புரியாத மாயம் செய்தாய்…

புரியாத மாயம் செய்தாய்…
“குட் ஆஃப்டெர்ரூன் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட் ஃபோர் ஃப்ளைட் டூ இந்தியா…” என்ற அறிவிப்பு ஒலிக்க, அந்த சிட்னி விமானநிலையமே மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இருந்தது.
அங்கு அறிவிப்புக்காக காத்திருக்கும் பயணிகள் அமரவென அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் முட்டியில் கைகளை கோர்த்து தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் யாதவ். அவனுடைய முகமோ பாறைப் போன்று இறுகிப்போயிருந்தது.
விழிகள் கலங்கி அவன் அமர்ந்திருந்த நிலையே, அவனுடைய தற்போதைய மனநிலையை தெளிவாக உணர்த்தியது. அவனுடைய சிந்தனை முழுவதும் அவளின் விம்பம்தான்.
அவளை விட்டுப் பிரிந்து சிட்னி நகரத்திற்கு யாதவ் குடும்பத்தோடு குடிப்பெயர்ந்த இந்த ஐந்து வருடங்களே அவளுடனான பிரிவில் அவள்மேல் கொண்ட காதலை அவன் உணர்ந்த காலங்கள். அவளுடன் ஓடி ஆடித் திரியும் தருணங்களில் உணராத காதலை பிரிவு உணர்த்தியது.
காதலை உணர்ந்த மறுநொடி அவளின் அருகாமைக்காக அவன் ஏங்கியதை அவன் மட்டுமே அறிவான்.
இப்போது அவளை காணவே இந்தப்பயணம். ஆனால், இது அவளுடனான கடைசி சந்திப்பாகக் கூட இருக்கலாம். ‘நாம லவ் பண்ற பொண்ணோட கல்யாணத்தை நேருல பார்க்குற கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது. நாம காதலிக்குறது தெரியாம அவளே நம்மள இன்வைட் பண்ணி நாம சிரிச்சிட்டே வர்றேன்னு சொல்ற கொடுமை எதிரிக்கு கூட வரக்கூடாது.’ வேதனையோடு சொல்லிக்கொண்டது அவனுடைய மனம்.
ஆம், இன்னும் நான்கே நாட்களில் அவனவளுக்கு வேறு ஆடவனுடன் திருமணம். நாளை நிச்சயதார்த்தம் அதற்கடுத்த மறுநாளில் திருமணம் என்ற நிலையில் தன்னவளின் திருமணத்தைக் காணச் செல்கிறான் யாதவ்.
அவளுடனான தருணங்கள், அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் நினைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவனுக்காக விமான அறிவிப்பு. ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு விழிகளில் தேங்கியிருந்த விழிநீரை இமை சிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டவன், தன் தோள்பையை எடுத்துக்கொண்டு உள்ளேச் சென்றான்.
பல மணித்தியாலங்கள் கழிய, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவன், அங்கு வருவோரை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மக்கள் கூட்டங்களில் தனக்கு தெரிந்த முகங்களை தேடி விழிகளை சுருக்கினான். யாருமில்லாது யோசனையில் புருவத்தை நெறித்தவாறு அவன் அலைப்பேசியை எடுக்கவும், “யாது…” என்ற குரல் பின்னாலிருந்து கேட்கவும் சரியாக இருந்தது.
அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன், வேகமாக திரும்பிப் பார்த்த அடுத்தகணம் அவனை ஓடி வந்து தாவி அணைத்திருந்தாள் அவனவள். அவனுடைய இதழ்களோ, “ஜானு…” மெதுவாக முணுமுணுக்க, “வெல்கம் டூ இந்தியா மேன்!” உற்சாகக் குரலில் சொன்னாள் ஜான்வி.
அவளை மென்மையாக அணைத்து விடுவித்தவன், இத்தனைநாள் அலைப்பேசியில் பார்த்த தன்னவளின் முகத்தை நேரில் ரசிக்க ஆரம்பித்தான். உதடுகள் காதலை வெளிப்படுத்தத் துடிக்க, ‘யாதவ் அவ உனக்கானவ இல்லை. கன்ட்ரோல் யூவர் செல்ஃப்.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் யாதவ்.
