Kalangalil aval vasantham 12(1)

12

முகம் சிவக்க அதீத கோபத்தில் எழுந்தவன், யாரையும் கவனிக்காமல் காரை நோக்கிப் போனான். ஸ்வேதாவை கொன்று விடும் ஆத்திரம்! எதனால் அப்படிக் கூறினாள் என்பதையெல்லாம் அவன் யோசிக்க தயாராக இல்லை.

ஏனென்றால் அவள் பட்டவர்த்தனமாக கூறிய விஷயம் அப்படி!

தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்று எப்படி அவள் சொல்ல முடியும்? இத்தனை நாட்களாக தன்னோடு ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்துவிட்டு?

அவன் கோபமாக போவதைப் பார்த்த ப்ரீத்தி, காபியை கொண்டு வந்த பேரரிடம் கையிலிருந்த பணத்தை எண்ணிக் கூட பார்க்காமல் வைத்துவிட்டு, அவனைத் துரத்திக் கொண்டுப் போனாள்.

“பாஸ்… ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்று அவள் அழைத்ததையெல்லாம் அவன் காதில் வாங்கவில்லை. எதையும் காதில் வாங்கும் எண்ணமுமில்லை.

கோபமாக காரை எடுத்துக் கொண்டு போக, அவனுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறதோ என்ற பயம் வேறு பிரீத்திக்கு. அந்த பதட்டம் வேறு சூழ,

“ப்ளீஸ் நில்லுங்க ஷான்..” என்று அவன் பின்னால் துரத்திக் கொண்டு வந்தாலும் அவளால் பிடிக்க முடியவில்லை. அவனது உயரத்துக்கு மிக வேகமாக நடந்தான். அந்த வேக நடையை அவளால் வெல்ல முடியவில்லை.

அவனுக்குத் தன் வாழ்க்கையில், தான் மிக மோசமாக தோற்றுவிட்டதைப் போன்றதொரு தோற்றம்!

செல்பேசி அழைத்தது. அந்த சப்தம் கூட அவனுக்குக் கேட்கவில்லை.

ப்ரீத்தி தன் நடையைத் துரிதப்படுத்தி அவனை பிடித்தபோது அவர்களது வாகனத்தை தொட்டிருந்தான் ஷான்.

அவசரமாக தன்னிடமிருந்த ரிமோட் லாக் மூலம், கதவைத் திறந்தபடி, ஓட்டுனர் இருக்கையை நோக்கிப் போனாள்.

“நீ இந்தப்பக்கம் வா ப்ரீத்தி…” அத்தனை கடினமாக அவன் கூறினாலும், அவள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

“வேண்டாம். நீங்க டென்ஷனா இருக்கீங்க…” என்று அவள் மறுத்ததை எல்லாம் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அவனது செல்பேசி வேறு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தது. அதை அவன் எடுப்பது போலவும் தெரியவில்லை.

“நான்- டிரைவ்- பண்றேன்னு-சொன்னேன்…” ஒவ்வொரு வார்த்தையாக அவன் அழுத்தமாகக் கூறும் போதே அவனது எல்லையற்ற கோபம் தெரிய, அந்த கோபத்தில் அவன் என்ன செய்வான் என்பதையே அவளால் கணிக்க முடியவில்லை. எதுவும் செய்துவிடுவான். அவன் அப்படித்தான்! அதை அவள் மிக நன்றாகவே அறிவாள்!

அதிலும் இந்த வாகன நெரிசலில், இன்னும் கொஞ்சம் கோபம் அதிகமாகத்தான் செய்யும். அப்படி இருக்கும் நிலையில், என்ன நடக்கும்?!

நடுக்கத்தோடு, “ஷான் ப்ளீஸ்… நீங்க இப்ப டிரைவ் பண்ண வேண்டாம்…” அவள் கெஞ்சும் தோரணையில் கேட்டாலும், அதை அவன் கேட்டால் தானே?

“என்னோட கோபத்தை அதிகமாக்காத ப்ரீத்தி… அந்த பக்கம் போய்டு…” என்று அவன் வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து ரிமோட் கீயை பறித்தபின் என்ன செய்ய முடியும்?

