Mazhai – 16

Mazhai – 16
அத்தியாயம் – 16
விஜயலட்சுமி அழுவதைக் கண்டு அருகே வந்த கான்ஸ்டபிள், “டிரிங் அண்ட் டிரைவ் கேஸ்மா. இவரோட கார் இடிச்சதால் ஆப்போஸிட்ல வந்த பார்ட்டியும் ஸ்பார்ட் அவுட். இந்தாள் குடிக்காமல் இருந்திருந்திருந்தால் எதிரே வந்த டேங்கர் லாரியில் அடிபடாமல் தப்பிச்சிருக்கலாம். நான்கு வழி சாலை வேறு. சிக்னல் வேரூ இல்லாத பாதை என்பதால் இப்படி ஆகிடுச்சு” என்று நெஞ்சில் ஈரமின்றி சொல்ல, சிற்பிகாவின் மனம் நடந்ததை கற்பனை செய்து பார்த்தது.
சின்ன படம் பார்த்தாலே பிள்ளைகள் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடும். அப்படியிருக்க அந்த விபத்து எப்படி நடந்தது என்று அவளாக யோசிக்க மனக்கண்ணில் படமாக விரிந்தது.
ஏற்கனவே குடிபோதையில் இருந்த வசந்தராஜ் பாருக்கு செல்ல வலதுபக்கம் வண்டியைத் திருப்ப, அது ஒன்வே என்பதால் அந்த வழியாக வந்த பைக்கில் கார் மோதிவிட, அந்த நபர் வானளவுக்கு தூக்கி எரியபட்டு கீழே விழுந்தார். அந்த காட்சியைக் கண்ட வசந்த் பதட்டத்துடன் காரை ரிவர்ஸ் எடுத்து எதிர்புறம் சாலையில் திருப்ப, அந்த வழியாக வந்த டேங்கர் லாரியில் அதிவேகத்துடன் கார் மோதியதால், அதன் முன்பகுதி நொறுங்கிட அந்த இடத்திலேயே அவரும் இறந்து போனார்.
தாயின் அழுகுரல் சத்தம்கேட்டு நடப்பிற்கு வந்த சிற்பிகாவிற்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. தன்னுடைய தந்தையின் இன்றைய நிலைக்கு அவரது குடிப்பழக்கம் ஒரு முக்கியக் காரணம் என்று தெரிந்ததும் அவளின் மனம் இறுகிப்போனது.
அப்போது இவர்களின் கார் மோதி இறந்த நபரின் மனைவி கையில் பெண் குழந்தையும், கையில் அவளைவிட பெரிய பையனையும் பிடித்துக்கொண்டு அழுகையுடன் நிற்பது கண்டு, ‘இவங்களுக்கும் இனி என்னை மாதிரி அப்பா இல்ல’ என்று நினைத்தாள்.
மருத்துவமனையில் அனைத்தும் முடிந்து வீட்டிற்கு உடலை எடுத்து வந்தனர். வசந்தராஜ் இழப்பு திவாகரை வெகுவாக பாதித்தது. தன்னுடன் சிரித்து விளையாடும் சிற்பிகா பைத்தியம் பிடித்தவளைப் போல ஓரிடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, “பாப்பா அழுதா கொஞ்சம் பாரம் குடையும் இப்படியே இருக்காதே கண்ணம்மா” அவன் சொன்ன சமாதானம் எதுவும் அவளிடம் எடுபடாமல் போனது.
வசந்த்ராஜின் உடலை அடக்கம் செய்யும் வரை உடனிருந்த உறவினர்கள் கூட்டம் குறைந்து வீடே வெறிச்சோடிக் காணப்பட்டது.பூ பொட்டு அனைத்தையும் இழந்து அழுகையில் கரைந்த தாயைப் பார்க்கும்போது அவள் கண்களில் வலி பரவியது.
மரகதம் – திவாகர் இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தபோது இழந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. நாட்கள் அதன் போக்கில் செல்ல, சிற்பிகாவை பள்ளிக்கூடம் அழைத்துச் செல்ல தொடங்கினான்.
