Uyir Vangum ROjave–EPI 21

அத்தியாயம் 21

காதல்னா நீ போட்டுருக்க ப்ளவுஸ்னு நினைச்சுக்கிட்டியா?

வேணும்னா போட்டுக்கறதுக்கு, வேணான்னா மாத்திக்கறதுக்கு?

(ஜீவாசிவா மனசுல சக்தி)

 

காலேஜ் முடிந்து களைப்புடன் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு வந்தாள் லாவண்யா. நாளை அசைன்ட்மென்ட் பிரசென்ட் செய்ய வேண்டிய நாள். அவள் குழுவில் உள்ள இருவர் டெங்கு காய்ச்சலால் மெடிக்கல் லீவில் இருந்தார்கள். நான்கு பேர் வேலையை இவளும் இன்னொரு தோழியும் மட்டுமே செய்ய வேண்டியதாகி விட்டது. லைப்ரரியில் புத்தகங்களை குவித்து வைத்து, அதன் மேல் தான் இவ்வளவு நேரமும் விழுந்து கிடந்தாள். புத்தகத்தையும் கூகுள் ஆண்டவரையும் மாற்றி மாற்றி பார்த்து டைப்பியது கண்ணுக்குள் பூச்சி பறந்தது. லன்ச் கூட போகவில்லை. வயிறு வேறு கிள்ளியது. போன் செய்து வீராவை வரச் சொல்லியிருந்தாள்.

இப்பொழுதெல்லாம் காலேஜ் முடிய, முன்னே பின்னே ஆவதால், போன் செய்து தான் வர சொல்லுவாள். மாண்புமிகு மாமா ஆனவுடன் காக்க வைக்கப் பிடிக்கவில்லை. யார் எப்படியோ, லாவண்யாவுக்கு வீராவை ரொம்ப பிடிக்கும். கண்ணியமாக அதே நேரம் கலகலப்புடன் பழகும் வீரா இப்பொழுது அவளின் செல்ல மாம்ஸ்.

காரைப் பார்த்தவுடன் தோழிக்கு பாய் சொல்லிவிட்டு ட்ரைவர் பக்கத்து சீட் கதவை திறந்து எப்பொழுதும் போல் உட்கார்ந்தாள்.

“மாம்ஸ், பசிக்குது. ஏதாவது ஸ்நேக்ஸ் இருக்கா?” என கேட்டவாறே திரும்பியவள், கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

“வாடி என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி. எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி டான்ஸ் ஆடுவ? வசமா மாட்டுனயா” சிரித்தான் கார்த்திக்.

“டேய் பிராடு! திமிராடா? எங்கடா என் மாமா?” எனக் கேட்டவாறே கதவைத் திறக்க முயற்சித்தாள்.

“அஸ்க்கு புஸ்க்கு. உனக்காகவே மெக்கானிக் ஷோப் போய் சைல்ட் லோக் போட்டேன். நானே வெளிய வந்து திறந்தா தான் கதவு திறக்கும் மகாராணி. யாரு கிட்ட உன் தில்லாலங்கடிய காட்டுற. அப்புறம் என்ன சொன்ன? மாமாவா? பிச்சி புடுவேன்டி. உங்கொக்கா புருஷனா இருந்தாலும், மாமா கோமான்னு கூப்புடற வேலை வச்சிக்காத. நான் மட்டும் தான் உனக்கு மாமா, மச்சி, மச்சான், அத்தான் எல்லாமே” பேசிக் கொண்டே காரைக் கிளப்பியிருந்தான்.

“எங்கடா என்னைக் கடத்திட்டு போற? முதல்ல என் மாமா எங்கன்னு சொல்லு கார்த்திக்?”