“கடவுளே காப்பாற்று…” என்று மட்டும் எண்ணிக்கொண்டு பதட்டமாக பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.

அவளது செல்பேசியும் அழைக்க ஆரம்பித்திருந்தது!

காரை ஸ்டார்ட் செய்தவன், சர்ரென்று ரிவர்ஸ் எடுக்க, ப்ரீத்தி இருக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

கண்டிப்பாக இவன் கட்டுபாட்டோடு ஓட்டப் போவதில்லை என்பது திண்ணம்.

எடுத்த வேகத்திலேயே வாகனம் அவன் கைகளில் பறக்கத் துவங்கியது.

ஷானின் செல்பேசி அழைத்துக் கொண்டேயிருக்க, அவனிடமிருந்து பேசியை வாங்கியவள், யாரென்று பார்த்தாள்.

வைஷ்ணவி தான் அழைத்திருந்தாள்!

“அந்த போனைத் தூக்கி குப்பையில போடு…” கடித்து மென்று அவன் துப்ப, சட்டென தூக்கி வாரிப் போட்டது.

“இல்ல பாஸ். அக்கா தான்…” என்று அவள் இழுக்க,

“ப்ப்ரீத்த்தீ…” அழுத்தம்திருத்தமாக அவனழைக்க, சட்டென அமைதியாகினாள்.

சற்று பொறுமையாகத்தான் இந்த ஷானை சமாளிக்க முடியும்.

இப்போது அவளது செல்பேசி அழைக்க, பயந்தவாறே எடுத்துப் பார்த்தாள்.

காயத்ரி!

“யாரு?” அழுத்தமாக கேட்டான் ஷான்.

“காயத்ரி…” என்றதும், அவன் எதுவும் பேசவில்லை. அழைப்பை எடுத்தவள், அவசர குரலில், “சொல்லுடி…” என்றாள், கீழிறங்கிய தொனியில்!

“ப்ரீத்தி… இந்த ஸ்வேதா என்னன்னெமோ பேசிட்டு இருக்காளே… பார்த்தியா?” அவளது குரலிலும் பதட்டம்.

“காயு… இங்க சிச்சுவேஷன் சரியில்ல. அப்பறமா பேசறேன்…”

“ஏன்? என்னாச்சு?” என்று விடாமல் அவள் கேட்க,

“அப்பறம் பேசறேன்டி…” என்று சட்டென்று கத்தரித்தாள் ப்ரீத்தி.

மீண்டும் அழைப்பு வந்தது. இந்தமுறை சீதாலக்ஷ்மியின் எண்ணிலிருந்து!

“ம்மா… அப்பறம் பேசறேன்னு அவ கிட்ட சொன்னேன்ல…” அடிக்குரலில் அவரை கடிக்க,

“ஜாக்கிரதை ப்ரீத்தி. தம்பியையும் பார்த்துக்க…” என்றவரின் குரல், அதீத பதட்டத்தில் இருக்க, அவளே சற்று இறங்கி,

“ஒண்ணுமில்லம்மா. பயப்படாத. பாஸ் நல்லாத்தான் இருக்காங்க…” என்றவள் அதற்கும் மேல் பேசாமல் அழைப்பை துண்டித்தாள்.

மீண்டும் அவளது பேசியே அழைக்க, ஷான் எரிச்சலில் ஆக்சிலேட்டரை மிதித்தான்.

வைஷுவே தான்! அவனைப் பார்த்தவாறே பேசியை எடுத்தவள்,

“சொல்லுங்க மேம்…” என்று சிறிய குரலில் கேட்க,

“என்ன ப்ரீத்தி நடக்குது இங்க? அவ என்ன இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கா?” எடுத்த எடுப்பிலேயே ஹை பிட்ச்சில் வைஷு கத்த, அது ஸ்பஷ்டமாக அவனுக்கும் கேட்டது.

