Uyir Vangum Rojave–EPI 20

Uyir Vangum Rojave–EPI 20

அத்தியாயம் 20

“கண்ண மூடிக்கிட்டு மறுபடியும் ஒரு கனவு காண நான் தயார இல்ல  கௌரி

பொறந்ததிலிருந்து துளசி சக்திவேல்

கல்யாணத்து அப்புறம் துளசி முரளிகிருஷ்ணா

இப்ப துளசி வெறும் துளசி

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

(ரேவதி—மறுபடியும்)

 

”ஹலோ அம்மா! சொல்லுங்கம்மா, என் மேல உள்ள கோபம் போயிருச்சா?”

போனை காதில் வைத்துக் கொண்டே,

“லட்டு, டீ லட்டு. எங்கடி போனே? வந்து போனை லோட்டு ஸ்பீக்கர்ல போடு” என இரைந்தார் இந்து.

“என்னம்மா? ராத்திரி பத்து மணிக்கு வீடே அதிருற மாதிரி கத்துறீங்க” என்றபடியே வந்து போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டாள் லாவண்யா.

“சொல்லுண்ணா, என்ன விஷயம்?”

“என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்? அம்மா தான் போன் பண்ணாங்க. அவங்க கிட்ட சொல்லி பேச சொல்லு லட்டும்மா. பத்து நாள் ஆச்சு என் கிட்ட பேசி.”

அம்மாவை முறைத்த லாவண்யா,

“ஏன்மா இப்படி பண்ணுற? அண்ணன் தான் கெஞ்சுது இல்ல. அப்புறம் என்ன பிடிவாதம்? நீ பெத்த மகனோட, நேத்து வந்த மருமக பெருசா போச்சா?” என கேட்டாள்.

“இப்ப உன்னை பஞ்சாயத்து பண்ண கூப்பிடல. அவன் கிட்ட சொல்லு, சீக்கிரமா குலதெய்வம் கோவிலுக்கு போகனும்னு. ஒரு படையல் போடனும். ரெண்டு கல்யாணமும் சட்டு சட்டுன்னு நடந்துருச்சு. இனிமே நடக்கறதாச்சும் நல்லதா நடக்கனும். எப்ப போலாம்னு கேளு லட்டு”

“அண்ணா, கேட்டுச்சா?”

“நல்லா கேட்டுச்சு. அவங்க கிட்ட சொல்லு இந்த வார கடைசியில போகலாம்னு. என்ன அரெஞ்மேன்டுன்னு அண்ணிகிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்.”

“கேட்டுச்சாம்மா?” என்றாள் லட்டு.

“ஏன், என் காது என்ன செவிடா? நல்லா தான் கேட்டுச்சு. சீக்கிரமா சொல்ல சொல்லு. பூஜை பொருளுங்க எல்லாம் வாங்கனும். டீ லட்டு, உங்கண்ணா சாப்டானானு கேளு”

“அண்ணா, சாப்டியா?”

“சாப்பிட்டேன். அம்மா சாப்பிட்டுடாங்களான்னு கேளு லட்டும்மா?”

“கடவுளே!!!! என்னைக் காப்பாத்து. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டா, இப்படித்தான் படிக்கிற பிள்ளைய கூப்பிட்டு வச்சு ரவுசு பண்ணுவீங்களா? அண்ணாத்தே இது நல்லா இல்ல. பேஜாரா ஆகி போய்டும்.”

“லட்டும்மா! என்னடா இப்படி பேசுற?”

“சோரிண்ணா. அம்மாதான் மேட்ராஸ் பாசை கத்து குடுக்க சொன்னாங்க. இப்பத்தான் கூகுள் பண்ணி பாத்துக்கிட்டு இருந்தேன். அப்படியே வாயில வந்துருச்சு”

“அவங்க மாப்பிள்ளை எப்படி இருக்காரு? கொஞ்சம் கேட்டு சொல்லு”

அம்மாவைப் பார்த்தாள் லாவண்யா.

“ஆடு உறவாம் ,குட்டி பகையாம். எனக்கு மாப்பிள்ளைன்னா உங்க நொண்ணனுக்கு மச்சான் இல்லையா? ஊருக்கு போறப்ப ஒழுங்கா, மரியாதையா பேசி பழக சொல்லு லட்டு. நாமளே பார்த்திருந்தாலும் இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்காது.

