Kalangalil aval vasantham 12(2)
Kalangalil aval vasantham 12(2)
உண்மையிலேயே அப்படி இருந்தாலும், அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கம் என்பதை எல்லாம் அவள் இப்போது அங்கீகரிக்க தயாராக இல்லை.
“என்னால உன்னோட மானம் மரியாதை எல்லாம் போகத் தேவையில்லை. இன்னைல இருந்து நான் உன் தம்பியே இல்லைன்னு சொல்லிடு. முடிஞ்சுது…” என்றவன், “நீ என்ன சொல்றது? நான் சொல்றேன். இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல… நான் செத்தா கூட நீ வராத. உன் புருஷன் தான உனக்கு முக்கியம். அந்தாளையே கட்டிட்டு அழு…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,
“லூசு மாதிரி பேசாதடா. உன்னோட வாழ்க்கையையும் பாழாக்கி, என்னோட வாழ்க்கையையும் பாழாக்கறடா…” எப்படியாவது அவனுக்கு தன்னுடைய நிலையை புரிய வைத்துவிட பார்த்தாள் வைஷ்ணவி.
“இத்தனை நாள் அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக பொறுமையா இருந்தேன் வைஷ்ணவி. இனிமே இருக்க மாட்டேன். இவ்வளவு நாள் உன் புருஷன் பண்ணது அத்தனையும் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? அத்தனையும் தெரியும். ஆனா ஏன் சும்மா இருந்தேன்? உன்னோட லைஃப் பாதிச்சுற கூடாதுன்னு… அந்த மரியாதையை நீ காப்பாத்திக்க மாட்ட…”
கோபத்தில் அவன் கொந்தளிக்க, மாதேஸ்வரன், மெளனமாக மகனைப் பார்த்தபடி இருந்தார். அவனது மனதுக்குள் ஏதோவொரு மனக்காயம் வெகு நாட்களாக ஆறாமல் இருக்கிறது என்றுத் தோன்றியது.
“உன்னோட மரியாதையே வேண்டாம் எனக்கு. ஆனா என்னை பேசற மாதிரி மாமாவை பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன் ஷான். எனக்கு என் புருஷனோட மரியாதை ரொம்ப முக்கியம்…” வைஷ்ணவி எச்சரிக்கும் குரலில் கூற, அவளை வெட்டிப் போடும் பார்வைப் பார்த்தான் ஷான்!
இருவரின் வாக்குவாதத்தை பார்த்த ப்ரீத்திக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் ஷான் கோபத்தில் கொதிக்கும் போதா வைஷ்ணவி அத்தனை விவகாரங்களையும் கொண்டு வர வேண்டும் என்று சலிப்பாகவும் இருந்தது. இவர்கள் போன்றவர்கள் என்றுமே புரிந்து கொள்ள மாட்டார்களா?
“வைஷ்ணவி… என்னோட கோபத்தை இன்னும் அதிகமாக்காத. முடிக்க வேண்டிய கணக்கை முடிச்சுட்டு நான் வரேன். வந்துட்டு உன்னோட கணக்கை முடிச்சு விடறேன். நான் அசிங்கமானவன் தான். இனிமே ஜென்மத்துக்கும் என்னோட முகத்துல கூட முழிக்க வேண்டாம்ன்னு உன் புருஷன் கிட்ட சொல்லி வெச்சுடு…” என்று கத்தியவன், அவளது பதிலுக்கு காத்திருக்காமல், மேலே மாடிக்கு படிகளில் தாவியபடி ஏறினான்.
இந்த பிரச்சனைக்கும் ரவிக்கும் சம்பந்தம் இருக்குமா என்பதெல்லாம் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. முதலிலேயே ரவியின் போக்கினாலும், அவன், தன் குடும்பத்தில் செய்து வைத்த குழப்பங்களினாலும், அவனைப் பிடிக்காது. இப்போது ஸ்வேதா பேசியதில், அத்தனை கோபமும், ரவி மேல் இருந்த கோபமும் சேர்த்து வைஷ்ணவியின் மேல் இறங்கியது!