“ஹெல் வித் இட்…” காரை ஓட்டிக் கொண்டே ஆக்ரோஷமாக கத்தியவன், “போனை இப்ப நீ வைக்கலைன்னா, அது இப்ப சுக்கல் சுக்கலா போகும் ப்ரீத்தி…” என்று தொடர, அவள் பயந்தபடி சட்டென காலை கட் செய்து, அவளது ஹேன்ட்பேக் உள்ளே போட்டாள்.

ஆனால் செல்பேசிக்கு அந்த பயம் இருக்காதே! அவளுடையதும், அவனுடையதுமாக மாற்றி மாற்றி அடித்துக் கொண்டே இருந்தது.

யார் அழைக்கிறார்கள் என்பதை மட்டும் அவள் பார்க்க, ஷானின் நண்பனொருவன் அழைத்துக் கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் காரோட்டிக் கொண்டிருந்த ஷானின் முகத்தைப் பார்க்க,

“யாரு…” கோபம் மாறாமல் கேட்டான்.

“ஆல்வின் பாஸ்…”

“எடுத்து என்ன விஷயம்ன்னு மட்டும் கேளு… ஸ்பீக்கர் போட்டுக்க…” என்று அவன் உத்தரவு கொடுக்க, செல்பேசியை எடுத்து,

“எஸ் சர்…” என்றாள்.

“ஷான் எங்கம்மா?” அந்த ஆல்வின் கேட்க,

“பாஸ் டிரைவ் பண்ணிட்டு இருக்காங்க சர். என்ன விஷயம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“இந்த ஸ்வேதா மேட்டர் அவனுக்கு தெரியுமா ப்ரீத்தி…” என்று அவசரமாக ஆல்வின் கேட்க, ஷானை நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு!

“சர்…” எதுவுமறியாதது போல கேட்டு வைக்க,

“ஷான் ஒரு கே ன்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காமா. ஏன் அப்படி சொல்லிட்டு இருக்கா?” சற்று கோபமாகத்தான் கேட்டான் ஷானின் நண்பன்.

“எனக்கு தெரியல சர். நான் பாஸ் கிட்ட கன்வே பண்ணிறட்டா?”

“எஸ். கண்டிப்பா. நான் கால் பண்ணேன்னு சொல்லும்மா…” என்று கூறிவிட்டு அவள் வைப்பதற்குள்ளாகவே அடுத்த அழைப்பு!

நிமிர்ந்து ஷானை பார்க்க, அவன் கோபத்தின் உச்சியில் ஸ்டியரிங் வீலை குத்தினான்.

‘பாம்ம்ம்ம்ம்’ என சப்தமிட்டது ஹாரன்!

கார் கன்னாபின்னாவென பறந்தது!

மீண்டும் மீண்டும் பேசிகள் இரண்டும் அழைத்துக் கொண்டேஇருக்க, தன்னுடையதை ஆஃப் செய்து உள்ளே வைத்துக் கொண்டாள்.

“அதையும் ஆஃப் பண்ணு…” என்று அவன் எரிச்சலாக கூற, அவனுடையதையும் ஆஃப் செய்தாள்.

“கொஞ்சம் பொறுமையா…” என்று அவள் முடிப்பதற்குள்ளாகவே,

“எப்படி பொறுமையா இருக்க சொல்ற ப்ரீத்தி? எப்படி இருக்க சொல்ற? பாக்கறல்ல… எத்தனை பேர்… எவ்வளவு அசிங்கம்? ஷீ வாஸ் லிற்றலி அனௌன்சிங் தட் ஐ ஆம்…” என்று முடிக்க முடியாமல் குமுற,

“நீங்க அவசரப்பட்டு கோபப்பட்டு என்ன பண்ணலாம்ன்னு நினைக்கறீங்க? யார் கொட்டினாலும், கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது…” ப்ரீத்தி அவனது கோபத்தை குறைக்க முயன்றாள்.

“என்ன பண்ண முடியாது? அவளையே இல்லாம பண்ணிடுவேன்…” என்று அவன் கத்தவும், கார் ட்ராஃபிக்கில் சிக்கவும் சரியாக இருந்தது.

சிக்னலில் அத்தனை வாகனங்களும் மொத்தமாக நிற்க, ஷான் ஸ்டியரிங் வீலை விடாமல் குத்தினான்.