“நினைச்சப்படி நினைச்சப்படி மாப்பிள்ளை அமைஞ்சதடி

உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ”னு பாடறத விட்டுட்டு, இவன் என்னன்னா சலம்பிகிட்டு திரியறான். “

“இப்ப என்ன மாப்பிள்ளை மரியாதைக்கு குறை வச்சிட்டாங்கலாம்? நல்லா தானே செலவு பண்ணி ரிசப்ஷன் வச்சோம். மாப்பிள்ளைக்கு மோதிரத்துல இருந்து புலி நக செய்ன் வரைக்கும் வாங்கி போடலையா? அவரு எதையும் ஏத்துக்கலைன்னா நான் என்ன பண்ணறது? பொண்ணும் கொடுத்து வீட்டுல இடம் கொடுத்ததே போதும். வேறு எதுவும் செஞ்சு என் மரியாதைய குறைக்காதீங்கன்னு அவங்க மருமகன் தானே சொன்னாரு. இப்ப என் கிட்ட பாயறாங்க. இங்க பாரு லட்டும்மா, மருமகன் வந்தவுடனே உங்க அம்மா என்னை மறந்துட்டாங்க. நான் வேணாதவன் ஆயிட்டேன்” குரல் கலங்கி இருந்தது.

“இப்ப எதுக்கு உங்கண்ணன் இவ்வளவு பெரிய சீனை போடுறான்? மருமகன் வந்தாலும், மருமக வந்தாலும், இவன் தானே நான் பத்து மாசம் சுமந்து பெத்த மகன். இவன் தானே என்னை முதல் முதலா அம்மான்னு வாய் நிறைய கூப்பிட்டவன். நீர் அடிச்சு நீர் விலகிடுமா? கொஞ்சம் ஏசிட்டா இந்த அம்மா கெட்டவளா ஆகிருவனா?” அவர் குரலும் கலங்கியது.

“அம்மா!! என்னை மன்னிச்சுரும்மா. இனிமே உன் மருமகளை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்மா. உன்ன மாதிரியே அவளையும் பார்த்துக்குவேன். சரியா? பேசும்மா, ப்ளீஸ்”

“வேந்தா! நான் பெத்த மவனே”

“அம்மா!!”

“வேந்தா”

“அம்மா”

‘இதுக்கு மேல ரெண்டு பேரும் அழுது கரைஞ்சி, மூனு வயசுல காய்ச்சல் வந்தப்போ எப்படி பார்த்துகிட்டாங்க, ஆறு வயசுல மரத்துல இருந்து விழுந்தப்ப எப்படி துடிச்சாங்கன்னு பேசி முடிக்க மூனு மணி நேரம் ஆகும். நாம போய் படிக்கற வேலைய பார்ப்போம்’ என ரூமுக்குள் நுழைந்தாள் லாவண்யா.

தூக்கம் வருவது போல் இருந்ததால் குளித்து விட்டு வந்து படிப்போம் என குளியலறைக்குள் நுழைந்தாள். பழைய வீட்டில் அனைவரும் ஒரு குளியல் அறையையே பயன்படுதினார்கள். இந்த வீட்டில் எல்லோருக்கும் தனி ரூம், அட்டாச் பாத்ரூம். அதுவும் சலவைக் கல் பதிக்கப்பட்டு, ஹீட்டருடன். எப்பொழுதும் போல் பச்சைத் தண்ணீரிலிலே குளித்தவள் நைட்டி அணிந்து தலையை துவட்டியவாறே வந்தாள். ரூமில் ஏசி வசதி இருந்தது. ஆனால் காற்றாடி மட்டும் தான் திறந்து விடுவாள் அவள். அண்ணி அளித்திருந்த எந்த வசதியையும் அவள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அண்ணியில் மேல் உள்ள கடுப்பினால் அல்ல, நாளை நமக்கு என்ன நிலைமையோ, எதற்கு பழகி கொள்ள வேண்டும் எனும் எண்ணம்தான்.  மெத்தையில் மட்டும் படுத்துக் கொள்வாள். உடம்பு அதற்கு மட்டும் பழகிவிட்டது, ஹாஸ்டலிலும் சரி, முன்பு இருந்த வீட்டிலும் சரி மெத்தையில் தான் படுத்துறங்கி இருக்கிறாள்.