“திரும்பவும் மாமான்னு சொல்லுற! வாய் மேல வாய் வச்சா தான் சரியா வருவ”

படீரெனெ அவன் கையிலே போட்டாள்,

“வலிக்குதுடி பொண்டாட்டி! வீராவ கொஞ்சம் கன்பியூஸ் பண்ணி வேற வேலை குடுத்துருக்கேன்”

“கன்பியூஸ்னு அழகான வார்த்தை சொல்லாதா. ஏமாத்தின்னு  சொல்லு”

“ஹிஹிஹி! என் கன்னுக்குட்டிடி நீ. மாமன பற்றி எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்க. எக்சுவலி சனி பெயர்ச்சி வருதுல”

“நீதான் என் வாழ்க்கையில எப்பவோ வந்துட்டியே”

“சைக்கிள் கேப்ல என்னை மிஸ்டர் சனின்னு சொல்லுற? மறப்போம், மன்னிப்போம். சனி பெயர்ச்சிக்காக நம்ம ஷோப்பிங் கம்ப்லேக்சுல விலை உயர்ந்த ராசி கல்லுங்க எல்லாம் இன்னிக்கு வந்து இறங்குது. அதுக்கு வீராவோட செக்குரிட்டி டீம் அலெர்ட்டா இருக்கனும். அவனுக்கு போன் பண்ணி லோடிங் எடத்துல இன்னிக்கு கல் வரும்னு சொல்லி முடிக்கறதுகுள்ள பேட்டரி முடிஞ்சிருச்சு. அந்த லூசு கலவரம்னு நினைச்சி ஓடி வந்துருச்சி. சரி வந்ததே வந்துட்ட இருந்து பாருன்னு சொல்லிகிட்டு இருக்கேன், நீ போன் பண்ணுற அவனுக்கு. விடுவனா இந்த சான்ஸ? கார் சாவிய கோழி அமுக்கற மாதிரி அமுக்கிட்டோம்ல” கலகலத்து சிரித்தான்.

ஒன்றும் சொல்லாமல் சாலையையே வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் லாவண்யா. அவளது கையை சுரண்டினான் கார்த்திக்.

“இப்ப எதுக்கு பூனை மாதிரி சுரண்டுற?” எரிச்சலைக் காட்டினாள் அவள்.

“என் கன்னுக்குட்டிக்கு பசிக்குதா? இல்ல இவ்வளவு சூடா இருக்கியே. அதான் கேட்டேன். பின்னால சீட்டுல சமோசாவும், ப்ளாஸ்க்ல டீயும் வாங்கி வச்சிருக்கேன். எடுத்துக்கடா.”

சீட்டிலிருந்து பின்னால் எம்பி அவனை இடித்தவாறே எடுத்தாள் லாவண்யா. பரவச நிலைக்கு போன கார்த்திக்,

‘தொட்டு  தொட்டு  என்னை வெற்று  கழி  மண்ணை 
சிற்பமாக  யார்  செய்ததோ’ பாடலை ஹம் செய்தான்.

குமட்டிலேயே குத்தியவள்,

“ரோட்டைப் பார்த்து ஓட்டு. என் பக்கேட் லிஸ்டுல இன்னும் ஒன்னைக் கூட நான் செய்யல. அதுக்குள்ள எம்ஸ் மாமாகிட்ட அனுப்பிறாத”

“எம்ஸ் மாமாவா? எவன்டி அது இன்னொரு மாமா? நல்லா இல்ல லட்டும்மா!”

“அடச்சீ! எம்ஸ் மாமான்னா எமதர்ம மாமா.”

“ஊருல உள்ளவன், மேலோகத்துல உள்ளவன் எல்லாத்தையும் இந்த செப்பு வாயால மாமான்னு கூப்புடுற. ஹ்ம்ம்ம்! நான் மட்டும் என்னடி பாவம் பண்ணேன்? இப்படி ஓரவஞ்சனை பண்ணுற?” குரல் முழுக்க ஏக்கம்.

“உன்னலாம் மாமான்னு கூப்புட முடியாது. வேணும்னா பீமான்னு கூப்புடறேன்.” சமோசாவை மொக்கியவேறே சொன்னாள்.

முறைத்தவன்,

“எனக்கு ஒரு சமோசா குடு லட்டு. நீ மட்டும் வச்சு அமுக்கற” ஸ்டேரிங்கில் இருந்து வலது கையை நீட்டினான்.

“இந்த சமோசாவா?” என காட்டியவள், கடைசி பீசையும் தன் வாயில் போட்டு அமுக்கினாள்.

