Uyir Vangum Rojave–EPI 2

ROSE-b22028c7

Uyir Vangum Rojave–EPI 2

அத்தியாயம் 2

ஒரு ஆண் தனது இரண்டாவது தாயையும்

ஒரு பெண் தனது முதல் குழந்தையையும் தேடுவதே காதல்

 

அதே நாள் காலை,

லொட்டஸ் அபார்ட்மென்ட், வில்லிவாக்கம்

“காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா” என பாடியவறே வந்து தன் அம்மா இந்துவை பின்னாலிருந்து கட்டிப் பிடித்துக் கொண்டான் மலர்வேந்தன்.

“விடுடா, வேந்தா. என் மேல எல்லாம் மசாலா வாசனை. உன் மேலயும் ஒட்டிக்க போகுது” என மகனை தள்ளினார் அவர்.

“காலையில உன்னை வாசம் பிடிக்காம எனக்கு வேலை ஓடாதுமா” என்றவன் மூடி வைத்திருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான்.

“வாவ்! தோசை அன்ட் கார சட்னி. என் செல்ல அம்மா. ஊசி மிளகா அள்ளி போட்டீங்களா?” என ஆர்வமாக கேட்டான்.

“போட்டேன் போட்டேன். குடலு வெந்து போகிற அளவுக்கு போட்டேன். போய் கை கழுவிட்டு வந்து சாப்பிட உட்காரு.”

அவன் மலர்வேந்தன். இந்துவின் மூத்த மகன். அவனுக்குப் பிறகு இன்னும் இரண்டு பெண்கள். இந்துவின் கணவர் இறந்து வருஷம் பத்து ஓடிவிட்டது. அண்ணன் தயவில் பிள்ளைகளை படிக்க வைத்தவர், அவர் வீட்டிலேயே சம்பளம் இல்லா வேலைக்காரியாய் வாழ்ந்தார். மகன் படித்து இப்போது இரண்டு வருடமாய் வேலையில் அமரவும் குடும்பத்தோடு இங்கே வாடகைக்கு வந்து விட்டிருந்தனர்.

“வேந்தா, லட்டு இன்னிக்கு சீக்கிரமா காலேஜ் போகனுமாம். என்னவோ ஸ்பேஷல் கிளாஸ் இருக்காம். உன்னை ட்ராப் பண்ண சொன்னாப்பா.” லட்டு அவர்கள் வீட்டு கடைக்குட்டி லாவண்யா. முதல் தங்கை அனுசூயா காலேஜ் முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

“சீக்கிரம் வர சொல்லுங்கம்மா. இன்னிக்கு மேய்ன் ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு. சரியான டைம்கு போகனும்” என தோசையை கார சட்னியில் குளிப்பாட்டி உள்ளே தள்ளி கொண்டிருந்தான்.

“நான் ரெடிண்ணா. நீ சாப்டவுடனே கிளம்பலாம்” என வந்தாள் லட்டு.

“லட்டும்மா, அண்ணாவோட லேப்டாப்ப மூடி பேக்குல வச்சிடுடா. இதோ வரேன்.” என கை கழுவ சென்றான் வேந்தன். தாய் மீதும், தங்கைகள் மீதும் அளவு கடந்த பாசக்காரன். கோபத்தைக் கூட சிரித்தபடியே தான் காட்டுவான். லட்டுக்கு அண்ணா தான் எல்லாம். அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். அனு மட்டும் அந்த வீட்டில் ஒரு தனித்தீவு. அமைதியானவள். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். அவள் சுபாவமே அப்படிதான் அவள் அப்பா போல்.

அண்ணனும் தங்கையும் மூன்றாவது மாடியில் இருந்து படியிலேயே இறங்கி பைக் பார்க் செய்திருந்த இடத்துக்கு வந்தார்கள். தங்கைக்கு ஹேல்மேட்டை மாட்டியவன், தானும் ஒன்றை மாட்டிக் கொண்டான்.

“அண்ணா, வேற பைக் மாத்த வேண்டி தானே? இந்த டிவிஎஸ் 50 ஓல்ட் மோடலையே எவ்வளவு நாளைக்கு ஓட்ட போறே?” என எப்பொழுதும் கேட்கும் கேள்வியையே கேட்டாள்.