ஆளுயற இருந்த கண்ணாடி அவளை வா வாவென அழைத்தது. ஒவ்வொரு இரவும் அவள் அனுபவிக்கும் நரக வேதனை தான். அந்த வீட்டில் இருந்த போது குளியலைறையில் கண்ணீர் விடுவாள். இங்கு வந்ததிலிருந்து கண்ணாடி முன் நின்று மௌனமாக அழுவாள். இப்பொழுதும் கண்ணாடியை நோக்கி முன்னேறினாள். மெல்ல நைட்டியை தூக்கி தன் வலது புற இடுப்பைப் பார்த்தாள்.

சூட்டுக் காயத்தைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது. இடுப்பா இது எரிஞ்சு போன அடுப்பு என கார்த்திக் கூறியது ஞாபகம் வந்தது. இன்னும் வேகமாக கண்ணீர் வந்தது. அந்த தளும்பை மெல்ல தடவியளின் நினைவுகளும் பின்னோக்கி மெல்ல நகர்ந்தது.

அப்பொழுது லாவண்யாவுக்கு பத்து வயது. அவளும் அனுவுடன் மாமா வீட்டில் தான் இருந்தாள். வேந்தன் மட்டும் தான் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான். பெண் பிள்ளை இல்லாத சிதம்பரத்துக்கு லாவண்யாவின் மேல் தனிப்பாசம். தந்தை இல்லாத அவளும் தன் தாய் மாமனை தந்தையாகவே எண்ணினாள். தாமரை இல்லாத போது தான் இந்தப் பாச பரிமாற்றம் நடக்கும். லட்டு என செல்லப் பெயர் இட்டு முதலில் அழைத்தவர் அவர்தான். மனைவிக்கு தெரியாமல் தின்பண்டங்கள், துணி மணி என அவளுக்கு வாங்கி வருவார்.

மாமா குடித்துவிட்டு வந்து சுருண்டு கொண்டாலும், அவரை எழுப்பி சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பாள் லட்டு. எங்க ஆத்தாம்மா நீ என மருமகளை செல்லம் கொஞ்சுவார் அவர்.

ஊரில் அப்பொழுது நிமோனியா காய்ச்சல் பரவி வந்த சமயம், அனுவையும் அது விட்டு வைக்கவில்லை. படுத்த படுக்கையாக இருந்த அனுவை இந்துவும், லாவண்யாவும் மாறி மாறி கவனித்துக் கொண்டார்கள். ஹாஸ்பிட்டலில் காட்டி மருந்து மட்டும் வாங்கி வந்திருந்தனர். அங்கேயே தங்க வைக்க இந்துவிடம் பணம் இல்லை. மகள்களில் படிப்புக்காக பிக்சில் தான் கொஞ்சம் போட்டு வைத்திருந்தார்.

அந்த வாரத்தில் ஒரு மாலை பொழுதில்,

“அம்மா!” பதறியபடி பாத்ரூமில் இருந்து ஓடி வந்தாள் லட்டு.

“என்னடா?”

“அம்மா, பயமா இருக்குமா. பாத்ரூம் போனேனா, ரத்தம் ரத்தமா வருதுமா” அழுதாள் லட்டு.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் இந்து. இன்னும் அனுவே வயதுக்கு வந்திருக்கவில்லை. அதற்குள் பத்து வயதிலேயே பூப்பெய்தி நிற்கும் சின்ன மகளை நெஞ்சோடு அணைத்து கண்ணீர் வடித்தார். என்னமோ ஏதோ என அன்னையின் கண்ணீரில் பயந்து தானும் அழுதாள் லட்டு.

மகளின் பயத்தைக் கண்டு கண்ணீரைத் துடைத்த இந்து,

“ஒன்னும் இல்லடா ராஜாத்தி. இது எல்லா பொண்ணுங்களுக்கும் வரதுதான். இப்ப நீ பெரிய மனுசி ஆகிட்ட.” இந்த நேரத்தில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என மகளுக்குக் கற்றுக் கொடுத்தார். மஞ்சள் நீரை தானே மகள் தலைக்கு ஊற்றினார். காய்ச்சலில் படுத்திருக்கும் அனுவின் பக்கத்திலேயே லாவண்யாவையும் அமர வைத்தார். பின் அண்ணன் அண்ணி வரவிற்காக காத்திருந்தார் இந்து.