அவளின் நண்பர்களும் அவளை பரிதாமாக பார்க்க, “எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கல” என்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்தவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறினாள் விஜயலட்சுமி.
அந்த சமயத்தில் அவளைத் தேடி இரண்டு கான்ஸ்டபிள் வீட்டிற்கு வரவே, “என்ன விஷயம்” என்று அவர்களிடம் விசாரிக்க, “உங்க காரில் அடிபட்டு இருந்த நபரின் மனைவி கேஸ் கொடுக்க மறுத்துட்டாங்க. அப்படி அவங்க கேஸ் கொடுத்தால் அதற்கு நீங்க நஷ்டஈடு கொடுக்கணும். அதனால் என்னன்னு உங்களுக்குள் பேசி முடிவெடுங்க” என்றனர்.
கணவன் புகைப்படம் பார்த்தவள் கலங்கிய விழிகளைத் துடைத்த கையுடன் படுக்கையறைக்கு சென்று சில பேப்பர்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அவளின் வாடிய முகம் பார்த்த மரகதம், “உன் உடம்புக்கு தெம்பு வேணும்மா. அதனால் இந்த பாலைக் கொஞ்சம் குடி” என்று கொடுக்க, அதை வாங்கி குடித்துவிட்டு மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டை விசாரித்து அங்கே சென்றாள்.
சிறிய ஓட்டு வீட்டின் முன்பு குழந்தை, “அப்பா” என்று அழுது கொண்டிருக்க, தங்கையை சமாதானம் செய்த சிறுவனிடம், “இங்கே சந்திரா” என்று கேட்டாள் விஜயலட்சுமி.
ஏற்கனவே அவளை அடையாளம் கண்டு இருந்த சிறுவன், “எங்கம்மாதான்” என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கே புகைப்படமாக இருந்த நபரின் முகம் பார்த்துவிட்டு, ‘இவர் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் அன்னைக்கு இந்த நபரின் உயிர் போயிருக்காதே’ என்று நினைத்தாள்.
அதற்குள் அங்கே வந்த சந்திராவிற்கு அவளைக் கண்டவுடன் அழுகை வர, “வாங்க” என்று அழைத்து கலங்கிய விழிகளைத் துடைத்தபடி, கணவனின் புகைப்படத்தின் கீழ் சோர்வாக அமர்ந்தாள்.
“எங்களால் தானே உங்களுக்கு இந்த நிலை” என்றாள் விஜி வருத்தத்துடன்.
அவளைப் பார்த்து கசப்புடன் புன்னகைத்த சந்திரா, “இப்படித்தான் நடக்கணும்னு தலையில் எழுதிய எழுத்தை யாரால் மற்ற முடியும்னு சொல்லுங்க” என்றாள்.
சிற்பிகா அங்கே விளையாடிய குழந்தையையும், அவளுக்கு காவலாக நின்ற தமையனையும் பார்த்து, “அவங்க பாவம் இல்லம்மா” என்றாள் மகள் கண்களில் வலியுடன்.
தானும் அந்த நிலையில் இருப்பதை பெரிதாக நினைக்காத சிற்பிகாவை அருகே அழைத்த சந்திரா அவளின் கன்னத்தில் முத்தமிட, “எங்கப்பாகிட்ட இந்த பழக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கல. நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கல. அவரால்தான் இந்த விபத்து நடந்ததுன்னு கான்ஸ்டபிள் அங்கிள் சொன்னாரு. ஸாரி” என்று தன் மழலைக் குரலில் அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.