“பைக் வாங்குனா புது செலவு தானே லட்டு. அந்த காசு இருந்தா அனு கல்யாண செலவுக்கு சேர்க்கலாம்ல. உங்க ரெண்டு பேரையும் கரை ஏத்திட்டன்னா அப்புறம் எனக்கு பைக் என்னா காரே வாங்கிக்குவேன்” என சிரித்தான் வேந்தன்.

“ஆமா, அப்பவும் இது மாதிரி ஏதாவது கதை சொல்லுவ. என்னைய நீ ஒன்னும் இப்படி கஸ்டப்பட்டு கரை ஏத்த வேணாம். என் செல்ல அண்ணனுக்கு நான் எந்த கஸ்டத்தையும் குடுக்க மாட்டேன். ஒன்னும் கேட்காம எனக்காக என்னை கட்டிக்க ஒரு இளிச்சவாயன் வராமலா போயிருவான்?” தன் மனக் கண் முன் வந்த, அந்த இளிச்சவாயன் பிம்பத்தை அடித்து ஓரம் கட்டி விட்டு பைக்கில் ஏறினாள் லாவண்யா.

தங்கையை காலேஜில் விட்டு கிளம்பிய பத்து நிமிடத்தில் பைக் மக்கர் செய்தது. ஓடிக் கொண்டிருந்த வண்டி அப்படியே நடு வழியில் நின்றுவிட்டது. இவனும் என்னன்னவோ செய்து பார்த்தான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மீட்டிங்கிற்கு இன்னும் முப்பது நிமிடம் தான் இருந்தது. வண்டியை தள்ளி கொண்டு வந்து பக்கத்தில் இருந்த வோர்க் ஷோப்பில் போட்டு விட்டு, அவசரமாக ஆட்டோ பிடித்தவன்,

“அண்ணா, ரோசா காண்ஸ்ட்ரக்ஷன் போங்க” என்றான்.

அயர்ன் செய்த சட்டை கசங்கி போய், வேர்த்து விறுவிறுத்துப் போய் விட்டான். மீட்டிங் ஹாலை அடைந்த போது தேவி பேசும் சத்தம் கதவின் வெளியே வரை கேட்டது. மணியைப் பார்த்தான் பத்து நிமிடம் லேட். தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு கதவை இரு தடவை தட்டி விட்டு பின் திறந்தான். என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்பது போல அவனை நோக்கி ஸ்டெப்ளர் பறந்து வந்தது. அழகாக கேட்ச் பிடித்தவன், மென்னகையோடு நிமிர்ந்து பார்த்தான். பத்ரகாளிபோல் அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள் ரோசாலியா தேவி.

சிரித்த முகத்துடன் இருந்த அவனைப் பார்த்தவள் இன்னும் காண்டாகி,

“கெட் அவுட்” என கத்தினாள்.
‘யாருடா அது நம்மள மாதிரியே கேட்ச் பிடிக்கிற ஆசாமி’ என எட்டிப் பார்த்தான் கார்த்திக்.
‘அட நம்ம வேந்தன். பய வசமா மாட்டிக்கிட்டனே’ கதவு வெளியே நிற்குமாறு அவனுக்கு ஜாடை காட்டினான் கார்த்திக். வேந்தனும் மீண்டும் கதவை சாத்திவிட்டு வெளியே நின்றான்.
அங்கே நடந்ததை மற்றவர்கள் ஒரு கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தங்கள் முதலாளியின் முன்கோபம் தெரியும். ஆனால் நேரில் பார்த்ததில்லை.
தேவி பேசி முடித்தவுடன் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அடுத்து லைப்ரரியின் வரைபடங்களை பார்க்க வேண்டிய நேரம்.
“நெக்ஸ்ட்” என்றவாறே கார்த்திக்கைப் பார்த்தாள் அவள்.
“ மேடம், இந்த பிரசெண்டேசன் செய்ய வேண்டிய நம்ம சீப் எஞ்சினியர் தான் வெளிய நிக்கிறாரு. வர சொல்லவா?”

அதைக் கேட்ட தேவியின் பார்வையில் அனல் பறந்தது. கடுப்பில் வர சொல்லுமாறு தலையை மட்டும் அசைத்தாள்.
கதவை திறந்த கார்த்திக்,
“வாங்க வேந்தன். வந்து ஆரம்பிங்க” என அழைத்தான்.
உள்ளே வந்து லேப்டொப்பை பொருத்தி ஸ்கிரினில் வரைபடத்தை வர வைத்தவன், அதை பற்றி விளக்க ஆரம்பித்தான். கை தூக்கி அவனை நிறுத்திய தேவி,
“நேம்?”
“மலர்வேந்தன் மேடம்”
“ஒகே மலர், கன்டினியு” என்றாள்.