அவர்கள் இரவு உணவு முடித்ததும்,

“அண்ணி, லட்டு வயசுக்கு வந்துட்டா” என விஷயத்தை உடைத்தார்.

“என்னது? அதுக்குள்ளயா? உன் மகளுக்கு என்ன அவ்வளவு அவசரம்? எந்த தாய் மாமன் இங்க பணத்தைக் கொட்டி வச்சிக்கிட்டு காத்திருக்கான் உன் மகளுக்கு சீராட? அவசரக்குடுக்கை. ஏற்கனவே வெள்ளைத்தோலு, இனி எவனை இழுத்துக்கிட்டு வர போகுதோ?” வசை பாடினார்.

அவருக்கு லட்டுவைக் கண்டாலே ஆகாது. அனு இவரைக் கண்டாலே, அவர்களின் ரூமுக்குள் ஒளிந்து கொள்வாள். லட்டு எப்பொழுதும் இவரைப் பார்த்து பயப்படாமல் நேர் கொண்ட பார்வை பார்ப்பாள். எந்த வேலை சொன்னாலும் செய்வாள், ஆனால் அதில் ஒரு நிமிர்வு இருக்கும்.

‘நம்மள அண்டி வாழுற கழுதை, அதுக்கு இருக்கற கொழுப்பைப் பாரு. அண்ணனும் தங்கச்சியும் சரியான ராங்கி பிடிச்சதுங்க’ என மனதிற்குள்ளேயே லட்டுவையும் வேந்தனையும் திட்டுவார் தாமரை. தம்ளரில் தண்ணி கொண்டு வரும்போது சிந்தி விட்டாளோ, வீட்டில் சிறு தூசி தட்டுப்பட்டாளோ லட்டுவை கொட்டி விடுவார். சில சமயம் முதுகிலும் விழும். அழாமல் முறைத்தபடியே வந்து விடுவாள் அவள்.

“அண்ணி, நல்ல விஷயம் நடந்துருக்கு. இப்படி பேசாதீங்க அண்ணி”

“எது நல்ல விஷயம்? உன் பொண்ணு குத்தவச்சி உக்காந்ததா? பணக்காரன் வீட்டுல பொறந்தவ உட்கார்ந்தா அது நல்ல விஷயம். நீயும் நீ பெத்ததுங்களும் பீடைங்க. இனி இந்த வீட்டுக்கு சனி பிடிக்குமே தவிர நல்லது எங்க நடக்க போகுது?”

இந்துவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவரை மீறி கேவல் வெளி வந்து விட்டது. சிதம்பரத்துக்கு தாங்கவே முடியவில்லை.

“தாமரை, விடும்மா. ஒன்னும் செய்யாட்டியும் போகுது. மனசு வலிக்க பேசாதம்மா”

“வாயா வா! எங்கடா இன்னும் உடன் பிறப்புக்கு பரிஞ்சு கிட்டு வரலியேன்னு நினைச்சேன். இதுங்கள வீட்டுல வச்சு தண்ட சோறு போடறதே பெரிய விஷயம். இதுல ஒன்னும் செய்யாட்டி போகுதுன்னு குத்தி வேற பேசறியா? அந்த குட்டி கழுதை மேல உனக்கு தனிப்பாசம்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கறீயா? இப்ப வயசுக்கு வேற வந்துட்டா, பாசம் இன்னும் கூடுமே”

“தாமரை” கல்யாணம் ஆகி முதல் தடவை மனைவியிடம் சத்தம் போட்டார் சிதம்பரம்.

“அத்தை! வாய்க்கு வந்த மாதிரி எங்க அம்மாவையும் மாமாவையும் பேசாதீங்க.” சின்ன பிள்ளை தானே, நிலமையின் தீவிரம் தெரியாமல் கத்தினாள் லாவண்யா.

