொண்ணு கூட. இளாவோட அம்மா தேவகி இந்த ஜாதி, மதம் எல்லாம் பார்க்க மாட்டாங்க. ஆனா, அவங்க புருஷன் சுந்தரம் அப்படி கிடையாது. அப்போ அதிபாவுக்கு ஒருவயசு இருக்கும். இளாவோட காதல் அவன் வீட்டுக்கு தெரிய வரவும், சுந்தரம் ருபிதாவ ஊரை விட்டே அனுப்ப திட்டம் போட்டாரு.

எங்களுக்கு வேற வழி தெரியல. இளாவோட அப்பா மேல இருந்த பயத்துல யாருக்கும் தெரியாம இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சோம். இளாவுக்கு கொழும்புல வேலை கிடைக்கவும், அவங்கள அந்த ஊருல விட்டுட்டு நாங்க மறுபடியும் இங்க வந்ததும் தான் பிரச்சினையே பெருசாச்சு. அந்த பிரச்சினையில நான் என் சாருவ இழந்துட்டேன்” என்று நிறுத்தியவருக்கு அந்த நினைவுகளில் கண்கள் சட்டென கலங்கின.

யாதவ்வோ இறுகிய முகமாக தரையை வெறித்தவாறு நிற்க, தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் நடந்ததை சொல்ல தொடங்கினார் மஹாதேவன்.

“ஏற்கனவே இரண்டு குடும்பத்துக்கும் பலவருஷமா பிரச்சினை. எங்க குடும்பத்தை சுந்தரத்துக்கு எப்போவும் பிடிக்காது. இதுல நான் தான் இளாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்னு தெரிஞ்சி ஊருல பெரிய களவரமே பண்ணிட்டாரு அவரு. அப்போ சண்டையில வாக்குவாதம் அதிகமாகி கோபத்துல கையிலிருந்த அருவாளால எங்களை சமாதானம் பண்ண குறுக்க வந்த சாருவ வெட்டிட்டாரு” என்றுவிட்டு மஹாதேவன் அழ, பெரியவர்களோ அந்த சம்பவத்தால் உண்டான தாக்கத்தில் கலங்கிப்போய் நின்றிருந்தனர்.

“அன்னைக்கு அவர் பண்ண காரியத்தால இளாவும், தேவகி அம்மாவும் தான் ரொம்ப குற்றவுணர்ச்சியில தவிச்சாங்க. ஏன் இப்போ வரைக்கும் தேவகி அம்மாவுக்கு அந்த குற்றவுணர்ச்சி இருக்கு. ரித்வியோட பதிமூனு வயசுல இளாவுக்கும், ருபிதாவுக்கும் ஒரு ஆக்சிடன்ட் ஆச்சு. ஆனா, இளா மட்டும் ஆஸ்பத்திரியில அவன் உயிரை கையில பிடிச்சி அவன் பொண்ண என்கிட்ட ஒப்படைச்சிட்டு உயிரை விட்டான். அப்போ தான் ரித்விய இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்று சொன்னவர் தளர்ந்துபோய் சோஃபாவில் தொப்பென்று அமர, “அப்பா…” என்று பதறியபடி அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தான் அதிபன்.

“அப்போ என்னால ரித்விய பத்தி சொல்ல முடியல. எங்க அவள பத்தி தெரிஞ்சா, யாராச்சும் அவள காயப்படுத்திருவாங்களோன்னு பயம்!  ஆனா, அன்னைக்கு எதுக்காக பயந்து மறைச்சேனோ அதையே என் பையன் பண்ணிட்டு வந்து நிக்கிறான்” என்றுவிட்டு அவர் யாதவ்வை முறைக்க, தவறு செய்துவிட்ட குழந்தையாய் தலைகுனிந்து நின்றிருந்தான் அவன்.

“என்னை மன்னிச்சிருங்கப்பா. புரியுது, பெரிய தப்பு பண்ணிட்டேன். அவ என்னை விட்டு போன அந்தநொடியே புரிஞ்சிக்கிட்டேன்ப்பா. நானே போய் ரிதுவ கூப்பிடுறேன். அவளால என்னை விட்டு இருக்க முடியாதுப்பா. கண்டிப்பா நான் கூப்பிட்டதுமே வந்துருவா” என்று யாதவ் உறுதியாக சொல்ல, நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டனர் இரட்டை சகோதரர்கள்.

