Uyir Vangum Rojave–EPI 10

ROSE-81f54a19

Uyir Vangum Rojave–EPI 10

அத்தியாயம் 10

அழகுன்றது கண்ணுக்குதானே

மனசுக்கு இல்லையே

பார்க்கும் போது

மனசுல இருக்கற காதல்

இல்லாமையா போய்டும்

(காவலன்விஜய்)

 

“என்னது? அம்மாவ காணோமா?”

தங்கை விளையாட்டுக்கு கூட இப்படி பேசமாட்டாள் என தெரிந்த வேந்தனுக்கு தொண்டையில் பயப் பந்து உருள ஆரம்பித்தது. இந்த நேரத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என புத்தி எடுத்து சொல்ல அவசரமாக பைக்கை மீண்டும் காலேஜுக்கு விட்டான். லாவண்யாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவன், அனுவிடம் மீண்டும் என்ன நடந்தது என விளக்கமாக கேட்டான்.

“அண்ணா, கீரை வாங்க போறேன்னு சொல்லிட்டு கீழ போனாங்க. பிளாஸ்டிக் கூடையும் அவங்களோட குட்டி பர்சும் மட்டும் தான் எடுத்துட்டு போனாங்க. உனக்கு பிடிக்கும்னு மசால் வடை செய்ய பருப்பு ஊற போட சொன்னாங்க. நானும் சொன்னதை செஞ்சிட்டு வெய்ட் பண்ணுறேன் வரவே இல்லை. கதவை பூட்டிட்டு கீழ போய் பார்த்தேன். அவங்கள காணோம். சுத்தி கொஞ்ச நேரம் தெருவுல இறங்கி நடந்து கூட பார்த்தேன். எங்கயும் காணோம்.” அழுதபடி சொன்னாள் அனு. லட்டுவும் அழுகையை ஸ்டார்ட் செய்திருந்தாள்.

“ரெண்டு பேரும் அழாதீங்க. நடந்து கடைக்கு எங்கயாச்சும் போயிருப்பாங்க. நான் போய் தேடிப்பார்க்கிறேன்”

“இல்லண்ணா. கீழ தானே போறோம்னு சாதாரண புடவை தான் கட்டியிருந்தாங்க. கடை கண்ணிக்கு போறதுன்னா அவங்க எப்படி போவாங்கன்னு உனக்கு தெரியாதா?” என இன்னும் வேகமாக தேம்பினாள் அனு.

வேந்தனுக்கும் புரிந்தது. இந்து கடைக்கு பழம் வாங்க போவது என்றால் கூட, நன்றாக தலையை சீவி, பான்ட்ஸ் பவுடரை அப்பிக் கொண்டு, லாவண்யாவின் பர்பியும்மை போட்டுக் கொண்டு டிப் டாப்பாக தான் செல்வார். பிள்ளைகள் கிண்டல் செய்தால் கூட, வெளியே போகும்போது சுத்தபத்தமாக, அழகாக சென்றால் தான் நான்கு பேர் மதிக்கிறார்களோ இல்லையோ, நம் மேல் நமக்கே மதிப்பு வரும் என அசால்ட்டாக அவர்களின் வாயை அடைத்து விடுவார். அவரை தனியாக விட்டால், வாங்க போன பொருளைவிட்டு விட்டு , பிள்ளைகளுக்கு இது நன்றாக இருக்கும் அது நன்றாக இருக்கும் என கை மீறி செலவு செய்து விடுவதால், வேந்தன் அவரை தனியாக எங்கும் அனுப்ப மாட்டான். அவனோ தங்கைகளோ யாராவது அவருடன் செல்வது வழமை. இந்து தன் மூன்று பிள்ளைகளால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு வரும் தாயாகிய சேய். அவரை காணோம் என்றவுடன் மூவரும் கலங்கித் தவித்தனர். தங்கைகளை பயமுறுத்தக் கூடாது என வேந்தன் தைரியமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டான். உள்ளுக்குள் நொருங்கி போய் இருந்தான் அவன். இந்து தான் அவனுக்கு எல்லாமே, அவனது முதல் குழந்தை.