“வாடி என் சீமை சித்ராங்கி. எங்கிட்டயே உன் வாய் துடுக்கை காட்டறியா? உன்னை எல்லாம் இப்பவே அடக்கி வைக்கனும்டி கழுதை” தன் கணவரும் லட்டுவும் கத்தியதில் ஆங்காரமானார் தாமரை.

வயிற்று வலியிலும், அம்மா அழுவதை தாங்காமல் எழுந்து வந்துருந்தவளை தரதரவென சமையலறைக்கு இழுத்து வந்தவர்,

“இந்த வெள்ளைத்தோலு இருக்கவும் தானடி, எம் புருஷன் உனக்காக என் கிட்ட சத்தம் போடறான். அதை பொசுக்குறேன் பாரு” என கத்தியவர் சுடுதண்ணீர் போடுவதற்காக வத்திருக்கும் விறகடுப்பில் இருந்த கொள்ளியை எடுத்து அவள் முகத்துக்கு சூடு வைக்க போனார்

பாய்ந்து வந்த சிதம்பரம் கொள்ளி கட்டையை தாமரையின் கையில் இருந்து எடுக்கப் போராடினார். அவர்கள் இருவரின் போராட்டத்தில் கட்டை தவறி விழுந்து லட்டுவின் இடுப்பை பதம் பார்த்தது. துடி துடித்து கீழே விழுந்த மகளை அணைத்துக் கொண்டு கதறிவிட்டார் இந்து. லாவண்யா வலியில் துடிக்கும் காட்சியைக் கண் குளிர கண்ட தாமரை,

“விரலுக்கேத்த வீக்கம் வேணும்டி சின்ன சிறுக்கி. எப்போ மனசு அலைபாஞ்சாலும் இந்த சூட்டை நினைச்சுக்க. மாமா மாமான்னு இனிமே என் புருஷன் பின்னால சுத்துறத பார்த்தேன் நெருப்பு வச்சி கொழுத்திருவேன்” தீக்கங்குகளாய் வார்த்தைகள் வந்து விழுந்தன. சூட்டு காயத்தோடு, விரலுக்கேத்த வீக்கமும் மனதில் ரணமாய் பதிந்து போனது லாவண்யாவுக்கு.

மகளுக்கு கை வைத்தியம் மட்டுமே பார்த்தார் இந்து. ஹாஸ்பிட்டல் போனால் போலீஸ் கேஸ் ஆகிவிடுமே. இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு வெளியே எங்கே போவார்? ஆனால் மனம் விட்டுப் போனது அவருக்கு. பெண் பிள்ளைக்கு எதற்கு படிப்பு என பொத்தி பொத்தி வளர்த்த பெற்றவர்களை மனதிலேயே திட்டித் தீர்த்தார்.

‘பொண்ணு, பொண்ணுன்னு பொத்தி வச்சு, இப்ப என் பொண்ணுங்கள என்னால கரை ஏத்தமுடியாம செஞ்சிட்டீங்களே’ என மனதிலேயே கதறினார்.

வீட்டுக் கணக்கு வழக்கைப் பத்தி தெரிஞ்சு நீ என்னடா பண்ண போற. சமைச்சி சாப்பிட்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு சந்தோசமா என்று தன்னை இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த கணவரை நினைத்து துடியாய் துடித்தார். இவையாவும் மனதில் மட்டுமே நடந்த போராட்டங்கள். வெளியில் பிள்ளைகளுக்காக தைரியமாக காட்டிக் கொண்டார். வயசுக்கு வந்து நாளிலே சூட்டுக் காயத்தோடு அல்லல் படும் தன் மகளைப் பார்த்தார். மனதைக் கல்லாக்கி கொண்டார்.

சரியாக பதினாறாவது நாளில் மகளுக்கு மஞ்சள் நீரூற்றி தன் பழைய புடவையைக் கட்டி, ரூமுக்குள்ளேயே தனக்கு தெரிந்த சடங்கை செய்தார் அந்தத்  தாய்.

பின் தனியாக தன் அண்ணனைப் பிடித்தவர், வீடு விற்று பிக்சில்  இருந்த பணத்தை உடைக்க சொன்னார். தூரமாக பள்ளியும் ஹாஸ்டலும் பார்த்தார் மகளுக்கு. மகனிடம் வாய் தவறி கூட நடந்ததை சொல்லவில்லை. அவள் பெரிய மனுசி ஆகியிருப்பதை மட்டும் சொன்னவர், படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறாள் அதனால் ஹாஸ்டலில் சேர்க்கிறேன் என மட்டும் கூறினார். தூரத்தில் அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என தான் மறைத்தார்.

