காதல்போர் 06

காதல்போர் 06
“வேதா, இது வேலைக்காகாது. மினிஸ்டர் அங்கிள் மாதிரி இந்த ஊர்ல என் மனசுக்கு பிடிச்ச பொண்ண இழுத்துட்டு ஊரைவிட்டே ஓட போறேன்” விக்ரம் சொல்ல,
அந்த புராதன கோவிலிருந்த சிலைகளை படம் பிடித்துக்கொண்டிருந்தவள், ‘கிழிப்ப’ என்ற ரீதியில் அவனை ஒரு பார்வைப் பார்த்து, “நடுராத்திரி தூங்காம முப்பது நாட்களில் ஹிந்தி லேர்னிங் வீடியோஸா பார்த்து ஏதோ மேத்ஸ் ஃபோர்மியூலாவ மனப்பாடம் பண்ற மாதிரி நீ ஹிந்திய மனப்பாடம் பண்ணும் போதே நினைச்சேன்டா” என்று சொல்ல, “ஹிஹிஹி…” அசடுவழிந்தான் அவன்.
அவனை முறைத்தவாறு, “காதலிக்கிறது தப்பு கிடையாது. ஆனா, அது யாரையும் பாதிக்கக் கூடாது. ஒரு தப்பு நடந்தா பாதிக்கப்படுறது அதிகம் பொண்ணுங்கதான். காதலிச்சேன்னா அவங்க வீட்டுல சம்மதிக்கிற வரைக்கும் போராடு! ஓடிப்போறது, நடந்துப்போறதுக்கெல்லாம் ப்ளான் பண்ணேன்னா நானே உன்னை வெட்டுவேன்” சற்று மிரட்டலாகவே வேதா சொல்ல, “க்கும்! ஒத்துக்கிட்டாலும்” என்று நொடிந்துக்கொண்டான் விக்ரம்.
குறும்பாக சிரித்தவள், “பொண்ணோட அண்ணன்கிட்ட ஜாக்கிரதையா இரு!” என்று சொல்ல, “நான் அந்த மாஹி பொண்ணதான் காதலிக்கிறேன்னு உன்கிட்ட சொன்னேனா?” என்று விக்ரம் பதிலளிக்கவும், “நானும் மாஹின்னு ஏதாச்சும் உன்கிட்ட பெயர் சொன்னேனா?” பதில் கேள்வி கேட்டாள் வேதா.
இருவரும் பேசியவாறு அந்தக் கோவிலிலிருந்து வெளியே வர, “வேத், கொஞ்சம் இரு! என் ஃபோன உள்ள வச்சிட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன். நான்… நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்றுவிட்டு விக்ரம் விழிகளை அங்குமிங்கும் சுழற்றி எதையோ தேடியவாறு உள்ளே ஓட, ‘ஃபோன கையில வச்சிக்கிட்டு உள்ள எதை தேட போறான் லூசுப்பயல்?’ என்று நினைத்தவாறு புரியாது அவனைப் பார்த்தாள் அவள்.
சிலநிமிடங்கள் கழிய, கோவிலுக்கு வெளியே நின்றவாறு எடுத்த புகைப்படங்களை சிறு புன்னகையுடன் வேதா பார்த்துக்கொண்டு நிற்க, திடீரென அவளை உரசுவது போல் வந்து நின்றது அந்த கருப்புநிற ஜீப்.
வேதாவிற்கோ ஒருநிமிடம் தூக்கி வாரிப்போட்டது எனலாம். இரண்டடி பின்னால் நகர்ந்து படபடக்கும் இதயத்துடன் நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு இருக்கையில் ஒருகாலை தூக்கி வைத்து ஏளனபுன்னகையுடன் அமர்ந்திருந்த ராவணை பார்த்ததும் பயம் விலகி கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
கண்டும் காணாதது போல் அங்கிருந்து அவள் விலக போக, ‘விடுவேனா நான்?’ என்ற ரீதியில் ஜீப்பை செலுத்தி அவள் முன் ராவண் நிறுத்தவும், “உனக்கு இப்போ என்ன வேணும்?” எரிச்சலாக கேட்டவாறு அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தாள் வேதா.
“தமிழ் மிர்ச்சி…” என்றழைத்தவாறு ஜீப்பிலிருந்து பாய்ந்து இறங்கி அவளை நெருங்கியவன், “பொண்ணுங்களுக்கு வெட்கம்னு ஒன்னு இருக்கு. உன்கிட்ட அது இருக்கா என்ன?” கேலியாக கேட்க, “அது வர வேண்டிய நேரத்துல வர வேண்டியவங்ககிட்ட வரும். அதுக்கென்ன இப்போ?” வேதாவின் அழுத்தமான பதிலில், “ஆஹான்!” என்றான் அவன் ஏளனமாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி.