“அண்ணா, அம்மாவுக்கு வெளி உலகமே தெரியாது. எங்க போய் என்ன பாடு படறாங்கன்னு தெரியலையே.” கண்ணீர் பெருகியது லாவண்யாவுக்கு.

அம்மா வந்தால் தகவல் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, அவன் பைக்கிள் தெருவையே சுற்றி வந்தான். அதோடு அவன் மாமாவுக்கும் போன் செய்து கேட்டான் அங்கே இந்து வந்திருக்கிறாரா என. அவர் இவர்களுக்கு மேல் பதறி போய் அழுதே விட்டார். ஒற்றை தங்கையாயிற்றே.

வேந்தனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மூளை மறத்துவிட்டது. உடலும் உள்ளமும் ஓய்ந்து, அவர்கள் தெருவில் இருந்த வைஷ்ணவதேவி கோவில் வாசலில் அப்படியே அமர்ந்து விட்டான்.

அப்பொழுது கோவிலில் இருந்து வெளி வந்த இருவர், தேவி தரிசணம் அற்புதமாக இருந்தது என பேசிக் கொண்டு வந்தார்கள். திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்த வேந்தனுக்கு கேட்டதெல்லாம் தேவி எனும் சொல்தான்.

“இதை எப்படி மறந்தேன். எல்லாம் இவ வேலையா தான் இருக்கும். ராட்சசி, இருடி வரேன்” என உரக்கவே கத்திக் கொண்டு பைக்கை நோக்கி ஓடினான்.

கீரை வாங்க வந்த இந்துவை அட்ரஸ் கேட்பது போல் மூக்கில் மயக்க மருந்து துணி வைத்து லாவகமாக காரினுள் போட்டுக் கொண்டனர் அந்த கடத்தல்காரர்கள். பழைய டெக்னிக் தான் ஆனால் பக்காவான டெக்னிக்.

அவர் கண் முழித்த போது, ஒரு பெரிய வீட்டில் இருந்தார். ஹாலில் உள்ள சோபாவில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள். மெல்ல எழுந்து உட்கார்ந்தவருக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. நன்றாக யோசித்ததும் தான் புரிந்தது தான் கடத்தப்பட்டிருப்பது. அவருக்கு அப்படி ஒரு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

அவர் அருகிலேயே இருந்த அந்த இரண்டு கடத்தல் பேர்வழிகளும் அவரின் சிரிப்பைப் பார்த்து பயந்து விட்டனர் அவருக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடித்தி விட்டதா என்று.

முகமுடி அணிந்து சிவப்பு சட்டையிலிருந்தவன் அவர் அருகில் சென்று,

“அம்மா, ஏன் சிரிக்கிறீங்க? உங்களுக்கு அடி கிடி ஏதாச்சும் பட்டுருச்சா?” என கேட்டான். கடத்த சொன்னவர்கள் அவரை ஒரு கீறல் கூட இல்லாது பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கட்டளை இட்டிருந்தனர்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி. நீங்க என்னை கடத்தி வச்சிருக்கீங்களே அதை நினைச்சு எனக்கு சிரிப்பு வந்துருச்சு. நான் மயக்க மருந்து போட்டு கடத்தற அளவுக்கெல்லாம் வொர்த் இல்லப்பா. என் மகன் சாப்பாட்டு கையால காக்கா என்ன ஈ கூட ஓட்டமாட்டான். இப்படி இருக்கு எங்க குடும்ப நிலைமை. அப்புறம் எதுக்குப்பா வண்டியில பெட்ரோல் எல்லாம் போட்டு என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க?” என அதிசயமாக கேட்டார்.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும்மா. இது வேற டீலீங்” என்றான் நீல சட்டைக்காரன்.