அவன் போகும் வேகத்தைப் பார்த்த ப்ரீத்திக்கு இன்னும் பயம் பீடித்துக் கொண்டது.
அவசரமாக, வைஷ்ணவியிடம், “கொஞ்சம் நிதானமா உட்கார வெச்சு பேசி இருக்கலாமே மேம். ஆல்ரெடி பாஸ் அவ்வளவு கோபத்துல இருந்தாங்க. ஏதேதோ செய்ய போறேன்னு வேற… கொஞ்சம் அவர் மனசை மாத்தி இங்க வீட்லயே பிடிச்சு வைக்கலாம்ன்னு நினைச்சா, நீங்க வேற, ஏன் மேம்? அவரோட கோபம் இன்னும் அதிகமாகிடாதா?” அவசரமாக கடிந்தாள். வைஷ்ணவி என்ன சொல்வாள் என்பதைப் பற்றியெல்லாம் ப்ரீத்திக்கு கவலை இல்லை. ஏன் இந்த அதிகப்ரசங்கித்தனம் என்று கூட நினைக்கலாம், கேட்கலாம். ஆனால் இப்போதைக்கு ஷான் மேல் மட்டுமே அவளது கவனமனைத்தும்!
“ஆமா வைஷு. கொஞ்சம் அவசரப்பட்டுட்ட. கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்…” மாதேஸ்வரனும் கூற,
“இப்ப நீங்க ஒன்னாகிடுவீங்கப்பா. நான் தான் தனி… நான் பேசினது தான் தப்பு. நாளைக்கு என் மாமியார் என் முகத்துல காறித் துப்பினா பரவால்ல…”
வைஷ்ணவிக்கு அழுகை வந்தது. உடன் பிறந்தவன், ஜென்மத்துக்கும் என் முகத்திலேயே விழிக்காதே என்று கூறிவிட்டு போன பதைப்போடு, தான் பேசியது தவறு என்பதை அவளது மனமும் குத்திக் கொண்டிருக்க, தந்தையும் இப்படி பேசியது, அவளை சுயபச்சாதாபத்தில் தள்ளியது!
“அப்படி இல்லம்மா…” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, மாடியில் அவனறையில் தடார் தடாரென பொருட்கள் சிதறும் சப்தம் கேட்க, இந்த இருவரையும் எதிர்பார்க்காமல், பதறியடித்தபடி வேகமாக மாடியறைக்கு ஓடினாள் ப்ரீத்தி! அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா, அங்கிருந்த அலங்கார விளக்கில் சிக்க, அதை கூட கண்டு கொள்ளாமல், அப்படியே விட்டுவிட்டுத் தாவினாள்!
என்னவாயிற்றோ என்ற பயம்!
அறைக்குள், அத்தனை ட்ராவையும் இழுத்துப் பார்த்து சிதறடித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் தேடியது கிடைக்காததால் அவனது ஆத்திரம் இன்னும் பல மடங்காகிக் கொண்டிருந்தது.
“ஷான்… ப்ளீஸ்… கொஞ்சம் பொறுமையா இருங்க…” அவனுக்குப் பின்னே சென்றபடி அவள் கெஞ்ச,
“பேசாத ப்ரீத்தி. ரொம்ப கோபத்துல இருக்கேன். இப்படியே பின்னாடி வந்துட்டுருந்தா பளார்ன்னு ஒன்னு விட்டுடுவேன்…” கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்தபடி அவன் எச்சரிக்க,
“அதெல்லாம் பண்ண மாட்டீங்க. ஒரு பத்து நிமிஷம் நிதானமா உட்கார்ந்தா எல்லாத்தையும் சார்ட் அவுட் பண்ணிடலாம். ப்ளீஸ்…”
“யூ ஆர் நாட் அண்டர்ஸ்டாண்டிங் டாமிட். யூ வோன்ட். என்னடி நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? உங்க எல்லாருக்கும் நான் என்ன கோமாளியா? என்னோடகோபத்தை உன்னால நிஜமாவே புரிஞ்சுக்க முடியலையா? ஊருக்கு நடுவுல என்னை ஒருத்தி ஒண்ணுமே இல்லாம நிற்க வெச்சுருக்கா. நான் அமைதியா இருக்கனும்ன்னு எப்படி எதிர்பார்க்கற?” கத்தினான் ஷான்!
