மது பிரியன் 13
மது பிரியன் 13
மது பிரியன் 13
விஜய்யை பொறுத்தவரையில், அஞ்சனா என்பவள் எந்த ஆதரவும் இன்றி தனித்து விடப்பட்டு, தற்போது உடல் உபாதையின் காரணமாக பெருந்துன்பத்தில் உழலுகிறாள்.
பெற்றோரோ, வேறு எந்த உற்ற உறவுத் துணையுமின்றி இருப்பவள், யாரையும் கருதாது, தன்னிடம் மட்டுமே தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியிருக்கிறாள்.
தனது தவற்றை என்று உணர்ந்தாளோ, அப்போதே அவள் பிறரின் தூற்றலிலிருந்து, தூயவளாகிவிட்டாள்.
விஜய், இது தானாக அஞ்சனாவைப் பற்றி எண்ணிக் கொண்டதுதான். தன்னைத் தவிர, வேறு யாரையும் நாடாமல், தன்னை நம்புவதோடு, தன்னிடம் மட்டுமே தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியதோடு, தனது தனிமைத் துயரிலிருந்து வெளிவர எப்போதாவது தன்னிடம் பேசுகிறாள் என்கிற எண்ணத்தில் இருந்தான் விஜய்.
ஆரம்பத்தில் தனது தந்தையின் மறைவிற்கு, இவளின் தான்தோன்றித் தனமான முடிவும், செயலுமே காரணம் என எண்ணும்போது, அஞ்சனாவின் மீது விஜய்யிக்கு அளவு கடந்த வெறுப்பு வந்தது என்னவோ உண்மை.
ஆனால், அவன் வளர்ந்த முறைமையும், அதனால் இயல்பாகப் பெற்ற இளகிய மனமும், “அவ பண்ண தப்புக்கு, ஆண்டவன் நல்லாவே தண்டனை தந்திட்டான் . இதுக்கு மேலயும், நாம அவளைப் பேசித் துன்புறுத்தினா, அது செத்த பாம்பை அடிக்கறதுக்குச் சமம்” என அவனையே தேற்றி, இயல்பாக அஞ்சனாவிடம் நடந்து கொள்ள முயன்றான்.
ஆண்களுக்கு பெரும்பாலும் பழிவாங்கும் எண்ணம் இருப்பதில்லை. அப்படி ஒருவனுக்கு இருக்கும் நிலையில், அவன் பெரும்பாலும் குறுகிய மனப்பான்மை உடைய பெண்களைச் சார்ந்து வளர்ந்தவனாக இருந்திருப்பான். அப்போது மட்டுமே பெண்ணது குணம் அவனுக்குள் இருக்க வாய்ப்புள்ளது.
ஆண், பெண் என்பார் இப்படிப்பட்ட குணாதிசயங்களோடுதான் கட்டாயமாக இருப்பார்கள் என உறுதியாகவும் கூற இயலாது.
குறுகிய சூழல், குணம், பழக்கம் இவற்றால் உருவாவதுதான் பழிவாங்கல். பரந்த மனப்பான்மை உடைய ஆணோ, பெண்ணோ பழிவாங்க எண்ணுவதில்லை.
மேலும், அஞ்சனாவிடம் தனது பேச்சை விடாது தொடரும் எண்ணமோ, வேறு எந்த எதிர்பார்ப்போ விஜய்யிக்கு நிச்சயமாக இருக்கவில்லை.
திருமணமாகி மனைவி எனும் உரிமையோடு தன்னுடைய அனைத்துமாக எண்ணி இருந்தவள், தனது காதலைக் கூறியதுமே, தீச்சுட்டாற்போல விலகி, வெகுதூரம் தள்ளி, அவளை நெருங்காமல் நின்றவன்.
இத்தனை விசயங்கள் நடந்தேறியபின், வேறு எந்த முறையற்ற ஆசையோ, எதிர்பார்ப்போ அவளிடம் அவனுக்கு அணுவளவும் தற்போது இல்லை. ஆகையினால் அவள் தனது வாழ்வில் சில காலம் வந்து சென்ற வகையில், தான் அறிந்தவள் என்பதைத் தவிர வேறு எதையும் அவளைப்பற்றி விஜய் யோசிக்கவில்லை.