“இவ்வளவு நடந்ததுக்கு அப்றமும் நீ கூப்பிட்டதுமே அவ உன் பின்னால வந்துருவான்னு எந்த நம்பிக்கையில சொல்லுற. ரித்வியே கோபப்பட்டிருக்கான்னா அவள நீ எந்தளவு காயப்படுத்தியிருக்கனும்? கண்டிப்பா அவ உன்னை மன்னிக்கிறது சந்தேகம் தான்” என்று இந்திரன் கோபமாக சொல்ல,

“தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்காக எல்லாம் அவ என்னை விட்டு போகும் போது பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. போய் கூப்பிடுறேன். வரலன்னா கடத்திட்டு வருவேன்” என்ற யாதவ்வின் வார்த்தைகளில் இந்திரனோ “க்கும்! இவனெல்லாம் திருந்தவே மாட்டான்” என்று வாய்விட்டே சொன்னான்.

தன் மகனெதிரே வந்து நின்ற மஹாதேவன், “நானும் உன் கூட வர்றேன். ரித்விமா கூட நானும் பேசனும். ஆனா ஒன்னு, நீ அவள கூப்பிட்டும் அவ வரலன்னா அதுக்கு மேல அவள நீ கட்டாயப்படுத்தக் கூடாது. அவ அழுறதை என்னால பார்க்க முடியாது” என்று அழுத்தமாக சொல்ல, ‘க்கும்! அவளுக்கு அந்த வோட்டர் டேப் அ திறக்க சொல்லியா தரனும்? ஆனா ஊனா ஆரம்பிச்சிருவா. சரியான அழுகாச்சி!’ என்று நொடிந்துக் கொண்ட யாதவ், “வர்றேன்டி. விட்டுட்டு வந்த தானே! வந்து உன்னை வச்சிக்கிறேன்” என்றுவிட்டு தனதறைக்குச் செல்ல, சுற்றியிருந்தவர்களுக்கு தான் இவனின் மாறாத இயல்பில் ‘அய்யோ!’ என்றிருந்தது.

ஆரனோ யாதவ் வந்த விடயம் தெரிந்து உத்ராவிற்கு தொடர்ந்து அழைக்க, அவளால் அழைப்பை ஏற்க முடிந்தால் தானே! சுற்றி மொத்த குடும்பத்தினரும் நின்றிருக்க, யாதவ் பேசிமுடித்து அறைக்கு சென்றதுமே தனதறைக்கு ஓடி வந்து ஆரனுக்குத் தான் அவசரமாக அழைத்தாள்.

“உத்ரா, என்ன நடக்குது இங்க? வீட்டுக்கு வந்து கதவை சாத்தினவ தான் கதவை திறக்கவே மாட்டேங்குறா. என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சா தானே ஏதாச்சும் பண்ணலாம். ஆமா, அவன் வந்திருக்கானாமே… என்ன தான் இவங்களுக்குள்ள பிரச்சினை?” பேசிக்கொண்டே சென்ற ஆரன், உத்ரா நடந்ததை சொல்லவும் அதிர்ந்து விழித்து பின் கோபத்தில் கைமுஷ்டியை இறுக்கினான்.

“அவனுக்கு எவ்வளவு தைரியம்? ச்சீ… இவனுக்கு போயா அந்த பெரிய மனுஷன் கட்டி வச்சாரு? எங்க குடும்பத்தை பழிவாங்க அவனுக்கு வேற வழியே தெரியல்லையா? எல்லாம் பண்ணிட்டு ‘தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு’ன்னு சொன்னதும் இவன் பின்னாடி நாய் மாதிரி அவ வந்துருவாளா என்ன? அவன் மட்டும் என் எதிர்ல நின்னா அவ்வளவு தான்” ஆரன் அத்தனை ஆவேசமாக பேச,

“அத்தான், நீங்க கோபப்படாதீங்க! எனக்கென்னவோ அவர் பண்ண தப்ப உணர்ந்து பேசுற மாதிரி தான் தோனுது. ஆனா, இதுல நாம தலையிட முடியாது” என்று பேசிக்கொண்டே சென்றவள், “உத்ரா…” என்ற தன்னவனின் அழைப்பில் அதிர்ந்து சிலையாக சமைந்தாள்.