“சாரி கார்த்திக், முடிஞ்சிருச்சு. எந்தக் கடையில வாங்குனா? எண்ணெய் வாசம் அடிக்குது. இனிமே வாங்குனா, என் காலேஜ் ஒபொசிட்ல ஒரு பாய் கடை இருக்கு, அங்க வாங்கு. டேஸ்ட் அள்ளிக்கும்”

“நல்லா மொக்கிட்டு, பேச்சைப் பாரு. டீயாச்சும் குடுடி”

“அதெல்லாம் முடியாது. கொஞ்சம் தான் இருக்கு. எனக்கு பத்தாது”

தலையில் அடித்துக் கொண்டான் கார்த்திக்.

“நீ நல்லா வருவ லட்டும்மா. ரொமென்டிக்ன்னு ஒரு வோர்ட் இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்னு உனக்கு தெரியுமா?”

“எது ? காசு பத்தாம ஒரு கிளாஸ் டீ வாங்கி ரெண்டு பேரும் ஒரு மணி நேரமா நீ குடி, இல்ல நீங்க குடிங்கன்னு டைம் பாஸ் பண்ணுவாங்களே அதுவா? கண்றாவி. நானா இருந்தா, நீ குடிக்காட்டி போடா, நான் குடிக்கறேன்னு ஒரே மொடக்குல முழுங்கிருவேன்”

வாய் விட்டு சிரித்தான் கார்த்திக்.

“நீ கேட்டா ஒரு கப் என்ன, ஒரு கபேவே வாங்கி குடுப்பேன் கண்ணம்மா” அதற்குள் காரை பார்க்கிங் செய்திருந்தான் கார்த்திக்.

“எங்க வந்துருக்கோம்?”

“என் அபார்ட்மென்டுக்கு. “

“அங்கெல்லாம் நான் வர மாட்டேன். பப்ளிக் பிளேசுக்கு கூட்டிட்டுப் போ”

“வாடி ராஜாத்தி. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன். அதே மாதிரி நீயும் என் கற்புக்கு கேரெண்டி குடுக்கனும். சரியா?”

“முகரைய பாரு. இவரு பெரிய மன்மத ராசா, இவரு கற்ப நாங்க கசக்கிருவோம். போடாங்!” கடுப்பானாள் லட்டு.

“அப்புறம் என்ன பயம்? வாம்மா போலாம். உன்னை இங்க கூட்டிட்டு வரனும்னு எத்தனை நாள் கனவு தெரியுமா? மனசு விட்டு பேசத்தான் கூப்பிடுறேன். என் விரல் நகம் கூட உன் மேல படாது” கெஞ்சினான்.

‘நகம் மட்டும் தான் படாது செல்லாக்குட்டி. மத்தபடி கையோ காலோ பட்டா நான் பொறுப்பு இல்ல. எத்தனை வருஷம் கழிச்சு உன்னை தனியா பிடிச்சுருக்கேன், இன்னிக்கு நீ கைமா தான்’ மனதில் பேசிக் கொண்டான்.

“வாய் ஒன்னு சொன்னாலும், உன் இளிப்பு வேற ஒன்ன சொல்லுதே” சந்தேகமாக கேட்டாள் லட்டு.

‘ஏன்டி, ஏன்? மத்த பொண்ணுங்க மாதிரி கொஞ்சம் லேட் பிக்கப்பா இருந்தா தான் என்ன? சேச்சே! என் லட்டும்மாக்கு இந்த புத்திசாலித்தனம் தான் அழகு. நீ இப்படியே இருடா ராஜாத்தி.’ சீராட்டிக் கொண்டான்.

“இப்படி கார்லயே உக்காந்துகிட்டு என்னை ஏன்டி கொல்லுற? இப்ப என்ன பண்ணா என்ன நம்புவ?”