மேலும் தற்போதை திருமண வாழ்வில் திருப்தியும், நிறைவும் பெற்றவனாக இருந்த விஜய்யிக்கு, வேறு எந்தக் குறையுமின்றி இருந்தவனாதலால், அற்ப சிந்தனைகள் எதுவும் இல்லை.
ஆரம்பத்தில் விரக்தியோடு இருந்த அஞ்சனாவிற்குமே எதிர்காலம் பற்றிய கனவுகள் மடிந்து போயிருந்தது. ஆனால், விஜய்யோடு பேசத் துவங்கியது முதலே, ஏதோ இனம் புரியாத பாதுகாப்பு உணர்வை பெற்றிருந்தாள் அஞ்சனா.
ஆனால், அஞ்சனாவைப் பற்றிய இரக்கத்தின் காரணமாக அதீத சிந்தனையில் அவளின்பால் ஆட்கொள்ளப்பட்டதை, விழிப்போடு தவிர்க்கவோ, அவளிடமிருந்து விலகி இருக்கவோ விஜய் எண்ணவில்லை என்பதைக் காட்டிலும், தெளிவில்லாத நிலையில் இருந்தான்.
தான் வழமையைவிட மாறிப் போனதையே அறியாதவனாய், வலம் வந்தவனுக்கு, மதுராவிடம் அஞ்சனாவைப் பற்றி எதையும் கூற வேண்டும் என்கிற நினைப்பும் இல்லை. அவனைப் பொருத்தவரையில், அலுவலகத்தில் உள்ளவர்களைப்போல அஞ்சனாவும் தனக்கு மட்டும் தெரிந்த நபர்.
அலுவலக விசயங்களைப் பற்றி எவ்வாறு மனைவியிடம் பகிர மாட்டானோ, அதேபோல அஞ்சனாவைப் பற்றிய விசயங்களையும் மதுராவிடம் கூற, பகிரத் தோன்றவில்லை விஜய்யிக்கு.
ஆண்கள், தான் கடந்து வந்த பாதையை, பெண்ணைப்போல ஒன்றுவிடாமல் ஒப்பிப்பது இல்லை. அது அவர்களின் இயல்பும் அல்ல. அதன்படி, மதுரா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவன் அஞ்சனாவோடு வாழ்ந்த வாழ்வை எப்படி ஒரு வரியில் மதுராவிடம் கூறினானோ, அதேபோல தற்போதைக்கு நடக்கும் விசயங்களை மதுரா அறிந்து கேட்டால், ஒருவேளை பகிரும் நிலையில் இருப்பானாக இருக்கும். ஆனால் அவனாகவே மனைவியிடம் சென்று பகிரும் எண்ணம் வராமலிருந்தான்.
அஞ்சனா தன்னிடம் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் தன்னாலானதை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ, பணமாகவோ, வேலை வாய்ப்பாகவோ செய்திட தயங்காமல் முன்வந்திருந்தான் விஜய்.
அஞ்சனா, அவளின் தேவைக்காக பணிக்குச் சென்று வருவதை அறிந்தவன், “வேற எதுவும் தேவைன்னா சொல்லு. இங்க, ஒன்னோட பாத்திரம், பண்டமெல்லாம் அப்டியேதான் இருக்கு. அதை எந்த அட்ரஸ்ஸுக்கு அனுப்பி விடணும்னு சொன்னேனா, அனுப்பிவிடுறேன். அதுல வெள்ளி, பித்தளை சாமானெல்லாம் நிறைய இருக்கு. கடையில போட்டா, ஓரளவு நல்ல அமௌண்ட் உனக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று விஜய் கூற
“அதுலாம் இங்க வைக்கிற அளவுக்கு இடமில்லை. அதனால அங்கேயே கிடக்கட்டும்” என்றிருந்தாள் அஞ்சனா.