பின் இருவருமே காரில் ஏறிக்கொள்ள, வண்டியை ஓட்டியவாறு “கல்யாணப்பொண்ணு வீட்டுல இருக்காம வெளியில போறேன்னு ரொம்ப திட்டினாங்க. அப்பாதான் ஏயார்போர்ட் வர்றேன்னு சொன்னாரு. பட், நான் கேக்கல.” என்ற ஜான்வி, அவனை விழிகளைச் சுருக்கி மேலிருந்து கீழ் பார்த்தாள். ஆனால், யாதவ்வோ காதலை சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது தன்னவளின் புறம் பார்வையைத் திருப்பாது வெளியே வெறித்துக்கொண்டு வந்தான்.
அவனை ஆழ்ந்து நோக்கியவள், “ஃபோட்டோல பார்த்ததை விட நேருல ரொம்ப ஸ்மார்ட்டா தெரியுற. உன்னையே கல்யாணம் பண்ணலாம் போலயே…” சிரித்துக்கொண்டுச் சொல்ல, சட்டெனத் திரும்பி அவளை நோக்கியவன், எதுவும் பேசவில்லை. அமைதியாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் வீட்டை அடைய, வீட்டுக்குள் நுழைந்த யாதவ்விற்கு பலத்த வரவேற்பு. “டேய், அப்போ இருந்ததை விட இப்போ செம்மயா இருக்கடா! ஆமா… என்ன பண்றான் உன் அப்பா? இந்தியாவுக்கு வரணுங்குற நினைப்பே அவனுக்கு இல்லல்ல?” ஜான்வியுடைய அப்பா சேகர் கேட்க, “வரணும்னு ஐடியாலதான் இருந்தாரு. பட், இப்போ தெரியல அங்கிள்.” என்றான் அவன்.
யாதவ்வுடைய தந்தை நரேந்திரனும் சேகரும் நெருங்கிய நண்பர்கள். நரேந்திரனுக்கு வேலையில் கிடைத்த உயர்பதவியில் குடும்பமாக சிட்னிக்கு சென்றாலும், ஏனோ அவருக்கு தன் நண்பனின் மகளையே தன் மகனுக்கு கேட்க வேண்டுமென்ற ஆசை. ஜான்வியுடைய திருமண விடயம் கேள்விப்பட்ட சமயம் கூட ‘நானும் இந்தியாவுக்கு வர்றேன். சேகர்கிட்ட நான் பேசிக்கிறேன்.’ என்று அடம்பிடித்தவரை அமைதிப்படுத்த யாதவ்தான் படாத பாடுபட்டுவிட்டான்.
ஜான்வியுடைய மொத்த குடும்பத்தின் வரவேற்பில் மூழ்கி சகஜமாக பேசிக்கொண்டிருந்தவன், அடுத்து ஜான்வி ஒரு நபரை அறிமுகப்படுத்தவும் மீண்டும் பழைய மனநிலைக்கே திரும்பிவிட்டான்.
“யாது, இது கௌத்தம், என்னோட ஃபியான்சே.” ஜான்வி உற்சாகமாகச் சொல்ல, அவனைப் பார்த்ததும் யாதவ்வின் முகம் இறுகியது.
“சோரி ப்ரோ, நானும் ஏயார்போர்ட் வரணும்னு நினைச்சேன். பட், ஒரு இம்ப்போர்டன்ட் வர்க். எனிவேய், வெல்கம்.” கௌத்தம் யாதவ்வை அணைத்து விடுவிக்க, புன்னகையை வரவழைத்து, “தேங்க்ஸ் என்ட் கங்கிராட்ஸ்.” என்றான் அவன். அதில் ஜான்வி, கௌத்தம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அவர்களின் அன்னியொன்னியத்தை பார்க்கவும் முடியாது உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டவும் முடியாது கை முஷ்டியை இறுக்கிக்கொண்டான்.
அடுத்தநாள், பூக்கள் அலங்காரத்தாலும் விளக்குகளாலும் வீடு ஜொலிக்க, நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிலிருந்த மொத்தப்பேரும் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருந்தனர்.