“அத்தான், நான் அப்றம் பேசுறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள், “சொல்லுங்க மாமா” என்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் சொன்னவாறு திரும்ப, தன்னவளையே கூர்மையாக பார்த்தவாறு அவளை நெருங்கி நின்ற சந்திரன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு, “இதுக்கு மட்டும் பதில் சொல்லு! ரித்வி உன் சித்தப்பா பொண்ணுன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று அழுத்தமாக கேட்டான்.

உத்ராவுக்கோ குற்றவுணர்ச்சியுடன் கூடிய பயம்!

எதுவும் பேசாது திருதிருவென விழித்தவாறு கைகளை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தவள், “பதில் சொல்லு உத்ரா!” என்ற சந்திரனின் அழுத்தமான வார்த்தைகளில், “அது… அது வந்து… என்னை மன்னிச்சிருங்க. நான் மறைக்கனும்னு நினைக்கல. தெரிஞ்சா பிரச்சினை ஆகும்னு… ரித்வி தான்…” என்று இழுத்து இழுத்து தயங்கியவாறு பேச, சத்தமாகவே சிரித்துவிட்டான் சந்திரன்.

“எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரித்விக்கு பிரச்சினையாகுமேன்னு ரித்வி சொன்னதால சொல்லல்ல. அதானே! இதை சொல்றதுக்கு எதுக்குடி இத்தனை தயக்கம்?” சந்திரன் சாதாரணமாகவே கேட்க, சட்டென்று நிமிர்ந்து அவனை நோக்கியவள், “உங்களுக்கு கோபமே வரலையா? நான் உங்ககிட்ட மறைச்சிட்டேன்னு…” என்று அதிர்ந்துப்போய் கேட்டாள்.

“உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அதை தான் பண்ணியிருப்பேன். நாம ஒருத்தர் பண்ண தப்புக்கு கோபப்படும் போது ஒருவேள, நாம அந்த இடத்துல இருந்தா என்ன பண்ணுவோம்னு ஒருநிமிஷம் நிதானமா யோசிச்சா போதும். எனக்கு புரியுது உத்ரா. பட், இருந்தாலும் நீ சொல்லியிருக்கலாம்” என்று கடைசி வசனத்தை அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் சொல்ல, “ஏங்க, உங்களுக்கு அதிகமா கோபம் வரும். முரட்டு பீஸு, முசுடு அப்படி இப்படின்னு சொன்னாங்க. ஆனா நீங்க…” என்று பேசிக்கொண்டே சென்றவளுக்கு நிஜமாகவே அத்தனை ஆச்சரியம்!

மென்மையாக சிரித்த சந்திரன் மூச்சு காற்று படும் தூரத்திற்கு தன்னவளை மேலும் நெருங்கி அவளின் இடையை வளைத்து, “ஆமா, முசுடு தான். கோபக்காரன் தான். ஆனா, உன்கிட்ட மட்டும்…” என்று இழுத்தவாறு அவளின் காதில் சில ரகசியங்களை பேச, அதில் வாயை பிளந்தவளுக்கு வெட்கத்தில் முகமே சிவந்துவிட்டது.

இங்கு ஆரனோ தேவகியிடம் நடந்ததை சொல்ல, அவருக்கோ யாதவ் மீது கோபம் வந்தாலும் அதைவிட அதிகமாக அவர் மனதை பிசைந்தது குற்றவுணர்ச்சி தான்!

‘அன்று தன் கணவர் செய்த காரியத்தின் விளைவு இன்று தன் பேத்தியின் வாழ்க்கையை பாதித்துவிட்டதே!’ என்ற குற்றணர்ச்சி அவருக்கு! கலங்கிய விழிகளுடன் ரித்வி இருந்த பூட்டிய அறையையே வெறித்துப் பார்த்தார் அவர்.

அடுத்த சில மணிநேரங்களிலே யாதவ்வும், மஹாதேவனும் தேவகியின் வீட்டின் முன் நிற்க, ரித்வியை தவிர மொத்த குடும்பத்தினருமே வீட்டு வாசலில் நின்றிருந்தவர்களை தான் முறைத்துப் பார்த்திருந்தனர்.

இதில் மஹாதேவனோ ஒருவித தயக்கத்துடன் நின்றிருந்தார் என்றால், ‘ரிது…’ என்று மானசீகமாக அழைத்தவாறு தன்னவளை  கண்களை சுழலவிட்டு தேடியவாறு நின்றிருந்தான் யாதவ்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!