“நல்லா புரியுது. உங்க ஃபீலிங்க்ஸ் நல்லா புரியுது. ஆனா இன்னொன்னை நீங்க புரிஞ்சுக்கணும். உங்களை இந்தளவு ட்ரிகர் பண்றதுக்கு கூட இப்படி அவங்க சொல்லியிருக்கலாம். அப்படி ட்ரிகர் ஆனாக்கா, உங்களை யார் ட்ரிகர் பண்ணனும்ன்னு நினைச்சாங்களோ, அவங்களை தான் நீங்க ஜெயிக்க வைக்கறீங்க பாஸ்…” அவனைத் துரத்தியபடியே, அவன் பின்னே போய்க் கொண்டே அவள் கூறிய அனைத்தையும் அவன் காதில் வாங்கும் யோசனையே இல்லை.
அவனது அவமானம் அப்படி! உண்மையிலேயே அப்படித்தான் என்றால், ஆமாம், நான் அப்படிதான் என்று தெளிவாக கூறிவிட்டு போய்விடுவான். அவனுக்கு அந்த தைரியம் இருக்கிறது. ஆனால் அவன் அப்படி இல்லை. அதோடு, அந்த விஷயத்தையே பிடிக்கவும் பிடிக்காது என்பதுதான் பிரச்சனை. ஒரு முழுமையான ஆண்மகனை இவ்வாறு சொல்வது என்பதை சாதாரணமாக யாரும் எதிர்கொள்ள முடியாது.
“ட்ரிகரோ என்னவோ… இன்னைக்கு அவ எனக்கு பதில் சொல்லியே ஆகணும். நான் என்ன சொம்பைன்னு நினைச்சுக்கிட்டாளா? இல்ல, என்னை எப்படி வேண்ணா ஏமாத்திட்டு உயிரோட இருந்துடலாம்ன்னு நினைச்சுக்கிட்டாளா? ஐ வில் டீச் ஹெர் எ லெசன்…” தன்னிலையிலேயே இல்லாத அவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று அவளுக்கு புரியவே இல்லை. எப்படிக் கூறினாலும், அவனது கோபம் இன்னுமின்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது!
பரபரவென தேடிக் கொண்டிருந்தவனுக்குக் கிடைத்தது அவன் தேடிய பிஸ்டல்.
“எஸ்…” என்றபடி எடுத்துக் கொண்டவன், தடுத்துக் கொண்டு நின்றவளை தள்ளிவிட்டு, கதவை அறைந்து மூடிவிட்டு போனான்.
அதற்குள் போர்களமாகி இருந்தது அந்த அறை!
அவன் பிஸ்டலை எடுத்துக் கொண்டு போகிறான் என்பதே, சில நொடிகள் கழித்துத் தான் அவளது மூளையில் உரைத்தது!
கதவை அவசரமாகத் திறந்து கொண்டு அவனை துரத்திக் கொண்டு வந்தவளை, சற்றும் கவனிக்கவில்லை சஷாங்கன்.
“அப்பா… பாஸ் பிஸ்டல் எடுத்துட்டு போறாங்க. அவங்களை பிடிங்க…” என்று மாடியிலிருந்து அவள் கத்த, பதறி எழுந்தார் மாதேஸ்வரன்.
ப்ரீத்தி எப்படியாவது அவனை சமாதானப்படுத்தி விடுவாள் என்ற நம்பிக்கையில் அமர்ந்தவருக்கு, ஷான் தடதடவென மாடிப் படிகளில் இறங்கி வந்ததும், அவனுக்குப் பின்னே வந்த ப்ரீத்தி, இவ்வாறு கத்தியதும், கனவோ என நினைக்கத் தோன்றியது.