அவனது ஒவ்வொரு அடிக்கும், ஹாரன் அலற, மொத்தமாக அத்தனை பேரும் இவர்களது காரை திரும்பிப் பார்த்தனர்.

அதை பார்க்கும் போது, ப்ரீத்திக்கு சங்கடமாக இருந்தது.

“பாஸ். ப்ளீஸ்… கண்ட்ரோல் யுவர்செல்ஃப். எல்லாரும் பாக்கறாங்க…” என்று கெஞ்சலாகக் கூற,

“பார்க்கட்டும். இனிமே பார்க்கறதுக்கு என்ன இருக்கு ப்ரீத்தி. மொத்தமா என்னை முடிச்சு கட்டிட்டு போய்ட்டா…” என்று குமுறிக் கொண்டு கூறியவனால், அதை முடிக்க முடியவில்லை.

ஸ்டியரிங் வீலில் அவனது தலையை சாய்த்துக் கொண்டவனுக்கு கண்கள் கலங்கும் போல இருந்தது.

“பாஸ்…” அவனது தலையை மெதுவாக அவள் தொட, அவன் விசுக்கென்று நிமிர்ந்து அமர்ந்து கொள்ள, வாகனங்களும் நகர ஆரம்பிக்க, அவனது வாகனத்தை சர்ரென்று உச்ச கதியில் பறக்க விட்டான்.

“கொஞ்சம் பொறுமையா போங்க…”

“பயமா இருந்தா இறங்கிக்க…” இறுக்கமாக அவன் கூற, கூறியவனை கூர்மையாகப் பார்த்தாள் ப்ரீத்தி!

இதற்கெல்லாம் பயந்துகொண்டு அவனை விட்டு விலக முடியுமா? நடுவழியே இறங்கி விடத்தான் முடியுமா? அது அவளால் கொஞ்சமும் முடியாத காரியம் என்பதை இவன் எப்போது உணர்ந்து கொள்ள போகிறான்? ஆத்திரம் இப்போது அவனது கண்ணை மறைக்கிறது. இந்த கோபத்தில் எதையாவது செய்து வைத்துவிட்டு வாழ்க்கை முழுமைக்கும் அவன் வருத்தப்பட கூடாது என்பது தான் அவளது வேண்டுதலாக இருந்தது. அப்படி அவன் வருத்தப்பட்டால், அவளுக்கு சந்தோஷமாக இருக்குமா என்ன? கண்டிப்பாக கிடையாது.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், “அது இம்பாசிபிள்…” என்றாள்.

“நான் பண்ண போற விஷயத்துக்கு சாட்சியா இருக்கணும் நீ… அது ரொம்ப ஹாரிபிளா இருக்கும்…” கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் வஞ்சம்!

“இருக்கட்டும்…” அவனை போலவே உணர்ச்சியில்லாமல்!

“யூ வில் ரிக்ரட் இட்…”

“கண்டிப்பா மாட்டேன்…” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் நின்றிருந்தது, அவனது போட் கிளப் வீட்டில்!

வாட்ச்மேன் அவசரமாக கதவைத் திறந்தார்!

“கொஞ்சம் பொறுமையா பேசுங்க. ப்ளீஸ். எடுத்து சொன்னா எல்லாருமே புரிஞ்சுக்குவாங்க. பேசறது மட்டும் கொஞ்சம் பார்த்து பேசுங்க…” என்று அவள் கெஞ்சும் போதே,

“நான் பேசப் போறதில்ல…” என்று அவன் வார்த்தைகளை மென்று கடித்துத் துப்ப, உள்ளுக்குள் சிறு நிம்மதி!

“என்னோட பிஸ்டலை எடுக்க வந்தேன்… நீ இங்கயே இரு…” என்று அவன் கூறியபோது, அந்த கடுமை சற்று மாறி, அழுத்தம் கூடியிருந்தது அவனது குரலில்.

பிஸ்டல் என்றதும் அதிர்ந்தவள், விரும்பத்தகாதது நடந்து விடலாம் என்ற எண்ணத்தில் மனம் பகீரென்றது!