எந்த ஆதரவுமின்றி இருந்தாலும், அவள் தன்னிடம் பணத்தையோ, வேறு எந்த உதவியையோ எதிர்பார்க்காமல், “என்னால உங்களுக்கு நிறைய அவமானம். உங்க பேச்சை கேட்டுருந்தாகூட, இப்போ எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என ஒவ்வொரு முறையும், தனது பாவப் பதிவைப் போக்கும் முகமாய், இந்த வார்த்தைகளை விஜய்யிடம் அடிக்கடி கூறினாள் அஞ்சனா.
அதுவே அஞ்சனாவிற்காக விஜய்யை யோசிக்கத் தூண்டியது. ஆனால், அஞ்சனாவிடம் முதல் முறை பேசும்போது வேண்டா வெறுப்பாகவே பேசியிருந்தான்.
அப்போது இருந்த மனநிலையைக் காட்டிலும், தற்போது கூடுதலாகவே அவளின் நலனில் அக்கறையோடும், ஆர்வத்தோடும் பேசத் துவங்கியிருந்தான் விஜய்.
விஜய்யாக அழைத்துப் பேசாதபோதும், அஞ்சனா அழைத்தால் அழைப்பை தவறவிடாமல் ஏற்றுப் பேசுவதை வாடிக்கையாக்கியிருந்தான் விஜய்.
“உனக்கு உடம்பு ரொம்ப முடியலைனு அந்த லேடி வந்து சொன்னாங்க. இப்போ எப்டி இருக்கு. உன்னால அங்கேயே தனியா சமாளிச்சிருவன்னா ஓகே. இல்லைனா எந்த உதவி வேணுனாலும், எந்த நேரமானாலும், தயங்காம எங்கிட்டக் கேளு” என தனது ஆதரவு கரத்தை அஞ்சனாவை நோக்கி நீட்டியிருந்தான் விஜய்.
விஜய்யை பொறுத்தவரையில், இன்னும் அஞ்சனா போன்ற குணம் படைத்த பெண்களைப் பற்றி முழுமையாக அறியாமல், அவளின் தற்போதைய நிலையை எண்ணி இரக்கத்தோடு பேசினான்.
தான் வாழ பிறர் குடி கெடுக்கத் தயங்காத குணம் அஞ்சனாவினுடையது. அஞ்சனா, ஆரம்பம் முதலே, தான், தனது என்கிற நிலையில் மட்டுமே சிந்தித்து, விஜய்யின் நலனை துளியளவும் கருதாது, மீள முடியாத களங்கத்தை தந்துவிட்டு தான்தோன்றியாகச் சென்றவள் என்பது நினைவில் இருந்தாலும், இதுபோன்ற பெண்களும், அடிக்குத் தப்பிய நாகமும் ஒன்று என்பதை அறியாதவனாகவே இன்றுவரை இருந்தான் விஜய்.
விஜய்யின் ஆதரவான பேச்சும், அஞ்சனாவின் உடல் நலன் அறிய விழைவதுமான விஜய்யின் நடவடிக்கைகள், அஞ்சனாவிற்குள் எதிர்பார்ப்பை உண்டாக்கத் துவங்கியதை, அவளுமே நம்ப முடியாமல் இருந்தாள்.
பெண்கள் அன்பின் கரையோரம் ஒதுங்கிக் கொள்வதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். இது இயற்கை நியதி. அதுவும் தனக்கென எதுவும் இல்லாத ஆதரவற்ற நிலையில், தனக்காக ஒருவன் பேசினால், யோசித்தால், அன்பாக தனது நலன் அறிய விழைந்தால், அவனை நாடியிருப்பதை விரும்புவது பெண்ணது இயல்பு.
விஜய் அஞ்சனாவைத் திருமணம் செய்து அழைத்து வந்தபோது, வேறொருவனிடம் காதல் கொண்டிருந்த பெண்ணது மனம், கணவனாக இருந்தபோதும், அவனை உதாசீனம் செய்தது.