ஜான்வி வற்புறுத்தி வாங்கிக்கொடுத்த குர்தாவை அணிந்திருந்த யாதவ், கண்ணாடியில் தன்னை வெறித்துப் பார்த்தான். அவனால் நடப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘உன்னை பக்கத்துலயே வச்சிக்கிட்டு என்னோட காதலை மறைச்சி வாழுறதுக்கு செத்துறலாம் ஜானு. முடியலடி என்னால.’ உள்ளுக்குள் குமுறிக்கொண்டவன், கலங்கிய விழிகளை புறங்கையால் துடைத்துவிட்டு தன்னவளைக் காணச் சென்றான்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனுக்கு விழிகளை தன்னவளிடமிருந்து அங்குமிங்கும் திருப்பவே முடியவில்லை. வேலைப்பாடுகள் நிறைந்த அரக்குநிற லெஹெங்காவில் தேவதைப் போல் இருந்த ஜான்வி, கதவு திறக்கப்படும் சத்தத்தில் தன் முட்டை விழிகளை விரித்து இருபுருவங்களை உயர்த்தி யாரெனப் பார்த்து பின் புன்னகைக்க, அவளிள் முகபாவனைகள் ஒவ்வொன்றும் அவனின் ஆழ்மனதில் அழியா சுவடாக பதிந்தன.
தன்னவளையே யாதவ் பார்த்துக்கொண்டிருக்க, “யாது, நான் எப்படி இருக்கேன்?” ஆர்வமாக கேட்டவாறு எழுந்து அவனெதிரே அவள் வர, இரு கரங்களால் தன்னவளுக்கு நெட்டி முறித்து, “ஏன்ஜல் மாதிரி இருக்க ஜானு.” விழிகளில் காதலோடுச் சொல்ல, வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டாள் அவள்.
ஏனோ அவளின் செய்கைகளில் அவன் மனம்தான் தள்ளாடிக்கொண்டிருந்தது. முயன்று மனதை கடிவாளமிட்டு அவன் அடக்க, அவள் விட்டால்தானே!
“எனக்கு ரொம்ப படபடப்பா இருக்கு யாது. ஓ கோட்! நான் குழந்தையாவே இருந்திருக்கலாம்.” பதறியபடி சொன்னவாறு ஆறுதலுக்காக அவனுடைய நெஞ்சில் அவள் அடைக்கலம் தேட, அவளுடைய செயல்கள் நட்பு ரீதியாக இருந்தாலும், அவனுடைய மனமோ அவள்மேல் கொண்ட காதலால் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
அவனுடைய கரங்கள் அவளை அணைக்கத் துடிக்க, கரங்களை கொண்டு செல்வதும், பின் அணைக்காது விடுவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தவனின் காதல் மனமே ஒருகட்டத்தில் வெல்ல, அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான். ஏனோ ஒருபுறம் மனம், ‘கன்ட்ரோல் யாதவ்! வேணாம். விடு!’ என்று எச்சரிக்க, மறுபுறம் அவளை விடவே அவனுக்கு மனமில்லை.
இருந்தும் முயன்று மனதைக் கட்டுப்படுத்தி அவன் விலகி நிற்க, அதேநேரம் மாப்பிள்ளை வீட்டாற்களும் வீட்டிற்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் இரு வீட்டாற்கள் மத்தியில் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டு ஜான்வியும் கௌத்தமும் மோதிரம் மாற்றிக்கொள்ள, கௌத்தமுக்கு மோதிரத்தை அணிவித்துவிட்டு ஓரமாக நின்றிருந்த யாதவ்வைதான் நோக்கினாள் ஜான்வி.
அவள் பார்த்ததும் தொண்டையை அடைக்கும் அழுகையைக் கட்டுப்படுத்தி, கஷ்டப்பட்டு யாதவ் புன்னகைக்க, அவளும் அவனின் மனநிலையை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாது ஒற்றை கண்ணைச் சிமிட்டி சிரித்துக்கொண்டாள்.
அன்றிரவு தன்னிலையை நினைத்து மனம் வெதும்பிப்போய் நிலவை வெறித்தவாறு மாடியில் நின்றிருந்தான் யாதவ். அப்போது, “ஏய் இடியட்!” என்ற அழைப்போடு தாவி குதித்து ஓடி வந்த ஜான்வி, அவனின் முகத்தை கூர்ந்து நோக்கி, “யாது, ஆர் யூ ஓகே?” என்று கேட்டவாறு அவனின் நெற்றியில் கை வைக்கப்போக, இரண்டடி பின்னால் நகர்ந்தவன், “ஐ அம் ஓகே.” என்றான் பதட்டமாக.