“ஷான்… இது தப்பு… வேண்டாம். பிஸ்டலை கொடு. எதுவா இருந்தாலும் பேசித் தீர்க்கலாம்…” அவரது வயதை மறந்துவிட்டு அவன் பின்னால் ஓடினார் மாதேஸ்வரன்!
அவர் பின்னால் வைஷ்ணவியும் ஓட, வீடே ரணகளமாகிக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக வேலை செய்பவர்கள் யாரும் வீட்டிற்குள் இல்லை. அப்படியிருந்திருந்தால், அது பலரது பார்வைக்கு விருந்தாகியிருக்கும்.
அதற்குள் கீழே வந்துவிட்ட ப்ரீத்தியும் சேர்ந்து கொண்டாலும், யாராலும் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் பக்கத்தில் கூட போக முடியவில்லை.
“ஷான்… ப்ளீஸ்… கெஞ்சிக் கேக்கறேன்… பிஸ்டலை குடுங்க. ஸ்வேதா கிட்ட எப்படி வேணும்னாலும் பேசுங்க. ஆனா பிஸ்டல் வேண்டாம். ப்ளீஸ்…” ப்ரீத்தி தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு அவனிடம் கெஞ்சினாள்.
“ப்ப்ப்ரீத்தீ… சொன்னா கேளு… ஸ்டே அவே…”
“முடியாது… நீங்க பிஸ்டலை குடுங்க…” என்றபடி அவனுக்கு மிகவும் அருகில் போக,
“வேண்டாம் ப்ரீத்தி. அறைஞ்சுடுவேன்.. தள்ளி போ…” அவளிடம் கொடுக்க கூடாது என்பதற்காக தள்ளி போக முயன்றான். கோபம் அவனது கண்ணை மறைத்தது.
“பண்ண மாட்டீங்க… யூ கான்ட்…”
“இல்ல… பண்ணிடுவேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனை நெருங்க,
“லோடட் பிஸ்டல் ப்ரீத்தி. விளையாடாத…” அவளை தவிர்க்க முயன்றான்.
“நான் விளையாடல ஷான். பிஸ்டலை கொடுத்துடுங்க…” .” அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.
“அடி பிரிச்சுருவேன் ராஸ்கல். ஒன்னும் பண்ண மாட்டேன்னு நினைக்கிறியா?” என்றவன், அவளை தள்ளிவிட முயல, ப்ரீத்தியோ விடாப்பிடியாக பிடுங்க முயன்றாள். ஒரு புறம் மாதேஸ்வரன், இன்னொரு புறம் வைஷ்ணவி, அவனோடு போராட்டத்தில் ப்ரீத்தி என அனைவரும் சூழ்ந்ததில் அவனது ப்ரெஷர் எகிறியது.
ப்ரீத்தியோ விடாமல் அவனிடமிருந்த பிஸ்டலை பிடுங்க முயல, அவளிடம் தரக் கூடாது என்று முரண்டு செய்தவன், ஒரு கட்டத்தில் அவளை தள்ளிவிட்டு, பளாரென அறைந்தான், ஆத்திர மிகுதியில்!
அவன் அறைந்ததில் சுழன்று அவள் கீழே விழப் போக, தாங்கிக் கொண்டார் மாதேஸ்வரன்.
“டேய்… எதுக்குடா இந்த பொண்ணை அறைஞ்ச? உன் கண்ணுக்கு உனக்கு நல்லது பண்றவங்க எல்லாம் உனக்கு தப்பாத்தான் தெரிவாங்களா?” உச்சஸ்தாயில் அவரும் கத்த, அவருக்கு மூச்சு வாங்கியது.