அங்கே அமர்ந்திருந்தவர்கள் கைகளால் வாயை மூடிக் கொண்டு சிரித்தனர். நொந்து போனான் வேந்தன். அழகான தமிழ் பேர் என இந்த பெயரை வைத்த தன் அப்பாவை மனதிற்குள்ளேயே தாளித்தான்.
“மேடம், கால் மீ வேந்தன்”
கார்த்திக்கை ஒரு முறைப்புடன் பார்த்தாள் தேவி. உடனே எழுந்து வேந்தன் அருகே சென்றவன் மெதுவான குரலில்,

“மாமு, இப்ப பேரா முக்கியம்? அவங்க வாயில வந்தத கூப்பிடட்டும். அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போவியா. தேவையில்லாம வேற எதையாச்சும் பறக்க வைக்காதே. அவங்க சார்ஜ் எடுத்து வர முத பிக் ப்ராஜேக்ட் இது. அடக்கி வாசிச்சு நல்ல பேரு வாங்குவியா. அவங்க அப்பா மாதிரி இல்ல இவங்க. டெரெர் பீஸ். பாத்து மச்சி.”

“அதுக்குன்னு எப்படிடா மலர்ன்னு கூப்பிட்டா சும்மா இருக்கிறது?”

“அதானே உன் பேரு? அப்ப கம்முன்னு கெட” என்றவன் மீண்டும் அவன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

அதன் பிறகு ப்ரசென்டேஷன் வேகமாக நடந்தது. வேந்தன் பேசும் போது பார்வையை அவன் முகத்திலேயே பதித்திருந்தாள் தேவி. அவன் மேல் ஈர்க்கப்பட்டு பார்க்கவில்லை. அவன் பேசுவதை கிரகித்துக் கொள்ள தான் பார்த்தாள். அவள் கூர் விழி பார்வையில் வேந்தன் தான் தடுமாறி நின்றான்.

‘யப்பா. என்ன பார்வைடா சாமி. அப்படியே ஆளை கிழிச்சு தொங்க விடற பார்வை. ‘

முடிந்த அளவு அவளை பார்க்காமலே லைப்ரரியை எப்படி கட்டப் போகிறோம், எவ்வளவு நாள் எடுக்கும், தேவை படும் வேலை ஆட்களின் விவரம், பயன்படுத்த போகும் பொருட்களின் அளவு என கன கச்சிதமாக அலசி ஆராய்ந்தான்.

தேவி பொறுப்பு எடுத்து ஒரு வருடம் ஆகி விட்டாலும், ராகவனின் தலையீடு இதுவரை இருந்தது. இப்பொழுதுதான் முழுதாக இவளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்திருந்தார் அவர். இந்த துறையை தேர்ந்தெடுத்துப் படித்திருந்தாலும், நிஜ வேலை என வரும்போது கொஞ்சம் தடுமாற தான் செய்தாள். அவளது கடின முகம் மற்றவர்களிடம்  இருந்து இந்த தடுமாற்றத்தை மறைத்தது. கார்த்திக்கின் உதவியுடன் முடிந்த அளவு தொழிலை உள்வாங்கி கொண்டாள். அதோடு அவள் ஆபிசில் உள்ளவர்களை மட்டுமே அறிந்திருந்தாள். சைட்டில் வேலை செய்பவர்களை அவ்வளவாக இன்னும் தெரியவில்லை. அதற்கு தான் இந்த மீட்டிங். ஒரு கல்லில் இரு மாங்காய் போல ஒரே நேரத்தில் இவர்களை தெரிந்து கொண்டதோடு, ப்ராஜேக்ட் வோர்க் பற்றியும் பேசி முடித்தாகிவிட்டது.

வேந்தன் பேசி முடித்ததும்,

“குட் ஜோப் மிஸ்டர் மலர். நல்லா தெளிவா எல்லாத்தையும் பிளான் பண்ணியிருக்கீங்க. வெல் டன்” என பாராட்டியவள் அப்படியே,

“நெட்ஸ்ட் டைம் பீ பங்சுவல்” என ஒரு குட்டும் வைத்தாள்.