அவனுடைய ஒதுக்கத்தில் புருவத்தை நெறித்தவள், “யாது, நிஜமாவே இது நீதானா? எனக்கு உன்கிட்ட எதுவோ வித்தியாசமா தோனுது. இதுக்கு முன்னாடி என் கூட பழகின யாது இல்லை நீ.” ஒருமாதிரிக் குரலில் சொல்ல, யாதவ்விற்கு மனம் ஏனோ பிசைய ஆரம்பித்தது.
மெல்ல நெருங்கி அவளுடைய கரத்தைப் பற்றியவன், “அப்படியெல்லாம் இல்லைடா. ரொம்பநாள் கழிச்சு இந்தியாவுக்கு வந்திருக்கேன். என்ட், அம்மா அப்பா நியாபகம். அதான்…” சமாளிக்க முயல, “ஆமா… இவர் பாப்பாதானே! அம்மா, அப்பாவ பிரிஞ்சி இருக்க மாட்டாரு, போவியா… ஐ க்னோ யூ வெல், வீட்டுலயே இருக்காம பப்பு, க்ளப்புன்னுதானே சிட்னில சுத்திக்கிட்டு இருப்ப.” கேலிச் சிரிப்போடு கேட்டாள் ஜான்வி.
அதில் பொய்யாக முறைத்தவன், “அடிங்க…” என்று விரட்ட ஆரம்பிக்க, மாடியை சுற்றி ஓடியவள், ஒருகட்டத்தில் முடியாமல் நின்று மூச்சு வாங்க, அவளெதிரே சிரித்தவாறு வந்து நின்றவன், “ரொம்ப அழகா தெரியுற ஜானு.” மனதை மறைக்க முடியாது பட்டென்று சொல்லிவிட்டான்.
அதில் வாய்விட்டுச் சிரித்தவள், அவனின் விழிகளில் தெரியும் காதலை மட்டும் கண்டுக்கொள்ளவே இல்லை. “என்ன, என்னை கலாய்க்குறியா? போ, போய் தூங்கு! நாளைக்கு மெஹந்தி நீதான் எனக்கு போட்டு விடணும்.” கேலித்தொனியில் சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் நகர, அவள் சென்ற திசையையே சிறிதுநேரம் இமைக்காது பார்த்திருந்தவன், விரக்தியாகச் சிரித்துக்கொண்டான்.
அடுத்தநாள் வீட்டிலிருந்த மொத்தப்பெண்களும் கைக்கு மருதாணி இடுவதில் தீவிரமாக இருக்க, கையில் மருதாணி கோனை வைத்துக்கொண்டு திருதிருவென விழித்தவாறு அமர்ந்திருந்தான் யாதவ்.
அவனெதிரே கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த ஜான்வி, “எவ்வளவு நேரம்தான் பெக்க பெக்கன்னு முழிச்சிக்கிட்டு இருப்ப? சிட்னில நடந்த ஆர்ட் காம்படீஷன்ல சார் சேம்பியனாம், ஆனா என் கைக்கு மருதாணி வரைய தெரியலயாம். என்ன கதை விடுறியா? இதோ, இந்த ஃபோட்டோல இருக்குற மாதிரி என் கையில வரைஞ்சு விடு!” முடிவாகச் சொல்லிவிட்டு கையை நீட்ட, கோபத்தில் அவளின் உதட்டுச் சுழிப்பையும் சிவந்த முகத்தையும் உள்ளுக்குள் ரசித்தவன், அலைப்பேசியில் அவள் காட்டிய மருதாணி வடிவத்தை கையில் வரைய ஆரம்பித்தான்.
ஏனோ அவனுக்கே அவனை நினைத்து சிரிப்புதான் வந்தது. ‘காதலிக்குற பொண்ணோட கல்யாணத்துக்கு அவளை காதலிக்குற பையன் அவளுக்கு மருதாணி போடுற சம்பவம் எங்கேயும் நடக்காது.’ உள்ளுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டவாறு விழிகளை மட்டும் உயர்த்தி தன்னவளை நோக்கினான். அவளோ அவன் கையில் மருதாணி வரையும் விதத்தில் விழிகளை விரித்து ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
இவனும் அதை ரசித்துவிட்டு மருதாணி இட, நடுவில் “யாது… யாது…” என்று கத்தியவள், அவன் பதட்டமாக பார்த்ததும், “ஹிஹிஹி… சோரி!” என்றுவிட்டு அசடுவழிய, அதில் பொய்யாக முறைத்தவன், “என்ன?” என்றான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கிக்கொண்டு.