“கேள்விப்பட்டேன். பொண்ணு பார்க்க போன இடத்துல உன் வாய்க்கொழுப்ப பத்தி. ரொம்பதான்டி தைரியம் உனக்கு” ராவண் சொல்ல, அவனைப் பார்க்காது தரையை வெறித்திருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி, “உண்மைய சொல்றதுக்கு எதுக்கு பயப்படணும்? தப்பை யாரும் தட்டிக் கேக்கலாம்” என்றாள் வேதா அழுத்தமாக.
“ஓ! ஆனா மிர்ச்சி, எப்போவும் எல்லாமே சாதகமா அமையாது. எல்லாத்தையும் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருப்போம்னு நினைச்சிராத!” ராவணின் மிரட்டலில் புருவத்தை சுருக்கி அவனை சலிப்பாக நோக்கியவள், “என்ன, கொன்னுடுவேன்னு மிரட்டுறியா?” என்று கேட்டாள். அவள் குரலில் அடக்கப்பட்ட எரிச்சல்!
“அப்போ உனக்கு சாவுன்னா பயம் இல்லையா மேரா ஜானு(என்னோட உயிர்)?” நாடியை தடவியவாறு ராவண் கேலியாக கேட்க, “இல்லை” அழுத்தமாக வந்தது வேதாவின் மறுப்பு.
“ஆஹான்!” என்றவாறு மேலிருந்து கீழ் அவளை தன் அக்மார்க் புன்னகையுடன் நோக்கியவன், அடுத்தகணம் வேதா சற்றும் எதிர்ப்பார்க்காது அவளைப் பிடித்து இழுத்து பின்னாலிருந்து அணைத்தவாறு நின்றுக்கொண்டு, தன் முதுகுக்குப் பின்னாலிருந்த கத்தியை மறுகையால் எடுத்து அவளின் கழுத்தை நோக்கி குத்துவது போல் மின்னல் வேகத்தில் கொண்டு வர, வேதாவிற்கோ சப்த நாடியும் அடங்கிவிட்டது .
இதெல்லாம் ஒருசில நொடிகளில் நடந்தேற, வேதாவால் தன்னை சுதாகரிக்கக் கூட முடியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு பயத்தில் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. கிட்டதட்ட அவளின் இதயத்துடிப்பின் சத்தம் அவள் செவிகளிலே விழுந்தது.
மூச்சுவாங்கியவாறு தன் கழுத்தை நோக்கியிருந்த கத்தியை விழிகளை விரித்து, பயத்தினால் முகத்தில் பூத்த வியர்வைத்துளிகளுடன் அவள் அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் காதுகளை நோக்கி குனிந்த ராவண், “என்ன மிர்ச்சி பயந்துட்டியா?” ஹஸ்கி குரலில் கேட்க, பக்கவாட்டாக விழிகளை மட்டும் திருப்பி அவனை முறைத்துப் பார்த்தாள் வேதா.
“என்னை விடு!” பற்களை கடித்துக்கொண்டு அவள் சொல்ல, அவளையே ஆழ்ந்துப் பார்த்திருந்தவன், “ச்சு ச்சு ச்சு… உன் ஹார்ட்பீட் சவுண்ட் என் காதுக்கு கேக்குது மிர்ச்சி. ஒருநிமிஷம் உன் கண்ணுல பயத்தை பார்த்தப்போ அப்படி ஓர் சந்தோஷம் எனக்கு. சூப்பர் ஃபீல்” என்று சிரித்தவாறு சொன்னான்.
சரியாக அப்போது ஏதோ ஒன்றை தீவிரமாக யோசித்தவாறு கோவிலிலிருந்து வெளியேறிய விக்ரமின் விழிகளுக்கு இந்தக்காட்சி சிக்க, அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது .
வேகமாக இருவருக்கும் அருகில் ஓடி வந்தவன், “அண்ணா, ப்ளீஸ் விட்டுருங்க. ப்ளீஸ் அண்ணா” என்று ராவணிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்ச, விக்ரமை ஒரு பார்வை பார்த்தவன் அவனிடம் வேதாவை உதறித்தள்ள, பிடிமானமின்றி விழப்போனவளை தாங்கிக்கொண்டான் விக்ரம்.