“ஹ்ம்ம். அது சரி. சொன்ன கேக்க மாட்டிக்கிறீங்க. அப்புறம் உங்க இஸ்டம். மணி என்னப்பா ஆகுது?”

“மத்தியானம் 3 ஆகுது” என்றான் சிகப்பு சட்டை.

“சாப்பாட்டு நேரம் ஓடி போச்சே. இன்னும் நான் காலை சாப்பாடு, ஸ்னேக்கு, மதிய சாப்பாடு எதுவுமே சாப்படலியே” என கவலைப்பட்டார். அவர் கவலை அவருக்கு.

“டேய், என்னடா மம்மி ஸ்னேக்கு எல்லாம் கேக்குது. இவங்க எது கேட்டாலும் சாப்பிட வாங்கி குடுக்க சொல்லி இருக்காங்களே. இப்ப பாம்பு கறி எங்கடா போய் தேடறது?” என மற்றொருவனைப் பார்த்துக் கேட்டான் சிகப்பு சட்டை.

“இரு இரு, நான் வேற ஐட்டம் மாத்த முடியுமான்னு கேக்குறேன்” என்றவன், இந்துவிடம்,

“அம்மா, பாம்புக் கறி சொல்லி வச்சா தான் கிடைக்கும். டின்னருக்கு அத்த வாங்கி தரேன். இப்ப பிரியாணி சாப்புடுறீங்களா?” என கேட்டான்.

“பாம்பு கறியா?” என வாயைப் பிளந்தார் இந்து.

“ஆமாம்மா, ஸ்னேக்கு வேணும்னு இப்பதானே சொன்னீங்க”

“அட பாவிகளா. அது பாம்பு இல்லைப்பா. சிப்ஸு, ஆப்பிள், ஆரஞ்சு,  இப்படி சாப்புடுவாங்களே அதை சொன்னேன்பா.”

“ஓ அதுவா ! சரிமா வாங்கிட்டு வரேன். வேற எதாச்சும் வேணுமா?” கேட்டது நீல சட்டை.

நன்றாக யோசித்த இந்து,

“ப்பா மட்டன் பிரியாணி வேணாம். நீங்க ஏற்கனவே என்னை கடத்தறதா சொல்லி இருந்தா கீரை வாங்க வரப்ப பீப்பீ மருந்தும் எடுத்துட்டு வந்துருப்பேன். மருந்து போடாம மட்டன் சாப்பிட முடியாது. “

“பீப்பீ மருந்தா?” கேட்டது சிவப்பு சட்டை.

“அதான் ரத்த கொதிப்புக்கு போடுவாங்களே பீப்பீ மருந்து. என்னப்பா நீங்க பச்ச மண்ணா இருக்கீங்க. ஒன்னுமே தெரிய மாட்டிக்கிது. எப்படி தான் இந்த தொழில் செய்றீங்களோ தெரியல” என சலித்துக் கொண்டார்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இது நமக்கு தேவையா என்பது போல் பார்த்துக் கொண்டனர்.

“நல்ல லேக் பீஸ் போட்டு பாய் கடை பிரியாணி வாங்கிட்டு வாப்பா. என் மகன், உடம்பு முழுக்க சீக்க வச்சிகிட்டு பிரியாணி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான். கெஞ்சி கேட்டா, புளியோதரை வாங்கி குடுத்து, இத பிரியாணின்னு நினைச்சிகிட்டு சாப்புடுங்கன்னு சொல்லுவான். இம்சை”

“சரிம்மா” என நகரத் தொடங்கிய சிகப்பு சட்டையை,

“இந்தாப்பா சோப்பு சொக்கா, அப்படியே இருட்டுக் கடை அல்வா ரெண்டு பாக்கேட் வாங்கிக்க. அப்புறம் உக்கார வேணும்”

“உட்கார்ந்து தானம்மா இருக்கீங்க. ஏன் மறுமடியும் உக்கார வேணும்?” குழம்பினான் நீல சட்டை.