“ஒரு பாட்டுப் பாடு கார்த்திக். அந்தப் பாட்டு சின்சியரா இருந்தா வீட்டுக்கு வரேன். இல்லேன்னா இப்படியே போய்ருவேன்” அவளுக்கும் அவனிடம் தனியாக பேச வேண்டி இருந்தது. இருந்தாலும் உடனே ஒத்துக் கொண்டாள் அவள் கெத்து என்னாவது? அதற்காகத்தான் அவனை வம்பிழுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“உங்க பேமிலி என்ன, மைக் மோகனுக்கு சொந்தமா? ஆனா ஊனா பாடறீங்க, இல்ல பாட சொல்லுறீங்க. முடியலடி”

“அப்போ விடு. நான் கிளம்புறேன்”

“இரு, இரு பாடறேன். “

அவளை நோக்கி திரும்பி அமர்ந்தவன், அவள் கண்களை ஊடுருவியவாறே,

“நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்” அனுபவித்துப் பாடினான்.

லட்டுவின் கண்களின் வழி தெரிந்த குழப்பம், நம்பிக்கையின்மை, பயம், கோபம் எல்லாம் மெல்ல மெல்ல கரைந்து அவன் கண் எதிரே மாயமாவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது கார்த்திக்குக்கு.

சட்டேன இமை தட்டி விழித்தவள், தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

“அன்புள்ள மக்கே அன்புள்ள மடையா

அன்புள்ள லூசே அன்புள்ள கேப்மாரியே” என முடித்து வைத்தவள்,

“வந்து தொலைக்கிறேன். கார் கதவ திற” என்றாள்.

சந்தோஷமாக கார் கதவை திறந்தான் கார்த்திக். லிப்டினுள் நுழைந்தவுடன், நம்பரை அழுத்திவிட்டு கைகளை கட்டியவாறே லட்டுவை சைட் அடிக்க ஆரம்பித்தான். அவன் போதாத காலம், மூன்றாவது மாடியில் ஏறிய இளங்குயில் ஒன்று இவனைப் பார்த்ததும், கார்த்திக் டியர் என மேலை நாட்டு ஸ்டைலில் கட்டி அணைத்து கன்னத்தோடு கன்னம் உரசி வணக்கம் சொன்னது. அவனும் சிரிப்புடன் அவள் ஸ்டைலிலே வணங்கினான்.

அவள் தளத்தில் இறங்கும் வரை குயிலும் இவனும் ஆங்கிலத்திலேயே வளவளத்தபடி வந்தனர். பார்த்திருந்த லட்டுவுக்கு காதில் புகை வண்டியே ஓடியது. வீட்டை அடைந்து கதவைத் திறந்த கார்த்திக்,

“வெல்கம் டு அவர் ஹோம்” என இடை வரை குனிந்து வாழ்த்தி வரவேற்றான்.

“வலது கால் எடுத்து வச்சு வா லட்டு”

“எதுக்கு நான் வலது கால் வச்சு வரனும்? இப்ப கன்னத்தோட கன்னம் வச்சு, பத்து பாத்திரம் தேய்க்கற மாதிரி தேய்ச்சாளே, அவள எடுத்து வச்சு வர சொல்லு” முறுக்கிக் கொண்டாள் லாவண்யா.

“அவ எதுக்கு என் வீட்டுல வலது கால் வைக்கனும்? நீ தானே என் காதல் கிளி. நீதான் வைச்சு வரனும்” கண்களால் சிரித்தான் கார்த்திக்.

“கிளி, சலின்னு சொன்னே, பொலி போட்டுருவேன்” வாசலிலே சண்டை நடந்தது.

‘உள்ளுக்கு வரதுக்கே இந்த அக்கப்போரா? முடியலைடி! உனக்கெல்லாம் வெள்ளைக்காரன் ஸ்டைல் தான் சரி வரும்’

அலேக்காக அவளைத் தூக்கியவன், வீட்டின் ஹால் உள்ளே வந்தவுடன் தான் இறக்கி விட்டான். அதிர்ச்சியான லட்டு,

“என்னடா பண்ண இப்ப?” என ஆத்திரமாக கேட்டாள்.

“தெரியலையா? அவ்ளோ சுகமாவா இருந்துச்சு மாமன் தூக்கனது?” சிரிப்புடன் கேட்டான்.

“இனிமே இப்படி செய்வியா?” என மறுபடியும் கேட்டு, கேட்டு கையில் இருந்த பேக்கினாலே மொத்தினாள்.

“என்னடி வச்சிருக்க பேக்குல? செங்கல்லா இல்ல பாறாங்கல்லா? இந்த வலி வலிக்குது.”