“ஜாக்கிரதை!” ஒற்றை விரலை நீட்டி எச்சரித்துவிட்டு வேதாவை பார்த்தவாறே ராவண் அங்கிருந்து நகர, விக்ரமின் பிடியிலிருந்து மூச்சு வாங்கியவாறு அவனைப் பார்த்திருந்தவள் விட்டால் விழிகளாலேயே ராவணை எரித்திருப்பாள். அத்தனை கோபம் அவளுக்குள்!
அடுத்தநாள் காலை,
“எவ்வளவு தைரியம் அவனுக்கு? என்னையே ஒருநிமிஷம் பயப்பட வச்சிட்டான். பாவி! அவன சும்மாவே விடக்கூடாது. சேவேஜ்! சேவேஜ்! அவன் சேவேஜேதான்” வேதா தனதறையில் காட்டுக்கத்து கத்த, பத்மாவதியும் அம்ரிதாவும் ஒருவரையொருவர் பாவமாக பார்த்துவிட்டு வேதாவை நோக்கினார்கள் என்றால், சங்கடமாக தலைக்குனிந்து அமர்ந்திருந்தாள் மாஹி.
“மறுபடியும் என் கையில சிக்கட்டும். அந்த சேவேஜ அப்படியே கொன்னு…” என்று ஆரம்பித்த வேதா, “தீ…” என்ற மாஹியின் அழைப்பில் அவளை முறைத்துப் பார்த்து, “ஓஹோ! உன் அண்ணாவை திட்டும் போது கோபம் வருதா?” சற்று காட்டமாகவே கேட்டாள்.
“அய்யோ தீ! அப்படி எல்லாம் இல்லை. அவங்க தப்பு பண்றாங்க. எனக்கும் பிடிக்காதுதான். உங்கள கஷ்டப்படுத்த போய்தானே இப்படி திட்டுறீங்க” மாஹி வேதாவை சமாளிக்க முயல, அவள் அடங்கினால் தானே!
“எனக்கு உன் அம்மாவ நினைச்சிதான் பாவமா இருக்கு. எப்படி உங்க வீட்டுல இருக்குற இரண்டு ரௌடிய சமாளிக்கிறாங்க? த கிரேட் லேடி அவங்களுக்கு கோவில்தான் கட்டணும்” வேதா பொறுமிக்கொள்ள, பத்மாவதியும் அம்ரிதாவும், “வேதா…” என்று ஒருசேர அழைக்க, கலங்கிய விழிகளுடன் வேதாவை நோக்கினாள் மாஹி.
“அம்மா இல்லை தீ. இறந்துட்டாங்க. ஒருவேள, இதெல்லாம் பார்க்க முடியாமதான் அவங்க சீக்கிரம் துர்காதேவிக்கிட்ட போயிட்டாங்களோ என்னவோ?” மாஹி வலிகள் நிறைந்த புன்னகையுடன் பேச, வேதாவிற்கோ ஒருவித சங்கடம்!
“ஐ அம் சோரி” வேதா ஒருவித குற்றவுணர்ச்சியுடன் சொல்ல, “அச்சோ தீ! சோரி எல்லாம் வேணாம். உங்களுக்கொன்னு தெரியுமா? அப்பா என்னை வெளியில விடவே மாட்டாரு. ஏதோ அம்ரிக்கிட்ட தையல் கத்துக்க போறேங்கிற சாக்குல இங்க வந்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போ, அதுக்கும் வழியில்லாம போயிரும் போல” மாஹி சோகமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “வேதஷ்வினி…” என்ற சீதாவின் கத்தல் அறை வாசலில் ஒலித்தது.
எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்ப, ‘இப்போ என்ன?’ எரிச்சலாக நினைத்தவாறு சத்தம் வந்த திசையை நோக்கினாள் வேதா.
தலையை முக்காடு போட்டிருந்த முந்தானையை இறுகப்பிடித்து, “அந்த பையன்… அந்த பையன்…” என்று அதற்குமேல் சொல்லாது விறுவிறுவென சீதா சமையலறையை நோக்கிச்செல்ல, ‘ஙே’ என்று அவரைப் புரியாது நோக்கியவள் வேகமாக அவர் பின்னால் சமையலறையை நோக்கி ஓடினாள்.
சீதாவோ சட்டென்று நின்று, “அதோ பாரு! கருமம் கருமம்” என்று திட்டியவாறு ஒரு திசையைக் காட்ட, அவரைத்தாண்டி எட்டிப்பார்த்தவளுக்கு அங்கு கண்ட காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“டேய் விக்கி! என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?” வேதா சிரித்தவாறு கேட்க, துணியால் தலைப்பாகை கட்டி அடுப்பில் தோசை ஊற்றிக்கொண்டிருந்த விக்ரம், “எப்போ பாரு சப்பாத்தி, பூரின்னு முடியல வேதா. நாக்கு செத்துப் போச்சு. அதான், நம்ம ஊரு ஸ்பெஷல் ஃபுட். மொறு மொறு நெய்த்தோசை” என்று சொல்ல, அடுத்தநிமிடம் சமையலறை திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள் வேதா.