“ஐயோ!! உங்க ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு, ரொம்ப கஸ்டம். எதுவுமே தெரிய மாட்டிக்கிது. நான் புரியற மாதிரி சொல்லுறேன். கடலைப்பருப்பு , பாசிப்பருப்பு, வெல்லம், நெய், கலகலன்னு வறுத்த முந்தரி அப்புறம் ஏலக்காய்த்தூள் இதெல்லாம் போட்டு மணக்க மணக்க இருக்கும்பா. அதுக்கு பேரு தான் உக்கார.”

சிகப்பு சட்டை விட்டால் அழுது விடுபவன் போல் நின்றிருந்தான்.

‘மியூசியம்ல வைக்க வேண்டிய பீஸ கடத்த சொல்லி நம்ப டங்குவாற அக்குறாங்களே’ மனதிலே அழுதனர் இருவரும்.

“மச்சி, இந்த ஓல்ட் லேடி இன்னும் நம்மள டேமேஜ் பண்ணறதுக்குள்ள போன்ல அது என்ன எழவுன்னு பாருடா.”என்றான் சிகப்பு சட்டை.

“அது பேரு உக்காரை. எந்த கடையில கிடைக்கும்னு தெரியலையே. இன்னிக்கு முழிச்ச மூஞ்சியே சரி இல்லை. காலாங்காத்தாலயே எம் பொஞ்சாதி பல்லு விளக்காம என்னை பார்த்து ஒரு இளி இளிச்சா. நான் அப்பவே உஷாராயிருக்கனும்.” மெதுவாக புலம்பினான் நீல சட்டை.

“அப்படியே அந்த பாட்டுல வருமே, ‘லாலா கடை சாந்தி, உன்னால் ஆனேனே நான் பூந்தி’ன்னு, அந்த பூந்தியும் வாங்கிக்கப்பா”. இன்னும் அவர் யோசிக்க ஆரம்பிக்கவும், சட்டென டீவியை ஆன் செய்தான் சிகப்பு சட்டை.

“அம்மா, படம் பாருங்க. நான் போய் வாங்கிட்டு வந்துருறேன்” என சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தான் அவன்.

நீல சட்டை,

‘அடப்பாவி, இவங்க கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டு ஓடிட்டியே’ என உள்ளுக்குள்ளேயே புலம்பினான்.

வீட்டை சுற்றி பார்வையை சுழல விட்ட இந்து, அங்கே சுவற்றில் இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்ததும் குஷியாகி போனார்.

“அது அந்த டிவி ஷோவுல வர காமேரா தானே? நான் கிட்ட போய் அந்தப் பொண்ணு மாதிரி பேசி பார்க்கவா?” என கேட்டவர் அதன் அருகே சென்று நின்று கொண்டார்.

பெரிய வணக்கம் ஒன்றை வைத்தவர்,

“பெரிய பாஸ், எனக்கு வாழைப்பழம் வேணும். குடுப்பீங்களா? செவ்வாழை வேணாம், பேயன் பழம் வேணும். அது சாப்பிட்டா கலையில கலகலன்னு போகுமாமே ” என கண்களை உருட்டிக் கேட்டார்.

அங்கே லேப்டோப் வழி இங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த தேவிக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது. பல வருடங்கள் கழித்து இன்று தான் கண்களில் நீர் வர வாய்விட்டு சிரித்தாள். அவர் எழுந்ததிலிருந்து செய்த அட்டகாசங்கள் அவளுக்கு அதிசயமாகவும் அதே வேளை சிரிப்பாகவும் இருந்தது.

‘எனக்கு உங்க மாதிரியே ஒரு கியூட்டான பேபி வேணும். உங்க மகன் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ்’ என மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாள்.

அப்பொழுது படீரென அவளின் கேபின் கதவு திறக்கப்பட்டது. புயலென நுழைந்த வேந்தனைப் பார்த்தவள் பட்டென லேப்டோப்பை மூடினாள்.