“இல்லை… மருதாணில கட்டிக்கப்போறவனோட பெயர எழுதுவாங்கல்ல, எனக்கு பெயர் எல்லாம் வேணாம். அவர் பெயரோட முதல் எழுத்தை மட்டும் வரைஞ்சி விடு! ப்ளீஸ்…” விழிகளைச் சுருக்கி அவள் கெஞ்ச, யாதவ்விற்கு உள்ளுக்குள் எதுவோ உடைவது போன்ற உணர்வு.
கீழுதட்டைக் கடித்துக்கொண்டவன், தன்னை மறந்து தன் பெயரின் முதலெழுத்தை எழுதிவிட, “ஏய் யாது!” பதறிய ஜான்வி, “நான் ஏதோ உன்னை கல்யாணம் பண்ண போற மாதிரி உன் ஃபர்ஸ்ட் லெட்டர எழுதியிருக்க. ஓ கோட்!” சலித்துக்கொள்ள, அப்போதுதான் தான் செய்த காரியத்தை உணர்ந்தான் அவன்.
“சோ..சோரி ஜானு.” பதறியபடி யாதவ் அதை அழிக்கப் போக, கையை பின்னோக்கி இழுத்தவள், “இப்போ அழிச்சா மருதாணி சர்வ நாசம்தான். நோ ப்ரோப்ளம், இப்படியே இருக்கட்டும்.” என்றுவிட்டு எழுந்துச் செல்ல, மானசீகமாக நெற்றியில் அடித்துக்கொண்டவன், அதற்குமேல் அங்கிருக்காது அறைக்குள் சென்றடைந்தான்.
அறைக்குள் வந்தவனுடைய மனம் இரண்டு நிலைகளில் தள்ளாடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம் ‘காதலை சொல்லிவிடுவோமா?’ என ஒரு மனம் யோசிக்க, மறுபுறம் ‘காதலை சொல்லி இருக்கும் நட்பையும் கெடுத்துவிடக் கூடாதென’ யோசித்தது இன்னொரு மனம். நாளை காலை தன்னவளுக்கு திருமணம் என்பதை நினைக்கையில் இதயம் கசக்கி பிழியும் வலி அவனுக்கு.
என்ன செய்வது, ஏது செய்வதென தெரியாது குறுக்கும் நெடுக்கும் நடந்த யாதவ், ஒருகட்டத்தில் உணர்வுகளை அடக்கிய போராட்டத்தில் உண்டான ஆத்திரத்தில் அங்கிருந்த பூச்சாடியை சுவற்றில் விட்டெறிந்திருந்தான். அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அப்படியே முட்டி போட்டு அமர்ந்தவன், ‘என்னால உன்னை மறக்க முடியல ஜானு. எனக்கு நீ வேணும்டி. ஆனா…’ உள்ளுக்குள் தன்னவளிடம் பேசியவாறு அப்படியே தரையிலேயே தூங்கிவிட்டான்.
சில மணிநேரங்கள் கழிய, சட்டென அவனுடைய தோளைத் தட்டி எழுப்ப முயற்சித்தது ஒரு கரம். ஏற்கனவே அழுததால் விழிகள் சிவந்து வீங்கிப்போய் கிட்டதட்ட அவனால் கண்களை திறக்கவே முடியவில்லை. முயன்று விழிகளைத் திறந்து தன் முகத்துக்கருகே இருந்த முகத்தை அவன் நோக்க, அடுத்தகணம் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“யாது எழுந்திரு! சீக்கிரம் எழுந்திருடா!” ஜான்வி அவனை எழுப்ப, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவன், “நீ…நீ இங்க என்ன பண்ற? ஒருவேள, அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன?” பதட்டமாகக் கேட்க, வாய்விட்டு சிரித்தவள், “ஏன்டா இத்தனை பெரிய அறையில இம்புட்டு பெரிய கட்டில் இருக்கு. சார் தரையில தூங்குறீங்க. என்ட், கோஸ்ட்லியான ஃப்ளவர் வாஸ்ஸ உடைச்சிருக்க. இதை அப்றம் டீல் பண்ணிக்கிறேன். இப்போ வா என்கூட!” அதிரடியாக அழைத்தாள்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை. “எங்கடி கூப்பிடுற?” அவன் அப்போதும் கேள்வியாக நோக்க, ஜான்வி பதிலளித்தால்தானே! அவனை இழுத்துக்கொண்டு வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறியவள், ஆள் அரவமற்ற அந்த பாதைக்கு யாதவ்வை அழைத்துச் சென்று வேகமாக ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தாள்.