“ஏன் எல்லாரும் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க? வராதன்னு சொன்னேன்ல, எதுக்குடி வந்த? இவங்களை மாதிரி, நீயும் என்னை டார்ச்சர் பண்ணனுமா? ஒய் டோன்ட் யூ அண்டர்ஸ்டேன்ட் மீ டேமிட். ஐ டோன்ட் நீட் எனிபடி… எனக்கு வேண்டாம்… யாரும் வேண்டாம்… நான் அசிங்கமானவன். கெட்டவன்… கேடு கெட்டவன்… இந்த கேடு கெட்டவன் யாருக்குமே தேவை இல்ல…” அடிவயிற்றிலிருந்து கத்தியவன், யாரையும் பார்க்காமல் உச்சபட்ச கோபத்தில் காருக்கு போக, மாதேஸ்வரனும் வைஷ்ணவியும் அதிர்ச்சியில் ஆணியடித்தார் போல நின்றனர்!
அவர்களால் எதையும் தடுக்க முடியாது என்பது திண்ணமாக தெரிந்துவிட்டது!
“ஷான்…” என்றபடி மாதேஸ்வரனின் பிடியை உதறிவிட்டு அவனை துரத்திக் கொண்டு போக முயன்றவளை இழுத்துப் பிடிக்க முயன்றார் மாதேஸ்வரன்.
அவன் பின்னால் போனால் என்ன செய்வான் என்றும் கூட தெரியாதே அவருக்கு. இவளுக்கு ஏதாவது ஆனால், பெண்ணை பெற்றவர்களுக்கு என்ன சொல்வது என்ற பயம்!
“திரும்ப உன்னை அடிச்சுற போறான்மா. வேண்டாம்… நீ போகாத…” என்று அவர் தடுக்க,
“ஐயோ… இல்லப்பா… ரொம்ப கோபத்துல போறார். ஏதாவதுன்னா என்ன பண்றது? கூடவாச்சும் இருக்கேன்…” என்றவளின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர்!
அவளை பிடித்துக் கொண்டிருந்த அவரது கை அவரையும் அறியாமல் தளர்ந்தது.
அவளது உண்மை, அவரை தள்ளி நிற்க சொன்னது!
அவனை முந்திக் கொண்டு, டிரைவர் சீட்டுக்கு போக முயன்றவளை, “நீ வேண்டாம் ப்ரீத்தி…” அழுத்தமாக அவன் கூறினாலும் அவள் கேட்கவில்லை.
“நீங்க எங்க போக சொல்றீங்களோ அங்க போறேன். ஐ ஆம் ஜஸ்ட் எ டிரைவர் நவ்…” என்று கூறியவளை பார்த்து முறைத்தவன்,
“ஐ கேன் டிரைவ் மைசெல்ஃப். நீ வேண்டாம்…” என்றவன், அவளுக்கு முன் டிரைவர் சீட்டில் அமர, அவசரமாக மறுபுறம் வந்து அவன் சென்ட்ரல் லாக் போடுவதற்குள், கதவைத் திறந்து அமர்ந்து விட்டாள்.
“சொன்னா கேக்க மாட்ட… காரை இப்படியே கொண்டு போய் கடல்ல விட்டா என்னடி பண்ணுவ?” அவன் கோபத்தில் கொதிக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது!
அவன் பார்க்கும் முன் அதைத் துடைத்துக் கொண்டு தலையைத் திருப்பிக் கொண்டவள்,
“தனியா போய் அப்படி எதாச்சும் பண்ணீட்டீங்கன்னா, அடுத்த மாச சம்பளத்தை யார் கிட்ட பாஸ் கேப்பேன்?” என்றவளின் தொனி, சட்டென்று சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருந்தாலும், அவனது மனநிலை, அவனை மாறவிடவில்லை. ஆனால் உச்சியிலிருந்து சற்று கீழிறங்கினான்!
ஆனால் பேசவில்லை.
கோபமனைத்தையும் கார் ஆக்சிலேட்டரில் காட்ட, கார் பறந்தது, ஸ்வேதாவின் வீட்டை நோக்கி!