வேக நடையுடன் அவள் அருகில் வந்தவன், உட்கார்ந்திருந்தவளை எழுப்பி நிறுத்தினான். அவள் கழுத்தில் தன் இரு கைகளையும் வைத்து அழுத்தியவன்,

“எங்கடி என் அம்மா?” என கத்தினான்.

அவன் கழுத்தைப் பிடித்ததில் வலித்தாலும் அசராமல் அவன் கண்களையே நேராக பார்த்தாள் தேவி. அவன் கை வைத்த சில நிமிடங்களிலே வெளேரென இருந்த அவள் கழுத்து ரத்த நிறத்துக்கு மாறியது. பயந்து போய் கைகளை எடுத்தவன், பின் மெல்ல அவள் கழுத்தை தடவிக் கொடுத்தான்.

“வலிக்குதா மேடம்?”

“மேடம்னு கூப்பிடறது தான் வலிக்குது மலர்”

கையை சட்டென உறுவியவன், ஓய்ந்து போய் அவள் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். எங்க அம்மா எங்கன்னு சொல்லுங்க. அவங்க ரொம்ப பயந்த சுபாவம்.”

‘அப்படி ஒன்னும் பயந்த மாதிரி தெரியலையே. நான் வச்ச ஆளுங்கதான் உங்க அம்மாவ பார்த்து பயப்படுறானுங்க’ என மனதில் நினைத்தவள்,

“உங்க அம்மா பத்திரமா தான் இருக்காங்க. என் மாமியார நான் கவனமா பார்த்துக்க மாட்டனா?” என கேட்டாள்.

அடங்கியிருந்த கோபம் மீண்டும் தலைக்கு ஏறியது அவனுக்கு.

“ஏன்டி நீ எது செஞ்சாலும் சும்மா தலைய ஆட்டிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சியா? இப்பவே போலிஸ் ஸ்டேசன் போறேன்.” என எகிறினான்.

“கம்பேனி கார் இருக்கு, எடுத்துட்டு போங்க. அங்கயும் இங்கயும் அலைஞ்சி ரொம்ப களைப்பா தெரியிறீங்க. ரிப்போர்ட் பண்ணிட்டு வீட்டுல போய் ஓய்வெடுங்க” என அக்கறையாக பேசினாள் தேவி.

“பணபலம் இருக்குன்ற திமிருல பேசுறீயா? என்னை இப்படி அலைய விடறதுக்கு நீ நல்லா அனுபவிக்காம போகமாட்டடி”

“ஆவ்வ்வ்வ். சோ ஸ்வீட். கல்யாணம் பண்ணிகிட்டு கண்டிப்பா வாழ்க்கைய அனுபவிக்கலாம் மலர்.”

எதை பேசினாலும் திருப்பி அடிக்கும் அவளைப் பார்த்து ஆயாசமாக இருந்தது வேந்தனுக்கு. காலையில் இருந்து இன்னும் பல்லில் பச்சைத் தண்ணீர் கூட படவில்லை. அலைந்து அலைந்து சோர்ந்து விட்டான்.

அப்பொழுது கதவை தட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான் கார்த்திக். அவன் கையில் ஒரு கப் காபி இருந்தது. அதை வேந்தனிடம் நீட்டியவன்,

“குடி மச்சி. நீ அவசரமா உள்ள வரத பார்த்தேன். களைப்பா வேற தெரிஞ்சயா, உனக்காக நானே பேன்ட்ரி போய் காப்பி போட்டு எடுத்து வந்தேன். ஆமா, என்ன பிரச்சனை?”

“உங்க மேடம் , என் அம்மாவ கடத்தி வச்சிருக்காங்க. அது தான் பிரச்சனை. எம்கம்மா கையால சாப்பிட்டுருக்க இல்லை. அந்த நன்றிக்காகவாவது விட சொல்லுடா கார்த்திக்” என நண்பனை பாவமாக பார்த்தான் வேந்தன்.