கையில் தட்டொன்றை எடுத்துக்கொண்டவள், “விக்கி, எனக்கு ஒரு தோசை” என்று தட்டை நீட்ட, “உனக்கு தராமலா செல்லக்குட்டி?” என்றவாறு அவள் தட்டில் தோசையை விக்ரம் வைக்க, அதைப் பிய்த்து ஒருவாய் சாப்பிட்டவள் விக்ரமுக்கும் ஊட்டிவிட்டாள்.
சுற்றியிருந்தவர்களுக்கோ இந்தக்காட்சியை பார்ப்பதற்கே ஆச்சரியம் கலந்த சிரிப்பாகத்தான் இருந்தது.
“இதுவரைக்கும் எங்கவீட்டு ஆம்பிளைங்க யாரும் சமையலறைக்குள்ள ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்க கூட வந்ததில்லை. ஆனா நீங்க… உங்களை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. கொஞ்சம் பொறாமையாவும்தான்” அம்ரிதா விக்ரமிடம் தன் மனதில் தோன்றியதை சொல்லிவிட, மொழி புரியாது பெக்கபெக்க விழித்தவாறு வேதாவை நோக்கியவன் அவள் மொழிப் பெயர்த்துச் சொன்னதும், “ஹிஹிஹி… நன்றி நன்றி” என்று வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டான்.
மாஹியோ விக்ரமையே இமைசிமிட்டாதுப் பார்த்திருக்க, கரண்டியை சுழற்றியவாறு ஓரக்கண்ணால் அவன் அவளை நோக்கியதும், பட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டவள் வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டாள் என்றால், அவளின் கன்னச்சிவப்பை ரசித்துப்பார்த்தான் அவன்.
அதேநேரம் ராவணின் வீட்டில்,
பரிமாறப்பட்ட உணவை சாப்பிடாது பிசைந்தவாறு அமர்ந்திருந்த சுனிலின் பார்வையோ தன்னெதிரே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் மகன் மேல்தான் அடிக்கடி படிந்து மீண்டது.
ராவணோ தன் தந்தையை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. உணவிலே அவன் கவனமாக இருக்க, “வேதஷ்வினி” என்ற சுனிலின் வார்த்தையில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.
அவன் அவரைப் புரியாது கேள்வியாக நோக்க, “இப்போ அந்தப்பொண்ணு ஏதாச்சும் பிரச்சினை பண்றாளா பேட்டா?” சாதாரணமாக கேட்டார் அவர்.
‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டிவிட்டு மீண்டும் உணவை பிசைந்துச் சாப்பிடப் போனவனின் கரம் அடுத்து சுனில் சொன்ன, “ஆனா, எனக்கு ஒன்னு கேள்விப்பட்டிச்சு பேட்டா. என் மகனையே அறைஞ்சிருக்கா” என்ற வார்த்தைகளில் அந்தரத்தில் நின்றது.
அவர் சொன்னதும் அன்று வேதா அறைந்தது நியாபகத்திற்கு வந்து அவன் முகம் சிவந்து இறுகிப்போக, எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல், “போயும் போயும் ஒரு பொம்பளை கையால அடி வாங்கியிருக்க. எப்படி உன்னால நிம்மதியா சாப்பிட முடியுது?” என்று ஏளனமாக கேட்டார் சுனில்.
கைமுஷ்டியை இறுக்கியவன், “அவள நான் சும்மா விட்டிருப்பேன்னு நினைக்கிறீங்களா?” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, “ஆனா, உயிரோட விட்டு வச்சிருக்கியே” என்று அவர் பதில் கேள்வி கேட்கவும், “அதுக்காக ஒரு பொம்பளைக்கிட்ட என் வீரத்தை காட்ட சொல்றீங்களா பாப்பா?” என்று கோபத்தில் கத்திவிட்டான் ராவண்.
அதில் இதழை கேலியாக வளைத்துச் சிரித்தவர் பாதி உணவிலேயே தட்டில் கையை கழுவியவாறு, “ஆமா, அவ பொண்ணுதான். ஆனா, ரொம்ப ஆபத்தானவ. உன்னை அத்தனை பேர் மத்தியில உன் இடத்துல அடிச்சிருக்கான்னா அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். இதுக்கு நானே ஒரு முடிவு…” பேசிக்கொண்டே செல்ல, அதை இடைவெட்டுவது போல் வந்தன ராவணின் வார்த்தைகள்.