அண்ணனுடன், இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு வாடகை வண்டியில் பயணித்தவர்,

“லட்டும்மா, இனிமே அம்மா உன்னை கஸ்டப்பட விட மாட்டேன். உன்னை ஹாஸ்டலிலே சேர்ப்பதே தூரமா இருந்தாலும் என் மக நெஞ்சுறுதி உள்ளவளா இருக்கனும்னு தான். நீ இங்க இருந்தா அதை இவங்க அழிச்சிருவாங்க. இன்னும் இந்த நாட்டுல பொண்ணுக்கு சுதந்திரம் இல்லம்மா.அம்மா சொல்ற சுதந்திரம் ஆணுக்கு நானும் நிகர்தான்னு நெனச்சிக்கிட்டு அவன் செய்யற எல்லாத்தையும் செய்ய நினைக்கிறது இல்லடா. தான் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ, மத்தவங்க கைய எதிர்பார்க்காம இருக்கறதுதான். நீ அம்மா மாதிரி ஒரு ஆணை சார்ந்து இருக்க கூடாது கண்ணும்மா. உங்க அக்காவத்தான் என்னை மாதிரியே வளர்த்துட்டேன். நீயாவது உன் காலுல நிக்கனும். அதுக்கு முத படியா தான் உன்னை இங்க சேர்க்க போறேன். எனக்கு கிடக்காத பெண் சுதந்திரம் உனக்கு கிடைக்கனும். என் மகளுக்கு அதை நான் கிடைக்க வைப்பேன். பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரிடா. உங்க அத்தை மாதிரி ஆளுங்க நிறைஞ்ச உலகம் இது. எதிர்த்து போராடனும் நீ. யாருக்கும் அடங்கி நிக்கக்கூடாது. பொண்ணுக்கு படிப்பும், தன்னம்பிக்கையும் தான் முக்கியம். படிப்பை நான் குடுக்கறேன். அது தன்னம்பிக்கைய தானா உனக்கு குடுக்கும். “ மகளை மடியில் போட்டு நீளமாக பேசியவர்,

“மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிபடைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும் “ என உணர்ச்சிகரமாக பாடியவர் மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினார்.

“அம்மா, நீ அழாதேமா. நான் நல்லா படிப்பேன். இங்க சமர்த்தா இருந்துப்பேன். நீங்க அனுவ பத்திரமா பார்த்துக்கிட்டு, உங்களையும் கவனிச்சுக்குங்க. நான் சந்தோஷமா இருப்பேன்” வாய் பேசினாலும் மனம் ஊமையாக அழுதது.

‘உன்னையும் அனுவையும் விட்டுட்டு நான் எப்படிமா இருப்பேன்? இங்க எனக்கு யாரையும் தெரியாதே. ஒரு காய்ச்சல் , வயித்து வலின்னா யார் கிட்ட செல்லம் கொஞ்சுவேன்? உன்னை கட்டிப்பிடிக்காம ராத்திரி எப்படி தூங்குவேன்? பயமா இருக்குமா. ஆனா உன் கிட்ட என் பயத்தை காட்ட மாட்டேன்மா. நீ அதையே நினைச்சி நினைச்சு அழுவேன்னு தெரியும். அண்ணனை அனுப்பிட்டு எத்தனை ராத்திரி எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிகிட்டு தனையணைய நனைச்சிருக்க. என் விஷயத்துலயும் அப்படி நடக்க விட மாட்டேன்’

“வந்து சேர்ந்து, அரை மணி நேரம் ஆச்சு. கிளம்புங்க மாமா. அம்மாவ பத்திரமா பார்த்துக்குங்க. போற வழியில நல்ல கடையில அம்மாவுக்கும் அனுவுக்கும் சாப்பாடு வாங்கி குடுங்க மாமா” என சிரித்தபடியே கூறினாள் லட்டு.