“ஜானு, இப்போ நீ சொல்ல போறியா, இல்லையா?” ஒருகட்டத்தில் முடியாமல் யாதவ் கோபமாக கேட்க, அவளோ அவனுக்கு பின்னால் எட்டிப் பார்த்து, “அதோ பாரு!” என்றாள் உற்சாகமாக. அதில் வேகமாகத் திரும்பிப் பார்த்த யாதவ்விற்கு அங்கு பதட்டமாக வந்துக்கொண்டிருந்த கௌத்தமை பார்த்து அதிர்ச்சி என்றால், அவனுக்கு பின்னாலிருந்த வந்த இளம்பெண்ணைப் பார்த்து பேரதிர்ச்சி.
அவர்களைப் பார்த்துவிட்டு யாதவ் திகைப்பாக ஜான்வியை நோக்க, “ஹிஹிஹி… லவ்வர்ஸ் யாது.” அசடுவழிந்தவாறுச் சொன்னவள், “அப்றமா கதைய சொல்றேன். இப்போ போலாமா?” என்று கேட்டு முன்னே யாதவ்வை இழுத்துக்கொண்டுச் சென்று, தமக்காக காத்திருந்த தன் நண்பனொருவனின் காரில் ஏறிக்கொண்டாள்.
யாதவ்வோ நடப்பது புரியாது அவளை கேள்வியாக நோக்க, அவனின் பார்வையை உணர்ந்தவள், “இவங்க லவ்வர்ஸ் யாது. இந்த பொண்ணு பேரு க்ரிஸ்டினா. இரண்டுபேரும் வேற வேற ரிலிஜன். சோ, அங்கிள் ஒத்துக்கல. வேண்டா வெறுப்பா என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ நடந்ததைச் சொன்னான். அப்போ நான் போட்ட ப்ளான்தான் இது. எப்படி அம்மணியோட திறமை?” கெத்தாக கோலரை தூக்கி விட்டுக்கொண்டாள்.
அதில் அவளை முறைத்தவன், “கேவலமான ப்ளான். இவன் உன்கிட்ட சொன்ன அப்போவே இதை எக்ஸ்கியூட் பண்ணியிருக்கலாம். தேவையில்லாம கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து… தப்பு ஜானு.” ஒருவித கண்டிப்போடுச் சொல்ல, பதிலுக்கு அவனை முறைத்தவாறு, “அடிங்க… உன்னாலதான் இவ்வளவுதூரம் வந்திருக்கு. என்னால எப்படிடா இதை தனியா ஹேன்டல் பண்ண முடியும்? அதான் அப்போவே இந்தியாவுக்கு வரச் சொன்னேன். மொதல்லயே ஊருக்கு வந்திருந்தா இந்நேரம் இவங்க கல்யாணம் பண்ணி ஹனிமூனே கிளம்பியிருப்பாங்க. மொய் வைக்க வர்ற விருந்தாளி மாதிரி ஒருநாள் முன்னாடி வந்துட்டு ரொம்பதான் பேசுற.” கடுகடுத்தாள் அவள்.
அதில் அதிர்ந்து விழித்தவன், அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்துவிட்டான்.
அடுத்த சில மணித்தியாலங்களில் பக்கத்து ஊரிலிருக்கும் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு இவர்கள் வந்து சேர, ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த ஊரைச் சேர்ந்த தன் நண்பனொருவனின் மூலமாக எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தாள் ஜான்வி. கூடவே, யாதவ்விடம் கெஞ்சிக் கொஞ்சி சாட்சிக் கையெழுத்தையும் வாங்கிக்கொண்டாள்.
ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்தே தாலியையும் கட்டி எப்படியோ கல்யாணத்தை நடத்தி முடித்த ஜான்வி, தம்பதிகளை அனுப்பி வைத்த பிறகுதான் தன் வீட்டின் நிலவரத்தையே யோசித்தாள். சட்டென்று யாதவ்வின் கையை இறுகப் பற்றியவள், “வீட்டை நினைச்சா பக்கு பக்குன்னு இருக்குடா.” பயந்தபடிச் சொல்ல, கையை உதறிவிட்டு, “தட்ஸ் யூவர் ப்ரோப்ளம். நான் நடந்தை சொல்லிட்டு இன்னைக்கு நைட்டே சிட்னிக்கு கிளம்புறேன்.” அலட்சியமாகச் சொன்னான் அவன்.
அதில் ‘ஆஹான்!’ என்ற ரீதியில் அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், அவனை நெருங்கி நின்று, “அப்போ என்னை விட்டு மறுபடியும் போறதா முடிவு பண்ணிட்ட, அப்படிதானே?” ஒருமாதிரிக் குரலில் கேட்க, இது கனவா? நினைவா? என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவளையே அவன் கூர்ந்து நோக்க, அவனின் விழிகளை குறும்பாகப் பார்த்தவாறு தன் அலைப்பேசியை எடுத்த ஜான்வி, “என்ன மேன் இது?” என்றுகேட்டு ஒரு காணொளியைக் காட்ட, அதைப் பார்த்தவனுக்கு விழிகள் விரிந்தன.
அது யாதவ் சிட்னியில் இருக்கும் போது அங்கிருக்கும் உயரமான கட்டிடமொன்றின் உச்சிப்பகுதியிலிருந்து சிட்னியின் அழகை ரசித்தவாறு “ஜானு, ஐ லவ் யூ” என்று அவன் காதலாக கத்தும் காட்சி. அதை எடுத்தது என்னவோ யாதவ்வோடு சிட்னியில் வேலைப் பார்க்கும் ஜான்விக்கும் பழக்கமான தோழனொருவன்.
தன்னவள் காணோளியைக் காட்டியதும் யாதவ்வின் இதயம் படபடவென அடித்துக்கொள்ள, “ஜான்..ஜானு அது… நான்…” அவனுடைய வார்த்தைகள் தடுமாற, அதில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவள், “வீட்டுக்கு போனதும் அவங்களோட காதலை சேர்த்து வைச்சதை சொல்லு. கூடவே, ‘கல்யாணம் வரைக்கும் வந்துட்டு பொண்ணோட கல்யாணம் நின்னுட்டேன்னு வருதப்படாதீங்க. நான் அவள கட்டிக்கிறே’ன்னு சொல்லி நீயே என்னை கல்யாணம் பண்ற. ரைட்?” மிரட்டலாகச் சொன்னாள்.
அதில் ‘ஆ…’ என வாயைப் பிளந்த வண்ணம் நின்றவன், தந்தை நரேந்திரனிடமிருந்து வந்த அழைப்பில் அலைப்பேசியை காதில் வைத்து, அடுத்தகணம் தன் பெற்றோர் இந்தியாவுக்கு வந்துச் சேர்ந்ததை கேட்டதும் ஆடிப்போய் விட்டான்.
அவனோ அதிர்ச்சியாக, “அடிப்பாவி!” என்று வாயில் கை வைக்க, “ஆல் க்ரெடிட் கோஸ் டூ மீ. நானும் என்னெல்லாம் பண்ணேன். ஆனா, முகத்துல ரியேக்ஷன மட்டும் காமிக்குற. வாயில வார்த்தைதான் வரவேயில்லை. அதான், கடைசி வரைக்கும் நீ காதல சொல்ல போறதில்லைன்னு நானே களத்துல இறங்கிட்டேன்.” என்றுவிட்டு அவனின் இதழோரத்தில் வேகமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு விலகி நின்றாள்.
முதலில் அவளின் முத்தம் தந்த அதிர்ச்சியில் விழி விரித்தவன், நடப்புக்கு வந்த மறுநொடி தன்னவளை காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக அணைத்திருந்தான்.
–ஷேஹா ஸகி