ஆனால் எந்த ஆதரவும் இன்றி, தனித்து விடப்பட்ட நிலையில், தற்போதைய அஞ்சனாவின் மனது, செயல், முன்பைப்போல வீராப்பாக இல்லாமல் முற்றிலும் மாறியிருந்தது.
வேரறுந்த மரமாய் இருப்பவளுக்கு, நீராய் ஆதரவுக் கரம் நீட்டுபவனை பற்றிக்கொள்ளும் எண்ணம், அவளறியாமலேயே வரத் துவங்கியிருந்தது.
நியாயம், அநியாயம் தெரியாதவள் அஞ்சனா. அதனால் தற்போதும் தனது அவாவிற்கு இணங்கத் தலைப்பட்டாள். அதில் வருத்தமோ, தயக்கமோ இல்லை.
ஒரு முறை மதுரா அழைப்பை ஏற்க, பெண் குரல் கேட்டதும் சட்டென வைத்திருந்தாள் அஞ்சனா.
அடுத்து, விஜய்யிடம் பேசும்போது, “யாரு அது. உங்ககூட வீட்ல இருக்கறது?” எனக் கேட்டவளின் மனதிற்குள், அது தன்னுடைய மனைவி என்று விஜய் கூறிவிடக்கூடாதே எனும் எதிர்பார்ப்பு அஞ்சனாவிடம் மண்டிக் கிடந்தது.
ஆனால் விஜய், “அதுவா” என்றவன் மனைவியின் இனிமையான நினைவுகளின் தாக்கத்தால், அவளோடு கூடிக் களித்த உணர்வுகள் உள்ளமெங்கும் கிளர்ந்தெழ, “மதுராகிணி, என்னோட வயிஃப்” என்றிருந்தான்.
அதன்பின், அஞ்சனாவும் விடாமல், எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள் எனத் துவங்கி, அடுத்தடுத்து மதுரா பற்றிய வினாக்களைத் தொடுக்க, மதுராவின் முன் அவளைப் பற்றிப் பேசினால், “யாரிடம் என்னைப் பற்றிக் கூறுகிறீர்கள். எனக்கும் தெரிந்த நபரா?” எனக் கேட்க நேரிடும் என்பதால், அது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழிகோலும் என நினைத்தவன், வெளியே சென்று பேசி வந்திருந்தான்.
அடுத்தடுத்து, பல முறை மதுரா அலைபேசியை எடுத்துப் பேசினாலும், அவளிடம் பேச இடங்கொடாத குற்றவுணர்வின் தயக்கத்தால், சட்டென அஞ்சனாவும் அழைப்பைத் துண்டித்து விடுகிறாள்.
இந்நிலையில், மனைவி தன்னை நிறுத்திக் கேள்வியெழுப்ப, மனதில் எந்த கல்மிசமும் இல்லாதவன், அஞ்சனாவின் அழைப்பு மட்டுமே அதுபோல ஏற்கப்படாமல் மதுராவை அலைக்கழித்தது என்பதை அறியாதவனாக, “ஆபீஸ்ல இருந்து பேசிருப்பாங்க மது. உன்னோட வாய்ஸ் கேட்டதும், தப்பா கால் பண்ணிட்டோமோன்னு வச்சிருப்பாங்க” என்றான்.
சில நேரங்களில் அப்படியும் நடந்ததுண்டு. ஆனால் மதுரா விடாமல், “அதுலாம் இல்ல. உங்களைவிட குறைஞ்ச பதவியில வேலை பாக்கறவங்களா இருந்தா, அவங்க யாரும் என் பேச்சைக் கேட்டு, டக்குனு போனை வைக்கமாட்டாங்க. நான் எடுத்தது தெரிஞ்சதும், விசயத்தை எங்கிட்டச் சொல்லிட்டு, சாருகிட்ட சொல்லிருங்க மேடம்னு சொல்லுவாங்க.