பிறகு மற்றவர்களைப் பார்த்து,

“உங்க எல்லாரையும் மீட் பண்ணதுல சந்தோஷம். இன்னிக்கு லன்ச் ஏற்பாடு பண்ணியிருக்கோம். சாப்பிட்டுட்டு சைட்டுக்கு போங்க” என கைக் கூப்பி விட்டு ரூமை விட்டு வெளியேறினாள்.

அவளை தொடரும் முன்,

“மச்சி, ஏன் லேட்டு? முதல் இம்ப்ரெசன்லயே அவுட்டாயிட்டீயே.” வேந்தனும் கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், கிளாஸ்மேட்ஸ்.

“தங்கச்சிய காலேஜ் விட்டுட்டு வரப்ப, பைக் மக்கர் பண்ணிருச்சுப்பா” சலித்துக் கொண்டான்.

“லட்டு எப்படி இருக்கா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுடா”

“டேய், அடங்கவே மாட்டியா? அவள அப்படி கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லுறது” எகிறினான் வேந்தன்.

“இப்படி கோவிச்சுக்காதே மச்சான். மனசுக்குள்ள நினைக்கிறது அப்படியே வாயில வந்துருச்சு” என கண் அடித்து விட்டு தேவியின் பின்னால் ஓடினான் கார்த்திக்.

‘என் கிட்டயே என் தங்கச்சிய மனசுல நினைக்கிறேன்னு சொல்லிட்டு போறான். படவா! சரியான ப்ளேபாய். இருடா கார்த்திக், மூஞ்சி புக்கு ப்ளேபாய் போஸ்டுல இன்னை டேக் பண்ணி விடுறேன். அதுக்கு முன்ன தனியா மாட்டட்டும் துவைச்சு தொங்க விட்டுருறேன்.’ கருவிக் கொண்டே லன்ச் செர்வ் செய்யப்பட்டிருக்கும் பேன்ட்ரிக்கு சென்றான் வேந்தன்.

மனசு முழுக்க தேவி மலர் மலர் என கூப்பிட்ட கடுப்பு வேறு சேர்ந்து கொண்டது. பேசாமா போய் பேர மாத்தி வைச்சிக்கலாமா என மனம் தீவிரமாக யோசித்தது. சாப்பிட்டுவிட்டு தற்பொழுது  ஓடிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் ஸ்போட்டுக்கு ஆட்டோவிலேயே பயணித்தான். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு ப்ராஜேக்ட் முடியும் தருவாயில் இருந்தது. இன்னும் கடைசி கட்ட வேலையாக வெள்ளை அடித்தலும், லான்ட்ஸ்காப்பிங்கும் மட்டும் மிச்சம் இருந்தன.

வேந்தனின் மாமா சிதம்பரம், ராகவனுக்கு நல்ல நண்பர். படித்துவிட்டு வேலை தேடும் சமயத்தில் மாமாவின் சிபாரிசில் தான் இங்கு வேலைக்கு வந்தான். அவனின் புதிய சிந்தனையையும், வேலையில் இருந்த கெட்டித்தனத்தையும் பார்த்து ராகவன் சீக்கிரமாகவே சீப் என்ஜினியர் பொறுப்பைக் கொடுத்திருந்தார். மனதுக்கு பிடித்த வேலை, கை நிறைய சம்பளம். வாழ்க்கை ஒரு சீராக செல்ல ஆரம்பித்திருந்தது. அம்மாவையும், தங்கைகளையும் எப்படியோ அந்த அடிமை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டான்.

அத்தையையும் அவர் பெற்ற மகனையும் நினைக்கும் போது இன்னும் அவனுக்கு ரத்தம் கொதித்தது.

‘மனுசங்களா அவங்க. கேடு கெட்ட ஜென்மங்கள்’ என மனதில் திட்டிக் கொண்டே வேலையை கவனிக்கச் சென்றான்.

இரவு சாப்பிட்டதும் சிறிது நேரம் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் வேந்தனும் அவன் குடும்பத்தினரும். வேந்தன் தன் தாயிடம்,

“அம்மா, ஏன்மா எனக்கு இந்தப் பேரை வைச்சீங்க? எங்க மேடம் இன்னிக்கு மலர் மலர்ன்னு குப்புடுறாங்க. மத்தவங்க என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, பத்திக்கிட்டு வருது”

“நான் என்னடா செய்யட்டும்? உங்க அப்பாக்கிட்ட தலைபாடா அடிச்சிக்கிட்டேன் இந்த பேரு வேணாம்னு. அவரு பிறக்கிற முத பிள்ளைக்கு மலர்ன்னு வர மாதிரி தான் பேர் வைக்கனும்னு வேண்டி இருக்கேன்னுபுட்டாரு. சரி தட்டுனா சாமி குத்தம்னு விட்டுட்டேன். உங்கப்பா போய் சேர்ததும் தான் தெரியுது, தங்கமலர்ன்னு ஒரு பொண்ணை காலேஜ் படிக்கிறப்பா லவ்ஸ் விட்டுருக்காருன்னு. அந்த காதல் காவியத்துக்கு நீ பலிகடாவா ஆகிட்ட” என சிரித்தார்.