“என் ஆத்தா! உன் முகத்தைப் பார்க்காம நான் எப்படிடா இருக்க போறேன்? உங்க அத்தைக்காரி சீக்கிரமா கட்டையில போக” மனைவியை சபித்தார் சிதம்பரம்.

ஒருவாறாக அவர்களை கிளப்பிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் படுத்து கதறியவள், மறுநாளே காய்ச்சலை இழுத்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பிக்கும் வரை அனைத்தையும் தனியாகவே தாங்கினாள் லாவண்யா.

இடுப்பு தழும்பை தடவியபடி கண்களை துடைத்தவள், கட்டிலில் ஏறி அமர்ந்தாள்.

‘உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு

ஐய்யய்யோ வருதே மூதேவி வருதே’ என போன் மணி அடித்தது வடிவேலு குரலில். சிரிப்புடன் ‘கார்த்திக் மண்டையன்’ காலிங் எனும் எழுத்தைப் பார்த்திருந்தாள். தினமும் கூப்பிடுகிறான், கை வலிக்க மேசேஜ் அனுப்புகிறான், காலேஜ் வாசலிலும் வந்து நிற்கிறான், எதையும் அவள் கண்டு கொள்வதில்லை. அடித்து முடிக்கும் வரை பார்த்திருந்தாள். பின் வழக்கம் போல் வாட்ஸாப் மேசேஜ் வந்தது, திறந்து பார்த்தாள்.

“இன்னும் கோபம் போகலியா என் செல்லத்துக்கு. பேசுடா குட்டி. ஏசறதுக்காகவாவது பேசு பிளிஸ். இன்னிக்கு ஈவ் டீசிங்னு உன் காலேஜ் செக்குரிட்டிகிட்ட மாட்டி விட்டயே, அது பத்தலயா? போலிஸ் ஸ்டேசன் போகாம பணம் குடுத்து அவனை செட்டல் பண்றதுக்குள்ள, யப்பா உயிர் போச்சு. இன்னுமா என் மேல இரக்கம் வரல?”

படித்தாள் ஆனால் ரிப்ளை செய்யவில்லை.

‘என்ன மாப்பு புதுசா வாட்ஸாப் ஸ்டேடஸ் போட்டுருக்காரு, பார்க்கலாமா வேணாமா? சரி பார்ப்போம்.’ என திறந்து பார்த்தாள் லட்டு. எல்லா முடியையும் முன்னால் சீவி முகத்தை மறைத்து ஒரு கண் மட்டும் தெரியும் மாதிரி செல்பி எடுத்துப் போட்டிருந்தான். கீழே கேப்ஷனில் “மிஸ்ஸிங் யூ பேட்லி” என போட்டிருந்தான். படம் வரும்போதே பேக்கிரவுண்டில் பாடல் வேறு வந்தது.

“உன்னை மறக்க முடியல

உயிர வெறுக்க முடியல

ராசாத்தி

நீயும் நானும் ஒன்னா சேரும்

காலம் இனிமே வாராதோ

பொன்மானை தேடி

நானும் பூவோட வந்தேன்” என மாடர்ன் செல்பிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பாடல் ஓடியது.

லட்டுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘உன் அலும்பு தாங்க முடியலைடா. வெளிய தான் மாடர்ன். உள்ள இன்னும் பழைய பஞ்சாங்கம்தான். என் மனச ஒடிச்சு போட்ட இல்ல, கொஞ்ச நாளைக்கு இந்த பீலிங்கிலே சுத்து. அப்பத்தான் உனக்கு புத்தி வரும். தாலிய குடுத்தவுடனே, குடு குடுன்னு ஓடிப் போய் வாங்கனப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்? உங்க மேடம் திட்டினப்போ மரம் மாதிரி நின்னயே அப்போ என் மனசு என்ன பாடு பட்டுருக்கும்? இப்போ குரங்கு போஸ் குடுத்து சேட் சோங் போட்டா உன்னை மன்னிச்சிருவாங்களா? நான் படுத்தற பாட்டுல நீ உங்க மேடத்து கிட்ட வேலையே வேணாம்னு தெறிக்கனும். தெறிக்க விடறேன்’ சபதம் போட்டாள் அந்த வீர மங்கை.

 

உயிரை வாங்குவாள்….

Leave a Reply

error: Content is protected !!