அவளது புரிதலான பேச்சைக்கேட்டு மனம் நெகிழ்ந்து போக, “நீ எதுக்குடா மன்னிப்பு கேட்கிற. சிலரோட வாழ்க்கையில் பல விஷயம் எதிர்பாராமல் தான் நடக்குது. அதை புரிஞ்சிக்கிற மனசு சிலருக்கு மட்டும்தான் கண்ணு இருக்கு. அப்படி பார்த்தால் உன்னோட பேச்சு எனக்கு ஆறுதலாக இருக்குடா” என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
தன்னுடைய நிலையில் இருக்கும் அந்த பெண்ணைப் பார்த்து, “நீங்க கேஸ் கொடுக்கல என்று சொன்னாங்க” என விஜி கேட்க, அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
அதுக்கு என்ன காரணம் என்று அவள் விசாரிக்கும் முன்பே, “நீங்களும் என்னை மாதிரி கணவனை இழந்துட்டு நிர்கதியாக நிக்கிறீங்க. உங்களிடம் நஷ்டஈடு வாங்கினால் மட்டும் செத்தவர் திரும்பி வர போகிறாரா? இந்த நிலையில் மத்தவங்க சொல்வதைக் கேட்டு உங்களுக்கு நான் கஷ்டத்தை கொடுக்க விரும்பல” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
தன்னுடைய கணவன் இறந்தபோதும் கோபபடாமல் நியாயத்தின் பக்கம் நிற்கும் சந்திராவின் குணம் மனதிற்கு அமைதியைக் கொடுக்க, “அவர் இருக்கும் வரை எந்த கடனையும் வாங்காமல் குடும்பம் நடத்தியதால் கை இருப்பு என்று சொல்ல என்னிடம் எதுவும் இல்லைங்க. இப்போ என் கையில் இருப்பது நாங்க ஆசையாக கட்டிய வீடு மட்டும்தான். அதனால் அதை உங்க பெயரில் எழுதி தந்து விடுகிறேன். இதை நீங்க மறுக்காமல் ஏத்துக்கணும்” விஜயலட்சுமியின் பேச்சைக் கேட்டு மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்லங்க எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவர் எவ்வளவோ மறுத்தும் கேளாமல், தன்னுடைய வீட்டை சந்திராவின் பெயருக்கு மாற்றி பத்திரம் போட்டுக் கொடுத்துவிட்டாள்.
வால்பாறையில் சந்தோசமாக தொடங்கிய அவளின் காதல் வாழ்க்கை அதே ஊரில் அஸ்தமனம் ஆனது. வீட்டில் இருந்த ஆடம்பரமான பொருட்களை பாதி விலைக்கு விற்றுவிட்டு, தேவைக்கு ஏற்ற பொருட்களை மட்டும் லாரியில் ஏற்ற சொன்னாள்.
இவர்கள் பொருட்களை எல்லாம் லாரி ஏத்திக் கொண்டிருக்க, “விஜிம்மா நீங்க எங்கே போறீங்க. என்னிடம் சொல்லுங்க நானும் வர்றேன். என்னால் என் தங்கச்சியைப் பிரிந்து இருக்க முடியாது” என்று அடம்பிடித்த திவாகரை அவளால் சமாளிக்க முடியவில்லை.
கண்களில் கண்ணீர் வழிய நின்ற சிற்பிகாவை பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்ற பேரனின் அருகே சென்ற மரகதம், “நீ பக்கத்தில் இருக்கிற வரை உன்னால முடிஞ்சா உதவியை செஞ்ச. இனிமேல் நீ தனியாகப் பாடுபட்டு என்ன செய்ய போறன்னு சொல்லு” என்று கூறியவரின் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு புன்னகைத்தாள் விஜயலட்சுமி.
“கோவைக்கு தான் அம்மா போறேன். அங்கே ஒரு ஏரியாவில் குறைந்த வாடகைக்கு வீடு எடுத்து இருக்கேன். அடுத்து பக்கத்தில் இருக்கும் கவர்மெண்ட் ஸ்கூலில் சிற்பிகாவை சேர்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு போலாம்னு இருக்கேன்” என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு வலியுடன் கூறினாள்.
தனக்கு உதவி செய்த பெண்ணை தனித்துவிட மனமின்றி, “எனக்கும் இங்கே பெட்டிக்கடை ஓட்டம் இல்ல. இவனும் பெரியவன் ஆகிட்டான். இதுக்குமேல் மேல்படிப்புக்கு கண்டிப்பா வெளியூர் போகணும். அதனால் நானும் உன்னோடு வர்றேன்” என்றார் பெரியவள்.