“அந்த பயம் இருக்கட்டும். தொட்டு தூக்கறதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்”

“நெஜமாவா லட்டும்மா? பிரேக் அப் , பெட்ச் அப் ஆயிருச்சா? சொல்லுடா. என் மேல உள்ள கோபம் எல்லாம் போச்சா? சரி வா, இப்பவே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” பரபரத்தான் அவன்.

நிதானமாக அவனைப் பார்த்தவள்,

“கண்டிப்பா பண்ணிக்கலாம்” ரிலாக்சாக சோபாவில் அமர்ந்தவாறே கூறினாள்.

பாய்ந்து வந்து அவள் காலடியில் அமர்ந்தவன், அவள் மடியில் தலையை வைத்துக் கொண்டான்.

“என்னடா பண்ணுற?”

“நீ சொன்னது கனவுலயா, நினைவுலயான்னு சோதிச்சுப் பார்த்தேன். நான் படுத்து இருக்கறது நிஜ மடிதான். இப்ப நம்புறேன், இது நிஜம்தான்னு” இன்னும் சொகுசாக தலையை வைத்துக் கொண்டான்.

அவன் முடியைக் கொத்தாக பிடித்து ஆட்டினாள் லாவண்யா.

“ஏன்டி, என் முடியைப் பிடிச்சு மாவாட்டுற? விடுடி வலிக்குது. உன் கிட்ட மாட்டுனா என்னை பிரிச்சு மேயுறடி நீ. இதெல்லாம் நல்லா இல்ல. சேகர் செத்துருவான்”

“வலிக்குதா? இப்ப தெரியுதா நிஜம் தான் கனவில்லைன்னு. ஒழுங்கு மரியாதையா எழுந்து மேல உட்காரு” மிரட்டினாள்.

பக்கத்தில் அமர்ந்தவன், அவள் கைகளை தன் கையினுள் கோர்த்துக் கொண்டான்.

“எல்லாம் முடிஞ்சதுன்னு நீ சொல்லிட்டுப் போயிட்ட. என்னால தூங்க முடியல, சாப்பிட முடியல, குளிக்க முடியல, ஒரு வேலையும் செய்ய முடியலை லட்டும்மா. இனிமே இப்படி பேசுன, உன் மாமன உயிரோட பார்க்க மாட்டே சொல்லிட்டேன்.”

அவன் வாயைப் பொத்தியவள்,

“நல்ல விஷயம் பேசும் போது, எதுக்கு இப்படி பேசுற கார்த்திக். நீ இல்லைனா நான் மட்டும் இருப்பேனா?”

இப்பொழுது அவள் வாயை அவன் மூடினான். அவள் கை இவன் வாயிலும், இவன் கை அவள் வாயிலும் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“என்னை மன்னிச்சுரு லட்டும்மா. எங்களுக்கு மதனும் அவன் அம்மாவும் ஹாஸ்பிட்டலுக்கு வராங்கன்னு ஏற்கனவே தெரியும். அவங்க ரெண்டு பேர் பின்னாலயும் ஏற்கனவே ஆள் போட்டுருக்கோம் கண்காணிக்க. எப்படியும் அந்தம்மா ஏதாவது சூழ்ச்சி பண்ணும்னு மேடம் சொன்னாங்க. அதான் நான் கட்டற மாதிரி போக்கு காட்டி வீரா கட்டனும்னு பிளான். அந்த பிளான்ல, உன்னையும் சேர்த்து அடக்க தான் செஞ்சாங்கன்னு எனக்கு தெரியாதுடா. அதோட அவங்க உன்னை ஏசுனப்ப நான் உள்ள வந்துருந்தா, உனக்கு இன்னும் சேதாரமாயிருக்கும். அதனால தான் நான் அமைதியா இருந்தேன். நீயே சொல்லு லட்டும்மா, ஒரு புருஷன் பொண்டாட்டிய பிரிக்கறது பாவமில்லையா? இஸ்லாத்துல சொல்லி இருக்காங்க, தாம்பத்ய பந்தத்தை அறுக்கறது ஒரு கோயிலை இடிக்கறதுக்கு சமம்னு. என் செல்லம் அந்த காரியத்த செய்யலாமா? மேடம் உன்னை ஏசுனதுல என்ன தப்பு?”