அவன் இருக்கின்ற கோபத்தில், துப்பாக்கியோடு ஸ்வேதாவிடம் சென்றால் என்ன வேண்டுமானாலும் நடந்து விடக் கூடுமே! அதை எப்படி எதிர்கொள்ள முடியும்.

அவனது கோபம் நியாயமானதுதான். ஆனால் அதற்காக அவனது எதிர்காலமே கேள்விக்குறியாகலாமா?

மனம் பதைபதைக்க, காரை விட்டு அவள் இறங்க, அவன் வேகமாக நடந்தபடியே, “உன்னை அங்கேயே இருக்க சொன்னேன்…” என்று அவளை கை நீட்டி எச்சரிக்க, ஒரு நிமிடம் தயங்கியவள், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டு, இறங்கினாள்.

சப்தம் கேட்டு வைஷ்ணவி வெளியே வர, அவள் பின்னே, மாதேஸ்வரன் முறைத்தபடியே வெளியே வந்தார்.

அதுவரை மனதுக்குள் எவ்வளவோ குமுறிவிட்டார்.

அந்த ஸ்வேதாவின் பழக்கம் தேவையா என்று அவர் கேட்காத நாளில்லை. ஆனாலும் அவன் அந்த பழக்கத்தை விடவில்லையே! அவளது பழக்கம் எதுவரை கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை இன்று கண்கூடாக பார்த்து விட்டாரே!

அத்தனை அத்தனை ஃபோன் கால்கள். எதற்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. பாதி சொந்தகாரர்கள் என்றால் மீதமுள்ளவர்கள் தொழில்முறை நண்பர்கள் மற்றும் எதிரிகள்!

அத்தனை பேர் முன்னும் அரசனாகத்தான் இதுவரை வாழ்ந்திருக்கிறார்! எவர் ஒருவருக்கும் பதில் சொல்லும் நிலையில் இயற்கை அவரை வைக்கவில்லை.

ஆனால் அத்தனைக்கும் சேர்த்து இன்று, தான் பெற்ற மகனால், அவ்வளவு பேர் முன்பும் தலைகுனிய நேரிட்டிருக்கிறதே என்பதை நினைக்கும் போது அவரால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

அதை காட்டிலும் அத்தனை செய்தி தொலைகாட்சிகளிலும் செய்திகளில் வருமளவு பகிரங்கமாக அறிவித்திருக்கிறாள் அவள்! அதை உண்மையா பொய்யா என்று கூட பார்க்க மாட்டார்கள். அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சுட சுட செய்தி அவர்களுக்கு எனும் போது, அவரால் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியவே இல்லை.

இத்தனை நாட்கள், இவ்வளவு பெருமையாக வாழ்ந்தென்ன பயன்? அத்தனையும் இப்போது பாழாகிவிட்டதே!

“இன்னும் என்னல்லாம் பண்ண போற ஷான்? இதுக்கு மேல பண்ணி வைக்க எதாவது இருக்கா?” வைஷ்ணவி அழுத முகத்தோடு கேட்க, அவளை பார்த்து முறைத்தவன், எதுவும் பேசாமல் மாடியிலிருக்கும் அவனது அறைக்கு போகப் பார்க்க, “நின்னு பேசுடா… எங்களுக்கு உயிரே போற மாதிரி இருக்கு…”

“ஐ டோன்ட் கேர்…”

“நீ எதைப் பற்றித்தான் கேர் பண்ற? கண்டதே காட்சி, கொண்டதே கோலம்… இங்க ஒருத்தருக்காவது உன்னால நிம்மதி இருக்கா? இப்ப மொத்தமும் போச்சு. வீட்டு மானம், மரியாதை எல்லாம்… எல்லாம் போச்சு… இனிமே எந்த முகத்தை வெச்சுட்டு என் புருஷன் வீட்ல நான் இருப்பேன்?” வைஷ்ணவியால் தாள முடியவில்லை.

அடுத்த நாள் இன்னொருவரின் முகத்தில் எப்படி விழிப்போம் என்ற கேள்வி அவளை மிரட்டியது.

 

error: Content is protected !!