உங்க ஆபிசர்ஸ் யாராவது பேசினா, உங்க பேரைச் சொல்லி, வந்ததும் கால் பண்ணேன்னு சொல்லும்மான்னு சொல்லுவாங்க. இது வேற யாரோ” என ஆணித்தரமாகப் பதிலளித்தாள் மதுராகிணி.
மௌனமாக தனக்குள் யோசித்தபடியே, மதுவிடம் தனது யோசனையைக் காட்டிக் கொள்ளாதவாறே, “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அகன்றிருந்தான் விஜய்.
அவனுக்குத் தெரியவில்லை. இதுபோல மறைப்பது பின்னால் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் என்று.
கணவனின் பதிலில் திருப்தியில்லாமல், மது முன்பைக் காட்டிலும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விஜய்யைக் கண்காணிக்கத் துவங்கியிருந்தாள்.
ஆனால், மதுராகிணி எனும் பெண்ணது கணவன் விஜய் என்பதை, வசதியாக மறந்து போயிருந்தாள் அஞ்சனா. அஞ்சனாவின் எண்ணத்தை அறியாமல் தம்பதியர் இருந்தனர்.
விஜய்யின் இரக்க குணத்தை, அவளுக்கு இணங்கியும், அவளை எதிர்பார்த்தும் அவன் ஏங்குவதாக கற்பனை செய்துகொண்டு களித்தது. அதை உண்மையென்றே நம்பியது அஞ்சனாவின் மனம்.
அலுவலகம் கிளம்பி நிற்பவனுக்கு, அவளாகவே அச்சாரத்தை வைத்து அனுப்பினாலும், முன்புபோல அவளிடம் இழையவோ, குழையவோ இல்லாமல் கிளம்புபவனது நடவடிக்கைகள், மதுவிற்கு பெரும் பிரளயத்தையே உண்டு செய்யத் துவங்கியிருந்தது.
உணவு உண்பவன், அது நல்லாயிருக்கு. இது இன்னும் கொஞ்சம் இப்டியிருந்தா நல்லாயிருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டு உண்பவன், தற்போது, கடனே என உண்டுவிட்டு கைகழுவி எழுகிறான்.
கணவனின் செயலில் கரித்துக் கொண்டு வந்தது பெண்ணுக்கு. வசீகரனே ஒரு முறை, “அத்தை. மாமா ஏன் எப்போவும் ஏதோ யோசனையிலேயே இருக்காங்க” என்றிருந்தான்.
அதையும் கணவனோடு தனித்திருக்கும் வேளையில், “வசீகூட உங்களை கவனிச்சிருக்கான். ஏன் ஒரு மாதிரி டல்லாவும், ஒதுக்கமாவும் இருக்கீங்க” கேட்டாள் மது.
“எப்பவும்போலதான் இருக்கேன். எதை வச்சி, நான் முன்னை மாதிரி இல்லைங்கற?” விஜய் கேட்க
ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறி, முன்பு இதுபோல இருந்தீர்கள், தற்போது இவ்வாறு உள்ளீர்கள் என மதுரா விளக்க, “நெசமாவா? அப்டியா வித்தியாசமா நடந்துக்கறேன்” என்றவனை என்ன செய்ய என்று புரியாமல் மனதிற்குள் கலங்கினாள் மதுரா.
சிந்தனைச் சிதறல், அவனை முன்புபோல செயல்பட விடாமல் தடுத்தது என்னவோ உண்மை. ஆனால் தனது மாற்றம் அவனுக்கே தெரியாமல் இருந்ததுதான் விஜய்யின் பிரச்சனை.
அஞ்சனாவே “உதவின்னு உங்கட்ட கேக்கற அளவுக்கு, உங்களுக்கு எந்த நல்லதையும் நான் செஞ்சிட்டு வரலை. நீங்க கேட்டதே போதும். நான் பாத்துக்குவேன்” என ஆரம்பத்தில் கூறியவளுக்கு, அதிகம் விஜய்யிடம் போகப்போக, மனம் வேறு சிந்தனையில் செல்லத் துவங்கியிருந்தது.