“எப்படிமா இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் சாதாரணமா எடுத்துக்குறீங்க? உங்களுக்கு கோபம் வரல?” எப்பொழுதும் போல் இன்றும் அதிசயமாக தன் அம்மாவைப் பார்த்தான் வேந்தன்.

“என்னடா பண்ண சொல்லுற? அவரு வாழ்க்கையில எப்பவோ நடந்தது. அதையே பிடிச்சுகிட்டு தொங்க சொல்லுறியா? என்னை கல்யாணம் செஞ்சு நல்லா தான்டா வச்சிருந்தாரு. ரொம்ப நல்லவருடா. உனக்கு தெரியாதா, உங்களை எப்படி பார்த்துக்குவாருன்னு. என்னமோ நம்மள கஸ்டப்பட விட்டுட்டு இப்படி சீக்கிரமா போய் சேர்ந்துட்டாரு.” துக்கத்தை உள்ளேயே அடைத்துக் கொண்டார் இந்து. பிள்ளைகள் முன்னே எப்பொழுதும் தன் கலங்கிய முகத்தை காட்ட மாட்டார். எப்பொழுதும் சிரித்த முகமாகவே வலம் வருவார்.

“அம்மா, அப்பா டைரியில இருந்த காதல் கவிதைய கொஞ்சம் எடுத்து விடுங்க பார்ப்போம்” என கெஞ்சினாள் லாவண்யா.

“எத்தனை தடவை அதை கேட்டாலும் உனக்கு சலிக்காதாடி?”

“சொல்லும்மா, ப்ளீஸ்” என்றாள் மகள்.

சோபாவிலிருந்து எழுந்து நின்ற இந்து தொண்டையைக் கணைத்துக் கொண்டார். பின்பு,

“நீலம்தான் எனக்கு பிடிச்ச கலர்

பெப்சி விரும்பி குடிப்பாங்க சிலர்

என்னை சுத்தி வந்தாங்க பலர்

இருந்தாலும் காதலி நீதான்டி தங்கமலர் !!”

அவர் டி.ராஜேந்தர் ஸ்டைலில் பாடிய கவிதையைக் கேட்டு பிள்ளைகள் மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“ஏ போதும் பிள்ளைங்களா. மேல போய்ட்டாலும் அவரை வம்பிழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராது” மென்னகையுடன் பிள்ளைகள் சிரிப்பதைப் பார்த்திருந்தார் இந்து.

“நான் இந்த பேர மாத்தப் போறேன் மா” என்றான் வேந்தன்.

“அண்ணா, இதை மாத்திட்டு ஸ்டைலா அனிருத்னு வச்சிக்க. இல்லைனா ஆரவ்னு வைச்சிக்க” என எடுத்துக் கொடுத்தாள் லட்டு. அவர்கள் பேசுவதை அமைதியாகவே கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் அனு.

“ஏன்டி, இந்த லேட்டஸ்டா உள்ள ஹரிஷ் கல்யாண், சுந்திப் கிஷன் இந்த பேருலாம் வேணாமா?” என கேட்டார் இந்து.

“எம்மா! கலக்கறப்போ. எங்களை விட புது ஹீரோ பேரேல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கே. ஆவ்சம்” என குதித்தாள் லட்டு.

“பேரு மாத்துறேன்னு வந்து நின்னீங்கனா அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் வாயில சூடு போட்டுருவேன். என் ஆத்துக்காரு ஆசை ஆசையா வச்ச பேரு. அவருதான் இல்லாம போய்ட்டாரு. இந்த பேராச்சும் இருக்கட்டும். மத்தவங்க என்ன சொன்ன என்னடா? இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட வேண்டியது தானே” எகிறினார் இந்து.

“அதுவாமா, அண்ணனோட பாஸ் ஒரு இத்தாலிய ரசகுல்லா. அழகுனா அழகு உங்கக்காமக்கா அழகு. அதான் ப்ரோ பீல் ஆவறாப்புல.”