“இல்லம்மா” என்றவள் மறுப்பு சொல்ல வாய்திறக்க, “இந்த காலத்தில் யாரை நம்பி பிள்ளையை விட்டுட்டுப் போவ. நானும் உன்னோடு வந்தால் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கும். இவனும் பக்கத்தில் இருப்பதால் சிற்பிகாவை நல்லா பார்த்துக்குவான். நான் பெட்டி கடையைப் பார்த்துக்கிறேன்” என்று கூறி அவளை சம்மதிக்க வைத்தாள்.
அவர்கள் செல்ல இருந்த வீட்டிற்கு அருகிலேயே மரகதம் அம்மாவிற்கு ஒரு வீட்டைப் பார்த்து குடிவைத்துவிட்டு, பருத்தி ஆபீசிற்கு வேலைக்கு போனாள். நாட்கள் நீரோடைபோல அமைதியாக நகர்ந்தது.
ஆடம்பரமாக இல்லாமல் அழகான ஒரு வாழ்க்கை என்று சொல்லலாம். தன்னால் முடிந்தளவு இரு பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள். அவர்களின் தேவைக்குப் போக மீதம் பிடித்த பணத்தை மகளின் மேல்படிப்பிற்காக சேர்க்க தொடங்கினாள். கணவன் இருக்கும்போது வாங்கிக் கொடுத்த நகையை விற்றுவிட்டு மகளின் பெயரில் வங்கி கணக்கில் போட்டு வைத்தாள்.
இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தது.
திவாகர் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான். அன்று ஏதோ சிந்தனையுடன் அவள் வீட்டிற்குள் நுழையும்போது, “இனிமேல் இப்படி செய்வீயா?” என்று கேட்டு அவனை அடிக்கத் துரத்திக் கொண்டிருந்தாள் சிற்பிகா.
“ஏய் பிசாசு எதுக்குடி இந்த அடி அடிக்கிற? இனிமேல் சத்தியமா அதை கையில் கூட தொடமாட்டேன். உன்னைப் போய் குழந்தை என்று சொல்றாங்களே. இவளிடம் இருந்து என்னை யாராவது காப்பாருங்க” என்று அடியின் வலி தாங்க முடியாமல் அலறினான் திவாகர்.
ஆரம்பத்தில் பிள்ளைகள் விளையாடுவதாக நினைத்த விஜிக்கு மகளின் கோபம் வித்தியாசமாக தோன்றியது. எந்தநேரமும் அண்ணா என்று அவனையே சுற்றி வருபவளுக்கு இன்று என்ன ஆனது என்று அவள் சிந்திக்க, மரகதத்தின் குரல் காதில் விழுந்தது.
“என்னாலதான் அவனை அடிக்க முடியல. நீயாவது அடி.. என் பெயரைச் சொல்லி இன்னும் நாலு போடு குட்டிம்மா. இனி அவன் அந்த கருமத்தை கையில் தொடவே கூடாது” அழுதபடி பேசுவதும் அவள் காதில் விழுந்தது.
தான் கையுடன் வாங்கி வந்த காய்கறிகளை அங்கேயே வைத்துவிட்டு பின்பக்கம் சென்று பார்க்க, சிற்பிகா வெறி பிடித்தவள்போல திவாகரை அடித்து துவைக்க, “உன்னைவிட ஏழு வயசு பையனை அடிக்கிற?” என்று அதட்டிய விஜயலட்சுமி, பக்கத்தில் கிடந்த குச்சியை எடுத்து அவளை அடி வெளுத்து விட்டாள்.
திவாகர் வாங்கியதைவிட இருமடங்கு அதிகமாக வாங்கியவள் கடைசி வரை அழுகாமல் ஒருவிதமான இறுக்கத்துடன் நிற்பதைக் கண்டு, “விஜிம்மா அவ என்னைத்தானே அடிச்சால் விடுங்க. என் கண்முன்னாடி என் தங்கச்சியை அடிக்காதீங்க” என்று இடையில் புகுந்து அவன் உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டான்.