“நானே பார்த்துக்குறேன் பாப்பா”
“சரி. ஆனா, இதுக்கு மேலேயும் அவளால ஏதாச்சும் பிரச்சினை வந்திச்சின்னா ஊரைவிட்டு அவ உயிரோட போகக் கூடாது” அழுத்தமாக உரைத்துவிட்டு அங்கிருந்து சுனில் நகர, அடுத்தநொடி உணவுத்தட்டை சுவற்றில் விசிறியடித்தவனுக்கு சுனிலின் வார்த்தைகளில் உண்டான கோபம் மொத்தமும் வேதாவின் மேல்தான் திரும்பியது.
அன்று மாலை,
“இதுதான் நீ படிக்கிற ஸ்கூல்லா? சின்னதா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு” வேதா சொன்னவாறு அலைப்பேசியில் அந்தச் சின்னப் பாடசாலையை படமெடுத்துக்கொள்ள, “படிச்ச பள்ளிக்கூடம் தீ” தோய்த்துப் போய் வந்தன ஜூஹியின் வார்த்தைகள்.
வேதாவிற்கும் அவளின் மனநிலை புரிய, பெண்களை கற்க அனுமதிக்காத இந்தச் சமூகத்தின் மேல்தான் அவளுக்கு கோபம் பெருகியது.
அந்தச் சிறுபெண்ணின் உயரத்திற்கு முட்டிப்போட்டு அமர்ந்தவள், “உனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கா? நான் இங்கயிருந்து போகும் போது என்கூட வந்துடுறியா? நான் படிக்க வைக்கிறேன்” என்று சொல்ல, தன் குண்டுவிழிகளை விரித்து ஆச்சரியமாக வேதாவை பார்த்தாள் ஜூஹி.
பின் சட்டென அவள் முகம் சுருங்க, “எனக்கு பிடிக்கும்தான். ஆனா, இங்க என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்களே! அவங்களையும் நம்ம கூட கூட்டிட்டு போகலாமா?” ஜூஹி இவ்வாறு கேட்டதும் அதிர்ந்து விழித்தாள் வேதா.
ஒன்று அல்லது இரண்டு பேரை சொல்லலாம். இத்தனைப்பேர் என்றால் அது கேள்விக்குறி தானே!
முயன்று முகபாவனையை மாற்றி, “கண்டிப்பா செல்லம். ஆனா, ஊரு விட்டு ஊரு போக தேவையில்லை. இந்த ஊருலயே அந்த மாற்றத்தை கொண்டு வர்றேன். மாத்தியே தீருவேன்” என்ற வேதாவின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.
“சரி. உள்ள போய் ஃபோட்டோஸ் எடுக்கலாமா?” என்றவாறு வேதா முன்னே செல்ல, அவள் கையை இறுகப்பிடித்து தரையில் காலை ஊன்றி நின்றுக்கொண்டாள் ஜூஹி.
வேதாவோ கேள்வியாக நோக்க, பாடசாலைக்கு பக்கத்திலிருந்த மைதானத்தை ஒட்டியிருந்த ஜீப்பை சுட்டிக்காட்டியவள், “தீ, அந்த ஜீப்பை பார்த்தா அந்த இடத்துல இருக்குறது ஆபத்துன்னு அம்மா சொன்னாங்க. இங்கயிருந்து போகலாம்” என்றவாறு வேதாவை இழுக்க, “இங்க இவன் என்ன பண்றான்?” வாய்விட்டே தன் சந்தேகத்தை கேட்டுவிட்டாள் வேதா.
“அது அவங்க கொஞ்ச பேர் சேர்ந்து ஏதோ குடிப்பாங்க. புகையெல்லாம் விடுவாங்க. நான் பார்த்திருக்கேன்” ஜூஹி அவர்கள் மது அருந்துவதை தன்னுடைய பாணியில் சொல்லிக்காட்ட, வேதாவின் பொறுமையோ காற்றில் பறந்து போனது.
ஜூஹியை விட்டு அந்த மைதானத்தை நோக்கி அவள் விறுவிறுவென செல்ல, மைதானத்தின் ஓரத்தில் தயார் செய்திருந்த கூடாரத்தின் கீழ்தான் மூக்குமுட்ட மது அருந்திக்கொண்டிருந்தான் ராவண்.
தந்தை பேசிய வார்த்தைகளில் உண்டான கோபம் அவன் மனதில் கொழுந்துவிட்டு எரிய, அதை அறியாது அவனின் கோபமெனும் வலையில் சிக்க தானாக சென்றாள் இவள்.