“அப்போ உன் மேடம் என்ன சொன்னாலும் செய்வியா?” கோபம் ஏறி இருந்தது குரலில்.

“செய்வேன் லட்டு!”

“என்னை வேணாம்னு சொன்னா?”

“சொல்லமாட்டாங்க”

“அது எப்படி உனக்கு தெரியும்? சொல்லிட்டா?”

“சொல்லமாட்டாங்கம்மா. எனக்கு தெரியும் நம்பு”

“சரி விடு. அவங்க சொல்லாமலே போகட்டும். ஆனா நான் சொல்லுறேன், எனக்கு நீ அவங்க கிட்ட வேலை செய்யறது பிடிக்கல. அவங்கள விட்டுட்டு வா, கல்யாணம் பண்ணிக்கலாம்”

“லட்டு!!!” அதிர்ந்தான் கார்த்திக்.

“நான் வேணும்னா, அவங்க உனக்கு வேணாம். ரெண்டுல ஒன்னு, முடிவு பண்ணு”

“அப்படிலாம் சொல்லாத லட்டுக்குட்டி. அவங்க என் பொழப்புக்கு முதலாளி. நீ என் மனசுக்கு முதலாளி. இதையும் அதையும் முடிச்சு போடாதேம்மா. என் செல்லம் இல்ல” தாடையைப் பிடித்துக் கொஞ்சினான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டாள் லட்டு. இருவரும் அமைதியாகவே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள்.

“எனக்காக இது கூட உன்னால செய்ய முடியலை இல்ல கார்த்திக்” கண் கலங்க கேட்டாள் லாவண்யா.

அவளை அணைத்துக் கொண்டவன்,

“நான் உனக்காக என்ன செய்யல லட்டு? ஒள்ளிக்குச்சின்னு என்னை ஒதுக்குன. உனக்காக நெட்ல தேடி தேடி, அதுல சொன்னதெல்லாம் செஞ்சு, டாக்டரா பார்த்து, ஜிம்முக்கு போய் படாத பாடு பட்டு உடம்ப ஏத்துனேன். சோடா புட்டின்னு கிண்டல் பண்ண, கண் செக் பண்ணி லென்ஸ் போட்டு, ஒவ்வொரு தடவையும் கண்ணு காஞ்சு போய் எரியறப்ப எல்லாம் லட்டு வேணும், லட்டு வேணும்னு சொல்லி சொல்லியே அந்த வலியையும் பொறுத்துக்கிட்டேன். முகத்துல களை இல்லைன்னு சொன்ன, அதுக்காக முடி ஸ்டைலை மாத்தி, மாசத்துக்கு ஒரு முறை பேசியல், குரூமிங்னு எல்லா வதையையும் தாங்குனேன். இன்னும் என்ன செய்யனும் சொல்லுடா? லட்டு லட்டுன்னு துடிக்குதே, இந்த இதயத்தைப் பிச்சுக் குடுக்கனுமா? சொல்லு, பிச்சுக் குடுக்கறேன். ஆனா மேடத்தை மட்டும் இப்போதைக்கு விட்டுட்டு வர சொல்லாதே. அது என்னால முடியாது லட்டும்மா. புரிஞ்சுக்கடா” கெஞ்சினான்.

தனக்காக இவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறான் என கேட்ட போது கலங்கிய கண்ணும், இளகிய மனமும் மேடத்தை விட முடியாது என்ற போது மேலும் பாறாங்கல்லாய் இறுகியது.