எண்ணங்களின் ஆளுமைத்திறன் யாரிடம் அதிகமுள்ளதோ, அவர்கள் தான் விரும்பிய நபர்களின் செயல்பாட்டை, எண்ணத்தை, சொல்லை நிர்ணயிக்கும் திறன்பெற்றவர்கள் என்பதை விஜய்யின் விசயத்தில் பிரபஞ்சம் நிரூபணம் செய்து கொண்டிருந்தது.
ஆம், அஞ்சனாவின் எண்ணம் முழுமையும், விஜய் நிரம்பியிருந்தான். தான் தவறவிட்ட வாழ்வினை எண்ணிக் குமுறிக் களைக்கிறாள் நாள்தோறும்.
தன்னிடமும் நாட்டம் குறைந்து போய், விலகிச் செல்லும் கணவனை, விடாது தன்னிடம் பிடித்து வைத்துக் கொள்ளும் சூட்சுமத்தை அறியாமல், மனம் வாடிப் போயிருந்தாள் மதுராகிணி.
“நீங்க முன்ன மாதிரி இப்ப இல்லை. ஏன்?” என விடாமல் கணவனை மதுரா துளைக்க
“எப்போதும்போலதான்டா நான் இருக்கேன்” எனக் கட்டிக்கொண்டு, அந்நேரத்தில் மட்டும் நினைவு வந்தவனைப்போல தன்னை விஜய் கொஞ்சுவது, இயல்பாகத் தோன்றவில்லை மதுராவிற்கு.
அவன் உண்மையைக் கூறினாலும், அவனால் முன்புபோல எதிலும், குறிப்பாக மதுவிடம் ஆர்வமாக ஈடுபட இயலாத நிலையில் இருந்தான் விஜய்.
விஜய்யைப் பொறுத்தவரை, அஞ்சனா தனித்து சென்னையில் வசிப்பதைக் காட்டிலும், பெற்றோர் திட்டினாலும், அடித்தாலும், அவர்களோடு வந்து தங்கிக் கொள்ளும்படி அஞ்சனாவிற்கு அறிவுறுத்தினான்.
“நான் செஞ்ச காரியத்துக்கு, எங்க அப்பா எனக்கு சோத்துல விசம் வச்சுக் கொன்னுறுவாறு. எதுக்கு அவருக்கு அப்டி ஒரு கஷ்டத்தை தரணும்னுதான், அங்க போகலை” என மறுத்திருந்தாள் அஞ்சனா.
விஜய்யின், அஞ்சனா மீதான கருணை, தேவையற்ற ஆறுதலான பேச்சு இரண்டும், அஞ்சனாவிற்குள் வேறுவிதமான எதிர்பார்ப்புகளை உண்டு செய்யத் துவங்கியிருந்தது.
அஞ்சனாவின் நிலை ஏறத்தாழ ஒரு விதமான மன அழுத்தத்தை விஜய்யிற்குள் உண்டு செய்திருந்தது. அதற்கான காரணம், அவனறிந்த பெண். அதிலும் அவனுக்கு மனைவியாக சில காலம் ஒரே வீட்டில் அவனோடு வசித்தது. அவளது உழைப்பால் உருவான உணவை அவன் உண்டது.
இதை உணர்ந்து, சரியானதை பிரித்தறியும் நிலையினை அடைய, விஜய்யிக்குத் தெரியவில்லை. ஏனென்று புரியாத மன அழுத்தத்தால் உழலுபவனை எண்ணித் தவித்துப் போயிருந்தான் மதுராகிணி. விஜய்யின் ஆதரவுக் கரத்தை பற்றிக் கொள்ளும் ஆவலோடு, அஞ்சனா மனமாற்றமடைந்திருந்தாள்.
இந்நாள் மனைவிக்கும், முன்னாள் மனைவிக்கும் இடையே சிக்கிக் கொண்டதே அறியாமல் இருப்பவன், உண்மையான நிலையை உணரும் சமயம் வரும்போது எந்த மாதிரியான முடிவு எடுப்பான்?
***