“ஏய் எதுக்காக அவனை அடிச்ச?” என்று விஜி அவளிடம் கேட்க, இப்போதும் பதில் சொல்லாமல் தமையனை முறைத்தாள் சின்னவள்.
அதற்கும் சேர்த்து அவள் அடிப்பதைப் பார்த்த மரகதம், “என்ன நடந்தது என்று தெரியாமல் குழந்தையின் மீது கோபத்தைக் காட்டாதே” என்று கண்டிப்புடன் கூறியவர், சிற்பிகாவை தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.
மூவரின் முகத்தையும் பார்த்த விஜி, “என்ன நடந்தது?” என்று பொதுவாக கேட்டாள்.
“ம்ஹும்! இவன் சேராத ஆளுங்களோட சேர்ந்து குடிச்சிட்டு வந்தான். அதை உன்மகள் கண்டு பிடித்துவிட, அப்புறம் என்ன அவனுக்கு பூசையை தன் கையால் நடத்திவிட்டாள். அவன்பக்கம் தவறு இருப்பதை தெரியாமல் இவளை எதுக்காக அடிக்கிற?” என்று விஜியிடம் சண்டைக்கு வந்தார் மரகதம்.
அவர் சொன்னதைக்கேட்டு தலையில் இடிவிழுந்தது போல தரையில் சரிந்து அமர்ந்தவள், “நீயடா அப்படி பண்ணின?” என்று நம்பாமல் கேட்க, அவன் பதில் சொல்லாமல் தலைகுனிந்தான்.
அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்ட சிற்பிகா, “அண்ணா அப்படி செய்தது எனக்கு பிடிக்கலம்மா. அதுதான் அடிச்சிட்டேன். நம்ம அப்பாவை இந்த குடிதானே கெடுத்தது. அது நம்மோடு போகல இல்ல” என்றாள்.
சிற்பிகாவின் கலங்கிய கண்களைப் பார்த்த திவாகர் அவளிடம் மன்னிப்புக் கேட்க, “நீயும் ஏன் இப்படி குடிக்கிற? அப்பாவை நான் எந்த நிலையில் பார்த்தேன் தெரியுமா? அதை நீ நேரில் பார்த்து இருந்தால் இப்படி செய்வீயா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“நீ படிக்கத்தானே காலேஜ் போன? இப்படி குடிப்பழக்கம் கத்துக்கத்தான் உன்னை பாட்டி பீஸ் கட்டி படிக்க வைக்குதா? இந்த குடிதான் எல்லோரின் குடியையும் கெடுக்குதுன்னு உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது. அதனால் ஏற்படும் விபத்து கொஞ்சமா நஞ்சமா? அதை எல்லாம் தினமும் பேப்பரில் நியூஸ் எல்லாத்திலும் பார்த்தபிறகு அப்புறம் எதுக்காக அதை குடிக்கிறீங்க?” என்று ஆதங்கத்துடன் வெடித்த மகளைப பார்த்து அதிர்ந்தாள்.
பதினொரு வயதிலேயே நியூஸ் பேப்பர் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் குடிப்பதால் ஏற்படும் விபத்துகள் பற்றியும், அதனால் தினமும் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது என்று புள்ளி விவரம் சொல்லும் அளவிற்கு தேறியிருந்தாள்.
இரண்டு கரங்களுக்கு இரண்டு வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்த்த மகள் இன்று தந்தையைத் தொலைத்துவிட்டு பேசுவதைப் பார்க்கும்போது விஜியின் கண்களில் கண்ணீர் பெருகியது.
தன்னுடைய கண்களைத் துடைத்த மகள், “இன்னொரு முறை நீ அந்த கருமத்தை கையில் தொடும் முன்பு இன்னைக்கு வாங்கிய அடியை மனசில் வச்சுக்கோ. அடுத்த முறை நீ குடிச்சே அவ்வளவுதான்” என்று நேரடியாக கண்டித்தவள் அழுதபடி அறைக்குள் ஓடிப்போனாள்.