அவன் அணைப்பில் இருந்து தேம்பியபடியே தன்னை விடுவித்துக் கொண்டவள்,

“அப்படி என்ன அவங்க உனக்கு பெருசா போய்ட்டாங்க, என்னைவிட? அவங்க எங்கண்ணனுக்குத் தானே பொண்டாட்டி, உனக்கு இல்லையே?” என ஆத்திரத்தில் கேட்டவளின் கன்னம் திகு திகுவென எறிந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தாள் கார்த்திக் தன்னை அறைந்திருக்கிறான் என. மலங்க மலங்க விழித்தவளை பார்த்து தன்னையே நொந்து கொண்டான் கார்த்திக். சிவந்திருந்த அவள் கன்னத்தை பல முறை தடவிவிட்டவன்,

“உன்னை பூப்போல தாங்கனும்னு நினைச்ச என்னையே அடிக்க வச்சிட்டல்ல லட்டு! போதும்டி, போதும்! நீயும் நானும் பழகனதும் போதும், நான் பட்ட வேதனையும் போதும். நீ தானே என்னை வேணாம் வேணாம்னு சொல்லுவ, இப்ப நான் சொல்லுறேன்டி, நீ எனக்கு வேணாம்! வேணாம் , வேணாம், வேணாம்!” வெறி பிடித்தவன் போல் கத்தினான். அவளை அடித்தக் கையை சுவற்றிலே மோதிக் கொண்டான்.

பயந்து போன லட்டு, அவன் கைகளை தன்னால் முடிந்த அளவுக்கு இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“கார்த்திக், வேணாம் கார்த்திக். கால்ம் டவுன்” கதறிவிட்டாள். அவள் அழுகையில் நிதானத்துக்கு வந்தவன்,

“கிளம்பு லாவண்யா. வீட்டுல விட்டுருறேன்” முகம் கழுவ சென்றுவிட்டான்.

‘லாவண்யான்னு முழு பேர சொல்லுறானே! நிஜமாவே என்னை வெறுத்துட்டானா? சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னு சொல்லுவாங்களே. இந்த காதல் சேது மிரண்டுட்டானா? எனக்கு இவன் தான் வேணும். என் கார்த்திக், என்னோட கார்த்திக்! அவனே வேணாம்னாலும் நான் விடமாட்டேன்.’ தேவி மேட்டர் இப்பொழுது இரண்டாம் பட்சமாக போயிருந்தது.

அவன் பிரஸ் ஆகி வரும் வரை காத்திருந்தாள் லாவண்யா. வந்தவனிடம்,

“கார்த்திக்” என பாசமாக கூப்பிட்டாள்.

அவனிடம் எந்த பதிலும் இல்லை.

கிட்டே சென்று, மூக்கோடு மூக்கை உரசினாள். அவனின் கண்கள் ஒளி பெற்றாலும், வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

‘நிக்கிறான் பாரு கல்லு மாதிரி. இருடா, உன்னை எப்படி மடக்கறேன்னு பாரு’ கருவிக் கொண்டாள்.

“கார்த்திக், பேச மாட்டியா என் கிட்ட? ஏதோ சின்ன புள்ளை தப்பா பேசிட்டேன். அதான் அறைஞ்சிட்ட இல்ல. அப்புறம் என்ன கோபம்? பேசு கார்த்திக். என் செல்ல மங்கூஸ் மண்டையன் இல்ல. ப்ளீஸ்டா”

அதற்கும் அமைதிதான் பரிசாக கிடைத்தது.

எக்கி அவன் தோளில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டவள்,

“காலையில இருந்து நான் நாலே சமோசா தான் சாப்பிட்டுருக்கேன். அந்த நாலும் கூட நீ விட்ட அறையில கரைஞ்சி போயிருச்சு. இப்ப ரொம்ப பசிக்குது கார்த்திக் மாமா” என பாவமாக சொன்னாள்.

கார்த்திக் சிலைக்கு அப்பொழுதுதான் உயிர் வந்தது.

“மாமாவா? மாமான்னா கூப்பிட்ட?”

அவள் தலையாட்டவும்,

“என்ன பேபிமா நீ, ஒன்னும் சாப்பிடலையா? வா, வா! போற வழியில மாமா நல்ல கடையில சாப்பாடு வாங்கி தரேன். வாடா என் பட்டுக் குட்டி” என அணைத்தவாறே அழைத்து சென்றான் கார்த்திக்.

‘இவனும் திருந்த மாட்டான், அவளும் திருந்த விடமாட்டா! இந்த இணக்கம் எத்தனை நாளைக்கோ? போங்கடா நீங்களும் உங்க சண்டையும்’

இவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சண்டையால் காண்டான விதி மண்டையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டே சென்றது.

 

உயிரை வாங்குவாள்….