“லட்டு, அவங்க என் முதலாளி. அப்படில்லாம் சொல்லாதே”

“அப்படிதான் சொல்லுவேன். ஏன் பாட்டா கூட படிப்பேன். ‘டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை, உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா’.” பாடிக்கொண்டே அண்ணனுக்கு பழிப்பு காட்டினாள்.

“ராங்கி புடிச்ச கழுதை. இருடி வரேன்” என அவளை துரத்தினான் வேந்தன்.

அவளும் கத்திக் கொண்டே ஓடினாள். அவர்கள் இருவரின் லூட்டியைப் சிரித்தபடி பார்த்திருந்தனர் இந்துவும் அனுவும்.

“அண்ணா, உங்க மேடம் டிவியில வராங்க” என அழைத்தாள் அனு.

வேந்தனும் லட்டுவும் சண்டையை நிறுத்திவிட்டு டிவி முன் அமர்ந்தனர். டவுன் சின்ட்ரம் குழந்தைகளுக்கு நிதி திரட்ட நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தது. தேவி காரில் இருந்து இறங்கி உள்ளே சென்று அமரும் வரை அவளை மட்டும் போக்கஸ் செய்திருந்தார்கள். கார்த்திக் அவள் பின்னாலேயே நிழல் போல் தொடர்ந்து கொண்டிருந்தான்.

“அண்ணா, அது உன் பிரண்ட் கார்த்திக் தானே? இவன் அவங்களுக்கு ஜிங் ஜக் போடுற வேலைதான் செய்யுறானா?” என கேட்டாள் லாவண்யா.

“ஆமாம்,அவன்தான். அவங்க பிஏ.”

“ஓ சொம்பு தூக்கின்னு சொல்லுங்க”

“லட்டு, அப்படிலாம் மரியாதை இல்லாம பெரியவங்கள பேசாதே” பாசமாக அதட்டினான் அவன்.

அவன் அம்மாவோ,

“இவங்க தான் அந்த இத்தாலி கட்டிலா? யப்பா என்ன ஒரு அழகுடா சாமி. லட்டு இவங்கள உங்கண்ணோட கனவுல கூட ஜோடி சேர்க்காத. அவங்க மச்சம் கூட வெள்ளையா இருக்கும் போல. உங்கண்ணன் இருக்குறதே ஈயம்பித்தளைக்கு போடற பேரிச்சம் பழ கலருல. இவனுக்கு இருகூர்ல இருந்து தான் பொண்ணு கிடைக்கும் இத்தாலில இல்லை”

அம்மாவைப் பார்த்து முறைத்த வேந்தன்,

“நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என பாடினான்.

அவர்கள் குடும்பமே ஒரு சிட்டுவேஷன் சோங் குடும்பம். சைக்கிள் கேப்பில் ஏதாவது ஒரு பாடலை எடுத்து விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

“விடுறா விடுறா. ஒரு விளையாட்டுக்கு சொன்னேன். என் மகன் யாரு, கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்.” என சமாதானப் படுத்தினார்.

வேந்தன் மாநிறம் தான். இப்போது வெயிலோடு வெயிலாக சைட்டில் வேலைப் பார்ப்பதால் இன்னும் கருத்திருந்தான். ஆறடி உயரமும் அதற்கேற்ற உடலமைப்பும் பெற்றவன். அவனுக்கு அழகே சிரிக்கவா சிரிக்கவா என கேட்கும் அவன் உதடுகள்தான்.

“சரி என்னை வைச்சு குடும்பமே ஓட்டுனது போதும். இனிமே எங்க மேடத்தைப் பத்தி எதுவும் பேசாம. போய் படுங்க. குட் நைட்” என்றவன் டிவியில் காசோலையை ஏற்பாட்டுக் குழுவினருக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் தேவியைப் பார்த்தவாறே தூங்க சென்றான்.

‘இவங்க சிரிக்கவே மாட்டாங்களா? அந்த அழகான உதடு சிரிச்சா இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்’ என மனதில் தோன்றிய எண்ணத்தை தலை தட்டி படுக்க வைத்தவன் அப்படியே தூங்கி போனான். இனி வரும் நாட்களில் தூக்கம் கிலோ எவ்வளவு என கேட்ட போகிறது என அறியாமல்.

 

(உயிரை வாங்குவாள்…)

Leave a Reply

error: Content is protected !!