தேவியின் கட்டளையின்படி கடத்த ஆள் ஏற்பாடு செய்ததே இவன் தான் என்று பாவம் வேந்தனுக்கு தெரியவில்லை.

“என்ன? அம்மாவ தூக்கிட்டாங்களா? அதுவும் நம்ம மேடமா?” என அதிர்ந்த மாதிரி பில்டப்பை கொடுத்தான் கார்த்திக்.

“இந்தா மச்சி, காப்பிய முதல்ல குடி. என்னா இருந்தாலும் நம்ம மேடம். நாம சமரசமா பேசுவோம்”

வேந்தனுக்கும் தன்னைக் கட்டுப்படுத்த சில கணங்கள் தேவையாக இருந்ததால் அந்த காப்பியை வாங்கி பருகினான். பின்,

“எதைப் பத்தியும் பேசறதுக்கு முன்னாடி, நான் எங்க அம்மா கிட்ட பேசனும். அவங்க நல்லா இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கனும்” என தேவியைப் பார்த்து கேட்டான்.

மேசையில் இருந்த போனிலிருந்து டயல் செய்தவள், அங்கே போன் எடுக்கப்படவும்,

“அம்மா கிட்ட குடுங்க” என்றாள்.

பின் ரிசிவரை வேந்தனிடம் நீட்டினாள். கை நடுங்க அதை வாங்கியவன்,

“அம்மா” என கலங்கிய குரலில் அழைத்தான்.

“வேந்தா, ஏன் பா குரல்லாம் ஒரு மாதிரி இருக்கு? எனக்கு ஒன்னும் இல்லப்பா. நான் நல்லா தான் இருக்கேன். நீ பயப்படாதே. “

கண் கலங்கிய வேந்தன்,

“நினைவு தெரிஞ்ச நாள் முதலா

நீதான் எனக்கு சாமி

கனவில் கூட நீதானே

கண்ணில் தெரியும் சாமி”

என உறுக்கமாக பாடினான்.

இங்கே கேட்டுக் கொண்டிருந்த தேவியும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“பேமிலி சோங்” என உதட்டை அசைத்தான் கார்த்திக்.

புரிந்தது என தலையை ஆட்டினாள் தேவி.

அங்கே இந்து,

“இந்த குயில் சந்தோசமா கண்ணுறங்க தானெ

பட்ட துயர் ஒன்னா ரெண்டா

நீயும் எந்தன் தாயே”

என முடித்து வைத்தார். இருவரும் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர்.

“கண்ணப்பா, அம்மா வர வரைக்கும் தங்கச்சிங்கள பத்திரமா பாத்துக்கப்பா. வடைக்கு ஊற போட்டுருக்கேன். அனுவ சுட்டு குடுக்க சொல்லி சாப்புடு. அவளுங்களையும் சாப்புட வையி. பத்திரமா இருங்க”

போன் அவர் கையிலிருந்து சிவப்பு சட்டைக்காரன் கைக்கு மாறியது.

“பாஸ், உங்கம்மா ராத்திரி டிபனுக்கு அப்புறம் டீ சர்ட்டை சாப்புடுவாங்களாமே? ஆமாவா? நாங்க டீ சர்ட்டை உடம்புல போட்டு தான் பார்த்துருக்கோம்” என சந்தேகம் கேட்டான்.

அவன் கேட்ட தினுசில் சிரிப்பு வர,

“அது டீ சர்ட்டு இல்ல, டிசர்ட். நைட்டு டின்னருக்கு அப்புறம் ரெண்டு ஸ்பூன் ஐஸ்கிரிம் சாப்பிட்டா தான் அவங்களுக்கு தூக்கம் வரும். ரொம்ப குடுக்காதீங்க. சளி பிடிச்சுக்கும்.” என பேசி போனை வைத்தான்.

பின் அழுத்தமாக தேவியை நோக்கி,

“சொல்லு. இப்ப நான் என்ன செய்யனும்?” என கேட்டான்.

 

உயிரை வாங்குவாள்….

Leave a Reply

error: Content is protected !!